Advertisement

3

நிலவில் நீல் கால் தடம்
           பதித்தது போல..,
          ஏனடா இதயத்தில்
           விழித்தடம்
          பதித்தாய்…, 

அலுவலக புட்கோட் ல்  சித்தோடு அமர்ந்து இருந்தவளுக்கு., சித்து தான் “ஜூஸ் குடி சாரு.., ஜூசை பார்த்துட்டே இருந்தா ஜூஸ் வாய்க்குள் போகாது., நீ தான் எடுத்து குடிக்கனும்”..,   என்று சொல்லி திட்டிக் கொண்டிருந்தாள்.

சாரு எப்போதும் போல் சாதாரணமாக இருந்தாலும்., அவள் மனம் திடீர் திடீரென குழம்பிக் கொண்டே தான் இருந்தது.., ஏனோ அவள் பார்த்த மித்ரனின் போட்டோவில் அவன் முகம் மட்டும் அவளுக்கு மறக்க முடியாமல் இருந்தது.,  போட்டோவை டெலிட் செய்யாமல் தனி ஃபைலில் போட்டு வைத்திருந்தாள். யாரும் பார்க்க முடியாத அளவிற்கு., அது யாருக்கும் தெரியாது இருந்தாலும்., அவள் அதை எடுத்து பார்க்காவிட்டாலும்.,  அவளுடைய மனம் படும்பாடு அவளுக்கு புரிந்தது.., ‘ஏன் தன் மனம் சிறுபிள்ளை போல.,  அதுவும் டீனேஜ் பிள்ளை மனம் போல தவிப்பதை பார்க்கும் போது.,  ஒருபுறம் அவள் மேலேயே அவளுக்கு எரிச்சலாக வந்தது., இந்த மனம் என்ன இப்படி குரங்கு தனம் செய்கிறது.,  எத்தனையோ பேரை கடந்து வந்திருக்கிறோம்., நன்றாக இருக்கிறார் என்று சைட் அடிப்பதும் உண்டு., அப்படி இருக்கும் போது இந்த முகம் மட்டும் மறப்பது அவ்வளவு கடினமா என்ன’..,  என்று எண்ணிக்கொண்டாள்.,

வீட்டில் யாரிடமும் போட்டோ கொடுக்கக்கூடாது என்று சொன்னதால்..,  ஒவ்வொரு முறையும் அம்மா போன் செய்யும் போதும் சரி.,  தம்பி போன் செய்யும் போதும் சரி., ஏதாவது அலையன்ஸ் என்று சொன்னாலே, “தயவுசெய்து பேசாதீங்க..,  இப்பதிக்கு எனக்கு எதுவும் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்”., என்று சொன்னாள்.

ஒரு முறை சாருவின் அம்மா  சித்துவிற்கு போன் செய்தார்., அப்போது சித்துவிடம் “ஏன்மா  சாரு  இப்படி பேசுறா.,  நார்மலா அந்த அளவுக்கு அதிகமா யோசிக்க மாட்டா.,  காலையில போட்டோ அனுப்பி இருக்கோம்.,  மத்தியானம் தான் இத்தனைக்கும் பார்த்தா.,  பாத்துட்டு நைட்டுதான் உடனே இல்லன்னு சொல்லியாச்சு., அதுக்குள்ளயா இவளுக்கு மனசுல பதிஞ்சி போச்சு”., என்று கேட்டார்..,

“இல்லம்மா.., நீங்க தப்பா எடுத்துக்காதீங்க., அவளுக்கு பார்த்த உடனே என்னமோ பிடிச்சிருச்சு.., ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணா..,  நீங்க எல்லாம் விசாரிச்சி  தான் போட்டோ அனுப்பி இருப்பீங்க நினைச்சிட்டா.., நான் கேட்டதுக்கு கூட எல்லாம் வீட்ல பார்த்து இருப்பாங்க.., பேசிட்டு தான் அனுப்பி இருப்பாங்க என்று சொல்லிட்டா., அந்த பீல் கூட அவளுக்கு ஒரு மாதிரி இருந்திருக்கலாம்., சரியாகிருவா ம்மா..,  யோசிக்காதீங்க ம்மா., எனக்கு தெரிஞ்சி சீக்கிரம் நார்மலுக்கு வந்து விடுவா னு  நம்புறேன்.., நீங்க கண்டுக்காதீங்க விடுங்க..,  இப்போதைக்கு எதுவும் அவ சம்மதம் இல்லாமல் பார்க்காதீங்க”.., என்று சொன்னாள்.

