Advertisement

அத்தியாயம் 14 
உன் தோளில் 
சாயும் தருணம் என் 
விழிகளிலும் பல கனவுகள்!!!
அந்த காலேஜ்லே எம்.பி. ஏ சேர்ந்தான் அர்ஜுன். “ரெண்டு வருசம் எல்லாம் என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது. ஒழுங்கா இங்கயே சேரு”, என்று உருட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி, அப்பா மற்றும் அத்தையிடம் சிபாரிசு கேட்டு அவனை சம்மதிக்க வைத்தாள் அணு.
காலேஜில் வைத்து இருவரும் பேசி கொள்ளாவிட்டாலும், ஒரு தடவையாவது பாத்து கொள்வார்கள். வாரம் ஒரு நாளாவது, அவன் அவள் வீட்டுக்கும் அவள் அவன் வீட்டுக்கும் சென்று விடுவார்கள்.
அவன் எம். பி. ஏ முடிக்கும் போது அவளும் படிப்பை முடித்து விட்டாள்.
மேலே படிக்க சொன்னான் அர்ஜுன்.
“கல்யாணம் செஞ்சிட்டு உன் பொண்டாட்டியை என்ன வேணும்னாலும் படிக்க வச்சிக்கோ”, என்று சொல்லி விட்டார்கள் சந்திரிகாவும், வாசுதேவனும்.
“அப்படி சொல்லுங்க அத்தை, சும்மா படி படினு கடுப்பை கிளப்பிட்டு, கல்யாணத்தை பண்ணுனோமா, பிள்ளை குட்டியை பெத்து போட்டோமான்னு இல்லாம, இப்பவும் காலேஜ் போக சொல்றான்”, என்று சிணுங்கினாள் அணு.
“மவளே… தனியா சிக்கு டி உனக்கு இருக்கு”, என்று அவளுக்கு சைகை செய்தவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்.
அந்த கல்யாண மேடை அழகாக அலங்கரிக்க பட்டிருந்தது. சொந்தக்காரர்களும் நட்பு வட்டாரமும் அங்கே குழுமி இருந்தது.
அழகாக பட்டு வேஷ்டி சட்டையில் முகம் முழுக்க சிரிப்புடன், பக்கத்தில் நண்பர்கள் கிண்டலுக்கு  செவி சாய்த்து கொண்டு மனமேடையில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
காதலித்தால் பரம சுகம். அது எந்த தடையும் இல்லாமல் நிறைவேறினால் அதை விட சுகம் இருக்கா என்ன? அந்த சந்தோசத்தை ஆழ்ந்து அனுபவித்தான் அர்ஜுன்.
அந்த கல்யாணத்துக்கு மணப்பெண் தோழியாக பவித்ரா வந்திருந்தாள். தூரத்தில் இருந்தே அவளை பார்வை இட்டு கொண்டிருந்தான் தர்மா.
இப்போது அவன் பார்வையை தயங்காமல் எதிர் கொண்டாள் பவித்ரா. அதை அவனும் கவனிக்க தான் செய்தான். முன்னால் தலை குனிந்து செல்பவள் இப்போது அவன் பாக்காத நேரம் பார்ப்பதும், பாத்த உடனே முகத்தை திருப்புவதுமாக இருந்தாள். அவள் மனதில் தான் குடியேறி விட்டதை உணர்ந்தவன் இருவர் வீட்டிலும் பேசணும் என்று முடிவு எடுத்து கொண்டான்.
அழகு பட்டுடுத்தி, அதிக நகை போட்டு பெண்ணுக்கே உரிய வெக்கத்துடன் அர்ஜுனை கை பிடிக்கும் ஆனந்தத்துடன் முகத்தில் பூரிப்புடன்  தோழிகளால் மண மேடைக்கு அழைத்து வர பட்டாள் அனுராதா.
சந்திரிகாவுக்கும், வாசு தேவனுக்கும் சந்தோசமாக இருந்தது.
கெட்டி மேளம் முழங்க, அவள் கழுத்தில் தாலியை கட்டியவன் கண்ணில் மொத்த காதலையும் தேக்கி அவளை பார்த்தான்.
அதே காதலை அவளுடைய கண்களிலும் பிரதிபலித்தாள் அணு.
அதுக்கு பின்னர் வந்த சடங்குளில் ஆனந்தமாக கலந்து கொண்டனர் மணமக்கள்.
மகளின் பூரிப்பை பார்த்து கண் கலங்கி விட்டார் வாசு தேவன்.
சந்திரிகா தான் அவரை சமாதான படுத்தினாள்.
அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.
அடி மேல் அடி எடுத்து வைத்து அவன் அறைக்குள் நுழைந்தாள் அணு.
அவளை சிறு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
மெது மெதுவாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ஏய் என்ன டி உக்காந்துட்ட? கையில பால் சொம்பு இல்லை. காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கலை. பேசாம உக்காந்துட்ட?”, என்று வம்பிழுத்தான் அர்ஜுன்.
