Advertisement

“அப்ப சரி இந்த வாரம் வெள்ளி கிழமை உங்க ரெண்டு பேருக்கும் அத்தை தலைமைல கல்யாணம். நான் சொல்றது சரிதானே அத்தை?”, என்று கேட்டாள் அணு.
“நீ என்னைக்கு டா தப்பா சொல்லிருக்க? அப்படியே செஞ்சிறலாம்”, என்று சொன்னாள் சந்திரிகா. 

“அத்தையே சொல்லிட்டாங்க. அப்ப எல்லா பிளானும் நாளைல இருந்து செய்ய ஆரம்பிச்சிரலாம் பார்வதி”

“சரிங்க அம்மா”

“அப்புறம் பார்வதி, எல்லாம் எடுத்து வச்சிட்டு எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. நைட் வந்தா போதும். அதுவும் டின்னர் சிம்பிளா செஞ்சா போதும் சரியா?”

“சரிங்கம்மா. ஆனா கொஞ்சம் வேலை கிடக்கே அதை முடிச்சிட்டு போகவா?”

“அதெல்லாம் உடனே முடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை பாரு. இன்னைக்கு ஏற்கனவே உனக்கு நிறைய வேலை. நீ ஓய்வு எடுத்துக்கோ”

“உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கணுமே அம்மா?”

“நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்”

“சரிங்கம்மா”, என்று சொல்லி விட்டு பார்வதி கிட்சன் பக்கம் நகர்ந்த பின்னர் “அத்தை ரூம்ல போய், ஒரு கதை படிச்சிட்டு நீங்க தூங்குங்க. போன உடனே தூங்கிற கூடாது. அப்புறம் அஞ்சரைல இருந்து ஆறரை வரைக்கும் வாக்கிங் போகணும்”, என்று சொல்லி விட்டு மாடி ஏறினாள் அணுராதா. 

“ஏன் அண்ணி. அவ மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு போறா. நீங்க கண்டுக்காம இருக்கீங்க?”, என்று கேட்டாள் மேகலா.

“நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்குறதுலே என்ன தப்பு மேகலா?”, என்று கேட்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டார் சந்திரிகா. 
பாத்திரத்தை ஒழுங்கு பண்ணி கொண்டிருந்த பார்வதி அருகில் சென்ற மேகலா, “உன்னை அப்படி போட்டு அடிக்கிறா. நீ வாயை மூடிட்டு இருக்க? என் பொண்ணை மட்டும் திருப்பி அடிச்சிருக்க? அவளையும் நாலு விட வேண்டியது தான?”, என்று கேட்டாள்.
“உங்க பொண்ணு, நான் எந்த தப்புமே செய்யாம என்னை அடிச்சாங்க. ஆனா சின்னம்மா நல்லது கெட்டது தெரிஞ்சு தான் நடத்துவாங்க. அவங்க எந்த அளவுக்கு கண்டிக்கிறாங்களோ, அந்த அளவுக்கு அன்பு செலுத்துவங்க. நான் தப்பு செஞ்சேன் அடிச்சாங்க. அவங்க எப்பவும்  எங்க எல்லாருக்கும் தேவதை தான். உங்க பொண்ணு மாதிரி பிசாசு இல்லை”
“ஏய் என்னய்யா பிசாசுன்னு சொன்ன?”, என்று கத்தினாள் பிரியா.
“என்ன சவுண்டு விடுற? இப்ப அம்மான்னு கூப்பிட்டா போதும், உன் வாலை ஒட்ட நறுக்கிருவாங்க. அதுக்கு முன்னாடி ஐயா சொல்ற மாதிரி ஊர் போய் சேருற வழியை பாருங்க”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள் பார்வதி.
அம்மாவும் மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு தங்கள் அறைக்கு எல்லாம் எடுத்து வைக்க சென்றார்கள்.
“என்ன மா? நீ என்னனென்னவோ சொன்ன? இங்க கதையே கந்தலா ஆகிட்டு. மறுபடியும் கிளம்புற மாதிரி ஆகிட்டே”, என்றாள் பிரியா.

“ஒரேடியா வெட்டி விட்டுடான்னு பாத்தா, அப்படி இல்ல போல பிரியா. அம்மா உனக்கு வேண்டாததை சொல்லி கொடுத்துட்டேனா டா?”, என்று காலம் கடந்து வந்த நல்ல எண்ணத்தில் கேட்டாள் மேகலா.

“முடிஞ்சு போனதை விடு மா. அடுத்து என்ன செய்ய?”

“ஊருக்கு போன உடனே உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் செஞ்சு கொடுக்கணும். என்ன அர்ஜுன் அளவுக்கு அழகும், அறிவும், சொத்தும் சேந்து இருக்குற பையன் கிடைக்கிறது தான் கஷ்டம். அப்புறம் நாம இங்க அண்ணியை பாக்க வந்தோம்னு தான் உங்க அப்பா நினைச்சிட்டு இருக்காரு. நாம அர்ஜுனை உனக்கு பேசி முடிக்க வந்தோம்னு, அவருக்கு தெரிய வேண்டாம் சரியா. நீதி, நியாயம்னு பேசுவார்”

“சரி மா”, என்றாள் பிரியா. 