சாருவின் அம்மாவும் “எங்களுக்கும் ரொம்ப புடிச்சிருக்கும்மா.,  அவங்க வீட்டிலேயே ரொம்ப பிடிச்சிருச்சு., கடைசில இப்படி டிடெயில்ஸ் தெரிஞ்ச உடனே நாங்க இவளை நினைச்சி யோசிச்சோம்., இவளுக்கு மெடிக்கல் பீல்டு வேண்டாம் னு சொன்னாளே னு தான்…,  அவங்களும் யோசிச்சாங்க., அவங்க  ஃபேமிலி ல எல்லாருமே டாக்டர் தான்.., அவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஹாஸ்பிடல் வச்சுருக்காங்க., எல்லோரும் ஒற்றுமை.,  அது தான் வீட்டுக்கு வர மருமகளும் டாக்டரா இருந்தா தான் நல்லா இருக்கும் னு எதிர்பார்க்கிறாங்க.., அப்படி இருக்கும் போது நம்ம அதையும் யோசிக்கணும் இல்ல”.,  என்று சொல்லியிருந்தார்.

இதனை பேச்சுவாக்கில் சாதாரணமாக சித்து சாருவிடம் சொல்லி இருந்ததால்.,  சாருவும்  “அதைப் பத்தி பேசாத விடு” என்று சொல்லி விட்டாள். ஆனால் மனம் மட்டும் மறக்க கடினப்பட்டு போயிருப்பதை அவளும் உணர்ந்தால் சரி எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணிக்கொண்டாள்….

அன்று அலுவலகத்தில் சாரு  மேஜையில் கை ஊன்றி தலையைக் கையால்  தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.,

” இங்க பாரு., ரொம்ப யோசிக்காத சாரு.,  எதை எதையோ போட்டு குழப்புறயோ னு.,  எனக்கு தோணுது.., லவ் பண்ணிட்டு ஊர் சுத்திட்டு., வருஷக்கணக்கா லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்குறவங்களே.,  கடைசி நேரத்தில் வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆகுறாங்க.,  அப்படி இருக்கும் போது நீ ஏன் பார்த்தவுடனே பிடிச்சிருச்சு.,  முகம் மறக்க மாட்டேங்குது னு நீயா யோசிக்கிற.., எல்லாம் மறந்திடும்,  கொஞ்சம் ஜாலியா  சுத்தி பாரு., சைட் அடிக்கிற மாதிரி எத்தனை பேர் நம்ம ஆபீஸ்ல  இருக்கிறார்கள்.,  என்று சொன்னாள்.

“பேசாம இருடி., நான் ஒன்னும் அத பத்தி எல்லாம் யோசிக்கலை., இத பத்தி பேசாம இரு.., எனக்கு மெடிக்கல் பீல்டு பிடிக்காது., அவங்க வீட்டுக்கு மெடிகல் பீல்டு ல உள்ள பொண்ணு தான் வேணும் அப்படி ங்கும் போது.., வாய மூடிட்டு இருப்பது நல்லது நினைக்கிறேன்., சத்தம் காட்டாமல் இரு”., என்று சொல்லி அமைதியாகிவிட்டாள்..

அதன் பிறகு சித்து சொன்னதை நினைத்து கொண்டே அலுவலகத்தில் தன்னோடு வேலை பார்ப்பவர்களை பார்க்கும் போதெல்லாம் அவனின் முகம் கண் முன் வந்து செல்வது போல தோன்றியது.  ‘அட ச்சே… யாரையும் திரும்பி கூட பாக்க முடியல.,  போட்டோ ல பார்த்த மூஞ்சி  முன்னாடி வருது’ என்று மனதிற்குள் சொல்லி விட்டு கடவுளை நினைத்து புலம்பத் தொடங்கி இருந்தாள்., ‘அவனவன் லவ் பண்ணிட்டு சுத்திட்டு., வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா சுத்துறான்.,  நான் போட்டோ பார்த்ததுக்கா.,  கடவுளே எனக்கு இப்படி ஒரு சோதனை’  என்று  மனதிற்குள் புலம்பிக்கொண்டு ‘இது உனக்கு தேவையா., இனிமேல் யார் போட்டோவையாவது  பார்ப்பையா.,  யாரையாவது பார்த்து நல்லா இருக்கான்னு சொல்லுவியா’..,  என்று அவளை அவளே திட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்…

