Advertisement

அத்தியாயம் 11
வரமாக நீ 
கிடைத்த பின்னால் 
கடவுளிடம் எனக்கென 
வேண்டுதல் தான் ஏது?!!!
போனை வைத்து விட்டு தூக்கத்தை தொடர்ந்தாள் அணு.
அர்ஜுனும் படுத்தான். அப்போது தான் அறை கதவை பூட்டியது நினைவு வந்தது. “அம்மா ஏதாவது சத்தம் கொடுத்தா கூட கேக்காதே”, என்று நினைத்து கொண்டு கதவை திறந்து வைத்து விட்டு படுக்கையில் விழுந்தான்.
காலையில் வீட்டுக்கு வந்த அணுவை பார்த்து சிரித்தான் செக்யூரிட்டி சிவபாலன்.
பதிலுக்கு அவனை பார்த்து சிரித்தாள் அணு.
“வண்டில வரலையா சின்னம்மா? காணும் வண்டியை”, என்று கேட்டான் சிவபாலன்.
“இல்லை சிவா. ஆட்டோல தான் வந்தேன்”, என்று ஆரம்பித்து  அவனிடம் அவன் குடும்பத்தை பற்றி சில வார்த்தை விட்டு உள்ளே வந்தாள்.
“அணு, வா வா. எப்படி இருக்க?”, என்று கேட்டாள் சந்திரிகா.
“அத்தை  நேத்து தான போனில் பேசினோம்”, என்று சிரித்தாள் அணு.
“அது நேத்து, இது இன்னைக்கு. பேசினா மட்டும் போதுமா? பாக்க வேண்டாமா? உக்காரு  டா. பார்வதி அனுவுக்கு ஜூஸ் போடு”
“சரிங்கம்மா”, என்று குரல் கொடுத்தாள் பார்வதி.
“என்ன அணு? இன்னைக்கு காலைலே இந்த பக்கம்? என்னை பாக்கவா? இல்லை உன்னோட வருங்கால புருசனை பாக்கவா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் சந்திரிகா.
“நான் அத்தையை மட்டும் தான் பாக்க வந்தேன் பா. அப்படியே போனா போகுதுனு உங்க பையனையும் பாத்துட்டு போலாம்னு நினைச்சேன்”, என்று சிரித்தாள் அணு.
“போனா போகுதுன்னு அவனை பாக்க வந்தியா? நம்பிட்டோம். சரி அது என்ன கையில் கவர்?”
“உங்களை பாத்ததும் மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு என்னோட பிறந்த நாள். இந்தாங்க கேக். அப்புறம்  என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை”
“எப்பவும் சந்தோசமா இருக்கணும் டா. அது தான் இன்னைக்கு அதிசயமா சேலைல வந்துருக்கியா?”
“கோயிலுக்கு போனேன் அத்தை. அதான் கட்டினேன்”
“கட்டுனது தான் கட்டின? ஒரு பட்டு சேலையை கட்டிருக்க கூடாது?”
“போங்க அத்தை. அது ரொம்ப நேரம் கட்டினா கச கசன்னு  இருக்கும். இந்த சேலை சாப்டா இருக்கும் அதான்”
“சரி சம்பந்தி என்ன செய்றார்?”
“உங்க சம்பந்தி காலைலே பிஸ்னஸ் மீட்டிங்ன்னு கிளம்பி போய்ட்டார். சரி உங்க பையனும் ஆஃபீஸ் விசயமா காலைலே வெளிய போகணும்னு சொன்னான். போய்ட்டானா?”
“ஆஃபீஸ் விசயமாவா? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே. ஆஃபீஸ் விசயம் எல்லாம் நான் தான் பாத்துக்குவேன்.மேனேஜர்  ரொம்ப நம்பகமான ஆள். எல்லாமே என்கிட்ட சொல்லிருவார். நான் மாசம் ரெண்டு தடவை நேர்ல போய் பாத்துட்டு வருவேன். இவன் ஏன் அப்படி சொன்னான்?”
“இன்னைக்கு எங்கயாவது வெளிய கூட்டிட்டு போன்னு சொன்னேன் அத்தை. அப்பாவும் அவன் கிட்ட சொன்னார். சரி மாமான்னு சொன்னவன் நைட் போன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிட்டான்”
“அது ஒரு சோம்பேறி மா. ரூமை விட்டு எங்கயும் போகாது. இப்பவும் குப்புற படுத்து தூங்கிட்டு தான் இருப்பான். நீ அவனை எழுப்பி இன்னைக்காவது எங்கயாவது பத்திட்டு போ. மேல முதல் ரூம். நீ போய் அவனை எழுப்பி கூட்டிட்டு வா. நான் உங்களுக்கு சுவீட் செஞ்சு வைக்கிறேன்”
“அத்தை சுவீட் எனக்கா? இல்லை எங்க பேரை சொல்லி உங்களுக்கா?”
