Advertisement

உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 14
உன் உண்மைகள் என்னை உடைத்தெறிவதற்கு
பதிலாக ஊமையாக்குவதும் ஏனடி என் சகியே……
நீ மட்டுமே பேச வேண்டும்…
நான் உன் பின் உன் அறனாக நிற்க வேண்டும்….
அதற்கொரு வாய்ப்பைத் தருவாயா சகியே…!!!
“நாளைக்கு சொல்ல ஒரு நல்ல பொய்யா யோசிச்சு சொல்லு பேபி” என கூறிவிட்டு செல்ல…
மீராவிற்குதான் ‘ஐய்யோ’வென இருந்தது. ‘கிணறு வெட்ட பூதம் கிளம்புன கதையா ஒரு பிரச்சனையில இருந்து தப்பிக்க இங்க வந்தா இன்னொரு பிரச்சனை கிளம்புதே’ என நினைத்தவள் ‘நாளைக்கு விடியும் போது இந்த பிரச்சனை என்ன விட்டு தூரமா போயிருக்கனும்’ என யோசித்தவள் ஒரு முடிவுடன் தன் போனை எடுத்து டயல் செய்தவாறு அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்…
ஏ.கேவும் மீராவும் பேசியதை கேட்கமுடியா தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிவேதிதா தன் மொபைலை எடுத்து அபிக்கு கால் செய்து திட்டத்தொடங்கினாள் “ஏய்… நீயெல்லாம் ஒரு டிடெக்டிவாடி… எனக்கு நீ என்ன செய்வியோ தெரியாது. இன்னும் ரெண்டு நாள்ல அவள பத்தின மொத்த டீடெல்சும் தந்தாகனும். பத்து நாளா அப்புடி என்னத்த தான்டி கிழிச்ச” என கோபமாக கேட்க…
“ஹேய் நீ குடுத்ததொன்னும் பெரிய வேலையில்ல. அங்க போனதும் எல்லா டீடெல்சும் கிடைச்சுருச்சு… ஆனா அவ ஏன் உங்க வீட்ல இருக்கான்ற கேள்விக்கு மட்டும் தான் இன்னும் பதில் தெரியல. நான் இதுவரைக்கும் கலெக்ட் பண்ண டீடெய்ல்ச உனக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றவள் போனை வைத்துவிட… அபி அனுப்பிய தகவல் நிவேதிதா கனவில் கூட எதிர்பாராத அளவிற்கு இருந்தது. ஆனால் அவை அனைத்தும் உண்மை என்பதற்கு சான்றாக போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்ஸ் என ஆதாரம் எல்லாம் பக்காவாக இருந்தது. ‘ஏதாவது குறை கண்டுபிடித்து மீராவை மட்டம் தட்ட வேண்டும் என எதிர்பார்த்தவளுக்கு தன் அத்தையின் மூலம் அவளை வீட்டைவிட்டு விரட்டும் அளவிற்கு ஆதாரங்களை சேமித்துக் கொடுத்திருந்தாள் அபி’ மிகவும் சந்தோஷமான மனநிலையில் மீண்டும் அபிக்கு அழைத்தாள் நிவேதிதா.
“ஹேய் பத்து நாள்ல எப்புடிடி இவ்ளோ டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண” என ஆச்சர்யமாக கேட்க…
“அவ்ளோ சீன்லாம் இல்ல… போய் ஒரு பாட்டிகிட்ட மீராவோட பிரண்ட் அவள பாக்கனும்ன்னு சொன்னேன்… அவங்க நடந்தத எல்லாம் சொல்லி கேரளால ட்ரீட்மெண்ட் எடுக்கறதா சொன்னாங்க… நான் முன்னாடியே அவங்க சொன்னதெல்லாமே உண்மையான்னு செக் பண்ண போட்டோகிளிப் டாக்குமெண்ட் எல்லாம் சரிபாத்துட்டேன்… அதனால அங்க போனதும் மீதி தெளிவாகிடுச்சு. ஆனா, அங்க இருந்தவங்க கிட்ட இருந்து எந்த டீடெய்ல்சும் கிடைக்கல. அவங்க வாய திறந்தா மட்டும்தான் அங்க என்ன நடந்ததுன்னு தெரியும்” என கூறியவள் “அன்ட் டேட் பாத்தியா எல்லாமே ரீசன்ட்டாதான் நடந்திருக்கு. அவளுக்கு பிரச்சன எதுவும் எனக்கு தெரிஞ்சு பெருசா இல்ல. ஆனா அவ ஊரவிட்டு போனதுக்கும் இங்க நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கற மாதிரி தெரியல. ஏதோ ஒரு பாயிண்ட் மிஸ் ஆகுது. அதையும் சீக்கிரமே கண்டுபிடிச்சு சொல்றேன்” என
“ம்…. ஓ.கே” என்றாள் நிவேதிதா
