Advertisement

ராம் வீட்டில் இருப்பது தெரிந்தது. மெதுவாக உள்ளே சென்றான். அங்கே ராமின் நிலையோ படுமோசமாக இருந்தது. அவனுடைய அன்னை அவனை சாப்பிட அழைக்க, “போமா, உனக்கு வேற வேலையே இல்லை”, என்று எரிந்து விழுந்தான்.
“இவன் கோபமே பட மாட்டானே,. இப்ப இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று நினைத்த மகேந்திரனுக்கு அவனுடைய உடல் மெலிவு சிறு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“இவன் என்ன இவ்வளவு மெலிஞ்சு போய் இருக்கான்? கீர்த்தி பேச்சைக் கேட்டு இவனை பாக்காம இருந்தது தப்போ? இவனுக்கு என்ன பிரச்சனை இருக்கும்?”,என்று மகேந்திரன் எண்ணும் போதே ராம், மகேந்திரன் போட்டோவை எடுத்துப் பார்த்து கண்ணீர் வடித்தான்.
அதை பார்த்து புன்னகைத்த மகேந்திரன் “இவன் இவ்வளவு பாசக்கார பயபுள்ளையா இருப்பான்னு நினைக்கலையே”,என்று எண்ணிக் கொண்டான்.
“எனக்காக இப்படி உருகுறானா?”,என்று நினைத்து மெதுவாக ராம் அருகில் சென்றான்.
“என்னை மன்னிச்சிரு மச்சான்”, என்று போட்டோவைப் பார்த்து சொல்லி அழுது கொண்டிருந்தான் ராம்.
“எதுக்கு மன்னிப்பு?”, என்று ராமுக்கு கேட்குமாறு கேட்டான் மகேந்திரன்.
“அதுவா மச்சான்”, என்று சொல்ல ஆரம்பித்த ராம் அதிர்ந்து போய் தலையை திருப்பி திருப்பி பார்த்தான்.
“என்ன டா பாக்குற? நான் தான் மகேந்திரன். எதுக்கு நீ இப்படி ஆகிட்ட? என்ன மன்னிப்பு?”
“டேய் மச்சான், நீயா டா? நிஜமாவே நீ தானா டா?”
‘நான் தான், நானே தான். என்ன ஆச்சு? சொல்லு”
“உன் சாவைப் பத்தி தெரிஞ்சும் என்னால காப்பாத்த முடியாம போச்சே’
“என்னது? என் சாவைப் பத்தி தெரியுமா? அட பாவி ஏண்டா இப்படி செஞ்ச?”
“உனக்கு கீர்த்தி எதுவும் சொல்லலையா?”
“என்னது சொல்லணும்? கீர்த்தி இதுல எங்க வந்தா? என்ன டா உளறிட்டு இருக்க?”
“நீ முதல்ல மன்னிச்சிட்டேன்னு சொல்லு”
“நீ முதல்ல விஷயத்தை சொல்லு டா பரதேசி”
“அன்னைக்கு கீர்த்தியை உன் வீட்ல இருந்து விரட்டி, கட்டி வைக்க ஒரு சாமியார் கிட்ட சொன்னேன்”
“இது என்ன புதுக்கதை?”, என்பதாய் அவனைப் பார்த்தவன் “அடேய் எதுக்கு டா இப்படி செஞ்ச?”, என்று கேட்டான்.
“நீ நைட் முழுக்க அந்த பேய் கூட பேசிட்டு இருந்தியா? உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான்”
“உன் பாசத்துல இடி விழ? என்ன டா பண்ணி தொலைச்ச?”
“சொல்றேன் மச்சான், அவளை அந்த சாமியார் கட்டி வச்சார். அப்ப தான் மகிக்கு ஆபத்து. நான் போகணும். அவனை காப்பாத்தணும்னு சொன்னா. நான் தான் அவ பொய் சொல்றானு சொல்லி கட்டி வைக்க சொன்னேன். அன்னைக்கு என் மகி செத்துட்டான்னு அவ  கதறி கதறி அழுதப்ப எனக்கு ஈரக்கொலையே அந்துட்டு டா. எதுக்கு இப்படி செஞ்சீங்கன்னு என்னை திட்டி அழுதா டா. அப்புறம் தான் என் தப்பே எனக்கு புரிஞ்சது”
“அப்ப கீர்த்தி எனக்கு ஆபத்துன்னு சொல்லியும் ஏண்டா இப்படி செஞ்ச? சரி விடு. என் விதி முடிஞ்சா நான் போய் தான் ஆகணும். ஆக்ஸிடெண்ட் ஆகும்னு நாம என்ன கனவா கண்டோம்?” 
