Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 16
“உன்ன இப்ப யாரு கேட்டா. அங்க பாரு ஒரு கூட்டமே வருது. இப்ப இங்க வந்து கேப்பாங்க அவர் என் மருமகன்னு அறிமுகப்படுத்துவாரு” எனவும் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் மீரா.
“ஏய்…” என்று சிரித்தபடியே அவள் பின்னே சென்ற பாலா “அங்கபாரு அவர் பாவம் இவ்ளோ தூரத்துல நிக்கிற உன்ன கைநீட்டி சொல்லிட்டு இருக்காரு பக்கத்தில இருந்த ஈசியா இருக்கும்ல” என கூறி மீண்டும் சிரிக்க… அவர் நின்ற பக்கம் திரும்பி பார்த்தாள். அந்த பெரியவர் அவரிடம் வந்தவர்களிடம் மீராவை கைநீட்டி காட்டி ஏதோ சொல்ல “ம்… இந்தாளு பைத்தியமாடா. வற்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் டமாரம் அடிச்சிட்டு இருக்காரு. பாத்து முழுசா ரெண்டு மணி நேரங்கூட ஆகல அதுக்குள்ள இவர் இப்புடியெல்லாம் பண்ணிட்டு இருக்காரு” என இவள் பொறிந்துதள்ள…
“அத உங்கம்மா அந்த மங்கம்மா சொல்லனும். நாம ரெண்டு பேரும் இங்க இருந்து புலம்புனா சரியா போச்சா…? அங்க பாரு எப்புடி பல்ல காட்டுதுன்னு” என மதுவை காட்ட… “ம்… ம்ஹீம்.. ம்ஹீம்…” என சினுங்கினாள் மீரா.
“மானம் போகுதுடா. வா நாம அந்தப்பக்கம் போகலாம்” என
“ஐயையோ… இந்த சின்ன விசயத்துக்கு போய் இப்புடி விபரீத முடிவு எடுக்கலாமா. வேண்டாம்மா…” என சிவாஜி போல் ரியாக்ஷனுடன் சொல்ல…
“என்னடா உளர்ற” என்றாள் மீரா குழப்பத்துடன்…
“பின்ன இந்த சின்ன விசயத்துக்காக குளத்துள விழப்போறேன்னு சொல்றியே” என பாலா கேலி செய்யவும்
“நான் எப்போ” என்றவளுக்கு புரிந்துவிட்டது. அந்தப்பக்கம் போகலாம் என அவள் கைகாட்டிய திசையில் உள்ளது குளம். அவனை பார்த்தவள் “ஆமாம்டா ஊருக்கு ஏதோ என்னால முடிஞ்ச நல்லதா… தற்கொலை இல்ல ஒரே ஒரு சின்ன கொலைமட்டும் பண்ணலாம்னு இருக்கேன். வா போகலாம்” என சாதாரணமாக சொல்லி செல்ல…
“ராட்சசி தள்ளி கிள்ளி விட்டுடாதடி” என கூறியபடி பாலாவும் மீராவின் பின்னே செல்ல…
“ஓவரா நடிக்காதடா. உனக்குதான் நீச்சல் தெரியும்ல. அப்பறம் என்ன” என கேட்க…
“அதுவா… இந்த டிரஸ்லதான் நான் ரொம்ப அழகா இருப்பேன் அப்புடியே உன்ன பிக்கப்பண்ண மாதிரி நானும் ஒரு பிகர… இல்ல… எந்த பிகரோட அம்மா அப்பாவாவது என்ன கரெக்ட் பண்ணா… நல்லாயிருக்கும்ல” என கண்களில் கனவு மின்ன சொன்னவன் “நீ தள்ளிவிட்டா நான் வேற டிரஸ் மாத்தனும். அதுவும் எனக்கு செட்டாகனும். அதான்… தம்பி பாவம்ல… அங்க பாரேன் அந்த பிகரு என்னவே பாக்குது” என பாலா கூற… திரும்பி அவன் கூறிய திசையை பார்த்தவள் திரும்பி பாலாவின் பின்புறம் பார்க்க அங்கே சஞ்ஜீவ் குளத்தடியில் தனியாக அமர்ந்து கற்களை எடுத்து குளத்தினுள் போட்டுக் கொண்டிருந்தான்.
