Advertisement

4

என்னவென்றே 
           தெரியாத 
           இவ்வுணர்வுக்கு
           பெயர் சூட்ட 
           முயற்சிக்கிறேன்.,
           உணர்வுகளின்
           பிரதிபலிப்பு உனக்கும்
           இருந்தால்
           நீயும் வா.,
           சேர்ந்து பெயர் 
            வைப்போம்.,

வெள்ளி கிழமை காலையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்.

“சாரு ஊருக்கு கொண்டு போக வேண்டிய பேக் எடுத்துக்கோ…  வொர்க் முடிஞ்சி அப்படி கிளம்பிறலாம்”… என்றாள்.

“ம்ம்ம்., எடுத்துக்கிட்டேன்… 3 மணிக்கு பெர்மிஷன் வாங்கிட்டு கிளம்பனும்., ம்ஹூம் எல்லாம் இந்த பையனால வந்தது. நான் தான் சொல்லுறேனே.., நெக்ஸ்ட் வீக் லீவு போட்டுட்டு வர்றேன் னு.., இவன் வர்ற வறத்து.., போய் இருக்கு அவனுக்கு”., என்றாள்.

பேசிய படியே வேலை முடித்துவிட்டு., பெர்மிஷன் வாங்கி கொண்டாள். சரியான நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று சொல்லும் போது நண்பர்கள் யாராவது சென்று ஏர்போர்ட்டில் விடுவதாக சொல்லி விட்டனர்.

திருமணத்திற்கு கிளம்பி சென்ற நண்பர்கள் சந்தோஷமாக பங்கேற்றதோடு பழைய நண்பர்களை சந்திந்த சந்தோஷ மனநிலையில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தில் சிறிய இயந்திர கோளாறு காரணமாக வேறு விமானம் ஏற்பாடு செய்ய பட்டது. இவர்கள் செல்ல கூடிய விமானம் நேராக சென்னை செல்ல கூடியது. ஆனால் ஏற்பாடு செய்ய பட்ட விமானமோ., பெங்களூர் சென்று பின்பு அங்கிருந்து சென்னை செல்லும் என்ற அறிவிப்பில் அனைவருக்கும் எரிச்சல் தான் வந்தது..,
2மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இப்போது 3.30 ஆக மாற்றம் செய்ய பட்டிருந்தது.

சற்று நேரம் நண்பர்கள் பழைய விஷயங்களை பேச., சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தான். பின்பு தயங்கிய படி யோசனையோடு மற்ற நண்பர்கள் ஏதோ தொடங்கப்போக அங்கிருந்த புக் ஸாப்பை  பார்த்தவன்… அவர்கள் பேசத் தொடங்கும் முன் “புக்  வாங்க போறேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

“டேய் இவன் என்னடா.., நாம ஏதோ பேசப்போறோம் னு தெரிஞ்சே நகர்ந்து போறான்., எப்படி டா பேச” என்றான் ஒருவன்.

“கண்டிப்பா பேசுறோம் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் கவலைப்படாத”., என்றான் மற்றொருவன்.

இன்னொரு நண்பனோ., கடையில் நின்றிருந்த மித்ரனையே பார்த்த படி இருந்தான்.

அவர்கள் செல்ல வேண்டிய விமானத்திற்க்கான அறிவிப்பு வரவும், அங்கிருந்து நகர்ந்தனர். மித்ரன் முன்னே செல்ல மூவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்து கொண்டனர்.

விமானம் தரையிலிருந்து வான் நோக்கி பறக்கத் தொடங்கியவுடன் அமைதியாக தன் கையில் இருந்த புத்தகத்தை பிரித்து படிக்க தொடங்கியிருந்தான் மித்ரன்.,  மூவர் அமரும் வசதியுள்ள இருக்கை கொண்ட விமானம் எனவே ஒருபுறம் நண்பர்கள் மூவரும் அமர இவன் தனியே அமர்ந்துகொண்டான்.,

மற்றவர்களோடு சேர்ந்து அமர்வதற்கு அமர சொல்லும் போது., “இல்ல எனக்கு கொஞ்சம் வாசிக்க வேண்டியது இருக்கு” என்று சொல்லிவிட்டு தனியே சென்று அமர்ந்துகொண்டான்.,

நண்பர்களுக்கு புரிய தான் செய்தது அவன் எப்பொழுதும் போல விலகியிருக்க தொடங்கி இருக்கிறான் என்று., அவர்களும் கண்டு கொள்ளாமல் அமைதியாக வந்தனர்.,  எப்படி இவனிடம் பேச்சை தொடங்குவது என்று நினைத்தபடி அமர்ந்திருந்தனர்.

