Advertisement

அத்தியாயம் 3
மணப்பெண்ணாக அலங்கரித்த
பின்னும் களை இழந்து
இருக்கிறேன் உன் பார்வை
என் மீது படாததால்!!!
“நானே கேக்கணும்னு நினைச்சேன். தேங்க்ஸ் அணு”, என்று வாங்கி கொண்டவன் “சரி நான் ரூம்க்கு போய் டிரெஸ் மாத்திட்டு வரேன்”, என்று சொன்னான்.

“பொறு அர்ஜுன். எப்படியும் மேகலா அம்மாவையும், பிரியாவையும் கொண்டு போய் பஸ் ஏத்தி விடணும். அப்புறம் வந்து மாத்திக்கோ”, என்றாள் அணு.

“அவனே களைச்சு போய் வந்திருக்கான். நாங்க டிரைவர் கூட போய்க்குவோம்”, என்றாள் மேகலா.

“உங்களை விட்டுட்டு வந்து அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் மா. சரி தான அர்ஜுன்?”, என்று கேட்டாள் அணு.
“ஆமா அத்தை. அணு சொல்றது தான் சரி. நானே விட வரேன்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றான். 

“இவ எங்களை விரட்டணும்னு தான் இப்படி சொல்றா”, என்று நினைத்து கொண்டாள் மேகலா.

அவள் நினைவை உணர்ந்த அணு “என் மேல உங்களுக்கு கோபம் இருக்கும். அப்படி தான மா? இப்ப வீட்டை விட்டு துரத்துறேன்னு கூட உங்களுக்கு நினைப்பு இருக்கும். அது உண்மையும் கூட. ஆனா எனக்கு உங்க மேல எந்த கோபமும் கிடையாது. அப்புறம் எதுக்கு ஊருக்கு விரட்டுறேன்னு யோசிக்கிறீங்களா? அதுக்கு காரணம், நீங்க இங்க வந்ததுக்கான நோக்கம் தான்”, என்றாள்.

அமைதியாக அணுவை பார்த்தாள் மேகலா.

“என்ன மா புரியலையா? நீங்க பிரியாவை, அர்ஜூன்க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படிங்குற எண்ணத்துல தான வந்தீங்க?”


“எனக்கு தெரியும் மா. அது தப்பு. பிரியாவை பாருங்க. காலேஜ் படிக்கிற சின்ன பொண்ணு. நல்லது கெட்டது நீங்க தான எடுத்து சொல்லணும். எனக்கு தான் அம்மா இல்லை. ஆனா அவளுக்கு தான் நீங்க இருக்கீங்களே. நீங்களே தப்பான பாதையை காட்டலாமா? அர்ஜுன் எந்த பொண்ணையும் மனசில் நினைக்க மாட்டான். அவனுக்கு நான் தான் உலகம். நான் இந்த உலகத்தில் இல்லைனா கூட அவன் என் நினைவாவே இருப்பானே ஒளிஞ்சு, வேற யாரையும் விரும்ப மாட்டான். நீங்க பிரியாவுக்கு இப்படி எல்லாம் சொல்லி கொடுத்தீங்கன்னா, அவ மனசு பாதிக்க படாதா?”
தன் தவறு உணர்ந்து தலை குனிந்தாள் மேகலா. 

