Advertisement

அத்தியாயம் 16
சிலு சிலுவென குளிர் காற்று, ஊட்டி முழுவதும் வீச காலை சூரியனும் சோம்பலை முறித்துக் கொண்டு வளம் வர அன்று பாடசாலை விடுமுறை என்பதால் திவ்யாவை இழுத்துக் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று அடம்பிடித்து அழைத்து வந்திருந்தான் ஸ்ரீராம். 
ஸ்ரீராமுக்கு இணையாக அவனோடு விளையாடும் ஒரே ஜீவன் திவ்யா மாத்திரமே. திவ்யாவை அவன் தியா என்றே! அழைப்பான். அவன் மழலையில் நடு எழுத்து சிக்காமல் அல்லாட திவ்யாவும் அதை அப்படியே விட்டு விட்டாள். 
“டேய் ஸ்ரீ மெதுவா போடா” திவ்யாவின் குரலை பொருட்படுத்தாது ஸ்ரீராம் வேகமாக செல்ல திவ்யாவும் அவன் பின்னால் வேகமாக மூச்சு வாங்கியபடி ஓடிக் கொண்டிருந்தாள். ஒருவாறு மலையில் சைக்களில் ஏறமுடியாமல் ஸ்ரீராம் திணற திவ்யா அவனை பிடித்திருந்தாள். 
“டேய் என்னையா ஓட விடுற? இனிமேல் உன் கூட வரமாட்டேன். உன் பேச்சு கா” ஸ்ரீராமோடு டூ விட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் தியா. 
” நோ தியா நா சூப்பல்மேன் மாலி பாஸ்ட்டா போகணும் னு தான் வேகமா போனேன். லவ் யு தியா குத்தி. என் கூத  விளையாத நீ வலலைனா நா மத்தும் விளையாதனுமே அப்பொலம் நா விழுந்தா நீ தான் லொம்ப அழுவ” {நோ தியா நா சூப்பர்மேன் மாதிரி பாஸ்ட்டா போகணும் னு தான் வேகமா போனேன். லவ் யு தியா குட்டி. என் கூட விளையாட நீ வரலைனா நா மட்டும் தனியா விளையாடனுமே! அப்பொறம் நா விழுந்தா நீதானே ரொம்ப அழுவ} 
அவன் அடம் பிடிக்கும் போதும், அழும் போதும் அன்னை அவனை கொஞ்சுவது போலையே! மழலை மொழியில் தியாவை கொஞ்சிய அந்த சின்ன கண்ணன் தியாவின் இடுப்பின் அளவுக்கு கூட உயரம் இல்லை. அவளின் பாவாடையை பிடித்திழுத்தவாறே கொஞ்சிக் கொண்டிருக்க மனம் உருகிப் போனாள் தியா. 
காலையிலேயே எழுந்ததிலுருந்து கயல்விழியிடம் இருப்பவன் வயிறு நிறைந்த பின் தியாவிடம் ஒட்டிக் கொள்வான். அதனாலயே! கயல்விழிக்கும் தனது வேலைகளை பார்க்க மிகவும் இலகுவாக இருந்தது. 
ஆறு மாதமாக தான் ஊரிலுள்ள பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கின்றான் ஸ்ரீராம். அம்மா பாட்டிங்க, தியா என்று மட்டும் தனது சின்ன கூட்டுக்குள் இருந்தவன் பாடசாலையில் நண்பர்களின் உலகத்துக்குள் நுழைந்ததும் புதிய புதிய வசனங்களை பேச கற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது, சுற்றுப்புற சூழலை கிரகித்து கேள்விகளையும் கேக்க ஆரம்பித்திருக்க, 
பாடசாலையில் குடும்ப உறுப்பினர்களை பற்றி சொல்லி கொடுத்திருக்க நேற்று மாலை வீடு வந்தவன் அன்னையிடம் முதலில் கேட்ட கேள்வி “அம்மா என் அப்பா… எங்கம்மா” என்பதே! 
கயலுக்கு எப்பொழுதும் ரிஷியை பற்றி சொல்லவே கூடாதென்றெல்லாம்  எண்ணமில்லை. சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்பதே உண்மை. குழந்தையே பிறக்க கூடாதென்று அவளுக்கு கருத்தடை ஊசியை ஏற்றி இருந்தவன் இரண்டாவது முறை ஏற்ற மறந்த போனதன் விளைவு ஸ்ரீராம். 
