Advertisement

“என்னக்கா பாக்குறீங்க? உண்மையை தான் சொல்றேன். எனக்கு ஒரு பொண்ணு மட்டும் இல்லைக்கா. உருவத்தில் முதல் கொண்டு, அவளை மாதிரியே இருக்குற மது இருக்காளேக்கா. இவளுக்கு தேவா தம்பியை கொடுங்க”
அதிர்ச்சியாக அவரையும், மதுவையும் பார்த்தாள் சாவித்ரி.
“கேசவா நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா? அதுவும் அவ முன்னாடியே இப்படி பேசுற?”
“நான் சரியா தான் பேசுறேன். இன்னும் சொல்ல போனா, இதை பேச சொன்னதே மது தான். அவளுக்கு தேவா தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதம்க்கா. நீங்களே வேணும்னா அவ கிட்ட கேளுங்க”
கண்களில் ஒரு ஒளி வந்தது சாவித்ரிக்கு. அதே ஒளியுடன் மதுவை பார்த்தாள்.
“ஆமா அத்தை. உங்க பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க எனக்கு பரிபூரண சம்மதம்”, என்றாள் மது. 
சந்தோசத்துடன் அவளை பார்த்த சாவித்ரியின் முகம் அடுத்த நொடி சுருங்கியது.
“இல்லை மா. வேண்டாம்”
“எதுக்குக்கா இப்படி சொல்றீங்க? உங்களுக்கு மதுவை பிடிக்கலையா?”
“அது எப்படி பிடிக்காம போகும்? அதுவும் என் குடும்பத்துக்கே விளக்கா வருவேன்னு அவ சொல்லும் போது? ஆனா அவன் ஒத்துக்க மாட்டான்”
“நம்ம தேவா தம்பிகிட்ட சொல்ல வேண்டாம்க்கா. கல்யாணம் முடிஞ்ச பிறகு மது சொல்லிக்குவா. இப்ப அவர் மனசு ரொம்ப தவிக்கும் அக்கா. இப்ப கல்யாணமும் நின்னுருச்சுனு தெரிஞ்சா அவர் ரொம்ப துவண்டு போயிருவார்”
கேசவன் சொல்வது தான் சரி என்று பட்டது சாவித்ரிக்கு. “சரி  கேசவா. நீ  சொல்ற  படியே  செஞ்சிறலாம். என்  வீட்டுக்கு  மகாலட்சுமியா  வர  மதுவுக்கு  எந்த  பிரச்சனையும்  வர  விடாம  என்  கண்ணுக்குள்ள  வச்சி  பாத்துக்குவேன்”
முகம் முழுவதும் சந்தோசத்துடன் மதுவை அணைத்து கொண்டாள் சாவித்ரி. 
“அப்ப சரி, குறிச்ச தேதில கல்யாணத்தை வச்சிக்கலாம். பத்திரிக்கை அடிக்க கொடுத்ததை நிறுத்திட்டு மது பேரை அதுல மாத்த சொல்லணும்”, என்று சந்தோசமாக சொன்னாள் சாவித்ரி.
“நீங்க ஒத்துக்கிட்டதே சந்தோசம்க்கா”
“எனக்கு தான் உண்மையான  சந்தோசம்  கேசவா. என் பையன் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு தவிச்சேன். இப்ப நீங்க வந்திருக்கீங்கன்னு சிவா வந்து சொல்லும் போது கூட திகிலோடு தான் வந்தேன். ஆனா இப்ப நிம்மதியா இருக்கு. இருந்தாலும் தேவாக்கு பொண்ணு மாறின விஷயம் தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு திக்குன்னு இருக்கு “
“பயப்படாதீங்க  அத்தை. எல்லாம்  சரியா  போகும்”,  என்று  சொன்ன  மதுவை  அணைத்து  கொண்டாள்  சாவித்ரி.
“ரொம்ப சந்தோசமா இருக்கு கேசவா, எனக்கு”, என்று கண் கலங்கினாள் சாவித்ரி.
“விடுங்க அக்கா. எல்லாம் நேரம். சரி தம்பியை போய் பாப்போமா?”

“ஹ்ம்ம் வாங்க. ஆனா பரிதாப படுற மாதிரி எதுவும் பேச வேண்டாம். அவன் நான் அமைதியா இருந்தாலே, நான் என்ன செத்தா போய்ட்டேன்னு எரிஞ்சு விழுறான்”

அர்த்தமுள்ள பார்வையை மது பக்கம் வீசினார்கள் கேசவனும், அன்னமும். 

நால்வரும் அவனுடைய அறைக்குள் செல்ல கதவை திறந்தார்கள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு படுத்திருந்த தேவேந்திரன் எழுந்து அமர்ந்து “யாரது?”, என்று கேட்டான்.

