Advertisement

அத்தியாயம் 2
எப்போதுமே உன்னை
நினைத்துக் கொண்டிருக்கும்
மனதுக்கு ஓய்வு கிடைப்பது
என் மரணத்திலா?!!!

உள்ளே பூனை போல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றான் அர்ஜுன். 

அங்கே பார்த்த காட்சியில் இமைக்க மறந்து பார்த்து கொண்டே அதே இடத்தில் நின்றான்.

அவன் அம்மா அங்கே அவளுடன் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

“அட பாவி அம்மா, இத்தனை நாள் படுத்த படுக்கையா கிடந்துட்டு, ஒழுங்கா சாப்பிடாம நோயாளியா இருந்துட்டு இவளை பாத்ததும், அப்படியே புன்னகை அரசியா இருக்கிறதை பாரு. வேலைகாரங்க முதல் கொண்டு, அம்மா வரைக்கும் மயக்கி வச்சிருக்கா ராட்சசி”, என்று நினைத்து பல்லை கடித்தான்.

“அவங்க எல்லாத்தையும் விட நீ அதிகமா மயங்கி, அவ காலில் விழுந்து கிடக்க”, என்று காரி துப்பியது மனசாட்சி.

மனசுக்குள்ளே ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு அணுவை பார்த்தான். 

“கோச்சிக்கிட்டு போன மேடம் என்னை நினைச்சு உருகி, கரைஞ்சு பாதியா ஆகிருப்பான்னு பாத்தா, அப்படியே பிரிட்ஜ்ல இருந்து எடுத்த ஆப்பிள் மாதிரி இருக்கா. அப்படியே அவளை சாப்பிட ஆசையா இருக்கு. டேய் நடு ஹால்ல நிக்குற. கண்ட்ரோல் பண்ணிக்கோ அர்ஜுன்”, என்று தனக்குள்ளே பேசி கொண்டிருந்தான்.

“அம்மா, அத்தான் வந்துட்டாங்க”, என்று சொன்னாள் பிரியா.

தலையை திருப்பி பார்த்த மேகலா அடுத்த நொடி அவன் அருகில் ஓடினாள்.

அதுக்கு பின்னர் தான் அணுராதா மேல் இருந்த பார்வையை விலக்கினான் அர்ஜுன்.

“அர்ஜுன் வந்துட்டியாப்பா?”, என்று கேட்டாள் மேகலா.

அவள் சத்தம் கேட்டு அணுவும், சந்திரிக்காவும் திரும்பி பார்த்தார்கள்.

இருவர் முகத்தையும் பார்த்தான் அர்ஜுன். 

“வா டா அர்ஜுன். என்ன இந்த நேரத்தில் வந்திருக்க?”, என்று கேட்டாள் சந்திரிகா.

“அத்தை தான் மா வர சொன்னாங்க”, என்று சொல்லி கொண்டே அணுவை பார்த்தான்.

அவள் கண்களில் அவனை பார்த்ததும் வந்த மின்னலை கவனித்து கொண்டே சந்திரிகா அருகில் சென்று அமர்ந்தவன்  “எதுக்கு அத்தை வர சொன்னீங்க?”, என்று கேட்டான்.

“எதுக்கு வர சொன்னேனா? அங்க பாத்தியா யாரு வந்திருக்கான்னு? அண்ணி தான் எல்லாத்தையும் மறந்துட்டு அவ கிட்ட பேசுனா, நானும் அப்படியே இருக்க முடியுமா? சொல்லு அர்ஜுன். இவளை யாரு இங்க வர சொன்னா?”, என்று கேட்டாள் மேகலா.

மேகலாவை பார்த்து புருவம் உயர்த்தியவன், அணுவை பார்த்து காதல் பார்வையை வீசினான்.

அவன் பார்வை உணர்ந்தவள் உதட்டை சுளித்து அழகு காட்டி விட்டு முறைத்தாள்.

“மேடம் இன்னும் கோபமா தான் இருக்காங்க”, என்று நினைத்து கொண்டு அவளை ரசித்து கொண்டிருந்தான்.

அவனிடம் இருந்து பதில் வராததால், மறுபடியும் ஆரம்பித்தாள் மேகலா. “கேளு அர்ஜுன். அவ எதுக்கு வந்திருக்கான்னு கேளு. உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனா. டைவர்ஸ் நோட்டிஸ் வேற அனுப்பிட்டா. அதுக்கப்புறம் எதுக்கு வந்திருக்கா? வந்தது மட்டும் இல்லாம உள்ளே நுழையும் போதே செக்யூரிட்டி யை அடிக்கிறா. உள்ளே வந்து சமையல் காரியை அடிக்கிறா. ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த அண்ணியை இங்க கூட்டிட்டு வந்து உக்கார வச்சிருக்கா. என்ன நினைச்சிட்டு இருக்கா? பொண்ணா இவ?”, என்று கேட்டாள் மேகலா.

“டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்புன விசயத்தை நீங்க தான் சொன்னீங்களாம்மா?”, என்று கேட்டு முறைத்தான் அர்ஜுன்.

