Advertisement

                       ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 10
அறைக்குள் நுழைந்த தங்கம்  பார்த்தது ராகுல் மற்றும் காயத்ரியின் சண்டையை தான்.
“ஏய் என்னடி செய்யுற குழந்தைகிட்ட?” தங்கம் இருவரையும் விலக்கி விட்டார். 
“குழந்தையா இது!! கோட்டான். வந்த உடனே என்கூட சண்டை போட ஆரம்பிச்சுட்டான். இது மாமா எனக்கு வாங்கிட்டு வந்த சாக்லேட். அத இவன் எடுத்து வைச்சுகிட்டு தரமாட்டேன்னு சொல்லுறான். எனக்கு வாங்கி தா சித்தி” என்று தங்கத்தை பிடித்து கொண்டாள் காயத்ரி.
“அடியேய்” பல்லை கடித்தார் தங்கம்.  “கல்யாணம் முடிஞ்சு இருந்தா, இந்நேரம்  ரெண்டு புள்ளை பெத்து இருப்பா… இப்ப போயி சாக்லேட்டுக்கு சண்டை போடுறா” என்று ராகுலை கொஞ்ச “அப்படி சொல்லு அத்தை” என்றான் ராகுல்.
தங்கத்தின் “கல்யாணம் நடந்து இருந்தா” என்ற வார்த்தையிலேயே “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி சித்தி” என்றாள் காயத்ரி தங்கத்திடம். “என்னடி சொல்லுற!?” என்றார் தங்கம் அதிர்ச்சியாக.
காயத்ரி நடந்ததை சொல்ல தங்கத்திற்கு நம்ப முடியவில்லை. “என்னம்மா” என்றவருக்கு  என்ன சொல்ல என தெரியாமல், காயத்ரியை கட்டி பிடித்த படி இருந்தார்.
சிறிது நேரம் இருவரையும் பார்த்து இருந்த ராகுல்,  “அத்தை” என்றதும் தான் தங்கம், “என்னைய உனக்கு தெரியுமா?? உங்க அப்ப என்னைய பத்தி சொல்லி இருக்காரா??” என்று கண்களில் நீர் வழிய  கேட்க, “அப்பா இல்லை, சித்தப்பா சொல்லி இருக்காங்க. சின்ன சித்தப்பா போட்டே காட்டி இருக்கார்” என்று, அவரின் கழுத்தை கட்டிக்கொண்டான் ராகுல்.
“பாத்தியா என் தம்பிய!!” என்று தங்கம் காயத்ரியை பார்க்க, தெளிந்து இருந்தவள் “போதும் போதும் உன் தம்பி பெருமை. முதல்ல என் சாக்லேட்ட வாங்கி தா” என்றாள் பிடிவாதமாக. 
“நீ குடுத்துடுடா செல்லம். அத்தை உனக்கு இதை விட பெரிசா வாங்கி தர்றேன்.” காயத்ரி “ஆமா ஒரு அணு குண்ட வாங்கி அவன் வாயில போடு பெரிசா” என்றதும், மீண்டும் அவர்களின் சண்டை ஆரம்பம் ஆனது.
தங்கம் இருவரையும் மாறி மாறி சமாதானம் செய்ய, அவர்களின் விளையாட்டை அப்போது தான் ரெடியாகி வந்த சண்முகமும், வசுமதியும் பார்த்தனர். 
தங்கத்தை பல வருடங்கள் கழித்து பார்த்ததும் சண்முகத்தின் கண்கள் கலங்க, வசுமதி தங்கத்தை அழைக்க போக, சட்டென கை பிடித்து தடுத்தார் சண்முகம்.  
“என்னங்க அண்ணி!!” என்றதற்கும் சண்முகம் பதில் சொல்ல வில்லை. என்ன இருந்தாலும்  வசுமதி இருந்தவரை அவரை தன் தங்கை போல தான் பார்த்துக் கொண்டார் தங்கம். அவர் இல்லை என்றால் இன்று சண்முகம் தனக்கு இல்லை என்பதையும் அறிவார்.  
இருந்தாலும் இப்போது சண்முகத்தை மீறி அவரால் தங்கத்திடம் பேச முடியாது. அவர் ராகுலை கொஞ்சுவதை சண்முகம் தடுக்காததே பெரியதாக இருக்க எதுவும் பேசாமல் சண்முகத்துடன் கீழே இறங்கி சென்றார்.
அய்யாவு கூடத்தில் அமர்ந்து இருக்க மேலிருந்து இறங்கி வந்தார் சண்முகம்.
அவர் இறங்கி வருவதை அய்யாவு பார்த்து இருந்தவர் பின்னால் வந்த வசுமதியை பார்த்ததும் எழுந்து சென்றார் வேகமாக. 
கணவன், மனைவி இருவரும் அவரை கண்டுக்கொள்ளாமல் நேராக பேச்சியிடம் போக… 
“என்னடா வீட்டு மாப்பிள்ளை வந்து இருக்கேன், நீ என்னமோ வானத்துல மிதக்கிற மாதிரி கண்டுக்காம போகுற” என்றார் அய்யாவு. 
