Advertisement

அத்தியாயம் 22
மெதுவாக கண்விழித்த கயல்விழி அங்கே தன்னையே கவலையாக பாத்திருந்த பிரதீபன் மற்றும், அமுதனை கேள்வியாக ஏறிட
“என்னாச்சு குட்டிமா? எதுக்கு நீ இந்த ரூமுக்கு வந்த? நீ இந்த ரூம்ல மயங்கி விழுந்திருக்குறத பாத்து அமுதன் தான் உன்ன கட்டில்ல தூக்கி வச்சிட்டு என்ன கூப்பிட்டான்”  ரிஷி இழைத்த கொடுமைகள் நியாபகத்தில் வந்து தான் அவள் மயங்கி சரிந்தாள் என்று நினைத்து பிரதீபன் கவலையாக சொல்ல 
அமுதனும் “நா வரும் போது இதோ இங்க தான் விழுந்திருந்த கயல். எதுக்கு நீ இங்க வந்த?” யோசனையாக கேக்க 
இருவரும் மாறி மாறி சொல்லியதில் குழம்பிய கயல்விழியின் நியாபக அடுக்கில் தன் கணவன் அவளை அணைத்து முத்தமிட்டது வரவே அவனின் சுகந்தம் அவ்வறையில் இருப்பது போலயே ஒரு பிரம்மை அவளுள்.
“அவங்க அவங்க இங்க இருந்தாங்க” என்றவள் விரல்கள் உதடுகளை ஸ்பரிசம் செய்ய கணவன் தந்த முத்தத்தின் தித்திப்பு இன்னும் மாறாது இருக்க வார்த்தைகள் தடுக்கியே வெளிவந்தன.
அவள் ரிஷியை பற்றித்தான் சொல்கின்றாள் என்று புரிந்துக் கொண்டு “நா இப்போ தான் வரேன் கயல்” அமுதன் சொல்ல 
எங்கே அவள் அமுதனை கண்டுதான் குழம்பி இருக்கிறாள் என்று நினைத்து ப்ரதீபனும் “ஆமா கயல் இவன் என் கூடத்தான் இருந்தான்” 
“இல்ல.. நா பாத்தேன் அது அவங்க தான்” அவன் அணைத்ததையும், முத்தமிட்டதையும் சொல்ல முடியாமல் திணற, 
“நீ இந்த ரூமுக்கு வந்ததால் இங்க ரிஷி இருக்குற மாதிரி தோணி இருக்கும்” பிரதீபன் அவளின் தலையை தடவியவாறே சமாதானப் படுத்த 
அமுதனும் “பிரம்மையாக இருக்கும், ஒருவேளை ரிஷி ஆவியா வந்திருப்பானோ” சொன்னவன் பக்கென்று சிரித்து விட அவனை எரிச்சலாக பார்த்த பிரதீபன் கயல்விழியின் முன் திட்ட முடியாமல் முறைக்கலானான். 
“பிரம்மையா? இல்ல இல்ல அது அவர் தான். என் தேகம் முழுக்க அவரின் ஸ்பரிசங்கள், சுவாசம் முழுக்க அவரின் வாசம். கண்டிப்பா அவர் இங்க வந்தார்” மனதுக்குள் அரற்றியவள் என்ன சொன்னாலும் இவர்கள் நம்பமாட்டார்கள் என்று தோன்ற அவளுக்கு யோசிக்க தனிமை தேவை படவே மெளனமாக எழுந்து தனதறையை நோக்கிச் சென்றாள்.   
நான்கு நாட்கள் கடந்திருக்க, பிரதான நகைக்கடையில் காரியாலயத்தில் தனது இருக்கையில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த ப்ரதீபனை அக்காரியாலைய அலைபேசி சிணுங்கி அழைத்தது.
“யார் பேசுறீங்க? என்ன சொல்லுறீங்க?” ப்ரதீபனின் குரல் அதிர்ச்சியை பிரதிபலிக்க புதிய நகை வடிவமைப்பை பார்த்துக் கொண்டிருந்த அமுதனின் கவனம் இவன் புறம் திரும்பியது. 
