Advertisement

“ஹ்ம்ம் சரி டாக்டர். இப்ப காலைல என்ன சாப்பாடு கொடுக்க? கஞ்சி கொடுக்கவா?”
“கஞ்சியை பாத்தாலே சில பேருக்கு கூட கொஞ்சம் காச்சல் வரும். மதியத்துக்கு கஞ்சி கொடுங்க. இப்போதைக்கு இட்லி கொடுங்க. நான் கிளம்புறேன்”
“சரி தேங்க்ஸ் டாக்டர். பீஸ்…”, என்று இழுத்தாள் மது.
“அது நான் மிஸ்டர் தேவா கிட்ட பேசிக்கிறேன். நீங்க மனோஜை பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
கீழே அமைதியாக அமர்ந்து அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தாள் மீரா. அவள் மனது மனோஜ்க்காக தவித்து கொண்டிருந்தது.
“எப்படி இருக்க மது? நேத்து நடந்தது எதையும் யோசிச்சு கவலைல இருக்கியா?”, என்று கேட்டான் மனோஜ்.
“அதெல்லாம் இல்ல அண்ணா. அது எல்லாமே சரியாகிட்டு. ஆனா நீங்க தான் பேட் பாயா இருக்கீங்க?”
“நானா? நான் என்ன செஞ்சேன்?”
“பின்ன உங்க பொண்டாட்டியா வர போறவளை அழ விடலாமா?”
“என்ன மீரா அழுதாளா?  நான் எதுவுமே செய்யலையே? என் மேலே எதுக்கு இந்த பழி?”
“எதாவது சொன்னா தான் அழணுமா? மனசுக்கு பிடிச்சவங்க விலகி போனாலும் அழுகை வருமே? ஒருத்தங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க வேண்டாமா? என்ன காரணம்னே தெரியாம கோப படலாமா அண்ணா?”
அன்னைக்கு நடந்ததை மதுவிடம் மீரா சொல்லி இருக்கிறாள் என்று நினைத்து தர்மசங்கடமாக போனது மனோஜ்க்கு. மது முகத்தை பார்க்க முடியாமல் வேறெங்கோ பார்த்தான்.
“ஒரு பொண்ணா, ஒரு தங்கச்சியா உங்களுக்கு என்னால புத்தி மதி சொல்ல முடியாது அண்ணா. ஆனா மீராவோட தோழியா அவளோட கஷ்டத்தை உங்க கிட்ட சொல்ல முடியும்? மீரா வாழ்க்கைல ரொம்ப கஷ்ட பட்டிருக்கா  அண்ணா. தனிமைல அம்மா, அப்பா இல்லாம வளருவது ரொம்ப கஷ்டம். அதுவும் பொண்ணுங்களுக்கு சொல்லவே வேண்டாம். கல்யாணத்துக்கு முந்தின நாள் என்கூட தான தூங்குனா. நைட் எல்லாம் புலம்பிட்டே இருந்தா. அப்ப தான் அவ வாழ்க்கைல நடந்ததே எனக்கு தெரிஞ்சது”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தாள் மது.

அமைதியாக கேட்டு கொண்டிருந்த மனோஜ்க்கு அன்று அவள் நடந்து கொண்டதுக்கான காரணம் புரிந்தது.

“இப்ப எனக்கு புரியுது மது”, என்றான் மனோஜ்.

“ஹ்ம்ம். சரி அண்ணா. நீங்க படுத்திருங்க. நான் இட்லி எடுத்துட்டு வரேன்”, என்று எழுந்து போனாள். 

கீழே சோகமாக அமர்ந்திருந்த மீராவை பார்த்து சிரித்தாள் மது.

“ரொம்ப பிவரா மது?”

“அடடே, நீ நர்ஸ் தான? நான் அதை மறந்தே போய்ட்டேன் பாரு. கொஞ்சம் பீவர் அதிகம் தான். ஆனா ரெண்டு நாளில் சரி ஆகிரும். சரி நீ போய் அண்ணாவுக்கு இட்லி கொடுத்துரு. நான் அத்தானுக்கு போன் பண்ணனும்”

“நானா?”

“என்ன நானா? நீ தான அவரோட பொண்டாட்டி”

“நான் கொடுத்தா அவர் சாப்பிடுவாரா என்னவோ?”

