Advertisement

அத்தியாயம் 4
பெண் என்பவள் மகளாய் பிறந்து, சகோதரியாய் வாழ்ந்து, மனைவியாய் உறவாடி, அன்னையாய் வரம் பெற்று, மாமியாராய் பதவி ஏற்கின்றாள். இதில் மனைவி என்பவள் வாழ்க்கை பயணத்தை சரியாக கணவன் என்ற துணையோடு தான் பயணிக்க வேண்டி உள்ளது. இருவரும் மனமொத்து, புரிந்து வாழ்ந்தால் தானே! சந்தோசம் நிலைக்கும்.
விடிந்தால் கல்யாணம். அந்த சந்தோசம் யாழிசையின் முகத்தில் கொஞ்சமேனும் இல்லை. அடுத்த மாசம் பன்னிரண்டாம் திகதி நடக்க வேண்டிய கல்யாணம் அடுத்த வாரமே நடந்தாகணும் என்ற சீதாவின் தொய்ந்த குரல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. “போய் தூங்கு காலைலயே! எந்திரிக்கணும்” இரவு கமர் வந்து மருதாணி வைத்து விட அது காயும் வரை இருந்தவளை, மங்கம்மா அறைக்கு அனுப்பி வைக்க வெகுநேரம் தூங்காமல் இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்றே அவள் அறியவில்லை. 
அது நிம்மதியான உறக்கமாகவும் இருக்கவில்லை. தொடராக ஏதேதே கெட்ட கனவுகள் வந்து அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்க, மங்கம்மா வந்து அவளை எழுப்பி விட்டிருக்க, எதிலிருந்தோ தப்பிய உணர்வுதான் யாழிசைக்கு. 
“போய் குளிச்சிட்டு வாடி அலங்காரம் செய்ய ஆட்கள் வந்துடுவாங்க” மங்கம்மாவின் அதட்டல் குரலே ஒலித்தது. 
பதில் பேசாது கொல்லைப்புறத்தில் உள்ள குளியலறைக்குள் புகுந்தவள் ஏதோ வேறொரு இடத்துக்கு வந்தது போல் உணர்ந்தாள். சீமெந்து தரையாக இருந்த குளியலறையில் டைல் பொருத்தப்பட்டு, குழாய்களும், மாற்றப்பட்டு, நடுவில் தொங்கிக் கொண்டிருந்த பல்பு மறைந்து சுவரில் இருந்தது, மொத்தத்தில் பளிச்சென்று. 
குளித்து விட்டு புதிய சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டவள் வெளியே வர சீதா அருந்த பால் டம்ளரை கையில் கொடுத்தாள்.  காலையில், பால் காய்ச்சு காபி போடும் வேலை அவளுடையதாக இருக்க இன்று மட்டும் எல்லாரும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்வது சிரிப்பை மூட்டியது. 
தட்டில் இட்லீயும், குடை மிளகாய் வைத்து அரைத்த தேங்காய் சட்னியும், சாம்பாரும் மணக்க கொண்டு வந்த மங்கம்மா யாழிசைக்கு ஊட்டி விட இயலிசையும் சேர்ந்து கொண்டாள். 
எத்தனை வருடங்கள் ஆகிற்று அன்னையின் கையால் உண்டு. ஆனந்த கண்ணீரோடு உண்டு முடிக்க அலங்காரம் செய்ய பியூட்டி பாலரிலிருந்து ஆட்கள் வந்திருந்தனர். 
சந்தன நிற பட்டு, சிவப்பு பாடர். ஆரி வேலைப்பாடு, விலையே! ஐம்பதாரத்தை தாண்டும். அதற்க்கு பொருத்தமான அணிகலன்கள். அவளை அலங்கரித்து முடித்து முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க யாரோ மாதிரிதான் தோன்றியது அவளுக்கு. இவ்வளவு பெறுமதியான துணியும், ஒப்பனையும் வாழ் நாளிலேயே இன்று தான் போட்டாள். 
