Advertisement

அத்தியாயம் 3

நீ கூறும்
பொய்களை கூட
அழகான கவிதை
என்று எண்ணி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
சொத்துக்காக ஆசை பட்டு, கீர்த்தி உயிரோடிருந்தால் அந்த சொத்து தன் பிள்ளைகளுக்கு கிடைக்காது என்று எண்ணி அவளுடைய சித்தி வடிவும்,  சித்தப்பா மூர்த்தியும் ‌அவளுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டார்கள்.
தூக்கத்திலே அவள் உயிர் பிரிந்து போனது. ஆவியாக உடலை விட்டு பிரிந்தவள் செத்து கிடந்த தன் சடலத்தை பார்த்து அதிர்ந்தாள். என்ன முயன்றும் அவளால்  அவளுடைய உடலை தொட முடிய வில்லை. “நான் எப்படி செத்தேன்?”, என்று கண்களில் நீருடன் யோசித்து கொண்டே அவளுடைய உடல் அருகே அமர்ந்து கொண்டாள்.
மெதுவாக சித்தியும், சித்தப்பாவும் அறைக்குள் வருவது தெரிந்தது. “எதுக்கு திருட்டு தனமா முழிச்சிக்கிட்டு வாரங்க?”, என்று குழப்பமாக அவர்களை பார்த்தாள். இவளை அவர்களால் பார்க்க முடியாது என்று தெரியாமல் அங்கே இருந்த கதவின் பின் மறைந்து கொண்டாள்.
“என்ன ஆச்சுன்னு பாருங்க. மூச்சு இருக்கா?”, என்று வடிவு சொன்னதை கேட்டு அதிச்சியானாள் கீர்த்தனா.
அவளின் சடலம் அருகில் சென்று மூக்கில் விரலை வைத்து பார்த்த மூர்த்தி “அப்பாடி செத்துட்டா”, என்று சந்தோசமாய் சொன்னான்.
அதை கேட்டு மேலும் அதிர்ந்த கீர்த்திக்கு கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. “அப்பா, இனிமே இந்த சொத்து முழுவதும் நமக்கும் நம்மளோட பிள்ளைகளுக்கும் தான். சரி சரி கீர்த்தி கையெழுத்து மாதிரியே காவ்யா எழுதி கொடுத்தாளே அதை எடுங்க. இப்ப நாம நடிக்க ஆரம்பிக்கணும்”, என்றாள் வடிவு.
தன்னுடைய பாக்கெட்டில் இருந்து அந்த லெட்டரை எடுத்து அவளுடைய டைரிக்குள் வைத்தவன் அந்த டைரியை அவளுடைய பெட்டில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டான். அவனுடன்  வடிவும் வெளியே சென்று விட்டாள்.
மறைவில் இருந்து வெளியே வந்த கீர்த்தி அந்த டைரியை தொட பார்த்தாள். எவ்வளவு முயன்றும் அவளால் அதை அசைக்க கூட முடிய வில்லை. அப்போது அங்கு வேலைக்காரி வந்தாள்.
“பாப்பா எந்திரி பாப்பா. நேரம் ஆகிட்டு”, என்று அவள் சொன்ன பிறகும் கீர்த்தியிடம் அசைவில்லாததை உணர்ந்த அம்புஜம் அவள் அருகில் சென்று “கீர்த்தி பாப்பா எந்திரி”, என்று சொல்லி அவளை தொட்டாள்.
அவளுடைய உடலோ ஜில்லிட்டு போய் இருந்தது. அடுத்த நொடி “ஐயையோ”, என்ற அலறலுடன் அங்கிருந்து ஓடி சென்றவள் கீழே சென்று அனைவரிடமும் “கீர்த்திக்கு என்னமோ ஆச்சு ஐயா”, என்றாள்.
அடுத்த நொடி அனைவரும் கீர்த்தியின் அறைக்கு வந்து விட்டார்கள்.
பின் மறுபடியும் நடிப்பதற்காகவே அவள் மூக்கில் விரலை வைத்து பார்த்தான் மூர்த்தி.
“ஐயையோ, கண்ணு இப்படி எங்களை எல்லாம் தவிக்க வச்சிட்டு போய்ட்டியே? முதல்ல என் அண்ணனும் அண்ணியும் போனாங்க. இப்ப நீ போய்ட்டியே”, என்று வராத கண்ணீரை வர வைத்து அழுது நடித்தான் மூர்த்தி.
“ஐயோ என் பொண்ணு மாதிரி உன்னை வளத்தேனே? நாளைக்கு பெரிய இடத்துல இருந்து உன்னை பொண்ணு பாக்க வாரங்களே. அப்படி நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைக்கும் போது இப்படி செஞ்சுட்டியே”, என்று அழுதாள் வடிவு.
பெற்றவர்களின் சொல்படி கமலும், காவ்யாவும் கூட அழுத படி நடித்தார்கள்.