“சாப்பிடலைன்னா ஊட்டி விடு. சீக்கிரம் போ. அப்ப தான் மாத்திரை போட முடியும்”

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி சாப்பாட்டை எடுத்து கொண்டு தயக்கமாக அவன் அறைக்கு வெளியே நின்றாள்.
“என்ன சொல்வானோ?”, என்று பயமாக இருந்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு, திறந்திருந்த அறைக் கதவையே தட்டினாள் மீரா.
“என்ன மது கதவை தட்டிட்டு? உள்ள வா”, என்று சொன்ன மனோஜ் தலையை திருப்பி பார்த்தான்.
அங்கே முகம் முழுவதும் பதட்டத்துடனும், ஒரு தவிப்புடனும் நின்றாள் மீரா.
அவளை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. அதை ஆச்சர்யமாக பார்த்தாள் மீரா. அவனுடைய பாராமுகத்தால் வாடி இருந்தவள், இப்போது சந்தோச பட்டாள்.
“உள்ள வா மீரா”, என்றான் மனோஜ்.
அவன் அருகே சென்றவள் அங்கு இருந்த ஸ்டூலை இழுத்து அதில் தட்டை வைத்தாள்.
“இப்ப குறைஞ்சிருக்கா காச்சல்?”, என்று கேட்டாள் மீரா.
“நீ தானே நர்ஸ்? நீ தான் குறைஞ்சிருக்கானு பாத்து சொல்லணும்”, என்று சிரித்தான் மனோஜ்.
மெதுவாக அவன் அருகே சென்றவள், அவன் நெற்றில் கை வைத்து பார்த்தாள்.
அவள் முகத்தையே குறு குறு என்று பார்த்து கொண்டிருந்தான் மனோஜ்.
“குறையல அதிகமா தான் இருக்கு”, என்றாள் மீரா.
“இப்ப தான ஊசி போட்டிருக்காங்க. குறைய நேரம் ஆகும். சரி நீ சாப்பாடு ஊட்டி விடுறியா?”, என்று கேட்டான் மனோஜ்.
அதிர்ச்சியாக அவனை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் வந்தது.
“ஏய் லூசு எதுக்கு இப்ப அழுற?”
“என் மேல உங்களுக்கு கோபம் போய்ட்டா?”
“போய்டுச்சே”
“நான் அன்னைக்கு வேணும்னு அடிக்கலை”
“எனக்கு தெரியும் மீரா. நான் உன் பேச்சை அப்புறம் கேட்டிருக்கணும். ஆனா இப்ப தான் எனக்கு புரியுது.   நான் தொட்டது பிடிக்காம நீ அடிக்கலை. உன் மனசுல இருக்குற ஏதோ ஒரு பயத்துல தான் அடிச்சேன்னு தெரிஞ்சிட்டு”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“மது சொன்னா. அது உண்மை தான? நான் தொட்டது பிடிக்காம என்னை அடிக்கலை தான?”
அவள் முகம் சிவந்து போனது. அவஸ்தையாக அவனை பார்த்தவள் “ம்ம்”, என்று தலையசைத்தாள்.
அவள் வெட்கத்தை ரசித்தவன், “அப்ப இப்ப உன்னை தொட்டா நீ அடிக்க மாட்ட தான?”, என்று கேட்டு கண் சிமிட்டினான்.
“ஐயோ போங்க நான் போறேன். நீங்க சாப்பிடுங்க”, என்று ஓட பார்த்தாள்.
அவள் கையை பிடித்து இழுத்தான் மனோஜ். அவன் மேலே விழுந்தாள் மீரா.
“காச்சலை வச்சிக்கிட்டு, இப்ப பாருங்க உங்க மேலே விழுந்துட்டேன்”, என்று சொல்லி கொண்டே எழுந்தவள் “சாப்பிடுங்க மனு”, என்றாள்.
“ஏய் என்ன சொன்ன? மனுவா?”
“ஹ்ம்ம்”
“யாரும் என்னை இப்படி கூப்பிட்டது இல்லை தெரியுமா? தேவா மனோஜ் சொல்லுவான். சில நேரம் மனோ சொல்லுவான். மது மனோ அண்ணா சொல்லுவா. நீ தான் முதல் தடவை மனு சொல்லிருக்க. நல்லா இருக்கு டா”
“ஹ்ம்ம் சரி சாப்பிடுங்க”
“பல்லு விளக்கலை. கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்”, என்று சிரித்தான் மனோஜ்.
“இவனுக்கு இருக்குற அழும்பை பாரு”, என்று நினைத்து கொண்டு “வாங்க”, என்று சொல்லி விட்டு பாத்ரூம் சென்று அவனுடைய பிரஸில், பேஸ்ட்டை வைத்து அவன் கையில் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.
சிரித்து கொண்டே பல் விளக்கி விட்டு முகம், கை, கால் கழுவியவன் வெளியே வந்தான்.
அவன் முகம் துடைக்க அவனுடைய துண்டை எடுத்து கொடுத்தாள் மீரா.
அதை வாங்கி துடைத்தவன் கட்டிலில் அமர்ந்தான்.
அவன் அருகில் அமர்ந்தவள், அவனுக்கு சாப்பாட்டை ஊட்ட கையில் எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
“சாப்பிடுறதுக்கு தான் இவ்வளவு அவசரமா பல்லு விளக்கினேன்னு நினைச்சியா? முதல் தடவை முத்தம் கொடுக்கும் போது, பல்லு விளக்காம எப்படி கொடுக்கனு தான்”, என்று சிரித்தான் மனோஜ்.
அவன் பேச்சு, அவளுக்கு புரிவதுக்குள் அவள் உதடுகளை சிறை செய்தான் மனோஜ்.
கையில் இருந்த உணவு மறுபடியும் தட்டிலே விழுந்தது.
ஏற்கனவே அவன் உடல் சூடாக இருந்தது. இப்போது இவளுடைய உதட்டில் பட்டு மேலும் சுடுவதாக பட்டது மீராவுக்கு. அவள் உடலும் நடுங்கியது.
ஒரு கையில் தட்டை வைத்திருந்தவள், மற்றொரு கையை அவள் தோள்களில் வைத்தாள்.
தோள்களில் இருந்த கை அவனுடைய பனியனை இறுக்கி பிடித்தது. கண்களை மூடி அவனுடைய முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.
பூவில் தேன் எடுக்கும் வண்டு போல அவள் உதடுகளை சுவைத்தான் மனோஜ். மேலும் அவளுடன் இழைய மனது ஏங்கியது. ஆனால் காய்ச்சல் அதற்கு ஒத்துழைக்க வில்லை.
அவளை விட்டு விலகியவன் அவள் முகத்தையே பார்த்தான்.
கண்களை திறந்து அவனை பார்த்தாள் மீரா.
“காச்சல் சரியான பிறகு உன்னை வச்சிக்கிறேன். இப்ப சாப்பாடு தா”, என்று சிரித்தான் மனோஜ்.
வெட்கத்துடன் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள் மீரா.
அனைத்தையும் ஊட்டி முடித்தவள், அவளுடைய சேலை முந்தானையை வைத்து அவன் உதட்டை துடைத்து விட்டாள்.
அவனுடைய அம்மாவே வந்து விட்டது போல நெகிழ்ந்து போனான். 
அவனுக்கு மாத்திரை எடுத்து கொடுத்து போட வைத்தவள், படுக்க வைத்து போர்வையை கழுத்து வரை மூடி விட்டாள்.
அவளுடைய கவனிப்பு அவனுக்கு மிகுந்த ஆறுதலை தந்தது. “தூங்குங்க”, என்று சொல்லி விட்டு நகர பார்த்தவளை விடாமல் இழுத்து பிடித்தவன் மீண்டும் மீண்டும் அவள் உதடுகளை சிறை செய்தான். 
“காச்சல் சரியாகட்டும் பா. ப்ளீஸ்”, என்று கெஞ்சி கொஞ்சி தான் கீழே வந்தாள் மீரா.
கீழே  வந்த மீரா தயக்கத்துடன் கிச்சனில் நுழைந்தாள்.
அவளை பார்த்த மது, “எதுக்கு உன்னோட உதடு இப்படி சிவப்பா இருக்குன்னு நான் கேக்கவே மாட்டேன் மீரா”, என்று சொல்லி சிரித்தாள்.

