Advertisement

“அதுவும் சரி தான். வா கிளம்பலாம். காரில் போகும் போது அம்மாவுக்கு சொல்லிக்கலாம்”
“ம்ம்”, என்று சொல்லி இருவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஏர்போர்ட்டில் இருந்தார்கள்.
காரில் வரும் போதே சாவித்ரியிடம் விசயத்தை சொன்னான் மனோஜ்.

கடவுளை துதித்து விட்டு “நாங்க ரெண்டு நாள் கழிச்சு வாரோம் பா.  மது தேவா  கிட்ட பேசணுமாம். அவன் கிட்ட கொடு”, என்றாள் சாவித்ரி..

மதுவின் “அத்தான்”, என்ற குரல் தேவாவின் உயிர் வரை சிலிர்த்தது.

“மது மா, கவலை படாத டா. நல்லதா நடக்கும். நீ ரெண்டு நாளில் வந்துரு மா”

“கண்டிப்பா வருவேன் அத்தான். நீங்க தைரியமா இருக்கணும். எனக்கு சந்தோஷத்துல அழுகையா வருது. அங்க போய்ட்டு போன் பண்ணுங்க”

“சரி டா குட்டி வைக்கிறேன்”, என்ற படியே வைத்து விட்டான்.

டெல்லியில் இறங்கியவுடன் அவர்களை வரவேற்க வந்து விட்டார் ராபர்ட்.
அவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்த ராபர்ட் அன்றே சைன்டிஸ்டை பார்க்க அழைத்து சென்று விட்டார்.
எந்த தாமதமும் இன்றி ஆப்ரரேசன் செய்ய பட்டது தான் கடவுளின் விந்தையோ? முருகா முருகா என்று சொல்லி கொண்டே இருந்தான் தேவா. ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது.
இரண்டு நாள் பொறுக்க முடியாமல் அடுத்த நாளே மதுவும் சாவித்திரியும் வந்து விட்டார்கள்.
கண்ணில் கட்டுடன் அமர்ந்திருந்த தேவாவை பார்த்ததும் “அத்தான்”, என்று ஓடிய படியே அவனை அணைத்து கொண்டாள் மது.
இருவர் தலை மீது கை வைத்து ஆசிர்வாதம் செய்தாள் சாவித்ரி.
மனோஜும் அங்கே அவர்களை கிண்டல் செய்து கொண்டு இருந்தான். எல்லாருமே நன்கு சிரித்து கொண்டிருக்கும் போது அங்கு நர்ஸ் ஒருத்தி வந்தாள்.
அவளை பார்த்ததும் தர்மசங்கடத்துடன் எல்லாரும் சிரித்தார்கள்.
“ரொம்ப சத்தம் போட்டுட்டோமா மா?”, என்று கேட்டாள் சாவித்ரி.
“உண்மையான உறவுகளோட அருமை அது கிடைக்காத எனக்கு தான் மா தெரியும். இப்படி குடும்பமா சிரிச்சிட்டு இருக்குறது நல்லா இருக்கு. அந்த சந்தோசத்தை கெடுக்க நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா இனி சத்தத்தை குறைச்சிக்கோங்க. டாக்டர் வருவாங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
போன அவளையே வெறித்து பார்த்தாள் சாவித்ரி. பின் ஒரு முடிவு எடுத்து விட்டு மனோஜை திரும்பி பார்த்தாள். அவனும் அவள் போன பாதையை தான் வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
“பய மயங்கிட்டான். அவனுக்கும் ஜோடி கிடைச்சிருச்சு”, என்று சிரித்து கொண்டாள் சாவித்ரி.
சாவித்ரியை “ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி ஒரு அறையில் விட்டுவிட்டு தேவாவை அட்மிட் செய்திருக்கும் அறைக்கு வந்தான் மனோஜ்.
உள்ளே மதுவும், தேவாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் அவர்களை தொல்லை  செய்ய கூடாது என்று நினைத்து வெளியவே நின்றான்.
அப்போது தான் சோக சித்திரம் போல் அமர்ந்திருந்த அந்த நர்ஸ் கண்ணில் பட்டாள்.
மனோஜ் கால்கள் அவனை அறியாமலே அவளை நோக்கி நகர்ந்தது.
தன் முன்னே எதுவோ நிழலாட தலையை தூக்கி பார்த்தாள் அவள்.
அவனை பார்த்ததும் “ஏதாவது வேணுமா சார்?”, என்று கேட்டாள்.
“ஹ்ம்ம் உங்க பேர் என்ன?”
“மீரா, ஏன் கேக்குறீங்க?”
“சும்மா தான். உங்க கிட்ட  ஒரு கேள்வி கேக்கணும். கேக்கலாமா??”
“என்ன கேள்வி?”
“உங்களுக்கு யாருமே இல்லையா?”
“இது இவனுக்கு எப்படி தெரியும்?”, என்று யோசித்தவளுக்கு அவர்கள் பேசி சிரித்த போது அவளையே அறியாமல் உளறியது நினைவில் வந்தது.
“சாரி என்னையே மறந்து சொல்லிட்டேன் போல?”, என்று தர்ம சங்கடமாக சொன்னாள் மீரா.
“பரவால்ல பதில் சொல்லுங்க”
“ஹ்ம்ம் ஆமா யாருமே இல்லாத அனாதை நான். அப்பா அம்மா யாருன்னே தெரியாத அனாதைன்னு கூட சொல்லலாம்”
“உங்களுக்கு எல்லா உறவுமா நான் இருக்க நினைக்கிறேன். என் கூட வாறீங்களா?”
“என்ன மிஸ்டர் பரிதாபமா?”
“இல்லை, யாருமே இல்லாத வேதனையை உங்களை மாதிரியே அனுபவிக்கிறவன் நான். உங்க வலிக்கு மருந்தா நானும், எனக்கு நீங்க மருந்தாவும் இருந்தா நல்லா இருக்கும்னு யோசிக்கிறேன்”
அவளை மாதிரியே அவனும் என்றதும் அவள் மனதில் மெல்லிய சாரல். அவள் எதோ பதில் சொல்ல தொடங்கவும், “என் கெஸ் சரின்னா சாவித்ரியம்மா உங்க கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ண சொல்லி கேப்பாங்க. உங்களுக்கு நிஜமாவே பிடிச்சிருந்தா அவங்க கிட்ட சொல்லுங்க”, என்று சொல்லி விட்டு அங்கு இருந்து நகர்ந்து விட்டான்.
அவனுடைய வித்தியாசமான ப்ரோபோசலை ரசித்தாள் மீரா.
அன்று தேவாவுக்கு கட்டு பிரிக்க வேண்டிய நாள். எல்லாரும் ஒரு டென்ஷனோடு இருந்தார்கள்.
தேவாவுக்கு டென்ஷன் உச்ச கட்டமாக இருந்தது. “தேவா நீங்க இப்படி எமோஷன் ஆக கூடாது”, என்று எச்சரித்தார் டாக்டர்.
அவனுக்கு குறைவேனா என்று இருந்தது. “இவ்வளவு பிரஷர் வச்சிட்டு ஐ ஓபன் பண்ணா நெகடிவ் ரிசல்ட்னா உங்க ஹார்ட் பாதிக்க படும். கொஞ்ச நேரம் கழிச்சு கட்டை பிரிக்கலாம்”, என்றார்.
அவரை தடை செய்தது மதுவின் குரல். “அஞ்சு நிமிசத்துல தேவா சரி ஆகிருவார் டாக்டர்”, என்றவள் தேவா அருகில் போய் அமர்ந்தாள்.
அவளை அருகில் உணர்ந்ததும், அவள் கையை இறுக பற்றி கொண்டான் தேவா. அவன் கை எல்லாம் ஆடியது. அவனுடைய  இதய துடிப்பு அவளுக்கே  வெளிய கேட்டது.

