Advertisement

அத்தியாயம் 7
கூறிய விழிகளால்
மௌன மொழி
பேசும் உன்
வார்த்தைகளை சேகரித்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சாமியாரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராம், மகேந்திரனை போனில் அழைத்தான். அவன் போனைப் பார்த்ததும் அதை எடுத்து காதில் வைத்த மகேந்திரன் “இன்னைக்கு வேலை எப்படி டா போச்சு?”, என்று கேட்டான்.
“நல்லா போச்சு டா. நீ எப்படி இருக்க?”
“எனக்கென்ன? நான் நல்லா தான் இருக்கேன்”
“சரி, இன்னைக்கு ஆஃபிஸ்ல என்ன நடந்துச்சு?”
“அந்த பைல் மறுபடியும் கொடுக்குறாணுங்க டா. அந்த நிலம் வச்சிருக்குற தாத்தா கோர்ட்டுக்கு போய்ட்டார் போல? அதான் டா ஒரு தாத்தா வந்து என்னோட நிலத்துல என்னது போட்டாலும் விளைய மாட்டிக்கு.என்னன்னு பாத்து சொல்லுங்க தம்பின்னு வந்தாரே”
“ஆமா டா, நீ கூட பக்கத்துல இருக்குற பேக்டரில உள்ள கழிவு தான் காரணம்னு ரிப்போர்ட் கொடுத்தியே?”
“ஆமா ராம், அந்த பேக்டரியை மூட சொல்லி ஆர்டர் வரும்னு சொல்றாங்க. அதனால தான் என்னை தெரியாம ரிப்போர்ட் கொடுத்துட்டேன்னு சொல்ல சொல்றாங்க”
“பணக்காரங்க இப்படி தான் டா பண்ணுவாங்க. அடுத்தவங்களை மிதிச்சு தான் மேல வருவாங்க. பணம் கொடுத்து, இல்லைன்னா பயமுறுத்தி அந்த தாத்தாவையும் விலைக்கு வாங்கிருவாங்க டா. நீ கண்டுக்காத. சரி அந்த பேய் போயிருச்சா?”
“பேய்ன்னு சொல்லாத டா. கீர்த்தி. அப்புறம் அவ எங்க போக? விரட்டினா கூட போக மாட்டா”, என்று சந்தோசத்துடன் சொன்னான் மகேந்திரன். 
ஆனால் அவன் சந்தோஷத்தை புரிந்து கொள்ளாமல் தன்னுடைய நண்பனை விட்டு அவள் போக மாட்டாள் என்று எண்ணி “நான் விரட்டுற விதத்துல விரட்டுவேன் டா”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ராம்.
“சரி டா சாப்பிட்டு தூங்கு”, என்றான் ராம்.
“நீயும் ரெஸ்ட் எடு ராம். வீட்ல எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு”, என்று சொல்லி போனை வைத்தான் மகேந்திரன்.
அவன் போனை வைத்ததும் “என்னை விரட்டுவியா மகி?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“நீ என் செல்ல பிசாசு போதுமா? உன்னை எங்கயும் விரட்ட மாட்டேன்”, என்று சொல்லி சிரித்தான்.
இருவரும் எதை எதையோ பேசிய படி நேரத்தைக் கழித்தார்கள். இரவு அவள் செய்து கொடுத்த உணவை உண்டான்.
அம்மா கையில் சாப்பிட்ட பொழுதுகள் நினைவில் வந்தது. மற்றொரு அம்மாவாக கீர்த்தி இப்போது அவன் அருகில் இருந்தாள். 
அவளிடம் பேசிய படியே தூங்கினான் மகேந்திரன். 
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. இன்று கீர்த்தி அவன் கைகளை பற்றிக் கொள்ளாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தாள். அதை உணர்ந்த மகேந்திரன் “ஏய் பிராடு, நீ எப்ப இங்க வந்து படுத்த?”, என்று கேட்டான்.
“நைட்டே வந்துட்டேன், சரி நீ போய் குளி மகி. நான் உனக்கு சமைக்கிறேன்”, என்று சொல்லி சென்று விட்டாள். 
பின் அவன் கிளம்பும் போது “பாத்து போ மகி”, என்றாள் கீர்த்தி.
