Advertisement

அத்தியாயம் 24
நர்ஸ் அறையினுள் நுழையவே அடித்துப் பிடித்து எழுந்தாள் கயல்விழி. 
அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்திருந்ததை கண்டு முதலில் திகைத்த நர்ஸ், புரிந்துக் கொண்டதாக மென்னகை புரிந்தவர் தான் வந்த வேலையில் கவனமானார். 
அவர் என்ன நினைத்தாரோ என்று கயல்விழிக்கு வெக்கம் பிடுங்கித்தின்ன அவர் செல்லும் வரை கீழுதடை கடித்துக் கொண்டு தலையை குனிந்தவாறே அமர்ந்திருக்க, ரிஷி மனையாளை அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தான். 
அந்த இளங்காளை பொழுதிலும் வேர்வை துளிகள் பூத்திருக்க, அது நர்ஸை கண்டுதான் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவள் இன்னும் மாறவே இல்லை. எல்லாவற்றையும் கண்டு அஞ்சுகிறாள். முகம் வெக்கத்தில் சிவந்திருந்தாலும் கொஞ்சம் பதட்டம் இருக்கவே செய்தது. நேற்றிரவு சரியாக தூங்காமல் கண்களும் கொஞ்சம் சிவந்திருக்க, தலை முடியும் களைந்து, உடுத்தி இருந்த சேலையும் கசங்கி… அவளின் பதட்டம் என்னவென்று அவனுக்கு புரிய அவளின் அறியாமையை நினைத்து சிரிப்பதா. மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன என்று நினைக்காமல் அவர்கள் தப்பாய் நினைப்பார்களோ என்று நினைத்து வீணாய் பதட்டம் கொள்கிறாள் என்று வருந்துவதா? 
நர்ஸ் அறையை விட்டு வெளியேறியதும் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கடகடவென அருந்தலானாள். அவளின் தொண்டை குழியில் நீர் இறங்குவதை பாத்திருந்த ரிஷிக்குத்தான் அவளை பருகும் ஆவல் தோன்றியது.
தலையை உலுக்கிக் கொண்டவன் “எதுக்கு இவ்வளவு டென்ஷன்? இது ஹாஸ்பிடல் கதவை லாக் பண்ணவும் முடியாது. அவங்க உன்ன தப்பா எல்லாம் நினைக்க மாட்டாங்க, புருஷனுக்கு ஆறுதலா இருப்பதாகத்தான் நினைப்பாங்க” ஒரு சின்ன சிரிப்பினூடே ரிஷி சொல்ல 
கணவன் தன்னை கண்டு கொண்டதில் திரு திருவென முழித்தவள் அவன் சொல்வதிலும் நியாயம் இருக்க தலையை ஆட்டி சரி என்றாள். 
“பாசிக்குதா? ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?” 
“ப்ரதீபனும், அமுதனும் எங்க?” 
“பிரதீபன் அண்ணா நைட்டே வீட்டுக்கு போய்ட்டாரு. அமுதன் அத்தான் வெளியேதான் இருப்பாரு கூப்பிடவா?”
“அவளின் உறவு முறை விழிப்பில் புருவம் உயர்த்தி பார்த்தவன் “நீதான் என் அம்முனு தெரிஞ்சப்போ நா எவ்வளவு சந்தோசப் பட்டேனோ அத விட பல மடங்கு கவலையும் பட்டேன். உன்ன நா பண்ண டாச்சருக்கு மாமா என்ன மன்னிக்கவே மாட்டாரு” கண்கள் கலங்கினான் ரிஷி. 
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” கயல் உடனே மறுக்க 
“நகைக்கடை திறப்பு விழால என் மாமானை நா பார்ப்பேன்னு நினச்சியும் பார்க்கல. என் கோபத்தை எப்படி கட்டுப் படுத்துறதுன்னு தெரியாம இருந்தேன். மீண்டும் பழைய நியாபகங்கள் என்ன ஆட்டிப் படைக்க உன் நியாபகங்கள் தான் என்ன மனுசனா வச்சிருந்தது. 
