“ஹ்ம்ம், சரி டா. நான் காலைல சோலையூர் போகணும். அது இங்க இருந்து தூரமாமே. அப்புறம் காலைல நாலு மணிக்கு எழுப்பி விடு. என் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பி போகணும்”
“ஹ்ம்ம் சரி டா. வா கீழே போய் தூங்கலாம்”
“ஐயோ, நான் வரலை. நீ போ பா. நான் இங்கயே தூங்குறேன்”
“கொசு கடிக்கும் டா”
“பரவால்ல”
“சரி இரு. நான் பாய் போர்வையாவது எடுத்துட்டு வறேன்”, என்று கீழே சென்ற மகேந்திரன் போர்வை, தலையணை, பாய் என்று எடுத்து கொண்டு மேலே வந்தான்.
“இந்தா டா. நடு ராத்திரில தூக்கம் வரலைன்னா கீழே வந்திரு. வீட்டை சும்மா தான் சாத்திருக்கேன்”, என்று சொல்லி விட்டு கீழே வந்து விட்டான்.
மகேந்திரனுக்கு கொசு கடியில் ஒழுங்காக தூக்கம் வராது. அதனால் அவன் கீழே வந்து விட்டான். அது மட்டுமல்லாமல் அவனுக்கு பேயை நினைத்து எந்த பயமும் வர வில்லை. கதவை சாற்றி விட்டு மற்றொரு போர்வையை தரையில் விரித்தவன் ஒரு தலையணையை போட்டு லைட் ஆஃப் பண்ணி விட்டு படுத்து விட்டான்.
அப்போது நினைவு வந்தவனாக “ஐயோ, நாளைக்கு ஆஃபீஸ் போறதுக்கு டிரெஸ் அயர்ன் பண்ணலையே? நாளைக்கு வினோதினியை வேற பாக்க போகணும். டிப்டாப்பா போகணும்”, என்று நினைத்து லைட்டை போட்டவன் அவனுக்கு பிடித்த டிரஸ்ஸை எடுத்து அயர்ன் பண்ண ஆரம்பித்தான்.
கொலை வெறியில் அவனை முறைத்து கொண்டு இருந்தாள் கீர்த்தி. முதலில் சட்டையை அயர்ன் பண்ணி கொடியில் போட்டவன் அடுத்து பேன்ட்டை தேய்க்க ஆரம்பித்தான். அதையும் அயர்ன் பண்ணி முடித்து விட்டு திரும்பி பார்த்தவன் திகைத்தான்.
அங்கே அயர்ன் பண்ணி போட்டிருந்த சட்டை கசங்களுடன் கீழே கிடந்தது.
அதில் கடுப்பானவன் “ஏய் லூசு உனக்கு அறிவு இருக்கா? கஷ்ட பட்டு அயர்ன் பண்ணி வச்சதை இப்படி செஞ்சு வச்சிருக்க?”, என்று கத்தினான்.
மெளனமாக நின்ற கீர்த்தீக்குள் அவளை அறியாமலே கோபமாக வந்தது. யாரென்றே தெரியாத அந்த விநோதினியை நினைத்தால் எரிச்சலாக வந்தது.
“என்ன எல்லாத்தையும் செஞ்சிட்டு அமைதியா வர? இப்ப நீ பதில் பேசலை, இப்பவே எங்கயாவது மந்திர வாதியை கூட்டிட்டு வந்து உன்னை விரட்டிருவேன். நானும் நல்ல பேய் நல்ல பேய்ன்னு நினைச்சா நீ டிரெஸ் எல்லாத்தையும் இப்படி பண்ற? இப்ப பேச போறியா இல்லையா?”
“அந்த வினோதினியை நீங்க பாக்க போக கூடாது”, என்ற மென்மையான ஒரு பெண் குரல் மகேந்திரன் காதை தீண்டியது.
அந்த குரலில் மயங்கியவன் அதிர்ச்சியாக தலையை திருப்பி திருப்பி பார்த்தான்.
சுற்றி எதுவுமே தெரியாததால் “நீ உண்மையிலே பொம்பளை பேய் தானா?”, என்று கேட்டான்.
“ம்ம் ஆமா”
“மதியம் சிக்கன் பிரியாணி நீ தான் சாப்பிடியா?”
“ம்ம்”
“இப்ப இட்லியும் நீ தான் சாப்பிடியா?”
“ஆமா”
“சரி எதுக்கு நான் வினோதினியை பாக்க போக கூடாது”
“தெரியலை. ஆனா நீங்க அங்க போக கூடாது”
அந்த பதிலில் வியந்தவன் அயர்ன் பாக்ஸை அணைத்து விட்டு போர்வையில் அமர்ந்தான்.
“எங்க இருக்க நீ?”, என்று கேட்டான்.
அவனுக்கு பின் பக்கம் இருந்த நாட்காலியில் இருந்து “இங்க இருக்கிறேன்”, என்று குரல் கொடுத்தாள் கீர்த்தி.
“இங்க வா”, என்று அவளை அழைத்தான்.
