Advertisement

அத்தியாயம் 5
நீ என்னை
கடுமையாக தண்டித்தால்
கூட அதை
எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
அந்தரத்தில் பரந்த இட்லி, சட்னி மற்றும் சாம்பாரில் தோய்த்து மேல் நோக்கி சென்றது.
அச்சத்துடன் மகேந்திரன் அருகில் சென்ற ராம் அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டு பயந்து போய் பார்த்தான்.
அவனும் அதே அச்சத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தான். ஆனால் தான் சொல்வதை நம்பாமல் இருந்த நண்பனுக்கு உண்மை தெரிந்ததில் அவனுக்கு நிம்மதியாகவும் இருந்தது.
கீர்த்தியோ அவர்களை கண்டு கொள்ளாமல் சாப்பாட்டில் கவனம் ஆனாள். இட்லி காலியாகி கொண்டிருப்பதை இருவரும் வெறித்த பார்வையுடன் பார்த்து கொண்டார்கள்.
அடுத்ததாக மற்றொரு பார்சல் தன்னாலே பிரிக்க பட்டு அதில் இருந்தும் இட்லி கீர்த்தி தட்டில் வைக்க பட்டது. மறுபடியும் அதுவே தொடர்ந்தது.
ஒரு வாய் கூட உண்ணாமல் அந்த காட்சியையே வியப்பாக பார்த்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
ராம் முகத்தை திரும்பி பார்த்தான் மகேந்திரன். அவனோ அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான். அவனை அசைத்தான் மகேந்திரன்.
அதில் அவனை பார்த்தவன் “பயமா இருக்கு டா”, என்று கண்களால் சொன்னான்.
“இப்ப பாரு”, என்று சொல்லி விட்டு மெதுவாக இட்லி காணாமல் போய் கொண்டிருந்த கீர்த்தி வாய் இருந்த இடத்தை நோக்கி கையை நீட்டினான் மகேந்திரன்.
கீர்த்தி வாயருகே கொண்டு செல்லும் போது அவன் கையை நீட்டியதால் தலையை பின்னால் இழுத்து சாப்பிட்டாள் கீர்த்தி. இவன் கண்ணுக்கு, அந்த இட்லி இவன் கையில் அகப்படாமல் பின்னால் சென்றது போல இருந்தது.
பின் கையை எடுத்து கொண்டவன் மறுபடியும் அவசரமாக கையை நீட்டினான். கீர்த்தி அதை கவனிக்காததால் அந்த இட்லி துண்டு அவளுடைய இரண்டு பல்லுக்கு இடையில் வைத்த போது மகேந்திரனும் அந்த இடத்தில் கையை வைத்தான்.
இப்போது அவன் விரல் அவள் வாய்க்குள் இருந்தது. ஆனால் மகேந்திரன் தான் அதிர்ச்சியாக கையை விருட்டென்று எடுத்து கொண்டான். அவன் உணர்ந்த அந்த பல், அந்த நாக்கின் ஈரம் என அனைத்தையும் உணர்ந்திருந்தது அவனுடைய விரல்.
அதில் நடுங்கி போனவன் கொஞ்சம் தைரியத்தை வர வைத்து கொண்டு ராமை பார்த்தான். அவனோ வெளிறி போய் அமர்ந்திருந்தான். “இதை யாரோ தான் டா ராம் சாப்பிடுறாங்க”, என்றான் மகேந்திரன்.
“கண் முன்னாடி தான சாப்பிடுறாங்க? எனக்கே தெரியுது. ஆனா யாருன்னு தெரியலையே. யார் டா இது?”, என்று கேட்டான் ராம்
“ஏய், நீ யாரு? எங்க எதிர்ல உக்காந்து எங்க சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருக்க?”, என்று கேட்டான் மகேந்திரன்.
ஒரு நொடி மேலே சென்று கொண்டிருந்த இட்லி ஒரு இடத்தில் நின்றது. பின் மறுபடியும் கீர்த்தி வாய்க்குள் சென்று விட்டது.