“அது தான் வந்துட்டீங்கள மாமா!! பின்ன என்ன??” என்ற அருளின் குரல் வந்தது மாடியில் இருந்து. 
“என்னங்கடா… அண்ணனும் தம்பியும் ஒன்னா ஆகிட்டீங்கன்னு பேசுறீங்களா??”
“நாங்க எப்ப மாமா பிரிஞ்சோம் ஒன்னா ஆக!! நாங்க எப்பவும் இருக்குற மாதிரி தான் இப்பவும் இருக்கோம். உங்களுக்கு தான் தெரியலை. அதுக்கு தான் அடிக்கடி ஊர் பக்கம் வரனும். விருந்துக்கு மட்டும் வந்தா இப்படி தான் சேர்ந்து இருக்குறது எல்லாம் தனித்தனியா தெரியும்!!” 
“என்ன அத்தை, சில் வண்டகளை எல்லாம் பேச விட்டு பாக்குறீங்களா!?” அய்யாவு கேட்க,
“என்ன தம்பி, வந்ததும் சத்தமா பேசிகிட்டு. வா அங்க எல்லாரும் இருக்காங்க. போய் பாப்போம்… நம்ம வீட்டு விசேசத்தை நாமலே கவனிக்கலையின்னா ஊர் பயங்க பேசமாட்டாங்களா??” என்று அந்த சண்டைக்கு முற்று புள்ளி வைத்தார் குமரன்.
அவர் சென்றதும் சண்முகம் தான் பிடித்து கொண்டார் அருளை. “ஏண்டா… நான் தான் அந்த ஆளுக்கிட்ட பேசாம தான போறேன், நீ எதுக்குடா வாய குடுக்குற?? அவனெல்லாம் ஒரு மனுசனுட்டு…” 
அருளோ, ‘என் பொண்டாடிக்கே வாய குடுக்க முடியல!! இதுல அவருக்கு வாய குடுத்துட்டு?? சீசீ…’  என்றவன் “சீசீ” மட்டும் அனைவருக்கும் கேட்க, “என்னடா அங்க??” சண்முகம் கேட்டார்.
அருள் என்ன சொல்லி இருப்பான் என்பது புரிந்த கரிகாலன் சிரித்து விட, “என்னடா அங்க சிரிப்பு??” என்றார் சண்முகம்.
அதற்குள் தங்கமும், காயத்ரியும் மேலிருந்து சண்முகத்தின் மகனுடன் வர, அவர்களையே பார்த்து இருந்தார் சண்முகம். 
“என்ன சண்முகம் அப்படி பாக்குற அவளை??” பேச்சி.
“இல்லை பெரியம்மா, செல்வி அக்காவும் இப்ப இருந்து இருந்தா??” என்று நிறுத்தவும் அனைவரும் அவர்களை தான் பார்த்தனர்.
தங்கம் சற்று செல்வியின் சாயலில் இருப்பார். இப்போது இருவரும் ஒன்றாக வர செல்வியே காயத்ரியுடன் வருவது போல தான் அனைவரின் கண்களுக்கும் தெரிந்தது.
தங்கம் வந்தவர் சண்முகத்திடம் போக சண்முகம் திரும்பிக்கொண்டார். “அண்ணா நான் என்ன பண்ணுனேன்?? என்கிட்ட கோபமா இருந்தா நான் என்ன பண்ண??  வசு நீ கூட பேச மாட்டியா!! என கண்களில் கண்ணீர் வர நின்றவரை காயத்ரி தான் தாங்கிகொண்டாள். 
“சித்தி நீ எதுக்கு அழுகுற?? விடு இவங்க பேசலையின்னா என்ன. உன்மேல தப்பு இல்லையினு தெரிஞ்சும் பேசாம  இருந்தா என்ன அர்த்தம்??” என்று சண்முகத்தை பார்க்க.,
பார்டா… எங்க அக்கா பொண்ணு பேசுர பேச்சை!! என்று காயத்ரியை பார்த்து இருந்தார் சண்முகம்.
“என்ன மாமா?? அப்படி பாக்குறீங்க. நான் சொன்னதுல ஏதும் தப்பு இருக்கா?? ஆம்பளைங்க பண்ணுற தப்புக்கு எல்லாம் பொண்ணுங்க நாங்க தான் பொறுப்பா??” என்று அருளை பார்த்தாள் காயத்ரி.
‘இப்ப இவ எதுக்கு சம்பந்தம் இல்லாம நம்மள பாக்குறா!! நான் என்ன தப்பு பண்ணுனேன்?? நானே கல்யாணம் பண்ணியும் பிரம்ச்சாரி அப்படின்ற ரேஞ்சுக்கு வாழ்கைய ஓட்டிக்கிட்டு இருக்கேன் என்று நினைத்ததும், அவன் மூளையில் விளக்கு எரிய, அப்ப தப்பு பண்ணலையின்னு தான் திட்டுறாளா!! ஐய்யோ கத்திரி இன்னிக்கு வா உன் மாமன் யாருன்னு காட்டுறேன்’ என்று மனதில் குத்தாட்டம் போட்டவன் அவளின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான். 
