Advertisement

அத்தியாயம் 6
மீள முடியாது என்று 
தெரிந்தும் வீழ நினைக்கிறேன் 
உன் இதய சிறையில் !!!
“இங்க பக்கத்துல இருக்குற கோயிலுக்கு என்னை கூட்டிட்டு போ மனோஜ்”, என்றாள் சாவித்திரி.
“நானும் வரேன் அத்தை”, என்றாள் மது.
“எல்லாரும் போனா, தேவாவை யாரு பாத்துக்குறது?”, என்று கேட்டான் மனோஜ்.
எல்லாரும் யோசிக்கும் போது, “நான் சாரை பாத்துக்குறேன். ஹாஸ்பிட்டல் வெளிய இருந்து பாத்தாலே அந்த கோயில் தெரியும். நீங்க போய்ட்டு வாங்க”, என்று சிரித்த படியே கூறினாள் மீரா.
அதுவும் சரி என்று பட்டதால் மூவரும் கோவிலுக்கு வணங்க சென்றார்கள்.
“நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்”, என்று அங்கு கிடந்த குப்பைகளை எடுத்து குப்பை கூடையில் போட்ட படி தேவாவை பார்த்து  கூறினாள் மீரா.
“ஏன் சிஸ்டர் அப்படி சொல்றீங்க?”, என்று கேட்டான் தேவா.
“உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க. இந்த ரெண்டு நாளுல எனக்கு அவங்க எல்லாரும் உங்களுக்காக உருகியதை பாத்தா அப்படியே புல்லரிக்குது. எனக்கு உங்க மேல பொறாமையே வந்துட்டு தெரியுமா?”
கள்ளம் கபடம் இல்லாத அவள் பேச்சை ரசித்தவன் “யாராவது அண்ணா மேல பொறாமை படுவாங்களா?”, என்று கேட்டான்.
விழி விரிய அவனை பார்த்தாள் மீரா. அன்புடன் அவளை பார்த்த தேவா, “என்னோட மனோஜை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எனக்கு தங்கச்சி தான?”, என்று கேட்டான்.
“உங்களுக்கு உங்களுக்கு…”
“நேத்தே அவன் என்கிட்ட சொல்லிட்டான். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். இனி நீயும் நம்ம வீட்ல ஒருத்தி தான் மீரா. உன்னை நான் பாத்தது இல்ல. நேத்து அவன் மீரா மீரானு புலம்புனதுல, அந்த பேர் வச்சு தான் உன்னை கண்டு பிடிச்சேன். அவன் என் மச்சான். அதனால நீ என் தங்கச்சி. அவனை உனக்கு பிடிச்சிருக்கு தான?”
“சார்..”, என்று அதிர்ச்சியாக அழைத்தாள் மீரா.
“அண்ணான்னு சொல்லு மீரா. உனக்கு பிடிச்சிருக்கு தான?”
“ம்ம்”, என்று வெட்கத்துடன் சிரித்த மீரா “அவரை பிடிச்சிருக்கு அண்ணா. ஆனா என்னை பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதே”, என்றாள்.
“தெரிய வேண்டாம் மா. எங்களுக்கு நீ தான் முக்கியம். பழைய விஷயங்கள் இல்லை. உனக்கு உன்னோட மனசுல உள்ளதை யார் கிட்டயாவது கொட்டி தீக்கணும்னு நினைச்சா எங்க அம்மாகிட்ட, இல்லைன்னா மது கிட்ட சொல்லு. ரெண்டு பேரும் நல்லா  கதை கேப்பாங்க”, என்று சிரித்தான்
“மதுவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா அண்ணா? அவங்க பேரை சொல்லும் போதே உங்க கண்ணு கூட சிரிக்குது”
“அவ என் தேவதை மா. அவ இல்லைனா இந்த தேவா இல்லை”, என்று ஆழ்ந்த மனதுடன் சொன்னான் தேவா.
