Advertisement

“அவ பக்கம் திரும்பின உன்னை கொன்னுருவேன்”, என்று மனதுக்கு  கட்டளை கொடுத்து விட்டு கார் ஓட்டுவதில்  கவனம் செலுத்தினான் அர்ஜுன்.
தியேட்டருக்கு அவளை அழைத்து சென்றவன், டிக்கட்  எடுத்து விட்டு அவளை உள்ளே அழைத்து சென்றான்.
அருகருகே அமர்ந்தவுடன் அணு வாய் ஓயாமல் பேசி கொண்டே இருந்தாள். அவனும் அவளுக்கு சந்தோசமாகவே பதில் கொடுத்து கொண்டிருந்தான்.
படமும் ஆரம்பித்தது. அவன் சோதனையும் ஆரம்பித்தது.
பம்பரமாக  சீட்டில் உருண்டு  கொண்டிருந்தாள் அணு. ஒரு காலை தூக்கி மேல வைப்பதும், திருப்பி இறக்குவதும், அந்த சின்ன சீட்டில் சம்மனம் போட்டு உக்காருவதும், அவன் கையை பிடிப்பதும், அவன் காதில் ரகசியம் பேசுவதுமாக என்று இருந்தாள்.
ஒவ்வொரு முறையும் அவன் மேல் உரசி கொண்டே இருந்தாள்.
அதுவும் அவன் காதில் அவளுடைய மூச்சு காற்று உரச அவள் கதை பேசும் போது திண்டாடி தான் போனான்.
சந்தோசமாக இருப்பவளை தள்ளி உக்காரு என்று சொல்லவோ, என்னை தொடாத என்று சொல்லவோ அவனுக்கு மனம் இல்லை. அதை விட அவள் நெருக்கம் இன்னும் வேண்டும் என்று மனது ஆசை பட்டது தான் விந்தை.
“அணு அசையாம இரு.  ஒழுங்கா உக்காரு”, என்று ஒரு முறை சொல்லியே விட்டான்.
“அசையாம உக்காந்தா கடுப்பா வரும் அஜ்ஜு. அதுக்கு தான் நான் தியேட்டர்க்கே வர மாட்டேன். வீட்லன்னா உருண்டுக்கிட்டே படம் பாக்கலாம். சரி முறைக்காத அமைதியா இருக்கேன்”, என்று சொல்லி அவன் கைக்குள் தன் இரண்டு கையையும் வைத்து இறுக்கி கொண்டு அவன் சாய்ந்து சாய்ந்து கொண்டாள்.
“வாயை மூடிட்டு இருந்துருக்கலாம். படுத்துறாளே”, என்று பல்லை கடித்தான்.
“அவ சாதாரணமா தான இருக்கா. நீ என் டா  அப்படியே திங்க் பண்ற?”, என்று கேட்டது மனசாட்சி.
“நானா  திங்க் பண்றேன்? என் உடம்பு இப்படி எல்லாம் யோசிக்குது. நான் என்ன செய்ய?”, என்று பதில் கொடுத்தான்.
ஒரு வழியாக படம் முடிந்தவுடன் வெளியே அழைத்து வந்தவன், அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.
அவளுக்கு பிடித்ததாக வாங்கி கொடுத்து, அவனும் சாப்பிட்டு விட்டு கார் மஹாபலிபுரம்  நோக்கி சென்றது.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல இப்பவும் அவன் தோளில்  சாய்ந்து கொண்டு தூங்கி விட்டாள் அணு.
“என் தோளை  சாயுறதுக்குன்னே ரிசெர்வ் பண்ணி வச்சிருக்கா  போல”, என்று நினைத்தவன் தன் தலையை அவள் தலையில் ஒரு தடவை சாய்த்து முட்டி விட்டு கார் ஓட்டுவதில் கவனமானான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளை கன்னத்தை பிடித்து எழுப்பி விட்டான் அர்ஜுன்.
“அதுக்குள்ள வந்துட்டோமா அர்ஜுன்?”, என்று கேட்டு கொண்டே எழுந்தாள் அணு.