அவன் கையை மெதுவாக வருடிய மது “அத்தான் என்ன இது? சின்ன பிள்ளை மாதிரி பயப்படுறீங்க?”, என்று சிரித்தாள்.

“நான் பயப்படலை மது. இத்தனை நாள் கண்ணை பத்தி யோசிக்கலை. ஆனா இப்ப  உங்க எல்லாரையும் பாக்கணும்னு எதிர்பார்ப்பு வந்துட்டு. அது நடக்கலைன்னா மனசு கஷ்ட படும் மது. அதான் பயமா இருக்கு”, என்று பதட்டத்துடன் சொன்னான் தேவா.

“இப்ப என்ன கஷ்டம் உங்களுக்கு? நீங்க தான் எங்க எல்லாரையும் பாத்துருக்கீங்களே அத்தான். அப்புறம் என்ன? கண்டிப்பா உங்களுக்கு பார்வை கிடைக்கும். கடவுள் முடிவு என்னவா இருந்தாலும் சரி தான். அப்படியே பார்வை தெரியலைன்னா என்ன அத்தான்? நாங்க எல்லாரும் உங்க கூடவே தான இருக்க போறோம்?”, என்று கத்தி சொன்னவள், அவன் காதருகே குனிந்து  “கண் கிடைக்காம போனா உங்களை நான் தான் உடம்பெல்லாம் சோப்பு போட்டு குளிக்க வைப்பேன். அது தான் உங்களுக்கு பிடிக்குமே. அதனால கண்ணு கிடைச்சா சந்தோசம்ன்னு  நினைங்க. கிடைக்கலைனா இதை விட ரொம்ப சந்தோசம்னு  நினைச்சுக்கோங்க”, என்றாள்.