“ஓ.கே அடுத்து ஏதாவது டீடெய்ல் கிடச்சா கால் பண்றேன்” என அபி கூற…
“ம்… பாய் அன்ட் தேங்க்ஸ். ஏனக்கு இந்த டீடெய்ல்ஸே தாராளம்” என்று திருப்தியுடன் கூறி போனை அனைத்தவள் ‘நாளைக்கு விடியும்போது என்னவிட்டும் இந்த வீட்டவிட்டும் அவ ஓடனும்’ என நினைத்து தன் நிம்மதியான தூக்கத்தை தொடங்கினாள்…
“அண்ணா ப்ளீஸ்… நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன். அவர் இனிமேல் என்ன தொந்தரவு பண்ணவிடாம பாத்துக்கோங்க ப்ளீஸ். இதுக்கும் மேல இதயும் சேத்து என்தலையில தூக்கி என்னால சுமக்க முடியாது. நீங்கதான் இதுலருந்து என்ன காப்பாத்தனும்” என கூற…
“சரிம்மா நான் பாத்துக்கிறேன்” என எதிர்முனை கூறவும் அமைதியாக போனை கட்செய்தவள் தன்னறையின் பால்கனியில் சென்று அமர்ந்துவிட்டாள்…
ஏதேதோ நினைவுகள்… எத்தனையோ சந்தோஷம்… எத்தனையோ கனவுகள்… ‘காண்பதெல்லாம் காதலாய் வாழ்ந்த நிமிடம்…’ எல்லாம் முற்றும் என முடிந்துவிட்டது என நினைத்தவள் தன் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
அன்று பாலாவும் மீராவும் தனியாக நடந்து சென்று அந்த பஸ்ஸ்டான்டில் அமர்ந்தபின் எதிரில் நின்றிருந்தவனை அளவெடுத்தாள் மீரா. ஆறடி உயரம் அதற்குண்டான உடற்கட்டு கோதுமை நிறமென பார்ப்பவரை கவரும் ஆண் உருவம். ஆனால் அந்த கண்களில் ஆளுமையும் கம்பீரமும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ…? என எண்ணுமளவு அந்த கண்களில் ஏதோ மயான தோற்றம் ஒன்று இருந்தது. எந்தவித உணர்வுமின்றி இருந்த அந்த கண்கள் ஏனோ மீராவின் மனதில் கேள்வியை எழுப்பியது. இந்த நேரத்தில் கையில் பையுடன் தனியாக பஸ்கூட இந்நேரத்தில் கிடையாது அதிலும் ஏன் இவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கிறான்? என யோசித்துக் கொண்டே இருந்தாள்.
“மீரா… வா போகலாம்” என பாலா அழைக்க…
“பாலா அங்க பாரு… ஒருத்தர் தனியா நின்னுட்டு இருக்காரு. வழி தெரியலையோ என்னவோ என்னன்னு கேளுடா” எனக் கூற…
“நமக்கு இது தேவையா…? நமக்கே வழி தெரியாது”
“உனக்குன்னு சொல்லு” என்றாள் அவனது பேச்சை இடைவெட்டி
“சரி எனக்கு. இப்ப இது தேவையா வா போலாம்” என கைபற்றி இழுக்க… “ஏய் பொறுடா… பாவம் இந்த நேரத்துல தனியா நின்னுட்டு இருக்காருடா” என கூறிக்கொண்டே திரும்பி பார்க்க… அங்கே அந்த இளைஞன் தன்னெதிரே உள்ள வெற்றிடத்தை அதே பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். கண்டிப்பாக இவர்கள் பேசியது அவனுக்கு கேட்டிருக்கும் அப்படியிருக்க…? ‘இது என்ன ரியாக்சன். ஒருவேளை கெத்தா இருக்கனும்ன்னு இப்படி நிக்கிறானா? ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்’ என அவனைபற்றிய நினைவிலேயே வந்தவளை தன் பேச்சால் திசைதிருப்பி கோவிலுக்கு அழைத்துச் சென்றான் பாலா.
இவர்கள் இருவரும் கோவிலினுள் நுழையும்போது மணி நான்கு…
சாமி கும்பிட்டவர்கள் சிறிது நேரம் படுக்க… யாருமில்லா பொட்டல்காடு மிரட்டியது. “மீரா ஏதாவது பாட்டு பாடேன்” என பாலா கேட்க…
“டேய் என குரலே என்ன பயமுறுத்தும் போலடா. விடிஞ்சபின்னாடி பாப்போம் எதா இருந்தாலும்” என மீரா சற்று மிரண்ட குரலில் கூற…
“ஆனாலும் தனியா நடந்து வரும்போதுகூட பயம் தெரியல. வந்து இந்த காட்டுக்குள்ள செட்டில் ஆனபின்னாடிதான் பயமாயிருக்கு” என….
