Advertisement

அத்தியாயம் 8
அழகான பார்வையால்
காதல் கணைகளை
என் இதயத்தில்
வீசும் உன்னை
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அவளுடைய ஊருக்கு சென்றதும் “கீர்த்தி முதல்ல உன்னைப் பத்தி தப்பா பேசினவங்களை பழி வாங்கலாம்”, என்று சொன்ன மகேந்திரன் அவளை என்னவெல்லாம் பேசினார்கள் என்று விசாரித்தான். 
யார் யார் என்ன பேசினார்கள் என்று நினைத்து பார்த்த கீர்த்திக்கு மனம் வலித்தது. “ஏன் எனக்கு மட்டும் மத்த பொண்ணுங்களுக்கு அமையுற மாதிரி சாதாரண வாழ்க்கை அமையலை”, என்று நினைத்து தவித்து போனாள்.
அவள் மனநிலை உணர்ந்து அதை மாற்றிய மகேந்திரன் அவளை அழைத்துக் கொண்டு அந்த டீக்கடைக்காரனை தான் முதலில் பார்க்க சென்றான்.
ஆனால் அங்கே சென்ற பிறகு அவர்கள் பார்த்த விஷயம் சிறு வியப்பைத் தந்தது.
நெஞ்சில் இருந்து வயிறு வரைக்கும் வெந்திருக்க, புண் ஆறும் தருவாயில் இருந்தது.
ஆனால் அவன் உதடுகளோ “என்னை மன்னிச்சிரு கடவுளே, தெரியாம ஒரு நல்ல பொண்ணைப் பத்தி தப்பா பேசிட்டேன்”, என்று புலம்பிக் கொண்டிருந்தது.
“என்ன மகி இவன் திடீர்னு திருந்திட்டான்?”, என்று கீர்த்தி கேட்டதும் “எனக்கும் அந்த சந்தேகம் தான்”, என்றான் மகேந்திரன்.
அப்போது அவனை அவன் சொந்தக்காரர் பார்க்க வந்திருந்தார். “ஏப்பா, எத்தனை வருஷமா டீ போடுற? பாத்து வேலை செஞ்சிருக்கலாம்ல?”,என்று கேட்டார் அவர்.
“அட போண்ணே, அப்படி கவனம் இல்லாமலா இருப்பேன்? இது வேற?”
“என்ன டா?”
“நான் செஞ்ச பாவத்துக்கு தண்டனை தான்”
“அப்படி என்ன பாவம் டா செஞ்ச?”
“ஒரு உத்தமமான பொண்ணைப் பத்தி தப்பா பேசிட்டேன். அதுக்கு தான் தண்டனை”
“யாரை பத்தி பேசுன?”
“நம்ம பெரிய வீட்டுக்காரர் மகளைப் பத்தி தெரியாம தப்பா பேசிட்டேன்”
“யாரு? இப்ப கூட தற்கொலை பண்ணி செத்து போச்சே? அந்த பொண்ணா?”
“ஆமாண்ணே, அந்த பொண்ணு குனிஞ்ச தலை நிமிராது, அவ்வளவு அடக்கமா இருக்கும். அது செத்த அன்னைக்கு அது தப்பான பொண்ணுன்னு நானே பேசிட்டேன். ஆனா அன்னைக்கு அவ உருவம் என் கண்ணுக்கு தெரிஞ்சதுண்ணே”
“என்ன பா சொல்ற?”
“ஆமாண்ணே, அன்னைக்கு நான் அவளோட ஆவியைப் பாத்தேன். என்னைப் பாத்து இப்படி சொல்லிட்டீயேன்னு கேள்வி கேக்குற மாதிரி என்னைப் பாத்துட்டே தான் பாலை என் மேல தள்ளி விட்டா”
“கனவு கண்டு உளராத டா. பேய், பிசாசு எல்லாம் ஒண்ணுமே கிடையாது”
“நீ நம்பலைன்னா போண்ணே. நான் சொல்றது தான் உண்மை. அவ தப்பான பொண்ணு கிடையாது. அப்படின்னா அவ கேவலமா நடந்துகிட்டு இருக்க மாட்டா. அப்புறம் எப்படி தற்கொலை செஞ்சிருக்க முடியும்? எனக்கு என்னமோ அவளை கொலை தான் செஞ்சிருப்பாங்கன்னு தோணுது. நீ வேணா பாருண்ணே, அந்த ஆவி அவங்களை சும்மா விடாது. அப்ப என் பேச்சை நம்புவ”
“சரி விடு டா, நமக்கு எதுக்கு பெரிய வீட்டு விவகாரம்? நீ சீக்கிரம் உடம்ப தேத்திக்கிட்டு கடையை திறக்குற வழியைப் பாரு”,என்று சொல்லி விட்டு சென்றவர் எதிரில் பார்த்த தனக்கு தெரிந்தவரிடம் “கதையைக் கேட்டியாப்பா, அந்த கீர்த்தி பொண்ணு பேயா வந்து தான் டீக்கடைக்காரன் மேல பாலைக் கொட்டிருக்கு”,என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.