“நெல்லுக்கு இறைத்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தால் தப்பு இல்லை அணு”, என்று சிரித்து கொண்டே சென்று விட்டாள் சந்திரிகா,
அணுவும் சிரித்து கொண்டே மேலே வந்தாள்.
“எசக்கு பிசக்குனு படுத்திருப்பானா?”, என்று ஒரு நிமிடம் யோசித்தவள் “நம்ம அர்ஜுன் தான? பரவால்ல”, என்று முடிவு பண்ணி உள்ளே சென்றாள்.
அங்கே சந்திரிகா சொன்னது மாதிரி குப்புற படுத்து தான் உறங்கி கொண்டிருந்தான் அர்ஜுன்.
ஒரு சிரிப்புடன் அவன் அருகே கட்டிலில் அமர்ந்தவள் அவனை எழுப்ப துடங்கினாள்.
நல்ல உறக்கத்தில் இருந்த அர்ஜுன் “எந்திரி டா அஜ்ஜு. அர்ஜுன் எந்திரி”, என்ற அணுவின் குரலில் வாரி சுருட்டி கொண்டு எழுந்து அமர்ந்தவன் தன்னுடைய அறையில் தன்னுடைய கட்டிலில் அவளை பார்த்து சிலை என ஆனான்.
அதுவும் காலைலே தலையை  பின்னாமல் ஃப்ரீ ஹேர் விட்டு அதுவும் புடவை அவள் மேனியை தழுவி இருக்க “கண்டிப்பா நான் கனவு தான் காணுறேன்”, என்று நினைத்து கொண்டே அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்.
“தூங்கு மூஞ்சி”, என்று சிரித்தாள் அணு.
அதை கேட்ட பின்னர் தான் சுயவுணர்வுக்கு வந்தவனுக்கு மேலே சட்டை இல்லாமல் இருப்பது உரைத்தது. போர்வையை  இழுத்து கழுத்து வரை மூடியவன் “ஏய் நீ இங்க என்ன செய்ற?”, என்று கேட்டான்.
“மணி பத்து ஆகுது. இன்னும் தூங்குற? அதான் எழுப்பி விடலாம்னு வந்தேன்”
“லீவ் தான? அதான் தூங்குறேன். எதுக்கு எழுப்பனும்?”
“ஆமா நீ தான் ஏதோ ஆஃபீஸ் வேலை பாக்கணும்னு சொன்னியே? அதான் எழுப்ப வந்தேன்”, என்று சொல்லி அவனை முறைத்தாள்.
“அது…. அந்த வேலை அடுத்த வாரம் செஞ்சிக்கலாம்னு மேனேஜர் காலைல தான் போன்  பண்ணார். அதான் தூங்குறேன்”
“அப்ப சரி. வேலை இல்ல தான? வா வெளிய போகலாம்”
“ஐயோ,  இப்ப என்ன சொல்லி சமாளிக்க? அப்படியே கும்முன்னு  இருக்கா. இவ கூட போனோம் அவ்வளவு தான்”, என்று முழித்தவன் “எனக்கு காச்சல் அணு. அதான் தூங்குறேன். இன்னொரு நாள் போகலாம்”, என்றான்.
“ஐயோ அப்படியா? நிஜமாவா? இரு நான் பாக்குறேன்”, என்று சொல்லி அவன் போர்வையை விலக்கி அவன் கழுத்து, நெற்றி, நெஞ்சு என கையை வைத்து பார்த்து அவனை சோதித்தாள்.
இந்த நெருக்கம் அவனை சுழற்றி தான் போட்டது.
“உடம்பு கொஞ்சம் சுட தான் செய்யுது அர்ஜுன். வா ஹாஸ்பிடல் போகலாம்”
“நீ போ அணு. நான் அப்பறம் போய்க்கிறேன்”
“எனக்கு என்ன வேலை? வீட்டில சும்மா தான் இருப்பேன். அதனால இன்னைக்கு முழுவதும்  நான் தான் உன்னை பாத்துக்க போறேன்”
“என்னது இன்னைக்கு முழுவதுமா? என்ன பாத்துப்ப ? ம்ம். அதெல்லாம் வேண்டாம்”
“ஹாஸ்பிட்டல் போய்ட்டு அப்பறம் வந்து உனக்கு சாப்பாடு ஊட்டணும். உனக்கு காச்சலை குறைக்கணும். நைட் அப்பா வரும் போது என்னை கூட்டிட்டு போக சொல்லணும்”
“ஏற்கனவே பித்து புடிச்சவன் மாதிரி இருக்கேன். இதுல இந்த ரூம்ல இவ கூட இருந்தோம்னா  என்னோட எம். பி. ஏ கனவு, கல்யாணத்துல தான் முடியும்”, என்று நினைத்து “அதெல்லாம் காச்சல்   இல்லை. வா நாம வெளியவே போகலாம்”, என்றான்.