“மது”, என்று அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் மீரா.
“கவலை எல்லாமே போய்ருச்சு மீரா. இனி சந்தோசம் மட்டும் தான். அப்புறம், அண்ணா விலகி போறாங்கன்னு  கவலை பட்ட. இனி அண்ணா விலக மாட்டிக்காங்கன்னு கவலை பாட போற”, என்று கிண்டல் செய்து பேசி கொண்டிருக்கும் போதே சாவித்திரி வந்து விட்டாள்.

இருவருக்கும் பிரசாதத்தை கொடுத்து விட்டு “ரெண்டு பேரும் ஆபிஸ் கிளம்பிட்டாங்களா?”, என்று கேட்டாள்.

“உங்க ஒரு பையன் கிளம்பியாச்சு அத்தை. இன்னொரு பையன் போகலை. மனோ அண்ணனுக்கு தான் ஜுரம். டாக்டர் வந்து ஊசி போட்டிருக்கார்”, என்றாள் மது.
“அப்படியா? நான் போய் பாக்குறேன்”, என்று சொல்லி அவன் அறைக்கு சென்றாள் சாவித்திரி. அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் மனோஜ்.
அவன் நெற்றியில் விபூதி வைத்து விட்டு, அவன் தலையை வருடி  கொடுத்து விட்டு கீழே  சென்று விட்டாள்.

