Advertisement

அத்தியாயம் 5
ரிஷி எதையும் திட்டமிட்டு, நன்றாக யோசித்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்து முடிப்பதில் கில்லாடி. யாழிசையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்று முடிவு செய்து தான் வந்திருந்தான். இதுவரை எந்த பெண்ணிடமும் காதல் என்று போய் நின்றதும் இல்லை. ஐ லவ் யு என்ற வார்த்தையை பாவித்ததும் இல்லை. அவனிடம் காதல் என்று வந்து நிற்கும் பெண்ணிடம் அனுமதியே இல்லாமல் முத்தமிட்டு மொத்தத்தையும் களவாடும் ரகம். 
“இல்ல இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பொறம்” என்று சொல்பவர்களிடம் 
“என்னது கல்யாணமா? இதுக்கெல்லாம் லைசன் வேணும்னா யாரும் லவ் பண்ணவே மாட்டாங்க” பேசியே கரைப்பான். 
அப்படியும் சம்மதிக்காத பெண்களை தள்ளியே! நிறுத்துவான். 
இவனிடம் வேலை செய்யும் இவனின் பி.ஏ அழகிகள் தான் பாவப்பட்டவர்கள். எவளாவது இவனை ஆர்வமாய் பார்த்தால் போதும் பச்சையாக கேட்டே விடுவான். சிலர் தெறித்து ஓடினாலும். சிலர் காசாவது கிடைக்கும் என்று நெருங்கினால், அவள் தலையில் துண்டுதான் போடவேண்டி இருக்கும். 
அவனுக்கு தேவை என்றால் மட்டுமே! இழைவான் மற்ற நேரத்தில் தள்ளியே வைப்பான். இவனிடம் காதல் என்று சொல்லி இழைந்தவள் தான் மதுரிகா. 
“காதல் எல்லாம் செட் ஆகாது. ரிலேஷன்ஷிப் மட்டும் வச்சிக்கலாம்” என்று கேக்க 
“ஓகே” என்றவள் அவன் அவளுடன் இழைவதை வீடியோ எடுத்து “கல்யாணம் பண்ணிக்க, இல்ல காசு கொடு” என்று மிரட்ட பலமாக சிரித்தவன் 
“அத விட சூப்பர் வீடியோ ஆபீஸ் ரூம் சீசீடிவி ல இருக்கு பேபி. அதுல உன் முகம் தெளிவா தெரியுது. யார் யாரை மயக்கினாங்கனு கிளியரா இருக்கு. நான் ஆம்புலடி இது உண்மைன்னு ப்ரூப் ஆனாலும் என் கூட படுக்க ஆயிரம் பொண்ணுக வருவாங்க, முப்பது வயசு தாண்டினா உன்ன எவனும் திரும்பி கூட  பாக்க மாட்டானுங்க. போய் ஏதாவது ஒரு கிழவனை மயக்கி லைப்ல செட்டில் ஆகிட பாரு” நக்கலாக கூற அவள் தான் மூக்குடைப்பட்டு வெளியேறினாள். 
ஆனால் யாழிசை வேறு ரகம் அவளை காதல் என்று ஒன்றால் தான் வீழ்த்த முடியும். இரண்டு வருடங்களாக அவனின் சிந்தனையை கொள்ளையிட்டு கொண்டிருப்பவள். அவளை புறம் தள்ள தள்ள தொந்தரவு செய்து கொண்டிருப்பவள். அவளை அடைய கால, நேரம் கூடவேண்டும். முறையான திட்டமிடல் இல்லாது செய்ய முடியாது. 
ஒரே ஒருதடவை யாழிசை அவன் மேல் காதல் கொண்டாள் போதும். அவளை அடைவது அவனுக்கு பெரிய விஷயமே! இல்லை. ஒரே ஒரு தடவை அவளை அடைந்தாள் போதும். துடித்துக் கொண்டிருக்கும் அடங்கா ஆசைகள் அனைத்தும் அடங்கி விடும். 
