Advertisement

“நான் அவங்களை கேக்கலை. உன் பக்கத்துல இருக்குற பொண்ணை கேட்டேன்”
“மன்னிச்சிக்கோங்க மா. இவ பேரு பொன்னி மா. நம்ம மாணிக்கம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. இங்க கூட்டிட்டு வந்தான். ஐயா தான் வேலை கொடுத்தாங்க”
“சரி அத்தை எங்க?”
“ரூமில் இருக்காங்க மா”
“சரி மதியம் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்தாச்சா?  காலைல சாப்பிட்டாங்களா?”
“ஐயாவோட அத்தை, பெரியம்மாவுக்கு காலைல சாப்பாடு கொண்டு போனாங்க மா. ஆனா பெரியம்மா சாப்பிடலையாம். மதியம் இனி தான் மா கொடுக்கணும். ஏற்பாடு செஞ்சிட்டேன்”
“சரி எடுத்துட்டு வா”, என்று சொல்லி கொண்டே சந்திரிகா அறைக்குள் போக பார்த்த அணுராதாவை “ஏய் இரு டி”, என்று சொல்லி நிறுத்தினாள் மேகலா.
பொறுமையாக திரும்பியவள் கையை கட்டி கொண்டு கண்களால் என்ன வென்று கேட்டாள்.
அவள் திமிரில் வெகுண்ட மேகலா, “நீ எதுக்கு இங்க வந்துருக்க? உன்னை யாரு இங்க அழைச்சா? இங்க வர உனக்கு என்ன உரிமை இருக்கு?”, என்று கேட்டாள்.
“என் வீட்டுக்கு நான் வந்துருக்கேன். யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை அதிகாரம் பண்ற வேலை வச்சிக்காதீங்க புரிஞ்சதா?”, என்று அணு மேகலாவை அரட்டும் போதே அங்கு சாப்பாடை எடுத்து வந்தாள் பார்வதி.
அதை வாங்க போன அணு அடுத்த நிமிடம் பார்வதி கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். கீழே விழ இருந்த பாத்திரத்தை கஷ்ட பட்டு விழாமல் பிடித்தாள் பார்வதி.
“கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா பாரு? என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்க? நான்வெஜ், ஜாங்கிரின்னு. உனக்கு என்ன சொல்லிருக்கேன்”
“மன்னிச்சிருங்க சின்னம்மா. இந்தா இங்க இருக்குறவங்க தான் இதை செய்ய சொன்னாங்க”
“அறிவு இல்லாம சொன்னவங்க பேச்சை கேக்க கூடாதுன்னு தெரியாதா?”
“எனக்கு என்ன செய்யன்னு தெரியலை மா”
“தெரியலைன்னா அர்ஜூன்க்கு போன் போட்டிருக்க வேண்டியது தான? சரி வேற மெனு ஏற்பாடு பண்ணு. வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் யாரும் நான்வெஜ் சாப்பிட கூடாது. சமைச்சதை எல்லாம் நீ வீட்டுக்கு போகும் போது, எல்லாரும் ஷேர் பண்ணி கொண்டு போயிருங்க. அப்புறம் இப்ப வேற சமையல் செய். பெருசா வேண்டாம். ஒரு குழம்பு, ஒரு காய் போதும்”
“சரிங்க மா. ஆனா சாப்பிட நேரம் ஆகிட்டே”
“ஒரு நாள் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது. அத்தைக்கு மட்டும் ஜூஸ் எடுத்துட்டு வா”, என்று சொல்லி விட்டு சந்திரிகா அறைக்குள் சென்று விட்டாள் அணுராதா.
“அம்மா பாரு மா. இவ எப்படி செய்றான்னு. எதாவது செய் மா”, என்று சொன்னாள் பிரியா.
“இரு டி வரேன். இவளை…”, என்று சொல்லி கொண்டே அங்கு இருந்த போனை எடுத்து நம்பரை அழுத்தினாள்.
“சொல்லுங்க அத்தை. என்ன இந்த நேரத்தில்?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“நீ உடனே வீட்டுக்கு வா அர்ஜுன். இங்க நடக்குறது எல்லாம் சரி இல்லை”
“ஏன் என்ன ஆச்சு?”
“நீ வா சொல்றேன்”
“சரி கிளம்பி வரேன்”, என்று சொல்லி விட்டு வைத்தான் அர்ஜுன்.
“உன் அத்தான் வரட்டும். கழுத்தை பிடிச்சு வெளியில் இவளை தள்ள சொல்றேன்”, என்று சொன்னாள் மேகலா.

“ஆமா மா. இவ இங்க இருந்தா நம்ம வேலை எப்படி நடக்கும்?”, என்று கேட்டாள் பிரியா.
உள்ளே போன அணு, “அத்தை”, என்று அழைத்த படியே கட்டிலை நெருங்கினாள்.
“அணுமா வந்துட்டியா?”, என்று கேட்டு கொண்டே எழுந்து அமர்ந்தார் சந்திரிகா.
