Advertisement

உன் பார்வை நானறிவேன்

காலையில் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் எழுந்து அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அதன் சாயல் சிறிதும் இல்லாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் கீர்த்தி.

இந்த எல்லோரும் என்பதில் அவள் அன்னை இந்துமதி, தந்தை ராஜேந்திரன், அண்ணன் தண்டபாணி அடக்கம். கீர்த்தியின் அண்ணன் தண்டபாணி பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாமல் நல்ல அல்ட்ரா மாடர்ன் லுக்கில் இருப்பான்.

ப்ரெஞ்ச் தாடி வைத்து, ஸ்டைலாக ஹேர்கட் செய்து, ஹான்ட்சம் ஆக இருப்பான். அவன் பெயரைக் குறித்து அவனுக்கு மிகுந்த வருத்தம். அவன் அன்னையிடமும் தந்தையிடமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சண்டையிடுவான்.

“யார்மா உங்களை இவ்வளவு பழைய பேரா வைக்கச் சொன்னது.”

“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது தண்டபாணி சாமிக்கு வேண்டி வச்ச பேரு.”

“அந்த பேரை வச்சிட்டு வேற பேரைக் கூப்பிடறது தானே.”

“வச்ச பேரே கூப்பிட்டாதான்டா அதன் பலனை முழுமையா கொடுக்கும்.”

“என்ன பலன் கொடுக்குதோ தெரியலை” என்று சலித்துக் கொண்டான்.

“என்ன பலன் கொடுக்கலை எம்.பி.ஏ. படிச்சிருக்க… ஒரு பெரிய கம்பெனில மார்க்கெட்டிங் லைன்ல இருக்க… கை நெறைய சம்பாதிக்கற… அப்புறம் என்ன?”

“அப்புறம் என்னவா?… மார்க்கெட்டிங் என்ன சாதாரண வேலையா. போய் ஒருத்தன் கிட்டயும் தொண்ட தண்ணி வத்த பேசணும். அவனை எங்க தயாரிப்பு வாங்க ஒத்துக்க வைக்கணும். எவ்வளவு வேலை செய்யணும் தெரியுமா… எத்தனை கேள்வி கேப்பானுங்க தெரியுமா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“அதுக்கு தானே தண்டம் உனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கறாங்க…” என்று அவள் துயில் கலை எழுந்து வந்த கீர்த்தி சொன்னாள்.

பதில் பேசாமல் அவன் அன்னையைப் பார்த்து முறைத்தான் தண்டபாணி, “சொன்னேனே கேட்டீங்களா” என்பதுபோல்.

இதைப் பார்த்த அவர்களின் அன்னை கடிந்தார். “காலைல எழுந்திரிக்கும்போதே அவன் கூட வம்பு பண்ண ஆரம்பிக்கறியா.”

“ஓ அப்ப கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணினா பரவாயில்லைபா” என்றாள் கீர்த்தி.

“ஏய் காலைல வம்பிழுக்காத ஒழுங்கா இரு இல்ல, என்கிட்ட அடி வாங்குவ.”

“போடா தண்டம்” என்று அவனிடம் அகப்படாமல் தன் தந்தையின் பின் ஒளிந்தாள்.

“கீர்த்திம்மா இப்படி பண்ணக்கூடாது” என்று அவள் தந்தை கடியும் போதே…

“நானாவது பேர்ல மட்டும்தான் தண்டம் வெச்சிருக்கேன். நீ மொத்தமாகவே பெரிய தண்டம்டி” என்று அவள் அண்ணன் கத்தினான்.

“ஸாரி தண்டு கோபிக்காதே” என்று சட்டென்று அடங்கி கீழே இறங்கி வந்தாள். அவளின் அந்த த்வனியே ஏதோ வேலையாக வேண்டும் அது தான்.

அவள் இறங்கி வருகிறாள் என்று தண்டபாணிக்கு உணர்த்த என்ன கெஞ்சினாலும் வேலைய செய்யக் கூடாது என்று முடிவெடுத்தவனாக… “எந்த வேலையும் செஞ்சி குடுக்க மாட்டேன் போடி” என்று சொல்லிச் சென்று விட்டான்.

அவன் பின்னாடியே ஓடினாள். “அண்ணா, என் செல்ல அண்ணா இல்ல, காலேஜ் வரைக்கும் ட்ராப் பண்ணேன். நான் சீக்கிரம் நீ கிளம்பறதுக்குள்ள குளிச்சி ரெடியாயிடறேன். நான் இன்னைக்கு சீக்கிரம் போகணும். என் ப்ராஜெக்ட் ப்ரெசன்டேஷன்” என்று கெஞ்சலில் இறங்கினாள் கீர்த்தி.

