Advertisement

அத்தியாயம் 17
இதோ கயல்விழி ஊட்டிக்கு டாடா சொல்லி அன்னையையும், ஸ்ரீராமையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மும்பைக்கு பயணித்து கொண்டிருக்கின்றாள். 
என்னதான் ரிஷி அவளை வார்த்தையால் வதைத்திருந்தாலும், கயலின் மனம் அவனை வெறுக்கவில்லை. மாறாக அவனுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டு தான் இருந்தது. கணவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவும் கயல்விழியினுடையதாகவே இருக்க, அவன் ஒரேயடியாக அழிந்து போகவேண்டும் என்று அவள் என்றுமே நினைத்ததேயில்லை. 
பிரதீபன் அவன் இறந்து விட்டான் என்று சொன்னதும் அவளின் இதயத்தில் ஏற்பட்ட வலியும் வேதனையும் சொல்லிடங்காதது. ஸ்ரீராமை ஏந்தி இருந்தவள் தாலியை இறுக பற்றியவாறே கால்களும் மரத்துப் போய் தரையில் சரிய பிரதீபன் ஸ்ரீராமை பிடித்ததில் குழந்தைக்கு அடி ஏதும் படவில்லை. 
கயல்விழி கதறி அழவில்லை, கத்தி ஆர்ப்பாட்டமும் பண்ணவில்லை. மூக்கு, சிவந்து விடைக்க, நெஞ்சை அழுத்தும் கவலையை ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவாறே விம்மி விம்மி கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். 
சின்ன வயதிலிருந்தே இளவேந்தன் படுத்தும் பாட்டை யாரிடமும் சொல்லாமல், அழுவதற்கு கூட பிடிக்காமல் தன்னை கட்டுப்படுத்தியே பழக்கப் பட்டவள் ரிஷியின் அத்தனை சுடு சொற்களையும் தாங்கும் சக்தியை சின்ன வயது அனுபவத்தால் பெற்றிருந்தாள். 
எதிர்த்து பேச விடாது மங்கம்மாவின் அடக்கு முறையால், ரிஷி கூட சண்டை போடும் தெம்பும் இருக்கவில்லை. சீதாவின் வழிகாட்டலால் பொறுமையை கடைப்பிடித்து, பொறுத்து போனது மட்டுமல்லாது ரிஷியை மன்னித்தும் விட்டாள். 
இந்த ஐந்து வருடங்களாக அவள் அழுது கரைந்தது கணவன் தனக்கு இழைத்து கொடுமையை எண்ணியல்ல. மாறாக அவனின் அருகாமை இல்லை என்பதாலையே! வார்த்தைகளை தேளாக கொட்டியும் அவளால் அவனை வெறுக்க முடியாததற்கு  ஒரே காரணம் அவள் அவன் மேல் வைத்த காதல் தான் என்பதை ஆராய்ந்து அறிந்தவளுக்குமே ஆச்சரியம் தான். 
மனித மனம் எவ்வளவு விசித்திரமானது. காயப்பட்டாலும் காதலித்து விட்ட ஒரே காரணத்துக்காக எல்லாவற்றையும் மறந்து மன்னித்து விடுகின்றது. இப்பொழுது நினைத்தாலும் அவனின் முரட்டுத்தனமான முத்தத்தையும் ரசிக்கிறது மனது. இறுகிய அணைப்புக்கு ஏங்கித்தவிக்கிறது தேகம். 
சந்தோசமாக வாழ வேண்டிய வாழ்க்கையை அவளை கஷ்டப்படுத்தி அவனும் நிம்மதியில்லாமல் தவிக்கிறானோ என்று அவளின் மனம் எண்ணிப் பார்த்ததுண்டு. அதிகம் பேசி பழக்கமில்லாதவளுக்கு அவனிடம் ஆறுதலாக பேசக் கூட வார்த்தைகள் வருவதற்கு பதிலாய் அச்சமே வருகிறது. அதற்க்கு காரணம் கூட தனது இயல்பான குணமே ஒழிய அவன் அரக்கனல்ல என்பது அவனை பிரிந்து வந்த பின் தான் உணர்ந்துக் கொண்டாள். 
