Advertisement

16

   வரமாய் வரும் வாழ்க்கையில்   
   வழிநெடுகிலும் பூக்களோடு 
  முள்ளும் கல்லும் இருக்கத் 
   தான் செய்கிறது.., 

  தேர்ந்தெடுத்து பாதம் பதிக்கும் 
  போது நம் காதல் 
  பூப்பூக்கும் பாதையில்
  பயணித்தாலும்., 

   கல்லும் முள்ளும் 
   கால் இடறினாலும்.,
  குத்தி எடுத்தாலும் 
   காதலோடு அத்தனையும்
    கடந்து விடலாம்..

    உனக்கு துணையாக
    நானும்.., 
    எனக்கு துணையாக
    நீயும்…,
    கைகோர்க்கும் போது., 

நாளை காலை சந்திக்கலாம் முடிவை தெரிந்துக் கொள்ளலாம் என்று சொன்னவன்., நேரே அறைக்கு வந்து அவனுடைய கார் சாவியை எடுத்துக் கொண்டு அறையை பூட்டிவிட்டு அவசரமாக கிளம்பி மற்றவர்கள் அங்கிருந்து களையும் முன்பே  தன் காரை எடுத்துக் கொண்டு வெளியேறினான்…

கந்தசாமி கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த மித்ரன் அக்கா..,  “அப்பா ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க” என்று கேட்டாள்.

“உங்க அம்மாவால  எங்க நம்ம மித்ரனை இழந்துடுவோமோ என்று பயமா இருக்கு.., இவ  சரியில்லை யாரை கேட்டு அந்தப் பொண்ணையும் அம்மா., அப்பாவையும் வர வச்சிருக்கா..,  என்ன நினைச்சுட்டு இருக்கா., பத்தாததுக்கு சாரு வீட்ல ஒன்னுக்கு ரெண்டா சொல்லி அவங்களையும் வர வச்சிருக்கா..,

இவ படிச்சவ மாதிரியா இருக்கா..,  இத  எல்லாம் நினைச்சாலே கடுப்பா இருக்கு.., நான் தப்பு பண்ணிட்டேன்.  இப்ப தோணுது சந்தோஷ் விஷயத்துல பிரச்சனை பண்ணும் போதே நான் அடக்கி வைச்சிருந்தா.,  என் பிள்ளை அவன் ஆசைப்பட்ட படியே எல்லாம் படிச்சிருப்பான்.,  இப்ப எனக்கு வேலையும் வேண்டாம்.., படிப்பு வேண்டாம் ன்னு  உதறிட்டு போயிருக்க மாட்டான்”., என்று சொல்லி வருத்தத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

அந்நேரம் அங்கு வந்த மித்ரன்  அம்மா “என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்டார்.

மித்ரனின் அப்பா வெறுப்பான ஒரு பார்வையை அவர் மீது வீசிவிட்டு “நான் உன்னை இப்படி எதிர்பார்க்கவே இல்ல., நெனச்சாலே வெறுப்பா இருக்கு”., என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.

அவரின் மகளோ  “அப்பா ஹாஸ்பிடல் வரலையா” என்று கேட்டாள்.

“போமா.,  மத்தியானத்துக்கு மேல வாறேன்” என்று சொல்லிவிட்டு அறையில் சென்று அமர்ந்தவர் இது நாள் வரை என்ன வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறோம் என்பதை பற்றி யோசிக்க தொடங்கியிருந்தார்…

காலையில் ஏற்கனவே வீட்டில் சாப்பிடவில்லை., அதனால் எல்லாம் முடிந்து  அவன் வெளியில் வந்து நல்ல உணவகத்தை தேர்ந்தெடுத்து முதலில் வயிற்றுக்கு உணவு எடுத்துக் கொண்டு அதன் பிறகு நிதானமாக காரில் அமர்ந்து யோசிக்க தொடங்கினான். அதன் பிறகு தான் செய்ய வேண்டிய வேலைகளை யோசித்துக்கொண்டே தான் எதற்காக வெளியே வந்தோமோ அந்த வேலையை பார்க்க சென்றுவிட்டான். அதற்காகத்தான் முதல் நாளும் போய் பார்த்துவிட்டு வந்து இருந்தான்.,

