Advertisement

உன் தோளில் சாயும் தருணம் 

அத்தியாயம் 1
மூச்சு முட்டும் தூரத்தில்
நீ இல்லாமல் போனாலும்
என் கண்ணில் படும் தூரத்திலாவது இரு,
வாழ்ந்துவிடுவேன் ஒரு யுகம்!!!
மாடி படியில் இருந்து இறங்கி வந்தாள் பிரியா. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருந்தது. ஒயிலாக  இறங்கி வந்தவள் அங்கு கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த மேகலா அருகில் சென்று “என்ன மா காலைலே கன்னத்துல கை வச்சு உக்காந்துட்டு இருக்க?”, என்று கேட்டாள்.

“உன்னை எல்லாம் பிள்ளையா பெத்ததுக்கு இப்படி தான் உக்காரணும்?”

“காலைலே ஆரம்பிச்சிட்டியா? எவ்வளவு சந்தோசமா ராணி மாதிரி இறங்கி வந்தேன்? நீ இப்படி திட்ற? போமா”

“எருமை. நான் இங்க உன்னை ராணியாக்கணும்னு தவிச்சிட்டு இருக்கேன். ஆனா நீ கனவு கண்டுட்டு பத்து மணி வரைக்கும் தூங்கிட்டு நிறுத்தி நிதானமா வர?”

“நைட் ஒரு பேய் படம் பாத்தேன். அதான் நேரம் ஆகிட்டு எந்திரிக்கிறதுக்கு?”

“இப்படியே எதாவது சாக்கு சொல்லு”

“சரி அத்தான் கிளம்பியாச்சா?”

“அவன் இன்னுமா இங்க இருக்கான். அப்பவே போய்ட்டான்”

“அதுக்குள்ளயுமா?”

“என்கிட்ட அடி வாங்காத பிரியா. நான் நேத்து உன்கிட்ட என்ன சொன்னேன்? சீக்கிரம் எந்திச்சு, குளிச்சு கிளம்பி வந்து அவன் கிளம்பும் போது அவனுக்கு சாப்பாடு பறி மாறி அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும்னு சொன்னேனா இல்லையா?”

“சரி விடு மா. நாளைக்கு சரியா செய்றேன்”

“இப்படி தான் ரெண்டு வாரமா சொல்லி கிட்டு இருக்க?”

“விடு மா. இனி நாம இங்க தான இருக்க போறோம். நம்ம அத்தான் தான? சரி பண்ணிரலாம்”

“அந்த சீமாட்டி வீட்டை விட்டு போய்ட்டா. திரும்பி வர மாட்டான்னு தெரிஞ்சு தான் இங்க நாம வந்துருக்கோம். சீக்கிரம் உனக்கும் அர்ஜூனுக்கும் கல்யாணம் நடந்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”

“கண்டிப்பா நடக்கும் மா. சரி சாப்பிட என்ன வச்சிருக்க?”

“என்ன டா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சேன். தின்னி பண்டாரம்”

“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு. நானே போய் பார்வதி கிட்ட கேட்டுக்குறேன். ஆனா அவ என்னை மதிக்கவே மாட்டுக்கா மா”

“அவ மட்டுமா? இங்க வேலை செய்ற யாருமே தான் மதிக்க மாட்டிக்காங்க. ஆனா நாளைக்கு நாம இத்தனை சொத்துக்கு சொந்த காரங்களா ஆகிட்டா, எல்லாரும் நம்ம காலில் விழுந்து தான ஆகணும்?”

“ஹ்ம்ம். ஆமா மா. சரி எங்க அந்த அத்தை?”

“உள்ள தான் இருக்கா. அவளை தான் உடம்பு சரி இல்லை ரெஸ்ட் எடுங்க  அண்ணி அண்ணின்னு காக்கா பிடிச்சு ஒரு ரூம்ல முடக்கி வச்சாச்சே. இந்த அர்ஜுனை சரி செஞ்சா போதும்”

“சரி மா சாப்பிட்டு வந்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்”

“நீ போய் கொட்டிக்கொ. நான் உங்க அப்பாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்”

“நானும் டேடியை கேட்டேன்னு சொல்லு. வாசம் செமையா வருது. பசி வயிறை கிள்ளுது. நான் போறேன்”, என்று சொல்லி விட்டு போன பிரியாவை பார்த்து தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றாள் மேகலா.