கீர்த்தியும் எம்.பி.ஏ. மாணவியே. அவள் அண்ணனைப் பின்பற்றியே அந்த படிப்பை எடுத்தாள். அவள் அண்ணனை எழும்போதே சீண்டினாலும், அவன் தான் அவளுக்கு எல்லா விஷயத்திலும் ரோல் மாடல். மிகுந்த பாசம் அவள் மீது. வெளியில் சீண்டினாலும், சண்டையிட்டாலும் அண்ணன் சொல்லே வேதவாக்கு.

“என்னைக்குதான் திருந்துவாங்களோ” என்று இருவரையும் பற்றிப் புலம்பியபடியே அவர்கள் அன்னை டிபன் வேலையைப் பார்க்கச் சென்றார்.

கீர்த்தி அவன் பின்னோடு சென்று பார்க்க, யாருடனோ தொலைபேசியில் அவள் அண்ணன் உரையாடிக் கொண்டிருக்க,

“என்னை கொண்டு போய் விடறேன்னு சொல்லு” என்று அவனை தொலைபேசியில் பேசவிடாமல் நச்சரிக்க, “சரி விடறேன்… இப்போ போன் பேச விடு” என்று அவன் எரிந்து விழுந்த பிறகே இடத்தை விட்டு அகன்றாள்.

அதுதான் கீர்த்தி சின்ன விஷயமாக இருந்தாலும் வேலையை முடித்த பிறகே இடத்தை விட்டு நகர்வாள்.

அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், “என் வீட்டு குட்டி பிசாசு என்னை காலையிலேயே டென்ஷன் பண்ணிட்டா” என்று உரிமையோடு யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தான்.

அந்த யாரோ அவன் புது நண்பன் அரவிந்த். இந்த ஒரு மாதமாக தான் பழக்கம். அது நல்ல நட்பாக இருவருக்குள்ளும் உருவெடுத்துக் கொண்டிருந்தது.

அவன் போன் பேசி முடித்து வரும்போதே கீர்த்தி தயாராகி வந்து விட்டாள். “ஏன் கீர்த்தி குளிச்சியா, இல்ல… சும்மா தண்ணிய வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டியா.”

“என்னை என்ன உன்னை மாதிரின்னு நெனச்சியா… ஆமா நீ யாரோட காலைல இவ்வளவு நேரம் போன் பேசுற” என்றவள்… அவன் பதிலை எதிர்பாராது,

“அம்மா எதுக்கும் உன் பையன் மேல ஒரு கண்ணு வெச்சிக்கோ. ரொம்ப நேரம் இப்ப எல்லாம் யார் கூடவோ போன்ல பேசறான்” என்று அவன் அன்னையிடம் வத்தி வைத்தாள்.

உடனே அவன் அம்மா அவனைப் பார்க்க “அம்மா” என்று அவரைப் பார்த்துக் கத்தினான். “சும்மா இந்த பிசாசு சொல்லுதுன்னு அப்படிப் பார்க்காத. அது என் ப்ரெண்ட் அர்விந்த்” என்றான்.

“ஓ, பையனோடவே நீ இவ்வளவு நேரம் பேசினா, இன்னும் பொண்ணுங்க கூட எவ்வளவு நேரம் பேசுவ” என்று அதற்கும் வாரினாள் கீர்த்தி.

“ஏய் காலைல உயிரை எடுக்காத அடங்கி தொலைடி” என்று கீர்த்தியைப் பார்த்து கத்தியவன், “முதல்ல நீ கொட்டிக்கோ, உன்னைக் கொண்டு போய் காலேஜ்ல தள்ளிட்டு வர்றேன். அப்புறம் தான் நான் வேற வேலையே பார்ப்பேன்” என்று மிகவும் டென்ஷனாகிக் கத்தினான்.

தண்டபாணி நிஜமாகவே மிகவம் டென்ஷன் ஆகி விட்டான் என்று உணர்ந்த கீர்த்தி, சற்று அமைதியானாள்.

அவன் அவளை வண்டியில் ஏற்றிக் கிளம்பும்போது, “ஸாரி அண்ணா” என்றாள்.

