Advertisement

இருவரும் ஒருவர் அணைப்பிலிருந்து ஒருவர் வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மிதுன் சந்தோஷை பார்த்து “ஆளே மாறிட்ட டா.,  எப்படி இருக்க தெரியுமா”.,  என்று சொல்லி மீண்டும் அணைத்துக் கொண்டான்.

சந்தோஷ்  ம் மித்ரனை பார்த்து “என்ன டா  இது லவ் ஃபெயிலியர் மாதிரி தாடி எல்லாம் வளர்த்து எப்படியோ இருக்கிற.,  சரியா தூங்கலையா முகம் ரொம்ப டல்லா  இருக்கு” என்று கேட்டான்.

“உன் டாக்டர் குணத்தை காட்டாத..,  இப்போ ஒரு வாரமா தான் எனக்கு தூக்கமே இல்ல.., எப்ப உங்கள பார்ப்பேன் அப்படிங்கற பீலே தூக்கம் போச்சு.., இனி நிம்மதியா தூங்குவேன்” என்று சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் மறுபடியும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டனர்.,

ஒருவரை ஒருவர் பார்த்து எட்டு வருடத்தில் இருவருக்குள்ளும் வந்த மாற்றத்தை பார்த்து சிரித்துக் கொண்டனர்…

அங்கிருந்து இருவரும் வர மித்துவின் கண் பார்வை சாருவையும்., அவள்  மேடிட்ட வயிற்றையும் மாறி மாறி பார்த்தன.,

அருகில் வந்தவுடன் சந்தோஷின் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி அம்மா என்று அணைத்துக்கொண்டான்.,

பின்பு அவரிடம் பேசி கொண்டே  சாருவை சைகையில் தன்னருகே அழைத்தவன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.. அவளும் முதலில் அவர்களோடு பேசி முடிக்கட்டும் என்றே காத்திருந்தாள்.

“எப்படி இருக்க” என்று கேட்டபடி அவளை மேலும் கீழும் பார்த்தவன்.,   எப்பொழுதும் போல யார் இருப்பதையும் பொருட்படுத்தாமல் நெற்றியில் முத்தம் வைத்தவன்.,  “தங்க்ஸ் டா., சாரு” என்று மெதுவாக சொன்னான்.

அவள் சிரித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்., “ஏன் இப்படி ஆயிட்டாங்க., எதுவும் ஹெல்த் ப்ராப்ளமா” என்று அவனை வருத்தத்தோடு பார்த்து கேட்டாள்.

அவனும் நல்ல தான் இருக்கேன் மா.,   உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் ., அது  தான் என்று சொல்லி தோளோடு அணைத்துக் கொண்டவன்.,

“எட்டு வருஷமா இவனை பார்க்கலை.,  அஞ்சு மாசமா உன்னை பார்க்கலை., அவனை எனக்கு தெரியாமலேயே பிரிஞ்சேன்., எங்க உன்னை தெரிஞ்சே பிரிஞ்சிருவேனோ னு.. பயம்”.,  என்று சொல்லி வலது புறம் தோளோடு சேர்த்து சாருவை அணைத்து வைத்திருந்தவன்.,  இடது கையால் சந்தோஷ்  தோளில் கை போட்டு பிடித்தான்.

கண் கலங்கி நின்றவனை.,  சந்தோஷ் தான் “டேய் இது என்ன சின்ன பையன் மாதிரி., இப்ப நாங்க எல்லாரும் ஒன்னா தான் இருக்கிறோம்., இனி எல்லாரும் ஒன்னா தான் இருப்போம் கவலைப்படாதே” என்று சொல்லி அவனை ஆறுதல் படுத்தினான்.

அவனின் மன ஓட்டத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்., அவனை நன்கு புரிந்து கொண்ட இருவராலும் புரிந்து கொள்ள முடிந்தது….

அவன் கலங்குவதை கண்ட சந்தோஷ் அம்மா தான் “நேரமாகுது மித்ரா போய் குளிச்சிட்டு வந்து ரெடியாகு.,  நீ இப்பதிக்கு ரெஸ்ட் கூட எடுக்க முடியாது., பங்க்ஷன் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் உனக்கு ரெஸ்டே”., என்று சொன்னார்.