“ஐயையோ இந்த மேகலா உளறிட்டாளே. இவன் முறைக்கிறானே”, என்று நினைத்து கொண்டு பாவமாக அவனை பார்த்த சந்திரிகா “காப்பாத்தும்மா”, என்று கேட்பதற்காக அணுவை பார்த்தார்.

அவள் அவனை விட அதிகமாக முறைத்து கொண்டிருந்தாள். “அவனை கூட சமாளிச்சிறலாம். இவ கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாதே”, என்று திகைத்தார் சந்திரிகா.

“உங்களை தான் மா சொல்லுங்க. அத்தை கிட்ட நீங்க தான் சொன்னீங்களா?”, என்று மறுபடியும் கேட்டான் அர்ஜுன்.

“அது ஒரு ஆதங்கத்துல அன்னைக்கு போன்ல பேசிட்டேன் அர்ஜுன் சாரி”, என்று சொன்னார் சந்திரிகா.

“வர வர அத்தைக்கு அறிவே இல்லை. வீட்டு விசயத்தை அடுத்தவங்க கிட்ட சொல்ல கூடாது. அப்படி சொன்னா அது காது, கண் வச்சு பரவும்னு தெரியாதா?”, என்று முறைத்து கொண்டே கேட்டாள் அணு.

“பாத்தியப்பா நம்ம முன்னாடியே எப்படி அண்ணியை திட்டுறான்னு. அடுத்தவங்க கிட்ட சொன்னாங்களாம். என்கிட்டே தான சொன்னாங்க? எப்படி திமிர் பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிருக்க பாத்தியா அர்ஜுன்?”, என்று கேட்டாள் மேகலா. 

“அணு சொல்றது சரி தான் அத்தை. அம்மாவுக்கு அறிவே இல்லை. இப்படியாம்மா அடுத்தவங்க கிட்ட சொல்லுவாங்க?”, என்றான் அர்ஜுன்.

“நான் அடுத்தவளா அர்ஜுன்?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மேகலா.

“என்னோட அம்மா, பொண்டாட்டியை தவிர மித்த எல்லாரும் எனக்கு அடுத்தவங்க தான் அத்தை”

அவன் பதிலில் திகைத்த மேகலா அடுத்த நொடி சமாளித்து கொண்டு “சரி பா. இப்ப தான் எங்களுக்கு தெரிஞ்சிட்டே. வேண்டாம்னு சொல்லிட்டு போனவ எதுக்கு வந்திருக்கான்னு கேளு. அது மட்டும் இல்லாம உடனே வீட்டை விட்டு அனுப்பு. இப்படி ஒரு திமிர் பிடிச்ச பொண்ணு இந்த குடும்பத்துக்கு தேவையா?”, என்று கேட்டாள்.

“அத்தை”, என்று அவளை அரட்டிய அர்ஜுன் “லூசு மாதிரி பேசாதீங்க”, என்று சொன்னான்.

“என்னது லூசு மாதிரி பேசுறேனா?”, என்று நினைத்த மேகலா “அர்ஜுன்”, என்று அழைத்தாள்.

“இனி ஒரு வார்த்தை பேச கூடாது. அவ இங்க வந்தா நான் எதுக்கு அவளை ஏன் வந்தன்னு கேக்கணும்? இது அவ வீடு. அம்மா இந்த வீட்டோட மகாராணின்னா, அணு இந்த வீட்டோட ராஜகுமாரி. நான் மட்டும் இல்லை, யாரும் அவளை ஏன் வந்தேன்னு கேக்கமாட்டோம். வெளிய போன்னும் சொல்ல மாட்டோம். முதலில் நீங்க இப்ப பேசுனதே தப்பு. புரிஞ்சுதா?”

அவனுடைய பதிலில் தன்னை ராணியாக உணர்ந்தாள் அணு. 
“நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்து போய் வந்தேன். சரி நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன்”, என்று சொன்னான் அர்ஜுன். 
வாயை மூடி கொண்டாள் மேகலா.
“சாப்பிட்டுட்டு போடா”, என்று சொன்னாள் சந்திரிகா.
“இல்லை மா. நீங்க சாப்பிடுங்க. நான் கிளம்புறேன்”, என்று சொன்னான் அர்ஜுன்.
“அர்ஜுன் சாப்பிட வா”, என்று அதிகாரமாக சொன்னாள் அணு.
அவன் அப்படியே அவளை பார்த்து கொண்டிருந்தான்.
“பார்வதி, அர்ஜூன்க்கு தட்டை எடுத்துட்டு வா”
“இதோ வரேன் மா”, என்று ஓடி வந்தாள் பார்வதி.
அவன் அப்படியே நிற்பதை பார்த்து “என்ன சொல்றது காதில் விழலையா? வா வந்து உக்காரு. இப்ப சாப்பிடாம கிளம்புனா அடுத்து என்ன நடக்கும்னு தெரியும்ல?” என்று சொல்லி அவனுக்கும் பறி மாற ஆரம்பித்தாள் அணு. 
“எதுக்கு வம்பு? அவ பேச்சை கேக்கலைன்னா, எல்லார் முன்னாடியும் எதாவது செஞ்சு என் மானத்தை வாங்குவா”, என்று நினைத்து கொண்டே அமர்ந்தான்.
சாப்பிட்ட அர்ஜுனுக்கு மனமும், வயிறும் நிறைத்தது போல சந்தோசமாக இருந்தது.
“இவ இல்லைன்னா வீடே நல்லா இல்லை. இப்ப தான் நிறைஞ்ச மாதிரி இருக்கு”, என்று நினைத்து கொண்டு கை கழுவ எழுந்தான்.
அவன் கை கழுவி விட்டு கிளம்பும் போது “அர்ஜுன்”, என்று அழைத்தாள் அணு. அவன் திரும்பி அவளை பார்த்தான். எல்லாரும் அவள் முகத்தை பார்த்தார்கள்.