பதட்டமாக பிரதீபன் அலைபேசியை வைத்து விட்டு நாற்காலியை தள்ளிக் கொண்டு எழ அவனின் பதட்டம் அமுதனையும் தொற்றிக் கொண்டது. 
“என்னாச்சு” ப்ரதீபனின் அருகில் ஓடாத குறையாக வந்த அமுதன் கேக்க, 
கண்கள் கலங்கியவாறே “குட்டிமா… குட்டிமாக்கு ஆக்சிடன் ஆச்சாம் ஹாஸ்பிடல்ல இருந்து போன் பண்ணாங்க”  என்ன செய்ய வேண்டும் என்று கூட தோணாமல் மூளை மரத்துப் போக தடுமாறியவன் “என்ன பண்ணுறது” என்று அமுதனை கேக்க 
“எந்த ஹாஸ்பிடல்? முதல்ல ஹாஸ்பிடல் போலாம்” அமுதன் ப்ரதீபனை இழுக்க, 
“ஆ…” என்று விழித்தவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு புலம்பியவாறே அமுதனோடு மின்தூக்கியில் நுழைந்தான். 
ஒருவாறு இருவரும் மருத்துவமனையை அடைய கயல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருக்க பிரதீபன் அங்கேயே தொய்ந்து  அமர அமுதன் யோசனைக்குள்ளானான். 
உள்ளே இருந்து வந்த நர்ஸ் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லி விட்டு செல்ல பிரதீபன் கதறி அழவே ஆரம்பித்தான். அவனை தேற்றுவதுதான் அமுதனுக்கு பெரும் பாடாகிப் போனது. 
இரண்டு மணித்தியாலங்கள் கடந்தும் கயல்விழியின் நிலை மாறவில்லை. உள்ளே என்ன நடக்கிறது என்று கூட புரியவில்லை. பிரதீபன் அழுவதை நிறுத்தி இருந்தாலும் ஏதோ யோசனையாகவே இருந்தான். அவன் அலைபேசி அடிக்க அமுதனை ஒரு பார்வை பார்த்தவன் டாக்டர் வந்தால் அழைக்கும் படி சொல்லி விட்டு வெளியே சென்று பேசி விட்டு மீண்டும் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தான். 
சிறிது நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த டாக்டர் தலையில் இருந்த கவசத்தை  கழற்றியவாறே “சாரி” என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி அகல, பிரதீபன் தலையில் அடித்தவாறு கதறி அழ ஆரம்பிக்க பேரதிர்ச்சியில் உறைந்தான் அமுதன்.  
யாழிசை இனி உயிரோடு இல்லை. இறந்து விட்டாள். என்ற செய்தியை டாக்டர் சொல்லி விட்டு சென்று அரை மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அந்த மருத்துவமனை வளாகத்தில் புயலென புழுதியை கிளப்பிக் கொண்டு நுழைந்தது அந்த பென்ஸ் கார். 
அதை நிறுத்த கூட பொறுமையில்லாது, குதிக்காத குறையாக இறங்கினான் ரிஷிவரதன். சிவந்த கண்கள் அது கோபத்தில் அல்ல அழுது இருக்கின்றான் போலும். முகத்தில் அப்படி ஒரு இறுக்கம், தன்னவளை காணும் வேகம் அவன் நடையில். முன்னாடி யார் குறுக்கே வந்தாலும் அடி விழும் என்பது உறுதி. அவன் மேல் மோதுபவர்களை பொருட்படுத்தாது தீவிர சிகிச்சை வாசலின் முன் வந்தான். 
“அம்முவை என்னடா பண்ண? அவளை நல்லா பாத்துக்க சொல்லிட்டு தானே போனேன்” திடீரென வந்தவன் ப்ரதீபனின் சட்டையை பிடித்து உலுக்க, அவனை தள்ளி விட்டு தனது சட்டையை உதறியவாறே! அமுதன் மீது ஒரு வெற்றிப் புன்னகையை வீச அமுதனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. 