“என்னமா பெரிய ரெஸ்ட்., எனக்கு இப்போ அவளோட இருக்கிற இந்த நிமிஷம் தான் ரொம்ப முக்கியம்.., அதுக்காக தான் இவ்வளவு வேகமாக ஓடி வந்தேன்”., என்று சொல்லிவிட்டு சந்தோஷோடு பேசிக்கொண்டே சாருவின் வீட்டிற்குள் சென்றனர்.,

அதேநேரம் சந்தோஷ்  தான் மீனாவிடம் சொல்லி மித்ரன் என்று வாங்கி வைத்திருந்த “வேஷ்டி எடுத்திட்டு வா” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

ஏனெனில் அவனிடம் கண்டிப்பாக வேஷ்டி இருக்காது என்ற எண்ணத்தோடு தான் சந்தோஷ் வாங்கி வைத்திருந்தான்…

அவனும் குளித்து கிளம்பி வர., சாருவிற்கும் பெண்கள்  அலங்காரம் செய்து முடிக்க அவள் புடவை அணிந்து வர.,  அங்கு வளைகாப்பு விழாவிற்கான வேலை தடபுடலாக தொடங்கியது.,

அக்கம்பக்கத்தினர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என வந்துவிட ஒவ்வொருவராக நலுங்கு வைத்து வளையல் போட்டு தமிழ் மரபுப்படி அங்கு இருந்த தமிழ் குடும்பத்தினர் மூன்று பேர் சேர்ந்து மற்ற நண்பர்களும் சேர்ந்து விட சாருவின் வளைகாப்பு அமோகமாக நடந்தது.,

அதன்பிறகு எடுக்கப்பட்ட ஒவ்வொரு போட்டோவும் சாரு., மித்ரனுக்கான  தனிப்பட்ட நேரமாக அமையும்படி பார்த்துக் கொண்டான்., சந்தோஷ்

மித்ரனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி., அவன் முகம் பார்த்து மகிழ இங்கு இரண்டு பேர் தவமிருந்ததை அவனும் அறியும் படி இருந்தது.

இன்று இவர்களின் சந்தோஷத்தை கண்டு மற்றவர்களும் சந்தோஷிக்க அங்கு அந்த சந்தோஷமான சூழல் அழகாக அமைந்தது…

மதியத்திற்கு பிறகு கிடைத்த பொழுதுகளில் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தாலும்., சந்தோஷ் தான் “இங்கு இருக்கும் நாட்களில் சாருவோடு அதிகநேரம் செலவளிக்கும்படி பார்த்துக்கொள்., ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் மனதில் தன்னவன் தன் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.,  அதை வெளியே சொல்லாமல் இருந்தாலும் அவள் மனதில் இருக்கும் ஆசைகளை ஒரு கணவனாக நீ தான் பார்த்துக் கொள்ளவேண்டும்”.,  என்பதை தெரியப்படுத்தினான்.

“புரியுதுடா கண்டிப்பா நல்ல பார்த்துக்கிறேன்” என்று சொன்னான்.

“எங்கம்மா என் விஷயத்தில் இந்த அளவுக்கு ஒரு வில்லத்தனமா இருப்பாங்கன்னு., நான் எதிர்பார்க்கவே இல்லை.., எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், நீ என் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்த.,   எல்லாருக்கும் தெரியும்.., ஆனா அந்த அன்பும் பாசமும் எனக்கு நிலைக்க விடாமல் பண்ணிட்டாங்க.., இப்பவும் அதே மாதிரி தான் சாரு விஷயத்திலேயும் பண்றாங்க”., என்றான்.,

நான் இப்போதைக்கு இங்க வந்ததே தெரியக்கூடாது., அதே மாதிரி டெலிவரிக்கு வருவேன் கண்டிப்பா இங்க தான் இருந்து பாத்துட்டு தான் போவேன்., அப்பவும் வெளியே தெரிய விட மாட்டேன்.,

ஆனால் படிப்பு முடிச்சுட்டு., வந்து அங்க போய் அவங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துட்டு தான் நான் திரும்பி ஒரு முடிவுக்கு வரணும்”என்று சொன்னான்.

“சாரு க்கு கரெக்டா பிராஜக்ட்  ஒன்னு ரெண்டு மாசத்துல முடிஞ்சிரும்., அதுக்கு அப்புறம் டெலிவரி லீவு போட்டுக்கலாம்.,  அம்மாட்ட சொல்லி இருப்பா போல., அதுக்கு அப்புறம் எப்படியும் பெங்களூர் தானே போகணும் மா ன்னு., கேட்டு இருக்கா.., அம்மா சொல்லிட்டாங்க., அவ தனியா குழந்தைய கேன்டில் பண்ண கத்துக்கிற வரைக்கும் இங்கே தான் இருக்கனும் ன்னு”., என்று சொன்னான்.

“நீ எங்க ஒர்க் பண்ற”என்று சொல்லி அவனது வேலை மற்றும் மற்ற விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தான்., இரவு உணவு வரை அனைவரும் ஒன்றாக தான் இருந்தனர்.,

இரவு உணவிற்குப் பிறகு சந்தோஷ் மித்ரனை அணைத்து  “காலைல பாக்கலாம் டா., நீ ரொம்ப டயர்டா இருப்ப ரெஸ்ட் எடு.,  நல்லா தூங்கி எந்திரி., பாத்துக்கோ நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல”, என்று சொல்லிவிட்டு கிளம்பினான்..

