Advertisement

அத்தியாயம் 4
நீ செய்த
பிழைகளை கூட
அழகான காவியம்
என்று எண்ணி மகிழ்ந்து
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
குளித்து முடித்து வெளியே வரும் போது ஒரு முக்கால் டவுசரை போட்டு கொண்டு வந்தான் மகேந்திரன்.
மேல் சட்டை இல்லாமல் கவர்ச்சியாக வந்தவனை பார்த்து பேய் என்பதை மறந்து வெட்க பட்டாள் கீர்த்தி.
பெண்கள் மட்டும் தான் கவர்ச்சியாக இருப்பார்கள் என்று யார் சொன்னது? மனதுக்கு பிடித்த ஆண்களின் அழகில் பெண்களும் மயங்கி விழுவார்கள். அவனை கண்டு கீர்த்தி மனமும் மயங்கியது.
தோளில் போட்டிருந்த துண்டை அங்கு கட்டி இருந்த கொடியில் போட்டவன் பின் ஓரு ஓரத்தில் இருந்த பாயை எடுத்து  விரித்து விட்டு ஒரு தலையணையை போட்டு விட்டத்தை பார்த்து படுத்து விட்டான்.
அப்போது அவனுடைய போன் சிணுங்கியது. அதை எடுத்து பார்த்தவன் ஒரு சிறு சிரிப்போடு ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டு “சொல்லு ராம்”, என்றான். கீர்த்தியும் அவன் அருகே அமர்ந்து கொண்டு உன்னிப்பாக அவனுடைய உரையாடலை கேட்க ஆரம்பித்தாள்.
“என்ன மச்சி? எங்க இருக்க? வேலை முடிஞ்சிருச்சா?”, என்று கேட்டான் மகேந்திரனுடன் வேலை செய்யும் ராம். ஆபிசில் அவனுக்கு இருக்கும் ஒரே உயிர் நண்பனும் கூட.
“முடிஞ்சிருச்சு டா. இப்ப தான் ரூமுக்கு வந்தேன். உனக்கு எங்க ஒர்க்?”
“இன்னைக்கு ஆபிஸ் உள்ளேயே தான் டா. நாளைக்கு தான் சோலையூர் போகணும். இப்ப டீ டைம்ல? உன் நினைப்பு வந்துச்சு. அதான் கால் பண்ணேன்”
“ப்ச், இந்த புது சூப்பர்வைசர் வந்தாலும் வந்தார். நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு பிரிச்சு அனுப்புறார் டா. எனக்கு நாளைக்கு ஆபிஸ் ஒர்க். ஆனா நீ இருக்க மாட்ட”, என்று சலித்து கொண்டான் மகேந்திரன்.
“ஆனா இதுவும் நல்லது தான் டா”, என்று சிரித்தான் ராம்.
“அடேய் பாதகா. நீ என் உயிர் நண்பனாச்சே. என்னை பிரிஞ்சு தனியே கஷ்ட படுவேன்னு நினைச்சா, நீ நான் இல்லாதது நல்லதுன்னு சொல்ற?”
“ஹா ஹா, நீ இருந்தா என் டார்லிங்கை எப்படி சைட் அடிக்க விடுவ? எங்க ரெண்டு பேரையும் பேச விடாம டார்ச்சல் பண்ணுவ? இப்ப பாரு. நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கோம்”
“அந்த கருவாச்சி ஒரு ஆளுன்னு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க நீ. போடா”
“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மச்சான்”
“அது உண்மை தான்”
“எது டா?”, என்று ஆர்வமாக கேட்டான் ராம்.
“அவ காக்கான்னு சொன்னல்ல அது தான்”
“ஏய், கொன்னுருவேன். போடா. அவளை அப்படி சொல்லாத, சொல்லிட்டேன்”
“டேய்  ராம் அடங்கு டா. அந்த மூஞ்சியை பாத்தா எப்படி தான் உனக்கு ரொமான்ஸ் வருதோ தெரியலை. அவ அழகை பத்தி நான் விளையாட்டுக்கு தான் சொல்றேன். ஆனா குணம் சரி இல்லை டா”
மகேந்திரன் எந்த பெண்களையும் தரக்குறைவாக எல்லாம் பேச மாட்டான். ஆனால் அவன் மனதில் ஒழுக்கமான பெண்களுக்கு முதலிடம் இருக்கும். ராம் கடலை போடும் லலிதாவோ ஒழுக்கம் என்றால் என்னவென்று கேட்பாள். அவளை பார்த்தாலே வெறுப்பான் மகேந்திரன்.