நேராக சமையல் அறைக்கு சென்ற பிரியா அங்கு வெங்காயம் நறுக்கி கொண்டிருந்த பார்வதியை “ஏய், நான் வரேன்னு தெரியுதுல்ல? இன்னும் அங்க என்ன செய்ற? சாப்பாடு எடுத்து வை”, என்று அதிகாரமாக சொன்னாள்.

“வந்துட்டா பொன்னி சொர்ணாக்கா”, என்று பக்கத்தில் இருந்த பொன்னியிடம் சொல்லி விட்டு எழுந்த பார்வதி “வாங்க மா எடுத்து வைக்கிறேன்”, என்று நகர்ந்தாள்.

“அது அந்த பயம் இருக்கட்டும்”, என்று சொல்லி கொண்டே உணவு மேசையில் அமர்ந்தாள். 

சமைத்த உணவை அவளுக்கு பரிமாறினாள் பார்வதி.

“சரி சரி இங்க இருந்தா நான் சாப்பிடுறதை கண்ணு போடுவ. நீ போய் வேலையை பாரு”, என்று பார்வதியை சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள் பிரியா.

பல்லை கடித்து கொண்டு உள்ளே போய் பொன்னி அருகில் அமர்ந்தாள் பார்வதி.

“என்ன பார்வதி அதுக்குள்ளே வந்துட்ட?”

“பின்ன அங்க நின்னு அந்த பிசாசு முகத்தை பாக்க சொல்றியா? அங்க தான் இருக்கு சாப்பாடு, தட்டு, தண்ணி. அதை எடுத்து வச்சி திங்காம வம்புக்குன்னு அதிகாரம் பண்ணிட்டு போறா பாரு”

“இந்த பொண்ணு ஏன் தான் இப்படி இருக்காளோ?”

“அவளுக்கு இந்த வீடே அவளோடதுன்னு நினைப்பு. அதான் இப்படி பண்ணிட்டு இருக்கா. சரி விடு நாம நம்ம வேலையை பாப்போம்”, என்று சொல்லி விட்டு வேலையில் கவனம் செலுத்தினாள்.

சிறிது நேரத்தில் “ஏய் பார்வதி, இங்க வா”, என்ற சத்தம் கேட்டது.

“ஆரம்பிச்சிட்டா”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள் பார்வதி.

“என்னங்கமா?”, என்று கேட்டாள் பார்வதி.

“என்ன நொன்னங்கமா? சாப்டுட்டேன்ல. பிளேட் யாரு எடுத்து வைப்பா?”

“இதோ எடுக்குறேன் மா”, என்று சொல்லி கொண்டே தட்டை எடுக்கும் போது, பிரியாவே தெரியாமல் தட்டில் இடித்து விட்டாள். அதில் இருந்த எச்சி தண்ணீர் அவள் கையில் சிதறியது. அடுத்த நொடி “என் மேல எச்சி தண்ணியையா ஊத்துற?”, என்று சொல்லி கொண்டே பார்வதியின் கன்னத்தில் ஒரு அரை வைத்தாள் பிரியா.

அனால் அடுத்த நிமிடம் அதே அரையை அவளுக்கே திருப்பி கொடுத்தாள் பார்வதி. 

“ஏய் என்ன திமிரு உனக்கு? என்னையே அடிக்கிற?”, என்று கேட்டாள் பிரியா.

“பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களா? நானும் ஐயாவுக்கு சொந்தக்காரங்கன்னு மரியாதை கொடுத்தா ரொம்ப பண்ற? நானா உன் மேல எச்சி தண்ணியை ஊத்துனேன்? நீ தான கையை வச்சு இடிச்சிகிட்ட. இந்த வீட்டுக்கு தான் நான் வேலை காரி. உனக்கு இல்லை புரிஞ்சுதா? தப்பு செஞ்சா மட்டும் தான் தலை குனிவா இந்த பார்வதி. இல்லை முகரையை பேத்துருவேன்”, என்று கத்தினாள் பார்வதி.

