Advertisement

                      ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 11
குமரனும், சோமசுந்தரமும் கைலி பனியனுடன் தலையில் முண்டாசு கட்டி கீழே அமர்ந்து இருக்க, சோமசுந்தரத்தின் மடியில் ராகுலும், குமரன் மடியில் கரிகாலனும் படுத்து இருந்தனர்.
பேச்சி அங்கு இருந்த படுக்கையில் அமர்ந்து இருக்க, வசந்திதான் ஒரே பாத்திரத்தில் சாதம், பருப்பு,  துவையலுடன் வந்தார். வசுமதி தண்ணீரை எடுத்து வர, காயத்ரி தங்கம் இருவரும் ஆளுக்கு ஒரு பாத்திரமாக எடுத்து வந்தனர்.
“எங்கடா சண்முகமும், அருளும்??” கேட்டார் குமரன்.
 
“தெரியலை மாமா…. ஃபோன் வந்தது அண்ணா போயி இருக்கான். நீங்க தலைய தடவுங்க” என்று அவர் கைகளை எடுத்து தன் தலை மீது வைத்து கொண்டான் கரிகாலன்.
“சித்தப்பா இது என்ன சின்ன பையன் மாதிரி!! நான் தான் சொல்லனும். தாத்தா நீங்க பண்ணுங்க”  என்று கரிகாலனுக்கு அவலம் காட்டியவன், சோமசுந்தரத்தின் கைகளை தன் தலையில் வைத்துக்கொண்டான். 
பாவம் அவருக்கு முடி கோத தெரியவில்லை. ராகுல் முடி பட்டு போல் இருக்க “என்னடா முடி இப்படி இருக்கு” என்றவரை ராகுல் முறைத்தவன் “ஒரு தலைய கோத தெரியலை நீ எல்லாம் எப்படி தாத்தா அக்கீயூஸ்ட பிடிசீங்க!?” என்றான்.
 
“டேய் தலைய கோதுறத எதுக்குடா அக்யூஸ்ட் கூட சேத்து வைச்சு பேசுற??”
“நீங்கதான அவனுங்கள பாத்து எப்பவும் அப்படி சொல்வீங்க அது தான்” என்றதும் சோம சுந்தரத்தின் முகம் அஷ்ட கோணல் ஆனது. அது அவர் அடிக்கடி பேசும் வார்த்தை. அதை ராகுல் இன்று பேசி காட்ட ஒரு மாதிரியாக இருந்தது அவருக்கு. 
“சரிடா பெரிய மனுசா!! இனிமே அந்த வார்த்தை சொல்லுறத குறைச்சுக்குறேன்” என்றதும்   “குட் தாத்தா” என்று அவர் மீசை பிடித்து இழுத்தபடி சொல்ல, பார்த்து இருந்த அனைவருக்கும் சிரிப்பு தான்.
கரிகாலன் வெகு நேரமாய் குமரன் மடியில் தலை வைத்து இருந்தது காயத்ரிக்கு உறுத்தியதோ என்னமோ?? வந்து மறு புறம் படுத்துக்கொண்டாள் தகப்பன் மடியில்.
அவள் வந்து படுக்கவும் குமரன் தான் அதிர்ந்து போனார். வெகு நாட்களுக்கு பிறகான மகளின் தொடுகை. காயத்ரி வீட்டை விட்டு போனதில் இருந்து இன்னும் குமரனுடன் பேசவில்லை. இன்று ஆசிர்வாதம் வாங்கும் போதும் பேசவில்லை. இப்போது வந்து படுக்கவும் அவருக்கு  என்னவோ போல் ஆனது. 
கரிகாலனை விட்டு அவளின் தலையை வருடி விட அப்படியே உறங்கி போனால் காயத்ரி.
“தம்பி காயத்ரியை எழுப்புங்க” என வசந்தி சொல்ல, “வேணாம் அத்தாச்சி… எழுந்தா சின்ன புள்ள போல அடம் பிடிப்பா. ஒரு வாய் ஊட்டுறதுகுள்ள அவங்க அம்மா திண்டாடி போவா. விடுங்க அவளோ எழுந்தா சாப்பிடுவா இல்லையின்னா காலையில தான்” என்று பெருமையாக சொன்னார்.
“என் சித்தப்பாவுக்கு மக சாப்பிடாம தூங்குறது கூட எவ்வளவு பெருமை!!” என் வசுமதி சிரிக்க, “என்ன  வசு அண்ணா இல்லயின்னு சத்தம் வெளிய வருதா” என்றான் கரிகாலன். 
பேச்சி தான் வந்தார் அவளுக்கு ஆதரவாக. “அண்ணன் இல்லாததால சத்தம் வருதா!! ஏன் அவன் இருந்த மட்டும் என்ன??” என கேட்க., 
“ஏம்மா, இவ்வளவு நேரம் பேசாம தான இருந்த… இப்ப மட்டும் என்ன?? பேசாம தூங்கு” என்றான் கரிகாலன்.
அனைவரும் பேசிய படியே சாப்பிட்டு முடிக்கவும் சண்முகம் வரவும் சரியாக இருந்தது. 
“எங்க சண்முகம் போன?? இவ்வளவு நேரம் ஆச்சு. போய் சாப்பிடு” என்றார் பேச்சி. “வேணாம் பெரியம்மா பசங்கள பாக்க போயி இருந்தேன் அங்கயே முடிஞ்சது. நான் போயி படுக்குறேன்” என்றவன் அறைக்கு போக ராகுலை அழைத்தான்.  
“இல்லை நான் வரலை… தாத்தா கூட இங்கயே இருக்குறேன்” என்றவன் சுந்தரத்தின் மீதே கால் போட்டு தூங்க ஆரம்பித்தான்.
அருள் பேசி முடிந்து வந்தவன் பார்க்க, ராகுல் சோமசுந்தரத்தின் மீதும், காயத்ரியும் கரிகாலனும் குமரன் மீதும் இருந்ததை தான்.
                                                                       