“சித்து நீ  என்னோடு தங்கி கொள்” என்று அம்மா அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.,

எப்போதும் சாரு க்கு துணையாக இருக்கும் வேலைக்காரம்மாவையும்.,  பக்கத்துவீட்டு பெரியம்மா “எப்போதும் போல இங்கு வந்து தங்கிக்கோ., அவள் கணவர் அவரோடு இருக்கும் வரை” என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.,

சாரு சிரிக்க மித்ரன் தான் “இது சரி தான்” என்று சொன்னான்.

“இது என்ன விளையாட்டு தனமா இருக்கு., எல்லாரையும்  கூட்டிட்டு போயிட்டாங்க.,  மறந்து போய் போயிட்டாங்க., இல்லனா வயிற்றில் இருக்கும் பாப்பாவை கூட்டிட்டு போய் இருப்பாங்க” என்றாள்.

அவனோ.  சிரித்தபடி “பிறந்த அப்புறம் தூக்கிட்டு போய்ருவாங்க” என்றான்.

தளர்வான உடை அணிந்தவள் அவன் மார்பில் தலைவைத்து படுத்தபடியே அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க தொடங்கினாள்.,

அவன் லண்டனில் அவனது படிப்பு மற்றும் அவனுக்கு கிடைத்து இருக்கும் தோழி.., அவள் சொன்ன அறிவுரை என அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான்.,

” அவங்க கிட்ட நீங்களும் சொல்ல வேண்டியது தானே சீக்கிரம் அவங்க ஹஸ்பென்ட் கிட்ட பேச சொல்லி” என்று கேட்டாள்.

“சொன்னேன் படிப்பு முடிந்து போய் நேர்ல தான் பேசனும் னு நினைக்கிறாங்க போல., பேசினாலும் அவர் போன் அட்டென்ட் பண்ண மாட்டார்” என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தான்..

நீண்ட நாளுக்கு பிறகு இருவருக்கும் ஒரு நிம்மதியான தூக்கம் இருந்தது.,

வாழ்க்கையில் வெறும் கூடல் மட்டும் நிறைவை தராது., அதையும் மீறிய அன்பை ஒரு ஒற்றை அணைப்பில் தந்து விட முடியும். அங்கே உண்மையான அன்பு இருந்தால்.

காலை எப்பொழுதும் போல விழிப்பு தட்டினாலும் எழுந்தவளுக்கு செய்ய வேலை ஒன்றும் இல்லாததால் எழுந்து குளித்துவிட்டு நிதானமாக ஹாலில் வந்து அமர்ந்திருந்தாள்.,

அவனுக்கு இன்னும் தூக்கம் கலையாத நேரத்தில் அவள் காபி மட்டுமாவது போடலாம்  என்று கதவை திறந்து வெளியில் இருக்கும் பாலை எடுக்கப் போனாள்.,

சந்தோஷ் அம்மா பார்த்து விட்டு  “காபி போட வேண்டாம்., இங்க வா” என்று அழைத்துக் கொண்டார்.,

“அவங்க தூங்குறாங்க அம்மா” என்றாள்.

“தூங்கட்டும் விடு எந்திரிக்கும் போது எழுந்துகட்டும்” என்று சொல்லி அவனுக்கு தேவையானவற்றை அவரே தான் செய்து கொடுக்கத் தொடங்கியிருந்தார்.,

அதன்பிறகு அவன் இருந்த நான்கு நாட்களும் அவளின் இந்த ஏழு மாதத்தில் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்து கொடுத்திருந்தான் மித்ரன் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான்.,

திரும்ப அவனுக்கு படிப்பிற்காக அங்கு செல்ல விருப்பமே இல்லை., ஆனால் வெளியில் தெரிந்தால் நல்லா இருக்காது என்ற எண்ணத்தோடு அவனை கிளம்பும் படி செய்தனர்.,

அங்கிருந்த நாட்கள் அவனுக்கு சந்தோஷமாக இருந்த பழைய நாட்கள் திரும்ப கிடைத்தது., இது எல்லாம் நிரந்தரமாக தனக்கு வேண்டுமென்றால்.,  நான் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மித்ரன் தெளிவாக உறுதியாக இருந்தான்..

நிறைவான நிம்மதியான வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அவரவர் கையில்தான் இருக்கிறது அவரவர் முடிவில்தான் இருக்கிறது.,

பகடை உருட்டும் கைகள் தான் ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் வேறுபடுகிறது., பகடைகள் அதே தான் உருட்டும் விதத்தில் தான் விழும் எண்களும்.,  நகரும் காய்களும்
அவரவர் கையில் தான்.,

       விதியின் விளையாட்டு பகடையை உருட்டுவதில் மாறுபடலாம்., விதி சில சமயங்களில் மதியிடம் தோற்க்கலாம்“.,

Advertisement