“சரி சரி சீரியஸா அட்வைஸ் பண்ண ஆரம்பிக்காத. ஆபிஸ்ல நேரம் போக வேண்டாமா? அதான்? எனக்கு எல்லாம் என் அத்தை பொண்ணு குடும்ப குத்து விளக்கு இருக்கா மச்சான். இது எல்லாம் சும்மா தான்”, என்று சிரித்தான் ராம்.
“அப்படின்னா சரி தான்”
“சரி சரி, சொல்ல மறந்துட்டேன் மகேந்திரா. இன்னைக்கு உன்னோட ஆள் ஆபிஸ் வந்திருந்தா”, என்று ராம் சொன்னதும் “என்ன வினோதினி இன்னைக்கு வந்திருந்தாங்களா?”, என்று ஆச்சர்யமாக கேட்டான் மகேந்திரன்.
அவனுடைய சந்தோசத்தை பார்த்த கீர்த்திக்கு யார் அந்த வினோதினி என்ற கோபம் வந்தது.
“ஆமா டா”, என்றான் ராம்.
“சே, நாளைக்கு வந்திருந்தா பாத்துருக்கலாம்”
“கவலை படாத மச்சான். அவங்க பைல் உன் டேபிள்ல தான இருக்கு? நீ இல்லாம எப்படி அவங்க வேலை முடியும்? நாளைக்கும் வருவாங்க டா”
“சூப்பர் டா, ஒரு தடவை கூட அவங்க முகத்தை பாக்கவே இல்லைன்னு வருத்த பட்டேன் டா. நாளைக்கு பாக்க போறேன். ஜாலி ஜாலி”
“அது எப்படி டா பாக்கவே பாக்காத ஒரு பொண்ணு மேல உனக்கு இவ்வளவு லவ் வரும்?”
“டேய் லவ்ன்னு உனக்கு யார் சொன்னா? அதெல்லாம் கிடையாது. அவங்க திறமை மேல ஒரு கிரஷ். நம்மளை விட சின்ன பொண்ணு சொசைட்டில இத்தனை பீல்டுல கொடி கட்டி பறக்குதுன்னு ஒரு ஆர்வம் அவ்வளவு தான்”
“அப்படியா? நம்பிட்டேன். சரி சரி நான் என் வேலையை பாக்குறேன். அப்புறம் போன் பண்றேன் டா”
“ஹ்ம்ம் பை”, என்று வைத்த மகேந்திரனுக்கு “நாளைக்கு அந்த வினோதினியை பாக்கணும்”, என்ற ஆசை வலுப்பெற்றது.
“எப்படி இருப்பா? திறமையான பொண்ணு. கண்டிப்பா அழகா தான் இருக்கும். எப்பா, சின்ன வயசுலே எவ்வளவு திறமை? ஒரு மாசத்துக்கு அஞ்சு கோடி ருபாய் டேக்ஸ் கட்டுது. சூப்பர்வைசர் சொல்லி தான் அந்த பொண்ணை பத்தியே தெரியும். ஆனா அது வந்து போன ரெண்டு நாளும் நான்  ஆபிஸ்ல இல்லாம போய்ட்டேன். நாளைக்கு பாத்து அவளை அப்ரேஸியேட் பண்ணனும். அதுவும் புதுசா விவசாயத்துல ஆர்வம் வந்துருக்குற அந்த பொண்ணுக்கு நம்மால முடிஞ்ச ஹெல்ப் எல்லாம் பண்ணனும்”, என்று வாய் விட்டே புலம்பினான்.
“நான் இவனை ரசிச்சு இவன் பின்னாடி வந்துருக்கேன். இவன் வேற ஒருத்தியை ரசிக்க போறானாம்”, என்று நினைத்து கொண்டே அவனுடைய தொடையில் நன்கு கிள்ளி விட்டாள் கீர்த்தி.
