Advertisement

2

யாருக்கும் புரியாத
        உணர்வுகளை
        பரிசளிக்கிறாய்

        நிழல் படமாக 
         நீ  இருந்தாலும்
        முற்றிலும் மாறுகிறது
        என் மனநிலை

        இடி மின்னலாக
         இதயத்துடிப்பு மாறிவிட
        பூஞ்சாரலாய் உன்
        நிழற்பட  நினைவுகளை
        வருடிச் செல்கிறது… 

காலையில் எப்போதும் போல வேலைக்கு கிளம்பினாலும்., அன்று ஏனோ சாருவின் மனம் மகிழ்ச்சியாய் இருப்பது போல உணர்ந்தாள்.

ஏதேனும் கனவு கண்டதின்  காரணமாக மகிழ்ச்சி தோன்றுகிறதா,  என்று யோசித்து பார்த்தவளுக்கு அன்று இரவில் அவளுக்கு விழிப்பு வரவே இல்லை என்பதை நினைத்துக் கொண்டாள்.

இரவு அவளது அலுவலக வேலையை முடித்துவிட்டு படுக்கவே நேரம் ஆனதால்., காலையில் எப்பொழுதும் எழும் நேரத்திற்கு எழுந்தாலும் சிறிதுகூட சலனமில்லாத நல்ல உறக்கம் உறங்கி எழுந்ததாக தோன்றியது. ஒரு வேளை நல்ல உறக்கம் கூட மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும் போல என்று எண்ணிக்கொண்டாள்.

காலை உணவை எடுத்துக்கொண்டு சித்தோடு ஹாலில் வந்து அமர்ந்தவள்., உண்ணத் தொடங்கும் போது தான் சித்து கேட்டாள் “இன்னைக்கு முகத்தில் ஏதோ பளிச்சுனு ஒரு வெளிச்சம் தெரியுது., எக்ஸ்ட்ரா ஹன்ரட்   வாட்ஸ் கூடின மாதிரி தெரியுதே முகம்”., என்று கேட்டாள்.

இவளும் சிரித்துக்கொண்டே “புது பல்பு மாத்தி இருக்கேன்., அதனால முகம் பிரைட்டா தெரியுது”., என்று  சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் இருவரும் உண்ணும் போது எப்பொழுதும் போல டிவியில் பாடல்கள் ஒளிபரப்பும் சேனலை வைத்து விட்டு அமர்ந்திருக்க  நல்ல பாடல்களை கண்டு மனதை அதில் திருப்பிக் கொண்டாள்.., சாரு.

அலுவலகம் செல்லும் பாதையில் இருவரும் அலுவலகத்தில் உள்ள இன்றைய வேலையை பற்றி பேசிக்கொண்டே சென்றனர்.

“நேத்து தந்த ஓர்க் முடிச்சியா., இல்ல காலைல கூப்பிடு வாங்கு வாங்குன்னு வாங்க போறாரு., அந்த ஹெட்”.,  என்றாள்.

“அதெல்லாம் நைட்டே முடிச்சு செட்டில் பண்ணி, அவருக்கு மெயில் பண்ணிட்டு தான் படுத்தேன்., இல்லாட்டி அந்த மனுஷன் ட்ட யாரு காலங்காத்தால போய் திட்டு வாங்குறது., நல்ல மூட் ஸ்பாயில் பண்ணிருவாரு”.,  என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளுக்கு மனதில் தோன்றியது.., ‘ஒரு வேளை இரவே அந்த வேலையை நல்லபடியாக முடித்ததன் காரணமாக கூட மனம் மகிழ்ச்சியை தத்தெடுத்திருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டாள்.

அலுவலகத்தில் வந்து வேலைப் பளு கூடினாலும்., ஏனோ அந்த மனநிலை மட்டும் தவறவில்லை, அப்போதுதான் காலை நேர தேநீர் இடைவெளியில் அலுவலக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கேன்டீனில் அமர்ந்திருக்கும் போது.,  அவள் தம்பியிடம் இருந்து போன் வந்தது.

“இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா உனக்கு போட்டோ அனுப்பி வைப்பாங்க.,  பார்த்துட்டு ஒரு நல்ல பதில் சொல்லு”.., என்று சொன்னான்.

“சரி சரி”.,  என்று சொல்ல அவன் தான் கல்லூரியில் இருப்பதாக சொல்லி அலைபேசியை வைத்துவிட்டான்.

