Advertisement

8

நிமிட  முட்கள் கூட 
சில நொடிகள் 
தயங்கலாம்.., 

என் நினைவுகள் சற்றும் 
தயங்காது., 

நொடி கூட நிற்காது 
உன் நினைவுகளை 
மட்டுமே சுவாசித்து 
சுற்றிக்கொண்டு வாழும்.., 

இதமான  தென்றலாய்  வாழ்க்கை அழகாக சென்றது., இருவருக்கும் இடையிலான புரிதல் நன்றாகவே இருந்தது.,  அவளது வேலைகளை அவள் வீட்டில் வைத்து பார்க்க.., அவன் எப்பொழுதும் போல அவன்  வேலைகளில் கவனம் வைத்துக் கொண்டிருந்தான்..,

அன்று சாருவுக்கு மனம் லேசான ஒரு படபடப்போடு இருந்து கொண்டிருந்து.,  என்னவென்று  சொல்லமுடியாத ஒரு மனநிலை..,  அதை எப்படி சொல்வது என்றும் அவளுக்கு புரியவில்லை.., எதனால் இப்படி இருக்கிறது, என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தாள்.,

அவள் வேலைகளை முடித்து விட்டு பிள்ளைகளோடு நேரத்தை செலவழித்து விட்டு., மித்திரனின் வரவுக்காக காத்திருந்தாள். எப்பொழுதும் போல 9 மணிக்கு மேலே வந்தவன் உணவு முடித்துக்கொண்டு தந்தையிடம் சற்று நேரம் சில விஷயங்கள் பேச வேண்டியது இருந்தது.,பேசிவிட்டு அறைக்கு வந்தான்.

சாரு முகம் சற்று வாட்டமாக இருப்பதை கண்டவன்., “சாரு  எதுவும் உடம்பு சரி இல்லையா” என்று கேட்டான்.

“என்ன செய்துனு  சொல்ல தெரியலை.,  மனசு ஒரு மாதிரி வித்தியாசமா., என்னமோ ஒரு மாதிரி படபடப்பா பீல் ஆகுது” என்று சொன்னாள்.,

அவளை தன் அருகே இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தலையை தடவிக் கொடுத்து அவள் மனதை சரி பண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்., பேசிப்பேசியே அவளை ஓரளவுக்கு சாதாரணமாக்க முயற்சி செய்ததற்கு ஒரளவுக்கு பலன் தெரிந்தது.,

ஓகே ஓகே என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். ஒரு மருத்துவனாக அவனுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.., தனியே இருக்கும் மனநிலையோ.., அல்லது அலுவலக வேலையின் காரணமாக ஏதோ ஒன்று அவளுக்கு மனது இப்படி இருக்கிறது என்று அவன் நினைத்துக்கொண்டான்.,

ஏதோ அவளின் மன உணர்வு  அவளுக்கு பின்வருபவற்றை சொல்வதாக அமைந்தது போல..,

அன்றைய தூக்கம் தொடங்கும் போதே அவன் மார்பில் தலை வைத்தபடி இருந்தவள்.,  அன்று அவனை சற்று இருக்கமாக அணைத்து பிடித்து இருந்தது போல அவன் உணர்ந்தான்.

அவள் தலையை தடவிக் கொடுத்து தூங்க வைத்தான்., மறுநாள் காலையிலும் எப்போதும் போல வேலைக்கு செல்லும் போது அவனும் சந்தோஷமாக கிளம்பினான்.

இவளுக்கு இரவில் இருந்த எந்த பயமும் இப்போது இல்லாமல் தான்.,  அவனை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தாள்.,

எப்போதும் போல அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு “வொர்க்க பாரு.,  நான் மத்தியானம் லன்ச் க்கு முடிஞ்சா., நான் சீக்கிரம் வந்திடறேன்”என்று சொல்லிவிட்டு போனான்..,

போனவன் மறுபடியும் திரும்பி வந்து “ரொம்ப எதையும் ஸ்ரையின்  பண்ணி ஒர்க் பண்ணாத.,  ரொம்ப ஸ்டரஸ் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுனா.., பேசாம இன்னைக்கு ஒரு நாளைக்கு ஃப்ரீ பண்ணிக்கோ.., நல்லா தூங்கி எந்திரிச்சிரு அப்புறம் ப்ரீ ஆகிருவ” என்று அவள் மனம் நலத்திற்காக சொல்லிவிட்டு சென்றான்.,

இன்னும் சில மணிநேரங்களில் இருவர் மனநிலையும் சுக்கல் சுக்கலாக உடைய போவது தெரியாமல்..