“இந்த எறும்புக்கு வேற வேலையே இல்லை”, என்று சொல்லிவிட்டு அவள் கிள்ளிய  இடத்தில் தடவி விட்டு கொண்டான் மகேந்திரன்.
பின் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான் அவன். உறங்கும் அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சிறிது நேரத்தில் கரண்ட் கட் ஆனதும் அவன் முகத்தில் வியர்வை பூர்த்தது. அதை பார்த்தவள் பக்கத்தில் கிடந்த அவனுடைய துண்டை எடுத்து விசிறி விட்டாள்.
மூன்று மணி போல தான் எழுந்தான் மகேந்திரன். அவன் விழிப்பதை பார்த்ததுமே துண்டை கீழே போட்டு விட்டாள் கீர்த்தி.
“இவ்வளவு நேரம் காத்து வந்ததே. இப்ப தான் கரண்ட் போயிருக்கு போல?”, என்று நினைத்து கொண்டு எழுந்தவன் முகத்தை கழுவி விட்டு ஒரு சட்டையை எடுத்து போட்டு விட்டு வெளியே வந்தான்.
அப்போது நைட் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த எதிர் வீட்டுக்காரர் “என்னப்பா மகேந்திரா? இன்னைக்கு வேலை இல்லையா?”, என்று கேட்டார்.
“ஆமா, அண்ணா. மதியமே வந்துட்டேன். சரி தூக்கம். இப்ப தான் எழுந்து வரேன்”
“இந்த வெக்கைக்குள்ள எப்படி தான் தூங்குறியோ? இந்த கரண்ட் எப்ப தான் வருமோ? பன்னிரண்டு மணிக்கு போனது இப்பவும் வரலை”, என்று புலம்பி கொண்டே உள்ளே சென்று விட்டார்.
“என்ன இப்படி சொல்லிட்டு போறார்? கரண்ட் இல்லாம நான் தூங்க மாட்டேனே? அப்புறம் எப்படி தூங்கினேன்?”, என்று யோசித்த படியே அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றான்.
கீர்த்தியும் அவன் பின்னாடியே சென்றாள்.
“எம்ப்டி பிரியாணி ஒரு பார்சல்”, என்று சொல்லியவன் இரண்டு மூன்று ஆள்கள் இருந்ததால் அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
பார்சல் போடும் இடத்தில் போய் நின்ற கீர்த்திக்கு நாவில் எச்சில் ஊறியது.
அப்போது ஒருவன் வந்து “சிக்கன் பிரியாணி அப்புறம் முட்டை வச்சிருங்க”, என்று சொல்லி கொண்டிருந்தான்.
அனைவரையும் நோட்டம் விட்டாள்.
பார்சல் செய்து கொண்டிருந்தவனோ நான்கு பேருக்கும் பொட்டலம் கட்டி கவரை எடுக்க சென்ற சிறுவனுக்காக காத்திருந்தான்.
“இது தான் சாக்கு”, என்று நினைத்து கொண்டு சிக்கன் பிரியாணி இடத்தில் இருந்த பார்சலை மாற்றி வெறும் பிரியாணியை வைத்து விட்டாள்.
கவர் வந்ததும் ஆள் ஆளுக்கு கவரில் போட்டு கடைக்காரன் கொடுத்ததும் மகேந்திரனும் பணத்தை கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தான்.
“சரியான கஞ்சனா இருக்கானே? ஒரே ஒரு பார்சல் வாங்கிட்டு வாரான். எனக்கே பத்தாது. அப்புறம் இவன் எப்படி சாப்பிடுவான்? சரி ஒரு தரம் பட்டினியா கிடக்கட்டும். எவளோ வினோதினியை பத்தி பேசினான்ல? அதனால இவனுக்கு தண்டனை”, என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அவனுடன் நடந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் கதவை சாற்றியவன் “சரியான பசி. காலைல ஒரு டம்பளர் காபி குடித்தது”, என்று நினைத்து கொண்டே பாயை சுருட்டி வைத்து விட்டு அமர்ந்து பார்சலை முன்னால் எடுத்து வைத்தான்.
“ஐயோ இப்படி உக்காந்துட்டானே. இப்ப நான் எப்படி சாப்பிடுவேன்?”, என்று எண்ணி கொண்டே அவன் எதிரே அமர்ந்தாள் கீர்த்தி.
பின்  எழுந்தவன் சட்டையை கழட்டி கொடியில் போட்டு விட்டு பார்சலை கையில் எடுத்து சுத்தி இருந்த நூலை அவிழ்த்தான். பின் சால்னா மற்றும் தயிர் வெங்காயம் இரண்டையும் பிரித்தான். பிரியாணி பொட்டலத்தை பிரித்தவன் கண் முன் தெரிந்த சிக்கன் மட்டும் முட்டையில் வியந்தான்.
“ஐயையோ கடைக்காரர் மாத்தி கட்டி வச்சிட்டாரே. பணமும் கம்மியா தான கொடுத்தேன்? ஐயோ பாவம் அதை கொடுத்துட்டு வந்துருவோம்”, என்று எண்ணி கொண்டே எழுந்து சட்டையை மாட்டி கொண்டிருக்கும் போது அவன் கண்ணில் பட்டது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த சிக்கன்.
கீர்த்தி அதை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். தொங்கி கொண்டிருந்த சிக்கன் பீசையும் அதுவும் அளவு குறைந்து கொண்டு வருவதையும் பார்த்தவன் பயத்துடன் விரிந்த கண்களுடன் சாப்பாட்டை நெருங்கினான்.
சிக்கன் பீஸோ பல துண்டாக பிய்க்க பட்டு பார்சலில் விழுந்தது. இப்போது ஒரு துண்டை மட்டும் எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“இது என்ன மாயமா இருக்கு”, என்று எண்ணி கொண்டே சாப்பாட்டின் முன்னே அமர்ந்தான் மகேந்திரன்.
ஒரு துண்டை சாப்பிட்டுவிட்டு  எலும்பை ஓரமாக எடுத்து வைத்த கீர்த்தி அடுத்த துண்டை சாப்பிட ஆரம்பித்தாள்.
அதை பார்த்து குழப்பமானவன் “விசித்திரமா இருக்கு. கோழி காத்துல கரைஞ்சு போகுமா? இப்படி மிதக்குமா?”, என்று எண்ணி கொண்டே மிதந்து கொண்டிருந்த சிக்கன் பீஸை பிடிக்க போனான்.
ஆனால் அவன் கை வைத்ததும் தன்னை நோக்கி இழுத்து கொண்டாள் கீர்த்தி. “என்ன டா இது?”, என்று அதிசயித்தவன் மறுபடியும் பிடுங்க போனான். மறுபடியும் இழுத்து விட்டு அதை சாப்பிட்டவள் அடுத்து பிரியாணியை மொக்க ஆரம்பித்தாள். “சே, நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு?”, என்பது தான் அவள் எண்ணமாக இருந்தது.
கை பிடி சோறு மேலே செல்வதும் அதுவும் மறைவதும், பின்னர் மறுபடி அதே போல் நடப்பதும் இடையிடையே சிக்கன் காலியானதும் ஒரு முட்டையும் இடையிடையே காணாமல் போவதையும் உணர்ந்தவன் அதையே பார்த்து அதிர்ச்சி அடைந்து அமர்ந்திருந்தான். இதில் சால்னாவும் பறந்து பறந்து ஊற்ற பட்டு பிசைய பட்டது.
மொத்த சாப்பாட்டையும் வழித்து சாப்பிட்டு முடித்த பின்னர் தான் அவளுக்கு அவனே நினைவு வந்தான்.
“ஐயையோ”, என்று மனதில் நினைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ அவள் இருக்கும் பக்கமே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான். அவளுடைய நாடியில் ஒட்டி இருந்த ஒரு பருக்கை அவனுக்கு காற்றில் மிதப்பது போல இருந்தது.
மெதுவாக அதை தொட கையை கொண்டு சென்றான். முகம் நோக்கி அவன் கை வருவதை பார்த்தவள் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பின்னாக இழுத்தாள். ஆனால் அதற்குள் அந்த பருக்கையை எடுத்திருந்தான் மகேந்திரன்.
தொங்கி கொண்டிருந்த பருக்கையை எடுத்த மாதிரி தான் அவனுக்கு இருந்தது. ஆனால் அவளுக்கோ அவனுடைய அந்த தொடுகை ஒரு புது விதமான உணர்வை கொடுத்தது.
“வாங்கிட்டு வந்த பிரியாணி எங்க? அதை யாரு சாப்பிட்டா? இதை வெளிய சொன்னா யாராவது நம்புவாங்களா? ஒரு வேளை நான் கனவு கண்டுட்டு இருக்கேனா?”, என்று எண்ணி கொண்டே தன் கைகளை கிள்ளி கொண்டான். அது வலி கொடுத்ததில் “இது கனவு இல்லை? அப்ப யார் சாப்பிட்டா? ஒரு வேளை பேயா இருக்குமோ?”, என்று எண்ணினான்.
பேய் என்று நினைத்த பிறகு கொஞ்சம் பயம் வந்து விட்டது. சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்தவன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டான்.
“இப்ப எங்க போறான்? நல்ல சாப்பிட்டுட்டேன். இவன் பின்னாடி எல்லாம் இப்ப நடக்க முடியாது”, என்று எண்ணி கொண்டே சாப்பிட்ட பார்சலை அப்படியே சுருட்டி குப்பை கூடையில் போட்டாள் கீர்த்தி.
குழப்பமாக ரோட்டில் இறங்கி நடந்த மகேந்திரனுக்கு எவ்வளவு யோசித்தும் விடை தெரிய வில்லை. “ஒரு வேளை எனக்கு தான் பிரம்மையோ”, என்று எண்ணி கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்றான்.
அவனை பார்த்ததும் சிரித்த கடைக்காரன் “உங்களுக்கும் பார்சல் மாறிட்டா சார்? இப்ப தான் ஒரு ஆள் செம திட்டு திட்டிட்டு போறான். எப்படி தான் மாறுச்சுன்னே தெரியலை “, என்றான்.
“ஆமா அண்ணா. அதான் அதுக்கு பணம் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். அப்புறம் இன்னொரு எம்ப்டி பிரியாணியும் பார்சல் கட்டிருங்க. இந்த தடவையாவது சரியா கட்டுங்க”
“மன்னிச்சிருங்க சார். இப்பவே தரேன்”, என்றவன் பார்சலை கட்டி கொடுத்தான்.
“கண்டிப்பா எனக்கு மன பிரம்மை தான். ரூம்ல அந்த பார்சல் அப்படியே தான் இருக்கும். அது எப்படி காத்துல சிக்கன் எல்லாம் பறக்கும்?”, என்று எண்ணி கொண்டே வீட்டுக்கு வந்தவன் பார்சல் வைத்திருந்த இடத்தை பார்த்தான்.
அங்கே வெறுமையாக இருந்தது. அதை பார்த்து திகைத்து தான் போனான். “காலியான எம்ப்டி பார்சலை கூட காணுமே? என் வீட்ல யாரோ இருக்காங்களோ? ஒரு வேளை அசைவம் பார்சல் எடுத்துட்டு போனா கூடவே பேய் வரும்னு முன்னாடி பாட்டி சொன்ன மாதிரி நடந்துருக்குமோ? அதனால தான் பாட்டி அசைவம் கொண்டு போனா அதுல கருப்பான கரி துண்டையும் இரும்பு சாவியையும் கொடுத்து அனுப்புவாங்களா. அதெல்லாம் உண்மை இல்லைன்னு நினைச்சேனே? ஆனா இப்ப அப்படி தான் தோணுது? இப்ப அந்த பேய் இங்க இருக்குமா? இல்லை போயிருக்குமா? நல்லதா போச்சு, இப்ப வெறும் பிரியாணி தான் இருக்கு. இதை சாப்பிட வருதான்னு பாப்போம்”, என்று எண்ணி கொண்டு அதே இடத்தில் அமர்ந்து அதையும் பிரித்தான்.
அவன் வந்ததுமே அவன் எதிரே வந்து அமர்ந்து விட்டாள் கீர்த்தி. “அப்பாடி அவனுக்கு சாப்பாடு இல்லாம காலி பண்ணிட்டேனேன்னு நினைச்சேன்? நல்லதா போச்சு வாங்கிட்டு வந்துட்டான். பாவம் காலைல இருந்து ஒன்னும் சாப்பிடலை. சாப்பிடட்டும்”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்த படி அமர்ந்திருந்தாள்.
மகேந்திரன் பார்சலை பிரித்தும் “ஐயோ லூசு, மறுபடியும் குஸ்காவை வாங்கிட்டு வந்துருக்கான். கஞ்ச பையன். சரி அவன் தானே சாப்பிட போறான்”, என்று நினைத்து கொண்டாள் கீர்த்தி.
பய பார்வை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் சாப்பாடு அப்படியே இருந்தது. “என்ன டா வித்தியாசமா இருக்கு? ஒரு வேளை சிக்கன் பிரியாணி மட்டும் தான் சாப்பிடும் போல?”, என்று எண்ணி கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அவன் கண்கள் அந்த அறையையே அலசி கொண்டு தான் இருந்தது.
சாப்பிட்டு முடித்த மகேந்திரன் அதை சுருட்டி குப்பையில் போட எழுந்தவன் குப்பை பெட்டி அருகில் சென்று அதை பார்த்து  அதிர்ந்தான். அங்கே கிடந்தது கீர்த்தி சாப்பிட்டு போட்ட பார்சல்.
“அப்ப இங்க யாரோ இருக்காங்க. ஏதோ மாயாஜாலம் நடக்குது”, என்று நினைத்தவன் “ஏய், யாரு இருக்கீங்க? யார் நீங்க? இருக்கீங்களா?”, என்று கேட்டான்.
அவன் பயத்தையும், அதே நேரம் ஒளிந்து ஓடாமல் தைரியமாய் கேட்டதையும் பார்த்து சிரித்து கொண்டவள் அவன் செய்கைகளை ரசித்து கொண்டு இருந்தாள்.
எந்த அரவமும் இல்லாததால் கத்தி கத்தி பார்த்து ஓய்ந்தவன் “ஒன்னும் புரியலையே”, என்று எண்ணி கொண்டு ராமுக்கு அழைத்தான்.
அதை எடுத்த ராம் “என்ன டா?”, என்று கேட்டான்.
“மச்சான், இந்த நான் வெஜ்க்கு பேய் வருமா டா?”, என்று மகேந்திரன் கேட்டவுடன் திருதிருவென்று விழித்தான் ராம்.
“டேய் நல்லா தான இருக்க? தூக்கத்துல எதாவது கனவு கண்டுட்டே எனக்கு போன் பண்ணிட்டியா? நானே இப்ப செம பசில இருக்கேன் டா. நான் வெஜ்ன்னு எல்லாம் பேசி வெறுப்பேத்தாத”
“நான் எங்க டா வெறுப்பேத்துறேன்? சீரியஸா தான் கேக்குறேன். சொல்லேன்”
“ப்ச், எனக்கு பேய் மேல எல்லாம் நம்பிக்கையே இல்லை டா”
“நானும் அப்படி தான் டா இருந்தேன். ஆனா இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? பிரியாணி வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட உக்காருறேன். ஆனா என்னை சாப்பிட விடாம யாரோ சாப்பிட்டுட்டாங்க டா”
“என்ன டா உளறுற? யார் சாப்பிட்டா?”
“அது தான தெரியலை. கண்ணு முன்னாடி யாருமே இல்லை. ஆனா சாப்பாடு மேல போய் காணாம போகுது. சிக்கன் காலியாகி எலும்பா நொறுங்குது. சால்னா கவர் தன்னால மேல எழும்பி ஊத்தி பிசைஞ்சு மறுபடியும் சாப்பாடு மேல போகுது டா. ஆள் சாப்பிடுற மாதிரியே இருந்தது. ஆனா ஆளே இல்லை”
“ஐயோ, இப்ப தான் இந்த சூப்பர் வைசர் வந்து தாலாட்டு பாடி தூங்க வச்சிட்டு போனான். இவன் ஏதோ கதை சொல்லி எழுப்புறானே. இங்க பாரு மகேந்திரா ஒன்னும் சாப்பிடாம, தூங்கி இப்ப தான் எந்திச்சிருப்ப. அதனால தூக்க கலக்கமும் பசி மயக்கமும் சேந்து இப்படி உளறுற. முதல்ல எதாவது செஞ்சு சாப்பிடு”
“லூசு பயலே, பயத்துல அலறி அடிச்சு உனக்கு போன் பண்றேன். நான் உனக்கு கதை சொல்ற மாதிரி இருக்கா?”

Advertisement