Advertisement

“செத்து போன அப்புறம் என்ன பயம்?”, என்று எண்ணியவள் அந்த ஆலமரத்தின் தூணில் அமர்ந்தாள்.
மனம் முழுவதும் வெறுமையாக இருந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அவள் மனது குழம்பியது.
“நான் ஏன் இப்படி பேயா அலையுறேன்? நான் கெட்டவளா இருந்துருக்கேனா? அதனால தான் செத்து போன அப்புறம் கடவுள் கிட்ட போகாம இப்படி ஆவியா அலையுறேனா? இல்லைன்னா நான் கடவுள் காலடிக்கு போயிருப்பேனே? என்ன பாவம் செஞ்சேனோ தெரியலையே”, என்று யோசித்து கொண்டிருந்தவளின் கண்ணுக்கு அவளை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வட்டமான ஒளி தெரிந்தது.
அதை பார்த்து கண்களை இறுக்கி மூடி கொண்டாள் கீர்த்தி. அதுவோ அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தது.
இவள் அருகே வந்ததும் “கண்களை திறந்து பார் பெண்ணே. என்னை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்”, என்றது.
மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள் அதையே பார்த்த படி நின்றாள். “நீ… நீங்கள்… யார்?”, என்று தந்தி அடித்தது அவள் உதடு.
“நான் கடவுளின் தூதுவன். உன்னை காணவே இங்கு வந்தேன்”
“கடவுளின் தூதுவனா? கடவுள், வேலைக்கு ஆள் எல்லாம் வச்சிருக்காரா?”, என்று நினைத்து கொண்டு “உன்னை.. சே.. உங்களை மாதிரி நிறைய ஆள் வேலைக்கு இருக்காங்களா?”,என்று கேட்டாள்.
“ஆம் பெண்ணே”
“ஓ, சரி உங்களை மாதிரி நானும் கடவுளின் தூதுவனா வேலை செய்ய எதாவது குவாலிபிகேஷன்   அதாவது எதாவது பரீட்சை இருக்கா?”
“ஹா ஹா, அப்படி எல்லாம் இல்லை. நல்லவர்களுக்கு இந்த பதவியை அளிப்பார் கடவுள்”
“ஓ ஆனா நான் நல்லவளா கெட்டவளான்னு தெரியலையே”
“எதுக்கு உனக்கு இந்த சந்தேகம்?”
“கெட்டவங்க தான பேயா அலையுவாங்க?”
“அப்படி எல்லாம் இல்லை. நீ நல்லவள் தான். உனக்கு இந்த ஆவி உருவில் ஒரு சக்தி கிடைத்திருக்கிறது. பாதி வாழ்க்கையில் மரணம் அடைந்தவர்களுக்கு தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ள இப்படி சக்தி கிடைக்கும்”
“செத்து போன அப்புறம் இந்த சக்தியை வச்சு என்ன பண்ண? என்னை தான் கொன்னுட்டாங்களே? அதுவும் சும்மா இல்லாம என்னை எல்லாரும் அசிங்கமா திட்டுற மாதிரி செஞ்சிட்டாங்க”, என்று சோகமாக சொன்னாள் கீர்த்தி.
“அப்படி உன் மீது வீண் பழி போட்டவர்களுக்கு அது தவறு என்று நீ உணர்த்து பெண்ணே. உன்னால் முடிந்த அளவு தண்டனையை அவர்களுக்கு கொடு. உன்னை தவறாக பேசியவர்களுக்கு நீ பாடம் புகட்டவே உனக்கு இந்த ஆவி உருவம்”
“ஓ, ஆனா நான் எங்க அவங்களை தண்டிப்பது? என்னால அவங்களை தொட கூட முடியலை. ஒரு பொருளை கூட எடுக்க முடியலை. என்னால எப்படி தண்டிக்க முடியும்?”
“நீ நினைத்தால் கட்டாயம் முடியும். மனதை ஒருமுக படுத்து. உன்னால் முடியும் என்று எண்ணி முயற்சி செய். கட்டாயம் நடக்கும்”
“அப்படியா?”
“ஆம், பெண்ணே”
“சரி, இப்படி நைட்டியோடே சுத்திகிட்டு இருக்கேன். யாராவது வேற பேய் என்னை பாத்தா என் இமேஜ் என்னவாகிறது? வேற எதாவது டிரெஸ் கிடைக்குமா?”
