அண்ணாமலை தந்தையின் தொழிலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். திருமணம் முடித்த பிறகு கோமதியின் நச்சரிப்புத் தாங்காமல் சென்னையில் புதிதாகத் தொழில் தொடங்க… அவரின் நல்ல நேரம், வெறும் ஒரு தளத்தில் மட்டும் ஆரம்பித்த வீட்டு உபயோகப் பொருட்களின் கடை, இப்போது ஐந்து மாடி கட்டிடமாக வளர்ந்து நிற்கிறது. அதோடு வேறு இரண்டு இடத்திலும் கிளைகள் உண்டு.
பெரிய வீடு, கார் அது தவிர மற்ற அசையா சொத்துக்கள் என அண்ணாமலை செல்வ நிலை உயரத்தில் இருக்க… கோமதியின் பணச் செருக்கும் கூடவே வளர… ஆளுக்கு ஏற்றார் போலத்தான் பழகுவார். சம அந்தஸ்தில் இருப்பவர்களிடம் ஒரு மாதிரியும், அவர்களுக்குக் கீழே இருப்பவர்களை ஒரு மாதிரியும் தான் நடத்துவார்.
இப்போதும் நலம் விசாரித்த கல்யாணியிடம் முகம் கொடுத்து கூடப் பேசவில்லை. அப்போது எல்லோருக்கும் வெண்கல டம்ளரில் காப்பி எடுத்துக் கொண்டு அஞ்சனா வர….
“கல்யாண வீட்டுக்காரங்க நாங்களே இன்னைக்குதான் வரோம். நீங்க ஆளுக்கு முந்தி வந்துட்டீங்க போல…” என அவர் குத்தலாகக் கேட்க….
“அஞ்சனா காலேஜ் லீவ்ல இருந்தா… அதனால நான்தான் முன்னாடியே வர சொன்னேன். அதுதான் வந்தாங்க. மாப்பிள்ளை மட்டும் கல்யாண நாள் அன்னைக்கு வருவார்.” என்றார் கமலா பதிலாக.
அஞ்சனா எல்லோருக்கும் காபி கொடுத்தவள் சித்தார்த்திடமும் புன்னகையுடன் தட்டை நீட்ட…. அவனும் காபி எடுத்துக் கொண்டான். அஞ்சனா அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். மகன் காபி குடித்து முடித்ததும், “நீ மாடிக்கு போ. கார் ஓட்டிட்டு வந்தது களைப்பா இருக்கும்.” எனக் கோமதி மகனை அங்கிருந்து கிளப்ப… சித்தார்த்தும் மாடி அறைக்குச் சென்றான்.
இவர்கள் வந்திருப்பதால் இரவு மெய்யப்பனின் மகன் லக்ஷ்மணன் அவரது மனைவி பிள்ளைகளோடு இங்கே வந்துவிட…. சித்தார்த்தும் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.
சித்தார்த்துக்குச் சித்தப்பா பிள்ளைகள் என்றால்… அஞ்சனாவுக்குச் சொந்த தாய்மாமா பிள்ளைகள். அவளையும் விட இளையவர்கள். அவளும் அவர்களோடு சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
பயணக் களைப்பாக இருக்கிறது என்று சொல்லி கோமதி ஓய்வெடுக்க… இவர்களே ஆளுக்கு ஒன்று செய்து இரவு உணவை உண்டு முடிக்க… இரவு உணவு முடித்ததும் பிள்ளைகள் நாளை பள்ளி செல்ல வேண்டும் என்று லக்ஷ்மனின் குடும்பம் கிளம்பி விட்டது.
அவர்கள் சென்றதும் அண்ணாமலையின் குடும்பம் மாடிக்கு சென்று விட… இவர்கள் எல்லோரும் கீழே அந்தப் பெரிய ஹாலில் ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டனர்.