“உன்ன நம்பி தானே அவ கண் முன்னாடி கூட வராம இருந்தேன். எனக்கு அவ உயிரோடு வேணும். இல்ல யாரையும் விட்டு வைக்க மாட்டேன் கொன்னுடுவேன்” அமுதனையும் சேர்த்து மிரட்ட தீவிர சிகிச்சை அரை வாசலில் கைகட்டிக் கொண்டு ரிஷியையே வெறித்துப் பார்த்திருந்தாள் அவனின் வார் பேபி. 
கயல்விழியின் தலையில் சிறு கட்டு மட்டுமே இருக்க, அதிர்ச்சியாக ப்ரதீபனை பார்த்த அமுதனுக்கு புரிந்தது தங்களது குட்டு வெளிப்பட்டு விட்டதென்று, எப்படி கண்டு பிடித்தார்கள் என்று அவனின் எண்ணம் செல்ல  
“செத்தவ ஏன் செத்தான்னு அவளையே கேளு, நீ ஏன் செத்தனும் அவ கிட்டேயே சொல்லு” என்றவாறு ரிஷியை கயல்விழியின் புறம் திருப்பினான். 
அங்கே கயல்விழி சிலைபோல் இருப்பதைக் கண்டவன் “வார்” என்று அழைத்தவாறே அவளை இறுக அணைத்திருக்க, அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப் பட்டிருந்தது. சிறிது நேரம் தன்னிலை மறந்து அவனின் அணைப்பில் பந்தமாக அடங்கியவள் சுய உணர்வு வந்து அவனை தள்ளி விட்டாள்.  
“அப்போ நா செத்தா தான் நீங்க உயிரோட வருவீங்க? அப்படித்தானே?” கோபமும் கவலையும் ஒன்று சேர்ந்த குரலில் “என்ன உசுரோட கொஞ்சம் கொஞ்சமா கொன்னீங்க, எல்லாத்தையும் பொறுத்துக் கிட்டேன். நீங்க நல்லா இருக்கணும் னு தான் விலகி போனேன். ஆனா…  நீங்க உயிரோடு இருக்கிறப்போவே செத்துட்டதாக நாடகம் ஆடி..” அதற்க்கு மேலும் பேச முடியாமல் கீழுதடை பற்களால் கடித்து அழுகையையும், மனக்குமுறலையும் ஒன்று சேர கட்டுப் படுத்தியவள். கண்ணீர் நிறைந்த கண்களோடு அவனை ஏறிட்டு “ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க, ஒரேயடியா என்ன கொன்னுடுங்க” என்றவள் அவன் மார்பிளையே விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள். 
“அப்படியெல்லாம் பேசாத அம்மு. நீ என்னைக்கும் சந்தோசமா இருக்கணும்னு தான் உன்ன விட்டு விலகி இருந்தேன்” அவளை அணைத்துக் கொண்டு  ரிஷி சாமாதானப் படுத்த அவனை இழுத்து அறைய முட்பட்டான் பிரதீபன். அவனின் கையை தடுத்திருந்தான் அமுதன். 
ரிஷியின் அறையில் தான் சந்தித்தது ரிஷியை தானோ என்ற எந்த சந்தேகமும் கயல்விழிக்கு இருக்க வில்லை. ஆனால் அதை கண்டு பிடிப்பது எப்படியென்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் நடிக்கிறார்கள்? யாரை நம்புவதென்று குழப்பம் வேறு.
 தலை வேறு வலிக்கவே கிழே சென்று ஒரு காபி குடிக்கலாம் என்று நினைத்தவள் மின்தூக்கியில் ஏறாது படிகளில் இறங்கி இருந்தாள். காரியால அறையில் மின் விளக்கெறியவே உள்ளே செல்ல பிரதீபன் ஏதோ வரைந்துக் கொண்டிருந்தான். 
“என்ன அண்ணா பண்ணுறீங்க?” 