“சரி நீ பத்திரமா இரு. வெளிய சுத்தாத. கிரியை பாக்க போறேன், கரியை பாக்க போனேன்னு சொன்ன கொன்னுறுவேன்”, என்று சொன்ன மகேந்திரனைப் பார்த்து சிரித்தவள் “என்னை ஏற்கனவே கொன்னுட்டாங்க”, என்று சிரித்தாள்.
அவளிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான். அதே நேரம் சாமியாரைக் காண சென்றான் ராம்.
அவனை வரவேற்றவர் பூஜைக்கு ஆயத்தமானார். மஞ்சள் குங்குமத்தால் ஒரு சக்கரம் ஏற்படுத்தி அதைச் சுற்றி பூஜைக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தார். ராமையும் அருகில் அமர வைத்தார். பின் மந்திரத்தை உச்சரித்தார். 
“இப்ப அந்த பேய் இங்க வரும்”, என்றார் அந்த சாமி.ராம் பயத்துடன் அமர்ந்திருந்தான்.
அதே போல் கீர்த்தியை எதுவோ ஒரு சக்தி இழுப்பது போல இருந்தது. அவளால் நிலை கொண்டு இருக்க முடியவில்லை. எதுவோ தவறாக நடக்க போகிறது என்று அவள் உள் மனசு சொல்லியது.
அவளை மேலும் யோசிக்க விடாமல் இங்கே இழுத்து வந்திருந்தார் அந்த சாமி. மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தவர் அவள் வந்ததை அறிந்தும் “இங்க உக்காரு”, என்று கத்தினார். 
கண் முன் தெரிந்த கருப்பான புகை வடிவத்தை பயந்து போய் பார்த்துக்கொண்டிருந்தான் ராம்.
அந்த சக்கரத்தில் அவள் அமர்ந்ததும் அவள் உருவம் மெது மெதுவாக ராம் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. அவள் தோற்றத்தைக் கண்டு திகைத்து போய் அமர்ந்திருந்தான். 
“எம்மா இவ பொண்ணே இல்லை, தேவதை, என்ன ஒரு அழகு?”, என்று எண்ணினான் ராம்.
அவளை பார்த்த உடன் அழகி என்று சொல்ல மாட்டார்கள், பேரழகி  என்று தான் சொல்வார்கள். அப்படி இருந்தது அவள் தோற்றம். 
அழகிய நெற்றி, அதில் சின்ன பொட்டு, மான் விழிகள், கூரான அதே நேரம் சின்னதான மூக்கு, ரோஜா வண்ண நிறத்தில் அழகிய இதழ்கள், பார்த்தாலே சுண்டி இழுக்கும் நிறம் என அழகாக இருந்தாள். 
அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தி அங்கிருந்த ராமை பார்த்ததும் அதிர்ந்து போனாள். “கடைசில எனக்கு வில்லன் இவனா?”, என்று எண்ணிக் கொண்டு அவனை முறைத்தாள்.
அவள் முறைத்ததைக் கண்டு பயந்து போனான் ராம். அங்கே சாமியாரோ “எதுக்கு அந்த பையன் கூட வந்த? எதுக்கு அவன் வீட்ல இருக்க?”, என்று கேட்டார். 
அவர் பதிலுக்காக காத்திருப்பது புரிய, பதிலை சொல்ல வந்தவளுக்கு உடம்பெல்லாம் என்னவோ போல் ஆனது. ஒரு மாதிரி உடலைக் குலுக்கினாள்.
அவள் நிலையை பார்த்த சாமி “என்ன நடிக்கிறியா?”, என்று கேட்டார்.
அடுத்த நொடி அங்கிருந்து எழுந்து நின்ற கீர்த்தி “ஐயா மகிக்கு ஆபத்து. மகி உயிருக்கு ஆபத்து. என்னை விடுங்க. நான் அவனை காப்பாத்த போகணும்”, என்றாள்.
“சாமி அவ நடிக்கிறா. அவ சொல்றதை நம்பாதீங்க”, என்று அவசரமாக சொன்னான் ராம்.
“என்ன நடிக்கிற? உன்னை எங்கயும் அனுப்ப மாட்டேன்”, என்று சொல்லி அவள் மீது தீர்த்தத்தை தெளித்தார்.