நண்பர்களுக்கு ஒரே கேலி கிண்டலோடு அவர்களுக்குறிய அந்த நேரம் நன்றாக சென்றது.,  அவர்களது டீமில் உள்ள அவர்களின் சீனியர்., அவன் மனைவி இருவரும் இவர்களுக்கு நல்ல தோழமை.., எனவே இவர்கள் நான்கு பேரும் தான் எப்போதும் ஒன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்லாமல் சித்துவுக்கு பள்ளிக்கால தோழன் ஒருவன் அதே அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் அவனும் அவர்களோடு சேர்ந்து கொள்வான்., மற்றபடி நான்குபேர் சுற்றுவார்கள் என்றால் அவனும் வந்து சேர்ந்து கொண்டால் 5 பேராக சுற்றிக் கொண்டிருப்பார்கள்…

தேனீர் இடைவேளை முடிந்து அவரவர் இடத்தில் வந்து அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க., உணவுக்கு செல்லும் நேரம் நெருங்கவும் சித்து தான் வந்து அழைத்தாள்.  “வா போய் சாப்பிட போவோம்” என்றாள்.

“ஹான் போலாம்.,  வர்றேன்”., என்றவள்., உணவு பையை எடுத்துக்கொண்டு அவர்கள் சாப்பிடும் இடம் நோக்கி செல்ல..,  அவளுடைய தம்பியும் போன் செய்தான்.

“போட்டோ பாத்தியா அக்கா”.,  என்று அவன் கேட்ட பிறகு தான் அவன் அழைத்து சொன்னது ஞாபகம் வந்தது.

“இல்லடா., கொஞ்சம் ஒர்க் டென்ஷன் ல மறந்துட்டேன்.,  மெஸேஜ் எல்லாம் பாக்கவே இல்ல., ஜஸ்ட் இப்ப சாப்பிட போயிட்டு இருக்கேன்., அங்க போய் உட்கார்ந்த உடனே  பார்த்துட்டு உனக்கு போன் பண்றேன்”..,  என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

உணவு உண்ணும் இடத்தில் போய் அமர்ந்தவுடன் மெஸேஜ் எடுத்து பார்த்தவளுக்கு டவுன்லோட் ஆகும் நேரம் கூட படபடப்பை அள்ளி பரிசளித்தது..,  போட்டோவை பார்த்த உடன் சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள். போட்டோ மட்டுமே அனுப்பியிருந்தார்கள் மற்றபடி எந்த குறிப்பும் இல்லை. பெயர் மட்டும் மித்ரன் என்று இருந்தது. சற்று நேரம் வாய்க்குள் மித்ரன் என்பதை சொல்லிப் பார்த்துக் கொண்டவளுக்கு.., ஏனோ செல்போனில் இருந்த போட்டோவில் இருந்து கண்ணை எடுக்க மனம் வரவில்லை..

சித்து தான் அவள் தம்பி போனில் அழைப்பதை கவனித்திருந்ததால்., “என்னடி போட்டோ பாத்துட்டியா.., ஓகே வா”., என்று கேட்க.., சிரித்தபடி ம்ம்ம்.. என்றவள் சற்று நேரம் போட்டோவே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சித்து தான் போனை புடுங்கி பார்த்து விட்டு “நல்லா தான் இருக்காங்க..,  உனக்கு ஓகே னா ஓகே சொல்லிடு”., என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

இவளும் “புடிச்சிருக்கு.,  குறை சொல்ற மாதிரி எந்த காரணமும் எனக்கு தெரியல..,  மத்தபடி எந்த டீடெயில்ஸ் ம் அனுப்பலையே”., என்று கேட்டாள்.

“அதெல்லாம் பார்க்காமலா  அனுப்பி இருப்பாங்க.,  நீ எதுக்கு அதெல்லாம் யோசிக்கிற”.., என்று சொன்னாள்.

“அதுவும் சரிதான்” என்று சொல்லிக் கொண்டாள். உணவு உண்ணும் போது கூட போட்டோவை அவ்வப்போது பார்த்தாள்.

சித்து தான் “என்னடி ஆச்சு” என்று கேட்டாள்.

வாய்க்குள் மெதுவாக., மற்றவர்களுக்கு சத்தம் கேட்காத அளவிற்கு சித்துவிற்கு மட்டும் கேட்கும் அளவிற்கு பாட்டு பாடினாள்., “அய்யய்யோ அய்யய்யோ.,  புடிச்சிருக்கு எனக்கும் இவரை பிடிச்சிருக்கு”  என்றாள்.

சித்து “ஓகே ஓகே போட்டோவை பார்த்த உடனே கலண்டு  போச்சா உனக்கு” என்று கேட்டாள்.

அவளும் சிரித்துக்கொண்டே “தவிர்க்க  எந்த காரணமும் இல்லை.,  நீ சொன்ன மாதிரி அவங்க எல்லாம் பார்த்து விசாரிச்சுட்டு தான் போட்டோ அனுப்பி இருப்பாங்க.., எனக்கு ஓகே.,  டபுள் ஓகே”..,  என்று சிரித்தாள்.