“முகேஷ் ஜி பொண்ணு கல்யாணத்துக்கு புது டிசைன்ல நகை செஞ்சி கேட்டாரு, நம்மா டீம் சில டிசைன்ஸ் கொடுத்தாங்க அத கொஞ்சம் மோடிஃபை பண்ணுறேன்” பேசியவன் வேலையில் கவனமாக கயல்விழியின் பார்வை காரியாலய அறையில் இருந்த சீசீடிவி மானிடரின் மீது விழுந்தது.
 “அண்ணா எங்கெல்லாம் சீசீடிவி பிக்ஸ் பண்ணி இருக்கோம்” 
அவளின் திடீர் கேள்விக்கு தலை நிமிர்த்தியவன் “வாயில்ல மட்டும் தான்” என்றவாறே புருவம் சுருக்க, 
“மாலைல அவர் இங்க வந்தது பதிவாகி இருக்குமே!” கண்கள் மின்ன புன்னகையுடன் துள்ளிக் குதிக்காத குறையாக ஆனந்தமடைந்தாள் கயல்விழி. 
மறுத்து பேச வாய் திறந்த ப்ரதீபனும் அவளின் புன்னகை முகத்தை வாட விடப் பிடிக்காமல் அவளுக்காக மாலை காட்ச்சிகளை ஒளிபரப்பினான். 
“ரிஷியின் நினைவால் கயல் கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிப்படைந்து வருகிறாளா? அவளை டாக்டரிடம் அழைத்து செல்ல நேரிடுமா? குற்றம் இழைத்தவனையும் மன்னிக்கும் நல்ல உள்ளம் கொண்ட அவளுக்கு இப்படி ஒரு நிலைமையா வரவேண்டும்? திலகாம்மா மாதிரி ஆகி விடுவாளோ!” கயல்விழியையே! பாத்திருந்த ப்ரதீபனின் என்ன ஓட்டம் இவ்வாறிருக்க, 
“அண்ணா அங்க பாருங்க அது அவர் தான்” கூச்சலிட்டிருந்தாள் விழி. 
ப்ரதீபனால் நம்பவே முடியவில்லை. ரிஷியா அது?  அந்த நேரத்தில் அமுதன் அவனோடு தான் இருந்தான். அது மறுக்க முடியாத உண்மை. தன் நண்பனின் மேல் கோபமும் எரிச்சலும் ஒன்றாகவே வந்தது. 
அவன் இறந்த செய்தி வந்ததிலிருந்து இன்றுவரை உள்ளத்தால் அழுது கொண்டுதான் இருக்கின்றான். கயல்விழி கணவனின் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்ததும் ரிஷியின் மீது கோபம் கோபமாக தான் வந்தது. அவளாவது இலங்கையில் நிம்மதியாக இருந்திருப்பாள். அவளை அழைத்து வந்து கொடுமை படுத்தி, இப்பொழுது அவனும்  இறந்து அவளுக்கு தீராத துன்பத்தை கொடுத்து விட்டான் என்றெண்ணிக் கொண்டிருக்க, அவனோ தனது இரட்டையை வைத்துக்கொண்டு அவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கின்றான். 
“அண்ணா நா சொல்லல” என்றவள் விம்மி விம்மி அழ”
அவளின் கண்களை துடைத்து விட்டவன் “உன் கண்ணீருக்கு அவன் கொஞ்சம் கூட லாயக்கில்லை” ஆதங்கமாகவே அவன் வார்த்தைகள் வெளிவர 
“அவர் என்ன நிலைமையில் இருக்கின்றாரோ!” கயல்விழியின் காதல் மனம் கணவனுக்காக ப்ரதீபனிடம் வாதாடியது. 
“வீட்டுக்குள்ள வரத்தெரிஞ்சவனுக்கு என்ன விஷயம் என்று சொல்லத் தெரியாதா?” இம்முறை கோபமாக வெளிவந்தது அவன் சொற்கள். கன்னத்தில் வழியும் கண்ணீரோடு நிற்பவளை நோகடிக்க விரும்பாமல் “அவனை உன் கிட்ட கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்றவன் 
அவனுக்கு தெரிஞ்ச ஹாஸ்பிடல் டீனோடு பேசி கயல்விழியின் ஆக்சிடன்ட் டிராமாவை அரங்கேற்றி இருக்க, அவன் நினைத்தது போலவே! ஆஜராகி இருந்தான் ரிஷி. 