 
தன்னை அவன் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்கிறான் என்ற வேதனையும், வருத்தமும் அவளை ஆட்டிப்படுத்தியதே அன்றி அவனுக்கெதிராய் ஒரு விரலை கூட அசைக்கவுமில்லை. ஒரு அடியை கூட எடுத்து வைக்கவுமில்லை. 
இலங்கைக்கு போகத்தான் வழி தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு போகவுமா? வழி தெரியணும். ஒரே ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தால் போதாதா? அவளை அவளுடைய பெற்றோரிடம் சேர்த்து வைக்க மாட்டார்களா? இல்லை அவன் தான் அவளை அறையை மூடி சிறை வைத்தானா? அவள் மனம் அவனை முழுமையாக கணவனாக ஏற்று காதலிப்பதினாலே அவளால் ரிஷியை மன்னிக்க முடிந்ததே தவிர  மறக்க முடியவில்லை.
விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் பெற்றான் என்றெண்ணித்தான் அவனை விட்டுப் பிரிய எண்ணினாள். அதுவும் அவனுக்கு பிடித்தது போன்ற ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தான் ஒரு தடையாக இருக்கக் கூடாதென்று தானே!
அதனாலயே அவளால் அவன் இறந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்தி அழவில்லையென்றாலும் கண்களில் ஆறாக பெருகும் கண்ணீரை கட்டுப் படுத்த வழி தெரியாமல் மடங்கி அமர்ந்தவள் மெளனமாக கண்ணீர் வடிக்க, ஸ்ரீராம் ப்ரதீபனின் கைகளில் இருந்து இறங்கி அன்னையிடம் வந்து
“மா.. கண்ணுல தூசி போயிய்சா” என்றவாறு அவளின் கண்களில் தனது பட்டுப் போன்ற இதழ்களை குவித்து ஊதலானான். ரிஷியை நினைத்து கண்களில் கண்ணீர் பெருகும் போது மகன் கேக்கும் கேள்விக்கு எந்தநாளும் சொல்லும் பதில் தான். இன்று அவள் சொல்லாமலே புரிந்துக் கொண்டு அன்னைக்கு ஆறுதலானான் அவளின் செல்ல மகன்.
மெளனமாக அழுது கொண்டிருக்கும் கயல்விழியை பாத்திருந்த பிரதீபன் ஸ்ரீராமின் செயலால் உள்ளம் குளிர நெகிழ்ந்துதான் போனான். கயல்விழியின் அருகில் அமர்ந்து கொண்டவன் அவளின் கையை ஆதரவாக பற்றிக்கொள்ள அதை உணரும் நிலைமையில் கூட அவளில்லை. 
பிரதீபன் ஒருவார்த்தையாவது ஆறுதலாக சொல்லவில்லை. அவளை அழ விட்டவன்  அவளை விட்டு நகரவுமில்லை. ஸ்ரீராமை அணைத்துக் கொண்டு கயல்விழி விசும்ப அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.
“அவரை விட்டுட்டு வந்திருக்க கூடாதோ? குழந்தை பிறந்ததையாவது சொல்லி இருக்க வேண்டுமோ! சொல்லி இருந்தா மனம் திருந்தி வந்திருப்பார்” அவள் மனம் ரிஷிக்கு சாதகமாகவே! சிந்திக்க, ஸ்ரீராமை ஏறிட்டவள் 
“அப்பா எங்கே என்று கேட்டான். என்ன பதில் சொல்வதென்று முழித்தேன். இப்போ… இப்போ… அப்பா உயிரோடயே இல்லனு எப்படி சொல்வேன்” மனதுக்குள் அரற்றியவள் வாய்விட்டே கதற பிரதீபன் அவளை பாவமாக பார்த்தான். 
ஸ்ரீராம் அவளின் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே இருக்க, ப்ரதீபனின் கண்ணுக்கு தாயும் சேயும் அழகான ஓவியமாகவே தெரிந்தார்கள். இவர்களை இங்கே இப்படியே விட்டு விட்டு செல்ல அவன் மனம் விரும்ப வில்லை. அவன் அழைத்த உடனே வரவும் மாட்டாள். அவன் சிந்தனை அவளை இங்கே இருந்து எப்படி அழைத்து செல்வதென்பதிலையே! இருக்க, முன்னறையில் இருந்து வந்த திலகாவின் குரலில் நிமிர்ந்தான் பிரதீபன். 