மதுவை தேவதை என்று சொல்லும் போது, அவன் கண்கள் ஒளிர்ந்ததையும் ஏதோ ஒரு ஆழ்ந்த சுழலுக்குள் சிக்கியது போலவும் மெய் மறந்து தேவா பேசியதையும்  பார்த்து ஆச்சர்யமாக இருந்தது மீராவுக்கு.
“இவ்வளவு அன்பை ஒருவன் ஒரு பெண்ணின் மீது வைக்க முடியுமா? மதுவும் கொடுத்து வைத்தவங்க தான்”, என்று நினைத்து அவனிடமே அதையும் சொன்னாள்.
தலையை மறுப்பாக  ஆட்டியவன், “இந்த உலகத்தில் நான் தான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவன். மதுவோட அன்பு கிடைக்குதுன்னா, இந்த உலகத்தில் எதுவுமே பெருசு இல்லை. அப்புறம் நான் தூங்கவா மீரா? கண்ணு தூக்கத்துக்கு கெஞ்சுது”, என்று கேட்டான் தேவா.
“மருந்து போட்ருக்காங்கள்ல? அதனால தான். நீங்க படுத்துகோங்க அண்ணா”, என்று சொல்லி அவனை படுக்க வைத்தாள்.
அவன் கண்களை மூடியதும் ஓரத்தில் போட பட்டிருந்த சேரில் அமர்ந்த மீரா, யோசிக்க ஆரம்பித்தாள்.
“வாழ்ந்தால் இப்படி ஒரு காதலோடு வாழணும். சும்மா எல்லாரும் லவ் பன்றாங்க, நம்மளும் பண்ணுவோம்னு நினைச்சு, வயசு கோளாறுல தப்பு செஞ்சு பிள்ளையை பெத்து அனாதையாக்கிட்டு பிரிஞ்சு போறது என்ன வாழ்க்கை? என்னை மாதிரி அனாதை எல்லாம் உருவாகாம இருப்பாங்க. எனக்கு அப்படி ஒரு காதலான வாழ்க்கை கிடைக்குமா? இந்த உலகத்தில் ராசி இல்லாதவ நான். எனக்கு சந்தோசம் நிலைக்குமா? இப்ப மனோஜ் சொன்ன வாழ்க்கை எனக்கு கிடைக்குமா? இல்லை மறுபடியும் அனாதையா தான் இருப்பேனா?”, என்று யோசித்தவளுக்கு மதுவை பார்த்தவுடனே தேவா முகத்தில் வந்து போன தேடலும், காதலும், தாபமும் நினைவில் வந்தது.
“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்”, என்று சொன்ன பிறகு மனோஜ் தன்னை பார்க்கவே இல்லை, என்ற உண்மை முகத்தில் அறைந்தது.
ஏனோ மனது வெறுமையாக இருந்தது. “என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்ன்னு  சொன்னதே பெருசு. இதுல இதுக்கெல்லாம் ஆசை படுறேன்? இந்த அழகான கூட்டுக்குள்ளே என்னையும் ஒருத்தியா இவங்க செத்துக்கிட்டாலே என் மனதில் இருக்கும் தனிமை போய் விடும்”, என்று சமாதானம் செய்தாலும் மனோஜின் பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தது மீராவின்  மனது.
அவள் யோசனையை கலைக்க உள்ளே வந்த சாவித்ரி  “தூங்குறானா மா?”, என்று கேட்டு கொண்டே  அவனுக்கு விபூதி வைத்து ஊதி விட்டாள். 
“ஆமா அம்மா, இப்ப தான் தூங்குனாங்க”, என்று சிரித்தாள் மீரா.
அப்போது தான் மது எங்க என்று தேடினாள். “நீங்க மட்டும் வாறீங்க? மது எங்க மா?”, என்று கேட்டாள் மீரா.