திலகா மட்டும் காயலிடம் வந்து சேரவில்லையென்றால் ஸ்ரீராம் பிறந்திருப்பானா என்று சந்தேகம்தான். பிள்ளையே வேண்டாம் என்று சொன்ன தந்தையை பற்றி என்னவென்று சொல்ல, இதுதான் உன் தந்தையென்று சொல்லவும் அவளிடம் புகைப்படம் எதுவுமில்லை. 
தந்தையை பற்றி கேள்வி கேக்க ஆரம்பித்திருக்கும் செல்ல மகன் “அப்பா எங்கே” என்று கேட்பதோடு நிறுத்தி விடமாட்டான். அதற்க்கு தகுந்த பதிலை விழி சொல்லவில்லையானால் “என் அப்பா யார்” என்ற கேள்விதான் முன் நிற்கும் என்று விழி அறியாதவளுமல்ல. 
அப்பாவியான யாழிசை, தனியாக எங்குமே சென்றிராத யாழிசை, யார் என்ன சொன்னாலும் நம்பும் யாழிசை, இந்த ஐந்து வருடங்களில் கொஞ்சமேனும் மாறியிருக்கின்றாள் என்றால் அவளின் வயதோடு அவளுக்கு கிடைத்த அனுபவமே! காரணம். 
என்னதான் காலையில் வேலை வேலையென்று ஓடியாடி வேலை செய்தாலும், இரவில் தூங்க விடாமல் கடந்த காலம் கயல்விழியின் கண்ணில் நீரை நிரப்பிக் கொண்டே தான் இருந்தது.
இலங்கையிலுள்ள வளர்ப்பு பெற்றோரை தொடர்ப்பு கொள்ளும் வழியும் அவளுக்கு தெரியவில்லை. யோகராஜின் அலைபேசி எண்ணும் அவளுக்கு சரிவர நியாபகம் இல்லை. இரண்டு , மூன்று தடவை முயற்சி செய்தவள் தப்பான எண் என்று வரவும் விட்டுவிட்டாள். ரிஷியால் இயலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நெஞ்சம் அடித்துக் கொண்டாலும், காதல் கொண்ட மனம் ரிஷியை இன்னமும் நம்பிக் கொண்டிருக்க, அவளின் கடவுள் நம்பிக்கையும் எந்த தப்பும் நடக்காது என்று வேண்டிக் கொண்டிருந்தது. 
அவளின் வாழ்வில் வசந்தமாய் ஸ்ரீராம் வந்த பின் கவலைகளை மறந்து கொஞ்சம் சந்தோசமாக வாழ ஆரம்பித்திருந்தாள் கயல்விழி. 
“டேய் ஸ்ரீ போதும்டா, ஓடி ஓடி என்னால முடியல” தியா அலுத்துக் கொள்ள 
“இன்னும் ஓலே ஒழு லவுந்த்” {இன்னும் ஒரே ஒரு ரவுண்ட்} என்றவன் வீட்டு முற்றத்தில் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தான். 
கால் வலிக்கவே முழங்காலில் கைகளை வைத்து முன் புறம் குனிந்து தியா மூச்சு விட ஸ்ரீராமுக்கு அந்த விபரீத ஆசை தோன்றியதோ! கேட்டை தாண்டி இருக்கும் பாதையின் சரிவில் சைக்கிளை வேகமாக ஓட்டலானான். 
ஒரு நாளுமில்லாமல் அவன் செய்த செயலில் அதிர்ச்சியாக அவனை பார்த்திருந்த தியாவுக்கு அவனை பிடிக்கணும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் மூளை மரத்து விட சில நொடிகள் இருந்தவள் அதிர்ச்சி விலகி அவன் பின்னால் ஓட அவள் கண்டது தூரத்தில் வரும் காரையே! 
காரும் வேகமாக வர ஸ்ரீராம் சைக்கிளின் மிதியின் மேல் கால்களை வைக்காமல் காலை அகற்றியவாறு சரிவில் சறுக்கிச் செல்ல தியா அவன் பின்னால் ஓடலானாள். 
காரை ஒட்டிக் கொண்டிருந்த பிரதீபன் குழந்தை சைக்கிளில் சறுக்குவதை கண்டு பிரேக் பிடித்தாலும் அடிபடுவது உறுதி என்று புரிய வண்டியை இடது புறம் திருப்ப அங்கே இருந்த கல்லில் மோதி வண்டி பெரிய சத்தத்தோடு நின்றது. 