காலையில் சித்தார்த் எழுந்து அவன் அறையின் ஜன்னல் வழியாகப் பார்க்க… பின்கட்டில் இருந்த குளியல் அறையில் இருந்து குளித்து முடித்துத் தலையில் துண்டோடு அஞ்சனா வந்து கொண்டிருந்தாள். அவ்வளவு பெரிய வீட்டில் குளியல் அறைகள் தனியாக வெளியே தான் இருக்கும். ஆண்கள் வெளியே நின்று குளிக்க வசதியாகப் பெரிய நீர் தொட்டியும் இருக்கும். அங்கே நின்றும் குளிக்கலாம்.
சித்தார்த் பிரஷ்சையும் துண்டையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கியவன், பின் கட்டுக்கு செல்ல… அவனின் பாட்டிகள் மற்றும் அத்தை எல்லோரும் அங்கே உட்கார்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர்.
அஞ்சனா அவனைப் பார்த்து காலை வணக்கம் சொல்ல… ம்ம் என்று மட்டும் சொன்னவன், குளியல் அறையில் சென்று புகுந்து கொண்டான். அவன் அங்கேயே குளித்து முடித்து வர… அஞ்சனா அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுக்க… அவன் அங்கேயே உட்கார்ந்து அவன் அப்பத்தாவிடம் பேசியபடி அதை அருந்தினான். அஞ்சனவும் அங்கேயே உட்கார்ந்து அவர்கள் பேசியதை கேட்டபடி இருந்தாள்.
“அடுத்து அஞ்சனாவுக்குத் தான் நம்ம வீட்ல கல்யாணமா?” என்று அப்பத்தா கேட்க…
“பெரியவளுக்குக் கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் தானே ஆகுது. இவளுக்குக் கொஞ்சம் சேர்த்திட்டு தான் பண்ணனும். அதனால மேல படிக்க வைக்கலாம்னு இருக்கோம். படிச்சு வேலைக்குப் போகட்டும்.” என்றார் கல்யாணி.
அஞ்சனா ஆள் மெலிவு தான். ஆனால் நல்ல நிறம். குறைவான விலை என்றாலும் நேர்த்தியாக உடை அணிந்து இருந்தாள். ஒப்பனை எதுவும் செய்யாமலே அழகாக இருந்தாள்.
“பெரியவ கல்யாணத்துக்கு வருவா தானே?” கமலா கேட்க…
“ஒரு வாரம் முன்னடியே வரேன்னு சொல்லி இருக்கா.. ஆனா நேரா மாமியார் வீட்டுக்கு போயிட்டு அப்புறம் தான் இங்க வருவா… அவளுக்கு இப்போ ஆறு மாசம். வந்தா பிரசவம் முடிஞ்சு தான் திரும்பப் போவா. அதுதான் கல்யாணத்தைச் சக்கா வச்சு கொஞ்ச நாள் இங்க வந்து தங்கிட்டு போகலாம்னு வந்தேன். அவ பிரசவம் முடிஞ்சு கிளம்புற வரை எங்கேயும் நகர முடியாது.” என்றார் கல்யாணி.
“சரி காலை சாப்பாடு என்ன?” எனச் சௌந்தரம் பாட்டி கேட்க…
“இட்லி ஊத்திட்டு சட்னி சாம்பார் வச்சி, அப்படியே ஆளுக்கு ரெண்டு தோசையும் ஊத்திக்கலாம்.” என்றபடி கமலா எழுந்துகொள்ள…. அம்மாவுக்கு உதவக் கல்யாணியும் எழுந்து சென்றார். சௌந்தரப் பாட்டியும் மெதுவாக எழுந்து செல்ல… அஞ்சனாவும் சித்தார்த்தும் மட்டும் இருந்தனர். அவள் பேசலாம் என்ற எண்ணத்தில் அவன் முகம் பார்க்க… அவன் அதைக் கண்டுகொள்ளாதவன் போல எழுந்து செல்ல… அஞ்சனாவும் எழுந்து உள்ளே சென்றாள்.