“ஹ்ம் வா போகலாம்”, என்று அழைத்து கொண்டு போனான்.
இயல்பான செய்கை போல் அவன் கையை பற்றி கொண்டே நடந்தாள் அணு. அதை அவன் மனமும் விரும்பியது.
அங்கே சுற்றி பார்ப்பத்துக்கே சாயங்காலம் ஐந்து மணி ஆனது. கடல்  கரைக்கு சென்றார்கள் இருவரும்.
அங்கே இருந்தது எல்லாமே ஜோடிகள் தான். அவர்களுக்குள்ளே இருந்த நெருக்கம், கண்ணில் படும் போது எல்லாம் தவித்து போனான் அர்ஜுன்.
“இவ கிட்ட காதலை சொல்லிறலாமா?”, என்று நினைத்து “அணு”, என்று அழைத்தான்.
அவன் வாங்கி தந்த மாங்காயை வாயில் வைத்து கடித்து கொண்டிருந்தவள் “என்ன டா?”, என்று கேட்டாள்.
“இல்லை அன்னைக்கு, உன் மனசுல சலனத்தை ஏற்படுத்துறது  உன்னோட ஹஸ்பண்டா தான்  இருக்கும்னு சொன்ன? அவனை எப்ப பாப்ப?”
“அதுவா? அவனை நான் பாத்துட்டேனே?”
“என்னது பாத்துட்டியா? அது யாரு?”
“அது அப்புறம் சொல்றேன் சரியா?”
“இப்படி சொல்பவளிடம் எப்படி காதலை சொல்ல? அது நானான்னு கேட்டால், நீ இல்லையே ன்னு சொல்லிட்டா  என்ன செய்றது”, என்று நினைத்து அமைதியாக வந்தான்.
“நான் கொஞ்ச நேரம் கடல்ல விளையாடிட்டு  வரவா? நீயும் வரியா?”, என்று கேட்டாள் அணு.
“நீச்சல் தெரியுமா அணு?”
“தெரியாது”
“அப்ப இரு நானும் வரேன்”, என்றவன் அவளுடன் கடலில் இறங்கினான்.
அவள் கையை பிடித்து கொண்டும், ஒவ்வொரு அலை வரும் போதும் குதித்து கொண்டும், சிரித்து கொண்டும் விளையாடும் போது தான் அவளை திரும்பி பார்த்தவன் திகைத்தான்.
அங்கே சேலை முழுவதும் நனைந்து, உடலோடு ஒட்டி இருக்க, அவன் அவளுக்கு இடது புறம் இருந்ததால் அவள் பளீரென்ற வெற்றிடையும் அதுக்கு மேல் தெரிந்த அழகும் அவனை கிறக்கம் கொள்ள வைத்தது.
அவனிடம் இருந்து சத்தம் வராததால், அவனை திரும்பி பார்த்தவள் அவன் பார்வை போன இடத்தை பார்த்து வெக்கம்  கொண்டாள்.
அவன் கையை பிடித்திருந்த கையை விட்டு விட்டு  சேலையை சரி செய்தவள் அவன் முகத்தையே பார்த்தாள். அவனும் அவள் வெக்கத்தை தான் ரசித்து கொண்டிருந்தான்.
தங்களை மறந்து மூழ்கி இருந்த வேளையில் வந்த அலையை கவனிக்காமல் இருவருமே தடுமாறி கீழே விழுந்தார்கள்.
அவனாவது காலை ஊன்றி சமாளித்தான்.
ஆனால் தண்ணீர் அணுவின் முகத்தையும் சேர்த்து முக்கியதால் இதை  எதிர்பார்க்காமல் மூச்சு விட சிரம பட்டாள்.
திடிரென்று நடந்த நிகழ்வில்  நடங்கினாள் அணு. தன்னுடன் அவளை அணைத்து கொண்டான் அர்ஜுன். அவன் சட்டை காலரை இறுக்கி பிடித்தவள், கண்களை மூடி கொண்டாள். அவள் உடம்பு பயத்தில் நடுங்கியது.