“எப்படி துறு துறுன்னு இருந்த பிள்ளை?”, என்று நினைத்து வந்த அழுகையை அடக்கி கொண்டு “நான் தான் தேவா”, என்று சொன்னாள் சாவித்திரி. 

“நீங்களாம்மா சொல்லுங்க. என்ன விஷயம்?”

“இல்லை பா. கேசவன் வந்திருக்கான்”

“ஓ”, என்று சொன்ன தேவா குரலில் சிறு சந்தேகம் எட்டி பாத்தது. 

“உள்ள வாங்க”, என்று அழைத்தான் தேவா.

அவன் மாமா என்று சொல்ல வில்லை என்பதை குறித்து கொண்டார் கேசவன்.

“நானே உங்களை வர சொல்லணும்னு நினைச்சேன்”, என்று சொன்னான் தேவா.

“என்ன தம்பி சொல்றீங்க? என்னை வர சொல்லணும்னு நினைச்சீங்களா? என்ன செய்யணும்?”, என்று கேட்டார் கேசவன்.

“இல்லை. நீங்களா முடிவு பண்றதுக்குள்ளே, நானா கூப்பிட்டு சொல்றது தான நல்லது. உங்க பொண்ணுக்கு வேற பையனை பாத்து கல்யாணம் செஞ்சு வச்சிருங்க”

“தம்பி என்ன சொல்றீங்க?”

“ஆமா, கண்ணு இல்லாத குருடனுக்கு கல்யாணம் எதுக்கு? எல்லா ஏற்பாடையும் நிப்பாட்டிருங்க. நான் பத்திரிக்கை அடிக்க கொடுத்ததை கூட நிப்பாட்டிட்டேன்”

“என்ன தேவா பேசுற?”, என்று கேட்டாள் சாவித்ரி.