ஆனால் அவன் எதிர் பாராதது அவளுடனான திருமணம். நிச்சயதார்த்தமன்று அவளின் கையை முத்தமிட்டதே! பெரும் தவறு என்று என்னும் அளவுக்கு அவனின் ஆசைகள் தூண்டி விடப்பட்டிருக்க இவ்வளவு நாளும் பொறுமையாக இருந்ததே! பெரிய விஷயம். சடங்கு என்று இவர்கள் உயிரை வாங்க, இரவு எப்போது வரும்? அவளை எப்போது தொடுவேன்” என்ற சிந்தனையிலேயே! ரிஷி உழன்று கொண்டிருக்க,  ஊர் மக்கள் அவனை சூழ்ந்து வாழ்த்த, யாழிசை கமருடன் அமர்ந்திருந்தாள். 
“என்னடி எங்க வீட்டுல மாப்புள பாக்குறாங்கனு உன் கிட்ட சொன்னா நீ இப்படி திடீரெண்டு கல்யாணம் பண்ணிகிட்ட?” நிஷா கிண்டலாக கேக்க 
என்ன பதில் சொல்வதென்று யாழிசை முழிக்க அவள் கையை பிடித்த நிஷா 
“யாழு திடிரென்று ஒருத்தர நாம ஏத்துக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். உன் ஹஸ்பண்ட பாத்தா நல்லவரா தான் தெரியுறாரு. கொஞ்சம் நாள் பேசி, பழகி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டு பின் வாழ்க்கையை தொடங்கலாம்னு சொல்லிப் பாரு. புரிஞ்சிக்குவார்” என்று இன்முகமாக சொல்ல தலையை ஆட்டி வைத்தாள் யாழிசை. 
அவன் உடையும், செயல்களும் அவனை நல்லவனாக காட்ட பாவம் கமர் தோழிக்கு அறிவுரை செய்ய, வாய் பேசாத யாழிசை அவனின் சுயரூபம் கண்டு என்ன ஆவாளோ!
ஜகத் ஒரு தூணில் சாய்ந்து நிஷாவை சைட் அடிக்க, அவன் யாழிசையை பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்த ரிஷி பல்லை கடித்தான். யாழிசையை பார்க்க அவள் நிஷாவோடு பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவள் முகத்தில் பெரிதாக சந்தோஷமும் இல்லை. அதுவே ரிஷியை தூண்டி விட்டிருக்க ஜகத்தை முறைக்கலானான். 
ஒருவாறு கோவிலில் எல்லா சடங்குகளும் முடிய உறவினர்களும், விருந்தினர்களும் மண்டபத்துக்கு சாப்பிட அனுப்பிய சீதா மணமக்களை வீட்டுக்கு அழைத்து சென்று மீதி சடங்குகளை செய்யலாம் என்று சொல்ல 
 “ரிஷி காருக்குள்ளயே ஒரு ட்ரைலர் ஓட்டிடு” ரிஷியின் மனமோ குத்தாட்டம் போட்டது. ஆனால் காரில் அவன் முன்னாடி உக்கார, யாழிசை, கமர், சீதா, மங்கம்மா என்று பெண்கள் அனைவரும் பின்னாடி அமர்ந்து கொள்ள, யாழிசை காலையில் நினைத்த அதே வசனங்கள் “நடையை எட்டி போட்டால் ரெண்டு நிமிஷத்துல வீடு வந்திடும்” என்று ரிஷி எரிச்சலாக நினைத்து முடிக்கும் பொழுதே வீடும் வர கோபமாகவே இறங்கினான். 
யாழிசையின் தோள் உரச நிற்கவைத்து ஆலம் சுற்ற சிறகில்லாமல் பறக்கலானான் ரிஷி. யாழிசையை பார்த்த அவன் கண்களில் இரவு எப்போது வரும் என்ற ஏக்கமே தேங்கி இருந்தது. அவளோ திடீரென நடந்த கல்யாணத்தால் சற்று குழம்பினாலும் ஆணழகனாய் தன் அருகில் இருப்பவனை நினைத்து தலை குனிந்தவாறே இருந்தாள்.    