துடி துடித்து கீழே விழுந்தாள் கீர்த்தி. அவளைப் பார்த்து பாவமாக இருந்தாலும் “பேய் சகவாசம் என் நண்பனுக்கு வேண்டாம். அவன் நிம்மதியா இருந்தாலே போதும் ”, என்று எண்ணிக் கொண்டான் ராம்.
அவர் தெளித்த நீர் அவளை பொசுக்குவது போல எரிச்சலைக் கொடுத்தாலும் அங்கிருந்து செல்ல முயற்சி செய்தாள் கீர்த்தி. “மகி மகி,” என்று அலறினாள். 
சிறிது நேரம் அங்கே இங்கே ஓடப் பார்த்து முடியாமல் தவித்தவள் “என் மகி செத்துட்டான். அவன் இந்த உலகத்தில் இல்லை”, என்று சொல்லி அப்படியே தரையில் விழுந்து கதறினாள்.
அவள் அழுகையில் ராமே பதறி விட்டான். அவனுக்கு இதெல்லாம் உண்மையா இருக்குமோ என்ற பயம் வந்தது. அடுத்த நொடி மகேந்திரன் போனுக்கு அழைத்தான். 
அந்த பக்கம் போனை எடுத்த ஆளோ “இந்த போன் காரருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. லாரிக்காரன் அடிச்சு தூக்கிட்டான். ஸ்பாட் அவுட் சார். ஜி‌. ஹெச் க்கு வாங்க”, என்று சொல்லி விட்டு போனை அணைத்து விட்டார். 
கண்களில் நீர் வழிய சரிந்து அமர்ந்த ராம் கதறி விட்டான்.
அவன் கதறலில் அங்கிருந்த சாமி கூட “தவறு பண்ணி விட்டோமோ? இந்த ஆத்மா சொன்னதை கேட்டிருந்தால் ஒரு உயிர் போயிருக்காதோ?”, என்று எண்ணிக் கொண்டு பூஜையை நிறுத்தினார்.
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா? உங்க பிரண்ட் செத்ததுக்கு நீங்க தான் காரணம். என்னை விட்டுருந்தா நான் நிச்சயம் அவனை காப்பாத்திருப்பேன்”, என்று ராமை திட்டினாள் கீர்த்தி.
“என்னை மன்னிச்சிரு மா, இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாதே. எப்பவும் பாத்து தானே போவான். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டானே. அவன் நல்லா இருக்கணும்னு தான நானே இப்படி செஞ்சேன்? அவனுக்கா இப்படி ஆகணும்”, என்று கதறினான்.
“மகிக்கு நடந்தது ஆக்ஸிடெண்ட் இல்லை. அவனை கொன்னுட்டாங்க. அது அந்த வினோதினி தான்”, என்று கீர்த்தி சொன்னதும் அதிர்ச்சி அடைந்தான் ராம். 
“அவ எதுக்கு கொல்லணும்?”
“அவளுக்கு எதிரான ரிப்போர்ட்டை தான மகி கொடுத்துருக்கான். அதான் கொன்னுட்டா. நீங்க மகி பாடியை வாங்க போங்க. நான் அவளை கொல்லாம அவனை பாக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தாள் கீர்த்தி.
அழுது கொண்டே ஹாஸ்பிட்டலுக்கு சென்றான் ராம். குற்ற உணர்ச்சி அவன் மனதை அரித்தெடுத்தது. 
ரத்த வெள்ளத்தில் இருந்த அவனுடைய உயிரற்ற உடலை பார்த்து கதறி அழுதான் ராம். பின் மகேந்திரனுடைய போனை வாங்கி அதில் உள்ள அவனுடைய அண்ணனுக்கு அழைத்தான். 
அவனுடைய அண்ணன்களும் கதறி கொண்டு வந்தார்கள். போஸ்ட்மார்டம் முடிந்து அவனுடைய பாடியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றார்கள்.
அடக்க செலவுக்கு அவனுடைய பணத்தையே எடுத்துக் கொடுத்தான் ராம்.
ராம் ஹாஸ்பிட்டல் போகும் போதே வினோதினியை பிடித்து விட்டாள் கீர்த்தி.
“எனக்கு விரோதமா ஒரு எறும்பு அசைஞ்சா கூட அதை நசுக்கிருவேன். இவனை மட்டும் சும்மா விட்டுருவேனா? அந்த கிழவனையும் கொன்னாச்சு. இவனையும் தூக்கியாச்சு”, என்ற மமதையில் வாய் விட்டே சொன்னாள் வினோதினி.