அந்த நகைக்கடைய உன் பேர்ல மாத்தி எழுதி உன்ன அந்த கடைல இருத்தணும் னு தான்  பேபர்ஸ்செல்லாம் தயார் பண்ணி உன் கிட்ட சைன் வாங்கினேன். அப்போ நீ டைவர்ஸ் பேப்பரானு கேட்ட போ உள்ளுக்குள்ள நொருங்கிப் போய்ட்டேன். 
எல்லாம் ஒழுங்கு பண்ணி, நகை கடையை உன் பேர்ல மாத்தி என் சொத்து முழுக்க உன் பேர்ல மாத்தணும் உன்ன அந்த கடை சீட்ல இருத்தி நீ ஒண்ணுமில்லாத இல்லனு சொல்லி  உன் கால பிடிச்சி மன்னிப்பு கேக்கணும் னு தான் மும்பை போனேன். ஆனா அங்க போன அன்னைக்கி நீ தான் என் அம்மு னு தெரிஞ்சப்போ அளவில்லா சந்தோஷத்தோட ப்ரதீபனும் நானும் சென்னை வந்தோம். ஆனா நீ என்ன விட்டு ஒரேயடியா போயிட்ட. 
“நா உன்ன வார்த்தையால எவ்வளவோ வதைத்தும் அமைதியா இருந்த நீ என்ன விட்டு ஏன் போயிட்ட” ரிஷியின் முகத்தில் இருந்த கவலையை கண்டு ஆடித்தான் போனால் கயல். ஸ்ரீராம் அவளிடம் முறையிடுவதை போலவே தோன்றியது அவளுக்கு. அவனை தன் நெஞ்சோடு இறுக அணைத்தவள்
“நீங்க டைவர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கினீங்க னு நெனச்சி.. வேறொரு வாழ்க்கையை அமைச்சிக்க போறீங்களோனு நினைச்சி… நா தடையா இருக்கக் கூடாதென்று…” திக்கித் திணறி சொல்ல வந்ததை அரைகுறையாக சொல்ல 
அவளின் கைகளை பிடித்து முத்தமிட்ட ரிஷி “அந்த நிலையும் என் நன்மையைத்தான் பாத்திருக்க” இவளுக்காக நா என்ன செய்தேன் என்ற எண்ணம் தோன்ற விரக்தியாக புன்னகைத்தான்.
அந்த நேரம் பிரதீபன் கதவைத் தட்டிக் கொண்டு ஸ்ரீராமையும் தூக்கிக் கொண்டு உள்ளே வர கயல்விழி ரிஷியை விட்டு விலகி நின்றான். 
நேற்று டாக்டர் அஜய்யுடன் பேசிய பின் ப்ரதீபனால் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. எங்கே ரிஷியை கட்டிக் கொண்டு அழப்போய் கயல்விழிக்கு உண்மை அனைத்தும் தெரிந்து விடுமோ என்று அஞ்சி வீட்டுக்கு சென்றான். 
வீட்டுக்கு சென்றவனை ஸ்ரீராம் பிடித்துக் கொண்டு கேள்வி கேக்க ஆரம்பிக்க அவனுக்கு பதில் சொல்லியே அவனுடைய நேரம் சென்றது. ரிஷி குழந்தையை பாத்திருக்கானா? இல்லையா? வீட்டுக்கு வர மறுப்பானா? என்ற கேள்விகள் தோன்ற ஸ்ரீராமையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். 
ப்ரதீபனிடம் ஒரு தலையசைப்பில் “வா” என்றவன் ஸ்ரீராமை கை நீட்டி அழைக்க 
“தாதி” என்றவன் ரிஷியிடம் தாவி மழலை மொழியில் தந்தை மருத்துவமனையில் இருப்பதற்கான காரணம் கேக்கலானான். ரிஷி அவனை முத்தமிட்டவாறே சொல்ல அவனின் பூப்போன்ற இதழ்களால் முத்தமிட்டு சரியாகும் என்று ஆறுதலும் சொன்னான் ஸ்ரீராம். 