அவர் அருகில் சென்று அமர்ந்த அணு “வந்துட்டேன் அத்தை. என்னை மன்னிச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க”, என்று அவர் காலை தொட்டார்.
அவளுடைய கையை பிடித்து கொண்ட சந்திரிகா, “உன் மேல எனக்கு கோபமே வராது டா”, என்றார்.
“அப்ப எதுக்கு கம்பீரமா இல்லாம இப்படி முடங்கி போய் படுத்திருக்கீங்க”
“நீ என்னை விட்டு போனல்ல? அதான். இப்ப நீ வந்துட்ட. இனி சரி ஆகிரும்”, என்று சிரித்தார் சந்திரிகா.
அப்போது “அம்மா ஜீஸ் கொண்டு வந்திருக்கேன்”, என்று சொல்லி கொண்டே உள்ள வந்தாள் பார்வதி.
அதை வாங்கி கொண்ட அணுராதா அவளை போக சொல்லி விட்டு அந்த ஜூஸை சந்திரிகாவுக்கு பருக கொடுத்தாள்.
குடித்து முடித்த பின்னர் டம்ளரை வாங்கி அங்கு இருந்த மேசையில் வைத்து விட்டு மறுபடியும் சந்திரிகா அருகில் அமர்ந்தாள் அணு.
“அப்புறம் அணு, அப்பா எப்படி இருக்காரு?”
“அவருக்கென்ன? நல்லா தான் இருக்காங்க. நாளைக்கு வருவாங்க”
“சரி நீங்க என்ன ஒழுங்கா சாப்பிடுறது இல்லையாம். இன்னைக்கு நான் வெஜ் சமைக்கிறாங்க. நீங்க எதுவுமே சொல்றது இல்லையா அத்தை?”
“நீ போன பிறகு நான் வெளியவே போகலை டா. இனி நீயே எல்லாம் பாத்துக்கோ”
“சரி எங்க உங்க பாப்பா?”
“வந்த உடனே அவனை கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டியா? அவன் மேல உள்ள கோபம் போயிருச்சா உனக்கு”
“முழுசா போகலை. கொஞ்சம் போயிருச்சு”, என்று சிரித்தாள் அணு.
“சரி ஒரு வாரம் என்ன செஞ்ச?”, என்று சந்திரிகா கேட்டு அணு பதில் சொல்லி கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த பார்வதி, “சின்னம்மா நீங்க சொன்ன மாதிரியே சமைச்சிட்டேன். சாம்பார் வச்சிட்டேன். ரசம் அப்பதே வச்சாச்சு. இன்னைக்கு ஒரு பொரியல் தான் பண்ணிருக்கேன். அப்பளம் பொரிச்சிட்டேன். சாப்பாடு இங்க கொண்டு வரவா?”, என்று கேட்டாள்.
“பார்வதி கிட்ட சொன்னா டக்கு டக்குன்னு வேலை முடிஞ்சிரும்”, என்று சிரித்தாள் அணு.
“போங்க மா”, என்று வெட்க பட்டாள் பார்வதி.
“போறது இருக்கட்டும். நான் உன்கிட்ட என்ன சொன்னேன் பார்வதி? அத்தையை பாத்துக்க சொல்லிட்டு தான போனேன்? அப்புறம் ஒழுங்கா சாப்பாடு கொடுக்காம இருந்திருக்க. பாரு மெலிஞ்சு போய் இருக்காங்க?”
“கோப படாதீங்கம்மா. நான் கொண்டு வரும் போது எல்லாம் அந்த அம்மா என்னை விடவே இல்லை. என்ன செய்றதுன்னு தெரியலை. ஐயா வேற என்ன சொல்லுவாங்களோன்னு தான்”
“சரி சரி நீ எடுத்து வை. நானும் அத்தையும் அங்கேயே சாப்பிட வரோம்”
“சரி அம்மா”, என்று சொல்லி விட்டு பார்வதி போன பின்னர் “ஆமா எதுக்கு அத்தை உங்க சொந்த காரங்க வந்திருக்காங்க?”, என்று கேட்டாள் அணுராதா.
“நீ வீட்டை விட்டு போன உடனே எனக்கு மயக்கம் வந்து விழுந்துட்டேன் டா.  என்னை பாத்துட்டு போகலாம்னு வந்தவங்க இங்கயே தங்கிட்டாங்க. எனக்கு துணையா இருக்கட்டும்னு அர்ஜுனும் ஒன்னும் கேக்கலை போல? ஆனா அவங்க இங்க வந்தது எனக்கே சரியா படலை. அதான் நேத்து உங்க அப்பாவுக்கு போன் பண்ணேன்”
“அப்ப அப்பா என்னை திட்டி அனுப்புனதுக்கு காரணம் நீங்க தானா? ரெண்டு பேரும் பிளான் செஞ்சிருக்கீங்க?”, என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“நான் உன் செல்ல அத்தை தான? மறுபடியும் கோப படாத கண்ணு. எனக்கு நீ இல்லாம இந்த வீடே பிடிக்கலை. அதான் கூப்பிட்டேன்”
“சரி சரி உங்களை அப்பறம் கவனிச்சுக்குறேன். அதுக்கப்புறம் உங்க சம்பந்தி அதான் அந்த வாசு தேவனுக்கும் இருக்கு. இப்ப வாங்க சாப்பிட போகலாம்”, என்று சொல்லி கொண்டே கை பிடித்து அழைத்து போனாள் அணுராதா.