அவர்கள் மூவரும்., “டேய் இவன் காலேஜ் ல எக்ஸாம் க்கு கூட இப்படி படிச்சது இல்லையே டா” என்றனர்.

“நீ வேற., அவன் பி.ஜி பண்ணும் போதே ரொம்ப அசால்ட்டா இருப்பான்., அப்பவே படிக்க மாட்டான்., இப்ப அது கதை புக் ம் இல்ல., நம்ம ட்ட இருந்து தப்பிக்க ஏதோ ஒரு புக்கை வாங்கி வச்சிட்டு உட்கார்ந்து இருக்கான்”. என்றான் நண்பன் அவனை அறிந்தவனாக…,

“டேய், பெங்களூர் ல எப்படியும் பிப்டின் மினிட்ஸ் டைம் கிடைக்கும்., அந்த சமயத்தில் முடிந்தால் இவனிடம் பேசிவிடலாம்”., என்று நண்பர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்…

புத்தகத்தை விரித்து வைத்தவனுக்கு புரிந்து இருக்கத் தான் செய்தது., நண்பர்கள் ஏதோ பேச துடிக்கிறார்கள் என்று.., ஏற்கனவே காலை கல்யாணத்திற்கு வந்ததிலிருந்தே மூவரும் பேசுவது புரிய தான் செய்தது.,  இலை மறை காயாக பேசினாலும் அவர்களும் இவன் கல்யாணத்தை பற்றி பேச முனைகிறார்கள் என்பதை புரிந்து கொண்டவன்., முடிந்தளவு அவர்களிடம் பேச்சை தவிர்க்க பார்த்தான். அது மட்டுமல்லாமல் புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் அவன் மனம் முழுவதும் மானசீகமாக தன்னுடைய செல்லில் மறைத்து வைத்திருந்த போட்டோவுக்கு சொந்தக்காரிடம் பேசிக்கொண்டிருந்தது.,  ‘ஏன் உனக்கு மெடிகல் பீல்டு பிடிக்காம போச்சு’., என்று மனதிற்க்குள் நினைத்தவன்., ‘உனக்கு படிக்க பிடிக்கவில்லை என்றாலும்., ஏன் உன் குடும்பத்தினரை போல என்னையும் ஏற்றுக் கொள்ள முடியாதா’., என்று மனதிற்குள் தனியாக புலம்பிக் கொண்டான்.

‘என்ன தான் இருந்தாலும் வேறு வீட்டு பெண்., யாரும் எதுவும் தவறாக நினைத்து விடக்கூடாது..,  போட்டோ தன்னிடம் இருப்பது தெரிந்தால் யாரும் தவறாக எண்ணி விடுவார்களோ’., என்று போட்டோவை போனை லாக் செய்து வைத்திருந்தான்., யார் கையிலும் கொடுக்காமல் பாதுகாத்துக் கொண்டு இருந்தான்., ‘எப்படியும் ஒருநாள் அந்த போட்டோவை டெலிட் செய்து தானே ஆக வேண்டும்., கல்யாணம் வேண்டாம் என்று தட்டிக் கழித்து விடலாம்., ஏதாவது காரணம் சொல்லி கொள்ளலாம்., ஆனால் எத்தனை நாள் அந்த போட்டோவை வைத்துக்கொள்ள முடியும்’., என்பதை மனதிற்குள் நினைத்து குழம்பிக் கொண்டான்., ‘தவிக்கும் அவன்  உணர்வுகள் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தான். வெளியில் தன்னை ரோபோ போல காட்டிக் கொண்டாலும் மனம் இன்னும் உணர்வுகளை இழந்து ரோபோவின் நிலைக்கு செல்லவில்லை’ என்பதை நினைத்துக் கொண்டே வந்தான்.

புத்தகத்தின் பக்கம் புரட்டப்பட்டாலும் மனம் தடம்புரண்டது பற்றி யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டான்.

பெங்களூரில் ஃபிளைட் நிற்கவும் அதில் இறங்குபவர்களை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த முதிய தம்பதியினர் இறங்கி செல்ல ஓரமாக இருந்தவன் எழுந்து வழி கொடுத்தான்., பின்பு அதே இடத்தில் அமர்ந்து கொள்ள., அவன் அருகில் இருந்த இரண்டு இருக்கைகளும் காலியாகத்தான் இருந்தது.,

அவன் நண்பர்களில் ஒருவன் கூட்டம் குறைவதைக் கண்ட பிறகு அங்கு நின்று கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ் நகர்ந்து செல்லவும்.,  மெதுவாக மித்ரன் இடம் பேசத்தொடங்கினான்.