“கயல், கயல் என் பாப்பா எங்க?” என்றவாறே வர திலகாவை கண்டு அதிர்ச்சியடைந்த பிரதீபன் எழுந்துக் கொள்ள 
அவனையே பார்த்திருந்த திலகா தலையசைத்து யோசனைக்குள்ளாக, திலகாவின் அருகில் சென்று அவரை அணைத்துக் கொண்டு மெளனமாக கண்ணீர் வடிப்பது ப்ரதீபனின் முறையானது.
“நீ எதுக்கு அழுற? கயல் உனக்கு சோறு தரலையா? வா வா உனக்கு நா ஊட்டி விடுறேன்” என்று அவன் கை பிடித்து அழைத்து சென்ற திலகா சமயலறைக்குள் புகுந்து தானே பரிமாறி அவனுக்கு ஊட்டலானாள். 
“ஆ.. காட்டு… ஆ காட்டு அப்போ தான் அத்த உனக்கு சாக்லட் வாங்கி தரேன்”  ஏதோ ஒரு குழந்தைக்கு ஊட்டிய நியாபகத்தில் ப்ரதீபனுக்கு ஊட்ட அவனும் கண்கள் கலங்கியவாறே சாப்பிடலானான். 
குளித்து விட்டு வெளியே வந்த சுந்தரிப் பாட்டியை இழுத்துக் கொண்டு திவ்யாவும் பின்வாசல் வழியாக வர அங்கே திலகா ப்ரதீபனுக்கு சாப்பாடு ஊட்டுவதை கண்டு திகைத்து நிற்க, 
சுந்தரிப் பாட்டியோ “யாரு திலகா இது உன் பையனா?’ என்று கேக்க 
“இல்ல என் அண்ணன் பையன். என் ராஜகுமாரன் என் பொண்ண கட்டிக்க போறவன்” என்று சொல்லியவாறே ஊட்ட அதிர்ச்சியாவது திவ்யாவின் முறையானது. 
“காணமால் போன விழியின் புருஷனா?” என்ற ஆராய்ச்சி பார்வையை அவர் வீச 
“என்னது இவரு விழி புருஷனா?” என்று ப்ரதீபனையே பாத்திருக்க, 
“திவ்யா போய் மத்த வேலையை பாரு” பாட்டி அவளை அதட்டியவாறே உள்ளே செல்ல திவ்யா நிம்மதி பெருமூச்சுவிட்டவாறே வாசலுக்கு வர கயல்விழி அழுவதைக் கண்டு அவளருகில் வந்தவள் 
“என்ன ஆச்சு விழி. ஏன் அழுற? அதான் உன் புருஷன் வந்துட்டாரே” 
இத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்தாலும் கயல்விழி அவள் கணவனை பற்றி ஒரு வார்த்தையாவது இவர்களிடம் பகிரவில்லை. அவள் கர்ப்பமான உடன் சுந்தரி பாட்டியும் மெதுவாக கேட்டுப் பார்க்க,
“அவர் எங்க இருக்குறார்னு தெரியல” என்று மாத்திரமே கயல்விழி திரும்பத் திரும்ப சொல்ல அவளே சொல்வாள் என்று பாட்டியும், தியாவும் அவளிடம் கேட்பதை விட்டு விட்டனர்.  
இன்று அவள் அழுவதற்கான காரணம் புரியாமல் தியா கேக்க அழுவதை நிறுத்திய விழி அதிர்ச்சியாக அவளை பார்த்தாள். 
கயல்விழி மறுத்து பேசும் முன் தியாவே “உள்ள போய் பாரு உன் அம்மா அவர கொஞ்சுறத” சின்ன சிரிப்பினூடாகவே சொல்ல திடுக்கிட்டு எழுந்தவள் சமயலறைக்குள் ஓட ஸ்ரீராமும் பின்னாலையே வந்தான். 