இட்லி நின்றதால் ஏதாவது பதில் வரும் என்று நினைத்து காத்திருந்தவர்கள் மறுபடியும் இட்லி காணாமல் போனதால் கடுப்பாகி விட்டார்கள்.
“ஏய், என்ன திண்ணி பண்டரமா நீ? இப்படி எங்க சாப்பாட்டை திருடி திங்குறதுக்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்”, என்றான் மகேந்திரன்.
அடுத்த நொடி மேலே சென்று கொண்டிருந்த இட்லி துண்டை தட்டில் போட்டு விட்டாள் கீர்த்தி. அவளுடைய கண்கள் கலங்கி விட்டது.
கோபத்துடன் அந்த தட்டை எடுத்து கொண்டு கிட்சன் நோக்கி சென்று விட்டாள்.
“மச்சான், என்ன டா தட்டு  பறக்குது?”, என்று கேட்டான் ராம்.
“அதை விடு, இங்க வரும் போதே பறந்து தான் வந்துச்சு. ஆனா பாத்தியா நான் திட்டின உடனே அது சாப்பிடாம எழுந்து போயிட்டு”, என்றான் மாகேன்திரான்.
“அட, ஆமா டா. அதுக்கு நீ பிச்சைன்னு சொன்ன உடனே கோபம் வந்துருச்சு போல டா? ஐயோ பாவம். பாதி சாப்பாட்ல எழுப்பி விட்டுட்டோமே?”
“எருமை, மீதியை எடுத்து நீயே ஊட்டி விடேன். நானே யாருன்னு தெரியாம அரண்டு போயிருக்கேன். நீ யாருன்னே தெரியாத பேய் சாப்பிடலைன்னு வருத்த பட்டுட்டு இருக்க? வா அது என்ன செய்யுதுன்னு பாப்போம்”, என்று சொல்லி கொண்டே எழுந்து கிட்சன் நோக்கி செல்ல திரும்பினான் மகேந்திரன்.
“நீயே அதை பாலோவ் பண்ணிக்கோ பா. நான் வரலை”, என்றான் ராம்.
அவன் கையை பிடித்து இழுத்து எழுப்பி கூட்டி கொண்டு போனான் மகேந்திரன்.
இருவரும் உள்ளே சென்று பாக்கும் போது தட்டு தன்னால் குழாயில் கழுவ பட்டு கொண்டிருந்தது.
இருவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். அந்த தட்டும் மற்ற தட்டுகளுடன் வைக்க பட்டது. அடுத்து எந்த அரவமும் இல்லை. இருவரும் மறுபடியும் வந்து தட்டின் முன் அமர்ந்து விட்டார்கள்.
“என்ன ஆச்சு டா ? அது போயிருக்குமோ?”, என்று கேட்டான் ராம்.
“தெரியலை டா. இங்கயே இருக்கவும் செய்யலாம்”, என்றான் மகேந்திரன்.
“இப்ப என்ன செய்ய? அது போய்ட்டா இருக்கானு எப்படி கண்டு பிடிக்க?”
“ஒரு ஐடியா இருக்கு ராம்”
“என்னது டா?”
“நீ டிரஸ் மாத்து. அது இருந்துச்சுன்னா ஐயோன்னு  அலறும். இல்லைன்னா அலறாது”
“நீ செக் பண்ண என் மானம் தான் கிடைச்சதா டா உனக்கு? நானே அது நம்மளை இப்படி சாப்பிட விடாம செஞ்சிட்டேன்னு கடுப்புல இருக்கேன்”
“உன்னை யாரு சாப்பிட வேண்டாம்ன்னு சொன்னது? வா சாப்பிடலாம்”
“அது இருக்குமே டா ?”