அவள் சாரியால் சற்று கோபம் மட்டுப்பட்டவன், “சரி விடு” என்றான்.

கீர்த்தியைக் கொண்டு போய் அந்த பிரபலமான பெண்களுக்கான கல்லூரியில் இறக்கிவிட்டு, “பெஸ்ட் ஆஃப் லக்” என்றவன் “நல்லா பண்ணு கீர்த்தி. இதில் விளையாட்டுத் தனமெல்லாம் காட்டாத. இது உன்னோட எதிர்காலம்” என்றான்.

‘சரி’ என்பதுபோல் தலையாட்டினாள்.

காலேஜ் வந்ததும் விளையாட்டுத் தனமெல்லாம் போய் ஒரு தீவிரம் வந்துவிட்டது. ப்ரெஷன்டேஷன் நன்றாகவே செய்தாள். அது அவளின் கடைசி வருடம், கடைசி பரீட்சை. அதனால் தான் ப்ராஜெக்ட் ப்ரெஷன்டேஷன்.

பிறகு தோழிகளிடம் விடைபெற்று வீட்டிற்குக் கிளம்பினாள்.

பஸ் விட்டு இறங்கி, வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டை நெருங்கும் சமயம் தான் கவனித்தாள். அந்த வீட்டிற்கு வெளியே சற்று தள்ளி ஒரு இளைஞன், வண்டியில் உட்கார்ந்தபடியே ஒரு காலை தரையில் ஊன்றி அவள் வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

யாரது தங்களுடைய வீட்டை இப்படி உற்று உற்று பார்ப்பது என்று அவனைப் பார்த்தாள்.

அவன் இவளைக் கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. வீட்டிற்குள் நுழைந்தவள் கேட்டை சாத்தி விட்டு அவனை பார்த்தாள். அப்போதுதான் இவளைப் பார்த்தான் அவன்.

கேட்டிற்கு உள்ளே நின்று அவனையே சற்று நேரம் பார்த்தாள். அவன் பார்வையை வேறுபுறம் திருப்பினான். உள்ளே செல்வதுபோல் சென்றவள், சட்டென்று வெளியே வந்து பார்த்தாள், இன்னும் அவன் தங்கள் வீட்டைதான் பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று பார்க்க… அவன் அவர்கள் வீட்டை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவள் திடீரென்று திரும்ப வந்ததும், முகத்தை வேறுபுறம் மறுபடியும் திருப்பினான். இவன் தங்கள் வீட்டை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நிச்சயமாக நினைத்த கீர்த்தி… “யார் நீங்க, உங்களுக்கு என்ன வேண்டும்” என்றாள் அவனைப் பார்த்து,

கீர்த்தி கேள்வி கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும், அவளைப் பார்த்தவாறு இருக்க…

“ஹலோ, மிஸ்டர்! யார் நீங்க? எதுக்கு எங்க வீட்டையே பார்த்துட்டு இருக்கீங்க” என்று மறுபடியும் சற்று சத்தமாகக் கேட்க…

“தண்டபாணி” என்றான் ஒற்றை வார்த்தையாக.

திரும்பி வீட்டைப் பார்த்தாள் அவன் வண்டி நின்று கொண்டு தானிருந்தது.

“அவனைப் பார்க்கணுமா” என்றாள் மறுபடியும் சத்தமாக.

“ஆமாம்” என்பதுபோல் தலையசைத்தான்.

வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தாள், தண்டபாணி அவசரமாக கிளம்பிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“யார் தண்டு அது வீட்டுக்கு வெளியே நம்ம வீட்டையே பார்த்துட்டு நிற்பது.”

“என் பிரெண்ட், என்னை கூப்பிட வெயிட் பண்றான்.”

“ஏன் வீட்டுக்குள்ள கூப்பிட வேண்டியது தானே.”

“அவன் வரமாட்டான், ரொம்ப ரிசர்வ் டைப்.”

“அதுக்கும் வீட்டுக்குள்ள வர்றதுக்கும் என்ன சம்பந்தம்.”

“வரமாட்டேங்கறான்னா விடேன் நீ ஏன் நோன்டற” என்று கீர்த்தியிடம் எரிந்து விழ…

“போடா ஏதோ உன் பிரெண்ட்ன்னு மதிச்சு கேட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்” என்று பதிலுக்குக் கீர்த்தியும் கத்திவிட்டுப் போனாள்.

கீர்த்தி கத்தும்போதே தண்டபாணி கிளம்பி விட்டிருந்தான்.

