Advertisement

24
பெரியவர்கள் செய்த சீண்டலில் தன் அறைக்கு  வந்தவள், தன்னவனின் வார்த்தைகளும் தன் மேனியில் அவன்  விரல்களின் நர்த்தனங்களும்  அவளை மேலும் வெட்கமடைய  செய்தது.
மீண்டும் எப்பொழுது கிட்டும்  அவனின் திருமேனி  தரிசனம்  என்று மனம் ஏங்கி  அவனின் ஆண்மை நிறைந்த அழகின் ரகசியங்களை விழிகள் திறந்தபடி   நினைவுகளில் அசைபோட்டு  கொண்டிருக்க, அவளின் பின்னோடிருந்து பெண்மைக்கே   உரிய  மென்மை  இல்லாமல் கரடுமுரடான தன்மையோடு  இரண்டு கரங்கள் கண்களை மூடின.
“நீர் எனை காண வருவீர் என்பதை நான் அறிவேன்.  ஆனால் நீர் வந்திருப்பதாக  யாரும் எனக்கு உரைக்கவில்லையே? என்னை பார்க்கும் ஆவலில்  யார் கண்ணிலும்  படாமல் வந்துவிட்டிரோ?”  என்று பேசிக்கொண்டு அவன்  கைகளின் மேல் தன் கைகளை வைத்து தடவியவள் மணிக்கட்டில் பட்ட விரல்களின் மூலம் ஏதோ கண்டுகொண்டவள்  போல் வெடுக்கென்று அவன் கைகளை  உதறிவிட்டு தள்ளி நின்றாள்.
தன் வேல்விழியால் வந்தவனை நெருப்பு  கனல்கொண்டு  முறைத்து, “என்ன வேண்டும் உனக்கு? என் அறையில் அனுமதி இல்லாமல் உள்ளே வர எவ்வளவு துணிச்சல்  உனக்கு? ” என்றாள் கோபமாக.
“ஏன் தேவி? என்னை அன்றி வேறு யாரையோ  எதிர்பார்த்திருந்தது போல்  தெரிகிறது?”  என்றான் சீற்றமாய்.
“நான் யாருக்காக காத்திருந்தாலும் அது என் தனிப்பட்ட  விஷயம். உனக்கு தேவை இல்லாதது. முதலில் இங்கிருந்து சென்று விடு என் கண்முன் நிற்காதே” என்று அருண்மொழிதேவி விரட்டும்  தொனியில் கூறினாள்.
உள்ளுக்குள்ளே  எரிமலையாய் நெருப்பு குழம்புகள்  கொண்டு எந்நேரத்திலும்  வெடிக்கும்  நிலையில் இருக்கும் தன் மனதை கடினப்பட்டு  கட்டுப்படுத்தினான்.
“உன்னை காண மட்டுமே ஒடோடோடி வந்தேன் அன்பே. என் உயிராய் உன்னை நினைக்கும் போது இப்படி  சொற்களை கொட்டலாமா?”  என்றான் மதுபாலச்செல்வன்.
உரக்க  சிரித்தவள் “என்ன நகைசுவை  செய்துகொண்டிருக்கிறீர்? என்னை விரும்பவேண்டும்  என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டுமல்லவா? அதிலும்  முதல்சுற்றிலேயே  நீர் தோற்றுவிட்டிர். என்னவென்று கேட்கிறீரா? மனதாலும்  உடலாலும்  என்னை  தவிர வேறு ஒரு மாதுவை மனதாலும் நினைக்க கூடாது. உமக்கு  தான் தினமும் ஒரு மங்கை  வேண்டுமாமே மஞ்சத்திற்கு,  அப்படி இருக்க என்னை திருமணம் செய்ய கனவு காணாதீர்”  என்றாள் அங்கிருந்த சுவரில் சாய்ந்தபடி கைகளை கட்டிக்கொண்டு.
அவளின் பேச்சு அடக்கி  வைத்திருந்த கோபத்தை  மூட்டி  “ஆமாமடி  என் மஞ்சத்திற்கு தினம் ஒரு பெண் தேவை தான்…. அதெல்லாம் வேறு கதை. மணவறையில் கைபிடித்து மக்கள் முன் மஹாராணியாக்கி  பின் என் மஞ்சத்திற்கு மனைவியாக்க  நினைத்தால் அதெல்லாம் நடக்காது போல. நீ யாரை நினைத்து இப்படி பேசுகிறாய்  என்று தெரியுமடி. முடிவாக கேட்டுக்கொள் அவனுடன்   மணவறை வரை சென்றாலும்  உன் மணாளனாக போவது  நான் மட்டுமே. அதனால் தேவை இல்லாத ஆசைகளை உன் மனதில் வளர்க்காதே. இந்த மாமனை மட்டும் நினை”  என்றான்.
“போதும் நிறுத்து உன் பிதற்றலை. நடக்காத ஒன்றை பேசி என் நேரத்தை விரயமாக்கியது  போதும் முதலில் இங்கிருந்து செல்கிறாயா?  இல்லை காவலர்களை அழைக்கவா?”  என்று வாசலை நோக்கி கை காட்ட, கொதித்து  தான் போனான் மதுபாலன்.
“இங்கே பார்!  ஆயிரம் பேர் உன்னை விரும்பட்டும் இல்லை நீ ஆயிரம் பேரை  விரும்பினாலும்  எனக்கு அதைப்பற்றி  கவலை இல்லை. உன் கழுத்தில் மங்களநாண்  பூட்ட  போவது  நான் மட்டுமே. யாருக்காகவும் எதற்காகவும்  உன்னை மட்டும் என்னால் விட்டு தரமுடியாது”  என்று வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
அவனின் பேச்சில்  ஸ்தம்பித்து அமர்ந்திருந்தவளின்  தோளை இரு கரங்கள் மெல்ல பற்ற மீண்டும் அவன் தான் என்று எரிச்சலடைந்து “ச்சி!  உனக்கு ஒரு முறை  கூறினால் புரியாதா? என் மனம் கவர்ந்தவர் நீ அல்ல.”  என்று கை ஓங்கியபடி  திரும்ப அக்கையை தடுத்து  அணைத்தவனை   கண்டதும் அவன் நெஞ்சத்தில் சரணடைந்தாள்.
“என்னவாயிற்று  அன்பே?  ஏன் இத்துணை  கோபம்” என்று அவளின் முகத்தாடையை  தன் விரலால் நிமிர்த்த.
“இன்னும் எத்தனை  நாள் என்னை காக்க  வைப்பீர்?”  என்றாள்.
அவளின் இக்கேள்வியால் அதிர்ச்சி  அடைந்தவன்.
“ஏன்?”  என்றான் அவள் செங்கழுத்தினில்  முகம் வைத்து.
‘சற்றுமுன் நடந்தவற்றை கூறலாமா வேண்டாமா?’ என்ற சந்தேகம் அருண்மொழிதேவியின் மனதில் ஓடிகொண்டிருந்த்தது.
தான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் ஏதோ தீவிரமாக யோசித்து கொண்டிருப்பவளின் கன்னத்தில் தன் இதழை பதிக்க பதறி போய் தன்னிலைக்கு வந்தவள் அவனை எந்த ஒரு சலனமும் இல்லாமல் வெற்று பார்வை பார்க்க ஏதோ ஒன்று அவளின் மனதை போட்டு உழற்றி கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவன்.
அவள் எதிர்பாராமல் அவளின் ரோஜா இதழில் தன் இணையை  சேர செய்தான். அவனின் செய்கையால் தன் மேனியில் ஒரு சொல்லமுடியா உணர்வு குடிகொள்வதை உணர்ந்து அதை தாளமுடியாமல் அவனிடம் இருந்து விடுபட முயன்றது.  அவனின் இரும்பக்கரமோ தன் பிடியை இன்னும் இறுக்கியது. இறுதியில் அவனிடம் தோற்பதும் சுகம் தான் என்று அவளும் அவனுடன் மூழ்கினாள்.
நிமிடங்கள் கரைந்ததே ஒழிய அவர்களின் சுவாசங்களும் தடுமாற தொடங்கியது.
இரண்டு நாழிகை கடந்தபின் விடுவிக்க மனமில்லாமல் அவளை விடுவித்தாலும் அவனின் கூரிய விழிகள் அவளின் செந்தாமரை முகத்தில் குடிக்கொண்டிருந்தது. அவனின் விழிகதிர்களை உள் வாங்கமுடியாமல் தன் முகத்தை பொர்கரங்களை கொண்டு மூடிட, இதழில் பூத்த புன்முறுவலை விரித்து அவள் கரங்களை பிரித்து “என்ன அரு? நான் கேட்ட கேள்விக்கு பதிலையே சொல்லாமல் அப்படி என்ன சிந்தனை உனக்கு? என்ன உன் மனதை போட்டு குழப்புகிறது ராணி  என்னிடம் சொல்லலாமல்லவா?” என்று கேட்க சற்று முன் நடந்தவற்றை தயங்கியபடி கூறினாள்.
கதிரவனின் நிறம் இதுவோ என்று அஞ்சுமளவிற்கு சிவந்திருந்தது அவன் விழிகள்.
“எவ்வளவு துணிச்சல் அவனுக்கு? வேறொருவனை மனதில் நினைத்திருக்கும் பெண் என்று தெரிந்தும் மதிகெட்டு பேசி சென்றிருக்கிறான். அவனின் உயிருக்கு நான் தான் காலன் ஆவேன்” என்று கொதித்தெழுந்திட அவனை தடுக்கும் வழிதெரியாமல் அணைத்து கொண்டவள். மெல்ல சமாதானம் படுத்தும் விதம் சொற்களை உதிர்த்தாள்.
“அவனை கோபத்தில் கொன்றுவிட்டு பின் பெரிய பகமை உருவாகுவதை விடுத்து என்னை உங்களின் மனைவியாக சீக்கிரம் உரிமையாக்கி கொள்ளுங்கள். இத்தனை வருடங்கள் என் காத்திருப்புக்கு நீர் விடுதலை அளிப்பீரா?” என்று ஏக்கமாக கேட்கும் தன்னவளை இந்நொடியே தன் சரிபாதியாக்கி கொள்ள மனம் துடித்தாலும் அதற்கும் ஒரு முறை இருக்கிறது என்று எண்ணியவன்.
“இன்னும் இருபது தினங்கள் அடுத்து நீ மனையாளாக என்னுடன் நம் அரண்மனையில் இருப்பாய் அன்பே. போதுமா?” என்று கெஞ்சுதலாய் கேட்டான்.
“திருப்தி தான் இருந்தாலும் உன் மனைவியாய் உன்னை சேரும் நாளுக்காக ஏங்கி கொண்டிருக்கிறேன். அதுவரைக்கும் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்.” என்றாள்.
இச்செய்தியும் தூதுவன் மூலம் மதுபாலனுக்கு எட்ட கொதித்து போனான். ‘என்ன நடந்தாலும் நீ எனக்கு தான் அருண்மொழி. அவனோடு ஒரு நாளும் உன்னை சேரவிடமாட்டேன். அப்படி ஒரு வேளை நடக்க இருந்தால் உன்னை கல்லறைக்கு அனுப்பவும் தயங்கமாடேனடி தேவி..’
‘என் காதல் எப்படி அவனை விட மலிவாகும்? உனக்காக என் எல்லா கொடிய பழக்கங்களையும் விட தயாராக இருக்கிறேன். அப்படி இருக்க அவனின்மேல் உன் மதி மயங்குகிறதோ.? கூடாது.’ என்று வெறிகொண்டவன் போல எல்லா பொருட்களையும் வீசி உடைக்க அவன் அறைமுழுவதும் அலங்கோலமானது.
தன் அன்னையிடம் கூறி அருண்மொழிதேவியை கைபிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கி இருந்தான் தமிழ்செருக்கன்.
அவர்களை சேரவிடாமல் தனதாக்கி கொள்ள எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தான் மதுபாலசெல்வன்.
நாட்கள் நகர தூதுபுறாக்கள் காதல் தெய்வங்களாகின இருவருக்கும்…
இருவரின் பரிபாஷனைகள் அதன்மூலம் இருக்க நயவஞ்சகமாய் திருமண ஏற்பாட்டிற்கு உதவுவது போல் நடித்து கொண்டு அரண்மனையை சுற்றி வந்தான் மதுபாலசெல்வன்.
திருமண நாளின் முந்தின இரவு தமிழ்செருக்கன் அருன்மொழிதேவியின் அரண்மனையை சேனை பரிவாரங்களுடனும் தன் அன்னையுடன் மிக பிரம்மாண்டமாய் வந்தடைந்தான்.
அவனை கண்டதும் தான் உயிர் திரும்பியது போல் இருந்தது அருண்மொழிக்கு.
திருமணம் முடியும் வரை இருவரும் சந்திக்க கூடாதென்று எல்லோரும் கூறிவிட அவளை எப்படி திருட்டு தனமாய் பார்ப்பது என்று திட்டம் போட்டு கொண்டிருந்தான் தமிழ்ச்செருக்கன்.
ஆனால் அங்கோ எப்படி விடிவதற்குள் அருண்மொழியை கடத்துவது என்று திட்டங்களை விவரித்து கொண்டிருந்தான் மதுபாலசெல்வன்.
“சொன்னது நினைவிருக்கட்டும் நாளை விடியும் பொழுது அவள் என் மஞ்சத்தில் தான் இருக்க வேண்டும். இதில் ஏதும் பிழை நடந்தால் உங்களில் ஒருவர் தலை கூட மிஞ்சாது.” என்று எச்சரிக்க.
“அந்த தமிழ்செருக்கன் இருப்பானே அரசே” என்றான் ஆர்வமிகுதியால்.
“முட்டாள் இவ்வளவு செய்தவன் அதை யோசிக்காமல் இருப்பேனா? அதற்க்கும் திட்டம் தீட்டியாயிற்று. இதோ இந்த நஞ்சை கலந்த பாலை அவனின்  அன்னைக்கு பருககொடுக்க நான் ஏற்பாடு செய்த பணிப்பெண்னிடம் கூறிவிட்டேன். அவன் அன்னையை காப்பதிலேயே தமிழ்செருக்கன் முனைந்திட அந்நேரம் அருண்மொழியை நாம் கடத்தவேண்டும்.” என்று மேலும் விவரிக்க இதை எதுவும் தெரியாத தமிழ்செருக்கன் நடுநிசியில் தன்னவளை காணபோகும் ஆசை கனவுகளோடு உறங்கசென்றான்..
நடுநிசிக்கு முன் மதுபாலனின் திட்டம் நிறைவேற தமிழ்செருக்கன் அன்னையை காப்பதில் கலவரத்தோடு ஓடிகொண்டிருக்க அந்நேரம் மூலிகையின் உதவியால் அருண்மொழியை மயங்கசெய்து கடத்திவிட்டான் மதுபாலசெல்வன்.
கடத்தியவன் அவன் மஞ்சத்தில் மயங்கியவள் விழிதிறக்கும் முன்  மங்கலநாணை அவள் கழுத்தில் பூட்டிவிட்டான்.
“இந்நொடி முதல் உன் மணாளன் நானே அன்பே. அந்த தமிழ்செருக்கன் அல்ல” என்று உரக்க வெற்றிகளிபோடு கூறியபடி அவள் அருகில் அமர்ந்து உறங்கும் அழகை விழிமூடாமல் பார்க்கதொடங்கினான்.
தன் தலையில் சம்மட்டி வைத்து யாரோ அடிப்பது போல் இருக்க களைப்போடு கண்விழித்தவள் தான் இருக்கும் அறையை நோக்க அது மாளிகையின் பஞ்சனை போல் தெரிந்ததும் படுத்திருந்த பஞ்சணையில் இருந்து இறங்க முற்பட்ட நேரம் அவள் செவிகளில் நாராசமாய் ஒலித்தது ஒரு குரல்.
“அன்பே! கண் விழித்துவிட்டாயா? உன் விழித்தலுக்காக தான் இத்தனை நாழிகை காத்திருந்தேன்.” என்றான் மதுபாலசெல்வன்.
அக்குரலிற்கு உற்றவனை திரும்பி நோக்கியவள் ஓர் நொடி சிலையென சமைய, “நீயா? என்னை எங்கு கொணர்ந்தாய்? எவ்வளவு துணிச்சல் உமக்கு? உன் விரல் என் மேனியில் பட்டதற்க்கே உன் தலையை கொய்ய நேரும் என்பதை மறந்தாயோ?” என்றாள் துள்ளிகுதித்து ஆவேசமாய்.
“ஏன் இந்த ஆவேசம் அன்பே! நேற்று வரை நான் யாரோ உனக்கு? இன்றிலிருந்து உன் மணாளன் அல்லவோ?” என்று எள்ளி நகைத்தான் மதுபாலன்.
“என்ன பிதற்றுகிறாய் நீ? மூடனே! என்ன தைரியம்? அச்சொற்களை உதிர்த்த உன் நாவினை அறுத்தெரிகிறேன் பார்!” என்று அவன் இடையில் இருந்த வாளினை அவனே எதிர்பாராமல் உருவினாள்.
அவளின் இச்செயலை எதிர்பாராதவன் கோபத்தின் உச்சியை தொட கர்ஜித்தான்.
“அருண்மொழித்தேவி…!!!”
“உன்னையே கவர்ந்து வந்ததோடில்லாமல் உன் செங்கழுத்தினில் மங்களநாண் பூட்டியவன்டி நான். என்னையே கொல்வாயோ நீ?” என்றான் திமிரான மிடுக்கோடு.
“என்ன?” கூக்குரலிட்டு தன் கழுத்தினில் மின்னியபடி தொங்கும் மங்கலநாணை பார்த்தவள் வெறியோடு.
“பேடியே? என் சுயஉணர்வு இல்லாமல் என்னை கவர்ந்து வந்த மூடனே? நீயெல்லாம் மாந்தரின் பிறவியெடுத்த மிருகம். ஓர் மங்கையின் அனுமதி இல்லாமல் அவளை பலவந்தமாக அபகரித்த கள்வனே! என் மனங்கவர்ந்தவர் நீயல்ல என அறிந்தும் இப்படியோர் ஈனசெயல் செய்த உன்னை நான் உயிரோடு இருக்க ஓர் நொடியும் அனுமதியேன்” என்ற நொடி அவன் நெஞ்சில் இறங்கியது அவளின் கரம் கொண்ட வாள்.
அதை தடுக்க லாவகமாக நகரமுயன்றவனின் மனமறிந்து செயல்பட்டாள் மங்கையவள்.
“கட்டிய கணவனை கொன்றவளே! நீயெல்லாம் ஒரு பெண்ணா!” என்று கேட்டபடி கிழே சரிய வெளியில் கேட்ட குதிரை குலம்பொலியின் அரவம் கூறியது மனம் கவர்ந்தவனென்று.
“என்னை கொன்றுவிட்டு அந்த கள்வனுடன் கள்ளத்தனமாய் வாழ செல்கிறாயோ? பாவி!” என்று மதுபாலசெல்வன் வலியில் துடித்தபடி சாபமிட்டான். “இந்த பிறவியில் என்னை சேராவிட்டாலும் எந்த பிறவியிலும் உங்கள் இருவரையும் சேரவிடமாட்டேன் இது என் குலதெய்வத்தின் மீது ஆணை” என்று கூறினான்.
“மதுபாலசெல்வனே! மடையனே! இத்திருநாட்டில் பிறந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கிய உன்னை ஏழேழு பிறவிக்கும் மன்னியேன். நான் ஒருவனை மட்டும் நினைத்தேன் என்பது சத்தியமானால் இன்னுமோர் பிறவியெடுத்து என் மனம் கவர்ந்த தமிழ்செருக்கனுடன் மாலைசூடுவேன். இது சத்தியம். என்று அவர் கரம் என் நெற்றியில் திலகம் இடுகிறதோ. அந்நொடி இப்பறவியின் நினைவுகள் முழுதும் எங்கள் இருவரையும் வந்து சேரும்.” என்று சூளுரைத்தாள்.
“ஒரு காலும் அவ்வாறு நடக்காது. அப்பிறவியிலும் நான் உன்னை எனதாக்கி கொள்வேனடி” என்று கூறிக்கொண்டே விழிகள் நிலைகுத்தி அவனின் உயிர் பிரிந்தது.
அதற்குள் உள்ளே நுழைந்த தமிழ்செருக்கன் அருண்மொழியை நெருங்க.
“அங்கேயே நின்றுவிடும்! ஓர் அடி நகராதே!” என்று கத்தினாள்.
பார்வையாலே இருவரின் விழிகளும் பல பாஷைகள் பேசி கொள்ள சுதாரித்து நின்ற அருன்மொழிதேவி.
“இவ்வுலகில் படைத்த மங்கையின் மனதில் ஒருவருக்கே இடமுண்டு அவ்விடமும் உனதன்றோ? இந்த நயவஞ்சகனின் குங்குமம் என் நெற்றி வகிட்டில் ஏன் ஏறவிட்டீர்?” என்று விழிநீர் கசிய பொங்கிய அழுகையுடன் கேட்கிறாள்.
“என் இதய சிம்மாசனத்தில் வீற்றிக்கும் இனியவளே! இவன் விளைவித்த குழப்பத்தில் என் அன்னையை இழந்துவிட்டு உனையும் இழக்க கூடாது என்று ஓடி வந்திருக்கிறேன் அன்பே! இருப்பினும் என்னால் இதை தடுக்க முடியவில்லையே? இவனை ரெண்டாக பிளக்கும் வேகத்தில் வந்த எமக்கும் முன் அக்காரியத்தை செய்துவிட்டாய். இம்மிருகத்தின் செய்யலை நீர் மறந்திடுவாயாகா!” என்று நெருங்கினான்.
“என்ன ஆனாலும் உன் நினைவுகளோடு இவன் நாணை சுமக்க நான் விரும்பேன். எந்தநொடி இவன் கரம் என் மேற்பட்டதோ அந்நொடியே என் புறமும் கரைபடிந்துவிட்டது. அடுத்த பிறவியில் உன்னை மட்டுமே வந்தடைவேன் அன்பே. உன்னை மட்டும் நான் நினைத்து வாழ்ந்தது உண்மையானால் இந்நொடி என் சரீரம் எரிந்து சாம்பலாகட்டும்.” என்று கூறிய மறுநொடி அவள் உடலில் தீச்சுவாலைகள் கொழுந்து விட்டெரிந்தது.
தன் உயிராய் நினைத்தவள் தன் கண்முன்னே பொசுங்கி சாம்பாலாகிட சொல்லொண்ணா துயரத்தில் கண்ணீரில் கரைந்தவன் அந்தநொடி முதல் நாட்டுமகளுக்காக மட்டும் தன்னவளின் நினைவுகளோடு வாழதொடங்கினான். தன் இறுதிமூச்சுவரை அருண்மொழித்தேவியை நினைத்து உயிர்நீத்தான் தமிழ்செருக்கன். .    

Advertisement