போகும் போது குழப்பத்துடன் போன அர்ஜுன், சந்தோசத்துடன் திரும்பி வந்ததை பார்த்து அந்த ஆபிசே வியந்தது.

“என்ன சார் முகம் எல்லாம் பிரகாசமா இருக்கு? புது புராஜெக்ட் கிடைச்சிருக்கா?”, என்று கேட்டான் அவனுடைய பி. ஏ முரளி.

“அதெல்லாம் இல்லை பா. சும்மா தான்”, என்று சிரித்தான் அர்ஜுன்.

“நம்பிட்டேன் சார்”, என்று சிரித்து கொண்டே தன் வேலையை பார்க்க சென்றான் முரளி.
அவனுடைய சீட்டில் அமர்ந்த அர்ஜுனுக்கு, அவனை அறியாமலே சிரிப்பு வந்தது.
அணுவை நினைத்தாலே அவன் முகம் தன்னால் மலரும் விந்தை, எப்பவும் போல இப்பவும் அறியாமல் இருந்தான் அர்ஜுன்.
“இவளை நினைச்சா ஆபிசே லூசு பட்டம் கட்டிரும். வேலையை பாப்போம்”, என்று நினைத்து தன்னுடைய கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தவனின் கண் முன்னே புகைப்படத்தில் சிரித்தாள் அணுராதா.
“ஏண்டி என்னை வேலையே பாக்க விட மாட்டியா? கிட்ட தட்ட ஒரு மாசம் உன்னை பாக்காம தவிச்சிருக்கேன். எப்பவும் என்னை கொல்றது தான் உன் வேலையா? அழகு ராட்சசி. எப்படி எல்லாரையும் மயக்கி வச்சிருக்க. இந்த கண்ணு தான் கண்ணம்மா அப்படியே கொக்கி போட்டு இழுக்குது”, என்று வாய் விட்டு புலம்பும் போதே அவனுடைய போன் அடித்தது.
அதன் பின் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் அர்ஜுன்.
இருட்டின பின்னர் கூட வீட்டுக்கு போக இந்த ஒரு மாதமாக தயங்கியவன் ஆறு மணிக்கே சந்தோசத்துடன் வீட்டுக்கு கிளம்பினான்.
கார்டனில் சந்திரிகா அமர்ந்திருந்தாள். அவள் அருகே அணு அமர்ந்து பார்வதியின் ஒரு வயது குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தாள்.
அவனை அறியாமலே அவன் கால்கள் அவர்கள் பக்கம் சென்றது.
“உங்க பேபி வந்தாச்சு அத்தை”, என்று சந்திரிகா காதை கடித்தாள் அணுராதா.
“சுவீட் இருக்குற இடத்துக்கு எறும்பு வராம இருந்தா தான் அதிசயம். அப்ப நீ இருக்குற இடத்துக்கு அவன் வராம இருப்பானா?”, என்று சிரித்தாள் சந்திரிகா.
“உதாரணத்துக்கு கூட சுவீட்டை விட்டுராதீங்க”, என்று அவள் சிரிக்கும் போது அவளை பார்த்து கொண்டே அவள் அருகில் அமர்ந்தான் அர்ஜுன். 
“என்ன மா செய்றீங்க?”, என்று அணுவை பார்த்து கொண்டே சந்திரிகாவை கேட்டான் அர்ஜுன்.
“டேய் உங்க ரெண்டு பேரோட அலப்பறை தாங்க முடியலை. வேற எங்கேயாச்சு போய் லவ் பண்ணுங்களேன் டா. நீ அவளை பாத்துட்டே என்கிட்டே கேக்குற? அவ  உன்னை ஆசையா பாத்துட்டே முறைக்கிறா? இதெல்லாம் என்னால வேடிக்கை பாக்க முடியலை”, என்றாள் சந்திரிகா.
“அத்தை நாங்க ஒன்னும் லவ் பண்ணலை. சண்டை போட்டிருக்கோம்”, என்று சொன்னாள் அணு.
“ஆமா ஆமா, நம்பிட்டோம். சரி நந்து பாப்பாவை கொடு. நான் பார்வதி வீட்டுக்கு போய்ட்டு அவளை விட்டுட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்”
“போறது சரி. அங்க போய் திருட்டு தனமா இனிப்பு வாங்கி சாப்பிட்டீங்கன்னா  உங்களுக்கு இருக்கு சொல்லிட்டேன்”, என்றாள் அணு.
“என்னை கவனிக்கிறதே இவளுக்கு வேலை. கொஞ்சம் இவனையும் கவனி. கொஞ்ச நாள் இவன் ஒழுங்காவே சாப்பிடுறது இல்லை போல”, என்று சொல்லி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு போனாள் சந்திரிகா.