“வதந்தி இப்படி தான் பரவுது போல கீர்த்தி. நம்ம வேலை இன்னும் கொஞ்சம் ஈஸியா ஆகிருச்சு? அடுத்து எந்த பொம்பளை உன்னைப் பத்தி தப்பா பேசுச்சு?”, என்று கேட்டான் மகேந்திரன்.
ஒரு வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் காண்பித்த கீர்த்தி, “இவ தான் பேசினா”, என்று சொன்னாள்.
“அவ கிட்ட உன் வேலையை காட்டு”, என்று மகேந்திரன் சொன்னதும் அந்த பெண் எதிரே போய் நின்றாள் கீர்த்தி.
அந்த பெண் நிமிர்ந்து பார்த்து அங்கே கீர்த்தியைக் கண்டு “பேய் பேய்”, என்று கத்தினாள்.
“ஐயையோ இந்த பொம்பளை அவ கிட்டயே பேய் பேய்ன்னு கத்துதே. இந்த கீர்த்து பயந்து ஓடாம இருக்கணும்”, என்று மகேந்திரன் எண்ணும் போதே அந்த பெண்ணின் கழுத்தை நெரித்திருந்தாள் கீர்த்தி.
“என்னை காப்பாத்துங்க”,என்று திக்கி திணறி கத்தினாள் அந்த பெண்.
“நான் உன் கண்ணுக்கு தெரியுறேனா?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“ஆமா என்னை மன்னிச்சிரு பாப்பா, நான் தெரியாம பேசிட்டேன்”
“தெரியாமன்னா என்ன வேணும்னாலும் பேசுவியா? உன் மகளைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசுவியா?அடுத்த வீட்டு பொண்ணுன்னா உனக்கு இளக்காரமா? நான் கண்டவன் கூட போனதை நீ பாத்தியா டி? நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன்? உன்னை நான் பாத்தது கூட கிடையாது. ஆனா நீ என்னை கேவலமா பேசுற? உன்னை உயிரோடே விடக் கூடாது”, என்று சொல்லி அங்கிருந்த சுவரில் அவள் தலையை முட்ட வைத்தாள். 
அந்த பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் வந்தது. “இனி இப்படி செய்ய மாட்டேன் என்னை விட்டுரு”, என்று கதறி அழுதாள் அவள்.
அவளை கொல்ல மனதில்லை என்றாலும் அவளை காய படுத்த எண்ணிய கீர்த்தி அவளை அடித்து துவைத்து விட்டாள்.
பின் சிறுது நேரம் கழித்து அவளை விட்டதும், அழுது கொண்டே இருந்தாள் அந்த பெண்.
“உன் குடும்பத்துக்காக உன்னை விட்டுட்டு போறேன். சரி இப்ப எப்படி அடி பட்டுச்சுன்னு யாராவது கேட்டா என்ன சொல்லுவ?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“நான் கீழ விழுந்துட்டேன்னு சொல்லிக்கிறேன், உன்னைப் பத்தி எல்லாம் சொல்ல மாட்டேன் கீர்த்தி”
“சொல்ல மாட்டியா? சொல்லணும். நான் தப்பா பேசினதுனால கீர்த்தி தான் பேயா வந்து என்னை அடிக்கிறான்னு சொல்லணும்”, என்று சொல்லி அவளை மிரட்டினாள் கீர்த்தி. 
இன்னும் யாரெல்லாம் தவறாக பேசினார்களோ அவர்கள் அனைவரையும் தண்டித்தாள் கீர்த்தி. அவளைப் பற்றி தவறாக பேசியவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தாள் கீர்த்தி. அவளைப் பார்த்து பயந்து நடுங்கி ஊர் முழுக்க பரப்பினார்கள்.