“ம்… ஆனா பாருடி தங்கம் நீ இன்னைக்குன்னு பாத்து ரொம்ப அமைதியா குளத்துல கல்லு போட்டு விளையாடுற… அத அவ பாத்து பாத்து ரசிக்கிறா” என அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கூற… அதை கேட்டு விழித்தவன் “ஏய்… நான் எங்கடி கல்லெல்லாம் போட்டு விளையாடுறேன் சும்மாதான இருக்கேன். உனக்கென்ன கண்ணா தெரியல” என கேட்க…
பாலாவை நேராக பார்த்தவள் “நல்லா திரும்பி அந்த பொண்ண பாரு யார பாக்குறான்னு” எனவும் திரும்பி பார்த்தவன் அவளது பார்வை அவனையும் தாண்டி வேறெங்கோ செல்வதை உணர்ந்தவன் திரும்பி பார்க்க அங்கே அமைதியே உருவாக குளத்தில் கல்லை எறிந்தபடி அமர்ந்திருந்தான்.
தன் தலையில் அடித்துக் கொண்டவன் “எனக்கு எதிரி எங்கேயோ இல்லடி என்கூடவே கூட்டிக்கிட்டு சுத்துறேன். இத்தன நாளா ஒன்னுமட்டுந்தான் இருந்துச்சு. இப்பபாரு உன்ன அந்தாளு கூட சேத்துபேசி முழுசா ஒருநாள் ஆகல அதுக்குள்ள எமனா வந்து நிக்கிறாரு” என நொந்துகொள்ள…
“ஆனாலும் அந்த பொண்ணு உன்னதான் பாத்துச்சுன்னு நீ எப்புடிடா நம்புன” என அவனை பார்த்து சிரிக்க…
“சிரிக்காதடி. உன் ஆளதான் சைட்டடிக்கிறா பாத்து கொத்திட்டு போயிடப்போறா” என கையை பாம்பு போல வைத்து கொத்திக் காண்பிக்க…
“நோ பிராப்ளம். அப்புடியாவது காதல்ன்னா என்னன்னு கத்துக்கிட்டு வரட்டும்” என
“ம்க்கும். மொதல்ல பேச்சுன்னா என்ன சிரிப்புன்னா என்னன்னு கத்துக்கிட்டு வரட்டும்” என சொல்லியபடி திரும்பி பார்க்க அப்போதும் கல்லை பொறுக்கி ஒவ்வொன்றாக குளத்தினுள் போட்டபடியே இருந்தான். அதை பார்த்த பாலா “ஏய் மீரா… நீ இங்க உக்காந்திருக்க. ஒரு பொண்ணு அவர சைட் அடிச்சிட்டு அந்தப்பக்கம் இருக்கா. இத எதையுமே கண்டுக்காம இவர் கல்லெடுத்து குளத்துல போட்டுட்டு இருக்காரே. எதுவும் மரகழண்ட கேசா இருக்குமோ…?” என கேட்க…
“ம்… தெரியலையே. ஒருவேல இங்க கல்ல தூக்கி போட்டா தங்கமா வரும்ன்னு யாரும் சொன்னாங்களோ என்னவோ…?” என்றபடி இவளும் அவனை பார்க்க அங்கே சஞ்ஜீவின் தந்தை தூரத்தில் வருவது தெரிய “டேய் பாலா… வாடா போகலாம்” என அவசரமாக கையை பற்றி இழுக்க
“ஏய் பொறுடி… இங்க செல்பி எடுத்தா நல்லாயிருக்கும். வா நம்ம ரெண்டு பேரும் எடுப்போம்” என மொபைலை முகத்தின் முன்நீட்ட… “ஐயோ டேய் தண்டோரா பார்ட்டி வருதுடா. வா எஸ்கேப் ஆகிடுவோம்” என மீரா பதற…
“என்ன…? தண்டோரா பார்ட்டியா… அது யாருடி” என கேட்டுக்கொண்டே பாலா சுற்றும் முற்றும் திரும்பி பார்க்க… “ம்… சஞ்ஜீவ் அப்பா. நீ அவர் வர்ற வரைக்கும் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு இரு. நான் போறேன்” என கூறிக்கொண்டே அவள் ஓடிவிட… “அடிப்பாவி அவரு உன் மாமனாருடி. நீ பேசு என்ன ஏன் கோர்த்து விடுற அப்பறம் வற்ரவங்ககிட்ட எல்லாம் இவன்தான் என் மருமகளோட தம்பின்னு ஆரம்பிச்சுடுவாரு” என்றபடி வேகமாக ஓடிச்சென்று மீராவுடன் இணைந்து கொண்டான் பாலா.