காலை எட்டு முப்பதுக்கு முகூர்த்தம் என்றிருக்க மங்கம்மா அதட்டியவாறே அனைவரையும் கிளப்பிக் கொண்டிருந்தாள். 
“குழலி….” என்றவாறே உள்ளே நுழைந்தான்  யோகராஜ். எல்லாரும் யாழ், யாழிசை என்றழைக்க தந்தைக்கு மட்டும் குழலியாகிப் போனாள். 
“அப்பா” என்றவாறு யாழிசை எழுந்து கொள்ள அவள் அருகில் வந்து தலையை தடவியவன் வேறெதுவும் பேசவில்லை. யாழிசையின் யோகராஜுடைய உறவு ஓரிரண்டு வார்த்தைகள் தான். இன்று அன்பாக அப்பா அழைக்க யாழிசையின் மனமும் கனத்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. யோகராஜின் கண்களின் ஓரமும் சிறு கண்ணீர் துளிகள். 
“அக்கா..” என்றவாறே உள்ளே வந்த இயலிசையும் ஆரஞ்சும் நீளமும் கலந்த சுடிதாரில் குட்டி தேவதையாய் ஜொலிக்க,
“அம்மா சத்தம் போடுறா உன்ன கூட்டிட்டு வரவாம்” சொன்னவள் பற்கள் அனைத்தையும் காட்டியவாறே சிரிக்க யாழிசையின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. 
யோகராஜ் யாழிசையின் இடது கையை பிடித்துக் கொள்ள  இருவரும் வாசலை நோக்கி நடந்தனர். 
வாசலில் ஒரு பெரிய கார் நிற்க, நடையை எட்டி போட்டால் இரண்டே நிமிசத்தில் கோவில் வந்து விடும். அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய கார்? ஆடம்பரம் என்றே தோன்றியது யாழிசைக்கு.  யாழிசை பின்னால் ஏறி அமர்ந்து கொள்ள பக்கத்தில் இயலிசையும் அமர்ந்துக்கொள்ள யோகராஜ் முன்னாள் அமர வண்டி கோவிலை நோக்கி கிளம்பியது.
ஒரு வாரத்துக்கு முன்
“யாரை கேட்டு கல்யாணத்த முடிவு பண்ணீங்க?” இளவேந்தன் கத்துவது அந்த இரவின் பிரத்தியேக சத்தத்தை தாண்டி தெரு முழுக்க ஒலிக்க 
“யாழுக்கு என்ன குறை அவளை வேண்டாம்னு சொல்லுற” சீதா கோபமாக கேக்க 
“எனக்கு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கு. எனக்கு அத்த பொண்ணு சாந்தியை தான் பிடிச்சிருக்கு, அவளை பேசி முடிங்க” இளா கறாராக சொல்ல, தனவேந்தன் என்ன சொல்வதென்று முழித்துக் கொண்டிருந்தான். 
சீதா அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். கணவன் இருக்கும் வரை அக்காள் என்று சொந்தம் கொண்டாடியவள் தான் சாந்தியின் அம்மா பங்கஜம். கணவன் இறந்து ஆறு ஆண்டுகளாகியும் இவர்கள் இருக்கிறார்களா? செத்தார்களா என்று கூட திரும்பி பார்க்காதவள் பொண்ணு கேட்டா கொடுப்பாளா? மாட்டாள். நிச்சயமாக மாட்டாள். 
தன்மையாக சொன்னால் மகன் கேட்டுக் கொள்வான்  என்று நினைத்து “நா சொல்லுறத கேளு இளா யாழியையே கல்யாணம் பண்ணிக்க” சொல்லி முடிக்க முன் வீட்டில் உள்ள பொருட்கள் தாறுமாறாக உடைய ஆரம்பித்தன.