வீட்டிலும் சில சடங்குகள் நடக்க மண்டபத்தில் அவனுக்காக வந்த சில வியாபாரிகளோடு வியாபாரம் பேச வேண்டிய கட்டாயத்தில் ரிஷி  யாழிசையை விட்டு அவன் செல்லவேண்டியதாகி இருக்க அரைமனதுடன் கிளம்பிச்சென்றான்.
ரிஷியின் திட்டமோ! கல்யாணம் நடந்த அன்றிரவே யாழிசையை அடைய வேண்டும், அடுத்த நாளே! அவசரமான வேலை இருக்கு என்று மும்பாய் கிளம்பி செல்ல வேண்டும் என்றிருக்க, 
“அப்போ ரிஷப்சன் எப்போ வைக்கலாம்?” என்று யோகராஜ் கேக்க 
ஏதோ சிந்தனையில் இருந்தவன் “கல்யாணமன்றே வைக்கலாம் மாமா” என்று சொல்லிவிட அதுவே அவனை ஓய்வெடுக்க விடாது படுத்தியது. 
ரிஷப்சன் அகமத் ஹாஜியின் மண்டபத்தில் தான் இருந்தது அதுவும் வீட்டு பக்கத்தில். வந்த சொந்தமெல்லாம் குழுமி இருக்க ரிஷிக்கென்று சொந்தம் யாருமில்லை. யாழிசையின் மீது கொஞ்சம் பொறாமையும் வந்தது. 
“ஏன் இல்ல பிரதீபன் இருக்கானே! நண்பனுக்கு நண்பனா? சகோதரனுக்கு சகோதரனான?” மனம் கூவ 
“என்ன சொல்லுற கல்யாணமா? உனக்கா? இந்த ஆசைவேற இருக்கா? என்ன லவ் வா? கண்டிப்பா இருக்க வாய்ப்பில்லை” பிரதீப் ஒவ்வொருவிதமாக அவனை கேள்வி கேப்பது போல் மனக்கண் முன் தோன்றி முகத்தில் புன்னகை மலர்ந்தது.  
யாழிசையை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தவன் அவளை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்க, நீலநிற கோட் சூட்டில் ஒற்றை ரோஜா முன் பாக்கெட்டில் குடியிருக்க, அழகாய் வாசலில் புதிதாய் போட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் ரிஷி.
“குடிக்க ஏதாவது வேண்டுமா?” அவனை தாண்டும் அனைவரும் அதையே கேக்க 
அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு தரும் மரியாதை என்றோ, புதிதாய் குடும்பத்துக்கு வந்திருக்கும் உறவு என்பதால் சகஜமாக அவன் இருக்க வேண்டும் என்பதை  உணர்த்தவே அனைவரும் வந்து பேசுவதை  
“பணக்காரன் மாப்பிள்ளையா வந்தா இப்படித்தான் விழுந்து, விழுந்து கவனிப்பார்கள் போலும்” உதட்டோரம் கேலிப்புன்னகை மலர கண்களாலையே வேண்டாம் என்று சொன்னான்.