காயத்ரியை அருள் எழுப்ப அவள் எழுந்த பாடாகத்தான் இல்லை. இப்போது குமரன் மடியில் இருந்து அருள் தான் தூக்கி கொண்டான் அவளை. அதை பார்த்து இருந்த அனைவருக்கும் கண் நிறைந்து விட்டது. பேச்சி உடனடியாக வேண்டுதல் வைத்தார் ஐய்யனாருக்கு.  அப்படியே  தூக்கத்தில் இருந்தவள் அவனை அணைத்து கொள்ள, முகத்தில் புன்னகை தவழ படியேறினான் அருள். 
“உரிமையா உன்னைய நம்ம ரூம்புக்கு தூக்கிட்டு வர்றேன் நீ என்னடி இப்படி தூங்கிட்டு இருக்குற??” அதற்குள் முந்திக்கொண்ட மனம் ‘டேய் இப்ப அவ முழிச்சா உன் தலையில ஒரு முடி இருக்காது பாத்துக்க!! சுத்தமா வழிச்சு எடுத்துடுவா. ஏதோ கடவுள் இந்த மட்டும் கருணை காட்டி இருக்காருன்னு  எல்லாத்தையும் குளேஸ் பண்ணிக்கிட்டு தூங்கு ராசா’. “எல்லாத்தையுமா??!!” என்று அவன் கேட்க, ‘ஆமா எல்லாத்தையும் தான்’ என்று பதில் கொடுத்து அவன் மனம்.
படுக்கையில் அவளை விட்டவன் மறுபுறம் வந்து தூங்க போக, காலையில் இருந்து வேலை செய்து இருந்தாலும் புதிதான காயத்ரியின் அருகாமை அவனை ஏதோ செய்ய சொல்லியது. 
தூங்கும் அவளை எழுப்பவும் முடியவில்லை அவனால்.  ஆனாலும் அவனின் முழுமைக்கும்  அவள் இப்போது தேவை. என்ன செய்ய?? என தெரியாமல் புரண்டு புரண்டு படுத்தவன் இமைகள் அவனை மீறி உறக்கத்தை தழுவ ஆரம்பிக்க அதனை கலைத்தாள் காயத்ரி. 
காயத்ரியின் கை தன் மீது விழுந்ததும் தெளிந்தவன் பார்த்தது, தூக்கத்தில் கண்ட கனவில் முகம் முழுதும் புன்னகையில் முகம் சுருக்கி இருந்தவளை தான். 
கண்கள் அவள் முகத்தை விட்டு அகலாமல் இருக்க அதில் அத்தனை பாவனைகள். “அப்படி என்ன கனவுடி??  மூஞ்சி இப்படி போகுது!!” என்று கைகள் முகத்தில் கோலம் போட இப்போது கண்கள் முகத்தில் இருந்து கீழே இறங்கி இருந்தது.
அவள் திரும்பி படுத்தில் புடவை இடம் விட்டு நகர்ந்து இருக்க கணவனின் உரிமையை அவள் மீது காட்ட ஆரம்பித்து இருந்தான் அருள்.
 
அருளின் அணைப்பில் காயத்ரியின் தூக்கம் தெளிய அவள் பார்த்தது மிக நெருக்கத்தில்  இருந்த அருளின் முகத்தை தான்.
கனவோ என்று நன்கு முழித்து பார்க்க… அது கனவில்லை என்றது அருளின் இதழ்கள். “காயத்ரி” என்ற அவனின் அழைப்பு அவளை உள்ளிருந்து சிலிர்க்க வைக்க, அந்த சிலிர்ப்பே அவனை அவளிடம்  இருந்து “தள்ளி விடு” என்றது.
காயத்ரி வேகமாக அருளை தள்ள, அவள் தள்ளிவிடுவாள் என்பதை எதிர் பார்க்காதவன் கைகள் அவளை விட்டது. கட்டிலில் இருந்து எழுந்தவள் அவனை முறைத்து பார்த்து இருக்க, இவனோ அவள் தள்ளி விட்டதில் அவளை பார்த்து முறைத்து இருந்தான். 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்க, “இப்ப எதுக்குடி என்னைய தள்ளி விட்ட??” 
“நீங்க எதுக்கு என்னைய தொட்டீங்க??” கேட்டாள் எதிர் கேள்வியாக 
“புருசன் பொண்டாட்டிய எதுக்குடி தொடுவான்?? அது கூட தொரியாத பச்சை பிள்ளையா நீ??” 
“புருசன் தொடுறது  எதுக்குன்னு எனக்கு தொரியும். நீங்க எதுக்கு என்னைய தொட்டீங்க??” என்று கேட்க, அவனின்  மூளை விழித்துக்கொண்டது.
 