சீட் பெல்ட் போட்டிருந்ததால் அடிபடாமல் தப்பிய ப்ரதீபனுக்கு குழந்தையின் பின்னால் ஓடிவந்த அன்னையின் மேலையே! கோபம் அதிகமானது. வண்டியை விட்டு இறங்கியவன் கோபமாக தியாவை அடைய அவளோ ஸ்ரீராமுக்கு அடிபட்டதா என்று ஆராச்சி செய்து கொண்டிருந்தாள். 
அந்த சின்ன கண்ணனோ லாவகமாக சைக்கிளை நிறுத்தினாலும் கார் கல்லில் மோதியதில் அதிர்ச்சியடைந்து, காரை பாத்திருக்க, தியா அவனை ஆராய்வதை கண்டு கொள்ளவில்லை. 
ஏனோ அவனுக்கு அந்த நொடி தனது பெற்றோர் அவனை ஒதுக்கிய பொழுதுகள் கண்ணுக்குள் வர “ஏய் அறிவில்லை. குழந்தையை பெத்து போட்டா மட்டும் பத்தாது, கண்ணும் கருத்துமா பாத்துக்கணும், பாத்துக்க முடியலைன்னா பெத்துக்காம இருக்கணும்” பிரதீபன் தியாவை திடிரென்று தூற்ற ஆரம்பிக்க, அவனை திகைத்து விழித்தவள், 
“ஸ்ரீக்கு அடி ஏதும் படல” ஏதோ பிரதீபன் குழந்தையின் மீது அக்கறையாக பேசுவதாக எண்ணிய தியா புன்னகை முகமாகவே அவனை சமாதானப் படுத்த, 
“ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கா? ஆளும் ட்ரெஸ்சும். ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலயா? இல்ல ஆம்பளைங்கள மயக்கவென்றே இப்படி உடுத்துறியா?” கொஞ்சமேனும் மரியாதையில்லாமல், பெண்ணென்றும் பாராமல் ப்ரதீபனின் வார்த்தைகள் என்றும் போல் தடிக்க, 
அவன் என்ன சொல்கின்றான் என்று புரியாமல் முழித்த தியா, ஸ்ரீராமுக்கு தான் அன்னையென்று சொன்னதை விட்டு விட்டு தான் அணிந்திருக்கும் ஆடையை பார்க்க என்றும் போல் பாவாடையும் ஒரு பிளவ்ஸும், குளிருக்கும், அழகை மறைக்கவும் சேர்த்து ஒரு ஷால் போட்டிருந்தாள். இதில் என்ன தவறு என்று அவனையே பாவமாக ஏறிட 
அவளை முறைத்து பார்த்தவன் திரும்பி வண்டியை பார்க்க கல்லில் மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. 
“ஐயோ அங்கிள் வந்திக்கு உவ்வா வந்திருச்சா?” கண்களை விரித்து கையின் எல்லா விரல்களையும் விரித்து வாயில் வைத்தவாறே என்னபாவம் என்று கண்டு கொள்ள முடியாத முகத்தோடு ஸ்ரீராம் கேக்க 
மழலையின் குரலில் அவனை குனிந்து பார்த்த பிரதீபன் குட்டி ரிஷியே அங்கே இருக்க, கண்களை அகல விரித்தவன் குழந்தையின் உயரத்துக்கு குனிந்து அவனை தூக்கிக் கொள்ள 
“ஹலோ சார் ஸ்ரீய விடுங்க” தியா கோபமாக அவன் புறம் அடியெடுத்து வைக்க அவளின் கை தன் மீது பட்டு விடக் கூடாதென்பதில் கவனமாக இரண்டடி பின்னாடி வைத்த பிரதீபன் 
“அங்கேயே! நில்லு குழந்தையை தூக்குற சாக்குல கொஞ்சமாலும் என் மேல உரச நினைக்காத” கர்ஜனை குரலில் கூற பின்னாடி அடியெடுத்து வைத்தவாறே அரண்டு போய் அவனை பார்த்தாள் தியா. 
ப்ரதீபனின் சிந்தனையெல்லாம் “இந்த ரிஷி இவளை எப்போ பாத்தான், புள்ளய வேற கொடுத்து இருக்கான். அவனுக்கேண்ணே வந்து சிக்குதுங்க கழுதைங்க, இவளும் இவ மூஞ்சியும்” அவளை வெறுப்பாக பார்த்தவன் 
அன்பொழுக ஸ்ரீராமை ஏறிட்டவாறே “லிட்டில் பாய் உன் பேரென்ன” 
“சி ..லாம்” முத்து பற்களை காட்டியவன் பெயரை சொல்ல ப்ரதீபனுக்கு ஒன்னும் புரியவில்லை. 