“காலைல ஒரு கிராமத்துக்கு போனேன்ல? அங்க இருந்து தான் இந்த விடாது கருப்பு என் கூட வந்துருக்கும் போல? இப்ப திட்டிட்டேன்ல? அது கோப பட்டு போயிருக்கும். எனக்கு பசிக்குது. நீ வா சாப்பிடலாம்”
“என்னமோ நாய் குட்டி கூட வந்துருச்சுன்னு சொல்ற மாதிரி சொல்ற?”, என்ற படியே இட்லியை எடுத்து சுற்றி முற்றி பார்த்து கொண்டே சாப்பிட்டான் ராம். சாப்பிடும் போதே “உனக்கு பயமா இல்லையா மகேந்திரா?”, என்று கேட்டான் ராம்.
“எனக்கு உயிருள்ள மனுசங்களை பாத்து தான் டா பயம். பேய்களை பாத்து எல்லாம் பயம் இல்லை. பேய் எல்லாம் நல்ல பேயா தான் இருக்கும்”, என்று விரக்தியான குரலில் சொன்னான் மஹேந்திரன்.
அவன் கூறியது மனதுக்கு வருத்தத்தை அளித்தாலும் அவனை சகஜமாக்கும் பொருட்டு “பேய்க்கு எப்படி டா நல்ல பேய்ன்னு செர்டிபிகேட் கொடுக்குற?”, என்று கேட்டான் ராம்.
“அது தனியா எடுத்து டீசண்ட்டா தான் சாப்பிட்டது. அப்புறம் பொறுப்பா தட்டை எல்லாம் கழுவி வைக்குதுல்ல அதான்”
“அடேய், நீ பாராட்டிட்டே இருக்கன்னு நினைச்சு அது திரும்பி வந்துற போகுது. திருப்பியும் வந்துச்சுன்னா என்ன செய்ய?”
“என்ன செய்ய? நம்ம கூட அதுக்கும் படுக்க இடம் கொடுத்துற வேண்டியது தான்”, என்று சிரித்தான் மகேந்திரன்.
“ஐயோ, உன் பக்கத்துல நான் படுக்க மாட்டேன் பா. பேய் கூட எல்லாம் குடுத்தனம் பண்ற? நல்லதா போச்சு. அது கோப பட்டு போய்ட்டு”, என்று சொல்லி கொண்டே தட்டை எடுத்து கொண்டு போய் சின்கில் போட்டான். அடுத்து மகேந்திரனும் போட்டான்.
ஆனால் கொஞ்ச நேரத்திலே இவர்கள் சாப்பிட்ட தட்டும் சாம்பார் கிண்ணமும் கூட விளக்கி கழுவ பட்டது.
“கண்டிப்பா இது பொம்பளை பேயே தான் டா. அப்புறம் அது எங்கயும் போகல. இங்க தான் இருக்குது”, என்றான் ராம்.
“இரு வறேன். இதை இன்னைக்கு ஒரு வழி பண்றேன்”, என்று சொல்லி விட்டு “ஏய், நீ யாரு? எதுக்கு என் வீட்டுக்கு வந்துருக்க? பேயா அலையும் போது கூட என்னை தான் டார்சல் பண்ணனுமா?”, என்று கத்தி கேட்டான்.
மனத்துக்கு கஷ்டமாக இருந்தாலும் அமைதியாக இருந்தாள் கீர்த்தி.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்து விட்டு, “பதில் கூட சொல்லாத திமிர் பிடிச்ச பேய் போல டா. நாளைக்கு முதல் வேலையா ஒரு சாமியாரை கூட்டிட்டு வந்து இதை விரட்டணும்”, என்று மகேந்திரன் சொன்னவுடன் அவன் அருகில் வந்த கீர்த்தி அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டினாள்.
“ஆ, அம்மா”, என்று தலையை தடவி கொண்டான் மகேந்திரன்.
“என்ன மச்சான் ஆச்சு?”, என்று கேட்டான் ராம்.
“தலையில் கொட்டி வச்சிட்டு டா “
“நீ அதை திட்டினல்ல? அதான் அதுக்கு கோபம் வந்துருச்சு போல?”