கட்டிலை விட்டு எழுந்தவன் “என்ன காயத்ரி, என்ன பேச்சு இது??” என்ற படி அவளின் அருகில் வர, “வராதீங்க பக்கத்துல!!” என்று காயத்ரி கத்த, சட்டென எட்டி அவள் வாயை அடைத்தான் கைகளால். 
“எதுக்குடி இப்படி கத்துற. கீழ எல்லாரும் எழுந்துக்க போறாங்க. எதுனாலும் மெதுவா பேசு புரியுதா??” என்று கேட்க, அவன் விட்டால் போதும் என்று நினைத்தவள் சரி என தலையை ஆட்டினால்.
 
இப்போது அவளை விட்டவன் கட்டிலில் அமர்ந்து “சொல்லு நான் என்ன தப்பு செஞ்சேன்??” 
“என்ன தப்பு செய்யலை?? என்ன பத்தி எவ்வளவு கேவலமா நினைச்சு இருந்தா இனிமே இங்க வராதனுன்னு சொல்லி இருப்பீங்க?? இப்ப மட்டும் என்ன புதுசா பொண்டாட்டி?? இப்ப  கேவலம் இல்லையா??” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் பேசி அவன் முகம் பார்த்தாள். கேட்டு இருந்த அருளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை!! 
ஆனால் அவனுக்கு புரிந்தது ஒன்று தான். தான் சொன்ன ஏதோ ஒன்றை தப்பர்த்தம் செய்து கொண்டிருக்கிறாள் என்பது.
கோபத்தில் மேல் மூச்சு வாங்க கண்களில் கண்ணீர் வழிய நின்று இருந்த கோலமே சொன்னது, அவள் யாரிடமும் இதை பற்றி பேசாமல் மனதில் உறு போட்டு வைத்து இருக்கிறாள் என்று. அவளின் நிலை புரிய எழுந்தவன், அங்கு இருந்த தண்ணீரை அவளுக்கு வேண்டாம் என்றாள் காயத்ரி.
“காயத்ரி” என்ற அருளின் அழைப்பு அவளை நிமிர்ந்து பார்க்க செய்ய, “இப்படி உக்காரு” என்று அவளை கட்டிலில் அமர்த்தினான். காயத்ரி கோபமாக அவனையே பார்த்து இருக்க  “நீ என்ன சொன்னனு எனக்கு புரியலை?? நமக்குள்ள என்ன நடந்தது?? நான் என்ன சொன்னேன் உன்கிட்ட?? சரியா சொல்லு. தப்பு இருந்தா நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன்” என்றான் அமைதியாக. 
அவனுக்கு தான் சொன்னது புரியவில்லை என்பதை உணர்ந்தவளுக்கு இன்னும் கோபம் தான் அதிகம் ஆனது. “என்ன புரியலை உங்களுக்கு. நீங்க சொன்ன நான் நம்பனுமா!! சரி சொல்லுறேன் நல்லா கேட்டுக்குங்க…” 
“தாத்தா  காரியம் முடிஞ்ச அன்னிக்கி நான் உங்க ரூம்புக்கு வந்தேன்ல அப்ப… நீங்க…” என்று அவன் தந்த முதல் முத்தத்தினை “எப்படி சொல்ல” என்று பார்த்து இருந்தாள் காயத்ரி. மனித உடல்களை ஆராய்ச்சி செய்பவளாள் அவன் தந்த முத்தத்தை சொல்ல முடியாமல் நிறுத்தினால்.
“ம்… சொல்லு அன்னிக்கு என்ன நடந்தது”
“நீங்க கிஸ் பண்ணீங்க ஆனா… கொஞ்ச நேரத்துல என்னைய தள்ளிவிட்டு உனக்கு அறிவு இருக்கா?? இனிமே இங்க வரக்கூடதுன்னு” என்னைய வெளிய தள்ளிவிட்டீங்க. “என்னைய தப்பா நினச்சு தான நீங்க அப்படி செஞ்சது” என்றாள் அருளை பார்த்து.
 
அவனுக்கே இது புதிது தான். அந்த முத்தததையே மறந்தவனுக்கு இன்று இவள் நினைவுக்கு கொண்டு வர அன்றை தன் நிலையை நினைத்து பார்த்தான் அருள். 
படித்து மருத்துவர் ஆன பிறகும் தன் மன நிலை பற்றி யோசிக்காமல் பேசுபவளுக்கு “எப்படி சொல்லி புரியவைக்க” என அவனை பார்த்து இருந்தான் அருள்.

Advertisement