திலகா ஊட்ட ஊட்ட சாப்பிட்டு கொண்டிருந்த பிரதீபன் ஸ்ரீராமை மடியில் இருத்திக் கொள்ள 
“என் அம்மாவை உங்களுக்கு எப்படித் தெரியும்” விழிவிரித்து கேட்டவளை முறைக்க முடியாமல் தோற்றான் பிரதீபன். 
திலகா தான் கயலை பெத்த அம்மா என்று கயலுக்கு தெரியும் என்பதை அவள் பேச்சினூடே புரிந்துக் கொண்டவன். அவளிடம் திலகா எவ்வாறு வந்து சேர்ந்தாள் என்பதை கேட்கவேண்டும் என்று நினைக்க  கயல் கேள்வி எழுப்பி இருந்தாள்.  
அவளுக்கு பதில் சொல்வதென்றால் விளாவாரியாக சொல்ல வேண்டும், அதை சொல்ல கூடிய நேரமும் இது இல்லை. 
“அம்மா இப்படி இருக்காங்களே! அவங்கள குணப்படுத்தனும் எங்குற எண்ணம் இருக்கா உனக்கு?” யாழிசை சந்தித்த ப்ரதீபனின் கர்ஜனை குரல் அது. 
அக்குரலில் அவள் உடல் சிறு நடுக்கம் தோன்ற அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று முழித்தாள் கயல்விழி. 
அன்னையை அழைத்துக் கொண்டு ஊட்டி வந்தவள் ஸ்ரீராமையும், அன்னையையும் தாங்கி கொண்டு தோட்ட வேலையும், தையல் வேலையென்றும் இருந்து விட அன்னையை ஒரு நல்ல மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்ற எண்ணமே! அவளுக்கு தோன்றவில்லை. 
சுந்தரி பட்டி ஒரு தடவை சொல்ல டாக்டரிடம் அழைத்து செல்ல அவரோ திலகா இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று விசாரிக்க அதை தெரியாமல் விழி முழிக்க அவரும் முயற்ச்சி செய்து பார்த்து கை விட்டு விட அதன் பின் அவள் அதை பற்றி சிந்திக்கவே இல்லை. 
இப்பொழுது பிரதீபன் கேக்க, சுயநலமாக இருந்து விட்டேனோ! என்று நெஞ்சம் குறுகுறுக்க என்ன பதில் சொல்வதென்று ப்ரதீபனையே ஏறிட்டாள். 
அவளை புரிந்து கொண்டவனாக ஒருபெருமூச்சு விட்டவன் “நா அம்மாவை அழைத்துக் கொண்டு மும்பாய் போகலாம்னு இருக்கேன். நீயும் வாறதென்றா வா” 
அவளை இங்கே இருந்து அழைத்து செல்ல என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு கிடைத்த ஒரே விஷயம் திலகாவாக இருக்க, அவன் அழைத்து அவள் வரமாட்டாள் என்று அறிந்தவனாக விட்டெறியாக சொன்னது, “நீ வராவிட்டாலும் உன் அம்மாவை நான் அழைத்துக் கொண்டு போவேன்” என்பதே!
மீண்டும் மும்பைக்கா? அந்த வீட்டில் என்னால் நிம்மதியாக இருக்க முடியுமா? ரிஷியோடு வாழ்ந்த வாழ்க்கை, நாட்கள் என்னை இம்சிக்காதா?” தன் மனதோடு கேள்வி கேட்டவள் பதிலேதும் சொல்லாது மெளனமாக அகன்றாள்.
பிரதீபன் அவளை வற்புறுத்தவில்லை. கெஞ்சவுமில்லை. அவன் சொன்னதே இறுதி முடிவு என்று அவனின் குரலே! சொல்ல, எதிர்த்து பேசத்தான் கயல்விழிக்கு முடியவில்லை. அன்னைக்கு வைத்தியம் பார்க்காத குற்ற உணர்ச்சியும் சேந்து கொள்ள மௌனமாகவே அவனோடு மும்பாய் பயணிக்க ஆயத்தமானாள். 
சுந்தரி பாட்டிக்கு நன்றி தெரிவித்தவள், தோட்ட பொறுப்பையும், தையல் பொறுப்பையும் தியாவிடம் ஒப்படைத்து விட்டு விடை பெற அழுது கரைவது தியாவின் முறையானது. 