“மது அங்க எல்லாம் சோப்பு போடுவியா மது?”, என்று கிசு கிசுப்பாக  கேட்டான் தேவா.

“அதை சொன்னா மட்டும் சார்க்கு  பல்ப்  எரியுமே? தனியா மாட்டுங்க. உங்களுக்கு இருக்கு “, என்று அவனை பார்த்து சிரித்தவள் “ஆல் தி பெஸ்ட் அத்தான்”, என்றாள். மது அவனை குழந்தையாக பார்த்து கொள்வாள் என்றால் ஆயுள் முழுவதும் குருடனாய் இருப்பானே அவன்.

அவன் கையை அழுத்தி விட்டு  பின் சைண்டிஸ்ட்டிடம்  திரும்பிய மது   “அத்தான் இப்ப சரி ஆகிட்டாங்க. நீங்க கட்டை அவிழ்க்கலாம்”, என்றாள்,

அதன் பின் எல்லா பொருளும் எடுத்துவைக்க பட்டு கண்  கட்டு பிரிக்க தயாரானது. 

அவனுக்கு ஆப்பரேசன் செய்த மருத்துவர், வெளிநாடு சென்று விட்டதால் ராபர்ட் தான் அவனுக்கு கட்டு பிரிக்க ஆரம்பித்தார்.
“கட்டை பிரித்ததும் மெதுவா கண்ணை ஓபன் பண்ணனும். இப்ப லைட் எல்லாம் ஆப் ல தான் இருக்கு தேவா. ஒரே ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டும் தான் இருக்கும். மெது மெதுவா தான் பாக்கணும் சரியா?”
“சரி டாக்டர்”, என்று அவன் சொன்னதும் “நர்ஸ் கட்டை பிரிங்க”, என்று டாக்டர் சொன்னார்.
அவன் கட்டை அவிழ்த்தாள்  மீரா. அவளுக்கும் அவனுக்கு பார்வை வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கட்டை அவிழ்த்ததும் அவன் கண்களுக்குள் இருட்டு மட்டும் தான் தெரிந்தது. மெதுவாக திறந்தான். நெஞ்சம் முழுவதும் பதட்டம் சூழ்ந்திருந்தது.
“கடவுளே என்னால இந்த உலகத்தை மறுபடியும் பாக்க முடியுமா?”, என்ற கேள்வியுடன் கண்ணை திறந்தான். இப்போது  மங்கலாக எதுவோ தெரிந்தது.
கண்களை  மூடி விட்டு மறுபடியும் திறந்தான். அந்த மெழுகுவர்த்தி ஒளி மிக லேசாக அவன் கண்களுக்கு தெரிந்தது.
“வெளிச்சம் தெரியுதா தேவா?”, என்று கேட்டார் ராபர்ட்.
“மங்கலா எதுவோ தெரியுது டாக்டர்”
“குட், இன்னும் மெதுவா அதை பார்க்க முயற்சி செய்ங்க”
“சரி டாக்டர்”, என்ற படி பார்த்தவனுக்கு வியப்பு ஏற்பட்டது. சிறிது சிறிதாக அவனுக்கு வெளிச்சம் தெரிவது அதிகமாகி கொண்டே இருந்தது. அதை விட அதிசயம் அந்த மெழுகுவர்த்தி பக்கத்தில் அமர்ந்திருந்த அவன் மது அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
“நான் கனவு காண்கிறேனா?”, என்று நினைத்து கொண்டு பார்வையை கூர்மையாக்கி இன்னும் பார்த்தான்.
முகம் முழுவதும் சிரிப்புடனும், கண்களில் வழியும் நீருடனும் அவன் மதுவே எதிரே அமர்ந்திருந்தாள்.
அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் முகம் மங்கலாக தான் தெரிந்தது. ஆனால் எதுவோ பிறவி பயனை அடைந்தது போல உணர்ந்தான் தேவா. அடுத்த நொடி “மது”, என்று சந்தோசத்துடன்  கூவினான் தேவா.
“தேவா உங்களுக்கு மது தெரியுறாங்களா?”
“ஆமா டாக்டர் தெரியுறா? இது கனவு இல்லை தான?”
“வெரி குட், கனவு இல்லை மிஸ்டர் தேவா. உங்க மதுவே தான். அம்மா, உங்க பையனுக்கு பார்வை தெரிஞ்சிட்டு. வெளிச்சம் பக்கத்துல இருந்த உங்க மருமகளை கண்டு பிடிச்சிட்டாரு. எங்களை எல்லாம் தெரியுதா தேவா? இல்லைனா மது மட்டும் தான் தெரியுறாங்களா?”, என்று சிரித்தார் டாக்டர்.
“எனக்கு நீங்க எல்லாருமே தெரியுறீங்க டாக்டர்”
அடுத்த நொடி “அத்தான்”, என்று ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள் மது.  அவன் நெஞ்சில் சாய்ந்து ஆனந்த கண்ணீர் விட்டாள் மது. அவள் முதுகை தடவி கொடுத்தான் தேவா.