“அதுவும் சரி தான். இங்கே பேய் உருவத்தில் அலையும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நீ கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள் பெண்ணே. உனக்கு என்ன உடை வேண்டும்?”
“பேய் கிட்ட கூட கேர்புல்லா இருக்கணும் போல?”, என்று நினைத்து கொண்டு “எனக்கு வெள்ளை கலர்ல டிரெஸ் வேணும்”, என்று கேட்டாள்.
“வெள்ளை சேலையா?”
“சேலை எல்லாம் வேண்டாம். அது கட்ட தெரியாது. வெள்ளை சுடிதார் தான் வேணும்”
“அப்படியே ஆகட்டும். சரி நீ பழிவாங்குபவர்களை விரைவாக பழி வாங்கி விடு. ஆவி வடிவத்துக்கும்  ஆயுட்காலம் உண்டு. அது எப்போது  முடியும் என்று கடவுள் தான் முடிவெடுப்பார். அதற்குள் உன்னை கொன்றவர்களை நீ பழி வாங்கி விடு. இப்போது உன் உடை மாறிவிடும்”, என்று சொல்லி விட்டு அது மீண்டும் திரும்பி சென்றது. அடுத்த நொடி இவளுடைய உடையும் மாறி விட்டது.
அதை ஆச்சர்யமாக பார்த்தவள் “நான் அவங்க எல்லாரையும் பழி வாங்கணும். அதுக்கு முதல்ல எதையாவது தொட முயற்சி செய்யணும்”, என்று நினைத்து கீழே கிடந்த குச்சியை எடுக்க முயற்சி செய்தாள்.
பல முறை தொட அவள் முயற்சி செய்த போதும் அவளால் முடிய வில்லை. பின் கண்களை மூடி மனதை அமைதியாக வைத்தவள் அதை எடுக்க முயற்சி செய்தாள். இந்த முறை அந்த குச்சியை அவளால் எடுக்க முடிந்தது.
அதில் குதூகலித்தவள் அந்த இடத்தை விட்டு தன் வீட்டை நோக்கி சென்றாள். பின் தன்னுடைய அறைக்குள் சென்று தன்னுடைய படுக்கையில் படுத்து கொண்டாள்.
எதை எதையோ யோசித்த படி அமர்ந்திருந்தவளின் காதில் “ஓம்”, என்ற சத்தம்  கேட்டது. அவள் உடலில் ஒரு நடுக்கம் வந்தது. உடனடியாக கீழே வந்து பார்த்தாள். அங்கே அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் ஒரு மந்திரவாதியை அழைத்து வந்திருப்பது பட்டது.
“சூரியன் வருவதுக்கு  முன்னாடி இந்த சாமியார் வந்துட்டானே”, என்று நினைத்து கொண்டே அவர்கள் அருகில் வந்தாள்.
ஆனால் அங்கே தூவி இருந்த திருநீற்றின் வெப்பம் தாங்க முடியாமல் அந்த பங்களாவை விட்டு வெளியே வந்தாள்.
அதன் பின்னே அவளால் அவளுடைய வீட்டின் உள்ளே செல்ல முடிய வில்லை. வேறு வழியில்லாமல் அப்படியே நடந்து வந்தாள். கொஞ்சமாக சூரியன் மேல் நோக்கி வந்து தன் ஒளியால் உலகத்தையே ஒளி பெற செய்தான்.
அங்கே இருந்த ஒரு பெட்டி கடை அருகே வரும் போது  “ஏன் பா இந்த மூர்த்தி, வீட்டுக்கு காலைலே ஒரு பூசாரியை அழைச்சிட்டு வந்தானாமே”, என்று ஒருவன் பேசுவது கேட்டது.
“புரணிகள் இப்படி தான் ஆரம்பிக்குது போல?”, என்று நினைத்து கொண்டே அவர்கள் எதிரே அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டாள் கீர்த்தி.