“கீர்த்தி பேயா வந்துட்டா”, என்று ஊர் முழுவதும் பேச்சு பரவியது.
மூர்த்தி காதுக்கும் இது எட்டியது. அதனால் அவன் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தான்.
அவனை வெளியே வர வைக்க என்ன செய்ய என்று யோசித்தார்கள்.
அப்போது ராம் பார்த்த சாமியார் நினைவில் வந்தார். மகேந்திரனும் கீர்த்தியும் அங்கு சென்றார்கள்.
ஆவி உருவில் அவர்களை கண்ட சாமியார் மகேந்திரன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வில் இருந்தார்.
அதனால் இவர்களுக்கு எந்த உதவி செய்யவும் ஆவலாக இருந்தார். நடந்த கதை அனைத்தையும் அவரிடம் உரைத்த கீர்த்தி அவள் வீட்டை சுற்றி இருக்கும் மந்திர கட்டை அகற்ற சொன்னாள்.
அவரும் அதை செய்ததும் சந்தோசத்துடன் அங்கிருந்து கீர்த்தி வீட்டுக்குள் சென்றார்கள். மொத்த குடும்பமே அவளைப் பார்த்து நடுங்கியது.
“மகி, இவங்க எல்லாரையும் அடி”, என்று சொன்னதும் அவர்களை அடி பின்னி விட்டான் மகேந்திரன்.
முடிவில் மாடியில் இருந்து மூர்த்தியை கீழே தள்ளி விட்டார்கள். அவன் உயிர் பிரிந்து விட்டது.
வள்ளியை தூக்கு போட வைத்தார்கள். அவளும் செத்து விட்டாள்.
சித்தப்பா பிள்ளைகளைக் காட்டி “இவங்களை என்ன செய்யலாம் கீர்த்தி?”,என்று கேட்டான் மகேந்திரன்.
“எப்படி இருந்தாலும் அவங்க எனக்கு தம்பி தங்கச்சி தான் மகி. அவங்களை விட்டுறலாம்”, என்று சொன்ன கீர்த்தி அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
அவர்களும் அந்த வீட்டில் இருந்து அடுத்த நொடி தப்பித்து சென்றார்கள்.
அநாதை பொணமாக கிடந்த மூர்த்தி மற்றும் வள்ளியை ஊர்மக்கள் வேறு வழியில்லாமல் அடக்கம் செய்தார்கள். அது மட்டுமல்லாமல் கீர்த்தி வீட்டின் முன்பு இருந்த ஒரு மரத்தின் அடியில் ஒரு கல்லை நட்டி “இந்த ஊரை நீ தான் காக்கணும் தாயி”, என்று சொல்லி கீர்த்தியை வழி பட்டார்கள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி மனது அமைதி அடைந்தது. தப்பா பேசின அதே ஊர் அவளை தெய்வமாக வணங்க ஆரம்பித்தது.
“பார் டா, சாமியா ஆகிட்ட?”, என்று நக்கல் அடித்த மகேந்திரன் “இப்ப உனக்கு சந்தோஷமா கீர்த்தி?”, என்று கேட்டான். “ம்‌ம் ஆமா”, என்று பதில் சொல்லி புன்னகைத்தாள் கீர்த்தி.
“இன்னொரு வேலை இருக்கு மகி”
“என்ன வேலை”
“நாம இப்ப கிரியை கூப்பிடணும்?”
அவள் சொன்னதைக் கேட்டு எரிச்சல் ஆனவன் “இப்ப எதுக்கு டி அவனைப் பத்தி பேசுற?”, என்று கேட்டான்.
ஆனால் அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த கிரி “என்னை எதுக்கு கீர்த்தி செல்லம் கூப்பிட்ட?”, என்று கேட்டான்.
“உன் தம்பி ஆப்பரேசன் நாளைக்கு கூட வச்சிக்காலம் டா. நான் இன்னைக்கே பணம் கொடுக்குறேன்”, என்றாள் கீர்த்தி.
இது என்ன புதுக்கதை என்பதாய் இருவரையும் பார்த்தான் மகேந்திரன்.