“காலையில் அவ்வளவு அட்வைஸ் பண்ணுனான். இப்போ எக்ஸாம் எப்படி எழுதியிருக்கன்னு கேட்காம கூட போறான். என்னைவிட அந்த பிரெண்ட் அவ்வளவு முக்கியமா” என்று சற்றுமுன் பார்த்த அந்த மனிதனை அளவிட ஆரம்பித்தாள்.

மாநிறமாக இருந்தான். வண்டியில் இருந்ததால் உயரம் சரியாகத் தெரியவில்லை. அவன் அவளைப் பார்த்தது சில நொடிகளே. கீர்த்தியின் அண்ணன் பெயரை சொல்லும்போது பார்த்தான். அந்தப் பார்வை தீர்க்கமான பார்வை. பார்ப்பவரை கட்டிப் போடும் பார்வை.

பார்வையின் தீட்சண்யத்தை கீர்த்தி உணர்ந்தாலும் தைரியமாக கீர்த்தி அவனைப் பார்த்துக் கேள்வி கேட்டாள்.

அப்போது அதைத்தான் அவனும் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அரவிந்த், தண்டபாணியின் நண்பன். தண்டபாணி அவனை வீட்டினுள் பலமுறை அழைத்தும், அவன் தான் சங்கோஜப்பட்டு வராமல் வெளியேயே நின்றிருந்தான். அதுவும் சற்று தள்ளிதான் நின்றிருந்தான். அப்படியும் விட்டேனா என்று அவனை பார்த்துவிட்டாள் கீர்த்தி.

கீர்த்தி தன்னை பார்த்து “யார் நீங்க, என்ன வேணும்” என்பது மாதிரியான கேள்விகளை கேட்டதை, அரவிந்த் தண்டபாணியிடம் சொல்லவில்லை. ஏனோ சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கீர்த்தி மிகவும் தைரியமான பெண் என்று மனதினுள் நினைத்தான்.

கீர்த்தியும் வெகு நேரம் அவனைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள். “என்ன மாதிரியான பார்வை அது. ஆட்களை அச்சுறுத்தும் பார்வை. அப்படிப் பார்த்தால் பயந்து விடுவார்களா என்ன? நான் பயப்பட மாட்டேன்” என்று மனதினுள் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.

இரவு தண்டபாணி வீட்டிற்கு வந்ததுமே, அவனை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள். “யார் உன் அந்த பிரெண்ட். என்னை விட முக்கியமான பிரெண்ட். என்னோட ப்ரெசன்டேஷன் எப்படி இருக்குன்னு கூட கேட்காம அப்படி ஓடற.”

“ஆமா, எப்படி பண்ணின” என்றான் தண்டபாணி.

“என்ன எப்படி பண்ணின. நீ இனிமேல் ஒண்ணும் கேட்க வேண்டாம். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. யார் உன் அந்த பிரெண்ட். பார்க்கறதே பயமுறுத்தற மாதிரி பார்க்கிறான். அவன் பேர் என்ன. என்ன பண்றான்?

“உனக்கு அவனைப் பத்தி தெரியணும்னு சொல்லு.”

“ஆமா என்னை விட முக்கியமா அவனைப் பார்க்க போன இல்ல. யார் அவன்னு எனக்குத் தெரியணும்.”

“தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போற.”

“என்னவோ பண்றேன். அதுவா பேச்சு யார் அவன்.”

“அதற்குள் அவர்களின் அம்மா வந்து, “என்னடா இங்க சத்தம்” என்று கேட்டுக் கொண்டே வந்து பார்த்தார்.

“ஒண்ணுமில்லைமா என் பிரெண்ட் பத்தி நோண்டி கேட்கற.”

“அவன் பிரெண்ட் யாரு என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா, தெரிஞ்சா என்ன தப்பு” என்றாள் கீர்த்தி. அவளுக்கு தண்டபாணி விவரங்கள் தராமல் இருக்க, இருக்க, அரவிந்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது.

“நீ தான் சொல்லேண்டா யாரு என்னன்னு” என்று அவன் அம்மா இப்போது அவனைப் பார்த்துக் கேட்க…

“நீ என்னம்மா மாத்தி மாத்தி பேசற” என்றான் தண்டபாணி.

“அம்மா பேச்சை மாத்தறான் விடாதே” என்று காரியத்திலேயே கண்ணாக இருந்தாள் கீர்த்தி.