“அது தான் இல்லை மச்சி. நாம நினைக்காததெல்லாம் நடந்துருச்சு. அவ இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை”
“எதுக்கு டா கீர்த்தியை திட்டுற? அவ என்னை காப்பாத்த தான பாத்தா?”
“அவளை சொல்லலை டா. அந்த வினோதினி நாயைச் சொல்றேன். அநியாயமா உன்னை கொன்னுட்டாளே”
“என்னது?”
“ஆமா டா உன்னை போலி ரிப்போர்ட் கொடுக்க சொன்னது அவ தான். நீ கொடுக்கலைன்னதும் உன்னை முடிச்சதும் அவ தான். அது வினோதினியோட அண்ணன் பேக்டரி தான். அது கீர்த்திக்கும் தெரியும். கீர்த்தி அந்த வினோதினியை சும்மா விடுவாளா? சாகடிச்சிட்டாளே? அடுத்த நாள் பேப்பர்ல பாத்து தெரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும் நான் நினைச்சிருந்தா உன்னை காப்பாத்திருக்கலாமோன்னு எனக்கு மனசு கிடந்து அடிக்குது டா”, என்று முடித்தான் ராம்.
அனைத்தையும் கேட்ட மகேந்திரன் இடிந்து போனான். தன்னுடைய வாழ்வில் இப்படி எல்லாம் நடந்திருக்கும் என்று அவன் நினைத்து கூட பார்த்ததில்லை. 
அவனுக்காகவும் சேர்த்து தான் கீர்த்தி பழி வாங்கிச் சென்றாளா?
அவளுக்காக இவன் என்ன செய்திருக்கிறான்? செத்து ஆவியாக அலையும் போதும் அவள் காதலை நிரூபித்து விட்டு சென்று விட்டாள்.
இத்தனை நாள் அவள் வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் இப்போது அவளுடன் வாழ்ந்தே ஆக வேண்டும், என்ற மனவுறுதி வந்தது.
கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைத்தவன் “நீ எதை நினைச்சும் கவலைப் படாத ராம். நான் செத்த பிறகு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கீர்த்தி என் வாழ்க்கையே அழகாக மாத்திட்டா. நீ வேணும்னு எதுவும் செய்யலை. விதியை நீ நினைச்சிருந்தாலும் மாத்திருக்க முடியாது. ஒழுங்கா சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடும்பமா ஆக பாரு. நான் இந்த உலகத்தில் இருந்து போறேன். இனி வரவே மாட்டான்”, என்றான்.
“என்னை மன்னிச்சிரு டா. கீர்த்தி கிட்டயும் மன்னிப்பு கேட்டேனு சொல்லு”
“கீர்த்தி ஆயுள் முடிஞ்சிருச்சு டா. அவளை இனி நானே நினைச்சாலும் பாக்க முடியாது. ஆனால் கட்டாயம் அவளுடன் ஒரு வாழ்க்கையை வாழ்வேன் டா. நான் கிளம்புறேன்”,என்று சொல்லி விட்டு மறைந்தான்.
அவன் போனது தெரியாமல் “மச்சான் மச்சான்”, என்று அழுத ராம் முகம் முன்பு விட சிறிது தெளிந்திருந்தது.
கண்களை துடைத்து விட்டு வெளியே வந்தவன் “அம்மா சாப்பாடு தாயேன்”, என்றான்.
அவன் மாற்றத்தில் அவன் வீட்டினரும் மகிழ்ந்தார்கள்.
அதே நேரம் கடவுள் முன்பு நின்று ரஜினி எமனைப் பார்த்து முறைப்பது போல முறைத்துக் கொண்டிருந்தான் மகேந்திரன்.
அவனைப் பார்த்து புன்னகைத்த கடவுளைப் பார்த்து முறைத்தவன் “எனக்கு நீ என்ன நல்லது செஞ்சிருக்க? அம்மா அப்பா கூட வாழ கொடுத்து வைக்கல. வேற நல்ல சொந்தமும் இல்லை. இது வரைக்கும் அது இல்லை இது இல்லைன்னு நான் உன்கிட்ட கேட்டேனா? செத்து ஆவியா அலைஞ்சவளை என் வாழ்கையில் கொண்டு வந்து, அவ மேல ஆசை வச்சு, கடைசில என்னையும் கொன்னு அவளை என் வாழ்க்கைல இருந்தும் பிரிச்சு எதுக்கு இப்படி செஞ்ச?”, என்று கேட்டான்.