“தேங்க்ஸ் கீர்த்தி, அவன் மட்டும் சரியானா போதும்”, என்று கண் கலங்கிய கிரி அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்ற பின் உண்மை அறிந்த மகேந்திரனும் கலங்கினான். “அடுத்து என்ன செய்ய போறோம் கீர்த்தி?”, என்று அவன் கேட்டதும் “நாம வக்கீல் சாரை பாக்கணும். வா”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.
இவர்கள் அவௌடைய கண்களுக்கு தெரிய வில்லை என்றாலும் கீர்த்தியின் குரல் கேட்டு பயந்து நடுங்கினார். பின் அவருடைய பயத்தைப் போக்கி விட்டு பேச ஆரம்பித்தாள்.
“எல்லா சொத்துக்களையும் தர்மத்துக்கு எழுதிக் கொடுத்துருங்க அங்கிள். கிரி வீட்டுக்கு பணம் கொடுக்கணும். அவனோட தம்பிக்கு ஆபரேஷன், அப்புறம் அவன் வீட்ல உள்ளவங்களுக்கும் ஏதாவது செய்யணும்”, என்று சொன்ன கீர்த்தி ஒரு இடத்தை அந்த வக்கீலுக்கும் கொடுக்க சம்மதம் சொன்னாள்.
“ரொம்ப சந்தோஷம் கீர்த்திமா. ஆனா உன் தம்பி தங்கை ஏதாவது வந்து பிரச்சனை பண்ணுனா என்ன பன்றது?”
“அவங்க அம்மா அப்பா செஞ்ச பாவத்துக்கு அவங்களுக்கு என்னால எந்த சொத்தையும் கொடுக்க முடியாது. அப்படி எல்லாம் அவங்க வர மாட்டாங்க. அங்க இருக்குறது எல்லாமே என்னோட சொத்துகள் தான். எங்க சித்தப்பாவோட சொத்துக்கள் எங்க இருக்கு? இருக்கா இல்லையா இது எதுவுமே தெரியாது. அதனால என் சொத்தைக் கேக்க அவங்களுக்கு உரிமை இல்லை. அப்படியும் வில்லங்கம் வரும்னு நினைச்சீங்கன்னா இப்பவே உயில் எழுதுங்க. நான் கையெழுத்து போடுறேன்”, என்று சொல்லி அவர் எழுதிக் கொடுத்ததும் கையெழுத்தைப் போட்டாள் கீர்த்தி.
பேனா தன்னால் எழுதுவதைக் கண்டு விழி விரித்தார் வக்கீல்.
“அப்புறம் அங்கிள் அந்த வீட்டை மட்டும் இப்ப எதுவும் செய்யாதீங்க. அப்படியே பூட்டிப் போட்டுருங்க. யாராவது விருப்ப பட்டு கேட்டா நீங்க அவங்களுக்கு கொடுங்க. அந்த பணத்தையும் தர்மத்துக்கே கொடுத்துருங்க அங்கிள்”, என்று அவள் சொன்னதும் “சரி மா”, என்று சொன்னார்.
“உங்களுக்கு வேற எதுவும் செய்யணுமா அங்கிள்?”
“எனக்கு என்ன குடும்பமா இருக்கு மா? எனக்கு நீ கொடுத்துருக்குற நிலத்தை நான் கிரின்னு நீ சொன்ன பையன் குடும்பத்துக்கு தான் கொடுக்க போறேன். எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று சொன்னதும் அவரை அழைத்துக் கொண்டு பணம் ஏற்பாடு செய்ய சென்றார்கள். 
பணம் தயார் ஆனதும் கிரியின் உறவினர்களை காண சென்றார் வக்கீல் விஸ்வநாதன். அவர் கூடவே தான் மகியும் கீர்த்தியும் சென்றார்கள். 
கிரியின் அம்மா யார் என்று விசாரித்து அவர்கள் கையில் ஆபரேசனுக்கான பணத்தையும் அவர்கள் குடும்ப தேவைக்கான பணத்தையும் அவர்கள் கையில் கொடுத்தார் வக்கீல்.
அங்கே அதை பார்த்துக் கொண்டிருந்த கிரி ஆவியின் கண்களில் கூட கண்ணீர் வடிந்தது. கீர்த்தியைப் பார்த்து கை கூப்பினான்.
அவன் அருகில் சென்று அவன் தோளைக் தட்டிக் கொடுத்தான் மகேந்திரன்.