“அம்மா”, என்று தேவா அழைத்தவுடன் அவன் அருகில் சென்ற சாவித்திரியும், கண்களில் நீருடன் மகனின் தலையை வாஞ்சையாக தடவினாள். அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது. அதை தேவாவின் கை துடைத்து விட்டது.  இந்த பாசத்தை எல்லாரும் கண்களில் நீரோடு பார்த்து கொண்டிருந்தார்கள்.
மதுவோ எதையுமே கவனிக்காமல் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டே இருந்தாள்.
“அம்மா  உங்களை மறுபடியும் பாத்துட்டேன் மா. உங்களை எல்லாம் மறுபடியும் பாப்பேனோனு ரொம்ப பயந்துட்டேன் மா”, என்று உணர்ச்சி பெருக்கோடு சொன்னான் தேவா.
“ஆமா கண்ணா, நாம யாருக்கும் எந்த துரோகமும் செய்யலை. சோதனை கொடுத்தாலும் கடவுள் நம்மளை கை விட மாட்டார் தேவா”, என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட சாவித்ரி ராபர்டை பார்த்து கை கூப்பினாள்.
“அட என்னமா என்னை கும்பிட்டுக்கிட்டு. உங்களுக்கு கடவுள் உதவி செய்ய என்னை அனுப்பிருக்கான். அவ்வளவு தான். நான் வேற எதுவும் செய்யலை. நீங்க நாளைக்கு சாயங்காலம் டிஸ்‌சார்ஜ் ஆகலாம். அது வரை கண்ணில் ஏதாவது எரிச்சலோ வலியோ இருந்தா என்னை கூப்பிடுங்க. மீரா சிஸ்டர் பாத்துக்கோங்க”, என்றார் ராபர்ட். 
“சரி டாக்டர்”, என்றாள் மீரா.
“அப்படியே என்னோட நண்பனுக்கு போன் பண்ணி நீங்களே பேசிருங்க தேவா. அவன் மட்டும் சரியான நேரத்தில் போன் செய்யலைன்னா எதுவுமே நடந்துருக்காது. இதை கேட்டா  அவன் ரொம்ப சந்தோச படுவான்”, என்றார் ராபர்ட்.
“கண்டிப்பா டாக்டர் சார் கிட்ட பேசுறேன் டாக்டர். நீங்க ரெண்டு பேரும், வாழ்க்கையில் மறக்க முடியாத உதவி செஞ்சிருக்கீங்க. நான் மறக்கவே மாட்டேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். தேங்க் யூ சோ மச்”
“ஹ்ம்ம்  விடுங்க தேவா. அதிக வெளிச்சமான எதையும் நீங்க இப்ப பாக்க கூடாது. உங்களை மீரா கவனிச்சிப்பாங்க”, என்று சொல்லி விட்டு  கிளம்பி போனார் ராபர்ட்.
அப்போது தான் மனோஜ் நினைவு வந்தது தேவாவுக்கு. தலையை திருப்பி அவனை பார்த்தான். அவனும் கண்களில் நீருடன் தான் நின்றிருந்தான்.
“மச்சான், கிட்ட வாடா.  ஏன் டா அங்கேயே நிக்குற? நீ, அம்மா, மது மூணு பேரும் மாத்தி மாத்தி கண்ணு தரேன்னு சொன்னீங்க? இப்ப பாத்தியா உங்களை எல்லாம் பாக்குறதுக்கு கடவுளே எனக்கு கண்ணு  கொடுத்துட்டான் டா. அம்மாவும், மதுவும்  தான் அழுறாங்கன்னா நீயும் அழுதுட்டு இருக்க?”, என்று சிரித்தான் தேவா.
“எங்க கிட்ட வரதாம்? உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்க அவ்வளவு ஆசையா இருக்கு. ஆனா என் தங்கச்சி, வழி விடாம உன்னை பிடிச்சி வச்சிருக்காளே”, என்று சிரித்து கொண்டே சொன்ன மனோஜ் தேவா  கையை இறுக்கி பிடித்து கொண்டான்.
மனோஜ்  உதடுகள் சிரித்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அதை ஆச்சர்யமாக பார்த்தாள் மீரா. அவனுடைய சந்தோஷத்தில் அவள் மனதிலும் ஒரு இனம் புரியாத நிம்மதி வந்து அமர்ந்தது.
மனோஜ் கேலியில் தேவா நெஞ்சில் இருந்து எழுந்த மது  “நான் எல்லாரையும் மறந்துட்டேன்”, என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
அவள் பதிலில் எல்லாருமே சிரித்தார்கள்.
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement