Advertisement

அத்தியாயம் 8
என் மரணம் உன் மடியில் 
நிகழுமென்றால் அதை
மகிழ்வுடனே ஏற்பேன் நான்!!!

காலேஜ் முடிந்ததுமே வீட்டுக்கு சென்று விட்டான் அர்ஜுன். அணு இருக்க சொன்னது நினைவில் வந்தது தான். ஆனால் அதை விட முக்கியமான வேலை இருக்கே என்று நினைத்து கொண்டே சென்று விட்டான்.
வீட்டுக்கு போனவன் தன் அம்மாவின் முன்பு அமர்ந்தான்.
“என்ன பா இன்னைக்கு பிராக்டிஸ் இல்லையா? சீக்கிரமா வந்துட்ட?”, என்று கேட்டாள் சந்திரிகா.
“இல்லை மா. பைக் ஆர்டர்  கொடுக்கலாம்னு நினைச்சேன். உங்க கிட்ட சொல்லிட்டு போக வந்தேன். உங்களுக்கு புடிக்கலைன்னா எனக்கு பைக் வேண்டாம். உங்களுக்கு பைக்னா பயம்னு எனக்கு தெரியும் மா”, என்றான் அர்ஜுன்.
அவன் கன்னம் வருடிய  சந்திரிகா, “எனக்காக யோசிச்சு உன்னோட ஆசையை நீ வேண்டாம்னு சொல்றப்ப, உன்னோட ஆசைக்கும் நான் மதிப்பளிக்கணும்ல பா? என்னோட பயம், உன்னோட சந்தோசத்தை  அளிக்க கூடாது. ஆபத்து எல்லா ரூபத்துலயும் தான் இருக்கு. அதை நினைச்சு நான் இத்தனை நாள் வேண்டாம்னு சொன்னது தப்பு தான் அர்ஜுன். நீ சந்தோசமா வாங்கிக்கோ”, என்றாள்.
“அப்ப வாங்க. ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வருவோம்”
“இந்த வேலை தான வேண்டாங்குறது. நீ வாங்கிக்கோ. ஆனா என்னை எல்லாம் கூப்பிட கூடாது. அப்புறம் அர்ஜுன் கண்ணா, வேகமா போகாம மெதுவா போகணும். அம்மாக்காக சரியா டா”
சந்திரிகாவின் கவலையையும், பயத்தையும் உணர்ந்தவன் “எனக்கு நீங்க முக்கியம் மா. உங்களுக்காக, நான் எப்பவுமே வேகமாவோ, கவன குறைவாவோ வண்டியை ஓட்ட மாட்டேன் சரியா?”, என்றான்.
“சரி டா. அப்புறம் அணு கிட்ட பேசுனியா?”
“பேசுனியா வா?”, என்று ஆரம்பித்து அன்று நடந்த விசயங்களை சந்திரிக்காவிடம் சொல்லி சிரித்தான் அர்ஜுன்.
அர்ஜுன் மாதிரியே சந்திரிக்காவும் அணுவை தைரியசாலி என்று பாராட்டினாள்.
சிரித்து  கொண்டே எழுந்து சோ ரூம் போனான் அர்ஜுன். அங்கே அவனுக்கு பிடித்த பைக்கை ஆர்டர்  கொடுத்தான்.
“நாளைக்கு டெலிவர் பன்றோம் சார்”, என்ற கடை காரரிடம், “நாளைக்கு ஈவ்னிங் வந்து நானே எடுத்துக்குறேன்”, என்றான்.
சரி என்று அவர் சொன்னதும் சந்தோசத்துடன் வீட்டுக்கு வந்தான்.
அடுத்து சந்திரிக்காவிடம் சிறிது நேரம் பேசி விட்டு, சாப்பாட்டையும் முடித்து விட்டு, தன்னுடைய அறைக்கு போனான்.
அணுவை பற்றி நினைத்த அர்ஜுன் சிரித்து கொண்டான். “நாளைக்கு அவளை கூட்டிட்டு போய் தான் பைக் வாங்கணும்”, என்று நினைத்து கொண்டவனுக்கு நாளைக்கு சனி கிழமை என்பது நினைவு வந்தது. “நாளைக்கு காலேஜ் லீவு ஆச்சே”, என்று நினைத்தவனுக்கு அவளை எப்படி கூப்பிட என்ற யோசனை வந்தது.
அப்போது போன் அடித்தது.
ஓடி போய் எடுத்தான் அர்ஜுன்.
நேற்று வந்த நம்பர் அவன் கண்களில் விழுந்தது.
“ரைட்டு சைத்தான் நினைச்ச உடனே வந்துடுச்சு. இன்னைக்கு என்ன எழுத சொல்ல போறாளோ”, என்று சிரித்தவன் அதை எடுத்து “ஹலோ  யாரு?”, என்று கேட்டான்.
அந்த பக்கம் அமைதியாய் இருந்தது.
“ஹலோ யாருங்க? போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க?”
“ஹ்ம்ம் உங்க பாட்டி”, என்றாள் அணு.
“பாரு டா. எங்க பாட்டிக்கு சொர்கத்துக்கு போன அப்புறமும் இந்த பேரன் மேல ரொம்ப பாசம். எப்படி இருக்கீங்க பாட்டி? தாத்தா எப்படி இருக்காங்க?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“லூசு அர்ஜுன்”
“ஓ  அணு நீயா?”
“நடிக்காத. நான் தான் பண்றேன்னு உனக்கு தெரியும். அப்புறம் ஏன் சீன போடுற”
“கண்டு பிடிச்சிட்டியா? சரி இன்னைக்கு என்ன எழுதணும்?”
“அதெல்லாம் வேண்டாம். உன்னை திட்ட தான் போன் செஞ்சேன்”
“எதுக்கு? நான் என்ன அணு செஞ்சேன்?”
“என்ன செஞ்சியா? உன்னை சாயங்காலம் என்கூட தான வண்டில வர சொன்னேன். உன்னை தேடுனேன். நீ இல்லை”
“ஒரு முக்கியமான வேலை வந்துட்டு அணு. அதான் பஸ்ல வந்துட்டேன். ஆமா நீ எதுக்கு மதியம் அப்படி சொன்ன? பிரண்ட்ஸ் தப்பா நினைச்சி, நான் தான் அவங்களை சமாதான படுத்த வேண்டியதா போச்சு”
“பின்ன நீ மட்டும் நான் பயந்ததை பத்தி சொல்லலாமா? சொன்னா இப்படி சொல்லுவேன்னு சொல்லிருந்தேன் தான?”
“லூசு உன்னையும் சேத்து தான தப்ப நினைப்பாங்க”
“நினைச்சா நினைக்கட்டும் அர்ஜுன். சரி சாப்பிட்டியா?”
“சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா? என்ன சாப்பாடு அங்க?”
“எங்க அப்பா பூரி சுட்டு தந்தாரு”
“அட பாவி சமையலும் அவர் தானா? நீ செய்ய மாட்டியா?”
“நீ வேற? நான்  சமையல் கட்டுக்கு போனா அவருக்கு சரி கடுப்பு வந்துரும்”
“ஏன் அப்படி?”
“அம்மாக்கு சமையல்னா உலகமாம் அர்ஜுன். அவங்க அதிகமா சமையல் அறைல தான் இருப்பாங்க. அப்பாவுக்கும் அம்மா அங்கேயே இருக்காங்கன்னு நினைப்பு. நான் போனா எதையாவது நோண்டி வச்சிருவேன். அதுக்காக அப்பா என்னை அங்கேயே விட மாட்டாங்க. அப்பாவும் சூப்பரா சமைப்பாங்க”
“ஹ்ம்ம் பாவம் அவர். ஆண்ட்டியை ரொம்ப விரும்பிருப்பார் போல”
“ஹ்ம்ம் ஆமா ரெண்டு பேருக்கும் செம லவ். சரி என்னை சொல்லிட்டு நீ மட்டும் ஏன் ஆண்ட்டின்னு சொல்ற? அம்மான்னு சொல்ல வேண்டியது தானே?”
“இப்படி மடக்குறாளே”, என்று நினைத்து கொண்டு, “சரி இனிமே அப்படியே சொல்றேன்”, என்றான்.
“வேண்டாம் வேண்டாம் நீ ஆண்ட்டி, அங்கிள் னே சொல்லு அர்ஜுன்”, என்று அவசரமாக சொன்னாள் அனுராதா.
“ஏன்? பிரண்டோட அம்மா அப்பாவை, அம்மா அப்பான்னு தான் கூப்பிடனும்? நான் அப்படியே கூப்பிடுறேன்”, என்றான் அர்ஜுன்.
“நீ சரியான டியூப் லைட் அர்ஜுன். சரி அதை விடு. என்ன பண்ற?”
“நானா டியூப் லைட்?”, என்று நினைத்து கொண்டு, “சும்மா படுத்துருக்கேன்”, என்றான் அர்ஜுன்.
“சரி நாளைக்கு என்ன பிளான்?”
“பிளான் எல்லாம் ஒன்னும் இல்லை. இப்ப எதாவது படம் பாத்துட்டு, காலைல கூட கொஞ்ச நேரம் தூங்கிட்டு, சாப்டுட்டு மறுபடியும் சாப்டுட்டு இப்படியே நேரம் ஓடிரும்”
“அப்ப உனக்கு அர்ஜுன்னு பேர் வச்சிருக்க கூடாது. தூங்கு மூஞ்சி, தின்னி பண்டாரம்னு பேர் வச்சிருக்கணும் அர்ஜுன்”
“அடிங்க,… நீ மட்டும் என்ன செஞ்சு கிளிப்பியாம்? வெட்டியா தானே இருப்ப?”
“ஏய் யாரை பாத்து என்ன வார்த்தை சொல்ற அஜ்ஜு? நான் லீவு நாள் அப்பாக்கு ஒர்க்ல ஹெல்ப் பண்ணி கொடுப்பேன்”
“யாரு நீ? எங்க உண்மையை சொல்லு. நீ செய்ற வேலைக்கு அவருக்கு ஐயோ இவ இங்க இருந்து போனா நல்லா இருக்கும்னு தான் நினைப்பு இருக்கும்”
“ஹி ஹி. அப்படியும் சொல்லலாம். சரி அப்ப நாளைக்கு எனக்கு ட்ரீட் தரியா? “
“ட்ரீட்டா? என்ன ட்ரீட்? எதுக்கு?”
“டேய் பிளேட்டையே மாத்துற பாத்தியா? பைக் க்கு தரேன்னு சொன்ன?”
“அது பைக் வாங்கிட்டு பாக்கலாம்”
“வெவ்வ வெவ்வ. சண்டை போ”
“கோப படாத அணு. நாளைக்கு ஈவினிங் தான் வண்டி வாங்க போகணும். ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு ஈவினிங் வரியா? ட்ரீட் தரேன்”
“ஈவ்னிங்கா? அப்ப உன்கூட கொஞ்ச நேரம் தானே இருக்க முடியும்? எனக்கு புல் டே உன் கூட இருக்கணும்”, என்று கிறக்கமாக ஒலித்தது அவள் குரல்.
“இதுக்கு என்ன அர்த்தம் எடுக்கணும்?”, என்று புரியாமல் முழித்தான் அர்ஜுன்.
“என்கூட இருக்க ஆசை பட நீ என்ன என்னோட லவ்வரா?”, என்று கேக்க வந்த கேள்வியை மனதுக்குள்ளே புதைத்தவன் “சரி சண்டே வெளிய போகலாம்”, என்றான்.