நீலநிற லெஹெங்கா அணிந்து, அதில் சிவப்பு ரோஜா வேலைப்பாடு, முடியை தோகைப் போல் விரித்துப் போட்டு, நெற்றிச் சுட்டியும், இடுப்பில் ஒட்டியானமும், கழுத்தில் பெரிய மாலையும், காதில் பெரிய குடை ஜிமிக்கியும் யாழிசை பார்க்கவே பூக்களின் ராணி போல் இருந்தாள். ரிஷியின் மனதில் தூங்கிக் கொண்டிருக்கும் காதலன் அவளை ரசித்துப் பார்க்க, அவளும் அக்கணம் தலை நிமிர்த்தி அவனைத்தான் பார்த்தாள். இருவரின் பார்வைகளும் உரசிச்செல்ல
கண்களில் காதல் வழிய, இதழ்களில் வசீகர புன்னகையுடன் அவளை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டதும் யாழிசையின் இதயம் தாறுமாறாக்காக துடிக்க, மூச்சு விடவும் மறந்து, உறைந்தாள். அவளின் அருகில் வந்த ரிஷி புருவம் உயர்த்தி என்னவென்று கேக்க நாணி  சிவந்தவள் தலை கவிழ ஒரு ரோஜா தோட்டமே தலை கவிழ்ந்தது போல் பெண்ணின் வெக்கம் அவன் நெஞ்சில் சாரல் மழை தூவ அவள் விம்பம் அவன் மனதில் ஆழப்பதிந்து.  அவளின் வலது கையை தன் கையேடு கோர்த்து காரை நோக்கி நடந்தான் ரிஷி.
யாழிசை ரிஷியை பற்றி வாய் வார்த்தையாக அறிந்ததுதான்.  அவனை நேரடியாக பார்க்கவில்லை. சீதா சாக துணிந்த போது, அழுது கொண்டே இருந்தவளின்  கண்களில் அவன் விம்பம் தெளிவில்லாமல் தான் விழுந்தது, நிச்சயதார்த்த மோதிரம் போடும் போது முத்தமிட்டவனை அதிர்ச்சியில் பார்த்ததால் கருத்தில் பதியவுமில்லை. இன்றோ அவள் கண்களில் விம்பமாய் விழுந்து மனதி பதிந்து விட்டான். அது தன்னவன் என்ற உணர்வோ!
ரிஷப்சனில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. அதிகமானோர் யாழிசையின் உறவினர்களே! மீதி பேர்  ஊரில் தெரிந்தவர்கள் என்றிருக்க ரிஷிக்காக இருந்தது சில வியாபாரிகள் மாத்திரமே! அவன் மேடையில் இருந்ததும் சில நிமிடங்கள். அதன் பின் வியாபாரிகளோடு ஐக்கியமானான். யாழிசை தனியாக அமர்ந்திருந்தாள். அவளை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தவனை சாப்பிட அழைத்து சென்றான் தனவேந்தன். 
யாழிசையின் அருகில் அமரவைக்க அவள் புறம் திரும்பி ஒரு வசீகர புன்னகையை வீசியவன் அவளுக்கு பரிமாற்ற மேசையை சுற்றி அமர்ந்திருந்த இளசுகள் கூச்சலிட்டனர். 
“ஊட்டி விடுங்க…”
“அண்ணா”
“மாமா”
“அத்தான்” என்ற குரல்கள் சுற்றி ஒலிக்க எந்த பந்தாவும் இல்லாது யாழிசையின் புறம் திரும்பி ஊட்டலானான். வெக்கப்பட்டவாறே அவள் அதை பெற்றுக்கொள்ள அவளின் உதடுகள் அவன் விரல்களை தீண்ட ரிஷிதான் தடுமாறிப் போனான். 
யாழிசை ரிஷிக்கு ஊட்டி விடும் படி  கோசம் போட செய்வதறியாது தலை தாழ்த்தி சோற்றை பிசைந்து கொண்டிருந்தவளின் கையை உரிமையாக பற்றி உண்ணலானான் ரிஷி. அமிர்தம் கூட இனித்திருக்காது இந்த அளவுக்கு என்பது போல் அவள் விரல்களையும் சேர்த்து வாயில் திணித்திருந்தான். சுற்றி கூட்டம் மட்டும் இல்லாதிருந்தால் அவன் சேட்டைகள் இன்னும் தொடர்ந்திருக்கும். அடக்கி வாசிக்க வேண்டிய நிலையிலும் யாழிசையின் இடது கையை தன் கையேடு கோர்த்துக் கொண்டே சாப்பிடலானான். அது என்னவோ அவனுக்கு பெரும் நிம்மதியை தொற்று வித்திருக்க, யாழிசைதான் புதிதாய் மனதில் எழும் பிரளயங்களில் தாக்கப்பட்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்தாள். 