அடுத்த நொடி அவள் கண்களுக்கு தெரிந்தாள் கீர்த்தி. திடீரென்று லாரி முன்னே ஒரு பெண்ணின் உருவம் தெரியவும் அதிர்ந்து போய் பிரேக் போட்டாள்.
“என்னோட மகியை கொன்னுட்டு, நீ சந்தோஷமா இருந்துருவியா? சாவு டி”,என்று சொல்லிக் கொண்டே சிறு துறும்பாக மாறி வண்டியை ஸ்டார்ட் செய்தாள் கீர்த்தி.
“ஆ காப்பாத்துங்க காப்பாத்துங்க”, என்று அலறினாள் வினோதினி. அவள் கை படாமலே வண்டி மிக வேகமாக சென்று ஒரு மரத்தில் மோதி பின் கவிழ்ந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் வினோதினி.
அவளைப் பார்த்து சிரித்த கீர்த்தி “சந்தோஷமா சாவு”, என்று சொன்னாள். அவளைப் பார்த்தவாறே வினோதினி உயிர் அவளை விட்டு சென்றது.
அதன் பின் நிம்மதியாக மகேந்திரனை காண சென்றாள் கீர்த்தி. 
மகேந்திரன் பாடியைப் பார்த்ததும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. 
ராமோ “நான் தான் இவனை கொன்னுட்டேன்”, என்னும் விதமாய் மெதுவாய் புலம்பிக் கொண்டிருந்தான். 
அவன் காதருகே குனிந்த கீர்த்தி “லூசு மாதிரி நீங்களே நான் தான் கொன்னேன், நான் தான் கொன்னேன்னு புலம்பாதீங்க. பின்ன உங்களை எல்லாரும் ஒரு மாதிரி பாப்பாங்க”, என்று சொன்னாள். கப்பென்று வாயை மூடிக் கொண்டான் ராம்.
கீர்த்தியோ மகேந்திரன் ஆவியை தேடி தவித்தாள். ஆனால் அவனை எங்குமே காண வில்லை. “ஒரு வேளை அவனுக்கு எந்த ஆசையும் இல்லாததுனால கடவுள் அவனுக்கு முக்தி கொடுத்துட்டாரோ?”, என்று எண்ணிக் கொண்டு அவன் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றாள்.
அங்கே அவனுடைய ஆவி படுத்திருந்தது. அதை பார்த்து அதிர்ந்தவள் பின் நிம்மதியாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
எதுவோ அரவம் உணர்ந்து கண் விழித்த மகேந்திரன் அருகில் ஒரு பெண் அமர்ந்திருக்கவும் அதிர்ந்து எழுந்து அமர்ந்தான்.
அவள் சொல்லாமலே அவள் தான் கீர்த்தி என்று புரிந்தது. முதல் முறையாக அவளை பார்க்கிறான். அவள் அழகில் அவன் சித்தம் குலைந்தது மட்டும் நிஜம்.
பால் வண்ண மேனி, பளபளவென்று இருந்தது. குண்டு கண்களும் செரிப் பழ உதடுகளும் அவனுக்கு மயக்கத்தை கொடுத்தது. 
“கீர்த்தி”, என்று உச்சரித்தான் மகேந்திரன். 
“ஆமா கீர்த்தி தான் மகி. நீ என்ன எங்க இருக்க?”
“வேலைக்கு போனேன் கீர்த்தி. அப்ப ஒரு லாரி சின்னதா இடிச்சிருச்சு. கை கால் எல்லாம் வலிச்சதா, உடனே வீட்டுக்கு திரும்பி வந்துட்டேன்”, என்று மகேந்திரன் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டாள் கீர்த்தி.
“என்ன தலையில் அடிக்கிற? நீ எங்க போய் ஊர் சுத்திட்டு வர? வந்த உடனே உன்னை தான் தேடுனேன் தெரியுமா?”
“மகி லூசு, நீ செத்துட்ட டா”
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் அவள் சொன்னதுக்கு பதிலாய் “என்ன டி சொல்ற?”, என்று கேட்டான். டி என்ற சொல் அவனை அறியாமலே அவன் வாயில் வந்திருந்தது.