சிறிது நேரத்தில் அந்த ஊரே அவர்கள் வீட்டு முன் கூடி விட்டது. ஊர் பெரியவர்கள் அவள் சடலத்தை காண வந்தார்கள். அப்போது தான் அவர்கள் கையில் அந்த கடிதம் சிக்கியது.
அதில் “நான் ஒருவனை விரும்பினேன். அவனுடன் கல்யாணம் ஆகாமலே சேர்ந்து வாழ்ந்தேன். அதனால் அவன் கரு என் வயிற்றில் வளர்கிறது. இப்போது என்னை திருமணம் செய்ய மாட்டேன்  என்று அவன் கூறியதால் என் வாழ்வை முடித்து கொள்கிறேன். இதில் நான் காதலித்தவன் மீது எந்த தவறும் இல்லை. அவனாவது சந்தோஷமாக இருக்கட்டும். எனக்கு இந்த உலகத்தில் வாழ விருப்பம் இல்லை. என்னுடைய சொத்துக்கள் அத்தனையும் என்னை  தாய் தந்தையாக இருந்து  வளர்ந்த சித்தி சித்தப்பா குடும்பத்துக்கே போகட்டும். என் சாவுக்கு நான் மட்டுமே காரணம்”, என்று எழுதி இருந்தது.
அதை படித்த அந்த பெரியவர் முகம் சுளித்தார். பின் அருகில் இருந்த இன்னொருவரிடம் அதை கொடுத்தார். அவரும் “ச்சி”,  என்றார்.
“அப்படி என்ன எழுதிருக்காங்க?”, என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் மெதுவாக அவருக்கு பின்னால் நின்று கொண்டு அந்த கடிதத்தை படித்தாள் கீர்த்தி. படித்ததும் அதிர்ந்து போனாள்.
“ஐயோ என்னை பற்றி இப்படி எழுதி இருக்கிறார்களே? எல்லாரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?”, என்று நினைத்து அவளுக்கு கண்கள் கலங்கியது.
அவள் நினைத்த படி தான் நடந்தது. “இந்த பிள்ளையை எவ்வளவு தங்கமான பிள்ளை, குனிஞ்ச தலை நிமிராத பிள்ளைன்னு நினைச்சோம். ஆனா இவ கல்யாணத்துக்கு முன்னாடியே வயித்துல வாங்கிட்டு வந்துருக்கா”, என்று பேச ஆரம்பித்தார்கள்.
மற்றொரு பொம்பளையோ, “ஊமை மாதிரி இருந்துகிட்டு இவ்வளவு கீழ்த்தனமான வேலை செஞ்சிருக்காளே?”, என்றாள்.
“இங்க பாரு மூர்த்தி, அவ தெளிவா என் சாவுக்கு யாரும் காரணம் இல்லைன்னு எழுதி வச்சிருக்கா. இந்த விஷயம் நம்ம ஊரோடு போகட்டும். போலீஸ் அது இதுன்னு போச்சுன்னா, நம்ம ஊர் மானம் தான் பேப்பர்ல எல்லாம் போகும். அதனால் அவ விஷம் குடிச்சு செத்ததாவே சொல்லி அவளை புதைக்க ஏற்பாடு பண்ணலாம். நீ என்ன சொல்ற?”, என்று கேட்டார் பஞ்சாயத்து தலைவர்.
“நீங்க சொல்ற படியே செஞ்சிரலாம் ஐயா. எனக்கு என் குடும்ப மானம் தான் முக்கியம். என் அண்ணன் இருந்து வளத்துருந்தா இவ இப்படி எல்லாம் வழி மாறி போயிருக்க மாட்டாளோ என்னவோ?”, என்று நீலி கண்ணீர் வடித்தான் மூர்த்தி.
“நீ அருமையா தான் பா வளத்த. அது சாக்கடையை தேடி போயிருக்கு. நாம என்ன செய்ய? சீக்கிரம் ஆக வேண்டிய காரியத்தை பார். வெளியூர்ல ரொம்ப சொந்தம் இல்லை தான?”
“ஆமாங்க அய்யா. எல்லாம் நம்ம ஊரு தான். சீக்கிரம் முடிச்சிரலாம்”, என்று மூர்த்தி சொன்னதும் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட கீர்த்தி அங்குள்ள அனைத்து மக்களையும் பார்த்தாள்.
அனைவரும் என்ன பேசி கொள்கிறார்கள் என்று செவி மடுத்தாள். சில பேர் “அந்த பிள்ளை தங்கம். அப்படி பட்ட அம்மா அப்பாவுக்கு பிறந்துட்டு இப்படி செஞ்சிருக்குமா? இந்த வடிவு முகத்துல  எதுவோ பயம் தெரியுது. அவ தான் ஏதோ செஞ்சிருப்பான்னு தோணுது?”, என்று சிலரும் அதுக்கு பதிலாக “அப்படியும் இருக்கலாம். ஆனா பெரிய வீட்டு விவகாரம் நமக்கு எதுக்கு?”, என்று சிலரும் சொன்னார்கள்.