ஒருவாறு போட்டோ சூட்டுக்காக இருவரும் மீண்டும் மேடையேற இரவு வரைக்கும் தாங்காது என்று அவளை அணைத்தவாறே போட்டோ எடுக்கலானான் ரிஷி. அவனின் தீண்டல்கள் பெண்ணவளை நாணம் கொள்ள செய்ய புகைப்படங்களும் அழகாக படமாகின. 
குடும்பம் சகிதமாக சிலர், நண்பர்கள் சிலர், உறவினர்கள் என்று அனைவரும் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வீடு வர மாலை ஆறை தொடவே! முற்றாக சோர்வடைந்துதான் போனாள் யாழிசை. 
அவள் அலங்காரங்களை நீக்கி சாதாரண சுடிக்கு மாறி ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்றிருக்க உறவில் உள்ள பெண்கள் அவளை பிடித்துக் கொண்டு கதையடித்தனர். முதலிரவை பற்றிய கிண்டல் பேச்சுக்களும், வேடிக்கையும், நகைச்சுவையாக கதைகள் அரங்கேற, வெட்கமும் சிரிப்புமாக அவ்விடமே கலைகட்ட ஆரம்பிக்க யாழிசையின் சோர்வும் பறந்தது. 
ரிஷியோ காசு கொடுக்க வேண்டியவர்களுக்கு யோகராஜோடு சேர்ந்து எல்லாவற்றையும் கணக்கு பார்த்து கொடுத்து விட்டு, வீட்டுக்கு போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன் என்று போனவன் தூங்கி இருந்தான். 
தனவேந்தன் அவனை இரவு எட்டு மணி போல் வந்து எழுப்பி “குளிச்சிட்டு வாங்கண்ணா இந்த பட்டு வேட்டி சட்டையை போட்டுக்கோங்க, சாப்பாடும் கொண்டு வந்திருக்கேன் சாப்டுட்டு ரெடியாகி சீக்கிரம் வாங்க” என்று சொல்ல 
யாழிசையோடு டூயட் பாடிக்கொண்டு  அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனோ! கோபத்தில் எழுந்தமர அவன் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அவனை இந்த உலகத்துக்கு கொண்டு வர அடித்து பிடித்து எழுந்தவன் 
“சே தூங்கவே கூடாத அன்னைக்கி போய் தூங்கிட்டேனே! அவள் எனக்காக காத்துகிட்டு இருப்பாள்! என்ற எண்ணம் மேலோங்க குளியலறைக்குள் புகுந்தான். 
இங்கே யாழிசையை அலங்காரம் செய்து காது வலிக்கும் அளவுக்கு மங்கம்மா புத்திமதிகளை கூறி யாழிசையை அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தாள்.
அறைக்குள் நுழைந்த யாழிசை  தனக்கு தாலி கட்டின நெடுமாறன் எங்கே என சுற்றும் முற்றும் பார்க்க அவனை காணவில்லை. அம்மா அறிவுரை என்ற பெயரில் சொன்னதெல்லாம் கண்முன் வந்தது. 
“பால அவர் கைல கொடுத்து கால் விழுந்து வணங்கு” 
“கால்ல விழவும் பால கொடுக்கவும் ஆள் உள்ள இருக்கணும்ல்ல. எங்க போய்ட்டானோ! ஆள் உள்ள இல்லனா என்ன செய்யணும் னு அம்மா சொல்லவே இல்ல” தன்மேலேயே கரிசனம் வர என்ன செய்வது என்று குழம்பியவள் அருகில் இருந்த மேசையில் பால் செம்பை மூடி வைத்தாள். 
