Advertisement

அத்தியாயம் 6
எந்த எழுதுகோலும் இன்றி
உன்னைப் பற்றிய கவிதைகளை
எழுதுகிறது என் மனம்!!!

வெளியே இருவரும் வந்தார்கள். சிவா அவர்களை பார்த்து சிரித்தான்.
தன்னுடைய வண்டியை எடுத்த அணு சுற்றி முற்றி பார்த்து விட்டு அர்ஜுன் முகத்தை பார்த்தாள்.
“எதுக்கு இப்படி முழிக்கிறா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான் அர்ஜுன்.
“அர்ஜுன்….”
“என்ன அணு?”
“இருட்டிருச்சு”
“ஆமா இருட்டிட்டு”
“இல்லை நீ கொஞ்சம் என் வீட்டுக்கு வந்து விட்டுட்டு போறியா?”
“ஹா ஹா பயந்தான்கொள்ளி. உன்னோட, சிரிப்பு தான் போ. பெரிய இவ மாதிரி பக்கத்துல தான வீடுன்னு சீன போட்ட? இரு சிவா கிட்ட பைக் வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி நடந்தான்.
அவள் வீடு வரைக்கும் அவளுடன் வண்டியில் சென்றான் அர்ஜுன்.
“உள்ள வா”, என்று அழைத்தாள் அணு.
“இன்னொரு நாள் வரேன் அணு”, என்றான் அர்ஜுன்.
“சரி, இப்ப வேற யாரும் வீட்டில இருக்க மாட்டாங்க. நீ வந்தா அவ்வளவு தான். போ போ”, என்று சிரித்தாள் அணு.
பை சொல்லி விட்டு வந்தவனுக்கு “எதுக்கு இப்படி சொன்னா?”, என்ற யோசனை வந்தது.
“யாரும் இல்லைன்னு தான சொன்னா? அவ துணைக்கு நான் இருந்தா அவளுக்கு நல்லது தான? ஆனா நான் கூட இருந்தா அவ்வளவு தான்னு ஏன் சொன்னா?”, என்று யோசித்தவன் “இவ செய்றதுக்கு எது தான் காரணம்  புரிஞ்சிருக்கு? இது புரிய”, என்று நினைத்து கொண்டு கடைக்கு சென்றான்.
அம்மாவுக்கு தெரியாமல் சிவாவிடம் வண்டியை ஒப்படைத்தவன் வீட்டுக்குள் சென்றான்.

“புக் வாங்கிட்டியாப்பா?”, என்று கேட்டாள் சந்திரிகா.
“வாங்கிட்டேன் மா. உங்களுக்கு மாத்திரையும் இருக்கு. வாங்க சாப்பிட்டுட்டு போட்டுக்கோங்க.”
“சரி வா”, என்று அவனுடன் நடந்தவர் “உங்க அப்பா பைக்ல போகும் போது தான் ஆக்சிடென்ட் ஆகி இறந்தார். அதனால தான் நான் உன்னை வண்டி ஓட்ட விடலை”, என்று ஆரம்பித்தாள்.
“ஐயோ! அம்மா, இப்ப எதுக்கு இதை ஆரம்பிக்கிறாங்க? நான் வண்டியை எடுத்துட்டு போனது தெரிஞ்சிட்டா?”, என்று அவன் யோசிக்கும் போதே “அணு வண்டியை நீ தான் ஓட்டிட்டு வந்தியாமே?”, என்று கேட்டாள் சந்திரிகா.
“அந்த அரை லூசு தான் போட்டு கொடுத்துட்டாளா? வந்ததுக்கு நல்ல வேலை செஞ்சிருக்கா?”, என்று நினைத்து கொண்டு பாவமாய் அம்மாவை பார்த்து விட்டு “சாரி மா”, என்றான்.
“நீ எதுக்கு அர்ஜுன் சாரி கேக்குற? நான் தான் கேக்கணும்”
“அம்மா”
“ஆமா பா. ஒரு தடவை நடந்தா மறுபடி நடக்கும்னு எதாவது இருக்கா என்ன? இல்லை பைக்ல போனா மட்டும் தான் ஆபத்து வருமா? பஸ்ல வந்தா கூட வர தான் செய்யும்? அதுக்காக உன்னோட ஆசையை நான் தடை பண்ணிட்டேன்ல. அணு தான் இதை எல்லாம் எனக்கு புரிய வச்சா. நாளைக்கே உனக்கு பிடிச்ச வண்டியை பார்த்து எடுத்துக்கோ பா”, என்று சொல்லி கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
பிரம்மித்து போய் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனுக்கு சிறு வயதில் இருந்தே வண்டி மீது ஆசை. ஆனால் அம்மா தடை செய்தவுடன் தன்னை அடக்கி கொண்டான். ஆனால் அவன் நண்பன் தான், “கத்துக்கோ மச்சி”, என்று சொல்லி கத்து கொடுத்தான். அதையும் சந்திரிகாவிடம் வந்து சொல்லி நல்ல திட்டும் வாங்கினான் அர்ஜுன்.
“அப்படி தடை செய்ய பட்டிருந்த பொருள் இன்னைக்கு கிடைச்சிருச்சா? வந்த முதல் நாளே என்னோட ரொம்ப நாள் ஆசையை நிறைவேற்றி கொடுத்துட்டாளா?”, என்று சந்தோசமாக இருந்தது அவனுக்கு.
சந்திரிகா சாப்பிட்டு முடித்த பின்னர், “எல்லாம் காலைல பார்வதி எடுத்து வச்சிக்குவா டா. நீ எதாவது படிக்கிறதுக்கு இருந்தா போய் படி. அப்புறம் அணு வீட்டுக்கு பத்திரமா போய்ட்டாளான்னு போன் பண்ணி கேட்டுரு. நான் தூங்க போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட தட்டை மட்டும் எடுத்து அழுக்கு கூடையில் போட்டவன் கையை கழுவி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றான். அப்போது தான் அணு வீட்டுக்கு போய்ட்டாளான்னு போன் செஞ்சு கேளு என்று அம்மா சொன்னது நினைவு வந்தது.

அவனுக்கு போன் இல்லாததால், வீட்டு லைன்  அருகே அவன் கால்கள் சென்றது. அப்போது தான் அவளுடைய நம்பரை அம்மா எழுதி வைத்தது நினைவு வந்தது.

கீழே வந்தவன், கீழே உள்ள போன் அருகே இருந்த பேப்பரை எடுத்து விட்டு, மேலே வந்தான்.

அவளுடைய நம்பரை பார்த்து கொண்டே கூப்பிடலாமா என்று நினைத்தான்.

“அம்மா தான் அவ வீட்டுக்கு போய்ட்டாளான்னு கேக்க சொன்னாங்க. ஆனா நான் தான கூட்டிட்டே போனேன். அப்ப என்ன கேக்க?”, என்று நினைத்து கொண்டே கையில் எடுத்தவன் வேண்டாம் என்று நினைத்து வைத்து விட்டான். 
மறுபடியும்  போனை  கையில்  எடுத்தான். அப்புறம்  தைரியம்  இல்லாமல்  வைத்தே  விட்டான்.

ரூமுக்கு  போக  திரும்பியவன்  அந்த  கார்ட்லெசை  மட்டும்  தூக்கி  கொண்டே  அறைக்கு  சென்றான்.

“இப்ப  எதுக்கு  இதை தூக்கிட்டு வரேன். பண்ணவும் பயமா இருக்கு. அப்புறம் ஏன் டா இப்படி பண்ற?”, என்று தனக்கு தானே புலம்பி கொண்டு அமர்ந்திருந்தவன் கண்களுக்குள் வந்து போனாள் அனுராதா.

அவன் இதுவரை பார்த்திராத புதுவகையான பெண். 

“எலிக்கு பயந்து எப்படி என் மேல ஓட்டிகிட்டா. அப்படியே பஞ்சு மாதிரி இருக்கா”, என்று நினைத்து அந்த நினைவை ஓட்டி பார்த்தான்.

மனதுக்குள் இனித்தது. “ரொம்ப என்னை டிஸ்டர்ப் பண்றா. அம்மா கிட்ட என்ன சொல்லிருப்பா? பேசணும் போல இருக்கே. அதை விட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கே. பேசாம பைக் வாங்கி கொடுக்க சொன்னதுக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாமா?”, என்று அவன் யோசிக்கும் போது எண்ணத்தின் நாயகியே அவனை அழைத்தாள்.

“யார் இந்த நேரத்தில்”, என்று எடுத்து காதில் வைத்தான் அர்ஜுன். 
“ஹெலோ யாரு?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“அர்ஜுன் நான் தான் அணு”
“அணு…..”
“என்ன இப்படி இழுக்குற அர்ஜுன்? வீட்டுக்கு போயிட்ட போல?”
“எப்படி தெரியும் உனக்கு?”
“லூசு வீட்டில் இருந்து போன் அட்டண்ட் பண்ற? அப்ப புரியாதா?”
“சரிங்க மேடம். நீங்க அறிவாளி தான். அப்பா வந்தாச்சா?”
“வந்துட்டாங்க. ஆனா பிளாட் ஆகிட்டாங்க”
“புரியல”
“வாசு குடிச்சிட்டு வந்துருக்கான் அர்ஜுன்”
“வாசு யாரு?”
“எங்க அப்பா தான்”
“அட பாவி அவன், இவன்னு சொல்ற?”
“அதெல்லாம் அப்படி தான். உன்னை சொல்றேன்ல? அதே மாதிரி”
“என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறாளா?”, என்று நினைத்து நெகிழ்ந்தான் அர்ஜுன்.
“என்ன டா அமைதியாகிட்ட?”, என்று கேட்டாள் அணு.
“ஒண்ணும் இல்லை. அப்பா டிரிங்க்ஸ் அடிப்பாங்களா அணு?”
“என்னால தான். கொஞ்சமா குடிப்பாங்க. நைட் மட்டும்”
“உன்னாலயா?”
“ஆமா, இல்லைனா அவரை தூங்க விடாம டார்ச்சல் பண்ணுவேன். கதை சொல்லுன்னு உயிரை வாங்குவேன். எனக்கு பயந்துட்டே மட்டையாகிருவார்”
“அட பாவி, ஒரு மனுசன் எதுக்கெல்லாமோ  குடிப்பான். இப்படி பிள்ளை தொல்லை தாங்க முடியாம குடிசாருன்னா, அவர் உன்னால எவ்வளவு கஷ்ட பட்டுருக்கணும்?”
“சரி சரி ரொம்ப புகழாத. ஆனா அவருக்கு தெரியலை. இனி அவரை தொல்லை செய்ய மாட்டேன்னு”
“பார் டா.  திருந்திட்டியா என்ன? இதை சொன்னா அவர் ரொம்ப சந்தோச படுவார். ஆமா எப்படி திருந்தின?”
“கொடுமை படுத்துறதுக்கு இன்னொரு ஆள் கிடைச்சிட்டு அதான்”, என்று சிரித்தாள் அணு.
“யாரு அந்த அடிமை?”
“நீ தான் அர்ஜுன். அதுக்கு தான உன்னை பிரண்ட் பிடிச்சேன்”
“அட பாவி”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் அர்ஜுன்.
“ஹா ஹா”
“பல்லை காட்டாத. சரி  சொல்லு என்ன இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க?”
“நான் வீட்டுக்கு வந்துட்டேனு அத்தை சொல்ல சொன்னாங்கள்ல? அதான் பண்ணேன்”
“லூசு நம்புற  மாதிரி சொல்லு. நான் சொல்லிருப்பேனு தெரியாதா? அம்மா இந்நேரம் படுத்திருப்பாங்கன்னு தெரியாதா? நான் தான் போன் எடுப்பேன்னு தெரிஞ்சு தான பண்ணுன?”
“ஹா ஹா கண்டு பிடிச்சிட்டியா? சும்மா தான் பண்ணேன் அர்ஜுன்”
“சும்மாவா? ஒழுங்கா சொல்லு அணு”
“அது வந்து தூக்கம் வருது அர்ஜுன்”
“லூசு அப்ப தூங்காம எனக்கு எதுக்கு போன் பண்ண?”
“நாளைக்கு அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்”
“அதுக்கு?”
“நீ முடிச்சு கொடேன்”
“என்னது அசைன்மெண்டா? கொன்னுருவேன். நான் எல்லாம் செய்ய மாட்டேன்”
“ப்ளீஸ் அஜ்ஜு. என் செல்லம்ல? முடிச்சிட்டு வந்துரு டா”
“அழகான பொண்ணு இப்படி கொஞ்சினா எந்த மடையனாவது  சும்மா இருப்பானா?”, என்று நினைத்து சிரித்து  கொண்டே “அது என்ன அஜ்ஜு?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“அர்ஜுன்னு பேர் பெருசா இருக்கு. அதான்”
“ரொம்ப பெருசு தான். சரி டாப்பிக் சொல்லு”
“மேனேஜ்மேண்ட் அப்பிளிக்கேஷன்”
“பிரிண்ட் அவுட் சப் மிட்  பண்ணா போதுமா??”
“அதுன்னா நானே செஞ்சிற மாட்டேனா?”
“அப்ப”
“கை வச்சு  எழுதணும் அஜ்ஜு”
“அட பாவி, இப்படி இவ்வளவு பெரிய பொறுப்பையா தலையில் கட்டுறது”
“பிரெண்டுன்னா உயிரையே கொடுக்கணும்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமா? நீ உன் கையை கூட கடன் கொடுக்க மாட்டிக்க?”
“சரி சரி செஞ்சு தொலைக்கிறேன். எத்தனை அப்பிளிக்கேஷன் எழுதணும்?”
“பத்து எழுதணும். கொஞ்சம் ரியல் அப்ப்ளிகேஷன்னா  நல்லா இருக்கும்”
“எழுதி தொலைக்கிறேன். போனை வை. வச்சி தொலை”
“ஹா ஹா அப்புறம் அர்ஜுன், அழகா எழுதி தொலைச்சிறாத. என்னோட எழுத்து கோழி கிண்டுனது மாதிரி தான் இருக்கும். அப்படி கொஞ்சம் எழுது”
“இது வேறயா? அழகா எழுதாதவங்க அழகா எழுத டிரை பண்ணலாம். அழகா எழுதுறவங்க எப்படி அசிங்கமா எழுதுறது?”
“எப்படியோ எழுதி முடிச்சிட்டு வந்துரு. போன் உன்கிட்ட தான் இருக்குமா?”
“ஆமா”
“சரி சரி. நீ இப்பவே முடிச்சிட்டு படு சரியா? மணி ஒன்பது தான ஆகுது?”
“சரி லூசு எழுதிட்டே  தூங்குறேன்”
“முன்னாடி இன்டெக்ஸ் பேப்பரும் டெகரேட் பன்னிரு அஜ்ஜு. என் பேர் எல்லாம் சரியா எழுதிரு”
“உன்னை கொல்ல போறேன். அதை கூட செய்ய மாட்டியா?”
“ப்ளீஸ்  அஜ்ஜு”
“சரி அணு தான உன் பேரு?”
“அனுராதா”
“ஓகே அனுராதா மேடம். இப்ப போனை வைக்கிறீங்களா?”
“ஓகே பை”, என்று வைத்து விட்டாள்.
சிரித்து கொண்டே  “கம்ப்யூட்டர் ரூம் போகலாம். திருப்பி போன் செஞ்சாலும் செய்வா”, என்று நினைத்து போனையும் கையில் தூக்கி கொண்டே சென்றான்.
“எனக்கு கூட இப்படி உக்காந்து எழுதிருக்க மாட்டேன்”, என்று நினைத்து கொண்டே எழுத ஆரம்பித்தான்.
அவன் எல்லாம் தேடி எழுதி முடிச்சு, முன்னாடி அவ பேரும் எழுதி முடிக்க, மணி பதினொன்னு ஆனது.
எழுந்து சோம்பல் முறித்தவன், அதை தன்னுடைய காலேஜ் பேகில் வைத்து விட்டு, தன்னுடைய அறைக்கு சென்றான்.
கட்டிலில் படுத்தவனுக்கு அப்போது தான் கண்களை சுழற்றியது தூக்கம். அந்த நேரம் அவனுடைய போன் அடித்தது.
தூக்கத்தில் இருந்து விழித்து அதை எடுத்தான் அர்ஜுன்.
“முடிச்சிட்டியா அர்ஜுன்?”, என்று கேட்டாள் அணு.
“முடிச்சிட்டேன். இதை கேக்கவா தூங்கிட்டு இருந்தவ, எந்திச்சு போன் பண்ற?”
“தேங்க்ஸ் டா. ஆனா இப்ப தான் நான்  தூங்கவே போறேன்”
“அட பாவி. அப்பவே தூக்கம் வருதுனு சொல்லி என்னை எழுத வச்ச?”
“தூங்கலாம்னு நினைச்சேன் அஜ்ஜு. பட் தூக்கம் வரலையா? அதனால பைண்டிங் நீமோ படம் பாத்துட்டு இருந்தேன்”
“ஆமா இவ பாப்பா பாரு? பொம்மை படம் பாக்க?”
“நீயும் தான அதை பாத்துருக்க? அதனால தான அது பொம்மை படம்னு உனக்கு தெரியுது”
“சரி சரி விடு”
“எல்லா மனுஷங்களுக்குள்ளயும் சின்ன புள்ளைங்களோட விளையாட்டு புத்தி ஒளிஞ்சிருக்கும் அர்ஜுன்”
“சரி உன்னோட பிரசங்கத்தை நடத்த நல்ல நேரம் பாத்த போ. போய் இப்பவாது தூங்கு”
உருகுதல் தொடரும்…..

Advertisement