“இரு உன்னை அத்தான் கிட்ட சொல்லி கொடுக்குறேன்”

“சொல்லிக்கோ. எனக்கு ஒன்னும் பயம்  இல்லை. ஐயா நேர்மையானவங்க. உன்னை தான் திட்டுவாங்க. நீ பொய் சொன்னா கூட அவங்க எல்லாத்தையும் விசாரிச்சு தான் நம்புவாங்க. அப்புறம் பிளேட்டில் கை கழுவுனதுக்கே செமையா திட்டுவாங்க. போய் சொல்லிக்கோ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பார்வதி. 

கோபத்துடன் தன் அம்மாவை பார்க்க சென்றாள். நடந்ததை சொன்னவுடன் “விடு பிரியா. கொஞ்ச நாள் ஆடுவாங்க.  கல்யாணம் முடியட்டும். அப்புறம் அவளுகளை ஒரு வழி பண்ணிரலாம். பொறுமையா இரு”, என்று சொன்னாள் மேகலா. 

“சரி மா”, என்று அவள் சமாதானம் ஆனவுடன், கீழே வந்த மேகலா கிச்சனுக்கு சென்று “அண்ணிக்கு ஜாங்கிரி ரொம்ப பிடிக்குமாம். இன்னைக்கு செய்ய சொன்னாங்க பார்வதி”, என்றாள்.

“நான் உங்களுக்கு வேணும்னா செஞ்சு தரேன் மா. ஆனா பெரியம்மா இனிப்பு சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்கார்”, என்று சொன்னாள் பார்வதி.

“ஏய் நீ இங்க வேலை காரி தான். சொல்றதை செய்”

“சரிங்கம்மா”, என்று அவள் வேலையை ஆரம்பித்தவுடன் வெளியே வந்த மேகலா ஹாலில் டீவியை போட்டு விட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

அப்போது அவள் அருகில் வந்த பிரியா “எதுக்கு மா ஜாங்கிரி?”, என்று கேட்டாள்.
“நல்ல இனிப்பா கொடுத்தா தான உன் அத்தைக் காரி சீக்கிரம் போய் சேருவா”
“அத்தை சாப்பிடுமா?”
“அவளுக்கு ஜாங்கிரின்னா உயிர். கண்டிப்பா சாப்பிடுவா”
“இந்த வயசுலயுமா குழந்தை மாதிரி நடந்துப்பாங்க?”
“அந்த கிழவி அப்படி தான். அவளை இந்த வயசில் எல்லாம் மாத்த முடியாது. அவளும் போய் சேந்துட்டா, நமக்கு இன்னும் வசதி”
“அப்ப சரி”, என்று சொல்லி டிவி பார்க்க ஆரம்பித்தாள் பிரியா.
அவர்கள் இப்படி பேசி ஒரு மூன்று மணி நேரம் கழித்து வெளியே ஹாரன் சவுண்ட் சத்தமாக கேட்டது.

“என்ன இப்படி சத்தம் கேக்குது?”, என்று கேட்டு கொண்டே எழுந்து போனாள் மேகலா.

“கார் சத்தம் மா. யாரோட கார்?”, என்று கேட்டாள் பிரியா.

அந்த ஹாரன்  அலறலில் வேலை செய்பவர்கள் முதல் கொண்டு அனைவரும் வெளியே வந்து விட்டார்கள்.

விடாமல் சத்தம் கேட்டு கொண்டிருந்தது.  கேட்க்கு வெளியே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. 

“வெளிய கார் நிக்கு மா. எதுக்கு இப்படி ஹாரன் அடிச்சிகிட்டே இருக்காங்க? யாரா இருக்கும்?”, என்று கேட்டாள் பிரியா.

“இந்த செக்யூரிட்டி எங்க போனான்னு தெரியலை பிரியா. அதோ வந்துட்டான் பாரு. இப்ப யாருன்னு தெரிஞ்சிரும்”, என்று சொன்னாள் மேகலா.

அங்கே கேட் நோக்கி ஓடி கொண்டிருந்தான் செக்யூரிட்டி சிவ பாலன்.

அவன் கதவை திறந்ததும் அந்த அழகான கார் அந்த வீட்டுக்குள் நுழைந்தது.

“யாரா இருக்கும்?”, என்று எல்லாருமே ஆவலாக பார்த்து கொண்டிருந்தார்கள்.

உள்ளே வந்த கார் வேர்த்து பூத்து நின்று கொண்டிருந்த சிவ பாலன் அருகிலே நின்றது.

“என்ன உள்ள வராமல் அங்கேயே நிக்குது?”, என்று கேட்டாள் பொன்னி.