“நல்லதுதானடா நாலுபேரு பாத்து நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கேன்னு யாராவது பொண்ணு குடுக்க வருவாங்கள்ல. நீகூட இததான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விரும்புன” என காலைவார
“ஐயோ நான் காலம் பூறாவும் இப்புடியேகூட இருந்துடுறேன். ஆனா உன் மாமனார் பாக்குற பொண்ணு மட்டும் எனக்கு வேணாம். அவர் மகன மாதிரியே எனக்கும் பொண்ண பாத்து கட்டிவச்சுருவாரு” என மிரண்ட தொனியில் கூற…
“அவர் பையன மாதிரியா…? நல்லா தானடா இருந்தாரு. என்ன பேச காசு கேப்பாரு போல. ஆனா எல்லாருமே அமைதியான பொண்ணு வேணும்ன்னு தானடா சொல்லுவாங்க” என…
“ம்… ஊம ஊரக் கெடுக்கும். பெருச்சாலி வீட்டக் கெடுக்கும்” எனவும் சிரித்த மீரா “இந்த டையலாக்க மாத்தாம அக்காவுக்காக பேசனும்டா செல்லம் மறந்துடாத” என டீல் பேசியபடி தன் வீட்டினர் இருந்த இடம் வந்துசேர… இவர்கள் வரும்முன் மீனாட்சி, சுந்தரம், கங்காதரன் மற்றும் இவர்கள் அப்பத்தா ராஜம்மாள் அனைவரிடமும் மது விசயத்தைக் கூறி ஒப்புதல் வாங்கி சஞ்ஜீவ்தான் மீராவின் கணவன் எனும் விதமாக பேசி முடித்து சஞ்ஜீவின் தந்தை சோமநாதனிடமும் கூறிவிட்டனர்.
மீரா வந்ததும் இந்த விசயத்தை நிரஞ்சன் கூற “என்னது…?” என அதிர்ந்தவள் பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு “யாரக் கேட்டு முடிவு பண்ணீங்க” என கோபமாக கேட்க…
“உன் வாழ்க்கையில முடிவெடுக்க எங்களுக்கு உரிமை இல்லையாம்மா” என கங்காதரன் வலியுடன் கேட்கவும்…
‘ச்சே… கோபத்துல வார்த்தைய விட்டுட்டமே’ என தன்னையே நொந்து கொண்டவள் தான் பேசிய வார்த்தையின் தீவிரம் புரிய “ஐயோ.. அப்புடியெல்லாம் இல்லப்பா. நீங்க சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நான்தானப்பா உங்களுக்கு வாக்கு குடுத்தேன். அப்புடி இருக்கும்போது நான் அப்படி சொல்லுவேனா…? ஆனாலும் என்னவோ எல்லாமே ரொம்ப பாஸ்டா நடக்குற மாதிரி இருக்குப்பா. மனசுல ஏதோ ஒரு உறுத்தல் இருக்க மாதிரி இருக்குப்பா” என கலக்கத்துடன் கூற…
“ஒன்னுமில்லடாம்மா. எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கதுதான்மா. பெத்தவங்க தப்பான வாழ்க்கைய அமச்சுகுடுக்க மாட்டாங்கன்னு நம்பு. கடவுள் உனக்காக குடுத்த வாழ்க்கை இதுதான்னு நினைச்சுக்கோ. எல்லாமே நல்லதாதான் நடக்கும். சரியா…?” என கேட்டவரிடம் சம்மதமாக தலையை ஆட்டினாலும் ஏனோ மனம் சரியாக மறுத்தது. அமைதியாக சென்று மீண்டும் குளத்தடியில் அமர… அங்கு வேறு ஒருவரும் இருக்கவில்லை.
“இதுதான் என் செல்ல அக்காங்குறது” என்றபடி பாலா வந்து மீராவின் அருகில் அமர…
“என்னடா” என மீரா புரியாமல் கேட்க…
“தம்பி செல்பி எடுக்க ஆசப்பட்டானேன்னு தான திரும்ப இங்க வந்த. அதான் சொன்னேன்” என்றான் பாலா.
“அது இல்லடி தங்கம் சஞ்ஜீவ் குளத்துல எறிஞ்ச கல்லெல்லாம் தங்கமா மாறிட்டதா சொன்னாங்க அதான் பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்” எனவும்
“என்னது… தங்கமா மாறுதா…?” என ஒருமாதிரி பார்வையுடன் கேட்க…
“ம்… அங்கபாரு மின்னுது” என சூரியவொளியில் மின்னிய குளத்தை காண்பிக்க…
“ப்பா… உன் அறிவக்கண்டு நான் வியக்கேன்” என்றவன் “சரி வா” என அழைத்து சில பல புகைப்படங்களை எடுக்க… சற்று தெளிந்த மீராவை அழைத்துக்கொண்டு மீண்டும் தன் குடும்பம் இருக்குமிடம் வந்து சேர்ந்தான். அங்கே வந்தால் ‘ஏன்டா வந்தோம்’ என எண்ணும்படியாக அமர்ந்திருந்தார் சோமநாதன்.
“அடடடே வாம்மா பேத்தி” என மீராவை வரவேற்றவர் அருகில் அமர சொல்ல மறுத்த மீரா அவர்களைவிட்டு சற்றுதள்ளி அமர்ந்திருந்த நிரஞ்சனிடம் சென்று அமர்ந்துகொண்டாள்.
“என் பையன் தலையெடுத்த பின்னாடி பிசினஸ்ல ஒரே வளர்ச்சிதான்” என அவர் கூற…
“ஆமா… அப்புடி என்னதான் பிசினஸ் பண்றாரு. வந்ததிலிருந்து பிசினஸ் பிசினஸ்ன்னே சொல்லி கழுத்தறுக்குறாரு மனுசன்” என நிரஞ்சன் சிறிது கடுப்புடன்; கேட்க…
ஏற்கனவே ஏக கடுப்புடன் இருந்த மீரா “ம்… புண்ணாக்கு பிசினஸ் பண்றாராம். நீங்க வேணா பிராண்ட் அம்பாசிட்டரா போறீங்களா…?” என அதே கடுப்புடன் கேட்க… பாலா பொங்கிவந்த சிரிப்பில் இடம் தெரியாமல் சிரித்துவிட அனைவரும் அவனையே கேள்வியுடன் பார்த்தனர்.
“ஒன்னுமில்ல. வாட்ஸ் அப்ல ஜோக் ஏதோ வந்தது அத பாத்துட்டு சிரிக்கிறான்” என சமாளித்த மீரா பாலாவிடம் என்னவென்று கேட்க…
சிரிப்புடன் “இல்ல அண்ணன் ஆப்ஸ் காட்டி… இந்த புண்ணாக்க சாப்பிட்டா என்னப்போல நீங்களும் ஆணழகனாகலாம் அப்புடின்னு டைலாக் சொல்லி ஜட்டியோட நடிச்சா எப்புடி இருக்கும்ன்னு யோசிச்சு” என அவன் கூறிமுடிக்கும் முன் மீராவும் பாலாவுடன் சேர்ந்து சிரிக்க… மொத்த குடும்பமும் திரும்பவும் திரும்பி பார்த்து முறைத்தது. நிரஞ்சனுக்கும் சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரித்தால் மேலும் இருவரும் சேர்ந்து கலாய்ப்பார்கள் என தெரிந்ததால் விரைப்பாக முறைத்தபடி “உனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாகிட்டே போகுது” என பாலாவின் காதைப்பற்றி திருக… “ஆ…” என அலறியவன் “சரி… நம்மள கடுப்பேத்துறார்ல அவர நாம கலாய்ப்போமா…?” என கேட்க… நிரஞ்சன் மௌனமாக தலையாட்ட… மீராவோ “என் தங்கம். இப்பதான்டி நீ என் தம்பி” என அவனுக்கு நெட்டி முறிக்க…
“ஏய்… எனக்கு வெக்கமா வருது” என வெக்கப்பட்டபடி தன் சட்டைக் காலரை பற்களால் கடித்தபடி கூற…
“ச்சீ… கருமமே. நீ என்ன வேணாலும் பண்ணு ஆனா வெக்கம் மட்டும் படாதடா” என்றபடி மீரா தலையில் அடித்துக் கொள்ள… இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
மீண்டும் சோமநாதன் தன் தொழிலை பற்றி ஆரம்பிக்க ‘ஊருல புண்ணாக்கு விக்கிறவன் பொரிஉருண்ட விக்கிறவனெல்லாம் தொழிலதிபராம்’ என்ற கவுண்டமணி வாசகம் பாலாவின் மொபைலில் ஒலிக்க… சுற்றுப்புறம் அமைதியாகி இவர்கள்புறம் திரும்பியது. நிரஞ்சன் காலே வராத போனை காதில் வைத்து “அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்க. நான்…” என பேசியபடி நகர்ந்து சென்றுவிட… மீரா குனிந்த தலையை நிமிரவே இல்லை. அவளுக்கு பொங்கிவந்த சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாக இருக்க… என்ன சொல்லி மற்றவர்களை சமாளிக்க… வாயை திறந்தால் வார்த்தைகள் அல்ல சிரிப்புதான் வரும்.
“என்னடா இது” என மீனாட்சி கோபத்துடன் கேட்க…
“வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் பாத்தேன் பெரியம்மா” என அப்பாவியாக கூறி மொபைலை அவரிடம் காட்ட…
“இதெல்லாம் எவன்டா ஸ்டேட்டஸா வைக்கிறது” என மீண்டும் கோபம் குறையாமல் கேட்க…
“பெரியப்பா போன்லதான் வச்சிருக்காங்க” எனவும்… அனைவரும் சுந்தரத்தை பார்க்க மீரா மட்டும் பாலாவை பார்த்தாள். அவளை பார்த்து கண்சிமிட்டி சுந்தரத்தை ஜாடை காட்ட… அவரோ இதை எப்படி சமாளிப்பது என முழித்துக் கொண்டிருந்தார்.
“என்னடா பண்ணுன…?” என மீரா பாலாவின் காதை கடிக்க… பாலா தன் அருகிலிருந்த சுந்தரத்தின் சட்டையை எடுத்துக் காட்டினான். மீராவிற்கு புரிந்துவிட்டது. புலுக்கம் காரணமாக சட்டையை கழட்டி வைத்த சுந்தரம் தன் மொபைலையும் சட்டையிலேயே மறந்து வைத்துவிட.. அதை எடுத்து தனக்கு தேவையான ஸ்டேட்டஸை வைத்து பயன்படுத்திக் கொண்டான் பாலா.
“இதெல்லாம் உங்களுக்கு தேவையா…?” என மீனாட்சி சுந்தரத்தை சாட…
“ஏய்… எனக்கு இதெல்லாம் வைக்கத் தெரியாதுடி” என சுந்தரம் கூற…
“அப்பறம் எப்புடி இது உங்க நம்பர்ல இருந்து வந்துருக்கு”
“எனக்கெப்புடிடி தெரியும்” என பாவமாக கேட்க…
“கெழட்டுக் கொமரி மறுசடங்கான மாதிரி உங்களுக்கு எதுக்கு இந்த போன். ஒழுங்கா பழைய போன வச்சுக்கிட்டு இந்த போன தூக்கி போடுறீங்க” என மீனாட்சி சொல்லும்போதே…
“அடுத்து இந்த அபூர்வ வகை டைனோசரஸ் எலும்புக்கூடு எங்கிட்டதான் வரும். நான் அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுறேன் பாய்” எனக்கூறி எழுந்து சென்றுவிட… சுந்தரத்தை திட்டி முடித்த மீனாட்சி திரும்பி பார்க்க பாலா அங்கிருக்கவில்லை.
“எங்க அவன…?” என மீனாட்சி மீராவிடம் கேட்க…
“அவன்… அவனுக்கு ஒரு போன் வந்துச்சு பேச போயிட்டான்” என…
“சரிசரி… நீ ஏன் அங்க தனியா உக்காந்திருக்க இங்க வா” என அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து சஞ்ஜீவ் புராணம் பாட “ஐயோ…” என வந்தது மீராவிற்கு.
சுpலரை பார்க்காமலே பிடித்துவிடும்… சிலரை பார்க்காமலே பிடிக்காமல் போய்விடும்… இங்கோ சஞ்ஜீவை பிடிக்கவிடாமல் செய்ய என்னவெல்லாம் தன்னால் செய்ய முடியுமோ அது அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் சஞ்சீவின் தந்தை சோமசுந்தரம். இது எங்கே எவ்வாறு முடியும் என காத்திருந்து காண்போம்…

Advertisement