“ம்… ஊரதாண்டி காட்டுக்குள்ள அரிவாள், குதிரை, சிலை… கொஞ்சம் பயமுறுத்துற மாதிரிதான் இருக்கு” என்றாள் மீரா பயந்த குரலில்
“ஏய் ஒரு பாட்டு பாடுடி… கொஞ்சம் டைம் பாசாவது ஆகும்”
“டேய் சும்மா இருடா. பாட்டு சத்தம் கேட்டு எவனாச்சும் வந்துற போறாங்க”
“ம்ப்ச்… அவனையாவது துணைக்கு வச்சுக்கலாம். சும்மா பாடு”
“லூசு விளையாடாதடா”
“நீ இப்ப பாடல நான் என் பாட்ட போடுவேன்” என மிரட்ட… அவன் எந்த பாடலை கூறுகிறான் என புரிந்ததால் மீராவும் பாட ஆரம்பித்தாள்… அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு… கேட்காமல் ஒரு நாள் இருக்கமாட்டாள்… இப்போதெல்லாம் கேட்கவே மாட்டாள்.
கண்ணனைத் தேடி வந்த ராதையும் நானே
காணமல் நீண்ட காலம் வாடுகின்றேனே …..!
கண்விழி பூத்து நின்ற கோதையும் நானே
ஸ்ரீவாசுதேவனை நான் சேர்வதென்று…!
யாரோடு என்ன சொல்வேன்இ நான் கொண்ட வேதனை..
என் போண்ற கோபிகைக்கு ஏன் இந்த சோதணை…
நான் கண்கள் மூடியே நாள் ஆணாதே..
கண்ணனைத் தேடி வந்த ராதையும் நானே
காணமல் நீண்ட காலம் வாடுகின்றேனே …..!
கண்ணா நீ வாவா என் தேவா என நான் அழைத்தேன்
காய்க்காத பூவா ஒரு தீவா நீ சொல் மன்னவா
ஓ நந்தலாலா கோபாலா உடலால் மெலிந்தேன்
அன்றாடம் வாட்டும் அனல் மூட்டும் காதல் அல்லவா
ஆகாய மேகங்கள் எல்லாம் தூதாக நான் விடுத்தேன்
அன்றாடம் முட்களின் மீது தூங்காமல் நான் படுத்தேன்
நோய் தீர்க்க வேண்டுமே நாராயணா..!
கண்ணனைத் தேடி வந்த ராதையும் நானே
காணமல் நீண்ட காலம் வாடுகின்றேனே …..!
உன் தோற்றம் யாது பாராது எனை நான் கொடுத்தேன்
உன்னோடு வாழ நலம் சூழ நாளும் ஏங்கினேன்
பொன்னந்தி வேளை பூமாலை புதிதாய் தொடுத்தேன்
உன் காதில் மெல்ல அதை சொல்ல நாளும் ஏங்கினேன்
பாஞ்சாலி வாடியபோது பூச்சேலை தந்தவனே
போர்நாளில் விஜயனுக்காக தேரோட்ட வந்தவனே
நான் கூவும் வேளையில் வாராததேன்…!
கண்ணனைத் தேடி வந்த ராதையும் நானே
காணமல் நீண்ட காலம் வாடுகின்றேனே …..!
பாடி முடிக்க… யாரோ அவள் முன்னே நின்றிருந்தார். தன் மடியில் படுத்து உறங்கியவனை வேகமாக கீழே தள்ளியவள் எழுந்து நிற்க… அவள் தள்ளிய வேகத்தில் தன் தூக்கத்தை தொலைத்து அவனும் இவளுடனே எழ… “ரொம்ப நல்லா பாடுனமா… யார் வீட்டு பொண்ணு” எனவும் தன் குடும்பத்தை பற்றி கூறியவள் தன் கண்களை அவர் பின்னால் சற்று தொலைவில் நின்றவர்களின் மேல் செலுத்த…அங்கே அந்த இளைஞன் நின்றிருந்தான். இப்போதும் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் யாருக்கு வந்த விருந்தோ எனும்படியான ஒரு பாவனையில் அவன் நின்றிருக்க அவனை பார்த்தவள் மீண்டும் அவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்க… அதற்குள் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார் “உன் வீட்டாளுங்க எங்கம்மா காணோம்” என கேட்க
“வந்துருவாங்க. பின்னாடி வந்தாங்க நாங்க முன்னாடியே வந்துட்டோம்” எனவும்
“சரிம்மா அப்போ நாங்க வர்றோம். அந்த பக்கமா உட்கார்திருப்போம் உங்கம்மா வந்ததும் என்ன பாக்க வரச்சொல்லுமா” எனக் கூறிவிட்டு செல்ல மீரா மீண்டும் அமர்ந்து அந்த இளைஞனை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். ‘இவன் ஏன் இப்படி எந்த உணர்ச்சியும் இல்லாத ஒரு பார்வைய பாத்து வைக்கிறான்’ எவ்வளவு யோசித்தாலும் பலன் மட்டும் பூஜ்ஜியம் என்ற விகிதத்திலேயே இருந்தது.