“ஹாஹாஹா ஸ்ரீராம்” தியா சத்தமாக சிரித்தவாறே சொல்ல மீண்டும் அவளை முறைத்த பிரதீபன் 
“இங்க சுந்தரியம்மா வீடு எங்க இருக்கு உனக்கு தெரியுமா?” ஸ்ரீராமிடமே கேட்டான் பிரதீபன்.
“என் பாட்டி தான் அந்த வளைவை தாண்டினா வீடு” தியா வீடு இருக்கும் திசையை கைகாட்டி சொல்ல அவளை பொருட்படுத்தாது  ஸ்ரீராமையும் தூக்கிக் கொண்டு நடந்தான் பிரதீபன். 
புதிதாக தேயிலை தோட்டம் வாங்கி இருந்தான் பிரதீபன். சுந்தரி பாட்டியின் தோட்டத்தை தூரத்திலிருந்து கவனித்தவன் அதையும் வாங்கிவிடும் ஆவலில் அவரை சந்தித்து பேசலாம் என்று வீட்டை தேடி வந்து கொண்டிருக்கும் பொழுதுதான் ஸ்ரீராமை கண்டான். 
 ஸ்ரீராம் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு பிரதீபன் மலையேற 
“சார் எதுக்கு நீங்க என் பாட்டியை பார்க்கணும்னு  சொல்லுறீங்க” தியா சந்தேகமாகவே ப்ரதீபனை ஏறிட்டாள்.
அவளுக்கு அதை தெரிந்துகொள்ளவில்லையானால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது. கடந்த ஆறுமாதமாக பாட்டி அவளின் கல்யாணத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார். அவள் எவ்வளவு சண்டை போட்டு பார்த்தாலும் மசியாதவர் சொல்லாமல் கொள்ளாமல் மாப்பிளையை வீட்டுக்கு வர வைத்து விட்டாரோ என்று அவனை கேள்வி கேக்க, அவனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை.     
சுற்றுப்புற சூழலை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு சுந்தரிப் பாட்டியை எவ்வாறு சம்மதிக்க வைப்பதென்று யோசனை வேறு மண்டைக்குள் மத்தாப்பு வெடிக்க, ஸ்ரீராமிடமும் தன்மையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 
“சரியான முசடா இருக்கான்” தியாவும் ப்ரதீபனை முறைத்தவாறே பின்னால் வந்தவள் அவன் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டிருப்பதால் அவன் மீது சந்தேகம் தீராமல் வாசலில் இருந்தே உள்ளே குரல் கொடுக்கலானாள்.
“பாட்டி, பாட்டி உங்கள தேடிகிட்டு யாரோ வந்திருக்குறாரு” 
“வாயப் பாரு, கழுத்தை மாதிரி கத்திக் கிட்டு” தியாவின் புறம் திரும்பாமலே! பிரதீபன் முணுமுணுக்க உள்ளே இருந்து வந்தது கயல்விழி. 
“என்ன திவ்யா பாட்டி குளிக்குறாங்க” தனது நீண்ட முடியை கொண்டை போட்டவாறே வந்தவள் அங்கே ப்ரதீபனை கண்டு ஸ்தம்பித்து நின்று விட ப்ரதீபனும் இங்கே கயல்விழியை எதிர்பார்க்காததால் வாய் “குட்டிமா” என்று தானாக முணுமுணுக்க திகைத்து நின்று விட்டான். 
ப்ரதீபனின் முகத்தில் கலவையான உணர்ச்சிகள் வந்து போக கயல்விழியின் முகம் இருண்டு வெளுத்துப் போனது. ஸ்ரீராம் அன்னையை கண்டு ப்ரதீபனின் கைகளில் இருந்து இறங்கி ஓட பிரதீபன் உள்ளே சென்றான். அவன் பின்னால் வந்த திவ்யா சுந்தரிப்பாட்டியை அழைக்கவென உள்ளே செல்ல ஸ்ரீராம் அன்னையிடம் வந்து கார் கல்லில் மோதிய கதையை சொல்ல ஆரம்பிக்க அவனை தூக்கிக் கொண்ட கயல்விழி ப்ரதீபனை உக்காருமாறு சொல்ல வாயை திறக்க முன் அவள் அருகில் நின்றிருந்தான் பிரதீபன்.  