அவள்  போன பிறகு இருவரும் அமைதியாய் இருந்தார்கள்.
மெதுவாக அவளை ஒட்டி அமர்ந்தான் அர்ஜுன்.
அவனை முறைத்து கொண்டே விலகி அமர்ந்தாள் அணு.
மறுபடியும் அவளை நெருங்கி அமர்ந்தவன் “இன்னும் தள்ளி போனேன்னு வை மடியில் தூக்கி வச்சிக்குவேன்”, என்றான்.
அவன் சொன்னதை செய்வான் என்பதால் அப்படியே அமர்ந்திருந்தாள்.
இத்தனை நாளுக்கு பிறகு கிடைத்த நெருக்கத்தை இருவருமே மனதுக்குள்ளே விரும்பினர். 
“என் மேல கோபம் போயிருச்சா அணு மா?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“நீயே கண்டு பிடி அர்ஜுன்”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் அணு.
“அதான் நீ அர்ஜுன் அர்ஜுன்னு கூப்பிடுறதுலே தெரியுதே. கோபம் போகலைனு. இல்லைன்னா இந்நேரம் என்னென்னெமோ கிடைச்சிருக்குமே. சாரி டா. அன்னைக்கு என்ன செய்யன்னு தெரியாம தான் அப்படி நடந்துருச்சு. மன்னிச்சுக்கோயேன்”
“மன்னிக்க முடியல போடா”
“ப்ளீஸ் டி செல்லம்ல?”, என்ற படியே அவள் கையை பிடித்தான். அதை தட்டி விட்ட அணு முறைத்தாள் அவனை.  கோபத்தில் மறுபடியும் சொதப்பினான் அர்ஜுன்.
“அப்ப எதுக்கு டி வந்த? உங்க அப்பா வீட்ல இருந்துருக்க வேண்டியது தான? கண்ணு முன்னாடி வந்து என்னை வெறுப்பேத்துறியா?”
“அப்பா தான் இங்க போக சொல்லி திட்டிட்டார். அப்புறம் நான் உன்னை என்ன வெறுப்பேத்துனேன்?” 
“என்ன வெறுப்பேத்துனியா? அப்படியே சாகடிக்கிற. இப்ப தோட்டத்துல இருக்கோம்னு அறிவுக்கு தோணுனா கூட அப்படியே உன் உதட்டை இழுத்து வச்சு கிஸ் அடிக்கணும்னு தோணுது. உடம்பு முழுவதும் கடிச்சு வைக்கணும்னு வெறி வருது. அடிக்கிறதுக்காகவாது என்னை தொட மாட்டியான்னு ஒவ்வொரு செல்லும் ஏங்குது. ஆபிஸ்ல உக்கார முடியாம ஓடி வந்துருக்கேன் தெரியுமா? ஆனா நீ என்னை மன்னிக்கலை. அப்ப எதுக்கு இங்க வந்த?”
“செஞ்ச தப்பையும் மறந்துட்டு என்னை குறை சொல்ற? மதியம் யாரும் எதுக்கு வந்தேன்னு என் பொண்டாட்டியை கேக்க கூடாதுனு சொல்லிட்டு இப்ப நீயே கேக்குற. போடா என்கிட்டே பேசாதே”, என்று கண் கலங்கி விட்டு எழுந்து போனாள் அணுராதா. 
“ஐயோ கூட கொஞ்சம் சொதப்பிட்டோமே”, என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் அர்ஜுன்.
“எவ்வளவு  நாள்  தான்  மேடம்  கோபமா   இருக்காங்கன்னு  பாப்போம். இவளை  பத்தி  தெரியாதா?”, என்று  நினைத்து  கொண்டு  வீட்டுக்குள்  சென்றான்.
அங்கே  மேகலாவும், பிரியாவும்  அமர்ந்திருந்தார்கள்.
“அணுவை  எங்க  காணும்?”,  என்று  அவன்  கண்கள்  தேடியது.
“இந்தாங்க  அத்தை டிக்கெட். ட்ரைன்ல  கிடைக்கல. பஸ்ல  தான்  போட்டிருக்கேன். பஸ் ஒன்பது  மணிக்கு  தான்”,  என்று  சொல்லி  மேகலா  கையில்  கொடுத்தான்  அர்ஜுன்.
“சரி  அர்ஜுன்”,  என்று  அவள்  வாங்கி  வைத்து  கொண்டாள்.
அப்போது  உள்ளே  இருந்து  வந்தாள்  அணுராதா.
அவன்  கண்கள்  தன்னாலே  அவளை  பார்த்து  திரும்பியது.
“இந்தா  அர்ஜுன்,  இஞ்சி  டீ “, என்று  அவன்  கையில்  கொடுத்தாள்  அணு.
உருகுதல் தொடரும்…..

Advertisement