கணவன் இறந்த துக்கத்தில் இரவு முழுவதும் அழுது கரைந்தவளுக்கு அழுவதற்கு கூட கண்களில் கண்ணீர் இல்லாது போக தியாவை ஆறுதல் படுத்தலானாள் விழி. 
ஸ்ரீராமை கட்டிக் கொண்டு தியா அழ அவளை எரிச்சலாக பார்த்தான் பிரதீபன். 
அந்த குட்டிக் கண்ணனோ! “நா பிளைத்துல பழக்க போலேன்” {பிளைட்டுல பறக்க போறேன்} என்று ஆனந்த கூச்சலிட்டுக் கொண்டிருந்தான்.
வாகனத்தில் பயணிக்கும் போது விமானத்தில் போகணும் என்று ஸ்ரீராம் படுத்தியெடுக்க அவனை சமாதானப் படுத்துவது யாரும் சொல்லாமலையே! ப்ரதீபனிடம் வந்து சேர அவனை சமாதனப் படுத்த முடியாமல் விழி பிதுங்கி நின்றான் பிரதீபன். 
“அப்படியே உன் அப்பன உரிச்சு வச்சிருக்க” ரிஷியின் பிடிவாத குணத்தை பிரதீபன் சொல்ல வண்டியின் கதவில் தலை  சாய்த்து படுத்துக் கொண்டிருந்த விழி விசுக்கென்று ப்ரதீபனை பார்க்க அவனோ ஸ்ரீராமுக்கு வெளியே காணும் காட்ச்சிகளை காட்டிக் கொண்டிருந்தான். 
அவனை படுத்தியெடுத்த பின்னே! விமானநிலையமும் வர ஸ்ரீராம் ஒருவாறு சமாதானமடைய அனைவரும் முறைப்படி அனைத்தையும் முடித்துக் கொண்டு மும்பை நோக்கி விமானத்தில் பறந்து கொண்டிருந்தனர். 
கயல் திலகாவின் அருகில் அமர்ந்துக் கொள்ள பிரதீபன் ஸ்ரீராமை வைத்துக் கொள்ள குழந்தையும் பயண களைப்பில் உறங்க ஆரம்பித்தான்.   
கயலை திரும்பிப் பார்த்த ப்ரதீபனின் எண்ண ஓட்டம் யாழிசை அவன் வாந்தி எடுத்து சுத்தம் செய்த நாளுக்கு பயணித்தது. 
அன்று அவனுக்கு பிறந்த நாள். தான் எதற்கு இந்த உலகத்தில் பிறந்தேன் என்று வருந்தும் நாள். அன்னையும், தந்தையும் அவனை அடித்து காய படுத்திய காயங்களின் வடுக்கள் உடம்பு பூராவும் இருக்க, சித்தியென்று வந்தவள் போட்ட சூட்டின் தழும்புகளும் அவன் முதுகில் இருந்தன. 
மோகனசுந்தரம் அவனுக்கு வைத்தியம் செய்ததால் வடுக்கள் மறைந்திருந்தாலும், மனதில் ஆறாத வடுவாக காயங்கள் நிறைந்திருக்க, மோகனசுந்தரம் இருக்கும் வரை அவரிடம் அவன் பட்ட துன்பங்களை சொல்லிப் புலம்புபவன் அவர் இறந்த பின் அன்று நாள் முழுவதும் குடித்து விட்டு புலம்புவதே வளமையானது. ரிஷி அருகில் இருந்தால் அவன் குடிப்பதை தவிர்த்து தூக்க மாத்திரையை கொடுத்து தூங்க வைத்திருப்பான். அவனும் இல்லாது போக ஓவராக குடித்து விட்டு ஒவ்வாமையால் வாந்தியெடுத்து மயங்கி கிடந்தவனை தான் யாழிசை அன்னையாக அரவணைத்தாள். 
காலையில் வெகுநேரமாக தூங்கியவன்  எழுந்ததே பத்து மணியளவில் அறையின் சுகந்தமும், சுத்தமும், நேர்த்தியும் கண்ணில் பட நேற்று என்ன நாள் என்பதையும், இரவு என்ன செய்தான் என்ற நியாபகமும் வர கூடவே யாழிசையின் முகமும், அவள் அவனுக்காக  செய்தவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்தில் வரவே! 