இன்று அவர்கள் வரச் சொல்லியிருந்ததால் அங்கு போய் அவர்கள் வேலையை முடித்து விட்டு மறுநாள் அவன் செய்ய முடிவெடுத்திருக்கும் வேலைக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு., பின் அது சம்பந்தமான வேறு ஒரு ஆளையும் சந்தித்து விட்டு மாலை நேர காபியை கூட வெளியே குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வந்தான்…

வந்தவன்  வீட்டின் தோட்டத்தில் அக்கா குழந்தைகளோடு சற்று நேரம் விளையாடிவிட்டு., குழந்தைகளிடம் “மாமா போன் நம்பர் தெரியுமாடா” என்று கேட்டான்.

“ஓ தெரியுமே மாமா” என்று சொல்லி பிள்ளைகள் அவனுடைய போன் நம்பரை சொன்னப் பிறகு

“மாமாட்ட இதே நம்பர் தான் வச்சிருப்பேன்., உங்களுக்கு எப்ப என்ன வேணும்னாலும் மாமாக்கு போன் பண்ணனும் சரியா” என்று கேட்டான்.

வீட்டில் நடந்த எதுவும் தெரியாத குழந்தைகள் “சரி மாமா” என்றது.

“ஏன் மாமா மறுபடியும் ஊருக்கு போறீங்களா” என்று கேட்டான்.

“ஆமாண்டா மாமா ஊருக்கு தான் போறேன்.., ஆனா வேற எங்கேயும் இல்லை இங்க தான் பக்கத்துல தான்., போன் பண்ணுங்க சரியா” என்றான்.

“எதுக்கு மாமா” என்று கேட்டவன் “படிக்க போறீங்களா” என்று கேட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவனும் சிரித்தபடி பிள்ளைகளின் தலையை கோதி விட்ட படி “மாமாக்கு  நீங்க வீட்டு நம்பரில் இருந்து கூப்பிடுங்க., நானுமே வீட்டு நம்பரில் கூப்பிடுறேன்   நம்ம பேசலாம் என்று சொன்னான்…

அதன் பிறகு இரவு உணவாக கடைகளில் ஆர்டர் செய்து வீட்டிற்கு உணவு கொண்டுவர செய்திருந்தான்.

பிள்ளைகளுக்குப் பிடித்த உணவாக கேட்டு வாங்கி இருந்தவன் அவனுக்கும் வெளியவே உணவு வாங்கிக் கொண்டான்.

அப்பொழுதுதான் வீட்டிலுள்ள அனைத்தையும் கவனிக்கும் ஆன்ட்டி “தம்பி நீ காலையிலிருந்து வீட்டில சாப்பிடலையே என்றார்.
அதற்கு “வெளியே சாப்பிட்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டான்..

மற்றவர்கள் எல்லாம் மருத்துவமனையிலிருந்து வருவதற்கு முன் தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டவன் சற்று நேரம் ஓய்வாக படுத்து இருந்து விட்டு அதன் பிறகு எப்பொழுதும் போல போன் செய்து பேச தொடங்கினான்.

அதற்கு இடையே கீழே மற்றவர்கள் வந்து விட வீட்டை கவனிக்கும் ஆள்  கந்தசாமியிடம் மித்ரன் அம்மா எல்லோரும் குடும்பத்தோடு இருக்கும் போது

“தம்பி காலையில இருந்து வீட்டில் சாப்பிடவே இல்ல.., மத்தியானம் வெளியே சாப்பிட்டேன் அப்படின்னு சொல்லிட்டாங்க., இப்ப  நைட்டுக்கு பிள்ளைகளுக்கெல்லாம் வாங்கிக் கொடுக்கிற மாதிரி வாங்கி கொடுத்துட்டு.., தம்பியும் கடையில் உள்ள சாப்பாடு தான் சாப்பிட்டுச்சு., வீட்டிலிருந்து எதுவும் எடுத்து சாப்பிடல” என்று சொன்னார்.

மித்ரன் அம்மா “ஓவரா கோவப்படுறான்.,  எங்க போய் நிக்கப் போறானோ” என்று சொல்லி எத்தனை நாளுக்கு ன்னு பார்ப்போம்”.,என்றார்.