இவன் விரித்திருந்த போர்வையில் ஒரு மூலையில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி. போர்வை அப்படியே அசைவதிலே அவள் வரவை உணர்ந்தான் மகேந்திரன்.
“இப்ப சொல்லு. எதனால நீ அப்படி சொன்ன? நான் நாளைக்கு ஆபீஸ் போகணும். வேலை விசயமா அந்த பொண்ணை பாக்க தான் செய்யணும்”
“வேலை விசயமா பாக்குறது தப்பு இல்லை. ஆனா நீங்க ஆவலா பாக்கணும்னு நினைக்கிறீங்க?”
“அதுல என்ன தப்பு?”
“தெரியலை, ஆனா தப்பு”
“ரொம்ப திறமையான பொண்ணாம். அதனால பேசணும்னு ஆசை இருக்கு”
“ஆனா எனக்கு கோபமா வருது?”
“கோபம் வருதா? ஆமா நீ யார்? உன் ஊர் என்ன? நீ எப்படி என் வீட்டுக்கு வந்த? நீ எப்படி செத்து போன? ஆக்சிடென்ட்டா?”, என்று துளி கூட கவலை இல்லாமல் கேட்டான் மகேந்திரன்.
“இதெல்லாம் சோகமான கேள்வி. நீங்க எதுக்கு சிரிச்சிட்டே கேக்குறீங்க?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“இந்த உலகத்தில் நான் எப்போதுமே வாழ விரும்பியதே இல்லை. எப்ப என்னோட அம்மா, அப்பா இறந்து போனாங்களோ, அப்புறம் என்னை சுற்றி ஒரே வெறுமை தான். இப்பவும் அப்படி தான். ராமை தவிர வேற எந்த உறவுகளும் இல்லை. அதனால இங்க வாழுறதை விட மேல போறதே நல்லதுன்னு நான் நினைப்பேன். அதான்”
“ஓ, ஆனா நான் செத்தது எனக்கு கஷ்டமா இருக்கு”
“நீ சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்திருப்ப? அதான் இந்த உலகத்தை விட்டு போனது உனக்கு கஷ்டமா இருந்திருக்கும்”
“சந்தோசமான வாழ்க்கை எல்லாம் வாழலை. ஆனா வாழணும்னு ஆசை வச்சிருந்தேன். ஆனா எல்லாமே கனவா போச்சு”
“சாரி, அப்புறம் செத்து போனவங்க எல்லாருமே பேயா தான் அலையுவாங்களா?”
“அப்படி இல்லை. சில பேர் தான் அப்படி”
“சரி நீ எப்படி செத்த?”
“நான் சாகலை. என்னை கொன்னுட்டாங்க”
“ஐயோ ஏன்?”
“சொத்துக்காக”
“கேவலம் சொததுக்காகவா?”
“ஆமா”
“உன் பேர் என்ன?”
“என்னோட பேர் கீர்த்தனா”
“கீர்த்தனா, கீர்த்தி அழகான பேர். உன் வயசு என்ன?”
“இருபத்தி நாலு. காலைல வந்தீங்கல்ல? அது தான் எங்க ஊர். அந்த ஊர்ல எங்க குடும்பம் தான் ரொம்ப பணக்காரங்க. எங்க அப்பா கூட பிறந்தது என் சித்தப்பா மட்டும் தான். நான் குழந்தையா இருக்கும் போதே என்னோட அம்மா அப்பா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. என் சித்தப்பா தான் என்னை அவரோட பொண்ணு மாதிரி பாசம் காட்டி வளர்த்தார்”
“பரவால்லயே? நல்ல மனுசனா இருக்காரே”
“அது தான் இல்லை. எல்லாமே சுயநலவாதிங்க தான். எங்க சித்தியும் என்னை அன்பா தான் பாத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. அவங்க பாசம் எல்லாம் நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரை தான் தொடர்ந்தது. அதுக்கப்புறமும் நான் பெருசா கவனிக்கலை. நான் செகண்ட் இயர் காலேஜ் படிக்கும் போது தான் அவங்களோட ஒதுக்கத்தையே உணர்ந்தேன். அத்தனை வருசம் அவங்க கையால எனக்கு சாப்பாடு பரிமாறின சித்தி வேலை காரியை கொடுக்க சொன்னாங்க. என்னை மட்டும் தனிமை படுத்திட்டு அவங்க குடும்பமா சந்தோசமா இருக்க ஆரம்பிச்சாங்க”
…….
“விலகி போறவங்க கிட்ட அன்பை பிச்சையா கேக்க முடியும்? நான் அமைதியா என்னோட படிப்பை தொடர்ந்தேன். இன்னும் ஒரு வருசம் படிச்சு முடிச்சிட்டு எங்களோட பரம்பரை தொழில் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு அதை பல மடங்கு உயர்த்தணும்னு கனவு கண்டேன். ஆனா படிச்சு முடிச்ச அப்புறம் உடனே நீ ஏன் மா பேக்ட்ரிக்கு வந்து சிரம படுற? ஒரு வருசம் ரெஸ்ட் எடுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் எனக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி கொடுத்த அப்புறம் நீயும் மாப்பிளையும் சேந்து தொழிலை பாருங்க. அது வரைக்கும் வரவேண்டாம்னு சொன்னாங்க.”