“எதுக்கு பா அழைச்சிட்டு வந்துருக்கான்? நேத்து தான் அவன் வீட்டில் சாவு நடந்துருக்கு. இன்னைக்கு எதுக்கு பூஜை? அந்த பொண்ணு பேயா வந்துருமோன்னு பயந்துட்டானோ என்னவோ? நல்ல பொண்ணு பா. பாவம் இப்படியா அல்ப ஆயுசுல போகணும்?”, என்றான் மற்றொருவன்.
“ஆமாம் பா, நானும் அதையே தான் யோசிச்சேன். சும்மா அழகு தேவதையாட்டம் இருக்கும். அது இப்படி செஞ்சிருக்கும்னு என்னால நம்பவே முடியலைப்பா”, என்று அவன் சொன்னதும் “அதெல்லாம் ஒன்னும் இல்லை. அழகு இருக்குற இடத்துல ஆபத்து இருக்க தான் பா செய்யும். காலேஜ்க்கு போறேன்னு சொல்லிட்டு இப்படி எவன் கூடயோ போய் இருந்துட்டு இப்படி செத்து போனவளை பத்தியா நல்ல விதமா பேசுறீங்க? இந்தாங்க டீயை குடிச்சிட்டு வீட்டு பக்கம் போங்க பா”, என்று சொல்லி டீயை அவர்கள் கையில் கொடுத்தான் டீ கடைக்காரன்.
அந்த தெருவில் போகும் போதும் வரும் போதும் கீர்த்தியை பொறுக்கி பார்வை பார்ப்பான், அந்த டீ கடை காரன். ஆனால் அவனை எல்லாம் கண்டு கொள்ளாமல் அகன்று விடுவாள் கீர்த்தி. 
இன்று அப்படி அவன் பேசியதும் கொந்தளித்தவள் அவன் அருகே சென்று நின்று கொண்டாள். பால் கொதித்து கொண்டிருந்தது. மனதை ஒருநிலை படுத்தியவள் தன்னுடைய சுண்டு விரலால் அந்த பாத்திரத்தை அப்படியே அவன் மீது தள்ளி விட்டாள்.
அடுத்த நொடி “ஐயோ அம்மா”, என்று அலறினான் டீ கடை காரன்.
“ஏப்பா என்ன ஆச்சு?”, என்று அவனை கிட்ட வந்து பார்த்தவர்கள் “அட பாவமே, இப்படி வெந்து போயிட்டே? பாத்து வேலை செய்ய மாட்டியா?  வா ஆஸ்பத்திரிக்கு”, என்று அவனை தூக்கி சென்று விட்டார்கள்.
ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவள் அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அப்போது ஒரு இளைஞன் அந்த டீ கடைக்கு வந்தான். கீர்த்தி அவனை பார்த்து கொண்டு தான் இருந்தாள். ஐந்தரை அடியில் வாட்டசாட்டமாக அந்த கிராமத்துக்கு ஒட்டாத வகையில் நாகரிகமான உடையுடன் இருந்தான் அவன்.
“செம ஹீரோ, இப்படி ஒருத்தனைக் கட்டி சந்தோசமா வாழ விடாம பண்ணிட்டீங்களே”, என்று நினைத்து கொண்டவள் “இவன் யாரு? எதுக்கு வந்துருக்கான்?”, என்று யோசித்தாள்.
அப்போது அங்கு ஒருவர் வந்து டீ கடையை மூடி கொண்டிருந்தார். “அண்ணன், என்ன நான் டீ குடிக்கலாம்னு வந்தா நீங்க கடையை மூடிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டான் அவன்.
“அட நீ வேறப்பா, டீ கடை காரன் சுடு பாலை மேல ஊத்திக்கிட்டு ஆஸ்பத்திரி தூக்கிட்டு போயிருக்காங்க. நல்ல வெந்து போயிருக்கு. அவன் இன்னும் கடைக்கு வரவே மாசமாகும். அதான் கடையை பூட்டி சாவியை கொடுக்க போறேன். ஆமா தம்பி யாரு? பாக்க இந்த பக்க ஆள் மாதிரி தெரியலையே?”