“அவன் என் பிரெண்ட் அரவிந்த் மா. அவங்கப்பாவோட பர்னிச்சர் ஷோரூம் இருக்கு பார்த்துக்கறான்.”

“உனக்கு எவ்வளவு நாளாடா பழக்கம்.”

“இப்போ கொஞ்சம் மாசமா தான். என் பிரெண்டோட பிரண்ட் அப்படி தான் பழக்கமாச்சு. அப்பறம் அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு மா. ரொம்ப அமைதி. ரொம்ப நல்ல மாதிரி. அதிகம் பேசவே மாட்டான்.”

“என்ன படிச்சிருக்கான்” என்றாள் கீர்த்தி.

“தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போற.”

“நான் என்னவோ பண்றேன். எத்தனை தடவைதான் என்ன பண்ணப் போற கேட்ப, சொல்ற மாதிரி படிக்கலையா” என்று நக்கலாய் கேட்க, ரோஷம் வந்த தண்டபாணி, “அவன் பி.ஈ. முடிச்சிருக்கான் போதுமா. இன்னும் எதுவும் நான் சொல்ல மாட்டேன்” என்றான் தண்டபாணி.

“ஏன் சொல்லமாட்டேன்னு நான் சொல்றேன்” என்றாள் கீர்த்தி.

“ஏன்” என்பது போலப் பார்த்த தண்டபாணியிடம், “ஏன்னா உனக்கே தெரியாது” என்றாள் நக்கலாய்.

அதுதான் உண்மையும் கூட… ஆனால் அதைப் பற்றி சொல்ல பிரியப்படாத தண்டபாணி, “போடி உன்னை மதிச்சு சொன்னேன் பாரு, என்னைச் சொல்லணும்” என்றான் அவளைப் போலவே.

“நீ எங்க சொன்ன, நானே சொல்ல வச்சேன்னு சொல்லு” என்று கீர்த்தி பதிலுக்கு வாய் பேச…

“ரெண்டு பேரும் பேசாம வந்து சாப்பிடுங்க” என்று ஒரு அதட்டல் போட்டார் அவர்களின் அன்னை.

“கேக்கறது எல்லாம் அவளோட சேர்ந்து கேட்டுட்டு இப்போ என்ன சாப்பிடுங்க. எனக்கு ஒண்ணும் வேண்டாம் போ” என்று தண்டபாணி எழுந்து செல்ல… அவன் பின்னாலேயே அவன் அன்னை, “டேய் கொஞ்சமாவது சாப்பிடுறா” என்று கெஞ்சிக் கொண்டே சென்றார்.

“போட்டாண்டா ஒரு சீனை” என்றாள் கீர்த்தி.

“அம்மா அவ சொல்றான்னு என்னைக் கேள்வி கேக்கறியா” என்று தண்டபாணி அன்னையிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க…

அதே வேலையாய் தான் அரவிந்தும் அவன் வீட்டில் செய்து கொண்டிருந்தான். அவன் அன்னை ராணியிடம்,

“என்ன அம்மா சும்மா எங்க போன, ஏன் இவ்வளவு நேரம் கேள்வியா கேட்டுத் தள்ளுறீங்க.”

“அப்பா எத்தனை தடவை போன் பண்ணிட்டார் தெரியுமா அப்படி எங்கடா போன.”

“எங்க போனா உங்களுக்கென்ன, நான் என்ன பொண்ணா, எங்கயும் போகக்கூடாது வரக்கூடாதுன்றதுக்கு.”

“போயேண்டா யாருடா வேண்டாம்ன்னு சொன்னா, லீவு நாள்ல போ, அதை விட்டுட்டு ஷோரூம் கவனிக்காம சும்மா சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம், எனக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்.”

“இந்தப் பேச்சு பேசாதன்னு எத்தனை தடைவ சொல்லியாச்சு. என்ன பிடிக்கலை. நீ பாத்துக்காம வேற யாருடா பார்ப்பா.”

“யாரோ பாக்கட்டும் எனக்கு என்ன?”

“இப்படி நீ பேசறதுக்கா உங்கப்பா தொழிலை இவ்வளவு வளர்த்து வச்சிருக்கார். இங்க இருக்கிறது மட்டுமில்லாம இன்னும் ரெண்டு வேற வேற சிட்டில வேற ஆரம்பிச்சிருக்கார். இப்படியெல்லாம் பேசாத நீதான் பார்த்துக்கணும்” என்றார் அவன் அன்னை.

Advertisement