கன்டீன் சென்றிருந்த அமுதன் கயலுக்கும், ரிஷிக்கும் டி வாங்கி வந்திருக்க அவனை கண்டு ஸ்ரீராம் அமுதனையும், ரிஷியையும் மாறி மாறி பார்த்து குழம்பி நிற்க அவனுடைய முகபாவங்களை கண்டு அனைவருமே மனம் விட்டு சிரித்தனர். பெரியவர்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாவிடினும் கை தட்டி சிரிக்கலானான் குட்டி ரிஷி. 
“டேய் நான் உன் சித்தப்பாடா அது தான் உன் டாடி” அமுதன் சொல்ல “தாதி, சித்து” என்று இருவரையும் கை காட்டி மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
“டி மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன். அன்னம்மாக்கு டிபன் பண்ண சொல்லி போன் பண்ணேன். டிஸ்டார்ஜ் பண்ணிட்டாங்கனு நர்ஸ் சொல்லிட்டாங்க” அமுதன் சொல்ல 
“வீட்டுக்கு போய் ஒரு நல்ல குளியல் போட்டுட்டுதான் சாப்பிடணும்” ரிஷி சொல்ல 
பிரதீபன் சென்று பணம் கட்டி முறைப்படி எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வர அனைவரும் வீடு திரும்பினார். 
வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களாகியும் ரிஷி அதிக நேரம் தூங்கிக் கொண்டே தான் இருந்தான். கயல்விழி கலக்கமடைந்து ப்ரதீபனிடம் முறையிட அவனோ மருந்தின் வீரியம் என்று மாத்திரம் சொல்ல, 
“அவருக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு” அச்சத்தை விழி நிரப்பி அவன் முகம் நோக்க அவளிடம் எவ்வாறு சொல்வதென்று பிரதீபன் யோசிக்க,
“அவனுக்கு ஒண்ணுமில்ல கயல் ஓவரா கண்முழிச்சு வேல பாக்குறான் அதான்” அமுதன் ஏதோ சொல்லவென்று சொல்லி சமாளிக்க 
“இவர்களிடம் எந்த கேள்வியும் கேட்டு பிரயோஜனமில்லை” என்றெண்ணியவள் ரிஷியின் அறையினுள் புகுந்து அவனுடைய மருத்துவ கோப்பை தேடலானாள். 
“என்ன பண்ணுற” திடுமென கேட்ட குரலில் திகைத்தவள் ரிஷி எழுந்தமர்ந்திருப்பதை கண்டு அவனின் தேவையை கவனிக்கலானாள். இது அமுதனா, ரிஷியா என்ற குழப்பமெல்லாம் இப்போதில்லை. கணவனை கண்டு கொண்டது மனது. 
ஐந்து வருட பிரிவில் அவனை காணாதிருந்தாலும் அவனின் ஸ்பரிசம், சுகந்தம் கூடவா மறந்து போவாள்? ஆனாலும் அவனிடம் நிறைய மாற்றங்கள். தேகம் கருத்து, கண்ணை சுற்றி கருவளையமும், புன்னகையே இல்லாத முகமும், ஏதோ ஒரு பெரிய கவலை மனதில் உள்ளது போன்ற தோற்றம். என்ன ஏதென்று கேட்க கயலுக்கும் தான் பயமாக இருந்தது. இதயம் தாங்க முடியாத ஏதாவதொன்றை சொல்வானோ என்ற பயம் தான். 
கணவனை கண்டதும்  நடந்த எல்லாவற்றையும் மறந்து அவனை மன்னித்திருந்தாலும், அவள் மனதின் ஓரத்தில் ஏதோ ஒன்று அவனிடம் அதிகம் நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்க, ரிஷியின் அறையில் ரிஷி அமுதனோடு தங்கி விட வழக்கம் போல் கயல் திலகாவோடு தான் இருந்தாள். 
அவன் தேவைகளை கடமையாக பார்த்து பார்த்து செய்பவள், அவனை நெருங்க முயற்சிக்க வில்லை. ரிஷியும் அவளை பார்வையால் வருடிக் கொண்டிருந்தானே ஒழிய மனைவியிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலானான். 
