Advertisement

அவன் அருகில் படுத்த தேவாவுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. “மது.. மது உன்னை இப்பவே பாக்கணும்னு தோணுது டி”, என்று நினைத்து கொண்டவனுக்கு சீக்கிரம் கண் வேண்டும் என்று தோன்றியது.
அடுத்த நாள் காலை அழகானதாக விடிந்தது.
ஆறு மணி போல் கண் விழித்த மனோஜ், அருகில் உதட்டில் சிரிப்புடன் படுத்திருந்த தேவாவை பார்த்தான்.
“டேய் தூங்கவே இல்லையா? நைட் இருந்த அதே போஸ்ல படுத்திருக்க?”, என்று கேட்டான் மனோஜ்.
“சும்மா கிண்டல் அடிக்காத டா. அதெல்லாம் தூங்குனேன். சீக்கிரம் முழிப்பு வந்துட்டு. அதான் சும்மா படுத்துருக்கேன்”
“யாரு?.. நீ சும்மா படுத்திருக்க? நம்பிட்டேன் மச்சான். மதுவை எப்ப பாப்பேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்க போல?”
“ஆமா டா. ஒன்பது மணிக்கு வருவேன்னு சொன்னா”
“முத்திட்டு டா. முத்திட்டு. உனக்காக கடிகாரம் வேகமா ஓடுமா என்ன? மணி ஆறு தான் ஆகுது. சரி நான் ரூம்க்கு கிளம்புறேன். ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு. இன்னைக்கே முடிச்சா தான் நாளைல இருந்து கல்யாணத்துக்கு அம்மாவுக்கு உதவ முடியும். நீ அவ வரதுக்குள்ள பல்லு விளக்கி குளிச்சு ரெடி ஆக போறியா? இல்லை, அவ வந்து தான் எல்லாம் செய்யணுமா?”
“இது கூட நல்ல ஐடியா வா இருக்கு டா மனோஜ்”
“உன்னை…”, என்ற படி அவன் தோளில் அடித்த மனோஜ் பாத்ரூம் போய் உடையை மாற்றி கொண்டு அவனிடம் வம்பிழுத்து கொண்டிருந்தான்.
கீழே ஏழு மணிக்கு இறங்கி வந்த மனோஜை காபியுடன் வரவேற்றாள் சாவித்ரி.
“அம்மான்னா அம்மா தான்”, என்ற படியே காபியை வாங்கி கொண்ட மனோஜ் “தேவாவுக்கு”, என்று இழுத்தான்.
“அவன் அப்புறமா தான் குடிப்பான் மனோ. நீ குடி. சாப்பிட்டு போறியா?”
“இல்ல மா. இன்னும் குளிக்கவே இல்லை. ரூம்ல போய் தான். நாளைல இருந்து அம்மா கையாள தான் சாப்பாடு. இன்னைக்கு மட்டும் சீக்கிரம் போகணும். அதனால சாப்பாடு வரைக்கும் வெயிட் பண்ண முடியாது மா”
“என்ன டா நாளைல இருந்து? நைட் இங்க பெட்டியோட வந்துருக்கணும், சொல்லிட்டேன்”
“ஹா ஹா சாவி சாவி… சரி சரி சாயங்காலம் வரேன். இப்ப கிளம்புறேன். பை”, என்று சொல்லும் போது, அழைப்பு மணி சத்தம் கேட்டது.
“இந்த நேரத்துக்கு யாருன்னு தெரியலையே டா”
“பாத்தா தெரிஞ்சிர போகுது. நீங்க இருங்க மா. நான் பாக்குறேன்”
“நீ காபியை குடி. நான் பாக்குறேன்”, என்று எழுந்து போன சாவித்ரி வாசலில் மதுவை பார்த்து ஆனந்தத்தில் திகைத்தார். ஆனால் அவளோ சிறு தயக்கத்துடன் நின்றாள்.
“மது மா. உள்ள வா டா. இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு நினைக்கவே இல்லை. உள்ள வா”
“அப்பாவுக்கு வேற வேலை இருக்குதாம் அத்தை. அதான் இப்பவே விட்டுட்டு போனாங்க”, என்று பொய் சொன்னவளுக்கு “எப்ப டா தேவாவை பாப்போம் என்று ஓடி வந்த, அதுவும் அப்பா, அம்மாவிடம் டிமிக்கி கொடுத்துட்டு வந்த உண்மையை சொல்ல தயக்கமாக இருந்தது.
சாவித்ரியுடன் உள்ள வந்த மது, அங்கு நின்ற புதியவனை பார்த்து சினேகமாக சிரித்தாள்.
“ஹாய் மது”, என்று சந்தோசமாக சிரித்தான் மனோஜ்.
“இவன் மனோஜ். எனக்கு இன்னொரு பையன் மா.  தேவாவோட சின்ன வயசில இருந்து ஒண்ணா படிச்சவன். நீ உக்காரு. உனக்கும் காபி எடுத்துட்டு வரேன். காலைல என்னத்த சாப்பிட்டிருக்க போற?”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
“தேவா ரொம்ப கொடுத்து வச்சவன் மது”, என்றான் மனோஜ்.
புரியாமல் புருவம் உயர்த்தியவளை பார்த்து சிரித்தவன் “பையன் நைட் புல்லா தூங்கவே இல்லை. காலைல எப்ப டா ஒன்பது மணி ஆகும்னு முழிச்சிட்டு கிடக்கான். அப்ப தான் நீ வருவியாமே”, என்று சிரித்தான்.