தூக்கம் வராமல் யாழிசைக்கு கல்யாணமா என்ற அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென்று பால்கனியில் நின்று யாழிசையின் வீட்டை வெறித்துக் கொண்டிருந்த ரிஷிக்கும் சீதாவின் வீட்டில் ஒலித்த சத்தம் கேக்கவே உள்மனம் “ஏதோ சரியில்லை சீக்கிரம் போ” சொல்ல தட தடவென படிகளில் இறங்கி சீதாவின் வீடு நோக்கி ஓடி இருந்தான். 
 
அங்கே ஓடியவன் ஜன்னலினூடாக  கண்ட காட்ச்சி சீதா அறையை பூட்டிக்கொண்டு தூக்கு மாட்ட புடவையை கூரையில் பொருத்தி இருக்கும் கம்பில் கட்டுவதையே! 
அறைக்கு வெளியே இதையறியாமல்  இளவேந்தன் கல்லு போல் நிற்க, தனவேந்தன் அழுது கொண்டு அறைக்கதவை தட்டிக் கொண்டிருந்தான். 
பக்கத்து வீடுகளில் ஜன்னலினூடாக ஒரு சில தலைகள் வேடிக்கை பார்த்தாலும் யாரும் வெளியே வரவில்லை. 
இளவேந்தன் கத்துவது கேட்டாலும் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்த யோகராஜ் பொருட்கள் உடைவதும், தானாவின் அழுகைக் குரலும்  கேக்கவே கையை உதறியவாறு பின் வாசல் வழியாக  சீதாவின் வீட்டையடைய, மங்கம்மாவும்,   உள்ளே நுழைய, பின்னால் அழுது கொண்டே இயலும், யாழும். 
ரிஷி யாரையும் பொருட்படுத்தாது கதவை உடைத்து சீதாவை இழுத்து கீழே இறக்கி தானே சென்று அவளுக்கு தண்ணீர் புகட்ட யாழிசையும் அவள் அருகில் இருந்து அழுது கொண்டிருந்தாள். 
 “என்ன பிரச்சினை?”  ரிஷி யாழிசையை பார்த்தவாறே கேக்க, 
சீதா யாழிசையை அணைத்துக் கொண்டு “என் தங்கத்தை வேணான்னு சொல்லுரானே! இவன் உறுப்புட மாட்டான். இவள என் பொண்ணா பாத்துக்கணும்னு ஆச பட்டேனே! அது நடக்காம போகப்போகுதே!” என்று கதற 
மங்கம்மா புடவை முந்தியை வாயில் வைத்தவாறு விசும்ப, யோகராஜ் இளவேந்தனை முறைத்துக் கொண்டு நிற்க, இயல் கண்கள் கலங்கி மலங்க மலங்க விழிக்க, தனவேந்தன் செய்வதறியாது அமைதி காக்க, இளவேந்தன் அசையாது நின்றான். 
விஷயத்தை  புரிந்துக்  கொண்ட ரிஷியின் மனது குத்தாட்டம் போட, அழும் யாழிசையை எரிச்சலாக பார்த்தான். 