“பார்த்த முதல் மாப்பிள்ளைக்கே., ஓகே சொல்லிட்ட., நீ இன்னும் வேற யாரையும்  பார்க்கணும் னு தோணலையா., இவர் ட்ட  ஏதோ ஒரு குறை இருக்கலாம் ன்னு யோசித்து பாக்கணும் அப்படின்னு எதுவும் தோன்றவில்லையே”.., என்று கேட்டாள்.

“அப்படி எதுவும் தோணல” என்று சொன்னவள். “கட்டுனா இவர தாண்டி கட்டிக்கணும்”., என்று சொன்னாள்.

“ஓகே., அப்ப நீ சொன்ன டபுள் ஓகே., இப்ப  ட்ரிபிள் ஓகே ஆயிட்டு  என்று அர்த்தம்” என்று சொன்னாள்.

அவளும் சிரித்தபடி ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தாள்.  பின்பு சற்று நேரத்தில் அவள் தம்பி அழைக்க “எனக்கு ஓகே” என்று எடுத்தவுடன் சொல்லிவிட்டாள்.

மற்ற எந்த விஷயமும் விசாரிக்காமல் அவனுக்கும் நம்பவே முடியவில்லை., இவள் ஏதாவது கழிப்பாள் என்று யோசித்துக் கொண்டிருக்க., அவனோ “நீ மத்த டீடைல்ஸ் எல்லாம் கேட்கலையே” என்றான்.

” டீடைல்ஸ் தான் நீங்க விசாரிச்சுப்பீங்க இல்ல டா.., எனக்கு ஓகே பிடிச்சிருக்கு”.,  என்று ஒரே வார்த்தையில் முடித்தவுடன் அவள் தம்பிக்கும் சந்தோஷமாக இருந்தது.

வீட்டில் உள்ளவர்களுக்கும் குறிப்புகள் ஏதும் கிடைக்காததால் சரி புடிச்சிருக்குன்னு சொல்லுங்க., அதுக்கப்புறம் மத்ததை பேசிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.,

காலையில் மருத்துவமனைக்கு மித்ரன் கிளம்பும் போதே., அவன் தந்தை அவனிடம் “பொண்ணு போட்டோ வந்த உடனே அனுப்பி வைக்கிறேன்., பாத்துட்டு சொல்லு” என்று சொன்னார்.

“சரிப்பா” என்று சொன்னபடி மருத்துவமனைக்கு கிளம்பினான்.  எப்பொழுதும் காரில் போகும்போது ஏதாவது மியூசிக் வருவது போல சிடியை ஒட விடுவது அவன் வழக்கம்., இன்று ஏனோ எதுவும் தோன்றாமல் பழைய பாடல்களை ஒலிக்கவிட்டு கொண்டே சென்றான் அப்போதுதான்…

அவன் கேட்ட பாடல் வரிகள் மனதை தொட்டது… எப்போதும் பாடலில் கவனம் செலுத்தாதவனுக்கு இப் பாடல் வரிகள் மனதை தொட்டது….

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி.,
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக.,

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ
நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அன்னாள் வரக்கூடும்”..

தன்னை நினைத்து சிரித்துக் கொண்டவன். ‘எல்லோரும் எனக்கு ரோபோ னு பெயர் வச்சுருக்காங்க.,  நான் இந்த பாட்டை கேட்டு சிரிச்சிட்டு இருக்கேன்., பாட்டு கேட்குற நேரமா டா இது’.,  என்று நினைத்தவன்.,  ‘என்ன இது டீனேஜ் பையன் மாதிரி இப்படி ஒரு நினைப்பு.,  இதுல  சிரிப்பு வேற நமக்கு’ என்று தன்னைத்தானே கட்டுப்படுத்தி கொண்டவன்.., பாடலை  நிறுத்தி விட்டு  மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

அன்று மதியம் நெருங்கும் நேரம் மித்ரனுக்கு போட்டோ அனுப்பும் முன் தங்களிடம் சொல்ல வேண்டும் என்று நண்பர்கள் அனைவரும் மித்ரனின் தந்தையிடம் சொல்லி இருந்தனர்.

“நாங்கள் போய் அவன் அறையில் அமர்ந்த பிறகு தான் போட்டோ அனுப்ப வேண்டும்” என்று அதன் படியே மித்திரனின் தந்தையும் இவர்கள் அனைவரும் அறைக்குச் சென்றதை பார்த்த பிறகே மித்ரன் செல்லுக்கு போட்டோவை அனுப்பினார்..

“இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க., உங்களுக்கு கேஸ் இல்லையா” என்று கேட்டான்.

Advertisement