“இப்ப தான டா சாப்பாடை ஒரு வெட்டு வெட்டுன? உனக்கு அதுக்குள்ளே பசிக்குதா? காலில் எல்லாம் விழ முடியாது போடா”
“இப்ப பசிக்காது. ஆனா நைட் புல்லா வேலை இருக்கே”, என்று கண்ணடித்தான் அர்ஜுன்.
அவனை பார்த்து அழகாக வெக்க பட்டாள் அணு.
“இன்னும் எதுக்கு டி தள்ளி உக்காந்துருக்க? எத்தனை நாள் விரதம் காத்திருக்கேன்”, என்ற படியே அவளை  நெருங்கினான்.
வெக்கத்துடன் அவன் கை அணைப்பில் அடங்கினாள் அணு.
அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.
இத்தனை நாள் அவனுடைய உணர்வுகள் பொங்கிய வேளையிலும் கல்யாணம் நடக்காததால் விலகியவன்  இன்று எந்த தடங்கலும் இல்லாமல் அவளை எடுத்து கொள்ள ஆரம்பித்தான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்திருந்தாள் அணு.
“அணு”
“ம்ம்”
“சந்தோசமா இருக்கு டி. நீ என் கிட்ட இருக்குறது, ஏதோ வரம் மாதிரி இருக்கு”
“எனக்கும் தான்”
“தூக்கம் வருதா?”
“ம்ம்”
“என்னது ம்மா கொன்னுருவேன். இன்னைக்கு நைட் உனக்கு தூக்கம் கட்”, என்ற படியே மறுபடியும் தன் வேலையை தொடர்ந்தான் அர்ஜுன்.
வாழ்க்கை அழகானதாக சென்றது இருவருக்கும்.
பவித்ரா, தர்மராஜ் கல்யாணத்துக்கு இருவரும் ஜோடியாக சென்றார்கள்.
அர்ஜுன் தன்னுடைய பாக்டரியை பார்த்து கொண்டான். அணு நேரம் போகலை என்றால் அவனுடன் சென்று ஒரு வேலைக்கு இரு வேலை ஆக்குவாள். அதனால “எம்மா தாயே நீ வீட்டிலே இரு”, என்று கெஞ்சுவான் அர்ஜுன்.
அப்போது ஒரு நாள் காலை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, “அர்ஜுன் கேசவன் மாமாவோட பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்காங்களாம் டா”, என்று ஆரம்பித்தாள் சந்திரிகா.
அணு அவர்களுக்கு பரிமாறி கொண்டிருந்தாள்.
அவன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
“என்ன டா நான் சொல்லிட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க?”
“அவங்க பொண்ணுக்கு கல்யாணம் வச்சா நான் என்ன மா செய்ய முடியும்? வச்சிட்டு  போட்டும்”
“டேய் அவளுக்கு உங்க அப்பா தான் டா தாய் மாமா”
“அதுக்கு?”
“என்ன அதுக்கு? நாம தான சீர் செய்யணும்”
“என்ன மா விளையாடுறீங்களா? அவங்க துரோகிங்க. அப்பா அவங்க கிட்ட பாத்துக்க சொல்லி கொடுத்த வீட்டையும், நிலத்தையும், அவங்களுக்கே எழுதி கொடுத்ததா பொய் சொல்லி ஏமாத்துனவங்க. அவங்க முகத்துல கூட நாம முழிக்க கூடாது”
“அர்ஜுன் அந்த ரெண்டையும் வச்சு நாம என்ன செய்ய போறோம் சொல்லு. அதை வித்தாலும் யாருக்காவது தான் போகும். அதுல அவங்க சந்தோசமா இருக்கட்டுமே”
“அதை அவங்க என்கிட்ட கேட்டிருந்தா கொடுத்திருப்பேன் மா. ஆனா அவங்க ஏமாத்திருக்காங்க”
“சரி பா. அவங்க எப்படி வேணாலும் இருக்கட்டும். ஆனா கடமைன்னு ஒன்னு இருக்கே”
“என்னால எல்லாம்  செய்ய முடியாது”
“இப்படி சொன்னா எப்படி அர்ஜுன்? நீ அணு கூட போற. சீர் செஞ்சிட்டு வந்துருங்க. தப்பை  நினைச்சு வருந்துறவங்களை மேலும் கஷ்ட படுத்த கூடாது பா”
“நான் போக மாட்டேன்”
“நீ போய் தான் ஆகணும்”
“சே இந்த வீட்ல நிம்மதியா ஒரு சாப்பாடு கூட சாப்பிட முடியலை”, என்ற படியே தட்டை விசிறி அடித்தான் அர்ஜுன்.
அடுத்த நொடி அவன் கன்னத்தில் இடி என இறங்கியது அணுவின் கரம்.
அதிர்ச்சியாக அவளை பார்த்தார்கள் அனைவரும்.
“என்ன நினைச்சிட்டு இருக்க? அத்தை வாய்ட்டு தான பேசிட்டு இருக்காங்க. உனக்கு மட்டும் என்ன? மரியாதை இல்லாம எழுந்து போற? தட்டை வீசுற? கொன்னுருவேன். உக்காரு டா. பார்வதி வேற தட்டை எடுத்துட்டு வா. அத்தை நாங்க அந்த கல்யாணத்துக்கு போறோம். உங்க பிள்ளை தாய் மாமன் மகனா  சீர் செய்வாரு. ஆனா நீங்களும் எங்க கூட வரீங்க. இந்த பேச்சு அவ்வளவு தான்”, என்று முடித்து விட்டாள் அணு.
“அம்மா”, என்று கத்தினான் அர்ஜுன்.
“என்கிட்ட என்ன பாயுற? சின்ன பையனா இருந்தா நான் ஒன்னு இப்படி விட்டுருப்பேன். எனக்கு பதிலா அணுவே செஞ்சிட்டா”
“ஆள் வச்சி அடிக்கிறீங்களா?”
“ஆமா டா. பொண்டாட்டியை கட்டி வச்சு  உன்னை அடிக்க விடுறேன்”
“பெத்த பிள்ளையை அடிக்கிறா. நீங்க ஆனந்தமா வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க?”
“இந்த வீட்ல என்னை தவிர எல்லாரும் அவ கிட்ட அடி வாங்கியாச்சு. என் வயசுக்காக என்னை விட்டு வச்சிருக்கா. உனக்கும் விழாம இருந்தது. இப்ப அதுவும் நடந்துடுச்சு. தப்பு செஞ்சா விழ தான் செய்யும் வாங்கிக்கோ”
அம்மாவையும், அணுவையும் பார்த்து முறைத்து கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
“எழுந்து போய் இன்னொரு அடி யாரு வாங்குறது?”, என்று நினைத்து கொண்டே பேசாமல் சாப்பிட்டு முடித்து விட்டு சென்றான் அர்ஜுன்.
அதன் பின் முறைத்து கொண்டு திரிந்தவனை சமாதான படுத்தி சிரிக்க வைத்தாள் அணு. 
சந்திரிகா மனமும் நிறைந்தது. அடிக்கடி சந்திரிகா வாயில் இருந்து வரும் வார்த்தை இது தான். “அணு தான் இந்த குடும்பத்தோட ஆணிவேர்”
வாசு தேவனை தங்களுடன் இருக்க அர்ஜுனும், சந்திரிக்காவும் கேட்டு விட்டார்கள்.
ஆனால் அவர் “என் மனைவி வாசனை அந்த வீட்டில் இருக்கிறதா நான் நம்புறேன். அங்கேயே இருக்கேன். தினமும் வந்து உங்களை எல்லாம் பாத்துட்டு போறேனே? அப்பறம் என்ன?”, என்று சொல்லி விட்டார்.
“நான் தான் சொன்னேன்ல? அப்பா சம்மதிக்க மாட்டாங்கன்னு. அம்மா வேலை பாத்த சமையல் அறைக்கே என்னை விட மாட்டாங்க. பின்ன அந்த வீட்டை விட்டு வருவாங்களா?”, என்றாள் அணு.
இதை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டே படுத்திருந்தான் அர்ஜுன்.
இடையில் விழிப்பு வந்த  அணு அவனை பார்த்தாள்.
“என்ன டா தூக்கம் வரலையா?”
“சும்மா பழைய விஷயங்களை எல்லாம் நினைச்சு பாத்துட்டு இருந்தேன் அணு.
“ஓ சரி தூங்கு”
“அணு”
“ம்ம்”
“பழசை எல்லாம் நினைச்சேன்னா…”
“அதனால?”
“உனக்கும் தூக்கம் போயிருச்சு, இந்த நேரத்தை மிஸ் பண்ண கூடாதே”
“என்ன டா சொல்ல வர?”
“போடி டியூப் லைட்”, என்று சொல்லி கொண்டே  அவளின் உதடுகளை சிறை செய்தான் அர்ஜுன்.
அவளை விட்டு விலகியவன் அவளை பார்த்து சிரித்து விட்டு அவளை கட்டி அணைத்து உறங்கி விட்டான்.
அவன் தோள்களில் தலை  வைத்து படுத்திருந்தவள், அவன் முகத்தை பிரியத்துடன் பார்த்தாள்.
“கொஞ்ச நாள் இந்த தோள்ல சாய மாட்டோமான்னு ஏங்கிருக்கேன் டா. ஆனா இப்ப இந்த தோளே எனக்கு தான் சொந்தமா ஆகிட்டு”, என்று சிரித்து கொண்டே அவன் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அவன் நெஞ்சிலே சாய்ந்து உறங்கி போனாள் அணு.
காலையில் கண் விழித்தான் அர்ஜுன். அவன் கைகளுக்குள் புகுந்து அவன் இடுப்பில் கை போட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து  உறங்கி கொண்டிருந்தாள் அணு.
தன்னை கட்டி கொண்டு சிறு குழந்தை போல் தூங்கும் அணுவை ரசித்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
“பல்லு விளக்காம முத்தம் கொடுக்காத அஜ்ஜு”, என்று கண்களை மூடி கொண்டே சொன்னாள் அணு.

Advertisement