“அவ இன்னும் கோயில்ல தான் மா இருக்கா. கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்னு சொன்னா. மனோஜ் கூட இருக்கான். நான் நீ மட்டும் தனியா இருப்பியே. உனக்கும் வேற வேலைகள் இருக்குமே? அதான் வந்தேன்”, என்று சொன்னாள் சாவித்ரி.
“சாரை கவனிச்சிக்குறது தான் இன்னைக்கு டியூட்டி. வேற வேலை இல்ல மா”
“அப்ப சரி, நீ இப்படி வா. உங்கிட்ட பேசணும்”
“என்ன மா?”
“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத மீரா. உன்னை பத்தி தெரிஞ்சிக்க தான் கேக்குறேன். உன்னோட அம்மா, அப்பா என்ன ஆனாங்க?”
“எனக்கு அம்மா அப்பா யாருன்னே தெரியாது மா. அனாதை ஆஸ்ரமத்துல தான் வளர்ந்தேன். அவங்க தான் படிக்க வச்சாங்க. படிச்சு முடிச்சதும், இந்த வேலைக்கு சேந்துட்டேன். இங்க ஒரு ஹாஸ்டலில் தங்கிருக்கேன்”
“சரி உனக்கு என் பையன் மனோஜை பிடிச்சிருக்கா? அவனை கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கே வந்துறியா?”
“எனக்கு குழப்பமா இருக்கு மா. நேத்து அவங்களும் சொன்னாங்க. இப்ப சாரும் சொன்னாங்க. ஆனா எல்லாரும் என் மேல பரிதாப பட்டு இப்படி சொல்றீங்களோனு  தோணுது”
“உன் மேல பரிதாப பட என்ன இருக்கு மீரா? இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலில் வேலை செய்ற? கை நிறைய சம்பாதிக்கிற? இதுல என்ன பரிதாபம். இதுக்கு மேல உனக்கு கொடுக்க எங்க கிட்ட என்ன இருக்கு? ஆனாலும் ஒரு விசயத்தை கொடுக்க தான் உன்கிட்ட இந்த கல்யாணத்தை பத்தி பேசுறோம்”
“என்ன புரியலையா? அன்பு இல்லாம இருக்குறியே? அதை கொடுக்க தான் உன்னை எங்க கூட கூப்பிடுறோம். அது உனக்கு வேணும் தான? நல்லா யோசிச்சு சொல்லு. இப்ப நீ கண்ணீர் சிந்துனா அதை துடைக்க உனக்குன்னு யாரு இருக்கா? இதே எங்க வீட்டில் இருந்தா அம்மா நான் இருக்கேன், அண்ணன் தேவா இருக்கான். தோழியா மது இருப்பா. அதுக்கும் மேல உன்னை அழவே விடாம பாத்துக்க உன் புருஷன் இருப்பான்”
“அம்மா”
“ஆமா மீரா.  உனக்கு மனோஜை தான் கடவுள் எழுதி வச்சிருக்காரு. அதே மாதிரி தான் தேவாவுக்கும் மது தான்னு எழுதிட்டார். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? தேவாவுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு மதுவோட ஒட்டி பிறந்த அவளோட அக்கா”
“அம்மா”
“ம்ம் அது பெரிய கதை மீரா. அவ தேவாவுக்கு கண்ணு போச்சுன்னு தெரிஞ்ச உடனே வீட்டை விட்டு போய்ட்டா. ஆனா மது, தேவா இந்த நேரத்தில் தனியா இருக்க கூடாது. அவன் வருத்த பட கூடாதுன்னு நினைச்சு, அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டா. இன்னும் வரைக்கும் இந்த விஷயம் தேவாவுக்கு தெரியாது. அவனுக்கு கண்ணு போனதுனால தான் அந்த சுயநலவாதி கிடைக்காம மது, தேவாவுக்கு கிடைச்சிருக்கா. அந்த கண்ணு போனதுனால தான் இப்ப இங்க ஆபரேஷன்க்கு வந்து உன்னை பாத்துருக்கோம். மனோஜும் உன்னை மாதிரி அம்மா அப்பா இல்லாதவன் தான் மா. அவனுக்கு இப்ப நாங்க தான் உலகம். அவன் உன்னை நல்லா பாத்துப்பான்”
“சார் கிட்ட இப்ப தான் கேட்டுட்டு இருந்தேன். மதுவை ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிக்கும்னு? ஆனா இப்ப தான் தெரியுது மது எவ்வளவு நல்லவங்கன்னு. எனக்கு மனோஜை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் மா”
“ரொம்ப சந்தோசம் மீரா. ஆனா தேவாவை நீ சார்னு கூப்பிடும் போது அவன் என்னன்னு கூப்பிட சொன்னான்?”