வெட்கத்துடன் சிரித்தவள், அவனை எப்படி கூப்பிட என்று தெரியாமல் அவனை பார்த்தாள்.
அதை பார்த்தவன், “அண்ணனு கூப்பிடு மது. இனிமே நீ தான் எனக்கு தங்கச்சி. அவன் நீ தான் வந்து பல்லு விளக்கணும்னு படுத்து கிடக்கான். போய் விளக்கி விடு”, என்று சிரித்தான்.
அவன் அண்ணன் என்று சொன்னதில் மலர்ந்து  சிரித்தவள் அடுத்து சொன்ன வார்த்தைகளில் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.
அதற்குள் காபியுடன் வந்த சாவித்ரியை பார்த்த மனோஜ் “சாவி மா, நான் கிளம்புறேன். மதுவை தேவா ரூம்க்கு போக சொல்லுங்க”, என்று சிரித்தான்.
“சரி டா வாயாடி. நீ சாயங்காலம் வந்துரு. பாத்து போய்ட்டு வா”
“சரி மா. கிளம்புறேன். வரேன் மது”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“நீ தேவாவுக்கும் இந்த காபியை கொடுத்துட்டு நீயும் குடி மா”, என்று சொல்லி மேலே போக சொன்னாள் சாவித்ரி.
அவனை பார்க்க ஆவலாக இருந்தாலும் “எப்படி அவன் ரூமுக்கு போக? அத்தை எதாவது நினைச்சிக்குவாங்களோ?”, என்று தயங்கினாள்.
அதை உணர்ந்த சாவித்ரி, “தேவா உன்னோட புருஷன் மா. நான் உன்னை இந்த வீட்டு மருமகளா தான் பாக்குறேன். அவனை நீ தான் இனி பாத்துக்கணும். தயங்காம போடா”, என்றாள்.
“சரி அத்தை”, என்று சிரித்து விட்டு காபியை எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள் மது.
உள்ளே நுழைந்தவளின் கண்ணில் பட்டது, வெற்று மார்புடன் இடுப்பு வரை போர்வை போர்த்தி படுத்திருந்த தேவா தான்.
சிறு வெட்கத்துடன் உள்ளே சென்றவள், அங்கு இருந்த டேபிள் மீது காபியை சத்தம் இல்லாமல் வைத்து விட்டு கட்டிலுக்கு சென்றாள்.
உதட்டில் சிரிப்புடன் கண்களில் ஒரு வித ஒளியுடன்  அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்தாள் மது.
“மது..”, என்று சந்தோஷத்தில் கூவியவன் “ப்ச் போ மது. நைட் புல்லா தூங்கவே விட மாட்டிக்க. உன்னோட நினைவாவே இருக்கு. எப்ப டி ஒன்பது மணியாகும். எப்ப என்னை பாக்க வருவ? சீக்கிரம் வா டி. இப்படி கனவுல இல்லை, நேர்ல”, என்று வாய் விட்டே புலம்பினான்.
ஒரு தொடுகையில் தன்னை உணர்ந்தவனை நினைத்து நிம்மதியாக இருந்தது மதுவுக்கு. “என்னை அவன் உணரணும், அப்படின்னு நினைச்சு துடிச்சேனே. இப்ப  அதை நடத்தி காட்டிட்டான். ஒரு தொடுகையில் என்னை கண்டு பிடிச்சிட்டான்”, என்று சந்தோசமாக நினைத்தவள் அவன் முகத்தை நோக்கி குனிந்தாள்.
தானாக போய் முத்தம் கொடுக்க தயக்கமாக இருந்தாலும் “என்னோட தேவா”,, என்று நினைத்து கொண்டு அவன் உதடுகளில் தன் உதட்டை பதித்தாள்.
ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனான் தேவா.
அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் “பல்லே விளக்கலை டி”, என்றான்.
“ஹ்ம்ம் போங்க அத்தான். அதெல்லாம் பரவால்ல”, என்று சிணுங்கினாள்.
“பரவால்லன்னா, உன்னை விலக்க மாட்டேன். இன்னும் இன்னும் ஒட்டிக்கலாம்?”, என்று சொல்லி கொண்டே அவள் முகத்தை தன்னை நோக்கி இழுத்தான். 
சிறிது நேரம் கழித்து விலகி அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் “இது கனவு இல்லை தான மது?”, என்று கேட்டான்.
“இது  ஒன்னும் கனவு இல்லை. ஒன்பது மணி வரைக்கும் உங்களை பாக்காம எப்படி இருக்குறதாம்? அதனால அப்பா கிட்ட கோயிலுக்கு போய்ட்டு அத்தை வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்”
எழுந்து அமர்ந்த தேவா “பிராடு”, என்ற படியே அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
அன்று முழுவதும் அவனுடனே இருந்தாள். அவள் கையை பிடித்து கொண்டு கதை பேசினான். அவள் தூங்க தன் தோள் தந்தான். முகம் முழுவதும் முத்தமிட்டான். எல்லை தாண்டாமல் நடந்து கொண்டான்.