“ஹ்ம்ம் இது நல்ல ஐடியா தான். ஆனா நீ நாளைக்கு தானே பைக் வாங்க போற? அப்ப ட்ரீட்டும் நாளைக்கு தானே கொடுக்கணும்?”
“அப்ப இப்ப என்ன தான் என்னை செய்ய சொல்ற? அதை தானே நானும் சொல்றேன்”
“லூசு. நான் சொல்ற படி செய். நாளைக்கு இங்க பக்கத்துல இருக்குற இடத்துல ட்ரீட் கொடு. நாளான்னைக்கு எங்கயாவது வெளிய போகலாம்”
“என்கூட வெளிய வந்தா உங்க அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”
“அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. நீ நாளைக்கு என் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போ”
“சரி வண்டி டெலிவரி எடுத்துட்டு உன்னை கூப்பிட வரேன்”
“ஹ்ம்ம் சரி டா”
“லூசு அணு கேக்கணும்னு நினைச்சேன். எதுக்கு, தர்மா சாரை அப்படி மாட்டி விட்ட? ரொம்ப நல்ல சார் தெரியுமா? பாவம் அவர். எங்களுக்கே கஷ்டமா இருந்துச்சு”
“சாரி அர்ஜுன். பவி சூசைட் பண்ண போறேன்னு அழுதுட்டா. கேன்டீன்ல, உங்கிட்ட பேசிட்டு போனேன்ல? அங்க அழுதுட்டு இருந்தா. இன்னொரு விஷயம் சொல்லவா, அவ கையை வேற கீறிக்கிட்டா. என்ன செய்றான்னு நான் பாக்கும் போது தான் அதை செஞ்சிட்டு இருந்தா. அதனால தான் எங்க எல்லாருக்குமே கோபம் வந்துட்டு. ஆனா அதை நாங்க யார் கிட்டயும் சொல்லலை. பட் சாரை பத்தி எங்களுக்கும் தெரியாதே அதான்”
“ஹ்ம்ம் நாளைக்கு எதுக்கும் அவரை தனியா மீட் பண்ணி சாரி கேட்ரு அணு. அவர் உங்களால ஹார்ட் ஆகிருப்பார்”
“ஹ்ம்ம் சரி அர்ஜுன்”
“ஏன் அணு? அவருக்கு நம்ம காலேஜ்ல இருக்குற அத்தனை பொண்ணுங்களும் ரசிகைகள். ரொம்ப அழகுன்னு எங்க கிளாஸ் பொண்ணுங்களே சைட் அடிப்பாங்க. உனக்கு அப்படி ஒன்னும் தோணலயா?”
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள் அணு.
“என்ன ஆச்சு அணு? அமைதியாகிட்ட? ஏதாவது தப்பா கேட்டுடேனா?”
“அதெல்லாம் இல்லை அர்ஜுன். இந்த உலகத்துல ஒருத்தனை தவிர, வேற யாராலயும் என் மனசுல சலனத்தை ஏற்படுத்த முடியாது”
ஒரு நொடி அதிர்ச்சியான அர்ஜுன் “அது யாரு?”, என்று கேட்டான்.
“என்னோட ஹஸ்பண்ட்”
“என்னது ஹஸ்பண்ட் டா? உனக்கு கல்யாணம் ஆகிருச்சா?”
“லூசு பியூச்சர்ல வர போறவனை சொன்னேன் டா”
“சரி அவனை எப்ப பாப்ப?”
“நீ தெரிஞ்சு பேசுறியா? தெரியாம பேசுறியான்னு தெரில. இதுக்கு பதில் நீயே கண்டு பிடிச்சுக்கோ. சரி எனக்கு தூக்கம் வருது”
“அட பாவி, இப்படியா சஸ்பென்ஸ் வச்சிட்டு போறது. சரி தூங்கு. நான் வைக்கிறேன்”

Advertisement