“நீங்க அர்ஜுனுக்கு அத்தை. எனக்கு அம்மா மாதிரி. இந்த உறவுல நீங்க எத்தனை நாள் வேணும்னாலும் தங்கலாம். ஆனா இந்த எண்ணம் வேண்டாம் மா. உங்களை காய படுத்திருந்தா என்னை மன்னிச்சிருங்க. அப்புறம் பிரியா, அம்மா இது வரைக்கும் சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துக்காத சரியா? நல்ல படிச்சு முடி. அப்புறம் உனக்கே பிடிச்ச மாதிரி ஒருத்தன் உன் கண் முன்னாடி வருவான். அவன் கூட உனக்கு கிராண்டா எல்லாரும் சேர்ந்து கல்யாணம் செஞ்சி வைக்கிறோம் சரியா?”
“சரிக்கா”, என்றாள் பிரியா.
“நாங்க உன்னை தப்பா நினைச்சிட்டோம் மா. கோபம் இருக்குற இடத்துல தான் குணம் இருக்கும்னு புரிஞ்சிட்டு. ஆசைல அறிவு இழந்து, என் பொண்ணுக்கு தப்பான வழியை சொல்லி கொடுத்துட்டேன். மன்னிச்சிரு மா. அர்ஜுனும் இவளை தங்கச்சி மாதிரி தான் பாத்துக்குறான். இப்ப தான் அந்த அறிவு வந்திருக்கு. நீயும் அம்மாவை மன்னிச்சிரு டா பிரியா. அப்புறம் அணு, உனக்கு அம்மா இல்லைனு நினைக்காத. எனக்கு நீயும் பொண்ணு மாதிரி தான் சரியா?”, என்றாள் மேகலா. 
ஒரு எட்டரை போல கீழே வந்தான் அர்ஜுன். 
மேகலாவும், பிரியாவும் கிளம்பி இருந்தார்கள்.
“கிளம்பலாமா அத்தை?”, என்று கேட்டான் அர்ஜுன். 
“ஹ்ம்ம் அண்ணிக்கிட்ட சொல்லிட்டு போகலாம் பா”, என்றாள் மேகலா.
“இருங்க அத்தை. அம்மாவை கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி சந்திரிகா அறைக்குள் சென்று “அத்தை கிளம்புறாங்க மா. வாங்க”, என்று சொல்லி அழைத்து வந்தான். 
“எப்பவும் சந்தோசமா இருக்கணும் டா அணு”, என்று அவளுடைய கன்னத்தை தடவி கொடுத்தாள் மேகலா.
அர்ஜுனும், சந்திரிக்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
“பெரிய சண்டையே வரும்னு நினைச்சேன் டா அர்ஜுன்”, என்று சொன்னாள் சந்திரிகா.
“அத்தையையும் மயக்கிட்டா மா. அவளை பத்தி தெரியாதா?”, என்று சொல்லி விட்டு மேகலா கையில் இருந்த பேகை வாங்கி கொண்டு வெளியே சென்று விட்டான். 
“என்னை மன்னிச்சிருங்க அண்ணி”, என்று சொன்னாள் மேகலா. 
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மேகலா. நல்ல படியா போயிட்டு போன் பண்ணு. தம்பியை கேட்டேன்னு சொல்லு. இங்க வா டா பிரியா”, என்று அழைத்தாள் சந்திரிகா.
“அத்தை”, என்று அருகில் வந்தாள் பிரியா.
“நல்ல படியா படிச்சு முடிக்கணும்  டா சரியா? அப்புறம் உனக்கு கல்யாண யோகம் வந்த உடனே இந்த அத்தை பெரிய சீரோட வருவேன். சந்தோசமா போய்ட்டு வா”, என்று சொன்னாள் சந்திரிகா. 
எல்லாரும் கிளம்பி போன பின்னர், சந்திரிகாவை முறைத்தாள் அணு.
“ஐயோ இப்ப எதுக்கு மா என்னை முறைக்கிற? நான் ஒண்ணுமே செய்யலையே”, என்றாள் சந்திரிகா.
“ஒண்ணுமே செய்யலையா? நான் அர்ஜுனுக்கு வாட்சப்ல தான டைவர்ஸ் பண்ண போறேன்னு அனுப்புனேன். நீங்க அதை நான் அவனுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்புன மாதிரி சீன போட்டுருக்கீங்க அப்படி தான? அதனால தான் மேகலாம்மா, இந்த எண்ணத்தோட இங்க வந்திருக்காங்க”
“அவன் என்கிட்டே அப்படி தான் மா சொன்னான். நானும் அனுப்புனான்னு சொன்ன உடனே, இப்படி தான் அனுப்பிருப்பன்னு நினைச்சிட்டேன்”, என்று அசடு வழிந்தாள் சந்திரிகா. 
“அவன் வரட்டும், அவனுக்கு இருக்கு. சரி வாங்க சாப்பிடலாம்”
“அவன் வரட்டுமே மா”
“அவன் வர நேரம் ஆகும் அத்தை. ஒழுங்கா சாப்பிட்டு படுக்க போங்க”
“அப்ப நீயும் சாப்பிடணும். தனியா சாப்பிட்டா உள்ளே போக மாட்டிக்கு அணு”
“சரி சரி வாங்க. நானும் சாப்பிடுறேன். பார்வதி சாப்பாடு எடுத்து வை”
“இதோ வைக்கிறேன் மா”, என்று வந்தாள் பார்வதி. 