கிரியின் அம்மாவோ “யார் பணம் கொடுத்தது?”, என்று விசாரித்து கொண்டிருந்தாள்.
“எங்க பாப்பா இந்த பணத்தை உங்க கிட்ட கொடுக்க சொல்லுச்சு. அவ இப்ப உயிரோட இல்லை. உங்க மூத்த மகனும் இப்ப இல்லைன்னு தெரியும். அவங்க ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கோங்க. முதல்ல ஆபரேசன் நல்ல படியா முடியட்டும்”, என்று சொல்லி அவர்கள் கையில் கொடுத்தார்.
“ஒரு மகனை இழந்துட்டேன். இவனையாவது கடவுள் காப்பாத்தணும். ரொம்ப நன்றிங்க ஐயா”, என்று அதை வாங்கி பணத்தை அறுவை சிகிச்சைக்காக கட்டினாள்.
அவனுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்ததும் கிரி கீர்த்தியையும் மகியையும் சந்தித்தான். 
“ரொம்ப நன்றி கீர்த்தி, நான் இனி சந்தோஷமா இந்த உலகத்தை விட்டு போவேன். நீ செஞ்சதுக்கு நன்றி கடனா, கடவுள் கிட்ட நீயும் மகியும் இன்னொரு ஜென்மத்துல பிறந்து சந்தோஷமா வாழணும்னு கேக்க போறேன்”, என்று சொன்னான்.
மகியை ஒரு பார்வை பார்த்த கீர்த்தி “நீ இப்படி அழுதா நல்லாவே இல்லை டா, டார்லிங்க்ன்னு எவ்வளவு சந்தோஷமா பேசுவ? அது தான் நல்லா இருக்கும். நாங்களும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவோம் கிரி. எங்களுக்கு மறுபடி பிறக்க வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா எனக்கு நண்பனா நீயும் வேணும் டா”, என்று சொன்னாள். அவள் கண்களும் கலங்கியது. 
கிரி செல்வது மனதுக்கு வருத்தமாக இருந்ததால் எதுவும் பேசாமல், இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தான் மகேந்திரன்.
“கவலைப் படாத, அடுத்த ஜென்மத்தில் உனக்கு பிரண்டா மனசார இருப்பேன். ஆனா உறவுல உனக்கு முறைப்பையனா தான் கீர்த்தி வருவேன்”, என்றான் கிரி. அவனை முறைத்தான் மகேந்திரன்.
அவன் சொல்வது புரியாமல் “எதுக்கு டா இப்படி சொல்ற?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“அதை மகி கிட்ட கேளு. நான் கிளம்புறேன், என்று சொன்ன கிரி மகியையும் கட்டி பிடித்து விட்டு கீர்த்தியை பார்த்து சிரித்தவாறே சிறு புள்ளியாக மறைந்து சென்றான்.
இருவரும் மனம் முழுக்க வேதனையுடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள். கீர்த்தியின் ஆசை அனைத்தும் முடிந்து விட்டது. 
“செத்து பேயா அலையும் போது கூட காதல் வலியையும் பிரிவென்னும் வலியையும் இந்த கடவுள் தரணுமா?”, என்று தான் இருவருக்கும் தோன்றியது.
அவன் முகத்தை பார்த்த கீர்த்தி, அவனை சகஜமாக்க “அவன் என்ன சொல்லிட்டு போறான் மகி?”, என்று கேட்டாள்.
“நீ அவன் கூட பேசுனா நான் கோப படுவேன்ல? அடுத்த ஜென்மத்துலயும் என்னை கோப படுத்த உனக்கு முறைப்பையனா வருவானாம்”
“ஹா ஹா ஸ்வீட் பாய், ஆனா உனக்கு எதுக்கு மகி கோபம் வருது?”
“அதெல்லாம் தெரியாது, சரி உன் வேலை முடிஞ்ச உடனே என் காரியத்தை மறந்துட்ட பாத்தியா? நாம இப்ப வினோதினியை பாக்க போவோமா?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“கண்டிப்பா பாத்தே ஆகணுமா மகி?”
“நீ என்னை டைவர்ட் பண்ணாத. கண்டிப்பா பாக்கணும். அவ எப்படி இருப்பான்னு தெரியணும் டி”
“சரி நாளைக்கு காலைல போகலாமா?”
