Advertisement

அத்தியாயம் 4
மழை வரும் முன் 
எழும் மண் வாசமாய் 
என்னை வசியம் செய்கிறது 
உன்னை பற்றிய நினைவுகள்!!!
மனோஜ், தேவா அறைக்குள் நுழையும் போது, அங்கே கையில் பேப்பரை வைத்து கொண்டு கனவில் சஞ்சரித்து கொண்டிருந்தான் தேவா. 

“எப்ப மனோஜ் வருவான்? இதில் என்ன எழுதிருப்பா? மது கை எழுத்து அவளை மாதிரியே அழகா இருக்குமா? “, என்று 
நினைத்து கொண்டே அவளை பற்றிய நினைவுகளையும் அவன் உணர்ந்த அவள் உடலின் மென்மையும் அசை போட்டான் தேவா.

அவளுடைய சிணுங்கல்கள், அவன் காதில் இப்போது நாதமாய் ஒலிப்பது போல இருந்தது.
“என்ன பய பித்து புடிச்ச மாதிரி உக்காந்துருக்கான்?”, என்று நினைத்து கொண்டே உள்ளே போன மனோஜ் “தேவா”, என்று அழைத்தான்.

கனவில் இருந்து வெளியே வந்த தேவா “வந்துட்டியா டா மனோஜ்?”, என்று கேட்டான்.

“ஹ்ம்ம் ஆமா டா. நீ கூப்பிட்டு எப்படி வராம இருப்பேன்?”

“ஆமா இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இங்கயே இருன்னு சொன்னா மட்டும் கேக்காத”

“மறுபடியும் நீ  ஆரம்பிக்காத தேவா. இப்ப தான் சாவியை சமாதான படுத்திட்டு வந்துருக்கேன்”

“ஹ்ம்ம். சரி சாப்பிட்டியா?”

நண்பனின் கேள்வியில் நெகிழ்ந்த மனோஜ் “இப்ப தான் அம்மா சாப்பிட வச்சாங்க டா”, என்றான்.

“சரி, சரி கல்யாண வரைக்கும் இங்கயே இரு டா மனோஜ்”

“அம்மாவும் இதை தான் சொன்னாங்க. நாளைக்கே பையை தூக்கிட்டு வந்துருவேன் போதுமா?”

“சரி இப்ப  என்னோடதை எதாவது எடுத்து போட்டுக்கோ”

“ஹ்ம்ம் சரி”, என்றவன் எழுந்து போய், தேவா வீட்டுக்கு போடும் உடையில் இருந்து ஒன்றை எடுத்து மாத்த போனான்.

முன்னாடி எல்லாம் இங்கு வந்தா, தேவா பாப்பானே என்று நினைத்து பாத்ரூம் போய் மாற்றுவதும், “உன் உடம்பை சிட்டு குருவி கூட பாக்காம பத்திர படுத்தி வச்சிக்கோடா”, என்று தேவா கிண்டல் செய்வதும் நினைவில் வந்தது. 

ஆனால் இப்போது அந்த பார்வையை பறி கொடுத்து விட்டு அமர்ந்திருக்கும் நண்பனை பார்த்து மனோஜ்  இதயம் கண்ணீர் வடித்தது. 

“அன்னைக்கு அந்த மீட்டிங்க்கு நான் போயிருக்கணும். அவனை அனுப்புனது என் தப்பு”, என்று நினைத்து கொண்டே பாத்ரூம் போய் மாற்றி விட்டு அமர்ந்தான் மனோஜ்.

“இன்னைக்கும் சீக்ரட்டா பொண்ணு மாதிரி மாத்திட்டு வர டா. பாக்க தான் எனக்கு கண்ணு இல்லையே. இங்கயே மாத்திருக்கலாம்ல?”, என்ற தேவாவின் குரலில் துளி கூட சோகம் இல்லை. அவன் வார்த்தைகள் வலி மிகுந்தது தான். ஆனா அதை சிரிப்புடன் தான் சொன்னான் தேவா.

அவன் சந்தோஷத்தில் மனம் நிறைந்த மனோஜ், “ஆமா பின்ன உன் முன்னடியா மாத்துவாங்க. பின்னாடி வர போகும் என் பொண்டாட்டி, என்கிட்டே சண்டை போடுவாளே”, என்று சிரித்து கிண்டலில் இறங்கினான்.

“ஆமா ஆமா, வராத பொண்டாட்டியை நினைச்சு இப்பவே கனவா?”

“என்னை விடு, உன் கனவு எல்லாம் எப்படி இருக்கு?  மதுவதனி பேசுனாங்களா?”

“மனோஜ்”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் தேவா.

அவன் குரலில் திடுக்கிட்ட மனோஜ் “தேவா, என்ன ஆச்சு டா”, என்று கேட்டான்.

“அது மதுவதனி இல்லை. மதுமிதா”

“என்ன டா சொல்ற? நான் தான அன்னைக்கு பத்திரிகைக்கு பேர் கொடுத்தேன்”

“அதெல்லாம் நிறைய விஷயம் நடந்துருச்சு டா”, என்று ஆரம்பித்து அவனுக்கு தெரிந்ததை  எல்லாம் சொன்னான் தேவா.

பிரம்மிப்பாய் அனைத்தையும் கேட்டான் மனோஜ். மனம் நிறைவானது, அது மட்டும் இல்லாமல் மதுமிதா மேல், ஒரு சகோதர பாசம் வந்து அமர்ந்தது. தன்னுடைய நண்பனின் வாழ்க்கையில் வந்த ஒளி விளக்கான மதுமிதா மேல் மரியாதை வந்தது.

“நீ சொன்னது எல்லாம் உண்மையா தேவா?”

“ஆமா டா, எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா நான் அவள் என் கிட்ட வந்ததுமே கண்டு புடிச்சிட்டேன். எனக்கு சந்தோசமா இருக்கு மச்சான்”

“எனக்கும் தான் டா. ஏற்கனவே உன்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு என்னோட தங்கச்சின்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப அதுக்கு முன்னாடியே மனசார சொல்றேன். மது என்னோட தங்கச்சி டா”

“ஹ்ம்ம்”

“சரி எதுக்கு தேவா அவசரமா வர சொன்ன?”

“இது மது எழுதி கொடுத்த பேப்பர் டா. கண்ணை தரேன் அப்படிங்குற மீனிங்க்ல தான் எழுதி கொடுத்தா. ஆனா என்னால எப்படி படிக்க முடியும்? அதான் உன்னை கூப்பிட்டேன்”
நண்பனின் காதலி எழுதி கொடுத்த பேப்பரை படிக்க தர்மசங்கடமாக உணர்ந்தாலும், மனதை கல்லாக்கி கொண்டு அந்த பேப்பரை திறந்தான் மனோஜ்.
“என் கண்ணை உங்களுக்கு தர சம்மதிக்கிறேன்னு தான் எழுதி இருப்பாள்”, என்று தெரிந்தும் தேவாவுக்கு நாடி நரம்பு எல்லாம் பரபரப்பு தொற்றி கொண்டது.
படிக்க ஆரம்பித்தான் மனோஜ். ஆசையாக அதை கவனித்தான் தேவா.
தேவா, என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம்.
“பாரு டா புருஷனை உன் தங்கச்சி பேர் சொல்லி கூப்பிடுறா. கொஞ்சம் கண்டிச்சு வை”, என்றான் தேவா சிரிப்புடன்.
“நீயே அவளுக்கு சொந்தம். இதில் உன் பேரை அவ எப்படி கூப்பிட்டாலும் இந்த அண்ணன் காரன் ரசிப்பேனே ஒளிஞ்சு கண்டிக்க மாட்டேன்”, என்று சிரித்தான் மனோஜ்.
“சரி சரி படி”
“சரி டா”
“தேவா, இந்த பெயரை என் உதடுகள் எத்தனை முறை உச்சரித்தது என்று நான் அறியேன். என்னோட உலகத்தில் தேவனாக தான் நான் உங்களை நினைக்கிறேன். முதல் முறை பார்த்த போதே உங்கள் பிம்பம் என் மனதில் மட்டும் அல்லாமல் உயிரிலும் பதிந்து விட்டது.
பதிந்த உங்கள் பிம்பத்தை ஆழ்கடலில் புதைக்க நினைத்த போது எனக்குள் வந்த வலியை என்னால் விவரிக்க கூட முடியாது. நீங்க எனக்கு மட்டும் தான் அத்தான் சொந்தம். அது மட்டும் இல்லாமல் என்னோட உடல், உயிர் அனைத்துமே தங்களுக்காக அர்ப்பணிக்க பட்டது. உங்களை இழந்து அது ஒரு நாளும் தனியாக திரியாது. உங்கள் உயிர் பிரிந்த அடுத்த நொடி, நான் இந்த உலகத்தில் இருக்க விரும்ப மாட்டேன்.
நான் ரசித்த உங்கள் கண்கள் இப்போது ஒளியில்லாமல் இருப்பதை நினைத்து நான் விடும் கண்ணீர் உங்களுக்கு தெரியுமா? அதுக்கு உயிர் கொடுக்க என் பார்வையை உங்களுக்கு தராமல் நான் இருப்பேனா? அதில் உங்களுக்கு சந்தேகம் வரலாமா? உங்களை பார்க்க மட்டுமே, எனக்கு பார்வை வேண்டும். வேற எதுக்குமே எனக்கு பார்வை தேவை இல்லை. ஆனால் அதையும் உங்களுக்கு கொடுக்க  முழுமனசோட சம்மதிக்கிறேன்.
என் கண்களை மட்டும் இல்லை, என்னுடைய ஒவ்வொரு செல்லையும் உங்களுக்காக கொடுக்க எனக்கு பூரண சம்மதம். என் கண்களை எடுத்துக்கோங்க என்று எழுதி கொடுத்தால் தான் என்னை நம்புவீர்களா அத்தான்? இந்த நிமிஷம் அதை எடுத்து கொண்டாலும் எனக்கு சந்தோசம் தான். என் கண்கள் உங்கள் கண்களில் பொருந்தி இருந்தால் அதை விட சந்தோசம் எனக்கு வேற எதுவும் இருக்க முடியுமா? உங்களுக்குள் தொலைந்து போக நினைக்கிற நான், என் கண்கள் உங்கள் முகத்தை அலங்கரித்தால் அதை மறுப்பேனா?
அடுத்து என்ன சொன்னீங்க? பணம் சொத்து.. எனக்கு இவை எல்லாம் தேவையே இல்லை. எனக்கு தேவை நீங்கள் மட்டும் தான். நீங்கள் மட்டும் என்றால், உங்கள் பணமோ, சொத்தோ, எதுவும் இல்லை. உங்கள் உயிரும் உடம்பும் மட்டுமே எனக்கு தேவை.
உங்களை தொடும் பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். உங்க மனசில் மகாராணியாக நான் மட்டும் தான் இருக்கணும். மது மதுனு என் பெயர் உங்கள் வாயில் இருந்து வரும் போது, நான் அப்படியே மயங்கி போகணும். உங்க விரல் என் மேல படும் போது, நான் வீணையாகணும். உங்க மனசு முழுவதும் நான் மட்டும் நிறைஞ்சு இருக்கணும். ஒரு தடவை உங்களை கை விட இருந்தேன். இனி விட மாட்டேன். நீங்க எனக்கானவர். எனக்கே எனக்கு சொந்தம்.
உங்களை யாரும் என்கிட்டே இருந்து பிரிக்க நினைச்சா கூட முடியாது. உங்களை கண்டிப்பா நான் விட்டு கொடுக்க மாட்டேன். இந்த தேவா மதுவின் சொத்து. இந்த ஒன்றே போதும். உங்க மனைவியா உங்க நிழலில் வாழும் பாக்கியம் போதும். வேற நீங்க தரும் எந்த சொத்து சுகங்களும் எனக்கு தேவை இல்லை.
முழுமனசோட சம்மதிக்கிறேன். என்னோட கண்களை தேவா அத்தானுக்கு தர சம்மதம். அவரோட சொத்தில் இருந்து அவர் கட்டும் தாலியை தவிர வேற எந்த சொத்தும் எனக்கு தேவை இல்லை”, என்று அந்த கடிதம் முடிந்திருந்தது.
நண்பர்கள் இருவரும் கடிதம் முடிந்ததும் அமைதியாக இருந்தார்கள்.
காதலை கடிதத்தை விட வேற எதிலும் அழகா சொல்லி விட முடியாது. அந்த காலத்தில் கடிதங்களில் வளர்ந்த காதல் தேய்ந்து கொண்டே வந்து இந்த நூற்றாண்டில் மறைந்தே விட்டது.
ஆனால் அந்த உயிர்ப்பு எவ்வளவு அழகானது என்று இன்று உணர்ந்தான் தேவா.
அவன் நாடி நரம்பு அனைத்தும் மது மது என்று அலறியது. அவன் கண்களில் சிறு துளி நீர் கூட வந்தது.
நண்பன் முகத்தில் வந்து போகும் கலவையான உணர்வுகளை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்த மனோஜ் கண்களும் கலங்கியது, சந்தோஷத்தில் !!!
“மச்சான்”, என்று அழைத்தான் மனோஜ்.

“ம்ம்”, என்று சொன்ன தேவாவின் கண்களில் கண்ணீர் இருந்தாலும் உதடுகள் உல்லாசமாக சிரித்தது.

“மது கிரேட் டா. உன்னை உனக்காகவே நேசிக்கிறா டா”

“ஆமா மனோஜ். ரொம்ப ரொம்ப கிரேட் தான். ஆனா ஒன்னு மட்டும் புரியலை”

“என்ன தேவா?”

“எதுக்கு இந்த விசயத்தை என் கிட்ட இருந்து மறைக்கிறாங்க”

“மறைக்காம? வேற என்ன செய்ய சொல்ற? உன்கிட்ட வந்து என் பெரிய பொண்ணு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா. என் சின்ன பொண்ணை வேணும்னா கட்டிக்கோன்னு சொன்னா, நீ சரி சொல்லிட்டு தான் மறு வேலை பாப்பியா? இல்லை தான? அதான் மறைச்சிட்டாங்க”

“ஹ்ம்ம் அதுவும் சரி தான் மனோஜ்”

“ஆனா எனக்கு ஒரு டவுட் தேவா”

“என்ன டா?”

“உண்மை தெரிஞ்சா நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு தான் உன்கிட்ட இருந்து மறைக்கிறாங்க. ஆனா உண்மை தெரிஞ்ச அப்புறம் நீ எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?”

“அவ அவளையே என்கிட்டே கொடுத்து அவ காதலை நிரூபிச்சிட்டான்னா உன்கிட்ட சொல்ல முடியும்?”, என்று நினைத்து கொண்ட தேவா “மது இன்னைக்கு என்கிட்டே பேசினப்ப, எனக்கு மறுக்க தோணலை டா”, என்று மனோஜிடம் சொன்னான். 
“மது உன் மேல வச்சிருக்க காதல் மாதிரி என்னை, என்னை மட்டும் நேசிக்கிற பொண்ணு எனக்கும் வேணும் டா. எனக்காக பிரே பண்ணிக்கோ”
“கண்டிப்பா மனோஜ். உனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. நீ ரொம்ப நல்லவன் டா”, என்று சிரித்தான்.
“சரி சரி, காலைல நிறைய வேலை இருக்கு. நீயும் கல்யாண கனவை கண்டுட்டே படுத்து தூங்கு. இந்த ஒரு வாரம் தான் உன் பக்கத்துல படுக்க எனக்கு பெர்மிசன் இருக்கு”, என்று சிரித்து கொண்டே படுத்து விட்டான் மனோஜ்.

Advertisement