“பொய்யா சொல்ற? அப்படி வா வழிக்கு”, என்று நினைத்து கொண்டு “சீக்கிரம் கிளம்பி வா”, என்றாள்.
“ஹ்ம்ம்  சரி நீ போ”
“அர்ஜுன். உனக்கு தான் காச்சல்   அடிக்குதே? நான் வேணும்னா, உனக்கு உடம்பு துடைச்சு விடவா?”, என்று நக்கலாக கேட்டாள் அணு.
“ஏய் போடி வெளிய. மனுஷனை இம்சை படுத்தி கிட்டு. கால் மணி நேரத்துல கிளம்பி வந்துருவேன்”, என்று முறைத்தான் அர்ஜுன்.
நேத்து பொண்டாட்டியை மட்டும் தான் டி சொல்லுவேன் என்று சொன்னவன் இன்னைக்கு அவனை மீறி சொல்லவும் குஷியாக அவனை பார்த்து சிரித்தவள் “ஒரு உதவி செய்யலாம்னு நினைச்சு கேட்டா ரொம்ப தான் பண்ற அஜ்ஜு”, என்று சொல்லி கொண்டே அவன் தோளை தட்டினாள்.
கை எடுத்து அவளை பார்த்து கும்பிட்டவன் “நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். தயவு செஞ்சு கீழ இரு. நான் வறேன்”, என்றான்.
“ஹ்ம் சரி”, என்று எழுந்து வாசலை நோக்கி போனவளை “அணு”, என்று அழைத்தான் அர்ஜுன்.
“என்ன டா ?”
“ஹேப்பி பர்த்டே”
“சீக்கிரம் சொல்லிட்ட அஜ்ஜு. குளிச்சிட்டு வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சிரித்து  கொண்டே எழுந்தவன் “எப்படி காச்சல் அடிக்குதான்னு  தொட்டு பாக்குறா? இவ கை பட்டா நிஜமாவே காச்சல் வந்துரும் போல?”, என்று நினைத்து கொண்டு குளிக்க சென்றான் அர்ஜுன்.
அவன் குளித்து கீழே வரும் போது சந்திரிகாவும், அணுவும் ஏதோ பேசி சிரித்து  கொண்டிருந்தார்கள்.
அவனை பார்த்ததும் “வந்துட்டியா  அர்ஜுன்? சரி வா சாப்பிடலாம். அணு வா”, என்றாள் சந்திரிகா.
“நீங்க இன்னுமா மா சாப்பிடலை?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“நான் அப்பவே சாப்பிட்டுட்டேன்.  அனுவுக்கு  பிறந்த நாள் வேற. பார்வதி சுவீட் எல்லாம் செஞ்சிருக்கா  டா. அதான் ரெண்டாவது தடவை சாப்பிடலாம்னு  நினைச்சேன்”, என்று பாவமாக சொன்னாள் சந்திரிகா.
“உங்களோட இந்த சுவீட் பைத்தியம் எப்ப தான் போகுமோ? சரி வாங்க. வா அணு”, என்று அழைத்தான் அர்ஜுன்.
மூவரும் சாப்பிட பார்வதி பரிமாறினாள்.
சாப்பிட்டு முடித்ததும் பைக் சாவியை எடுத்து கொண்டவனை பார்த்த சந்திரிகா, “அர்ஜுன் காரை எடுத்துட்டு போ. வெயில்  அடிக்கும்  போது  பைக்ல  சுத்துனா  நல்லா இருக்குமா சொல்லு”, என்றாள்.
அது நியாயம் என்று பாத்தாலும், அவனுடைய புது பைக்கை  நினைத்து கொண்டான்.
“நாலைல இருந்து பைக் தான்”, என்று நினைத்து கொண்டு “சரி மா. காரிலே போறோம். வா அணு. மதியம் மறக்காம மாத்திரை சாப்பிட்டுருங்க. பார்வதி கிட்ட சொல்லிட்டேன். அவ தருவா”, என்றான்.
“சரி டா. பத்திரமா போய்ட்டு வாங்க. பை  அணு”, என்று வழி அனுப்பி வைத்தாள் சந்திரிகா.
அவனருகே  அணு   காரில் ஏறி அமர்ந்தவுடன் காரை எடுத்தான் அர்ஜுன்.
சந்திரிகாவை பார்த்து இருவரும் கை ஆட்டிவிட்டு  கார் கேட்டை  விட்டு வெளியே வந்தது.
“எங்க போகலாம் அணு?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“ஹ்ம்  தெரியலையே “
“ஏதாவது படத்துக்கு போகலாமா?”
“ஹ்ம் போகலாம் அர்ஜுன்”, என்று சிரித்தாள்.

Advertisement