“அதெல்லாம் விதி மகனே”, என்றார் கடவுள்.
“அந்த விதியை எழுதினது நீ தான? அப்ப என்னோடதை மட்டும் எதுக்கு இப்படி எழுதுன?”
“இப்ப உனக்கு என்ன தான் வேண்டும்?”
“எனக்கு என் கீர்த்தி வேணும்”
“சரி அவள் சொர்க்கத்தில் இருப்பாள். நீயும் அங்கு செல். உன் பாவக்கணக்கை நான் கிழித்து போடுகிறேன். உனக்காக சொர்க்கத்தையே கொடுக்கிறேன்”
“என்ன நக்கலா? நீ சொன்னாலும் சொல்லாமல் போனாலும் எனக்கு சொர்க்கத்துல இடம் உண்டு. ஆனா எனக்கு இன்னொரு வாழ்க்கை வேணும். அதுல நான் கீர்த்தி கூட ரொம்ப இல்ல ஒரு ஏழுவது வருஷம் வாழணும்”
“என்னது எழுவது வருஷமா?”
“ஆமா”
“அதெல்லாம் நீ ஒருவன் மட்டும் கேட்டால் கிடைக்காது மகனே. அந்த பெண்ணும் விரும்ப வேண்டும்”
“அவளுக்கும் ஆசை இருக்கும். நீங்க அவளை கூப்பிடுங்க. அவ கிட்ட கேளுங்க”
அடுத்த நிமிடம் கீர்த்தி அங்கே வரவழைக்க பட்டாள். அவனைப் பார்த்ததும் சுற்றி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கவலைப் படாமல் அவனை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள். அவனும் அவளை விட்டு நீங்க கூடாது என்பது போல அவளை அணைத்துக் கொண்டான். 
“எனக்காக தான் வினோதினியை கொன்னியா டி?”, என்று மகி கேட்டதும் “ராம் அண்ணா சொன்னாங்களா?”, என்று கேட்டாள் கீர்த்தி. “ஐ லவ் யு கீர்த்தி”, என்றான் மகி. அதைக் கேட்டு மலர்ந்தாள் கீர்த்தி.
அவர்கள் கவனத்தை மாற்றி தன்னை பார்க்க வைத்த கடவுள் “சரி சரி உங்க ஆயுள் காலத்தை உங்களுக்கு தருகிறேன். முறைக்காதப்பா எழுபது வருசத்தை தான் சொன்னேன். ஆனா இந்த பிறவியில் நடந்தது எல்லாம் இப்போது உங்களுக்கு மறந்து விடும். கீர்த்தி பிறந்த வீட்டிலே நீங்கள் வாழ்வீர்கள் போதுமா?”, என்றார்.
“போதாது”, என்றாள் கீர்த்தி.
“உனக்கு என்ன மா?”, என்று சலித்துக் கொண்ட கடவுள் “இவங்களை மேய்க்கிறதும் சட்ட சபைல உள்ள ஆள்களை மேய்க்கிறதும் ஒண்ணு தான்”, என்று எண்ணிக் கொண்டார்.
“எனக்கு கிரியும் எங்க கூட வாழ வரணும்”, என்று கீர்த்தி சொன்னதும் அவளை முறைத்தான் மகேந்திரன்.
“சரிம்மா, அவனையும் அனுப்புறேன். மூணு பேரும் சண்டை சச்சரவோடு வாழுங்க”
“சாமி”, என்று இருவரும் கத்தினார்கள்.
“வார்த்தை குளரி விட்டது பிள்ளைகளே, சண்டை சச்சரவில்லாமல் ஆனந்தமாக வாழுங்கள்”, என்று ஆசி வழங்கினார்.
அது போல் சில யுகங்கள் கழித்து கீர்த்தி வாழ்ந்த அதே வீட்டில் மகேந்திரனும் கிரியும் அண்ணன் தம்பிகளாய் பிறந்தார்கள். அவர்களுக்கு முறைப்பெண்ணாய் கீர்த்தியும் பிறந்தாள். 
இவர்களின் காதல் தொடரும்… கதை முற்றும்!!!
வெரி வெரி சாரி இந்த மொக்கை கதை கொடுத்ததுக்கு. எழுத ஆரம்பிக்கும் போது தோனுனது ஒண்ணு. முடிக்கும் போது மொத்தமா சொதப்பிருச்சு. ஆனா முடிஞ்சது எனக்கே சந்தோஷமா இருக்கு. அடுத்த கதை உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பிரண்ட்ஸ்… 

Advertisement