“என்ன கயல் எப்படி இருக்க? ஏன் என் கிட்ட கூட சொல்லாம இப்படி தனியா இங்க வந்து இருக்க? யாரிவங்க? நம்ம சொந்தமில்லையே! பையன் பொறந்திருக்கான். தகவல் சொல்லணும் எங்குற எண்ணம் கூட இல்லாம இப்படி தனியா வந்து கஷ்டப்படணுமா?” அவளின் வெகு அருகில் நின்று ஸ்ரீராமின் தலையை தடவியவாறே! கனிவான குரலில் அவன் கேள்விகளை அடுக்க, கயல்விழி என்ன பதில் சொல்வதென்று  முழிக்கலானாள். 
பிரதீபன் என்னமோ அவளோடு நீண்ட காலமாக நல்ல உறவில் இருந்தவன் போல் பேச தான் காண்பது கனவோ என்று கல்விழி அவனின் முகத்தையே பாத்திருக்க 
“என்ன கயல் என்ன யோசிக்கிற?” 
“அவர்… அவங்க…. எப்படி இருக்கிறாரு?” தயங்கி தயங்கி ப்ரதீபனின் முகத்தை பார்த்தவாறே கேட்டுவிட 
அவள் ரிஷியை பற்றித்தான் கேக்கின்றாள் என்று புரிந்துக் கொண்டவன் முகம் இறுக “ரிஷி இல்ல…. கயல் செத்துட்டான்” பிரதீபன் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தவாறே சொல்ல 
அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு சில கணங்கள் பிடிக்க, மலங்க மலங்க விழித்தவள் 
“பொய் தானே சொல்லுறீங்க?” கண்களில் நீரை நிறைத்து, தொண்டை கமர உதடு கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவாறே மீண்டும் கேக்க 
அவளையே அன்பொழுக பாத்திருந்தவன் பதில் சொல்லாது மௌனம் காக்க
அவன் பார்வையில் இருந்த அர்த்தம் கண்டு கயல்விழியின் இதயம் நின்று துடித்தது. கயல்விழியால் நம்பவே! முடியவில்லை. செத்துட்டானா? உண்மையிலயே! செத்துட்டானா? கால்கள் பலமிழக்க தரையில் சரிந்தாள் கயல்விழி. அவளோடு சேர்ந்து ஸ்ரீராமும் விழ குழந்தையை தாங்கிப் பிடித்திருந்தான் பிரதீபன். 
கயல்விழி காணாமல் போய் விட்டாள் என்றதிலிருந்து அவளை ரிஷியுடன் தேடியவன் தான். ரிஷி இறந்து விட்ட செய்தி வந்த பின் அவனின் காரியங்களோடு ப்ரதீபனின் பலமும் வடிந்து விட்டது. ஏனோ தானோ என்று இருந்தவன் கயல் விழியை தேடுவதை நிறுத்தவில்லை. 
இலங்கைக்கும் அவள் செல்லவில்லை. அவளுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதா? அல்லது  பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஏதாவதொரு கும்பலிடம் மாட்டிக் கொண்டாளா? இறந்து விட்டாளா?  இந்த நொடி வரை எல்லா கோணங்களிலும் விசாரிக்க சம்பாதித்த   அனைத்தையும் கரைத்துக் கொண்டு தான் இருந்தான். 
அவளுடைய ஒரு புகைப்படமாவது இல்லாத நிலையில் அவளை தேடுவதும் கடினமாக இருக்க, இலங்கையில் அவளது புகைப்படம் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால் வெள்ளத்தில் இருந்த புகைப்படங்களும் அழிந்திருந்தன. ஆகா மொத்தத்தில் கயல்விழியை தேடித் கண்டு பிடிப்பது ப்ரதீபனுக்கு குதிரைக்கு கொம்பாகவே இருந்தது.    
எல்லாவற்றுக்கும் நேரம் காலம் கூடி வரவேண்டும் என்பதை போல் தேயிலை தோட்டத்தை பார்வையிட வந்த இடத்தில் கயல்விழியை கண்டெடுத்தான். அவளிடம் உண்மையை மறைக்க இயலாது, மறைத்து எந்த பிரயோஜனமும் இல்லை. வந்தது வரட்டும் என்று தான் அவன் அறிந்த உண்மையை கூறினான். 
ரிஷிக்காக அவள் அழுது கரைவாள் என்று தான் அவன் எதிர் பார்க்கவில்லை. அவளை தேற்றுவது எப்படி என்று அவன் யோசிக்க,  
“கயல் கயல்” என்று கயல்விழியை தேடியவாறே முன் அறையில் இருந்து திலகா வர, திலகாவை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தான் பிரதீபன்.    

Advertisement