“அப்புறம் பார்வதி, நீ மணி கிட்ட கேட்டுக்கோ, யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்கணும். எத்தனை பத்திரிக்கை அடிக்கணும்னு கேட்டு நாளைக்கு சொல்லு சரியா? அப்ப தான் அர்ஜுன் கிட்ட நான் சொல்ல முடியும்”, என்றாள் அணு.
“சரிங்க அம்மா. நான் கேட்டு சொல்றேன்”
“சரி நீ வீட்டுக்கு கிளம்பு. நாங்க சாப்பிட்டுக்குறோம்”
“சரிங்க அம்மா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பார்வதி.
“சரி உங்க அப்பா  என்ன சொல்லி உன்னை இங்க துரத்தி விட்டார்?”, என்று கேட்டாள் சந்திரிகா.
“உங்களுக்கு தான் தெரியுமே அத்தை. அவர் என்னை திட்டவே மாட்டார்ன்னு. நேத்து, நீங்க என்ன போட்டு கொடுத்தீங்களோ தெரியலை. வீட்டுக்கு வந்தார். என்னைக்கு உன்னோட வீட்டுக்கு போக போறன்னு கோபமா கேட்டார். என்னோட வீட்ல தான இருக்கேன் பா. எங்க போக சொல்றன்னு கேட்டேன். என்ன நக்கலா? என்கிட்டே அடி வாங்காதேன்னு சொன்னார். நீ கோப பட்டா சிரிப்பு சிரிப்பா வருதுன்னு சொன்னேனா? சப்புன்னு அடிச்சிட்டார். நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ  கிண்டல் பன்றியா? அங்கே வேற பொண்ணை கூட்டிட்டு வந்து மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க அர்ஜுனோட அத்தை வந்திருக்காங்களாம். நீ இங்க இருந்து அவன் போட்டோவை வச்சி கொஞ்சிட்டு இருக்க, அப்படின்னு திட்டினார்”
“என்னது அடிச்சாரா? நான் சும்மா தான கோபமா பேச சொன்னேன்”
“அது நீங்க சொன்ன ஐடியா தானா? உங்களை அப்பறம் வச்சிக்கிறேன். அப்புறம் என்ன? என்னை அடிச்சிட்டல்ல பா? இரு என் புருஷன் கிட்ட சொல்லி கொடுத்து உன்னை அடிக்க வைக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு ஆமா, அவன் தினமும் இங்க வந்துட்டு தான் போறான். பெரிய இவ மாதிரி அவன் கிட்ட மூஞ்ச தூக்கிட்டு இருக்க? இதுல அவனை வச்சு என்னை அடிக்க வைக்க போறியா? அப்படின்னு சொன்னார்”
“நீ என்ன சொன்ன?”
“என் புருஷனை அவன், இவன்னு சொன்னா நானே உன்னை அடிப்பேன் பான்னு சொன்னேன். தலைல அடிச்சிட்டு இப்ப நீ தான் பாப்பா, சிரிப்பு காட்டுறேன்னு சொல்லிட்டு அடிச்சது வலிச்சதான்னு சமாதான படுத்துனாரு” 
“உடனே கிளம்பனும்னு முடிவு செஞ்சிட்டியா?”
“ஆமா, பின்ன அதுக்கு மேல அங்க இருக்க முடியுமா? அது மட்டும் இல்லாம எனக்கு வேற நீங்க கண்ணுக்குள்ளயே இருந்தீங்களா? அதான் வந்துட்டேன்”
“யாரு? நான் உன் கண்ணுக்குள்ளே இருந்தேனா? நம்புற மாதிரி சொல்லணும் டா அணு”
“ஹி ஹி கண்டு பிடிச்சிடீங்களா? நீங்க வேற, உங்க பையன் வேறயா சொல்லுங்க?”
“சமாளிக்கிறதுல உன்னை மிஞ்ச முடியுமா? எப்படியோ நீ வந்தியே. இப்ப தான் வீடு, வீடு மாதிரி இருக்கு. சரி இந்த சந்தோசத்தை கொண்டாடணுமே? அதனால கொஞ்சம் சுவீட் கொடேன்”
“காரியத்துல கண்ணா இருப்பீங்களே. ஒண்ணே ஒன்னு தான் தருவேன். சாப்டுட்டு, காலைல நான் கொடுக்குற ஜூஸையும் குடிப்பேன்னு சொன்னா தரேன்”
“ஐயோ அது கசக்குமே”
“அப்ப தர மாட்டேன்”
“சரி சரி குடிக்கிறேன். தா அணு” 
“சரியான பாப்பா அத்தை நீங்க”, என்று சிரித்தாள் அணு.
அங்கே பஸ் கிளம்புவதற்காக காத்திருந்த மேகலாவிடம்  பேசி கொண்டிருந்தான் அர்ஜுன்.
“அருமையான பொண்ணு பா. நான் கூட திமிர் பிடிச்சவன்னு நினைச்சேன்”, என்று சிரித்தாள்  மேகலா.
“கொஞ்ச திமிர் இல்லை அத்தை. ரொம்ப திமிர் பிடிச்சவ. ஆனா அந்த திமிர் தான் அணுவோட அழகே”, என்று ரசித்து சிரித்தான் அர்ஜுன்.
“பொண்டாட்டியை கொஞ்சிறது எல்லாம் சரி தான். சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லு. பேர பிள்ளையை தங்கத்தால குளிப்பாட்டனும்”
“ஹா ஹா. போங்க அத்தை”, என்று சிரித்தான் அர்ஜுன். 
“சரி அத்தை பஸ் கிளம்புது. போயிட்டு போன் பண்ணுங்க. அடுத்த தடவை மாமாவையும் கூட்டிட்டு வாங்க. பத்திரமா போய்ட்டு வா பிரியா”, என்றான்.