எப்போதும்  போல வேலையில் மும்முரமாக கவனத்தை செலுத்தி பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.,  மதிய நேரத்தை தொடுவதற்கு சற்று நேரமே இருக்கும் நேரத்தில் அவளது போன் அடித்தது.

யார் என்று பார்க்க மித்திரனின் நண்பர்களில் ஒருவர் அழைக்க.,  ‘இந்த அண்ணன் எதுக்கு இப்போ கூப்புடுறாங்க” அதுவும் என்னோட நம்பருக்கு என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்தாள்.

“சொல்லுங்க ண்ணா”., என்றாள்.

“சாரு ஆர் யூ ஓகே” என்றான்.

“எங்க கிட்ட எதுக்கு கேட்குறீங்க., நான் நல்லாத்தான் இருக்கேன் ண்ணா”.., என்றதோடு., என்ன ண்ணா.,  என்ன விஷயம்., ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க.., குரல் ஒரு மாதிரி இருக்கு”., என்று பதற்றத்தோடு கேட்டாள்.

“அது ஒன்றும்  இல்லம்மா..,  ஹாஸ்பிடல்ல ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு.,  இப்ப எல்லாரும் வீட்டுக்கு தான் வந்துவிட்டு இருக்கோம்., மித்ரன் வந்துட்டு இருக்கான்.,   நாங்க பின்னாடி வரோம்..,  அதனால தான் உன் கிட்ட சொல்றேன்.,  மித்ரன் ரொம்ப அப்செட்டா இருக்கான்.,  கொஞ்சம் பாத்துக்கம்மா.., பயங்கர அப்செட் என்ன நடந்தாலும் மித்ரன் மேல எந்த தப்பும் இல்லைமா.., அது புரிஞ்சுக்கோ.., அவனை எந்த சூழ்நிலையிலும் நீ தப்பா நினைக்க மாட்டியே”.., என்று கேட்டான்.

“ஐயோ அண்ணா.., இத நீங்க சொல்லனுமா., அவர் மேல எந்த தப்பும் இருக்காது.,  எனக்கு தெரியும்., என்ன பிரச்சனை ண்ணா”.,  என்று கேட்டாள்.,

“வீட்டுக்கு வந்து சொல்றேன் மா., தப்பா எடுத்துக்காத,  வந்துகிட்டே இருக்கேன்,  எதுவா இருந்தாலும் பார்த்துக்கோ”.,  என்றான்.,

ரொம்ப அப்செட் ஆகி வரும் அவனோட ஹெல்த் மற்றும் அவனோட மனநிலை தான் இப்ப முக்கியம் என்று சொல்ல அவளும்  பார்த்துக் கொள்வதாக சொன்னாள்.,

ஆனால் வீட்டிற்கு வந்து இறங்கிய  சூழ்நிலையை பார்த்தவள் சற்று தடுமாறித்தான் போனாள்., தலை எல்லாம் கலைந்து கண்ணெல்லாம் கலங்கி அவனைப் பார்த்த உடன்.., அவளுக்கு நேற்று இரவு தோன்றிய பயத்திற்கு காரணம் என்ன என்று விளங்கியது., இது போல ஏதோ நடக்கப்போவதை தான் நேற்றைய மனநிலை அப்படி இருந்ததா.., என்று தோன்றியது.,

எதைப்பற்றியும் கவனம் இல்லாமல் வந்தவன்.,  வாசலுக்கு நேராக இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான். கையில்  தலையை  சாய்ந்து குனிந்தவன் தான்.,  நிமிரவே இல்லை.., பின்னாடியே குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து சேர அங்கு பிரச்சினையை பேசத் தொடங்கினார்கள்..

ஏற்கனவே பேசினது தானே பேச்சை விடு.,  என்று மித்ரனின் அப்பா சொன்னார்.

அம்மா மீண்டும் மீண்டும் பேச மித்ரனின் அக்கா தான் சாரு வை தனியே அழைத்து சென்றார்., கூடவே மித்திரன் நண்பர்களின் மனைவியர் இருவரும் வந்து அங்கு நடந்த பிரச்சனையை விவரிக்கத் தொடங்கினார்…

மருத்துவமனையில் ஒருவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் மறுக்கப்பட்டதாகவும்.,  அதுவும் மித்ரன் அப்பாயின்மென்ட் கொடுக்க முடியாது என்று சொன்னதாக பேச்சு இருந்திருக்கிறது., அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்ததாகவும் மித்ரன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.., அதனால் இப்போதைக்கு பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டு வந்ததாகவும் அந்த நோயாளியின் உடன் வந்தவர் சொன்னதாக சொல்லி பிரச்சினை உருவாகி இருந்தது..,