“ஆமா டா, லாரி உன்னை சின்னதா இடிக்கலை, பெருசா இடிச்சிருச்சு. வா நான் காட்டுறேன்”, என்று சொல்லி வெளியே அழைத்துச் சென்றாள்.
“நாம இப்ப பறந்து போகணும். எனக்கு கொஞ்சம் பறக்க பயம். உனக்கும் பயமா இருந்தா கண்ணை மூடிக்கோ”, என்று கீர்த்தி சொன்னதும் இருவரும் பறந்து போனார்கள்.
“நிஜமாவே நான் செத்துட்டேனா? அதான் கீர்த்தி என் கண்ணுக்கு தெரியுறாளா?”, என்று எண்ணிக் கொண்டே அவளுடன் பறந்தான். பறப்பது அவனுக்கு பிடித்திருந்தது.
அவளைப் பார்த்தான். அவளோ கண்களை மூடி கவலையாக முகத்தை வைத்திருந்தாள். “உன்னை பாக்க தான் நான் செத்துட்டேன்னு சந்தோஷமா நினைச்சிக்கிறேன் கீர்த்தி. நீ அவ்வளவு அழகா இருக்க”, என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
“இதோ இந்த இடத்துல தான், நீ செத்த. வா”, என்று சொல்லி அவனை அழைத்து சென்றவள் அவனுடைய உடல் வைக்கப் பட்டிருக்கும், அவனுடைய வீட்டுக்கு அழைத்து சென்றாள்.
மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் அவன் செத்து போனதை நம்ப ஆரம்பித்தான் மகேந்திரன். அவனுடைய அண்ணன்கள், சொந்தங்கள் எல்லாரும் அழுவது கண்ணில் பட்டது. போலிக் கண்ணீர் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.
ராம் கதறி அழுறதை பார்த்தவன் அவனுடைய நட்பை எண்ணி பூரித்தான். 
அவனுக்கு நடந்த உண்மை எதுவுமே தெரிய கூடாது என்று முடிவு எடுத்தவள் “மகி நாம இங்க இருந்து போகலாமா? எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு”, என்றாள். 
“இங்க இருந்து நாம என்ன செய்ய? எப்படியும் என்னை பொணம்ன்னு தான் சொல்லுவாங்க. வா போகலாம்”, என்று சொல்லி அவளுடன் பறந்து விட்டான்.
ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். “என்னால நம்பவே முடியலை கீர்த்தி. நான் அதுக்குள்ள செத்துட்டேனா?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“ம்‌ம்”
“நான் சாகும் போது நீ எங்க போன? நீ வந்து என்னை காப்பாத்திருக்கலாம்ல? நானும் உன்னை மாதிரி பேயா அலையணும்னு தான் என்னை காப்பாத்தலையா? 
“அப்படி எல்லாம் இல்லை மகி”
“அப்படித்தான், நான் உன் காதலை ஏத்துக்கலைன்னு என்னை பழி வாங்கிட்டல்ல? இல்லை நீயே தான் என்னை கொன்னியா”
அதிர்ந்து போய் அவனைப் பார்த்தவள் “என்னையா மகி இப்படி சொல்ற? உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? என்னைப் போய் என்ன வார்த்தை சொல்லிட்ட? இனி என்கிட்ட பேசாத”, என்று அழுதாள்.
அப்போது அங்கு வந்த கிரி “எதுக்கு டார்லிங் அழுற? மகியும் செத்துட்டானா?”, என்று கேட்டான். அவனைப் பார்த்து அதிக எரிச்சலை அடைந்தான் மகேந்திரன்.
“ஆமா, மகி என்னை திட்டிட்டான், கஷ்டமா இருக்கு”, என்றாள்.
“நீ ஏன் அவன் கூட இருக்க? என் கூட வந்துரு, செல்லம்”
“ஏய் கீர்த்தி முதல்ல அவனை இங்க இருந்து போக சொல்லு. டேய் ஒடுடா”,என்று கத்தினான் மகேந்திரன்.
கிரி அங்கிருந்து ஓடி விட்டான். அவன் சென்றதும் கண்ணைச் சுருக்கி மூக்கை உரிந்து அழுது கொண்டிருந்தாள் கீர்த்தி. 