“உங்க மாமா அங்க தனியா இருப்பாரே. இவங்க ரெண்டு பேரும் இங்க இருந்தா அங்க அவர் கஷ்ட பட போறார். இன்னைக்கு நைட்டே ரெண்டு பேருக்கும் டிக்கட் புக் பண்ணு”

“சரி அணு. பண்ணிறேன். போயிட்டு வரேன். அப்புறம் அத்தை நைட் கிளம்பனும். எல்லாம் எடுத்து வச்சிக்கோங்க”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

“ஐயா சேதாரம் இல்லாம தான் வந்துருக்கீங்க”, என்று சிரித்தான் சிவ பாலன்.

“அது நைட் தான் தெரியும் சிவா. சாவி தா. கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

“என்ன மா இப்படி ஆகிருச்சு?”, என்று கேட்டாள் பிரியா.

“எனக்கும் புரியலை பிரியா. நான் நினைச்சது ஒன்னு. ஆனா நடக்குறது ஒன்னு. எல்லாரும் இவளை தாங்குறாங்க. இவ என்ன சொன்னாலும் கேட்டுக்குறாங்க. வீடு வேண்டாம் புருஷன் வேண்டாம்னு போனவ வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்கா. ஒண்ணுமே புரியலை”, என்றாள் மேகலா.

“பாரு இங்க வா”, என்று அழைத்தாள் அணுராதா.

“அம்மா”, என்று சொல்லி கொண்டே ஓடி வந்தாள் பார்வதி.

“அத்தை சாப்டாச்சு. சமைச்ச நான் வெஜ் எல்லாம் உன் வீட்டுக்கு எடுத்துட்டு போயிரு. அப்புறம் சிவாவுக்கும், மணிக்கும் சாப்பாடு கொடுத்துரு. சிவா சாப்பிடுற வரைக்கும் உன் புருஷன் வேலனை  கேட் கிட்ட  உக்கார சொல்லு”

“சரிங்கம்மா”

“அப்புறம் பொன்னி எங்க தங்கி இருக்கா?”

“நம்ம குவாட்ரஸ்ல எங்க கூட தான் தங்கி இருக்கா மா. கல்யாணம் ஆகாத பொண்ணை எப்படி தனியா தங்க வைக்கிறது?”

“சரி அவளுக்கும் மணிக்கும் என்னைக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க அவங்க வீட்ல?”

“அவளுக்கு யாரும் இல்ல மா. மணி பத்தி உங்களுக்கு தெரியும்ல. அவனுக்கு ரொம்ப இரக்க படுற மனசு. பொன்னி அப்பனும் ஆத்தாளும் செத்து போய், அனாதையா நின்னுருக்கு. கூட்டிட்டு வந்துட்டான்” , என்று பார்வதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் மணி.

அணுவை பார்த்ததும். “வணக்கம் சின்னம்மா”, என்று சொல்லி கொண்டே பையை பார்வதியிடம் கொடுத்தான்.

“உன்னை பத்தி தான் பேசிட்டு இருக்கோம் மணி”, என்று சொன்னாள் அணு.

“நான் எதுவும் தப்பு செய்யலைங்க அம்மா”

“நீ தப்பு செஞ்சேன்னு யாரு சொன்னது? நான் உனக்கும் பொன்னிக்கும் நடக்க போற கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டு இருந்தோம். பொன்னி இங்க வா”

அவள் வந்ததும், மணியிடம் திரும்பி “இங்க பாரு மணி. பொன்னிக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நீ நினைக்கிறது நல்ல விஷயம் தான். ஆனா அது அன்பால மட்டும் தான் இருக்கணும். இரக்க பட்டு கொடுக்க கூடாது. அவளை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டாள் அணு.

“இரக்க பட்டு தான் இங்க கூட்டிட்டு வந்தேன் மா. ஆனா கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறது ஆசைல தான் மா”, என்று வெட்க பட்டு கொண்டே சொன்னான் மணி. 

அவன் வெட்கத்தை பார்த்து சிரித்த அணு “பொன்னி நீ சொல்லு. உனக்கு மணியை பிடிச்சிருக்கா?”, என்று கேட்டாள்.

“பிடிச்சிருக்கு மா”, என்று தலை குனிந்து கொண்டே சொன்னாள் பொன்னி.

Advertisement