அதை வைத்துக்கொண்டு தான் மித்ரனின் அம்மா இவனால் மருத்துவமனைக்கு கெட்டபெயர்.,  என்பதோடு மட்டுமல்லாமல் இப்பொழுது  அன்று மருத்துவம் பார்க்க வந்த நோயாளிக்கு தங்கள் மருத்துவமனை செலவிலேயே மருத்துவம் பார்த்து தருவதாக பேசி இருப்பதாகவும்.., அதற்கு மித்ரனிடம் ஆஸ்பத்திரியில் வைத்து ஊழியர்கள் முன்னிலையில் மித்ரனின் அம்மா அதிகமாக பேசி விட்டதாகவும் சொல்லி அங்கு நடந்ததை சொல்ல தொடங்கினார்கள்..

எப்பொழுதும் அப்பாயிண்ட்மெண்ட்  கொடுக்கும் நர்சுகள்.., “நாங்க அப்பாயிண்ட்மெண்ட் இல்ல னு இதுவரைக்கும் யாருக்கும் சொன்னதே கிடையாது”., சார் முடிஞ்ச அளவிற்கு டைம் பார்க்காமல் எல்லா கேஸ் ம் முடிச்சிட்டு தான் போவாங்க… பார்க்க முடியாது னு சொன்னதே கிடையாது”.,

“அதுமட்டுமின்றி கல்யாணத்துக்கு முன்னாடி பார்க்க வேண்டிய கேஸ் எல்லாம் பார்த்துவிட்டு தான் கல்யாணத்துக்கு லீவு போட்டாங்க”…,

“அப்புறம் பார்க்க வேண்டிய கேஸைக் கூட  பார்த்து கொடுத்துட்டு  தான் போனாங்க சார்.., யாரையுமே பார்க்க மாட்டேன் னு சார் சொல்லவே இல்ல”., என்றனர்.

“நீங்க உங்க இஷ்டத்துக்கு எல்லாம் சொல்லாதீங்க., என்று நர்ஸ் ஐ திட்டியதோடு.,   பொய் சொல்றாங்க”.,என்று சொன்னார் மித்ரன் அம்மா.,

மித்ரனின் அம்மா நோயாளிகளுக்கு சார்ந்து பேசுவதாகச் சொல்லிக் கொண்டு தன் மகனை அங்கு கேவலப் படுத்தினார்..,

மறுபடியும் நர்ஸ் டம்  “நீங்க பேசாதீங்க., நீங்க இங்க வேலை பார்க்கிறவங்க.,  இந்த ஹாஸ்பிடல்  ஓனர் என்கிற அறிவு கொஞ்சம் கூட அவனுக்கு இருந்திருந்தால்.,  அவன் அப்பாயிண்ட்மெண்ட் தர மாட்டேன்னு சொல்லி இருப்பானா., ஹாஸ்பிட்டல் பேர கெடுக்க நினைப்பானா.,  ஒரு உயிரைக் காப்பாற்றுற பொறுப்பில் இருக்கோம்  என்ற எண்ணம் இல்லாமல் பொண்டாட்டி கூட ஊர் சுத்துற.,  அதற்காக அப்பாயிண்ட்மெண்ட் இல்லன்னு சொல்லி இருக்க..,  அப்படித்தானே உன் பொண்டாட்டி கூட சுத்தனும்.., அப்படி தானே., உன் பொண்டாட்டி பின்னாடியே போகனும் னா வேலைய விட்டுட்டு போ”…  என்று சொல்லி வார்த்தைகளை சற்று அதிகமாக விட்டார்.

மித்ரன் ஓ “அம்மா தயவு செய்து தப்பா பேசாதீங்க..,  நான் அவளை எங்க கூட்டிட்டு.   போனேன்.., உங்களுக்கு என்ன தெரியும்.,  ஏன் இப்படி தப்பு தப்பா பேசுறீங்க..,  நான் எல்லாத்தையும் பாத்துட்டு தான் போனேன்.,  எந்த பேஷன்டையும்  நான் பார்க்க மாட்டேன் னு சொல்லல .., இதுவரைக்கும் யாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க மாட்டேன்னு சொல்லலை.., எனக்கு உடம்பு சரியில்லை னா  கூட.,  நான் பார்க்கிற கேஸை நான் தான் பாத்துட்டு இருக்கேன்,  தேவையில்லாம வார்த்தைகளை விடாதிங்கமா”., என்று சொன்னான்.

Advertisement