“அம்மா தயவு செய்து வாயை மூடுங்க., தேவையில்லாமல் பேசாதீர்கள்” என்று சொல்லி பேச்சை நிறுத்தினாள்…

சந்தோஷ் க்கு  போன் செய்தவன் இன்று நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி “நாளைக்கு நீ சாருவ கூட்டிட்டு வா” என்று அழைத்தான் மித்ரன்…

“டேய் என்னடா இப்படி சொல்றே” என்று கேட்டான்.

சற்று அமைதிக்கு பிறகு “இல்ல நான் வந்தா பிரச்சனை பெருசாகும்.,  சாருவ மட்டும் பிளைட் ஏற்றி விடுறேன்., பாப்பா நாங்க வச்சிக்கிறோம்.,   ஒரு நாளைக்கு தானே லாக்டோஜன் அந்த மாதிரி ஏதாவது கலக்கி கொடுத்து பாத்துக்கலாம்”., என்று சொன்னான்.

அவனோ “இல்ல இல்ல கண்டிப்பா குழந்தையோட தான் வரணும்.,  அதனாலதான் நீ வருகிறாயா., என்று கேட்டேன்”., என்றான்.

இல்லடா நான் அங்க வந்தா பிரச்சனை பெரிசாகும்., நான் சாருக்கு  ஏதாவது ஏற்பாடு பண்றேன்.., நீ பயப்படாம இரு சித்துட்ட பேசிப் பார்க்கிறேன்” என்று சொன்னான்.

சந்தோஷ் ம்  “சரி நீ  சாருக்கு பேசி சொல்லு., நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன்” என்று சொன்னவன்  “டேய்   எல்லாத்தையும் சொல்லாதடா., பாவம் மனசு வருத்தப்படுவா.,  குழந்தை பிறந்து ரெண்டு மாசம் ஆகுது., மனசு வேதனை படக்கூடாது., மொத்த விஷயத்தையும் நீ பக்கத்திலிருந்து சொல்றது வேற.,  நான் என்ன விஷயம் சொல்லாத ன்னு சொல்றது புரியுதா..,

சின்ன பிரச்சனை நீ கிளம்பி வா அப்படின்னு மட்டும் சொல்லு.., அதுக்காக அவள  டென்ஷனாகாத., சரியா” என்றான்.

“நான் சிலதை மட்டும் பேசுகிறேன்” என்று சொன்னான்.

சந்தோஷ் ம் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு “ஏன்டா இப்படி.., நானாவது பிரண்டு., என்ன பிரச்சனை அவங்களுக்கு., சாருவ எப்படிடா இப்படி பேச மனசு வருகிறது” என்று வருத்தத்தோடு கேட்டான்.

“அதுதான் சந்தோஷ்  எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு., அவங்களுக்கும்  தெரியும் அவளை எந்த அளவுக்கு நான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் னு.,   தெரிஞ்சும் இவங்க இப்படி எல்லாம் பண்றாங்கன்னா., அவங்க மனசுல  என்ன எண்ணம் இருக்குன்னு பாரு.., தான் நினைச்சது மட்டும் தான் நடக்கனும் அப்படிங்கிற குணம்…, என்ன சொல்ல னு தெரியல”..,  என்றவன்.

சரிடா விடு.., பெரிய அளவுக்கு போகாமல் நம்ம பாத்துக்கலாம்.., நீ நாளைக்கு சாருவ பத்திரமா பிளைட் ஏத்தி விட்டுட்டு சொல்லு.., நான் உன்கிட்ட பேசுறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

சாருவிற்கு அழைத்தான்.,  எப்போதும் போல குழந்தையை கொஞ்சி விட்டு., அதன் பிறகு “சாரு நாளைக்கு குழந்தையோட கிளம்பி இங்க வா” என்று சொன்னான்.,

” 2 மாசம் இருக்கே” என்றாள்.

” ரெண்டு மாசம் னு எல்லாம் பேசாத நான் சொல்றேன் இல்ல கிளம்பி வா..,  அவ்வளவு தான்”.., என்றான்.

Advertisement