விறகு அடுப்பை சௌந்தரம் பற்ற வைத்துக் கொடுக்க… பெரிய இட்லி குண்டானில் கல்யாணி இட்லி ஊற்றி வைத்தார்.
கமலாவும் சௌந்தரமும் காய் நறுக்கிக் கொடுக்க… காலை வேளைக்கு மட்டும் அல்லாமல் மதியத்திற்கும் சாதம் தவிர மற்ற அனைத்தும், காஸ் அடிப்பிலும் விறகு அடுப்பிலும் வைத்து மளமளவென்று சமையலை செய்து முடித்தனர்.
கோமதி அதன் பிறகு தான் எழுந்து வந்தார். அவரும் அண்ணாமலையும் குளித்துத் விட்டு வந்ததும், உணவு அறையில் ஓரமாக இருந்த உணவு மேஜையில் வைத்து உணவு பரிமாறினர்.
கல்யாணி தோசை சுட்டுக் கொடுக்க, அஞ்சனா தான் எல்லோருக்கும் கொண்டு வந்து பரிமாறினாள்.
காலை உணவு முடிந்ததும் பிள்ளையார் பட்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே இங்கே இருக்கும் உறவுகளுக்குப் பத்திரிகை வைக்கச் செல்ல வேண்டும் என்று அண்ணாமலை சொல்ல… சௌந்தரம் சரி போயிட்டு வாங்க என்றார்.
அண்ணாமலை கல்யாணியையும் அஞ்சனாவையும் கோவிலுக்குச் செல்ல உடன் அழைத்தார். கோமதிக்கு அதில் சுத்தமாக விருப்பம் இல்லை.
“அவங்களும் நம்மோட வந்திட்டா, மதிய சமையலுக்கு யார் உதவி செய்வா? உங்க அம்மாவுக்கும் சித்திக்கும் கஷ்ட்டமா இருக்கும்.” என்று அவர் வேறு விதமாகச் சொல்ல…
“மதிய சமையல் எல்லாம் முடிச்சாச்சு. சோறு மட்டும் தான் ஆக்கணும். அது அந்த நேரத்துக்கு நாங்க வச்சுப்போம். கோவிலுக்குப் போறீங்க, அவங்களையும் கூட்டிட்டு போங்க.” என்றார் சௌந்தரம்.
பிறகு என்ன என்ற அண்ணாமலை, தங்கையைப் பார்த்துக் கிளம்பு என்றார்.
ப்ரியாவை பட்டு சேலை கட்டச் சொல்லி கோமதி சொல்ல… அஞ்சனவும் சில் காட்டன் புடவை அணிந்து தயாராகி வந்தாள்.
தளிர் பச்சை நிற புடவையை நேர்த்தியாக அணிந்து, காதில் குடை ஜிமிக்கியும் கழுத்தில் சின்ன நெக்லஸ் மட்டும் அணிந்து, முகத்திற்கு லேசான ஒப்பனை செய்திருந்த அஞ்சனா, அவளது சின்ன அம்மாச்சி கொடுத்த மல்லிகை பூவையும் அழகாகச் சூடிக் கொண்டாள்.
மாடியில் அவர்கள் அறையில் கோமதி கணவரிடம் அவர்களை என் அழைத்தீர்கள் எனச் சண்டைக்குச் செல்ல…
“நம்ம வீட்டுக்குத்தான் அவங்க வர்றதில்லை. இங்க வந்த இடத்தில கூடச் சேர்ந்து இருக்கலைனா எப்படி? நீ நான் என்ன பண்ணனும்னு சொல்லாத, என் கூடப் பிறக்கலைனாலும் அவளும் என் தங்கச்சி தான். அவளைக் கூப்பிடுறது என் இஷ்டம்.” எனக் கோபமாகச் சொல்லிவிட்டு அண்ணாமலை சென்றார்.