“மித்ரா தப்பா எடுத்துக்காத., அப்பா கேட்க சொல்லி தான் கேட்கிறோம்., நீதான் முடிவு சொல்லணும்”., என்று கேட்டான்.

“நான் என்ன சொல்லணும் னு., நீங்க எதிர்பார்க்கிறீங்க.,  கொஞ்சம் ப்ரீயா விடுங்கன்னு சொல்றேன்ல”., என்றான்.

“ஏன்டா ப்ரீயா வுடு ப்ரீயா வுடு சொல்லுறீயே., அப்பாவும் பாவம் டா., உன்னை நினைச்சி தான் வருத்தம்.,  உனக்கு ஏஜ் 31 ஆயிடுச்சு., அதை யோசிச்சு பாரு.,  வயசு போகுதுன்னு ஒரு பெத்தவங்களா அவங்க யோசிப்பாங்க இல்ல., உன் கூட  சேர்ந்த எங்க பிள்ளைங்க  ஸ்கூல் போக  போகுது., அடுத்த வருஷம் ஸ்கூல் சேர்க்கனும்., நீ  இப்படியே இருந்தா எல்லாரும் அதை நினைச்சு பீல் பண்ணுவாங்க டா., புரிஞ்சிக்க”., என்றார்.

“என்னைய  விடுங்க டா., தயவுசெய்து எதுவும் பேசாதீங்க”., என்றவன் கையை மடியில் ஊன்றி அதில் தலையை கவிழ்த்துக் கொண்டபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.

அதே நேரம் சென்னை செல்ல வேண்டிய விமான பயணிகள் அந்த விமானத்தில் ஏற துவங்கினர். அதே விமானத்தில் தான் சாருவும் ஏறினாள்., ஏறியவள் அவள் இருக்கையில் அமர சென்றாள்.

அவள் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த வயதான முதியவரின் மகன்  அவரும்  அங்கு தான் இருந்தார்., “எனக்கு வேற சீட் மா., நீ அங்க உட்கார்ந்துக்கிறீயா.,  எங்க அம்மாக்கு இது ப்ர்ஸ்ட் டிராவல் மா”.,   என்று கேட்டார்.,

அவளும் சரியென்று சொல்ல..,  அவளுக்கான இடத்தை சொல்ல தன் பேக்கோடு செல்ல திரும்பினாள். அதே நேரம் அவள் தம்பியிடம் இருந்து போன் வர எடுத்து காதில் வைத்தவள்.,  அவன் பேச்சை கவனித்துக் கொண்டும்.,   அவனிடம் பேசிக்கொண்டும்., தனக்கான இடத்திற்கு சென்றாள்.,

தம்பியோ “ஏறிட்டேயா சாரு”.,  என்று கேட்டான்.,

“டேய் நீ இன்னைக்கு ஓவரா பண்ற மாதிரி இருக்கு., உன் அக்கறையெல்லாம் மூட்டைக்கட்டி தூர போடு.., நான் வர்றது சரி அங்க வந்து யாராவது., ஏதாவது கோல்மால் பேச்சு எடுத்தாங்க., உங்க மூணு பேரையும் உங்க ஹாஸ்பிடலிலே அட்மிட் பண்ணிட்டு தான் திரும்பி வருவேன் ஞாபகம் வச்சுக்கோ”., என்றாள்.

அதற்கு அவன் “என்ன சாரு நீ., ப்ளீஸ் எதுவும் இல்ல.,  சொல்றேன்ல எங்களை பார்க்க தான் உன்ன வர சொன்னதே  வேற எதுக்கும் இல்லை”.., என்று அவன் சொன்னான்.,

“டேய்., உன் பேச்ச நம்பி தான் வாறேன், ஏதாவது மறுபடி பேசினீங்க., இல்ல மாற்றி பேசினீங்க., நடக்கிறதே வேற.,  கல்யாணப் பேச்சு எடுத்தாங்க., 3 பேர் மண்டைய ஓடச்சி போட்டுட்டு வந்துருவேன் பார்த்துக்கோ”., என்று மெதுவாகப் பேசினாலும் சற்று அழுத்தமாகவே பேசிக்கொண்டிருந்தாள்.,

அவள் பேசிக்கொண்டே மெதுவாக வர அந்த நேரத்தில் நண்பர்கள் மூவரில் ஒருவன் அவளை பார்த்து விட., அவசரமாக மற்றும் நண்பர்களிடம் காட்ட அவர்களோ.,  “இது அந்த பொண்ணு தானே” என்று ரகசியம் பேசினர்.

Advertisement