அவர்கள் வீட்டினர் வந்ததும் மீரா “அம்மா உன்ன யாரோ பாக்கனும்ன்னு சொன்னாங்க. அந்தப்பக்கம் இருக்காங்களாம்” என கையை நீட்ட மது அவள் நீட்டிய திசையை நோக்கி சென்றார்.
மதுரம் சென்ற சிறிது நேரத்தில் மீராவை அழைக்க மீராவும் பாலாவும் அந்த இடத்தை நோக்கி சென்றனர். “என்னம்மா” என கேட்க…
“பி.எஸ்சி முடிச்சுட்டா” என எதிரில் இருந்தவருடனே பேசிக்கொண்டிருக்க… மீராவும் பாலாவும் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இவர்கள் பேசுவதை கவனித்த மதுரம் இவர்களை திரும்பி பார்த்து முறைத்துவிட்டு “தம்பி எங்கப்பா. கூப்பிடுங்க பாப்போம்” என மதுரம் கூறவும் எதிரில் நின்றவர் தன் மகனை அழைக்க செல்ல பாலா “பெரியம்மா எங்கள கூப்பிட்டுட்டு அவர் கூடவே பேசிட்டு இருக்க. யார் அவர்” என சற்று எரிச்சலுடன் கேட்க…
“அவர் எங்க சித்தப்பாடா. மீராவ பொண்ணு கேட்டாரு அதான் உங்கள கூப்பிட்டேன்” எனவும் மீரா “ம்மா….” ஏன பற்களை கடிக்க…
“ம்… சரிசரி சீக்கிரம் தொறத்தி விடுற வேலையப்பாரு” என அசட்டையாக கூற…
சென்றவர் திரும்பவந்து “இவன் தான்மா என்பையன் பேர் சந்தோஷ் சஞ்ஜீவ். என் பிசினஸ்ல ஹெல்ப் பண்றான்” எனவும் இவர்கள் அவனை பார்க்க அவனோ அப்போதும் எதையோ தொலைத்தவன் போலவே நின்றிருந்தான். அவன் தந்தை அவனது காதில் ஏதோ கூற வேகமாக இவர்களை பார்த்து புன்னகைத்தவன் “நான் வர்றேன் நீங்க பேசிட்டு இருங்க” என கூறி சென்றுவிட… அவனது தந்தை தான் “என் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம்” என சமாளித்தார்.
“ஆமா இவர் பையனுக்கு கூச்ச சுபாவம். நம்ம வெக்கமில்லாம இங்க நிக்கிறோம்” என பாலா மீராவின் காதில் கூற… அப்போது அங்கே வந்த பெரியவர் இவர்களிடம் ஏதோ பேச “இந்த பொண்ணதான் நம்ம சஞ்ஜீவ்க்கு பேசிருக்கு” எனவும்
“இப்பதானடா கேட்டானுங்க. அதுக்குள்ள பேசிமுடிச்ச ரேஞ்சுக்கு சொல்லிட்டு இருக்காரு. உங்கம்மாவும் பல்லகாட்டிட்டு இருக்கு” என வெளியே சிரித்தபடி மெதுவாக பாலாவின் காதை கடித்தாள் மீரா.
“போச்சு. லைசன்ச போட்டுட்டானுங்க. இனிமே அவ்வளவுதான்” என்றான் பாலாவும் சிரித்தபடியே
இன்னும் இருவர் வர அவர்களிடமும் இதேபோல் கூறி அவர் மீராவை அறிமுகம் செய்ய “இந்த தர்மசங்கடம் தர்மசங்கடம்ன்னு சொல்லுவாங்களே அது இதுதானாடி தங்கம்” என மீரா பாலாவிடம் கேட்க
“அப்கோர்ஸ். நானே இன்னைக்கு தான் இத நேர்ல பாக்குறேன். ஆனாலும் உங்கம்மா உன்ன இப்புடி ஊரு முன்னாடி வச்சு அனௌன்ஸ் பண்ணியிருக்க வேணாம்” என சிரிக்க
“கொலவெறி ஆக்காதடா. அந்த மனுஷனுக்கு சிரிக்கக்கூட தெரியல. அவனுக்கு நான் வேனுமா அதெல்லாம் முடியாது” என
“உன்ன இப்ப யாரு கேட்டா. அங்க பாரு ஒரு கூட்டமே வருது. இப்ப இங்க வந்து கேப்பாங்க அவர் என் மருமகன்னு அறிமுகப்படுத்துவாரு” எனவும் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் மீரா.

Advertisement