Advertisement

உன்னை விட்டுத் தருவேனோ என்னவனே?

அத்தியாயம் 1
அழகான அந்தி மாலை 
நேரம் என்னைச் 
சுற்றி சுற்றி வருகின்றன 
அழகான உன் நினைவுகள்!!!
கல்யாணதிற்கு நகை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்கள் கேசவனும் அன்னமும். கேசவன் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். அப்போது அவர் கண்ணுக்கு தென்பட்டது டிவிக்கு அடியில் இருந்த ஒரு வெள்ளைக் காகிதம். 
“என்ன பேப்பர் இது? இங்க சொருகி இருக்கு?”, என்று நினைத்து கொண்டே அதை பார்த்த கேசவன் அடுத்த நொடி “அன்னம்”, என்று அழைத்தார். 

பீரோவில் நகையை வைத்துக் கொண்டிருந்த அன்னம் அவர் அழைத்ததும் “என்னங்க”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள்.  அப்போது கேசவன் அதிர்ச்சியில் உறைந்திருப்பதை பார்த்து அருகில் வேகமாக வந்தாள்.

“என்ன ஆச்சுங்க? எதுக்கு பதட்டமா இருக்கீங்க?”

“இங்க பாரு நீயே”, என்று சொல்லி அந்த பேப்பரை அன்னத்திடம் கொடுத்து விட்டு அங்கு இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தார் கேசவன்.

படித்து பார்த்த அன்னம் அதிர்ச்சியாகி “ஐயோ  இந்த பொண்ணு இப்படி செய்வான்னு நான் நினைக்கவே இல்லைங்க. இப்ப என்ன செய்றது?”, என்று கேட்டாள்.
“விடு மா. அவ பயந்துட்டா போல? ஆனா இப்ப சாவித்திரி அக்காக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை அன்னம். அது தான் பயமா இருக்கு”

“சுயநலவாதின்னு  ஊரே நம்மளை பேசுங்க”
“என்ன பண்றது அன்னம்? அக்கா கிட்ட மன்னிப்பு கேக்கணும்”

“பாவங்க அந்த தம்பி”
“என்ன பண்றது? சரி  கிளம்பலாமா?”
“ஹ்ம் சரிங்க”
“புருசனும், பொண்டாட்டியும் எங்க ஜோடியா கிளம்ப போறீங்க?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்தாள்  மதுமிதா.
“மதுமா நானும், அப்பாவும் சம்மந்த காரங்க வீடு வரைக்கும் போய்ட்டு வறோம் சரியா? நீ உள்ளே பூட்டிக்கோ. வந்த உடனே போன் பண்றோம். அப்ப கதவை திற?”, என்றாள் அன்னம்.
“என்ன? நான் தனியா இருக்கணுமா? சரி அவளை எங்க இன்னும் காணும்? ஷாப்பிங்  போயிருக்கானு சொன்னீங்க? இவ்வளவு நேரமா வர?”

“இல்லை டா மது. அவ வர மாட்டா”, என்று சொன்னார் கேசவன்.
“என்ன பா சொல்றீங்க?”

“ஆமா அவ கிளம்பி பாரின் போய்ட்டா”

“என்ன மா சொல்றீங்க? மூணு வாரத்துல கல்யாணம். இப்ப போய் இப்படி சொல்றீங்க. சரி ஷாப்பிங் போய்ருக்கான்னு என்கிட்ட ஏன் அப்படி சொன்னீங்க?”

“எங்க கிட்ட அப்படி சொல்லிட்டு தான் மா போனா அவ. ஆனா இப்படி செய்வான்னு எங்களுக்கே தெரியாதே”

“என்ன பா சொல்றீங்க? அவ பிளைட்ல கிளம்பணும்னா, முன்னாடியே பிளான் செஞ்சு தான போக முடியும். அவ கல்யாணத்துக்கு தான நானே வந்தேன். நல்லதா போச்சு லீவ் இது வரைக்கும் எடுக்காததுனால மொத்தமா எடுத்துட்டு சந்தோசமா வந்தேன். ஆனா இவ எதுக்கு இப்படி செஞ்சா? சரி கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போதே வந்திருவாளா?”, என்று கேட்டாள் மதுமிதா.

“இல்லை மா. அவ இந்த கல்யாணம் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு தான் ஓடிருக்கா”

“அப்பா”, என்று அதிர்ச்சியாக அவரை பார்த்தாள் மது.

“என்ன பா சொல்றீங்க?”