“என் பெரு மகேந்திரன். அக்ரிகல்ச்சர் ஆபிஸரா இருக்கேன். இங்க சீனு அப்படின்னு ஒருத்தர் அவரோட மண்ணுல என்ன விளைவிக்கலாம்னு கேட்டிருந்தார். அதான் அவரோட மண்ணை பாத்து ஆராய்ச்சி செஞ்சிருக்கேன். அவரோட நிலத்தை பாத்துட்டு அந்த ரிப்போர்ட்டை கொடுக்க தான் வந்தேன்”
“அப்படிங்களா? சீனு தம்பி ரொம்ப நல்ல மாதிரி. அவர் தான் ஏதோ பூச்சி மருந்து அடிக்காம விவசாயம் பண்ண போறாதா பேசிட்டு இருக்கார். ஆனா அப்படி அவர் அடிக்காம விட்டா எல்லாரோட நிலத்துல உள்ள பூச்சி எல்லாம் அவர் நிலத்துக்கு வந்துரும். அவர் எப்படி விவசாயம் பாக்க போறார்னு நாங்களும் பாக்க ஆவலா இருக்கோம். அதோ அந்த தெருவுல கடைசி வீடு தான் அவரோட வீடு. அங்கன போங்க. அங்கேயே காபி தண்ணி கொடுப்பாங்க”
“சரிங்க அண்ணன்”, என்று சொல்லி விட்டு அந்த தெருவை நோக்கி நடந்தான். அவளை அறியாமலே கீர்த்தியும் அவன் பின்னே சென்றாள்.
அந்த சீனுவின் வீட்டுக்கு போனதும் பெரிய டம்பளரில் சுடசுட கொடுத்த காபியை ருசித்த மகேந்திரன் சீனுவை கூட்டி கொண்டு அவனுடைய நிலத்தை பார்க்க சென்றான்.
பின் தன்னுடைய குறிப்பையும்  மேலும் சில கருத்துகளையும் சொல்லி அந்த சீனுவை வாழ்த்தி விட்டு அங்கிருந்து திரும்பியவன் பஸ் ஸ்டாண்ட் சென்றான்.
கீர்த்தியும் அவன் பின்னேயே நடந்தாள். ஆவி உருவில் ஒரு பெண் பேய் தன்னுடன் நடந்து வருவது தெரியாமல் நடந்து சென்றான் மகேந்திரன்.
பின் பேருந்தில் ஏறி அவன் அமர்ந்ததும் அவளும் அவனுடனே ஏறி கொண்டாள்.
முதல் பார்வையிலே வசீகரித்த அவனுடன் செல்வது அவளுக்கு சந்தோசமாக இருந்தது. மனசுக்கு பிடித்த ஒரு துணை கிடைத்த சந்தோஷத்தில் அவள் மனதில் இருந்த வெறுமை அவளை விட்டு சென்றது.
தன்னுடைய ஊர் வந்ததும் அவன் இறங்கியவுடன் அவளும் இறங்கி கொண்டாள். பின் தான் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி நடந்தவனுடன் கூடவே நடந்தாள் கீர்த்தி.
பீல்டு விசிட் இருக்கும் நாள்களில் அவனுக்கு விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்தவன் சட்டை பையில் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றான்.
கையில் இருந்த பையை செல்பில் வைத்தவன் சட்டையை கழட்டினான். அதை பார்த்தவள் மனதுக்குள் சிரித்து கொண்டாள். பின் அந்த இரண்டு ரூம் இருந்த அந்த வீட்டையே கண்களால் அளவெடுத்து விட்டு அவனை பார்த்தாள். அவனோ பேண்டையும் கழட்டி விட்டு வெறும் ஜட்டி பனியனுடன் நின்று கொண்டிருந்தான். அவளை அறியாமலே “ஐயையோ”, என்று கத்தி விட்டாள் கீர்த்தி.
அங்கிருந்த லுங்கியை எடுத்து கொண்டிருந்தவன் காதில் விழுந்த பெண் குரலில் திகைத்து போனான். கையில் இருந்த லுங்கியை சும்மா இடுப்பில் கட்டியவன் சுத்தி சுத்தி அந்த அறையை நோட்டம் விட்டான்.
“பின் பிரம்மை போல?”, என்று நினைத்து கொண்டு குளியல் அறைக்கு சென்றான். “நல்லதா போச்சு. உள்ளே போய் டிரெஸ் மாத்துறான்”, என்று எண்ணி கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள் கீர்த்தி.
உருகுதல் தொடரும்…..

Advertisement