“தெரியலையே பொன்னி. அப்படி ஹாரன் அடிச்சாங்க. ஆனா அங்கேயே நின்னுட்டாங்க”, என்று சொன்னாள் பார்வதி.

டிரைவர் அமர்ந்திருக்கும் பக்கம் கார் கதவு திறந்தது. உள்ளே இருந்து அழகான கைகள் மட்டும் சிவபாலனுக்கு தெரிந்தது.

அது யார் என்பதை உணர்ந்த சிவபாலன் “ஐயையோ சின்னம்மா வந்துருக்காங்க. நான் இன்னைக்கு செத்துட்டேன்”, என்று நினைத்து கொண்டு “வணக்கம் மா”, என்று சொன்னான்.

“இவன் என்ன வணக்கம் எல்லாம் சொல்றான். அர்ஜுன் இப்ப வரமாட்டேனே பிரியா? இது யாரா இருக்கும்”, என்று கேட்டாள் மேகலா.

“தெரியலையே மா”, என்று பிரியா சொல்லும் போதே விலையுயர்ந்த  புடவையில் கைகள், கழுத்து, காது எல்லாம் வைரம் ஜொலிக்க இறங்கினாள் அணுராதா. 

“அம்மா, என்னது இது? இவ எதுக்கு இங்க வந்துருக்கா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் பிரியா.

“சும்மா இரு பிரியா. நானே அந்த குழப்பத்தில் தான் இருக்கேன். இவ எதுக்கு இங்க வந்துருக்கான்னு தெரியலையே. நீ பயப்படாத. நான் பாத்துக்குறேன்”, என்றாள் மேகலா.

வேலைக்காரர்களும் அங்கேயே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “பார்வதி, வந்துருக்குற அந்த அம்மா யாரு?”, என்று கேட்டாள் பொன்னி.

“நீ இப்ப தான வேலைக்கு சேந்திருக்க? அதான் பொன்னி உனக்கு தெரியலை. இவங்க தான் சின்னம்மா. மித்தது எல்லாம் அப்புறம் சொல்றேன். நடக்குறதை கவனி”, என்றாள் பார்வதி.
அங்கே இன்னும் நடுக்கத்துடன் நின்றிருந்தான் சிவபாலன்.
அறைந்து அந்த கதவை சாற்றிய அணு அடுத்த நொடி அவன் கன்னத்தில் அறைந்தாள்.
கன்னத்தை பிடித்து கொண்டு பாவமாய் நின்றான் சிவ பாலன்.
இங்கே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நால்வரும் அதிர்ச்சியாக நின்றார்கள்.
“என்னை மன்னிச்சிருங்க மா”, என்று சொன்னான் சிவ பாலன்.
“கேட் கிட்ட நிக்காம எங்க போன சிவா?”, என்று ஒரு இளவரசியின் தோரணையோடு கேட்டாள் அணு.
“சாப்பிட போயிருந்தேன் மா”
“சரி நீ செஞ்ச தப்பு என்னன்னு புரிஞ்சதா?”
“ஆமாங்கமா. இனி அப்படி நடக்காது”
“ஹ்ம்ம். பேக் எடுத்துட்டு வா. மணி எங்க?”
“மணி மார்க்கெட் போயிருக்கான் மா”
“சரி நீ அப்ப என்னோட ரூம்ல பேக் வச்சிட்டு, காரை ஒழுங்கா நிப்பாட்டிரு”, என்று சொல்லி கார் சாவியை கொடுத்தாள்.
“சரிங்கம்மா”, என்று அதை வாங்கி கொண்டவன் அவள் சொன்னதை நிறைவேற்ற ஓடோடி சென்றான்.
ஹை ஹீல்ஸ் சத்தம் கொடுக்க, காலில் அணிந்திருந்த கொலுசு முணுமுணுக்க, ஒரு கையில் கை குட்டையும் மற்றொரு கையில் மொபைலுடனும் கம்பீரமாக நடந்து வந்தாள் அணுராதா.
இவர்கள் அருகே வந்தவள், “இது யாரு பாரு?”, என்று பார்வதியிடம் கேட்டாள்.
“அய்யாவோட சொந்த காரங்களாம் அம்மா”, என்று பவ்யமாக பதில் சொன்னாள் பார்வதி.

Advertisement