“கையை விடு அமுதா. …”  பிரதீபன் அமுதனை கோபமாக பார்க்க 
“எதுவானாலும் வீட்டுக்கு போய் பேசலாம்”  அமுதன் பொறுமையாக சொல்லிக் கொண்டிருக்க ரிஷி மயங்கி கயல்விழியின் மேலேயே சரிந்திருந்தான். 
“அண்ணா” என்று கத்திய கயல்விழிக்கும் அவனை தாங்கிப் பிடிக்க வலுவில்லாது அவனோடு சரிய ஆரம்பிக்க இருவரையும் சேர்த்து பிடித்திருந்தனர் அமுதனும், ப்ரதீபனும். 
அது உங்க இருவரையும் தாங்கும் அரண்களாக நாம் இருப்போம் என்பது போல் இருந்தது. 
ரிஷியை தூக்கி பரதீபனும், அமுதனும் பக்கத்து அறை கட்டிலில் கிடத்த அவனருகில் அமர்ந்து கண்ணீர் வடிக்கலானாள் கயல். 
“என்னாச்சு இவருக்கு” கண்களில் வழியும் கண்ணீரோடு அமுதனை ஏறிட்டாள் கயல். அவனோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். 
டாக்டர் வந்து பரிசோதிக்க “டாக்டர் அவனுக்கு ஆக்சிடன்ட் ஆனதுல தலைல அடி பட்டு  மூளைல இரத்தம் கட்டியாகி இருக்கு. அதனால அடிக்கடி மயங்கி விழுவான்” அமுதன் அவனின் மயக்கத்துக்கான காரணத்தை டாக்ட்டரிடம் சொல்ல அதிர்ச்சியடைந்தாள் கயல். 
ப்ரதீபனுக்கு ரிஷி மயங்கி விழுந்ததில் அவன் இவர்களின்  கண் முன் வராததற்கு வலுவான காரணம் இருக்கும் என்று புரிய கவலையாக ரிஷியை பாத்திருந்தான். 
“என்ன சொல்லுறீங்க? இவர் அதிர்ச்சியான விஷயங்களை பார்க்கவோ, கேட்டக்கவோ கூடாதே? இவரோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எங்க?” டாக்டர் கொஞ்சம் டென்ஷனாகவே கேக்க 
“வீட்டுல இருக்கு, டாக்டர்  அஜய் படேலாவோட பெர்சன்ட்  தான்” அமுதன் சொல்ல 
“ஓஹ் அவரா… அப்போ ஓகே அவருக்கு இன்போர்ம் பண்ணனுமா?” டாக்டர் ப்ரதீபனை ஏறிட “ஆமாம்” எனும் விதமாக தலையசைத்தான் பிரதீபன். 
அவனுக்கு ரிஷியின் நிலையை முற்றாக அறிந்துக் கொள்ள வேண்டி இருந்தது. கயல்விழியோ ரிஷியின் கைகளையும் முகத்தையும் தடவித் தடவி பேசியவாறே அழுது கொண்டிருந்தாள். 
டாக்டர் அஜய் வந்து பரிசோதித்து விட்டு அமுதன் புறம் திரும்ப  
“டாக்டர் உங்க கிட்ட தனியா பேசணும்”  பிரதீபன் முந்திக் கொள்ள அவன் புறம் திரும்பிய டாக்டர் அஜய் இவர் யார் என்பது போல் அமுதனை ஏறிட 
“நீங்க அவரோடு பேசுங்க” என்றவன் ரிஷியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான். 