அவளைப் பார்த்த மகி “அழும் போது கூட, என்ன ஒரு அழகா இருக்கா? முன்னாடியே இவளை பாத்துருக்க கூடாதா?”, என்று எண்ணினான்.
அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ அவள் இமைகள் படபடத்தது.
சிறு குழந்தை போல் சிரிக்கும் அவள் எளிமையிலும் அவள் அழகிலும் ஒரு ஆண் மகனாக தன்னை உணர வில்லை என்றால் தான் அதிசயம். அவனை ஆண் என்று உணர வைத்தது அவள் பெண்மை.
அவள் பார்வையில் தன்னை மீட்டுக் கொண்டவன் “இப்ப என்னோட வர முடியுமா முடியாதா?”, என்று கேட்டான்.
“முடியாது, என்னை திட்டினால்ல? நீ ஒண்ணும் வேணாம் போ. நான் உன்னை கொன்னேன்னு சொல்ற? ”
“தெரியாம சொல்லிட்டேன் டி. வா போகலாம்”
“நான் வரலை. நீ போ”
“அப்படின்னா இங்கயே இரு. நான் போறேன்”, என்றவன் கிளம்பி விட்டான். 
“நான் கோப பட்டா இவனுக்கு ஒண்ணுமே இல்லையா? நான் தான் இவன் பின்னாடி அலையுறேனா? இவனுக்கு நான் ஒரு கணக்கே இல்லை அப்படி தான?”, என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் சிறிது தூரம் சென்றவன் அவளை விட்டு இருக்க முடியாமல் அவளை தேடி வந்தான். அவனை கொண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தவள் அருகில் வந்தவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். 
பின் இருவரும் சமாதானம ஆனார்கள். மறுபடியும் அவள் காதலைப் பற்றி பேசினால் சண்டை போட்டான் மகேந்திரன். இதுவே தொடர்ந்தது. இடையில் மூர்த்தியை பிடிக்க வேறு பிளான் செய்தார்கள்.
அன்றும் அவள் காதலைப் பற்றி பேசியதால் தான் “இனி என் முகத்திலே முளிக்காத”, என்று சொல்லி விட்டு மகேந்திரன் சென்று விட்டான். இதை எல்லாம் நினைத்து பார்த்த படி இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
“நீ இன்னும் தின்னு முடிக்கலையா? அந்த பழத்தை தூர போட்டுட்டு  உன் சித்தப்பனை பழி வாங்குறது எப்படினு யோசிடி. நமக்கு ரொம்ப நாள் இல்லை”, என்றான் மகேந்திரன். 
“அதை யோசிக்க தான் நீ இருக்கியே. வேற பழம் இருக்குற மரத்துக்கு போவோமா மகி”
“போடி திண்ணிப் பண்டாரம்”
“சரி சரி ரொம்ப திட்டாத. முதல்ல என்னோட ஊருக்கு போய் வக்கீல் சாரை பாப்போம்”, என்றாள்.
“நல்ல ஐடியா தான், ஆனா நாம நேரா போய் பேசுனா அவர் பயந்துருவார். அதுக்கு முன்னாடி உன்னை தப்பா பேசின எல்லாரையும் நானாடி கெட்டவன்னு கேட்டு பயமுறுத்து. கீர்த்தி பேயா அலையுறான்னு ஊர் நம்புற மாதிரி செய்யணும். அவ நல்லவ, அவளை தப்பா சொன்னவங்களுக்கு தான் தண்டனை கிடைக்குது. அந்த பொண்ணு அப்படி எல்லாம் கிடையாது. அவ நல்லவ. கண்டிப்பா இப்படி பட்ட கீழ்தனமான காரியம் எல்லாம் செஞ்சிருக்க மாட்டா. அவ முகத்தை பாத்தாலே தெரியலையா? அவ சித்தப்பனும் சித்தியும் தான் சொத்துக்காக அந்த பொண்ணை கொன்னுட்டாங்க இப்படின்னு எல்லாம் ஊர் பேசணும் கீர்த்தி. இந்த வேலையை முதல்ல செய்யணும். அப்புறம் வக்கிலை போய் பாப்போம்”, என்று அவன் சொன்னதும் அவளும் சரி என்றாள்.
அவர்கள் பிளான் படி காலையில் ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள்.
உருகுதல் தொடரும்….   

Advertisement