“ரிஷிக்கு அவள் கணவன் என்ற உரிமையில் செய்தாள் எனக்கு எதற்கு செய்தாள்” மூளை கேள்வி எழுப்பினாலும் எல்லா பெண்களையும் தப்பானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவனுக்கு யாழிசையை அந்த பட்டியலில் இட மனம் அனுமதிக்கவில்லை. 
ரிஷியிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு குளித்து தயாராகி வந்தவன் ரிஷியே மாடியிலிருந்து இறங்கி வருவதை கண்டு 
“டேய் சென்னையில் இருக்க வேண்டியவன் இங்க என்னடா பண்ணுற? ஏதாவது முக்கியமா மறந்து விட்டுட்டு போனதை எடுக்க வந்தியா? போன் பண்ணி இருந்தா நானே வழி பண்ணி இருப்பேனே!” ஆச்சரியமாக விழி விரித்தவன் நண்பன் அமைதியாக எதையோ யோசிப்பதை பார்த்து 
“என்னடா” என்று தோளில் கை வைக்க 
“நேத்து உன் பர்த்டே இல்ல” சங்கடமாக ப்ரதீபனை ரிஷி ஏறிட 
“நண்பன் நீ இல்லனா என்ன அதான் உன் மனைவி இருந்தாளே!” என்றவன் யாழிசை அவனுக்காக செய்தவைகளை சொல்லி அவளை புகழ்ந்து பேச முதல் முறையாக தான் செய்ததை எண்ணி வருந்தலானான் ரிஷி. 
“ரிஷி நா ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்காத அந்த பொண்ணுக்கு நீ கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அவளை ஊருக்கு அனுப்பிடு. உன்ன உண்மையாகவே நேசிக்கிறா உண்மை தெரிஞ்சா தாங்க மாட்டா” 
பிரதீப் பேசப் பேச மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் கடைசி வாக்கியத்தில் உடல் இறுகி நின்றான். 
அதன் பின் இருவரும் ஒன்றாகத்தான் மும்பையிலுள்ள பிரதான நகைக் கடைக்கு சென்றார்கள். அங்கிருந்து ரிஷி மீண்டும் சென்னை செல்வதாக விடைபெற்று சென்றிருந்தான். 
இரவில் வீடு வந்த ப்ரதீபனுக்கு யாழிசையிடம் பேச வேண்டும் என்று தோன்ற அவளை அழைத்து வருமாறு ராமு தாத்தாவிடம் கூற அவர் சொன்ன பதில் ரிஷி யாழிசையை அழைத்துக் கொண்டு சென்னை சென்றான் என்பதே! அதன் பின் இரண்டு நாட்களில் அவன் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்னை சென்றாலும் யாழிசையை சந்திக்க முடியவில்லை. அன்றிலிருந்து மூன்றாவது நாள் ரிஷி மும்பை வந்ததும்,யாழிசைதான் கயல் என்று தெரியவந்ததும் உடனே இருவரும் சென்னை கிளம்ப அங்கிருந்து அவள் காணாமல் போய் இருந்தாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன் யாழிசையை திரும்பிப் பார்க்க அவளோ ஜன்னலுக்கு வெளியே மேகக்கூட்டங்களை வெறித்துக் கொண்டு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாள். 
 அத்தோடு ரிஷி அவனோடு கடைசியாக அலைபேசியில் பேசிய வார்த்தைகள் நியாபகத்தில் வந்தது. 
“வார் இல்ல…அம்மு..  எப்படியா…வது நீ..தான் அவள தேடி கண்டு பிடிக்கணும். அவள நல்…லா பா…த்துக்க”
“ரிஷி எங்க இருக்க? என்ன ஒரு மாதிரியா பேசுற? என்ன ஆச்சு? குட்டிமாவ பாத்துட்டியா?” அத்தோடு அலைபேசி துண்டிக்கப்பட்டிருக்க ரிஷி சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி இருக்கும் செய்தியே ப்ரதீபனை எட்டியது.

Advertisement