காயத்ரி பேச்சை ஆரம்பிக்கும் போதே குமரனும், சோமசுந்தரமும் உள்ளே வர பேச்சு நின்றது அப்படியே. 
சோமசுந்தரம் “இந்த பொண்ணுங்கள விட்ட இன்னிக்கு முழுசும் பேசுவாங்கடா தம்பி!! அங்க எல்லாம் வர ஆரம்பிச்சாச்சு, வந்தவங்கள கவனிக்காம இங்க நின்னு என்ன பேச்சு?? போங்க அங்க..” என அனைவரையும் அனுப்பியவர். 
“அக்கா.. இப்போதைக்கு எந்த பேச்சும் வராம பாத்துக்குங்க. ஊரே நம்ம வீட்டு முன்னாடி நிக்குறது நியாபகம் இருக்கட்டும்” என எச்சரிக்கும் தொனியில் கூற, எதுவும் பேசாமல் சரி என்றார் பேச்சி. 
அருள் வந்தவர்களை கவனித்து இருந்தாலும், அவனின் கண்கள் முழுவதும் காயத்ரி மீது தான் இருந்தது. சண்முகத்திடம் அவள் பேசியது தனக்கும் சேர்த்து தான் என்பது புரிந்தாலும் காரணம் தெரியவில்லை.
காயத்ரியை வசுமதி கூப்பிட “என்ன அக்கா??” என்று அவரிடம் சென்றாள். “என்னக்கா, என்ன வேணும்??” 
காயத்ரி “இவனுக்கு காரம் அதிகமா இருக்குற சாப்பாடு ஒத்துக்காது, கொஞ்சம் பால் சோறு போட்டுக்கொடு சாப்பிடுவான்.  சரிக்கா” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சமையல் கட்டுக்கு போக, பின்னாலே போனான் அருள் யார் கண்ணிலும் படாமல்.
கூடத்தில் ராகுல் அமர்ந்து கொண்டு ஃபோனில் விளையாட ஆரம்பிக்க “ஏண்டா… ஆப்பிள் ஃபோன்ல விளையாட தெரியுது?? என் கூட சண்டை போட தெரியுது?? காரமா ஒரு சாப்பாடு சாப்பிட வலிக்குதா உனக்கு. இன்னும் குழந்தைங்க மாதிரி பால் சாதம் சாப்பிடுற??” என்றாள் காயத்ரி.
ராகுல் கண்கள் சுருக்கி அவளை பார்த்தவன் “நீ எனக்கு சித்தி தான” என்றான் கேள்வியாக.
“ஆமாண்டா, அதுக்கு என்ன இப்ப”
“நீயே… இன்னும் பால் சாதம் தான் சாப்புடுறதா அம்மா சொன்னாங்க. அப்ப நானும் அப்படி தான இருப்பேன். ஃபோன்ல  விளையான்டா பால் சாதம் சாப்பிட கூடாதுன்னு இந்த ஊர்ல சட்டம் ஏதாவது இருக்கா. இல்லை இந்த வயசுல தான் பால் சாதம் சாப்புடனும் இருக்கா. இல்லை தான, அப்பறம் எதுக்கு நான் சாப்பிடுறதை நீ கேக்குற. அதுவும் இல்லாம ஏழு வயசு பசங்கள எல்லாம் குழந்தைங்க தான்” என்றதும் அவன் வாயை கைகளால் அடைத்தால் காயத்ரி.
“தப்பு தான் சாமி. ஏண்டா காரமா சாப்பிட்டா என்ன?? அப்படின்ற ஒரு கேள்விக்கு இத்தனை பதிலா!! பேதும்டா, உங்க பரம்பரை புத்தி அப்படியே வருது பாரு. எல்லார் வீட்டுலயும் அப்பாவ போல பிள்ளையின்னு சொல்லு வாங்க ஆனா… இந்த வீட்டுல மட்டும் தான் எல்லாம் அவங்க சித்தப்பாவை போலவே வந்து இருக்குங்க. வாலில்லாத வானரம் அத்தனையும்” 
ராகுல் எழுந்தவன் இடுப்பில் கை வைத்து முறைக்க…. 
“என்னடா முறைக்குற??”
“இத பாரு சித்தி, என்ன எது வேணுனாலும் சொல்லு, சித்தப்பாவ சொன்ன நான் சும்மா இருக்க மாட்டேன்??” 
“சொன்னா என்னடா பண்ணுவ??” கேட்டாள் காயத்ரி.
சுற்றி பார்த்தவன் “காயத்ரி சித்தின்னு கூப்புடுறதை கத்தரி சித்தின்னு கூப்புடுவேன்” என்றவன் ஓடிவிட்டான் அவளின் அடியில் இருந்து தப்பிக்க.   
முகம் கோபத்தில் மிளகாய் பழமாய் சிவக்க கால்களை தரையில் ஓங்கி மிதித்தவள், இங்க தான வரணும் அப்ப பாத்துக்குறேன் என்றவள், அவனுக்கு சாதம் போட உள்ளே போக, இரு கைகள் அவளை தூக்கி மேடையில் அமரவைத்து அணை கட்டியது. 

Advertisement