“பிரதீப் என் பேருல உள்ள சொத்தெல்லாம் அம்மு பேர்ல மாத்தணும். எப்படியும் அது அவளுக்கு சேர வேண்டிய சொத்துதான்”
“அது…. ஏற்கனவே பேபர்ஸ் எல்லாம் ரெடியா தான் இருக்கு” 
“இப்போ எதுக்கு இந்த பேச்சு?” தோட்டத்தில் அமர்ந்து ப்ரதீபனும் ரிஷியும் பேசிக் கொண்டிருக்க, அங்கே தேநீர் கோப்பைகளுடன் வந்தாள் கயல். அவளே இருவருக்கும் எடுத்துக் கொடுத்தவாறே “உங்களுக்கு ஆக்சிடன்ட் எப்டியாச்சுன்னு சொல்லவே இல்லையே! பிரதீப் அண்ணா நீங்க இறந்துட்டதாக சொன்னாரு” தனக்கும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டவள் அமர்ந்தவாறே ரிஷியை ஏறிட 
“சென்னைல அமுதனை சந்திச்சதும் அவன் தான் குன்னூர் போலாம், அப்பா, சித்தி, அகல்யா உன்ன பாத்தா ரொம்ப சந்தோசப் படுவாங்கனு சொன்னான். அவன் கூட போனேன். அவன் தான் ட்ரைவ் பண்ணான். நா தூங்கிட்டதால ஒரு வளைவில் வண்டிய நிறுத்திட்டு ஒன்னுக்கு போய் இருக்கான். வளைவு என்கிறதால லாரிகாரனும் வண்டி இருக்குறத எதிர் பாக்கல பலமா வந்து மோதினத்துல வண்டி பள்ளத்துல உருண்டுருச்சு. எப்படியோ வெளியே வந்த நான் ப்ரதீபனுக்கு போன் பண்ணிட்டு மயங்கிட்டேன். மூணு வருசமா கோமால இருந்து கண் முழிச்சேன். டோடல் பிளாங்க் எதுவுமே நியாபகத்துல இல்ல உன்ன தவிர. உன் முகம் மட்டும் கண்ணுக்குள்ள அப்படியே இருந்துச்சு” மெல்லிய புன்னகையினூடாக சொன்ன ரிஷி “நீ யாரு? உனக்கும் எனக்கும் என்ன உறவு ஒன்னும் தெரியாம தலையை பிடிச்சி கிட்டு இருப்பேன். பிரதீபன் உன்ன கண்டு பிடிச்சி கூட்டிட்டு வந்த பிறகு தான் எல்லாமே நியாபகத்துல வந்தது” பேச்சில் சுதி குறைந்து அமைதியானான்.  
அவன் கடைசியாக சொன்னது கயல்விழியின் காதில் விளவே இல்லை. அவன் மனதில் தன் முகம் எவ்வளவு ஆழமாக பதிந்து போய் இருந்திருந்தால் எல்லாம் மறந்த நிலையிலும் தான் மட்டும் நியாபகத்தில் பதிந்திருக்கும். அது அவளுக்கான அவனின் காதல். அவள் அவனை தினம் தினம் நினைத்துக் கொண்டு வாழ்ந்தாள் என்றால் அவனோ தன்னையும் மறந்த நிலையில் அவளின் விம்பத்தோடு தான் வாழ்ந்திருக்கின்றான். உள்ளம் நெகிழ அவனின் தோளில் தலை சாய்த்து கண்மூடினாள் கயல்விழி.
 
அமுதன் ப்ரதீபனிடம் ரிஷியின் ஆக்சிடன்ட் பற்றி சொன்னது முற்றிலும் மாறு பட்டதாக இருக்க, ரிஷியை அவன் யோசனையாக பார்த்தான். அவனோ மனைவியின் தலை மீது தலை சாய்த்து கண் மூடி அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தான். இருவரையும் தொந்தரவு செய்யாது அவ்விடத்தை விட்டு நகர்ந்தவனின் சிந்தனையில் அமுதன் சொன்னது நியாபகத்தில் வந்தது. 