“உங்க மனசு கஷ்ட படும்னு தெரியும் மா. ஆனா நான் சொல்றது தான் சரி”, என்றான் தேவா.
“இந்த கல்யாணம் நடக்கும் தேவா தம்பி. மதுவுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம். அவ கூட இங்க வந்திருக்கா. நீங்க தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. பாரு அன்னம் ஒரு நிமிசத்தில் தம்பி எப்படி பய முறுத்திட்டுன்னு”, என்று சிரித்தார் கேசவன்.
“ஆமா பா தேவா. மது கூட கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னு ஆசை படுறா. இப்ப உனக்கு ஒரு துணை தேவை. அது அவளா இருக்கணும்னு நினைக்கிறா”, என்று சொன்னாள் சாவித்ரி.
புருவம் சுருக்கி யோசித்தான் தேவா.
அவன் யோசனையை பார்த்த மது, “ரெண்டு பேரும் ஓவரா ஆக்ட் பண்ணி கெடுத்துறாதீங்க. மது மதுன்னு சொல்றீங்க. வதனின்னு சொல்லுங்க”, என்று சாவித்ரி மற்றும் கேசவனிடம் அடி குரலில் சொன்னாள் மது.
அவள் சொல்லி வாயை மூடும் முன், “என்ன மா நீங்க வதனின்னு தான சொல்லுவீங்க? இப்ப மதுன்னு சொல்றீங்க?”, என்று கேட்டான் தேவா.
“இதுக்கு தான் சொன்னேன்”, என்ற பார்வையை தன் அப்பா பக்கம் வீசினாள் மது.
“அது ஒன்னும் இல்லை தேவா. மது வதனி தான பேரு. எப்படி கூப்பிட்டா என்ன? நான் மதுன்னே கூப்பிடுறேன். எனக்கு அது தான் பிடிச்சிருக்கு. சரி தம்பி, கல்யாணம் சொன்ன நாளில் நடக்கும். நீ படுத்துக்கோ. நாங்க கீழே கிளம்புறோம்”, என்று தப்பிக்க பார்த்தாள் சாவித்ரி.
“சரி மா. நான் பத்திரிக்கை அடிக்கிறதை நிறுத்த வேண்டாம்னு சொல்லிறேன். அதுக்கு முன்னாடி நான் உங்க மருமக கிட்ட தனியா பேசணும்”, என்று சொன்னான் தேவா.
அதிர்ச்சியாக அப்பாவையும், சாவித்ரியையும் பார்த்தாள் மது.
“அவனால கண்டு பிடிக்க முடியாது. கவலை படாதே”, என்று மதுவிடம் சொன்ன சாவித்ரி தேவாவிடம் திரும்பி. “நீ மது கூட பேசுப்பா. அப்புறம் நம்ம கேசவனுக்கு பத்திரிக்கைல கொஞ்சம் மாறுதல் செய்யணுமாம். அதனால அவனே போய் மாத்தட்டும். நீ எதுவும் செய்ய வேண்டாம்”, என்றாள்.
எழுந்த சந்தேகம் அதிகமானது தேவாவுக்கு. ஆனாலும் “சரி”, என்று மட்டும் சொன்னான்.
“சரி மது. நீ மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டு வா. நாங்க கல்யாணத்தை பத்தி அண்ணி கிட்ட பேசிட்டு இருக்கோம்’, என்று சொன்னாள் அன்னம்.
“சரி மா”, என்று மது சொன்னவுடன் மூவரும் கீழே சென்று விட்டார்கள்.
என்ன பேச என்று தெரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் மதுமிதா.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “அந்த கதவை பூட்டிட்டு இங்க வா”, என்றான்.
“எதுக்கு இப்படி சொல்றான்?”, என்று நினைத்து கொண்டு அறை கதவை சாற்றி விட்டு திரும்பினாள் மது.
“மேலே தாழ்பாள் இருக்கு பாரு? அதை போடு”, என்றான் தேவா.
“ஆன், அது எதுக்கு?”, என்று தடுமாறி கொண்டே கேட்டாள் மது.
“எதுக்கு இந்த பயம்? இந்த குருடன் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்”, என்று சிரித்தான் தேவா.
அவன் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவள், உடனடியாக கதவை மூடி விட்டு அவனை பார்த்து நடந்தாள்.
“இன்னும் கிட்ட வா”, என்றான் தேவா. அருகில் சென்றாள் மது.
அவள் தள்ளி இருப்பதை உணர்ந்து “இன்னும் கிட்ட வா”, என்று சொன்னான்.
“இவன் ஏன் இப்படி பண்றான்? அப்பா, வதனி கிட்ட, தேவா ரொம்ப பேசுனது இல்லைன்னு தான சொன்னாங்க. எதாவது அவ கிட்ட பேசிருப்பானா? அதை பத்தி கேட்டா எனக்கு ஒன்னும் தெரியாதே”, என்று நடுங்கி கொண்டே அவன் அருகில் சென்றாள்.
அவள் அவன் அருகில் வந்ததும் சிறிது நேரம் எதையோ யோசித்து கொண்டிருந்தான் தேவா.
அவன் மௌனம்  தாங்காமல் “என்ன பேசணும்? கீழ எல்லாரும் இருக்காங்க. போகட்டுமா?”, என்று கேட்டாள்.
“இல்லை சீக்கிரம் பேசிறேன். நானும் அம்மா மாதிரியே மதுன்னு கூப்பிடலாமான்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்படியே கூப்பிடுறேன் மது”
மனதுக்குள் நிம்மதியாக உணர்ந்தாள் மது. ஒரு வேளை வதனி என்று அழைத்தால் அந்நியமாய் உணர்ந்திருப்பாள் மது.
இப்போது அப்படி இருக்க வேண்டியது இல்லை. “என்னோட பேரை தான் இனி  கூப்பிடுவான்”, என்று நினைத்து சந்தோசமாக இருந்தது அவளுக்கு.
“சரி அப்படியே கூப்பிடுங்க”, என்று சொன்னாள் மது.
“அப்புறம் மது, நான் சொல்றதை நல்ல கேட்டுக்கோ. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லு. நீ முன்னாடியே சொல்லிருப்பன்னு நினைச்சேன். நீங்க வந்துருக்கீங்கன்னு தெரிஞ்ச உடனே கூட அப்படி தான் நினைச்சேன். இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. குருடனை கல்யாணம் பண்ணிக்க போற கஷ்டம் உனக்கு வேண்டாம் மா”
“எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை. அப்புறம் குருடன் குருடன்னு  சொல்றதை நிப்பாட்டுங்க. கொஞ்ச நாளில் உங்களுக்கு பார்வை கிடைச்சிரும்”
“கிடைக்காமலும் போகலாம் மது”
“அப்படியே போனாலும், நான் உங்களுக்கு கண்ணா இருப்பேன்”
“அழகான வசனம், கேக்க நல்லா இருக்கும் மது. ஆனா வாழ்க்கைக்கு உதவாது. உனக்கு என்ன தலை எழுத்தா? என்னை கல்யாணம் பண்ண?”
“நீங்க என்ன சொன்னாலும், நான் உங்களை தான் கல்யாணம் செய்வேன்”
“ஏன் அப்ப தான் எல்லா சொத்தும் உனக்கே கிடைக்கும்னு நினைக்கிறியா?”, என்று கேட்டு சிரித்தான் தேவா.
அவன் வார்த்தையில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா?”, என்று கேட்டாள்.
“ஆமா, என்னை கல்யாணம் பண்ண நீ சம்மதம் சொல்லிருக்கேனா, அதுக்கு இது மட்டும் தான் காரணமா இருக்கும்”
அவனை இன்னும் நெருங்கியவள், அவன் மண்டையில் நங்கென்று கொட்டினாள்.
காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement