Advertisement

“நீ அசிங்கமா திட்டினாலும் பரவால்ல டா. நிஜமாவே எனக்கு நீ கதை சொல்ற மாதிரி தான் டா இருக்கு. போய் சாப்பிடு”
“நான் சாப்பிட்டுட்டேன் ராம்”
“அப்படியா? என்ன சாப்பிட்ட?”
“பிரியாணி தான்”
“அடேய், நீயே பிரியாணி வாங்கிட்டு வந்து அதை முழங்கவும் செஞ்சிட்டு என்னை ஏன் டா சாகடிக்கிற?”
“பிசாசே கையில கிடைச்ச கொன்னுருவேன் டா. நான் முதல் தடவை வாங்கிட்டு வந்த பிரியாணியை தான் யாரோ சாப்பிட்டாங்க. வெறும் பேப்பரை கண்ணுல பாத்துட்டு பயத்துல வீட்டை சாத்திட்டு வெளிய போய்ட்டேன். அப்புறம் எனக்கு தான் பிரம்மை போலன்னு நினைச்சு மறுபடியும் போய் ஒரு பிரியாணி வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன். அந்த இடத்துல சாப்பிட்ட பேப்பர் கூட இல்லை”
“இருந்தா தான டா இருக்கும்?”, என்று கேட்டான் ராம்.
“அவசர குடுக்கை முழுசா கேளு டா”
“ஹி ஹி சொல்லு”
“சரி இந்த சாப்பாட்டை சாப்பிடுதான்னு பாக்க அதே இடத்துல நான் உக்காந்து பார்சல் பிரிச்சேன். ஆனா அப்ப யாரும் சாப்பிடலை. நான் மட்டும் தான் சாப்பிட்டேன்”
“அது தான் எனக்கு தெரியுமே. நீ தான் சாப்பிட்டேன்னு”
“கொன்னுருவேன் ராம். நான் முதல் தடவை வாங்கிட்டு வந்தது, அதை யாரோ சாப்பிட்டது எல்லாமே கனவுன்னு வச்சுக்குவோம். ஆனா குப்பை தொட்டில முன்னாடி சாப்பிட்டு போட்ட பேப்பரும் கிடக்குது டா”
“கிடக்காம எப்படி இருக்கும்? நீ தான் ரெண்டு பிரியாணி மொக்கி இருக்கியே? இதுல வேற யாரோ சாப்பிட்டாங்கன்னு கதை விடுற”, என்று ராம் சிரித்ததும் அடுத்த நொடி போனை வைத்து விட்டான் மகேந்திரன்.
“ஐயையோ கோப பட்டுட்டானே? ஒரு வேளை உண்மையா தான் சொன்னானா? நான் தான் அவனை கடுப்பேத்திட்டேனா?”, என்று நினைத்து கொண்டே மகேந்திரனுக்கு போன் செய்தான் ராம்.
ஆனால் அவனோ கட் பண்ணி விட்டான். “போச்சு, இனி இவனை சமாதானம் பண்ணனும். வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவனை போய் பாக்கணும்”, என்று எண்ணி கொண்டே தன்னுடைய வேலையை தொடர்ந்தான் ராம்.
“நான் இவ்வளவு தூரம் சொல்றேன்? நம்ப மாட்டிக்கான்”, என்று கடுப்புடன் அமர்ந்திருந்த மகேந்திரன் சிறிது நேரத்திலே “ராமுக்கு நம்புறதுக்கு கஷ்டமா தான் இருக்கும். இதே மாதிரி அவன் சொல்லிருந்தா நானும் இப்படி தான நினைப்பேன்?”, என்று எண்ணி சமாதானமாகி விட்டான்.
இந்த கலவரத்தில் மணியை பார்த்தான் அது நான்கு என்று காட்டியது. வேற என்ன செய்ய என்று தெரியாமல் மறுபடியும் படுத்து விட்டான்.
ஆனால் கரண்ட் இல்லாததால் ஏற்கனவே இவ்வளவு நேரம் தூங்கி இருந்ததால் ஒரு பொட்டு தூக்கம் கூட வர வில்லை. கண்களை மூடி சும்மா படுத்திருந்தான். அவன் படுத்து சிறிது நேரத்தில் அவன் அருகில் அமர்ந்தாள் கீர்த்தி. 
பக்கத்தில் யாரோ அமர்வது போல அவன் பாய் ஆடியது. திகைத்து கண் விழித்தவன் யாரும் இல்லாததால் கண்களை மூடி விட்டான். 
சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவனின் முகத்தை மெல்லிய காற்று வருடியது. “கரண்ட் வந்துட்டு போல?”, என்று எண்ணி கொண்டே கண்களை திறந்தவன் அதிர்ந்து போனான். அவன் முகம் அருகே துண்டு ஆடி கொண்டிருந்தது.
அவன் இப்படி விழிப்பான் என்று தெரியாததால் அப்படியே கையை அசைக்காமல் வைத்திருந்தவள் அவன் துண்டை கண்டு அஞ்சுவதை பார்த்து துண்டை அவன் மீதே போட்டாள்.
“ஐயையோ”, என்று அலறியவன் எழுந்து கதவு அருகே போய் நின்று கொண்டான். 
“சேர் மேல போட்ட துண்டு எப்படி இங்க வந்தது? அதுவும் தன்னால எப்படி காத்து வீசும்?”, என்று யோசித்து கொண்டே திரு திருவென்று விழித்து கொண்டு நின்றான். அவனை பார்த்து சிரித்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
அவனோ வீட்டை விட்டு ஓடுவதற்காக தயாராக நின்றான். அப்போது கதவு தட்டும் ஓசையில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன் ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து கொண்டு மெதுவாக கதவை திறந்தான்.
வெளியே நின்றிருந்த ராமை பார்த்த பின்னர் தான் நிம்மதியாக மூச்சு விட்டான். வியர்வை பூத்த முகத்துடனும், கண்களில் ஒரு அச்சத்துடனும் நின்ற மகேந்திரனை பார்த்த ராம் திகைத்தான்.
“உள்ள வா டா”, என்றான் மகேந்திரன்.
“நான் வரது இருக்கட்டும். நீ ஏன் இப்படி நிக்குற? என்ன வேலை செஞ்ச? இப்படி வியர்க்குது உனக்கு?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான் ராம்.
“தூங்கிட்டு தான் டா இருந்தேன்”
“அப்படியா? ஓ கரண்ட் இல்லையா? அதான் வேர்க்குதா? காத்தே வந்திருக்காது”, என்று ராம் சொல்லி வாயை மூடும் போதே கரண்ட் வந்து பேன் சுற்றியது.
“நான் வந்ததும் கரண்ட் கூட வந்துருச்சு பாரு டா. சரி அப்ப எதுக்கு அப்படி உளறிட்டு இருந்த?”
அவனை முறைத்த மகேந்திரன் “நான் சொன்னது உனக்கு உளறல் மாதிரி இருந்ததா? இங்க வா”, என்று அவனை கை பிடித்து அழைத்து சென்று குப்பை பெட்டியை காண்பித்தான்.
“ஆமா, ரெண்டு கவர் கிடக்கு. அதுல நான் ஒன்னும் சொல்லலையே. ஆனா நீ மட்டும் இருக்குற வீட்ல வேற யாரு டா சாப்பிட்டிருக்க முடியும்?”, என்று கேட்டான் ராம்.
“எனக்கும் குழப்பமா தான் ராம் இருக்கு. ஆனா நான் என் கண்ணால வேற யாரோ சாப்பிடுறதை பாத்தேன். இன்னொரு விஷயம் தெரியுமா? எனக்கு தன்னாலே துண்டு காத்து வீசுச்சு டா. அதான் அரண்டு போய் நின்னேன்”
“என்ன டா சொல்ற?”
“நிஜமா தான் டா. நம்பு”
“எனக்கே பயமா தான் டா இருக்கு. நீ சொல்றதை பாத்தா நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. இங்க எங்களை தவிர வேற யாராவது இருக்கீங்களா?”, என்று கேட்டான் ராம்.
“நானும் கேட்டு பாத்துட்டேன் டா. சத்தமே இல்லை. சத்தம் சத்தம்… டேய் இப்ப தான் டா ஞாபகம்  வருது. நான் வீட்டுக்குள்ள வந்தப்ப ஒரு பொண்ணு சத்தம் கேட்டுச்சு டா”, என்று அதிர்ச்சியாக சொன்னான் மகேந்திரன்.
“என்ன டா சொல்ற?”
“ஆமா, நான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து டிரெஸ் மாத்த சட்டையை கழட்டிட்டு பேண்ட்டை கழட்டுனேனா? அப்ப ஐயையோ அப்படின்னு ஒரு பொண்ணோட குரல் கேட்டுச்சு. நான் பிரம்மைன்னு விட்டுட்டேன்”
“புதுசு புதுசா எதையோ சொல்ற? போற இடத்துல எதாவது பொண்ணை கூட்டிட்டு வந்துட்டியா என்ன?”
“அறைஞ்சிருவேன். இருக்குறது ரெண்டு ரூம். இதுல நான் எங்க பொண்ணை ஒளிச்சு வைக்க? யாருமே இல்லை. ஆனா சத்தம் கேட்டுச்சு டா”
“அது மட்டும் இல்லாம சிக்கனை எப்படி சாப்பிட்டது தெரியுமா?”
“ஆமா, கேக்கணும்னு நினைச்சேன்? நீ எப்பவும் எம்ப்டி பிரியாணி தான வாங்குவ? என்னைக்காவது ஆசை பட்டா மட்டன் வாங்கி சாப்பிடுவ? சூடுன்னு சொல்லி சிக்கன் வாங்க மாட்டியே டா?”
“அந்த கொடுமையை ஏன் கேக்குற? நான் சாதாரண பிரியாணி தான் கேட்டேன். ஆனா கடைக்காரன் தான் தெரியாம மாத்தி கொடுத்துட்டான்”, என்று சொல்லும் போதே மகேந்திரனுக்கு மூலையில் பல்ப் எரிந்தது. 
“டேய் ராம், அந்த கடைக்காரன் எப்படி பார்சல் மாறுச்சுன்னே தெரியலைன்னு சொன்னான் டா. இதை விட அதிக கூட்டம் இருந்தப்ப கூட அவன் இப்படி செஞ்சது இல்லை. எனக்கு என்னமோ இது இந்த பிரியாணி சாப்பிட்ட ஆளோட வேலைதான்னு தோணுது டா”
“ஆள் ஆள்னு சொல்றியே? அது யாரு”
“வெங்காயம். அது தெரியாம தான முழிக்கிறேன்? ஒரு வேளை இந்த காத்து கருப்புன்னு எதாவது என் மேல ஏவி விட்டுருப்பாங்களோ?”
“எனக்கும் குழப்பமா இருக்கு டா. எதுக்கும் கொஞ்சம் நாம வெளிய போயிட்டு வரலாம். எதாவது ஸ்ட்ரெஸ் வந்து உனக்கு இப்படி தோணுனாலும் தோணலாம். தப்பா நினைக்காத டா. பிராக்டிகலா நினைச்சு பாரு. பீச் போலாமா?”
“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி சட்டையை மாட்டினான். அவனை பார்த்த ராம் “இப்படியே வா வர போற? பேண்டை எடுத்து போடு. ஷாட்ஸ் வேண்டாம்”, என்றான்.
“ப்ச், மறந்துட்டேன் டா. கண்ணை மூடிக்கோ. இப்பவே மாத்திறேன்”, என்று சொல்லி டவுசரை கழட்டினான் மகேந்திரன்.
அடுத்த நொடி “ஐயோ ச்சி”, என்ற பெண் குரல் இருவரின் செவிகளையும் தீண்டியது.
கொடியில் கிடந்த லுங்கியை எடுத்து தன் மானத்தை மறைத்த மகேந்திரன்  “டேய் ராம், உனக்கு கேட்டுச்சா?”, என்று கேட்டான்.
“நீ சொன்னப்ப நம்பலை டா. ஆனா இங்க யாரோ இருக்காங்க. சீக்கிரம் கிளம்பு டா. வெளிய போகலாம்”, என்றான் ராம்.
“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி அப்படியே பாத்ரூம் சென்றவன் கழட்டி போட்ட பேண்டையே எடுத்தான். “இங்கயும் யாரும் இருப்பாங்களோ? ஐயோ எப்படி டிரெஸ் மாத்த? நல்லதா போச்சு ஜட்டி போட்டிருக்கேன்”, என்று நினைத்து கொண்டு கடகடவென்று பேண்ட்டை மாட்டி கொண்டு வியர்த்து பூத்த முகத்துடன்  வெளியே வந்தான்.
இருவரும் அவசரமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்கள். 
இவன் வீட்டில் இருந்து ஒரு கால்மணி நேரத்தில் பீச் வந்துவிடும் என்பதால் இருவரும் பேசிய படியே நடந்தார்கள். மகேந்திரன் அருகில் கீர்த்தியும் நடந்து போனாள். 
பீச் மணலில் அமர்ந்ததும் “இப்ப நம்புறியா டா நான் சொன்னதை?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“ஹ்ம்ம், ஆமா. ஆனா நீ எதாவது வாய்ஸ் ரெக்கார்டர் ஆன் பண்ணி வச்சிட்டியா?”, என்று கேட்டான் ராம்.
“உன்னை கொன்னுருவேன் டா. இப்படி கதை ரெடி பண்ணி உன்னை ஏமாத்தணும்னு எனக்கு ஆசை பாரு? நான் ஏன் டா அப்படி எல்லாம் செய்ய போறேன்?”
“ம்ம், எதாவது சாமியார் கிட்ட போவோமா டா?”
“எல்லாவனும் திருட்டு பயலுக டா. யாரை நம்பி போக சொல்ற?”
“அதுவும் சரி தான். எதுக்கும் இன்னைக்கு நீ என் வீட்டுக்கு வா. உன் வீட்டுக்கு போக வேண்டாம்”
“அதெல்லாம் வேண்டாம் டா. உங்க வீட்ல எல்லாரும் இருப்பாங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கும்”
“எப்ப கூப்பிட்டாலும் இதையே சொல்லு. சரி நான் இன்னைக்கு உன் வீட்டுக்கு வரேன். யார் வேலை அதுன்னு கண்டு பிடிப்போம் சரியா?”
“தேங்க்ஸ் டா, உனக்கு பேய் பயம் எல்லாம் இல்லையா ராம்?”
“பேயே இல்லை டா. உன்னை கலாய்க்க தான் இப்படி செய்றாங்க. இல்லைன்னா என்னை கலாய்க்க நீ இப்படி செய்ற?”
“ஆமா உன்னை ஏமாத்துறது தான் எனக்கு வேலை பாரு”
“ஹ்ம்ம், அப்புறம் “, என்று ஆரம்பித்து இருவரும் பல கதைகளை பேசிய படியே இருந்தார்கள்.
கொஞ்சம் இருட்ட ஆரம்பித்ததும் எழுந்தவர்கள் மகேந்திரனுடைய  வீட்டுக்கு சென்றார்கள். 
வீட்டின் அருகே  இருந்த ஒரு ஹோட்டலில் இருவருக்கும் இரவு உணவை வாங்கிய மகேந்திரன் சிறிது யோசித்து விட்டு மற்றொரு பார்சலும் வாங்கினான்.
அவனை குழப்பமாக பார்த்த ராம் “அது யாருக்கு டா?”, என்று கேட்டான்.
“ஒரு வேளை மதியம் மாதிரி சாப்பாடு காலியாச்சுன்னா மறுபடியும் சாப்பாடு வாங்க வர வேண்டி இருக்கும்”
“ஹா ஹா, கூட ஆள் இருக்குனு கன்பார்ம் பண்ணிட்டியா?”, என்று சிரித்தான் ராம். இருவரும் திகிலுடன் தான் வீட்டை திறந்து உள்ளே சென்றார்கள். கதவை புகுந்து கொண்டு, கீர்த்தியும் உள்ளே சென்றாள். 
வீட்டின் உள்ளே எந்த அரவமும் இல்லாததால் அமைதியாக சில நிமிடம் நின்றார்கள். பின் “இந்தா டா கைலி, மாத்திக்கோ”, என்று ராம் கையில் கொடுத்தான் மகேந்திரன்.
அங்கேயே மாத்த போனவன் பின் “நான் குளிச்சிட்டு கட்டிக்கிறேன்”, என்று சொல்லி பாத்ரூம் சென்று விட்டான்.
மகேந்திரன் சாப்பாட்டை எல்லாம் நடு வீட்டில் வைத்து விட்டு தட்டையும் தண்ணீரையும் எடுக்க சென்றான்.
இரண்டு தட்டையும் ஒரு சொம்பு தண்ணீரையும் எடுத்து வந்து வைத்து விட்டு ராம் வரவுக்காக காத்திருந்தான். அப்போது மூன்றாவது ஒரு தட்டு இவனை நோக்கி பறந்து வந்தது.  
அதிர்ச்சியாக அதையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் மகேந்திரன்.
இவன் வைத்திருந்த தட்டின் அருகே அந்த தட்டும் வந்து அமர்ந்தது. குளித்து முடித்து வெளியே வந்த ராம் “என்ன டா ரெண்டு பேருக்கு மூணு தட்டை வச்சிருக்க? நீயே இல்லாத பேயை வா வா ன்னு கூப்பிடுவ போல?”, என்று சிரித்தான்.
“நான் சொன்னா இவன் நம்பவா போறான். பாத்து தெரிஞ்சிக்கட்டும். கண்டிப்பா அந்த பார்சலை யாரோ இப்ப சாப்பிட போறாங்க”, என்று நினைத்து கொண்டு “இரு டா டிரஸ் மாத்திட்டு வாரேன்”, என்று சொல்லி பாத்ரூம் சென்றான் மகேந்திரன். 
பின் ராம் அமர்ந்ததும், ஒரு கிண்ணமும் கரண்டியும் எடுத்து கொண்டு வந்து மகேந்திரனும் அமர்ந்து கொண்டான். அவர்களுடன் கீர்த்தியும் அமர்ந்து விட்டாள்.
மகேந்திரன் அனைத்து பார்சலையும் வெளியே எடுத்து இரண்டை மட்டும் பிரித்து வைத்தவன் சாம்பாரை அந்த கிண்ணத்தில் ஊற்றினான்.
பின் இருவரும் இட்லி யை தட்டில் எடுத்து வைத்து சாம்பாரை ஊற்றி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
இவர்கள் ஒரு வாய் எடுத்து வைக்கும் போது இவர்கள் பார்சலில் இருந்த இரண்டு இட்லி கீர்த்தி முன் இருந்த தட்டுக்கு பறந்து சென்றது.
அதை பார்த்த மகேந்திரன் இப்ப என்ன சொல்ல போற என்பதாய் ராமை பார்த்தான். ராமோ கையில் இருந்த இட்லி யை கீழே போட்டு விட்டு  வாயை திறந்து கொண்டு அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான்.
உருகுதல் தொடரும்

Advertisement