அன்று அதிகமான வேலை இல்லாததால் மாலை சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்பு பால்கனியில் அமர்ந்து சித்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது சாருவின் தம்பி சாருவிற்கு அலைபேசியில் அழைத்தான்.,

“சொல்லுடா என்ன திடீர்னு கூப்பிட்டுருக்க.,  இந்த நேரத்துல” என்று கேட்டாள்.

“ஏன் சாரு., நான் கூப்பிட கூடாதா” என்று அவன் கேட்டான்.

“ஆமாடா பாசம் பொங்கி வழியுது திடீர்னு., என்ன விஷயம்”., என்று கேட்டாள்.

“சாரு ஒன்னு சொன்னா கோபப்பட மாட்ட இல்ல”., என்றான்.

“கல்யாணத்தை பத்தி பேசாம இருந்தாலே கோபப்பட மாட்டேன்., மத்த எந்த விஷயமானாலும் சொல்லு”., என்றாள்.

“கல்யாணத்தை பத்தி இல்லை”., என்று அவன் மென்று முழுங்கும் போதே ‘இவன் ஏதோ கல்யாணத்தைப் பற்றி பேச தான்.,  அவன் அழைத்து இருக்கிறான்’ என்ற எண்ணத்தோடு.,

“இங்க பாரு இப்பவும் சொல்றேன்., கல்யாணம் அப்படின்னு ஒரு விஷயம் நீ என்கிட்ட பேசாம இருந்தா..,  நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம்., இல்ல னா  திட்டுவதற்கு முன்னாடி., நீ போன வச்சுட்டு அதுதான் நல்லது”.,  என்று சொன்னாள்.,

“ஐயோ அதெல்லாம் இல்ல., நான் கொஞ்சம் யோசிச்சு பேசினா உடனே கல்யாணத்துக்கு பேச தான் கூப்பிட்டேனா னு  கேட்காத., அப்படி எல்லாம் இல்ல.,  இப்ப வேற ஒரு விஷயமா தான்., என்றான்.

“அப்படி  என்னடா விஷயம்”..,என்றாள்.

“ஆமா நீ வீட்டுக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு., வீட்டு பக்கம் எட்டிக்கூட பார்க்கலை.,  அட்லீஸ்ட் மாசத்து ஒரு தடவையாவது  வந்து எட்டிப் பார்த்துட்டு போவ., இந்த தடவை என்ன ஆச்சு.., ரெண்டு மாசம் ஆச்சு., நீ வந்து எட்டி கூட பார்க்கவில்லை., அப்பாக்கு எப்பவுமே நீ எப்ப வருவ.., எப்ப போறேன்னு தெரியாது., னு சொல்லுவாரு., என்றான்.

“லீவு போட்டு வந்தா  மட்டும்”… என்றாள்.

“உடனே என்னை யாரும்  கவனிக்க மாட்டீங்க னு சொல்லாத., அப்பா இந்த தடவை 10 தடவை கேட்டாச்சு.., ஏன் சாரு வரல., னு  கேட்டார் தெரியுமா”..,என்றான்.

“போடா போடா.., நீயும் உங்க அப்பா.,  அம்மா மூன்றுபேரும் தேடி இருக்கீங்களா., இதை நம்ப சொல்றியா.,  காதுல பூ சுத்தாத டா”.,  என்று சொல்லி அவனோடு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள்…

“நெஜம்மா சாரு., ப்ளீஸ் வந்துட்டு போயேன்.., இப்ப  ஒருதடவ வந்துட்டு போயேன்”., என்று  அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

Advertisement