“ஏய், ராம் நீயும் அதை திட்டு. உன்னை கொட்டுதான்னு பாப்போம்”
“நான் பேய் கிட்ட எல்லாம் அடி வாங்க தயாரா இல்லை பா. அப்புறம் நான் என் தங்கச்சியை திட்டவே மாட்டேன்”
“ஆன், என்னது தங்கச்சியா?  நீ பொழைச்சிக்குவ டா. அப்புறம் திமிர் பிடிச்சவளை திமிர் பிடிச்சவன்னு சொல்லாம என்ன சொல்ல?”, என்று மகேந்திரன் கேட்டதும். அருகில் தொங்கி கொண்டிருந்த துண்டை எடுத்த கீர்த்தி அதை சுருட்டி மகேந்திரன் முகத்தில் எறிந்தாள்.
முகத்தில் பட்ட தூண்டில் கடுப்பானவன் அதை கையில் எடுத்து விட்டு ராமை பார்த்தான். ராமோ வாசல் அருகே நின்று கொண்டிருந்தான்.
“அங்க என்ன ராம் பண்ற?”
“நீயும் பேயும் சண்டை போடூறத்தை வேடிக்கை பாக்குறேன். அப்புறம்  நான் மொட்டை மாடிலே தூங்கிக்கிறேன் டா”, என்று நகர பார்த்தான்.
“இரு ராம். நானும் வறேன்”, என்று சொல்லி விட்டு கதவை பூட்டி விட்டு இருவரும் மாடிக்கு சென்றார்கள் கீர்த்தியும் அவர்களுடன் சென்றாள்.
மாடியில் தரையில் வானத்தை பார்த்து இருவரும் படுத்தார்கள். சிலுசிலுவென்ற காத்து இருவரையும் தீண்டியது.
“நல்லதா போச்சு டா. அதை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு வந்துட்ட?  கண்டிப்பா நாளைக்கு மந்திர வாதியை கூட்டிட்டு வரணும் டா”, என்றான் ராம்.
“ஹ்ம், ஆனா அது வீட்டுக்குள்ள அடஞ்சிருக்கும்னு நினைக்கிற?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“தெரியலை. அப்படியே பாயை எடுத்துட்டு வந்துருக்கலம் டா”
“இங்க படுக்க முடியாது மச்சான். கொஞ்ச நேரத்துல செமையா கொசு கடிக்க ஆரம்பிச்சிரும்”
“கொசு கடிச்சா கூட பரவால்ல. அதுக்காக பேய் கூட எல்லாம் இருக்க முடியாது”
“டேய், அது நல்ல பேய் டா”
“நீ தான் அதை மெச்சிக்கணும். சரி நாளைக்கு ட்ரீட் எங்க தர?”
“ட்ரீட்டா எதுக்கு டா? பேய் என் வீட்டுக்கு வந்ததுக்கா?”
“அதுக்கில்லை டா. நாளைக்கு உன் ஆளை பாக்க போற தான? அதான்”
“ஆள் அது இதுனு உளறிட்டு இருந்த மண்டையை உடைச்சிருவேன்”
“ஹா ஹா, உன் ஆள் இல்லையா? நம்பிட்டேன். வினோதினின்னு  சொன்னாலே உன் முகம் அப்படியே மலர்ந்து போகுது”
“ஏய், அது ஒரு இம்பிரசன் டா. லவ் எல்லாம் இல்லை”
“ஆனா பாத்தா லவ் பண்ண ஆரம்பிச்சிருவ. அவ அவ்வளவு அழகு டா”
“அழகு முக்கியம் இல்லை மச்சான். குணம் தான் முக்கியம். அப்புறம் அவ எல்லாம் நம்மளை எப்படி திரும்பி பாப்பா. மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குறவன் நான். ஆனா முப்பது லட்சம் மேல சம்பளம் கொடுக்குறவங்க அவங்க”
“நீயும் பணக்காரனா இல்லைன்னு வருத்த படுற மாதிரி இருக்கே?”
“சே சே, நான் என்னைக்குமே அப்படி நினைச்சதே இல்லை. என்னை எனக்காகவே விரும்புற பொண்ணை தான் எனக்கு பிடிக்கும்”

Advertisement