அண்ணாமலை பொதுவாக மனைவிக்கு விட்டுக் கொடுக்கும் ரகம் தான். ஆனால் சில விஷயங்களில் அவர் முடிவெடுத்துவிட்டால் மாற்ற முடியாது. கோமதி வேறு வழியில்லாமல் கிளம்பி சென்றார்.
எல்லோரும் காரில் செல்ல… சித்தார் தான் ஓட்டினான். கோமதிக்கு அவர்கள் வந்தது பிடிக்கவில்லை என்பதால்… பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தார்.
கல்யாணிக்கு அண்ணியைப் பற்றித் தெரியும். அதனால்தான் சென்னையில் இருந்தால் கூட அண்ணன் வீட்டிற்குத் தேவைக்கு மீறிச் சென்றது இல்லை. அதுவும் அவர் மட்டும் தான் செல்வார். அவர் கணவர் அவரும் வரமாட்டார், பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார். சென்றால் மதிப்பும் மரியாதையும் கிடைக்காது என்றுதான் செல்ல மாட்டார்.
இப்போது திருமணதிற்கு வந்த இடத்தில் அண்ணன் அழைத்ததும் வந்துவிட்டார். அவருக்கு அண்ணி மனதில் வேறு எண்ணங்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியாது.
பிள்ளையார்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்தலம் என்பதால்… அதிகம் பேர் இருக்க… கோவில் கூட்டமாக இருந்தது. அதனால் எல்லோரும் நெருங்கி தான் நின்றனர்.
சித்தார் தங்கையை யாரும் நசுக்கி விடாமல் தன் அருகில் பாதுக்காப்பாக வைத்துகொள்ள… அதைப் பார்த்த அஞ்சனா அவளும் சென்று அவர்களோடு நின்று கொண்டாள்.
சாமி தரிசனம் முடித்து வெளியே வர… அஞ்சனா சித்தார்த்திடம் உரிமையாகக் கோவிலில் விற்கும் பிரசாதம் வாங்கிக் கொடுக்கச் சொன்னாள். அதையெல்லாம் பார்த்து சித்தார்த்துக்கே கொஞ்சம் அவள் மீது சந்தேகம் வந்துவிட்டது.
இந்தப் பெண் எதோ மனதில் வைத்துக் கொண்டு தான் நெருங்கி வருகிறாளோ என்று… என்கிட்டயேவா என்று நினைத்தவன் முகத்தில் கேலி புன்னகை.
எவ்வளவு தூரம் போறா பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டான்.
அஞ்சனாவுக்கோ அவள் வீட்டினருக்கோ மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லைவே இல்லை. கோமதி கிடைத்த நேரத்தில் எல்லாம் மகனுக்குத் தூபம் போட்டிருக்க… அவன் மனதிலும் அப்படித்தானோ என்ற எண்ணம் வந்துவிட்டது. அதனால் அஞ்சனாவை கவனிக்க ஆரம்பித்தான்.
சித்தார்த் யாருக்கும் அடங்கும் ரகம் இல்லை. இப்போது தான் இருப்பத்தியைந்து வயது முடிந்திருக்கிறது. ஆனால் அவன் இஷ்ட்டதிற்குத் தான் இருப்பான்.
அஞ்சனா ஆள் வேறு அழகி. மகன் எங்கே காதல் என்று விழுந்துவிடுவானோ… அப்படிச் சித்தார்த் காதலிக்கிறேன் என்றால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. கணவரும் இதுதான் சாக்கென்று திருமணத்தை நடத்தி முடித்து விடுவார். அதனாலேயே கோமதி அவர்களும் இந்தத் திருமணதிற்கு வருவார்கள் என்றே… கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தவறாகவே சொல்லி வந்தார்.
சித்தார்த்தும் அஞ்சனவை பார்க்கும் போது அவனாகவே எல்லாவற்றிக்கும் தவறாக உள் அர்த்தம் கற்பித்துக் கொண்டான்.
பூவாக இருப்பவள் புயலாகச் சீரப் போவதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.