……
“அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் எங்க லாயர் என்னை தனியா பாக்க வந்தார். சொத்தை எல்லாம் என் பேர்ல இருந்து என் சித்தப்பா பேர்ல மாத்துறதுக்கு பிளான் நடக்குதுன்னு சொன்னார். எங்க பரம்பரை சொத்துல பாதி எங்க சித்தப்பாக்கு தான். எங்க அப்பா பேர்ல உள்ள சொத்து தான் என் பேர்ல இருந்தது. ஆனா அந்த பாதியையும் அடிக்க தான் அவங்க பிளான் செஞ்சிருக்காங்க. என் பேர்ல இருக்குறதுனால, நான் பாசமா பேசினாலே ஏமாந்துருவேன்னு இருந்துருக்காங்க. ஆனா வக்கீல் சொன்னப்பறம் தான் எனக்கே தெரியும். சொத்து என் பேர்ல இருந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவருக்கும் அதில் பங்கு இருக்குன்னு. என்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் அவ்வளவு சொத்து கிடைச்சா அதை விடுவானா? அதனால என்னை கொன்னுட்டு சொத்தை எடுக்க முயற்சி செஞ்சு பால்ல விஷத்தை கலந்துட்டாங்க”, என்று முடித்தாள் கீர்த்தி.
“ஐயோ இப்படி எல்லாமா செய்வாங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் மகேந்திரன்.
“அது கூட பரவால்ல? ஆனா, ஆனா…”, என்று அழுகையில் சொல்ல முடியாமல் தவித்தாள் கீர்த்தி.
அவள் அழுகையில் கரைந்தவன் “என்ன மா?”, என்று கேட்டான். அவன் குரலில் உருகியவள் “நான் செத்ததுக்கு அவங்க ஒரு காரணத்தை எல்லார் கிட்டயும் சொன்னதை தான் என்னால தாங்க முடியலை”, என்று சொல்லி விட்டு அழுதாள்.
கண்ணுக்கு அவள் தெரியாமல் போனாலும் அவள் அழுகையில் அவன் மனமும் வலித்தது. காதை நிறைத்த கண்ணீர் குரல் அவனையும் உலுக்கியது.
“அழாத கீர்த்தி. கஷ்டமா இருந்ததுன்னா பேச வேண்டாம். நீ அழுறது கஷ்டமா இருக்கு”
“சரி அழலை. நான் தற்கொலை செய்ய போறதாகவும், அதுக்கு நான் ஒருத்தனை விரும்பி அவன் கூட வாழ்ந்து அவன் கருவை வயித்துல சுமந்துட்டு அவன் என்னை ஏமாத்திட்டு போனதுனால தான் செத்தேன்னு என் கை பட லெட்டர் எழுதி வச்சிருக்குற மாதிரி காட்டிட்டாங்க”
“ஐயோ அந்த லெட்டரை எல்லாரும் நம்பிட்டாங்களா?”
“ஆமா, அந்த பொய்யான லெட்டரை எல்லாருமே நம்பிட்டாங்க. கேவலமா என்னை பத்தி பேசினாங்க”
“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல நீ அப்படி இல்லைன்னு தெரிஞ்சிருமே மா”
“அங்க தான் ஊர் காரங்க ஏமாந்துட்டாங்க. இந்த விசயம் வெளியே தெரிஞ்சா பேப்பர்ல எல்லாம் வருமே? அப்ப ஊர் பேர் வெளிய வந்து அசிங்கம்னு சொல்லி என்னை பத்தி போலீசுக்கு சொல்லலை”
“அட பாவிகளா?”
“நான் அப்படி பட்ட பொண்ணே இல்லை தெரியுமா? இது வரை நான் யாரையும் தப்பான பார்வை கூட பாத்தது கிடையாது. ஆனா என்னை போய் ஊர்ல உள்ள எல்லாரும் சேந்து அசிங்கமா சொல்லிட்டாங்க”, என்று ஏங்கி ஏங்கி அழுதவளை எப்படி சமாதானம் செய்ய என்று தெரியாமல் குத்து மதிப்பாக அவள் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியவன் கைகளால் துழாவினான்.
கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அவன் கையில் சிக்கினாள் கீர்த்தி. கையில் பட்டவளை உணர்ந்து அதிர்ச்சியானாலும் அவள் அழுகை அவனை பெரிதாக தாக்க அவள் முகத்தை கண்டு பிடித்து “அழாத மா”, என்று சமாதானம் செய்தான்.
அடுத்த நொடி அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து விட்டாள் கீர்த்தி.
அவள் இப்படி செய்வாள் என்று தெரியாமல் விக்கித்து போனான் மகேந்திரன். மார்பில் சாய்ந்து அழுகையில் குலுங்கி கொண்டிருந்தவளை ஆதரவாக அணைத்து கொண்டான்.