அமுதனின் எண்ணங்கள் ரிஷியை சென்னையில் சந்திக்க நாளுக்கு பயணித்தது. அமுதனுக்கு ரிஷியின் நியாபகங்கள் நன்றாகவே இருந்தது. வாரத்துக்கு ஒரு தரம் வீட்டுக்கு வரும் தன்னை போலவே  அச்சு பிசகாமல் இருக்கும் சகோதரனை அப்பாவும், அத்தையும் செல்லம் கொஞ்சுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 
அதற்க்கு காரணம் அவன் தன்னை போலவே இருப்பதும், அப்பாவின் மற்றும் அத்தையின் அன்பு அவனுக்கு வேண்டும் என்று நினைத்ததாலையே! பெரியவர்களுக்கும் நடந்த கசடுகள் அறியாதவனோ! ரிஷி எங்கயோ சொகுசாக இருந்து விட்டு வருவதாக நினைத்து அவன் வீட்டுக்கு வரும் நாட்களில் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு தனதறையிலையே இருந்து விடுவான். 
 இரவில் கதை சொல்லி தூங்க வைக்கும் தந்தை. சோறூட்டும் அத்தை இருவருமே அன்று ரிஷியை மட்டும் கவனித்துக் கொள்வதில் பிசியாகி விட அமுதனின் கோவமெல்லாம் ரிஷியின் புறமே திரும்பும். அனைவரும் உறங்கிய பின் மெதுவாக ரிஷியின் அறையை எட்டிப் பார்த்தால் தந்தை அவனை முத்தமிட்டுக் கொண்டு அழுது கொண்டிருப்பார். 
“அப்படி என்ன அவன் என்ன விட உசத்தி? எப்போ வந்தாலும் செல்லம் கொஞ்சுறான். கண்டு பிடிக்கிறேன்” என்று அவன் செய்தது ரிஷி கீதாராணியிடம் திரும்பி செல்ல வேண்டிய நேரத்தில் அவனை குளியலறையில் பூட்டி விட்டு அவன் செல்ல வேண்டிய காரில் இவன் ஏறி இருந்தான். 
அவன் அங்கிருந்த இரண்டு மணித்தியாலங்களில் நரகத்தை கண் முன் கண்டு மயங்கியே விழுந்து விட்டான். அவன் கண் திறந்தது ஹாஸ்பிடலில் அதன் பின் தான் அவனது சகோதரனை தந்தையும் அத்தையும் விழுந்து விழுந்து கவனிப்பது ஏன் என்றே புரிந்தது. 
“அப்பா ரிஷியை கூட்டிட்டு வாங்க பா… அவன் பாவம் பா….” அதை தவிர அமுதனால் வேறொன்றுமே பேச முடியவில்லை. அடிக்கடி இரவில் பயந்து அலறுவான். தனது இரட்டையை நினைத்து தினமும் கண்ணீர் வடிக்கலானான். அடுத்த வாரம் சகோதரனை காண ஆவலாக இருந்தவனுக்கு திலகாவின் திடீர் பிரசவம் நிகழ அவனை காண முடியாமல் போனது. அதன் பின் அவனை மீண்டும் சந்தித்தது சென்னையிலையே! 
அந்த காபி ஷாப்பில் நுழைந்த அமுதன் ஒரு டேபிளில் போய் அமர வெயிட்டர் வந்து பில்லை கொடுக்க 
“என்னய்யா வந்தவன் கிட்ட ஆடர் வாங்கம்மா பில்லை கொண்டுவந்து நீட்டுற” வெயிலில் வந்ததில் கடுப்பாகி அமுதன் கத்த
அவனை நன்றாக பார்த்த வெயிட்டர் “என்ன சார் விளையாடுறீங்களா? இப்போ தான் காபி சாப்டீங்க? பில்லை கைல கொடுத்தா நக்கல் பண்ணுறீங்க”  அவனும் சத்தம் போட அவனின் காலரை பிடித்திருந்தான் அமுதன். 
காபியை சாப்பிட்டு விட்டு வாஷ்ரூம் சென்று வரலாம் என்று சென்றிருந்த ரிஷி அங்கு வரவே என்ன நடந்திருக்கும் என்று நொடியில் புரிந்துக் கொண்டு தனது இரட்டையை கட்டித்தழுவினான் அமுதன். அமுதனை கண்டு ரிஷியின் முகம் இறுக அவன் கட்டி அணைத்ததில் உடல் இறுகி நின்றான்.  

Advertisement