அதை உணர்ந்தவன் “ஒண்ணும் இல்லை அணு மா. தண்ணில நின்னது போதும். வா காருக்கு போலாம்”, என்று அவள் தோளில் கை போட்டு அழைத்து சென்றான்.
காரை திறந்து அவளை பின் சீட்டில் அமர வைத்தவன், அவள் அருகே அமர்ந்து கொண்டு, காரை எடுத்து போக சொன்ன அம்மாவுக்கு மானசீகமாக ஒரு நன்றியையும் தெரிவித்து கொண்டான்.
அவள் பதட்டம் தனியாமல் இருப்பதை உணர்ந்து “நான் தான் அலையை பாக்காம உன்னை விட்டுட்டேன் அணு சாரி மா”, என்று பேச்சு கொடுத்து அவள் பதட்டத்தை குறைக்க முயன்றான்.
“ஒரு மாதிரி திக்கு திக்குன்னு இருக்கு அஜ்ஜு”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அணு.
“ஒண்ணும் இல்லை டா . அதான் இங்க வந்துட்டோமே. பயப்படாத”, என்று அவள் முதுகை தடவி கொடுத்து சமாதான படுத்தினான் அர்ஜுன்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் நடுக்கம் குறைந்தது. அவனும் அதை உணர்ந்தான். ஆனாலும் அவள் விலகாமல் இருந்தாள். அவள் நடுக்கம் குறைந்ததும் அர்ஜுனின் புலன்கள் அனைத்தும் விழித்து கொண்டது. சற்று முன்பு அவளை பார்த்த கோலமும், இப்போது அவள் காட்டும் நெருக்கமும் அவளை இம்சித்தது.
“இது சரி வராது”, என்று நினைத்து கொண்டு அவளை விட்டு விலகினான்.
அதை உணர்ந்தவள் எதுவும் சொல்லாமல், தன்னுடைய கிளிப்பை தலையில் இருந்து எடுத்து அதை விரித்து விட்டு காய வைத்தாள்.
அவளை பார்ப்பதும், வெளியே தலையை திருப்பவதுமாக இருந்தான் அர்ஜுன்.
“இங்க இருந்து போயிரு டா”, என்று குரல் கொடுத்து கொண்டே இருந்தது மனசாட்சி.
“நேத்து நைட் எனக்கு போன் செஞ்சு விஷ் பண்ணிட்டு எப்ப டா தூங்குன?”, என்று கேட்டாள் அனுராதா.
“உடனே படுத்துட்டேன் அணு”, என்று தயக்கத்துடன் பதில் சொன்னான்.
“சரி வெறும் விஷ் பண்ணா போதுமா? கிப்ட் எங்க டா?”
அவளை பார்த்து சிரித்தவன், “போகும் போது வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன். அம்மா எதாவது நகை வாங்கி கொடுக்க சொன்னாங்க. சரி உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. அதை வாங்குவோம்”, என்றான்.
“என்ன கேட்டாலும் வாங்கி தருவியா?”
“ஆமா அணு. கேளு”
“எனக்கு ஒரு முத்தம் வேணும்  அர்ஜுன்”
“அணு….!”
“ஆமா, வேணும் தருவியா? நீ கூட தர வேண்டாம். நான் ஒரே ஒரு முத்தம் உனக்கு கொடுத்துக்கட்டா? இது தான் எனக்கு பர்த்டே கிப்ட். உனக்கு ஓகே வா?”
அதிர்ச்சியில் சிலை என இருந்தான் அர்ஜுன்.
அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போக அதை சம்மதமாய் எடுத்து கொண்டு அவன் கையை பிடித்தாள் அணு.
“அணு ப்ளீஸ் விடு”
அடுத்த நொடி அவன் கழுத்தை கட்டி கொண்டாள் அணு.
“அணு வீட்டுக்கு கிளம்பலாம் மா”, என்று முணங்களாக வந்தது அர்ஜுன் குரல்.
உருகுதல் தொடரும்…..

Advertisement