“அது அண்ணனு சொன்னாங்க”
“அப்புறம் என்ன சார்? அண்ணனு கூப்பிடு சரியா?”
“ஹ்ம்ம்”, என்று அவள் சிரிக்கும் போதே மனோஜும், மதுவும் உள்ளே வந்தார்கள்.
“மீரா கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டா மது”, என்றாள் சாவித்ரி.
“ஹேய் மீரா, நிஜமாவா?  இது ரொம்ப குட் நியூஸ். ஏய் வெக்கம் எல்லாம் படுறீங்க?”, என்று அவளை கட்டி கொண்டு சிரித்தாள் மது.
கூச்சத்துடன் சிரித்த மீரா “என்னை வா போன்னே பேசுங்க மது”, என்றாள்.
“அப்ப நீயும்  வா போன்னே பேசு. அத்தான் எப்ப தூங்குனாங்க? நான் பிரசாதம் சாப்பிட எடுத்துட்டு வந்தேனே அத்தை”
“அவன் எழுந்த உடனே கொடு மது”, என்று சொல்லி விட்டு மதுவிடம் பேச ஆரம்பித்தாள் சாவித்ரி.
தயக்கத்துடன், கண்களை திருப்பி ஒரு எதிர்பார்ப்புடன் மனோஜை பார்க்க முயன்றாள் மீரா.
“ஆனா அவன் தான் என்னை பாக்க மாட்டானே”, என்று நினைத்து கொண்டு பார்வையை திருப்பி கொண்டாள். ஆனாலும் ஆசை வெல்ல அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் திகைத்தே போனாள். அங்கே அவன் அவளை விழுங்குவது போல பார்த்து கொண்டிருந்தான். அவன் கண்களில் அவள் எதிர்பார்த்த  காதல் மின்னியது.
அதை பார்த்து மீராவின் மனது குதூகலித்தது. அவன் தன்னை இப்படி பார்க்க வில்லை என்று தானே கவலை பட்டாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
இமைக்க கூட மறந்து அவளை பார்த்து கொண்டே நின்றவன் அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை முழுமையாக படித்தான்.
அவள் கண்கள் கலங்குவதை அறிந்து கண்களாலே அழாதே என்னும் விதமாய் சைகை செய்தான். அதில் மலர்ந்தே போனாள் மீரா.
டேபிளில் இருந்த அவனுடைய போனை எடுக்க வருவது போல, அவள் அருகில் வந்தவன் “இப்படி எல்லாம் ரியாக்சன் கொடுத்தா கல்யாணம் வரைக்கும் என்னால தாங்க முடியாது மீரா. அது வரைக்கும் என் கிட்ட தனியா மாட்டாத. அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை”, என்று அடிக்குரலில் சொல்லி விட்டு அந்த பக்கம் போய் விட்டான். செக்க சிவந்து போனாள் மீரா. 
தூக்கத்தில் எழுந்த தேவா, அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த மதுவை பார்த்து முறுவலித்தான். அவள் உதடுகளும் விரிந்தது.

Advertisement