“எல்லாம் எங்க தலை எழுத்து மா”

“அம்மா என்ன ஆச்சு மா? நீங்களாவது சொல்லுங்க. அவ சரினு சொல்லி தான பேசி முடிச்சீங்க? அப்புறம் எதுக்கு இப்படி செஞ்சா? என்ன நினைச்சிட்டு இருக்கா அவ?”

“அவ செஞ்சதுலயும் தப்பு இல்லை மா”, என்று சொன்னாள் அன்னம்.

“என்ன மா சொல்றீங்க?”

“நம்ம தேவா தம்பிக்கு ரெண்டு நாள்  முன்னாடி ஆக்சிடென்ட் ஆகிருச்சு மா”

“என்ன மா சொல்றீங்க? ஆக்சிடெண்ட்டா? என்கிட்டே சொல்லவே இல்லை. அவருக்கு என்ன ஆச்சு?”

“கார் கண்ணாடி குத்தி அவருக்கு பார்வை தெரியாம போயிருச்சாம். இவ அது தெரிஞ்சு தான் ஓடி போயிருக்கா”

“ஐயோ இப்படியா நடக்கணும்? உங்களுக்கு யாரு மா சொன்னாங்க? அத்தையா சொன்னாங்க?”

“இல்லை மா. தெரிஞ்ச ஒருத்தர் தான் சொன்னாங்க. நானும் அப்பாவும் போய் பாத்துட்டு தான் வந்தோம். ஆனா அவங்க கிட்ட எதுவும் பேசலை. ஆறுதல் மட்டும் தான் சொல்லிட்டு வந்தோம். கல்யாணத்தை பத்தி கூட பேசலை. ஆனா இவ இப்படி செஞ்சிட்டாளே. அதான் நானும், அப்பாவும் போய் அந்த அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வரணும்”

“எனக்கு ஷாக்கிங்கா இருக்கு மா”

“என்ன பண்ண விதி இப்படி இருக்கு. நீ இரு டா. நாங்க போய் பேசிட்டு வறோம்”, என்றார் கேசவன்.

அவர்கள் கிளம்புவதுக்காக அறைக்கு போன பின்னர் அங்கேயே அமர்ந்தாள் மதுமிதா. 

மனம் முழுவதும் குழப்பத்தில் இருந்தது.  யோசித்தவளுக்கு மூளையில் மின்னல் அடித்தது.

கிளம்பி வந்த இருவரும் “போய்ட்டு வரோம் மது”, என்றார்கள். “சாப்பிட மட்டும் எதாவது செஞ்சிக்கோ டா”, என்று சொன்னாள் அன்னம்.

“என்ன மா சொல்ல போறீங்க அவங்க கிட்ட?”

“என்ன சொல்றது, உண்மையை தான் சொல்லணும். நம்ப வச்சு கழுத்து அறுத்த மாதிரி ஆகிட்டு. இதே சூழ்நிலை நமக்கு வந்திருந்து அவங்க இப்படி செஞ்சா எப்படி இருக்கும்? மன்னிப்பு கேட்டா கூட மன்னிப்பாங்களானு தெரியலை”

“நீங்க மன்னிப்பு கேக்க வேண்டாம். நான் சொல்றபடி பேசுங்க”, என்று ஆரம்பித்து சிலவற்றை சொன்னாள் மது.
அடுத்த நொடி “மது”, என்று அவளை அணைத்துக் கொண்டார் கேசவன்.

“நீ நிஜமா கண்ணு சொல்ற?”, என்று கேட்டாள் அன்னம்.

“ஆமா அம்மா. எனக்கு சம்மதம். நான் அவரை கல்யாணம் செஞ்சிக்கிறேன். இதை பத்தி அத்தை கிட்ட பேசுங்க”

“சரி டா  தங்கம். இப்ப தான் நிம்மதியா இருக்கு. இன்னைக்கே போய் பேசுறோம். அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க”

“அம்மா…”

“என்ன டா?”

“நானும் வரட்டுமா?”, என்று கேட்டாள் மதுமிதா.

கேசவனின் முகத்தை பார்த்த அன்னம் அவர் கண்ணசைத்ததும் “சரி கிளம்பு”, என்றாள்.மூவரும் ஒரு ஆட்டோ பிடித்து சென்றார்கள்.
“என்னங்க அவங்க வீட்டுக்கா போறோம்? ஆட்டோ இப்படி போகுது? ஆஸ்பத்திருக்கு போகலையா?”, என்று கேட்டாள் அன்னம்.

“ஆமா அன்னம் தம்பியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்களாம்”

பெரிய அரண்மனை மாதிரி இருந்த வீட்டின் முன்பு போய் நின்றது அந்த ஆட்டோ.

மூவரும் இறங்கி உள்ளே சென்றார்கள். 

அங்கு வேலை பார்க்கும் சிவநாதன், இவர்களை பார்த்ததும் “வாங்க ஐயா. எல்லாரும் வாங்க”, என்று அழைத்தார்.

“அக்கா இருக்கங்களாப்பா?”, என்று கேட்டார் கேசவன்.

“பெரியம்மா உள்ள தான் இருக்காங்க. உக்காருங்க, நான் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி உள்ளே போனவர்  சாவித்ரியை அழைத்து வந்தார். 

முதல் முறை பார்த்த போது, ஒரு அரசியின் கம்பீரத்தோடு வந்த சாவித்ரி, இன்று ஆளே உருமாதிரி வந்தது மூவருக்கும் கவலையை கொடுத்தது.

ஒரே பிள்ளைக்கு இப்படி நடந்தால் இப்படி தான் ஆக முடியும் என்று நினைத்து கொண்டார்கள்.

“வா பா கேசவா. எப்படி இருக்க அன்னம்? இது மதுவா? வதனியா?”, என்று கேட்டாள் சாவித்ரி. மதுமிதாவும் மதுவதனியும் ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள். வதனி தான் வீட்டை விட்டு ஓடியது. மது தனியார் கம்பெனியில் பணிபுரிகிறாள்.

“இது ரெண்டாவது பொண்ணு மதுக்கா”, என்றார் கேசவன்.

“ஊரில் இருந்து எப்ப வந்த மா?”

“காலைல தான் வந்தேன் அத்தை”

“தேவா தம்பி எங்க அண்ணி?”, என்று கேட்டாள் அன்னம்.

“ஒரு இடத்துல உக்கார மாட்டான். அவனுக்கா இப்படி ஒரு நிலை வரணும்? உள்ள தான் முடங்கி போய் இருக்கு என் பிள்ளை”

“ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க அத்தை? மறுபடியும் பார்வை கிடைச்சிருமா?”, என்று கேட்டாள் மது.

“அது தெரியலையாம் மா. இப்ப தான அடி பட்டிருக்கு. புண்ணு இன்னும் ஆறலையாம். அது ஆறுன பிறகு தான் பாக்கணும்னு சொல்லிட்டாங்க”
“அப்புறம் அக்கா…”, என்று இழுத்தார் கேசவன்.
அவர் தயக்கத்தை தவறாக புரிந்து கொண்ட சாவித்ரி, “கல்யாணத்தை பத்தி பேச தான வந்தீங்க?”, என்று கேட்டு ஒரு விரக்தி சிரிப்பை சிரித்தவர் “பரவால்ல கேசவா விடு. சூழ்நிலை இப்படி அமைஞ்சா நீங்க என்ன பண்ணுவீங்க? கல்யாணத்தை நிறுத்திறலாம்”, என்றாள்.
“அக்கா?”
“எனக்கு புரியுது கேசவா.  அவனை பாக்க உங்க பொண்ணு வரலை. இப்பவும் வரலை. அதுல இருந்தே எனக்கு புரிஞ்சிக்க முடியுது. நானும் இப்படி ஒரு குருட்டு பிள்ளையை வச்சிக்கிட்டு உங்க கிட்ட பொண்ணு கேக்க முடியுமா சொல்லுங்க”, என்று கேட்டு கொண்டே கதறி அழுதாள். 
“அழாதீங்க அண்ணி”, என்று சாவித்ரியை தாங்கி கொண்டாள் அன்னம்.
மதுவுக்கு கஷ்டமாக இருந்தது. “பேசுங்கப்பா”, என்று கேசவனை பார்த்து கண்ணை காட்டினாள்.
“நான் அதை சொல்ல தான் வந்தேன் அக்கா. ஒரு சுயநல பிசாசை பெத்துட்டேன். அதுக்கு மன்னிப்பு கேக்கணும்னு”
“நீ எதுக்கு  மன்னிப்பு கேக்கணும்? இது தான் விதி. என் பிள்ளைக்கு இனி எப்ப கல்யாண யோகம் வர போகுதோ?”
“இந்த கல்யாணம் நிக்காதுக்கா. குறிச்ச முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கும். எனக்கு தேவா தம்பி தான் மருமகன்”, என்று சொன்னார் கேசவன்.
ஆச்சர்யமாக அவரை பார்த்தாள் சாவித்ரி.

Advertisement