மூவரும் பேசி கொண்டிருக்கும் போது, கேசவனும் அன்னமும் வந்து விட்டார்கள். மறுபடி ஒரு கண்ணீர் காட்சி அரங்கேறி பின் சந்தோசமாக  பேச ஆரம்பித்தார்கள்.
அன்று மாலை தேவா வந்தவுடன், மனோஜை சென்று பார்த்தான்.
மனோஜ் முகம் தெளிவாக இருந்ததை பார்த்த பின்னர் தான் நிம்மதியாக இருந்தது அவனுக்கு.
அடுத்து அவனையும் கீழே  அழைத்து வந்து அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
இரண்டு நாள்களில் மனோஜ் காச்சல் குணமானது. அதுவரை மீரா தான் அவனுக்கு ஊட்டி விட்டாள் என்பது குறிப்பிட தக்கது.
அடுத்து வந்த நாள்கள் விரைவாக சென்றது. மீரா திருமணத்துக்கு உடைகள், நகைகள் வாங்குவது என்று மீராவும், மதுவும் பிசி ஆகி விட்டார்கள்.
அது போக நேரம் கிடைக்கும் போது இரண்டு ஜோடிகளும் சினிமா, பீச் என்று சுற்றி திரிந்தார்கள். ஒரு வழியாக கல்யாண நாளும் வந்தது.
மணமேடையில் அமர்ந்திருந்தான் மனோஜ். அங்கே இங்கே அலைந்து வேலை செய்து கொண்டிருந்தான் தேவா.
மனோஜ் திருமணத்துக்கு நட்பு வட்டாரம் தான் அதிகமாக குவிந்திருந்தார்கள்.
தாய், தகப்பன் செய்ய வேண்டிய சடங்கை மனோஜ்க்கு கேசவனும், அன்னமும் செய்தார்கள்.
“மீராவுக்கு அவளோட அண்ணன் அண்ணி செய்யட்டும்”, என்று சொல்லி தேவாவையும், மதுவையும் செய்ய சொன்னாள் சாவித்திரி.
மீராவை அலங்கரித்து மணமேடைக்கு  அழைத்து வந்தாள்  மது.
தலை குனிந்து அழகு சிலை என வந்தாள் மீரா. அவளை ஆர்வமாக பார்த்தான் மனோஜ்.
தேவாவும் அவனுடைய மதுவை ரசித்து கொண்டு தான் இருந்தான். மனோஜாவது மாப்பிள்ளையாக அடங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தான்.
ஆனால் தேவாவோ சின்ன சான்ஸ் கிடைத்தால் கூட மதுவை சீண்டி, சீண்டி ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தான். அவன் கைகளில் சிக்கி, அவன் காதலில் மூழ்கி, சில நேரம் மூச்சு திணறி போனாள் மது.
இப்போதும் மனமேடையில் அமர்ந்திருக்கும் மீராவையும், மனோஜையும் பார்க்காமல் மதுவையே விழுங்கி விடுவது போல பார்த்து கொண்டிருந்தான் தேவா.  அவன் பார்வை சொல்லும் அந்தரங்க மொழிகளை அறிந்து, எழுந்த வெட்கத்தையும் மறைக்க முடியாமல், அவனையும் முறைக்க முடியாமல் தவித்தாள் மது.
ஒரு வழியாக மீராவின் கழுத்தில் தாலியை கட்டினான் மனோஜ்.
அவளுக்கு நாத்தனார் முடிச்சை அணிவித்தாள் மது.
சடங்கு எல்லாம் முடிந்து அனைவரும் போன பின்னர், அன்று மனோஜ் கொடுத்தது போல பிளைட் டிக்கட்டை மனோஜ் கையில் கொடுத்தான் தேவா.
ஆனால் அன்று இரவு அவர்கள் கிளம்பும் போது, பெட்டியும் கையுமாக அவர்களுடனே கிளம்பிய தேவாவை பார்த்து அனைவரும் திகைத்தார்கள்.
“ஏய் ஏர்போர்ட்டுக்கு  எல்லாம் நீ வர வேண்டாம் டா. நானே போயிருவேன். ஆமா எங்க பெட்டி எல்லாம் எடுத்து வச்சாச்சே? நீ ரெண்டு பெட்டி எதுக்கு இன்னும் தூக்கிட்டு வர?”, என்று கேட்டான் மனோஜ்.
“உன்னை விட எவன் ஏர்‌போர்ட் வரது? இது உன்னோட பெட்டி இல்லை. என்னோடது”
“என்ன உன்னோடதா? உன்னோடது எதுக்கு?”
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement