Advertisement

அத்தியாயம் 5
உன்னுடன் கழிக்கும்
பொழுதுகளில் என் துன்பங்கள்
கரையும் மாயம் என்னவோ?!!!
அவன் பின்னே அமர்ந்தவள் சும்மா கிடக்காமல், அவன் முதுகில் ஒட்டி அமர்ந்தாள்.

முன்னே நகர்ந்து அமர்ந்தான் அர்ஜுன்.

மறுபடியும் அதே தொடர, “கொஞ்சம் நகர்ந்து உக்காரு அணு”, என்றான் அர்ஜுன்.

“இன்னும் நகர்ந்து உக்காந்தா நீ எப்படி அர்ஜுன் ஓட்டுவ?”

இவளை என்று பல்லை கடித்தவன், “இந்த பக்கம் சொல்லலை. கொஞ்சம் பின்னாடி நகர்ந்து உக்காரு”, என்றான்.

“எதுக்கு நான் கீழே விழவா?”, என்று கேட்டு கொண்டே அவன் தொளிலும் கை வைத்து கொண்டாள்.

“இதுக்கு மேல எதாவது சொன்னா, கட்டி பிடிச்சாலும் பிடிப்பா”, என்று நினைத்து கொண்டு அமைதியாய் வந்தான். 

முதல் முறை வியந்தான் அர்ஜுன். வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்படி வந்தது என்று குழப்பமாய் இருந்தது அவனுக்கு.

“இவளை இன்னைக்கு  தான் ரெண்டாவது தடவை பாக்குறேன். அதுக்குள்ளே எனக்குள்ளே என்னமோ புதுசா தோணுது. இவ வெகுளியா? இல்லை திமிர் பிடிச்சவளா? பயந்த சுபாவமா? பேரை தவிர வேற எதுவுமே தெரியாது. ஆனா இவளோட அருகாமையை ரசிக்கிறேன் ஏன்?”, என்று யோசித்து கொண்டிருந்தான். 
அவன் யோசனையை தடை செய்தது அவள் கேள்வி.
“என்ன அர்ஜுன் பேசாம வர?”
“இல்லை நீ நல்லவளா, கெட்டவளான்னு யோசிச்சிட்டு வரேன்”
“விடை கிடைச்சதா அர்ஜுன்?”
“தெரியலையே! நீயே சொல்லிறேன்”, என்று சிரித்தான்.
“ரொம்ப ரொம்ப கெட்டவ. கவனமா இருந்துக்கோ. சரி இப்ப வண்டி ஓட்டிட்டு போற? அத்தை பாத்தா,  ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”
“அத்தையா, யாரு? உன் அத்தை என்னை என்ன சொல்லணும்?”
“லூசு, உங்க அம்மாவை தான் அத்தைன்னு சொன்னேன்”
அதிர்ச்சியாக வண்டியை நிறுத்தியே விட்டான்.
அவன் திடிரென்று நிறுத்தியதில் அவன் மேலே மோதி விலகியவள் அவன் முதுகிலே குத்தினாள்.
“என்ன ஆச்சு அர்ஜுன்?”
“நீ எங்க அம்மாவையா அத்தைன்னு சொன்ன?”
“பின்ன யாரை சொன்னேன்?”
“ஏன் அப்படி சொன்ன?”
“பிரண்டோட அம்மாவை ஆண்ட்டின்னு சொல்லலாம் தான?”
“ஹ்ம்ம் சொல்லலாம் தான். ஆனா நீ அத்தைன்னு சொன்னியா? நான் வேற ஏதோ நினைச்சேன்”
“வேற என்ன நினைச்ச அர்ஜுன்?”
“ஒன்னும் இல்லை”
“லூசு டா நீ. வண்டியை எடு”
“டா ன்னு சொல்லி என்கிட்ட அடி வாங்க போற”, என்ற படியே வண்டியை கிளப்பினான்.
“சரி பதில் சொல்லு அர்ஜுன்”
“அம்மாவுக்கு தெரியாது. நான் வீட்டுக்கு கொஞ்சம் முன்னாடியே இறங்கிக்கிறேன். அங்க இருந்து நடந்து போயிருவேன்”
“அட பிராடு, என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டியா?”
“எதுக்கு? எங்க அம்மா எதாவது சொல்லவா?”
“ஏன் உங்க அம்மா ரொம்ப கோபகாரங்களா?”
“இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க? பையன் ஒரு பெண்ணுடன் வந்து இறங்கினால், அம்மா என்ன நினைப்பாங்க. அதுவும் எங்க அம்மா இவளுக்கு சடை பின்னி, பூ வச்சு, மருமகளேன்னு கொஞ்ச வேற ஆரம்பிச்சிருவாங்க”, என்று நினைத்து யோசித்து கொண்டான்.
“எப்ப பாத்தாலும் கனவுக்கு போற? பதில் சொல்லு அர்ஜுன்”
“அப்படி எல்லாம் இல்லை. வீட்டுக்கே கூட்டிட்டு போறேன். நீயே வந்து பாத்துக்கோ”
“ஹ்ம்ம்”
கேட் முன்னே வண்டியை நிறுத்தியவன் ஹாரன் அடித்தான்.
“என்ன ஹாரன் அடிக்கிற?”
“என்ன பண்ண? செக்யூரிட்டி காணும். எங்க போனானு தெரியலை. அதான். கொஞ்சம் இறங்கி கேட் திற அணு”
“ம்ம்”, என்று சொல்லி கொண்டே இறங்கியவள் கையை உள்ளே விட்டு கேட்டை திறந்தாள்.
அவனும் வண்டியை உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான்.
அப்போது தான் அங்கே இருந்து சிவா ஓடி வந்தான்.
அவன் ஓடி வருவதை பார்த்து “பாத்து வா சிவா”, என்றான் அர்ஜுன்.
“மன்னிச்சிருங்க ஐயா”, என்றான் சிவா.
ஆனா எந்த விளக்கமும் கேட்காமல், அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள் அணு.
அதிர்ச்சியாக அவளை பார்த்தார்கள் சிவாவும், அர்ஜுனும்.
கன்னத்தில் கை வைத்து கொண்டு, அவளை பார்த்து பரிதாபமாக விழித்தான் சிவா.
“கேட் பக்கத்துல நிக்காம என்ன பண்ணிட்டு இருந்த?”, என்று கேட்டாள் அணு.
“யார் இந்த அம்மா?”, என்று நினைத்து கொண்டு “அது அது வந்து…”, என்று இழுத்தான் சிவா.
“என்ன இழுக்குற? பதில் சொல்லு? என்ன செஞ்சிட்டு இருந்த?”, என்று மறுபடியும் கேட்டாள் அணு.
“விடு அணு. அவன் பாத்ரூம் எங்கயாவது போயிருப்பான்”, என்றான் அர்ஜுன்.
தன்னுடைய முதலாளி தனக்கு சப்போர்ட் செய்வது சந்தோசமாக இருந்தது சிவாவுக்கு. அவன் செய்த குற்றமும் உறுத்தியது. வீனா அரட்டை தான் அவன் அடித்து கொண்டிருந்தான்.
“மன்னிச்சிருங்க ஐயா, நான் மணி கூட பேசிட்டு தான் நின்னேன். அந்த பக்கம் நின்னதுனால கவனிக்கலை”, என்று உண்மையை சொல்லி தலை குனிந்தான்.
“மனுஷங்க ரோபோ மாதிரி இருக்க முடியாது தான்.  நாலு பேர் கிட்ட கதை பேசுறது தப்பு இல்லை. அது நல்லதும் கூட. ஆனா இப்ப நான் திறந்த மாதிரி வேற திருடன் வந்து திறந்து உள்ளே வந்திருந்தா என்ன பன்னிருப்ப?”, என்று கேட்டாள் அணு.