“அப்படியென்ன இவன் கிட்ட இருக்குனு அழுது வழியிறா?” அவள் எதற்காக, யாருக்காக அழுகிறாள் என்று புரிந்து கொள்ளாமல் உள்ளம் குமுற நின்றவனின் மனம் அவனை விபரீதமாக யோசிக்க வைத்தது. அதில் சிக்கி வாயை திறந்தான் ரிஷி 
“இதுக்குதான் சாக போனீங்களா? உங்கள கோவில்ல வச்சு அம்மானு கூப்பிட்டேன்! என்ன மகனாகவே பக்கலயா? என்ன உதவினாலும் கேளுங்கன்னு வாய் வார்த்தையா சொல்லல மனசால சொன்னேன். இப்படியொரு இக்கட்டான நிலைல சாக போனீங்களே! செத்து போனா இந்த பொண்ணு நிலைமை என்னானு யோசிச்சீங்களா? உங்க சாவுக்கு அவ தான் காரணம்னு ஊரே பேசும்! அதுக்கு பிறகு யார் அவளை கல்யாணம் பண்ணிப்பாங்க” 
இன்னறுவரை யாரிடம் இப்படி கரிசனமாக பேசியதில்லை. அவனுக்கு தேவை யாழிசை. அவனை இம்சிக்கும் மொத்த அழகும். அதற்காக எந்த எல்லைக்கும் போக அவன் தயாரா இருக்க வியாபாரத்தில் கை தேர்ந்தவனுக்கு பேச கற்று கொடுக்கணுமா என்ன? எவ்வழியிலாவது யாழிசையை அடைந்தே தீரனும் என்றிருந்தவன் காதலை தேர்ந்தெடுத்திருக்க, அதற்க்கு இப்பொழுது நேரம் பத்தாது கல்யாணம் தான் சரி என்ற முடிவுக்கு வந்து,  எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு அவன் நேரடியாக கேக்காமல் அந்த எண்ணத்தை தோற்றுவித்தான்.
அவன் சொன்னது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியே! அவன் சொல்வது உண்மை பெண்ணைத்தான் கைகாட்டி கேலி பேசுவார்கள். அது காலம் மாறினாலும் மாறாதது. 
“ஊருக்கு புதியவன். நல்லவன். பணக்காரன். யாழிசை ராணி மாதிரி வாழ்வாள். என் பையனை விட அவளை நன்றாக பார்த்துக் கொள்வான்” என்ற எண்ணம் நொடியில் தோன்ற சீதா மறு பரிசீலனை செய்யாது “என் பொண்ண கட்டிக்கிறியா?” என்று கேட்டு விட ரிஷியின் முகம் எல்.ஈ.டி பல்ப் போல் பிரகாசமாக ஜொலித்தது. 
“அக்கா” என்று யோகராஜும் 
“அண்ணி” என்று மங்கம்மாவும் அதிர்ச்சியில் கூச்சலிட ரிஷிக்கு எரிச்சலாக இருந்தது. 
“அம்மா உங்களுக்கு புரியவைக்கணும்னு தான் ஏதோ வாய் தவறி கேட்டுட்டேன். என்ன போல யாருமில்லாத அனாதைக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க” என்றவன் சீதாவை பார்த்து வணக்கம் வைத்து கிளம்ப எத்தனிக்க, சீதா அவனின்  கையை பிடித்து நிறுத்தியிருந்தாள். 
“தம்பி நா அந்த அர்த்தத்துல சொல்லல” யோகராஜ் உடனே சமாதானப்படுத்த மங்கம்மாவும் தலையசைத்தாள். 
“யாழுவுக்கு மாப்புள பாக்க எனக்கு உரிமை இல்லையா?” சீதா தம்பியை ஏறிட 
“அதில்ல அக்கா” யோகராஜ் ஏதோ சொல்லவர 
கையை நீட்டி தடுத்த சீதா “அடுத்த வாரம் நல்ல முகூர்த்த நாள் அன்னைக்கி என் பொண்ணுக்கு கல்யாணம்” யோகராஜின் கண்களை நேராக பார்த்து தீர்க்கமாக கூற யாழிசையை கையில் ஏந்திய போது சீதா சொன்னது நியாபகத்தில் வர யோகராஜுக்கு சம்மதமாக தலையசைத்தான்.  
ஒரு வெற்றிப்பார்வையை யாழிசை மீது ரிஷி வீச அவளோ! அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். 
“யாரடா இவன்” என்ற பார்வையோடு ரிஷியை பாத்திருந்த இளவேந்தன் “அது சரி இனம் இனத்தோட தானே சேரும்” என்ற முறைப்பாடு அவ்விடத்தை விட்டு அகன்றான். 