“யாரோ பிளான் பண்ணி பண்ண ஆக்சிடன் மாதிரி தான் தெரியுது. நா வண்டிய நிறுத்தி இறங்கி அடுத்த பக்கம் போய்ட்டேன். அப்போ எங்க வண்டி பக்கத்துல வந்த லாரி மீண்டும் பின்னாடி போய் வேகமா வந்து மோதிரிச்சு. என்ன நடக்குதுன்னு நா புரிஞ்சிக்க முன்னே மீண்டும் கார அடிச்சி பள்ளத்துல தள்ளிருச்சு. நா அதிர்ச்சில சிலையாகிட்டேன். என்ன பண்ணுறதுனு ஒன்னும் புரியல. அந்த இருட்டுல எப்படி கீழ இறங்குறதுனும் தெரியல. நல்ல வேல ஒரு வேன் வரவும் நிப்பாட்டி உதவி கேட்டேன். ஹைக்கிங் போற காலேஜ் பசங்க என்பதால கீழ இறங்கி ரிஷியை மேல கொண்டு வந்துட்டோம். நாங்க மேல வந்த சில நிமிடங்கள்ல வண்டி வெடிச்சு சிதறி போச்சு. என் பிரெண்டோட அண்ணன் போலீசா இருக்காரு அவர் கிட்ட விசயத்த சொல்லி பாடி  முழுசா கிடைக்கலன்னு… அதுக்கேத்த மாதிரி போஸ்ட் மோட்டம் ரிப்போர்ட் தயார் பண்ண சொல்லி பத்திரிக்கையிலும் ரிஷி இறந்த செய்தியை பெரிய விளம்பரமா கொடுத்தேன். ரிஷிக்கு ஆபத்தென்றால் அவனை மாதிரியே இருக்கும் எனக்கும் ஆபத்து அதனால சென்னைல இருக்காம மும்பை வந்தேன். மும்பைல இருந்தாலும் மூணு வருஷம் கழிச்சுத்தான் நீயே என்ன பாத்த. ரிஷி னு குழம்பிட்ட. ரிஷிக்கு யாரால பிரச்சினைனு தெரியாம உண்மையை சொல்ல பயந்தேன். ஒருவேளை அவனை கொல்ல பாத்தவங்க மும்பாய்க்காரனா இருந்தா? கண் முழுச்சவனுக்கு பழசும் நியாபகத்துல இல்ல” அமுதன் சொல்ல சொல்ல ப்ரதீபனின் இரத்தம் சூடாகியது. 
ரிஷியை யார் கொல்ல பார்த்ததென்று கண்டிப்பாக அவனுக்கு தெரிந்திருக்கும். கண்டிப்பாக அந்த வர்த்தக அமைச்சர் மற்றும் கீதாராணியின் வேலையாக தான் இருக்கும் என்று அவன் மனம் அடித்துச் சொல்ல அவர்களை தனித்தனியாக கண்காணிக்க இருவரை நியமித்தான்.
கயல்விழி அருகில் இருப்பதினாலையோ  என்னவோ அடுத்து வந்த நாட்களில் ரிஷி சற்று உடல் தேறி ஸ்ரீராமோடு நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தான். கயல் விழியும் நகைக் கடைக்கு செல்லாது அவனை பார்த்துக் கொள்ள வீட்டில் இருந்தாள். அவர்களின் பேச்சு ஸ்ரீராமை வைத்தே ஆரம்பிக்கும். அவன் உண்டானதிலிருந்து பிரசவிக்கும் வரை. பிறந்ததிலிருந்து இன்று வரை இரண்டு பகுதிகளாக கயல்விழிக்கு சொல்வதற்கு கதையிருக்க ரிஷியும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருப்பான். 
வாசலில் சோபாவில் ரிஷி அமர்ந்திருக்க அவன் காலடியில் அமர்ந்து ஸ்ரீராம் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். கயல்விழியும் எதிர் சோபாவில் அமர்ந்து ஏதோ ஒரு கோப்பை பார்வையிட்டுக் கொண்டிருக்க, 
“வார்..” அழைத்தவன் எதுவும் சொல்லாது அவள் முகம் பார்த்து நிற்க 
“என்னங்க? ஏதாவது வேணுமா?”
மறுப்பாக தலையசைத்த ரிஷி “இங்க வா?” அவளை தலையால் தன் அருகில் அழைக்க அவளின் இதயம் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தது. 
“என்ன?…..” மெதுவான குரலில் வினவியவள் அவன் அருகில் செல்ல தயங்கி நிற்க 
ரிஷியே எழுந்து அவள் அமர்ந்திருந்த சோபாவில் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து நா ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டியே!”