அவளை ஊன்றி பார்த்தவன் “சரி காலைல போகலாம். ஆனா நீ வராம போனாலும் நான் நாளைக்கு கட்டாயம் போவேன்”, என்றான்.
“உனக்கு ஏன் மகி அவ மேல அவ்வளவு ஆசை?”
“சி ஆசைன்னு எல்லாம் அசிங்கமா பேசாத. ஒரு வேளை அவ உன்னை விட அழகா இருந்தா அவ மேல ஆசை வரலாம்”, என்று சொல்லி அவளை வம்புக்கு இழுத்தான்.
எப்போதும் அவனுடன் சண்டையிடுபவள் இன்று எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவனுக்கு பிடிக்காதது கீர்த்தியின் கண்ணீரும் அவள் வருத்தமும். அதனால் அதை மாற்ற எண்ணி, “உனக்கு இன்னும் பசிக்கலையா டி? வயிறு இன்னும் கூப்பிட ஆரம்பிக்கலையா?”, என்று கேட்டான்.
“எனக்கு பசிக்கலை மகி. சாப்பிட மனசில்லை”
“இப்ப உன் சோகத்தை எப்படி போக்குறேன் பாரு”,என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்தான் மகேந்திரன்.
அவன் நெருக்கத்தில் சோகத்தை என்ன, அவளையே அவள் மறந்தாள். “இப்ப எதுக்கு இப்படி கிட்ட வந்து நிக்குற?”, என்று மெல்லிய குரலில் கேட்டாள் கீர்த்தி.
“அதை அப்புறம் சொல்றேன், இப்ப நாம ஒரு இடத்துக்கு போவோம்”, என்று சொல்லி கொண்டே அவளை கட்டி அணைத்த படி தூக்கி கொண்டு பறந்தான்.
திடீரென்று இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காமல் பயந்து போய் அவனை இறுக்கி பிடித்துக் கொண்டாள். 
அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் கண்களை மூடி அவன் தொடுகையை ரசித்தாள்.
அவளுடைய இடுப்பில் அவன் கை இருந்தது. அவன் முதுகை அவள் கை வளைத்து பிடித்திருந்தது. அந்த மாலை நேர காற்று இருவர் முகத்திலும் மோதி குளுமையைக் கொடுத்தது.
சில நிமிடங்கள் கழித்து ஒரு இடத்தில் நின்ற மகேந்திரன், “கீர்த்தி கண்ணை திறந்து பாரு”, என்றான்.
அவன் கையணைப்பிலே இருந்த கீர்த்தி மெதுவாக கண்களை திறந்தாள். சுற்றி இருந்த இடத்தைப் பார்த்ததும் ஆனந்த வியப்பை அடைந்தாள்.
“ஏய், மகி நாம இமைய மலைக்கா வந்துருக்கோம்? இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு பாரேன். செத்து பேயா அலைஞ்சா உலகத்தையே சுத்தி பாத்துரலாம் போல டா?
அங்கிருந்த பசுமை, அழகான பனி, குளிர் என அனைத்துமே அவளை கவர்ந்தது. அவளுடைய தேகம் புல்லரித்தது. “ரொம்ப குளிருது மகி”, என்று சொல்லி கொண்டே அவனை நெருங்கி நின்றாள். அவன் கைகளும் அவளை அணைத்துக் கொண்டது.
“இங்க ஏதாவது சூடா சாப்பிட கிடைச்சா நல்ல இருக்கும்ல மகி?”, என்று கேட்டு அவன் முறைப்பை பெற்றுக் கொண்டாள். அவள் சகஜமானதை கண்டு அவனும் நிம்மதியாக உணர்ந்தான்.
“உன்னுடைய முகத்தில் புன்னகையை காண நான் ஏன் ஆசை படுகிறேன் பெண்ணே?”, என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி கொண்டான்.
அடுத்த நாள் “வா வினோதினியைப் பாக்க போகலாம்”, என்றான் மகேந்திரன்.
அவனை முறைத்தாள் கீர்த்தி. “என்ன உன் வேலை முடிஞ்சதும் என் வேலையை மறந்துட்ட பாத்தியா? வா போகலாம்”, என்று அழைத்தான் மகேந்திரன்.
உருகுதல் தொடரும்…. 

Advertisement