அறையின் அலங்காரத்தில் லயித்தவள் இது என் அறையா என்று வியப்புக்குள்ளானாள். இரண்டு பேர் படுக்க கூடிய கட்டில்  தான் அதில் தான் யாழிசையும் இயலும் தூங்குவார்கள். இன்று அதன் அலங்காரம் மிக அழகாக அவளை கவர்ந்தது. மல்லிகையும், ரோஜாவுமாக அறை முழுவதும் பரந்தது, மணம் வீசிக்கொண்டிருக்க ஆழ்ந்த மூச்சை இழுத்து வீட்டுக் கொண்டாள் யாழ்.  
அவளுடைய இரும்பு பீரோ இல்லாது புதிய ஒரு பலகையிலான பீரோ அறையில் குடியிருக்க ஒரு பக்க கதவில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. அதில் விழும் தன் விம்பத்தை பார்த்தவள் “அழகிடி நீ”  என்று தன்னையே கொஞ்சிக் கொண்டாள். 
கட்டிலுக்கு அருகே சுழலும் மின் விசிறி காணாமல் போய் புதிதாய் ஒரு முகட்டு மின்விசிறி மேலே சுழன்று கொண்டிருந்தது. 
“எத்தனை நாள் காத்து வரலன்னு புழுக்கத்துல தூங்கி இருப்பேன். ஜன்னலை திறக்கக் கூட அம்மா விடாது. இன்னைக்கி அவன் வந்ததும் எல்லாத்தையும் மாத்திட்டாங்க” தன் அன்னையை நினைத்து மனதால் முறைத்தவள் கால் கடுக்கவே கட்டிலில் போய் அமர்ந்த்துக் கொண்டாள். 
யாழிசை நன்றாக துணிகளை தைப்பவள் அவளுடைய துணி, இயலுடைய கல்யாணத்துணி, வீட்டாரோட துணி என்று இந்த மூன்று நாளாக தையல் இயந்திரத்திலேயே அவளுடைய இரவுகள் செல்ல அமர்ந்த வாக்கிலேயே! கண்ணயர்ந்தாள். 
அறைக்குள் வந்த ரிஷிக்கு காணக் கிடைத்தது தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைத்தான். கால்கள் இரண்டும் கீழே இருக்க, தலக்கணையை இடுப்புக்கு வைத்து தலையை கட்டிலில் சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தவள் இடது கை அவளின் வயிற்றின் மேலும், வலது கை அவன் புறம் இருக்கும் தலக்கணையில் இருந்தது. 
அவளின் அருகில் வந்து அவள் முகம் பார்க்க சிப்பி இமைமூடி அவள் தூங்க கண்களில் அசைவில்லை. சர்வ அலங்காரத்தோடு தூங்கும் தேவதை. கூரான மூக்கு அதில் புதிதாய் குடிகொண்டிருக்கும் மூக்குத்தி. ஆரஞ்சு சுளை போல் இருக்கும் உதடுகள். இரண்டும் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக பிரிந்து இருக்கும் அழகு அவனை சுண்டி இழுக்க தனது தடித்த பெரிய இதழ்களை இடைவெளி நிரப்ப மனம் துடிக்க இதற்க்கு மேலும் தன்னால் கட்டுக்குள்  இருக்க முடியாது என்றெண்ணியவன் அவள் கால்களை தூக்கி கட்டிலில் வைத்து அவள் மேலே சரிந்து அவளை எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினான். பாவம் அவன் நினைத்தது தான் நடக்கவில்லை. 
அனுமதி இல்லாமல் மனைவியென்றாலும் தொடக்கூடாது என்பதெல்லாம் அவன் அறியான். அவளை அடைய தாலி என்ற உரிமை சான்று அவனுக்கு போதுமாக இருக்க, 
யாழின் கல்யாணக் கனவுகள் தான் என்ன? அவளின் ஆசா பாசங்கள் என்ன? எதையயும் அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாது அவள் உடல் கிடைத்தால் போதும் என்று இருக்கும் கணவனோடு யாழின் வாழ்க்கை எத்திசையில்  பயணிக்குமோ!

Advertisement