அவளுடைய நெருக்கத்தில் அவள் வேண்டும் என்ற தாபம் எழுந்த போது, “கீழ அம்மா தனியா இருப்பாங்க. அங்க போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்து போக சொன்னான். 

அடுத்து வந்த இரண்டு நாளில் அந்த வீட்டில் ஒருத்தியாக மாறி போனாள் மது. 

சாவித்திரியும், தேவாவும் மது மது என்று அவளை தாங்கினார்கள்.

மனோஜூம் அங்கேயே வந்து விட்டதால், இன்னும் சந்தோசமாக இருந்தது அனைவருக்கும்.

“அண்ணா அண்ணா”, என்று மது கூப்பிடும் போது, எந்த உறவுகளும் இல்லாத மனோஜ் நெகிழ்ந்து போனான். 

பகல் முழுவதும் இருக்கும் அவளை இரவில் அழைத்து போக வரும் போது கேசவன், அந்த வீட்டில் அனைவரும்  மது மது என்று உயிரை விடுவதை பார்த்து சந்தோசத்துடன் அன்னத்திடம் புலம்பினார்.

“நம்ம பொண்ணு நல்லா இருப்பா அன்னம். அப்படியே சந்தோசமா வானில் பறக்கிற மாதிரி இருக்கு”

அன்னம் முகமும் அதை கேட்டு மலர்ந்து போகும். 

கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் அந்த கண் மருத்துவர் முன்பு அமர்ந்திருந்தார்கள் தேவாவும், மதுவும்.

“இப்ப கண்ணுல புண்ணு எல்லாம் ஆறிருச்சு தேவா. இன்னும் கண்ணு கிடைச்சா பொருத்தி பாக்கலாம். கண்டிப்பா பார்வை கிடைக்கும்”, என்றார் மருத்துவர்.

“தேங்க யு டாக்டர். அப்புறம் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம். இந்தாங்க இன்விடேஷன்”, என்று கொடுத்தான் தேவா.

“ஓ கங்கிராட்ஸ் தேவா, மது உங்களுக்கும்”, என்று சிரித்தார் டாக்டர்.

“தேங்க யு டாக்டர். அப்புறம் நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கணுமே”, என்று ஆரம்பித்தாள் மது.

“சொல்லுங்க மது?”

“இல்லை என்னோட கண்ணை, இப்பவே தேவாவுக்கு கொடுத்தா அவருக்கு பார்வை கிடைச்சிருமா?”

டாக்டர் அதிர்ச்சியாக அவளை பார்த்தார். தேவா அவள் கையை டேபிள் கீழே வைத்து நெரித்து விட்டு, “அவ இப்படி தான் புலம்புவா டாக்டர். நீங்க கண்டுக்காதீங்க. நாம ஐ பேங்க்ல கிடைக்கிறப்ப ஆபரேஷன் வச்சிக்கலாம்”, என்றான்.

“தேவா சொல்றது தான் சரி மது. அவருக்கு கண்ணு கிடைக்க வாய்ப்பு இருக்கிறப்ப, அதுக்காக காத்திருக்காம எதுக்கு அவசர படணும்? உங்க காதலை நினைச்சு எனக்கு புல்லரிக்குது. உங்க கண்ணை அவருக்கு கொடுக்கணும்னு நினைக்கிற தப்பான எண்ணத்தை விட்டுட்டு அவருக்கு கண்ணு கிடைக்கிற வரைக்கும் நீங்க கண்ணா இருந்து அவரை பாத்துக்கோங்க. அப்புறம் தேவா, நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க. கண்டிப்பா கல்யாணத்துக்கு வரேன்”, என்று சிரித்தார் டாக்டர்.
காரில் ஏறியதும் உம்மென்று இருந்தாள் மது.
அவளை நினைத்து சிறகில்லாமல் வானத்தில் பறந்தான் தேவா. டிரைவர் வண்டி ஓட்டி கொண்டிருப்பதால் இருவருக்குள்ளும் மௌனம் சூழ்ந்திருந்தது.
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement