Advertisement

அத்தியாயம் 2
எட்டிப் பிடித்து
சிறை செய்ய நினைத்தாலும்
உன் பின்னே அலைகின்றது
என் நினைவுகள்!!!

“ஆ”, என்று அலறியவன் தலையில் கை வைத்து தடவி விட்டான். வலி உயிர் போனது.

“லூசா டி நீ? எதுக்கு இப்படி கொட்டின?”, என்று கோபத்தில் கேட்டான் தேவா.

அவன் சொன்ன டி யில் மனதில் எழுந்த உணர்வை மறைத்தவள் “என்ன வலிக்கிதா? அதுக்கு தான் கொட்டினேன்.  நீங்க அப்படி சொல்லும் போது, இப்படி தான எனக்கும் வலிச்சிருக்கும்? உங்க பணம் யாருக்கு வேணும்? இப்பவே எழுதி கொடுக்கவா, உங்க சொத்துல இருந்து எனக்கு ஒத்த பைசா வேண்டாம்னு”, என்று கேட்டாள் மது.

“சரி”, என்றான் தேவா.

“என்ன சரி?”

“எழுதி கொடுக்குறேன்னு சொன்னல்ல. அதை செய். அங்கே இருக்கும் லெட்டர் பேடில் எழுதி கையெழுத்து போடு”

அவன் சந்தேக படுவது வலித்தாலும், அவன் மன நிலை உணர்ந்தவள், உடனே அங்கு இருந்த பேப்பர் எடுத்து எழுதி கையெழுத்து போட்டு அதை அவன் கையில் கொடுத்தாள்.

அதை வாங்கி கொண்டவன், அங்கு இருந்த டேபிள் மீது வைத்தான். 

“சரி, அப்ப சொத்துக்காக என்னை கல்யாணம் பண்ணலைன்னு நிரூபிச்சிட்ட? வேற என்ன காரணம் என்னை கல்யாணம் பண்ண?”

“காரணம்ன்னா என்ன சொல்ல? நமக்கு தான கல்யாணம் பண்ணனும்னு நிச்சயம் பண்ணிருக்காங்க பெரியவங்க”

“இன்னும் நிச்சயம் பண்ணல மது. கல்யாணம் பண்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நமக்கு நிச்சயதார்த்தம்”

“சரி எப்படின்னாலும் பெரியவங்க முடிவு பண்ணது தான?”

“அவங்க பேச்சை கேக்குறது சரி தான். ஆனா இப்ப நிலைமை அப்படி இல்லை. இந்த ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா கல்யாணம் நடந்தா ஓகே. ஆனா நீ இப்ப சம்மதிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை”

“நீங்க எதுக்கு இப்படியே பேசிட்டு இருக்கீங்க? எனக்கு இந்த கல்யாணம் வேணும். அவ்வளவு தான். நீங்க என்ன பேசினாலும் இதான் என் முடிவு”

“அது தான் எனக்கு குழப்பமா இருக்கு. ஏதோ பிளான் பண்ணுறியான்னு சந்தேகமா வருது” 

“இப்படி எல்லாத்துக்கும் சந்தேக பட்டா, நான் என்ன செய்ய முடியும் அத்தான்?”

“என்னது அத்தானா?”

“அத்தை, மாமாவை அதான் உங்க அப்பாவை அப்படி தான் கூப்பிடுவாங்களாம். எனக்கு சொன்னாங்க”

“ஓ சரி. இப்ப விசயத்துக்கு வா”

“என்ன விஷயம்?”

“எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க, அப்படிங்குற உண்மை தெரியணும்”
“மறுபடியும் அரைச்ச மாவையே அரைக்கிறீங்க? எனக்கு பிடிச்சிருக்கு. சம்மதம் சொல்லிருக்கேன். அவ்வளவு தான். வேற காரணம் எல்லாம் இல்லை”
“ஓ அப்ப என்னை லவ் பன்றியா?”
“ஏன் பண்ண கூடாதா?”
“பண்ணலாம் தான். ஆனா எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால தான் அம்மா பாக்குற பொண்ணை கட்டிக்க சம்மதம் சொன்னேன்”
“சரி இப்ப காதலை நிரூபிக்க என்ன செய்யணும் சொல்லுங்க அத்தான். அதையும் செய்றேன். ஆனா எனக்கு இந்த கல்யாணம் நடக்கணும்”
“நீ தான என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற? அப்ப நீ தான் என்னை நம்ப வைக்கணும்”
“இப்ப உங்க கிட்ட எழுதி கொடுத்த பேப்பர்ல, என்ன எழுதிருக்கேன் தெரியுமா?”
“எனக்கு தான் எதுவுமே தெரியாதே”
“உடனே லூசு மாதிரி இப்படி ராகம் பாட கூடாது”, என்று எரிச்சலில் சொன்னாள் மது.
“எப்படி பேசுறா பாரு, வாயாடி”, என்று நினைத்து கொண்டு “லூசு மாதிரியா? உன்னை கொன்னுருவேன் டி”, என்றான்.
“அதெல்லாம் அப்பறம் கொல்லலாம். முதலில் சொல்றதை கேளுங்க”
“சொல்லி தொலை”
“அதை வேற யார் கிட்டயாவது கொடுத்து படிக்க சொல்லுங்க. நானே படிச்சா அது உங்களுக்கு எப்படி நம்பிக்கை தரும்? ஆனா ஒரு விஷயம் சொல்றேன். என்னோட கண்ணை உங்களுக்கு தரேன்னு அதில் எழுதிருக்கேன். உங்க கண்ணுல உள்ள புண்ணு ஆறுன உடனே நாம ஹாஸ்பிட்டல் போகலாம். அப்பவாது என்னை நம்புவீங்களா?”
“மது…”, என்று அதிர்ச்சியாக அழைத்த தேவா அடுத்த நொடி தன்னை சமாளித்து கொண்டு “உன்னோட கண்ணை எனக்கு கொடுத்துட்டா, நீ என்ன செய்வ?”, என்று கேட்டான்.
“ஏன், என் வாழ்க்கை முழுவதுக்கும் எனக்கு கண்ணா நீங்க இருக்க மாட்டிங்களா?”
“ஒரு வேளை உன் கண்ணை பிடுங்கிட்டு, நான் உன்னை ஏமாத்திட்டேன்னா?”
“என்ன செய்ய? காலம் முழுக்க உங்களை நினைச்சிட்டு குருடியா வாழ வேண்டியது தான்”
“உன் கண்ணை பிடுங்கி, உன்னை கஷ்ட படுத்தி தான் எனக்கு பார்வை வரணும்னா எனக்கு அது வேண்டவே வேண்டாம். நான் இப்படியே இருந்துக்குறேன்”
“அதெல்லாம் விடுங்க அத்தான். உங்களுக்கு கண்டிப்பா கண்ணு கிடைக்கும். இப்ப கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்களேன் ப்ளீஸ்”
“தெரியலை மது. நிறைய குழப்பமா இருக்கு. எதுக்கு எடுத்தாலும் சந்தேகம் வருது எனக்கு”, என்று அவன் உண்மையான மனநிலையை சொன்னான்.
“இப்படி இருந்தா என்ன அத்தான் செய்ய? என்னை நம்புங்க ப்ளீஸ். உங்களை நான் சந்தோசமா பாத்துக்குவேன்”
“சரி, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனும்னா, நீ எனக்கு ஒன்னு தரணும். அப்படி தந்தா, நான் உன்னை நம்புறேன்”
“நானா? என்ன தரணும்? நீங்க தான் கோடீஸ்வரர். என்கிட்ட என்ன இருக்கு. நான் ஒரு மிடில் கிளாஸ் அத்தான்”
“இல்லை எல்லாத்த விட விலை மதிப்பில்லாதது ஒன்னு உங்கிட்ட இருக்கு. அதை நீ கொடுத்தா, நான் உன்னை நம்புறேன்”
“என்ன அத்தான் சொல்லுங்க. விலைமதிப்பில்லாதது உயிர் தான். அதையும் தரணுமா சொல்லுங்க?”, என்றாள் மது.

“அதை தந்தா, எப்படி என்கூட காலம் முழுக்க சந்தோசமா உன்னால வாழ முடியும்? அது வேண்டாம்”

“அப்ப என்னது அத்தான்? சொல்லுங்க”

“எனக்கு நீ வேணும் மது”

“புரியலை அத்தான்”

“என்னை விரும்புற நீ, எனக்காக உன் கண்ணை, உயிரை கொடுக்க நினைக்கிற நீ, இப்ப இந்த நிமிஷம் உன்னையே எனக்கு கொடுக்கணும் முடியுமா? மனசுக்கு பிடிச்சவன் கிட்ட மட்டும் தான் ஒரு பொண்ணு, உடலையும், மனசையும் ஒப்படைப்பா. இதுல சில விதி விலக்கானவங்க உண்டு. நீ என்னை எல்லாமுமா நினைச்சா, என்னை நம்பி உன்னை எனக்கு கொடுக்கணும். முடியுமா உன்னால?”

அதிர்ச்சியாக அவனை பார்த்து கொண்டிருந்தாள் மது.

அவளிடம் இருந்து பதில் வராததால், “என்ன மது அமைதியாகிட்ட? ஒன்னும் பிரச்சனை இல்லை விடு. நீ கிளம்பு. அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன். நாம என்ன பல வருஷம் காதலிச்சா இப்ப பிரிய போறோம்? அப்படி எல்லாம் இல்லையே. வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் செஞ்சிக்கோ”, என்றான்.

“என்னால எப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே என்னோட கற்பை கொடுக்க முடியும்?”, என்று நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வந்தது. 

“முடியாது. அது தப்பு”, என்று நினைத்து வெளியே போக திரும்பினாள் மது.

“இவனை விட்டு பிரிஞ்சா நீ சந்தோசமா இருப்பியா மது? உன்னோட தேவாவை விட்டுட்டு உன்னால வாழ முடியுமா மது? எப்பவோ உன்னோட மனசு அவனுக்கு சொந்தமா ஆகிடுச்சு. நீயே அவனுக்கு சொந்தம்னா,  உன்னோட உடம்பு உன்னோட தேவாவுக்கு சொந்தம் இல்லையா மது? ஒரு நாள் வாழ்ந்தாலும், இவன் கூட வாழ்ந்துட்டு செத்து போகணும்னு யோசிச்சிருக்க தான? அப்படி இருக்கும் போது, அவன் வாழ தான் கூப்பிடுறான்”, என்று கேள்வி கேட்டது மனது. 

தன்னாலே அவள் கால்கள் அவனை பார்த்து திரும்பியது.

அவள் அமைதியை உணர்ந்த தேவா, ஒரு விரக்தி சிரிப்பை சிரித்தான். 

அவள் கதவை திறந்து போகும் சத்திற்காக காத்திருந்தான். 

ஆனால் மிக அருகில் அவள் வாசனையை உணர்ந்தான் தேவா.

“மது நீ, என்  கிட்டயா இருக்க?”, என்று கேட்டான் தேவா.

“ம்ம். கற்பையே இவ்வளவு ஈஸியா கொடுக்க வந்திட்டா. அப்ப இவ எவ்வளவு கெட்டவளா இருக்கணும், அப்படிங்குற சந்தேகம் உங்களுக்கு வராம இருந்தா, உங்களுக்காக நான் உயிரையும் தருவேன். என்னையும் சேத்து”

“உன்னை அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் மது. இது கட்டாயமும் இல்லை. நீ கிளம்பு மது. எனக்கு தோணுறதை நான் கேட்டுட்டேன். இது தப்புனு எனக்கும் தெரியும். உனக்கும் கஷ்டமா இருக்கும் மது. நீ கிளம்பு”

இன்னும் அவனை நெருங்கியவள் அவன் கைகளை பற்றினாள்.

“மது”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் தேவா. 

அவன் கைகளை விட்டு விட்டு, அவன் கன்னத்தில் தன் கைகளை வைத்தவள் “இந்த உலகத்தில் உங்களை விட எனக்கு எதுவுமே பெருசு இல்லை அத்தான்”, என்று சொல்லி கொண்டே கண்களை மூடி கொண்டு, அவன் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு சென்றவள், அவன் உதடுகளில் தன் உதடுகளை பொருத்தினாள். 

ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் தேவா. நடப்பது நிஜம் என்று அவனுக்கு  நம்பவே முடியவில்லை.

அவளுடைய உதடுகள் தன் உதடுகளில் ஆழ புதைந்திருப்பது தான் இதை நிஜம் என்று உணர்த்தியது அவனுக்கு.

அவன் வைத்த பரிட்சையில் அவள் தேர்ச்சி பெற்று விட்டாள். வேற என்ன வேண்டும் அவனுக்கு? மனம் முழுக்க சந்தோசத்துடன், அவள் இடையை சுற்றி கைகளை போட்டு இறுக்கி கொண்டான் தேவா.

அவன் அணைப்பை உணர்ந்தவன், அவன் உதட்டில் இருந்து தன் உதடுகளை மீட்டு விட்டு அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

எல்லையில்லா நிம்மதியுடன் அவளை அணைத்து கொண்டான் தேவா. 

முதலில் அவள் செய்த வேலையை இப்போது அவன் செய்தான். மீண்டும் மீண்டும் அவள் உதடுகளை சிறை செய்தான் தேவா. அவன் முத்தத்தில் கரைந்தே போனாள் மதுமிதா.

முதல் முறை உணர்ந்த ஒரு பெண்ணின் முத்தம் அவன் சித்தத்தை குலைத்தது. அந்த உதடுகளின் மென்மை அவனுக்குள் உறங்கி கிடந்த உணர்வுகளை விழித்தெழ செய்தது.
“மது”, என்று அவன் குரல் குழறியது.
மனசுக்கு பிடித்த ஆணின் தொடுகைக்கு இவ்வளவு சக்தியா? தன்னை விட்டு அவன் நீங்கவே கூடாது என்ற உணர்வை அவளுக்கு கொடுத்தது.

Advertisement