“அப்போ நா வரேன்” என்று ரிஷி விடைபெற 
“காலைல வீட்டுக்கு வரோம் முறைப்படி பேசலாம்” என்று யோகராஜ் சொல்ல ஒரு தலையசைப்பில் அனைவரிடமும் விடை பெற்றான் ரிஷி வரதன்.
அடுத்தநாள் காலையிலேயே ரிஷியின் வீட்டுக்கு சென்று,  ரிஷிக்கு அன்னையாக சீதா நிற்க, முறைப்படி தாம்பூல தட்டு மாத்தி, அன்று மாலையே நிச்சயதார்த்தம். இருவீட்டாரும், ஊர் பெரியவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். 
ரிஷியின் எண்ணமெல்லாம் யாழிசையை தனியாக சந்திக்க தருணம் பாத்திருக்க அவளை சந்திக்க தான் முடியவில்லை. நிச்சயதார்த்தம் நடக்கும் போதுதான் பார்த்தான். அவளின் முகமோ அவளின் குழம்பிய மனநிலையை நன்றாகவே எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அதை கண்டு அவனுக்கு சிரிப்பாகவே இருந்தது. 
அவளின் பஞ்சு போல மென்மையாக இருந்த பிஞ்சுக் கையை பிடித்து மோதிரம் போட்டவன் மென்மையாக முத்தம் வைக்க இளசுகள் கூச்சலிட, பெரியவர்கள் தான் முகத்தை திருப்ப வேண்டி இருந்தது.    
ரிஷி கையை பிடித்ததும் வெக்கம் வர தாழ்த்திய தலையை யாழிசை நிமிர்த்தாமல் இருக்க, 
“என்ன இவ முகத்த கூட பார்க்க மாட்டாளா?” அவள் மனநிலையை புரிந்து கொள்ளாம ரிஷிக்கு கோவம் தான் எட்டிப்பார்த்தது. யார் இருக்கிறார்கள் என்றும் பாராமல் முத்தம் வைக்க அதிர்ச்சியிலேயே! யாழிசையின் தலை நிமிர்ந்தது. 
கண்களை அகல விரித்து, உதடுகள் விரிந்து அவள் பார்த்த பார்வையில் அவளின் இதழ்களை சிறை பிடிக்கும் ஆவல் தோன்ற அதை கட்டுப்படுத்த முடியாமல் அவள் கையை அழுத்திப் பிடித்தான்.
யாழிசைக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க, உடல் படபடக்க, வியர்வை வழிய ஆரம்பித்தது. அவளின் மாற்றங்களை ரசனையாக ரிஷி பாத்திருக்க, 
“யாழ் மாப்பிள்ளைக்கு மோதிரத்தை போடுமா” மங்கம்மாவின் அதே அதட்டல் குரல்
 
“ஐயோ யாழு இப்படியா வெறிச்சு பாப்பா, செத்த டி நீ. அம்மா உன்ன வச்சி செய்ய போறாங்க” உள்ளுக்குள் தன்னவன் என்ற எந்த உணர்வும் இல்லாமல் கைகள் நடுங்க அவன் விரலுக்கு மோதிரத்தை அணிவித்திருந்தாள் யாழிசை.
“நீ யோசிச்சு கிட்டு இருக்கும் போதே உன்ன களவாடிட்டு போய்டுவேண்டி” கர்வமாக தன்னை நினைத்துக் கொண்டவன் அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று யோகராஜிடம் அனுமதி வேண்டி நிற்க அவனோ மங்கம்மாவிடம் போய் நின்றான். மங்கம்மா குதிக்க ரிஷியால் யாழிசையை தனியாக சந்திக்க முடியவில்லை. 