“சரி பா. நீயும் வீட்டுக்கு பாத்து போ”, என்று சொன்னாள் மேகலா.

காரில் ஏறி அமர்ந்ததும், அவனை அறியாமலே அணுவின் நினைவு வந்தது. 

காரில் அவன் அமர்ந்திருந்த டிரைவர் இருக்கையின் அருகில் இருந்த இருக்கையை பார்த்தான்.

“அந்த இடத்தால் வந்த சண்டை தான் இது”, என்று நினைத்தவன், தன்னுடைய போனை எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்தான். அந்த பக்கம் எடுத்தவுடன் “என்ன ஆச்சு நரேன்? சொன்ன வேலை முடிஞ்சிருச்சா?”, என்று கேட்டான் அர்ஜுன்.

“இல்லை சார். இன்னும் ஒரு வாரம் ஆகும் சாரி”

“உங்க கிட்ட வேலையை கொடுத்ததே தப்பு போல? எத்தனை நாள் ஆச்சு?”

“சாரி சார். கொஞ்சம் டிலே ஆகிருச்சு. கண்டிப்பா நெக்ஸ்ட் வீக் டெலிவர் பண்ணிறேன்”

“ஓகே”, என்ற படி போனை வைத்தவன் சிறிது எரிச்சலுடன், வீட்டை நோக்கி வண்டியை விட்டான். 

வீட்டினுள் நுழைந்ததும் கண்ணில் பட்டாள் அணு.

அவளை பார்த்தவுடனே இருந்த எரிச்சல் அனைத்தும் மறந்து முகம் புன்னகையை பூசியது.

அவன் சிரிப்பை பார்த்தவள், உதடுகளை சுளித்து அவனை முறைத்தாள்.

“அவளை சைட் அடிக்கிறேனாம். அதுக்கு முறைக்கிறா”, என்று நினைத்தவன் ஒரு உல்லாசமான சிரிப்பை கொடுத்தான்.

“இப்ப எதுக்கு ஈ ன்னு இளிச்சிட்டு இருக்க? போய் குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்”, என்றாள் அணு.

“ஏய் குட்டி பாப்பா, நீங்க இன்னும் சாப்பிடலையா செல்லம்?”, என்று கேட்டான் அர்ஜுன்.

“இந்த கொஞ்சிற வேலை எல்லாம் வச்சிக்கிட்ட, பல்லை தட்டி கையில் கொடுத்துருவேன். நான் சாப்பிட்டேன். உனக்காக வெயிட் பண்ணலை. சாப்பாடு போடணும்னு தான் இருக்கேன்”

“ஏய் ரவுடி”, என்று சொல்லி கொண்டே அவளை தன் கை அணைப்பில் கொண்டு வந்தான் அர்ஜுன். 

“விடு டா”

“முடியாது”, என்ற படியே அணைப்பை இறுக்கினான்.

“நடு ஹாலில் நின்னுட்டு என்ன வேலை பண்ற? விடு. யாராவது பாக்க போறாங்க”

“அப்ப பெட் ரூம்ல வச்சு என்ன செஞ்சாலும் பரவால்லயா? அது மட்டும் இல்லாம இந்நேரத்துல யார் வருவா? ப்ளீஸ் டி பொண்டாட்டி. ரொம்ப நாள் ஆச்சு. இன்னைக்கு ஏமாத்திராத. கோபத்தை மறந்துருங்க செல்லம் ப்ளீஸ்”

“அதெல்லாம் அப்புறம். முதலில் போய் குளிச்சிட்டு வா”

“ஓ சீக்கிரம் வந்து சீக்கிரம் சாப்டுட்டு போனா தான் சீக்கிரம் மத்தது எல்லாம் நடக்கும்னு சொல்றியா? லவ் யு டார்லிங். இதோ அஞ்சே நிமிசத்தில் வந்துறேன்”, என்று துள்ளி குதித்து ஓடியவன் குளித்து விட்டு ஒரு டி ஷர்ட்டையும், ஒரு முக்கால் பேண்டையும் போட்டு கொண்டு விசில் அடித்து கொண்டே வந்தான். 
அவன் வேகத்தையும், அவன் செய்கையையும் ரசித்தவள் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, அவனுக்கு சாப்பாடை எடுத்து வைத்தாள்.
“இட்லி தான் பார்வதி செஞ்சிருக்கா. கொஞ்சம் இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சி தரேன்”, என்ற படியே அவன் தட்டில் மூணு இட்லியை வைத்தாள் அணு.
“இட்லி யா?”, என்று சோகமாக சொன்னான் அர்ஜுன்.

Advertisement