“மாட்டேன்” எனும் விதமாக கயல்விழியின் தலையசைய 
“சத்தியம் பண்ணிக் கொடு” 
“சத்தியம் எதுக்கு?” அவளின் தொண்டை குழியில் பயப்பந்து உருள ஆரம்பித்தது. ஏதோ பெரிய விஷயம் வெளி வரப்போகுது” நா வறண்டு வேர்வையும் பூக்க,
“நா சொல்வதை  செய்வேன் என்று எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு” பிடிவாதமாகவும், அதிகாரமாகவும் ஒலித்தது ரிஷியின் குரல்.
அக்குரலில் மேனி நடுங்கியவள் அவன் நீட்டிக் கொண்டிருந்த  கையை இருகப் பற்றினாள். 
“நீ வேறொரு கல்யாணம் பண்ணனும்” மொட்டையாக ரிஷி சொல்ல அதிர்ச்சியடைவதற்கு பதிலாய் “என்ன” என்ற பார்வைதான் அவளிடம் “ஒருவேளை  மறுதாலி பற்றி சொல்கிறானோ!” அவளின் யோசனை அவ்வாறிருக்க, 
“அமுதனை கல்யாணம் பண்ணிக்க” 
அவன் சொன்னது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் ஏன் சொல்கிறான் என்று ஆராய முடியாமல் அவளின் கோபம் சுர் என்று ஏற “என்ன? உங்க சந்தேக புத்தி இன்னும் போகலையா? இளா அத்தன், ஜகத், பிரதீபன் அண்ணா இப்போ அமுதன் அத்தானா? யாரையும் விட்டு வைக்க மாட்டீங்களா? ராமு தாத்தாவையும் விடாத நீங்க  இன்னும் எத்தனை பேர என் கூட சம்பந்த படுத்தி பேச போறீங்க?” கோபமென்றால் அப்படியொரு கோபம் அவளுள். மருத்துவமனையில்  வைத்து அவன் பேசியவைகளும், சொன்ன காரணங்களும் நொடியில் மறந்து போக  “இவன் திருந்தவே மாட்டானா? நா சாகுற வரை தீ குளித்தே ஆகணுமா?” என்ற வெறி தான் தோன்றியது. 
“இல்ல அம்மு. நா சொல்லுறத கேளு” ரிஷி அவளை மறு கல்யாணம் செய்யும் படி சொல்லும் போதே உள்ளே நுழைந்த ப்ரதீபனும், அமுதனும் கயலின் பேச்சில் திகைத்து நிற்க, என்றுமே இல்லாமல் அன்னை கத்திப் பேசவும் பயந்து ஸ்ரீராம் அழ ஆரம்பித்திருக்க,  ரிஷி மீண்டும் வாய் திறக்கும் முன் அமுதன் வாய் திறந்தான்.
“அதுக்கு நான் சம்மதித்தால் தானே!. கயல் என் அத்த பொண்ணுதான். கிண்டல் பண்ணி கேலி பேச எனக்கு முழு உரிமை இருக்கு. ஆனா அவ எனக்கு அண்ணி. அந்த உறவுக்கான மரியாதையும், இடைவெளியும் எனக்கு நல்லாவே தெரியும்.  லூசு மாதிரி பேசாம போய் ஆபரேஷன் பண்ணுற வழிய பாரு” அமுதன் உரக்க பேசி விட்டு படியேற 
“அவ உடம்புதான் காய படுத்தினேன்னு பார்த்தா? வார்த்தையையும் விட்டிருக்க, உன்னயெல்லாம் மன்னிக்கவே கூடாது” பிரதீபன் அடிக்க ஓங்கிய கையை ரிஷியின் நிலையறைந்து கீழிறக்கினான். 
கயல் அழும் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு “இப்போ உங்களுக்கு சந்தோசமா? நா எங்கயாவது கண்காணாத இடத்துக்கு போறேன். நீங்க நிம்மதியாக இருங்க” என்றவள் அழுதவாறே அகல ரிஷி மயங்கி சோபாவில் விழுந்தான். 

Advertisement