அதன் பின் பணத்தை தண்ணீராக செலவளித்தான் ரிஷி. யாழிசையின் வீடு நான்கு நாட்களிலேயே! சுவர்களுக்கு நிறம் பூசி கல்யாணத்துக்கு தயாராக, குளியலறை முதல் அறைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் மாற்றப்பட்டன. அவனோ காரியக்காரன் இவை அனைத்தும் அவன் தானாகவே முன் நின்று செய்ய,  அவன் நோக்கமறியாத மணப்பெண் வீட்டில் அனைவரும் குஷியாகினர். 
ரிஷி மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டிருக்க, அவன் மனமோ ஆயிரம் சிந்தனையில் இருந்தது. “எல்லாம் சரியா? பண்ணிட்டேனா? பக்காவா பண்ணிட்டேனா?” கணவனை விட்டு ஒரு பெண் பிரிந்தாலும், கணவன் அவளை விட்டு சென்றாலும் சமூகம் அவளைத்தான் தூற்றும் என்று நன்கு அறிந்தவனாக, நாளை அவளை இங்கேயே விட்டு செல்லும் போது யாரும் அவனை குற்றம் சொல்லி கைநீட்டி விடக்கூடாது என்பதில் கூடிய கவனம் செலுத்தியே அவளின் வீட்டுக்கும், வீட்டாருக்கும் பார்த்து பார்த்து செலவளித்திருந்தான்.
கல்யாணத்துக்கு புகைப்படம் எடுக்கவும் அவன்தான் ஏற்பாடு செய்திருந்தான். அதுவும் கொழும்பிலிருந்து வரவழைத்து, இங்கே யாரும் புகைப்படம் எடுக்க கூடாது கண்ணுபட்டுடும் என்று சொல்ல அவன் சொல்லே வேதவாக்கானது. 
“ஐயர் பொண்ணை கூட்டிக்கொண்டு வாங்கோ!” என்று சொல்ல தேவதையாய் ஜொலித்து தலைகுனிந்து வருபவளை ரிஷியின் ஆழ்மனம் படம் பிடித்துக் கொண்டது. சொல்ல முடியாத சந்தோசம் அவன் மனதெங்கும் பரவி உடல் முழுக்க புத்துணர்ச்சி பாய அவளை அடைந்த வெற்றி என்று அவன் முடிவு செய்ய, பாவம் அது காதலின் அறிகுறி என்றோ, காதல் கைகூடிய மகிழ்ச்சியென்றோ அவன் உணரவே இல்லை. 
தலை நிமிராமல் ரிஷியின் அருகில் அமர்ந்த யாழிசைக்கு  ஏதோ சொல்ல முடியாத பயம் நெஞ்சை கவ்விக்கொண்டிருந்தது. அது என்னவென்று புரியாமல் குழம்பியவாறே மணமேடையில் ரிஷியின் அருகில் வந்தமர்ந்தள். 
“கெட்டிமேளம், கெட்டிமேளம்” 
அக்கினி சாட்ச்சியாக, மந்திரம் சொல்லி, நல்ல நேரம் பார்த்து உற்றார், உறவினர், ஊர் கூடி வாழ்த்த,  அதில் எதையையும் கருத்தில் கொள்ளாது “ஒரு பொண்ண தொட இந்த மஞ்ச கயிறுதான் லைசன்சா?” இளக்காரமாக தாலியை பார்த்தவன் அதை யாழிசையின் கழுத்தில் கட்டியிருந்தான். 
மாங்கல்யம் கழுத்தில் ஏற புதுவித உணர்ச்சிகளுக்குள் சிக்குண்டு புதிதாய் தனக்கே தனக்கென்று ஒரு உறவை ஏற்க தயாரானாள் யாழிசை.
கல்யாணம் சுவர்க்கத்தில் முடிவு செய்யப்படுகின்றதாம். இவர்களின் திருமணத்தை யார் முடிவு செய்தார்கள்? கடவுள் போட்ட முடிச்சை ரிஷி எவ்வாறு அவிழ்க்க போறானோ?

Advertisement