அங்கே இருந்த சோபாவில் பிரியாவும், மேகலாவும் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களை சட்டையே செய்யாமல் சந்திரிகாவை டைனிங் டேபிளில் அமர வைத்தவள் அவருக்கு சாப்பாடு பரிமாறினாள்.
“நீயும் உக்காரு அணு மா”, என்றார் சந்திரிகா.
“எனக்கு பசி இல்லை அத்தை. அப்புறம் சாப்பிடுறேன். நீங்க நல்லா சாப்பிடுங்க”, என்று சொல்லி கொண்டே அவர் அருகில் அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தாள்.
தாயும், மகளும் அவர்கள் இருவரையும் முறைத்து கொண்டிருந்தார்கள்.
ஒரு பேருக்காக “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலையா மேகலா?”, என்று கேட்டார் சந்திரிகா.
“நீங்க சாப்பிடுங்க அண்ணி. நாங்க அப்புறம் சாப்பிடுறோம்”, என்று சிரித்தாள் மேகலா.
வீட்டு கேட்டில் வண்டியை நிறுத்திய அர்ஜுன், “யாரு சிவா வந்திருக்கா? என்ன பிரச்சனை? உனக்கு தெரியுமா?”, என்று கேட்டான்.
“நம்ம சின்னம்மா தான் வந்துட்டாங்க ஐயா”
“பாரு டா, மேடம் அதுக்குள்ள வந்தாச்சா?”, என்று சிரித்தவன் “சரி இன்னைக்கு யாருக்கு மேடம் கையால புதையல் கிடைச்சது?”, என்று சிரித்து கொண்டே கேட்டான்.
“முதல் புதையல் எனக்கு தாங்க ஐயா. சப்புன்னு ஒன்னு விட்டாங்க”
“கேட்டில் நிக்காம போயிருப்ப”
“ஆமாங்க ஐயா. நான் யாரையாவது நிப்பாட்டிட்டு போயிருக்கணும்”
“ஹா ஹா. பயமுறுத்தி வச்சிருக்கா. ராட்சசி”
“அப்படி சொல்லாதீங்க ஐயா. அவங்க இந்த வீட்டுக்கு வந்த தேவதை ஐயா”
“அவளை நீங்க எல்லாரும் விட்டு கொடுத்தா மழை கீழ இருந்து மேல பெய்யுமே. சரி வேற யாருக்கு அடி விழுந்தது?”
“நம்ம பார்வதிக்குன்னு நினைக்கிறேன். உள்ள போங்க அடுத்தது நீங்களா கூட இருக்கலாம்”
“ஹா ஹா. செஞ்சாலும் செய்வா. ஏற்கனவே நிறைய வாங்குறது தான? நீங்க எல்லாரும் உங்க வீட்ல வாங்காமலா இருக்கீங்க? என்ன என் நிலைமை உங்க எல்லாருக்கும் தெரியுது. உங்க நிலைமை எனக்கு தெரியாது”
“சரிங்க ஐயா, உள்ளாற போங்க. வேலை பாக்காம அரட்டை அடிச்சா அம்மா திட்டுவாங்க”
“டேய் நான் உங்க முதலாளி டா”
“ஆனா சின்னம்மா உங்களுக்கே முதலாளி ஆச்சே ஐயா”
“எனக்கே கொஞ்சம் பயமா தான் சிவா இருக்கு. அதுக்கு தான் உங்கிட்ட பேசி நேரத்தை கடத்திட்டு இருக்கேன்”
“உங்களுக்குனு இருக்குறது கிடைக்காமலா போகும்?”
“என்னமோ புதையல் மாதிரி சொல்ற? அடி பிச்சிருவா சிவா”
“பய படாம போங்க”, என்று சிரித்தான் சிவா பாலன்.
“நீயெல்லாம் தைரியம் சொல்ற மாதிரி ஆகிட்டு பாத்தியா, என் நிலைமை. அப்படி ஆட்டி படைக்கிறா”, என்று ரசித்து சொன்னவனை எப்போதும் போல ஆச்சர்யமாக பார்த்தான் சிவா.
“என் கண்ணுக்கு தெரிஞ்சு, உண்மையான காதலர்கள்னா, நான் அம்மாவையும் ஐயாவையும் தான் சொல்லுவேன். ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்”, என்று நினைத்து கொண்டு சிரித்தான் சிவபாலன்.
“வெளிய காரை திருப்பி வச்சிரு சிவா. இப்ப ஓடிருவேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் அர்ஜுன்.
உருகுதல் தொடரும்…..

Advertisement