“மன்னிச்சிருங்கம்மா”
“மன்னிப்பு கேக்குறதை விட, அந்த தப்பை செய்யாம இரு போதும். அவன் கூட உனக்கு பேசணும்னு தோணுச்சுனா, அவனை இங்க கூட்டிட்டு வந்து பேசு. இல்லையா வேற யாரையாவது நிப்பாட்டிட்டு உன் வேலையை பாரு. தோட்ட வேலை கூட அப்புறம் பாத்துக்கலாம். ஆனா இந்த வீட்டோட மொத்த பாதுகாப்பே உன்கிட்ட இருந்து தான் துடங்குது. இன்னொரு தடவை இப்படி நடந்தது தொலைச்சிருவேன்”, என்ற அணு “வா அர்ஜுன் உள்ள போகலாம்”, என்று நடந்தாள்.
சிவா முகத்தை பார்த்த அர்ஜுனுக்கு என்ன சொல்லவென்று தெரிய வில்லை. அவன் செய்ததும் தப்பு தான்.
அதுக்காக அவள் அவனை அடிக்கலாமா?
“இது வரைக்கும் நானோ, அம்மாவோ யாரையும் ஒரு சுடு சொல் கூட சொன்னது இல்லை. ஆனா இன்னைக்கு வந்தவ, கை நீட்டி அடிக்கிறா. இப்ப இவனுக்கு என்ன சமாதானம் சொல்ல?”, என்று அவன் முழிக்கும் போதே, “சின்னம்மா ரொம்ப அழகா, கம்பீரமா, ராணி மாதிரி இருக்காங்க ஐயா. உங்களுக்கு பொருத்தமான ஜோடி”, என்றான் சிவா.
தன்னாலே புன்னகை மலர்ந்தது அர்ஜுனுக்கு. “அவ அடிச்சது உனக்கு கோபம் வரலையா சிவா?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“வரலை ஐயா. அவங்க சரியா தான சொன்னாங்க? ஆனா என்ன? அடி தான் கொஞ்சம் பெருசா விழுந்துட்டு. சும்மா வாய் பாத்துட்டு நின்னதுக்கு எனக்கு தேவை தான். சீக்கிரம் போங்க. அவங்க உங்களை பாத்து தான் முறைக்கிறாங்க. அப்புறம் அடுத்த அடி விழும்”, என்று சிரித்தான் சிவா.
சிரித்து கொண்டே உள்ளே நகர்ந்த அர்ஜுன் காதில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி என்று சிவா சொன்ன வார்த்தைகளே விழுந்தது. 
தோட்டத்தை பார்த்து கொண்டு நின்றாள் அணு.
அவள் அருகில் சென்ற அர்ஜுன். “அணு என்ன இங்கயே நின்னுட்ட? வீட்டுக்குள்ள வா”, என்றான்.
“இப்பவாது வான்னு கூப்பிடணும்னு  தோணுச்சே”, என்று அவனை முறைத்தவள் “வீடு பேலஸ் மாதிரி இருக்கு அர்ஜுன்”, என்று சிரித்தாள்.
இப்போது ஒரு குழந்தையின் குதூகலம் அவள் முகத்தில் தெரிந்தது. அதை அவன் கண்களும் ரசித்தன.
எதுக்காகவோ வெளியே வந்த பார்வதி, அர்ஜுன் உடன் ஒரு பெண் வருவதை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளே ஓடினாள். 
சந்திரிகா அறைக்கு விரைந்த பார்வதி “அம்மா அம்மா”, என்று மூச்சு வாங்கினாள்.
“நீ இன்னும் வீட்டுக்கு போகலையா? நேரம் ஆகிருச்சே பார்வதி”, என்று கேட்டாள் சந்திரிகா.
“கிளம்பிட்டேன் மா. அது வந்து முக்கியமான விஷயம் சொல்லணும்?”
“என்ன பணம் ஏதும் வேணுமா? அர்ஜுன் கிட்ட வாங்கிக்கோ. இப்ப வந்துருவான்”
“ஐயோ அது இல்லைங்க அம்மா. நீங்க தான் சம்பளமே அள்ளி தாறீங்களே. அதெல்லாம் வேண்டாம். நம்ம அர்ஜுன் ஐயா வந்துட்டாங்க”
“வந்துட்டானா? சரி அதுக்கு ஏன் நீ இப்படி ஓடி வர?”
“ஐயா கூட ஒரு பொண்ணு வந்துருக்கு மா”
“பொண்ணா?”
“ஆமாங்க அம்மா. அப்படியே தேவதை மாதிரி இருக்காங்க”
“நம்ம அர்ஜுன் கூட பொண்ணா? சரி வா பாப்போம்”, என்று எழுந்தாள் சந்திரிகா.
“யாரா இருக்கும்?”, என்ற குழப்பத்துடன் அவளுடனே பார்வதியும் சென்றாள்.
“அங்க என்ன அர்ஜுன் அந்த கட்டடம் மட்டும் பழசா இருக்கு?”, என்று கேட்டு கொண்டிருந்தாள் அனுராதா.
“அது பழைய வீடு. தாத்தா பாட்டி முதலில் அங்க தான் இருந்திருக்காங்க. சரி அந்த ஆராய்ச்சி அப்புறம் பண்ணலாம். இப்ப நீ வீட்டுக்கு வேற கிளம்பனும். இப்பவே இருட்டு ஆக போகுது”
“விரட்டுறதுலே குறியா இருக்க?”
“உங்க வீட்ல தேடுவாங்களேன்னு சொன்னேன் அணு”
“நான் அப்பா கிட்ட அப்பவே பிரண்ட் வீட்டுக்கு போய்ட்டு தான் வருவேன்னு சொல்லிட்டேன்”
“அப்ப சரி தான். உள்ள வா”
இருவரும் உள்ளே போகும் போது அங்கே பார்வதியும், சந்திரிக்காவும் நின்றிருந்தார்கள்.

அவர்கள் அருகே அணுவை கூட்டி சென்ற அர்ஜுன் “அம்மா இது அணு. என்னோட ஜூனியர்”, என்றவன் பின்னர் அனுவிடம் திரும்பி, “இவங்க தான் எங்க அம்மா. அப்புறம் இது பார்வதி அக்கா”, என்றான்.

Advertisement