இவர்களை எல்லாம் விட்டு விட்டு அவளை “நடத்தை கெட்டவ. எவன் கிட்டயோ சீரழிஞ்சவ”, என்று பேசும் ஆள்களை மட்டும் மனதுக்குள் குறித்து கொண்டவள் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.
பின் அவளை குளிக்க தூக்கி சென்றார்கள் பெண்கள். அவள் உடையை அனைத்து பெண்களும் கழட்டும்  போது ஒரு வித அருவருப்பை உணர்ந்தாள் கீர்த்தி. 
“இது வரை தான் மட்டுமே கண்ட தன் உடலை இத்தனை பெண்கள் பார்க்கிறார்களே. இப்படி பட்ட ஈன வாழ்க்கை தானே அனைவருக்கும் காத்திருக்கிறது. இது தெரியாம சொத்துக்கும், பணத்துக்கும், வீணான வரட்டு கவுரவத்துக்கும்  இந்த மக்கள் அடிச்சிக்கிறாங்களே”, என்று எண்ணி கொண்டவளுக்கு வெறுப்பாக இருந்தது.
பின் ஒரு சேலையை  உடுத்தி  அவளை நடு  வீட்டில் வந்து படுக்க  வைத்தார்கள். ஒருவர் ஒருவராக  வந்து மாலையை அவள் கழுத்தில் சூட்டினார்கள்.
“முடிந்தது என்னோட வாழ்க்கை. ஆனா இப்படியா என் மானத்தை இவங்க  கூறு போடணும்”, என்று ஆற்றாமையாக வந்தது கீர்த்திக்கு.
நேரம் ஆக ஆக உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று வந்தவண்ணம் இருந்தார்கள். கடைசியில்  மாலை நான்கு மணி ஆனதும் “பொணத்தை எடுக்கலாம் பா”, என்று ஒருவர் பேச்சு கொடுத்தார்.
இத்தனை நாள் கீர்த்தியாக இருந்தவள் இன்று பிணமாக மாறிவிட்டாள். மறுபடியும் அவளுக்கு சடங்குகள் செய்து கடைசியாக நான்கு ஆட்களால் தூக்க பட்டாள்.
இளம்பெண் என்பதால் ஆங்காங்கே முட்டை வீச பட்டு அவளை தூக்கி சென்றார்கள். அனைத்தையும் தூரமாக நின்றே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது கீர்த்தனாவின் ஆவி. அவளுடைய சடலமும் புதைக்க பட்டது. பின் அனைவரும் திரும்பி விட்டார்கள். அவர்களுடன் கீர்த்தியும் வந்தாள்.
அதன் பின் துக்க வீடு அலசி விட பட்டு சாதாரணமாக மாறி விட்டது. அவ்வளவு தான் மனித வாழ்க்கை. அனைத்தும் முடிந்து விட்டது. இனி அவரவர் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.
கீர்த்தி வீட்டிலும் அது தான் நடந்தது. துக்கமாக இருக்கிறோம் என்று சொல்லி அனைத்து வேலைக்காரர்களுக்கும் ஒரு வாரம் லீவ் கொடுத்து அனுப்பி விட்டாள் வடிவு. அதன் பின் ஒரு கோழியை பிடித்து அடித்தவள் மணக்க மணக்க பிரியாணி, வறுவல் என்று செய்து வைத்து மூர்த்தியையும் பிள்ளைகளையும் சாப்பிட அழைத்தாள்.
அதை பார்த்து “ச்சி என்ன மனிதர்கள் இவர்கள்?”, என்று எண்ணி கொண்டாள் கீர்த்தி.
“இன்னைக்கு என்ன மா பிரியாணி?”, என்று கேட்டான் கமல்.
“நம்மளை பிடிச்ச பீடை இன்னையோட ஒழிஞ்சதை கொண்டாட வேண்டாமா? அதுக்கு தான்”, என்றாள் வடிவு.
“ஆமா வடிவு, இந்த கீர்த்தி இத்தனை நாள் உயிரோட இருந்ததே எனக்கு கடுப்பா இருந்தது. எப்ப பணம் எடுத்தாலும் அவ கிட்ட கேட்டு கேட்டு வாங்க வேண்டி இருக்கு. முதல்ல இவளோட அம்மா அப்பாவை கார் ஆக்சிடெண்டில் கொன்ன மாதிரி இவளையும் கொன்னுருக்கணும். விட்டது தப்பா போச்சு”, என்றான் மூர்த்தி.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கீர்த்தி “அம்மா அப்பாவையும் இவன் தான் கொன்னானா?”, என்று எண்ணி கொண்டாள்.
“சத்தமா பேசாதீங்க. அது எல்லாமே முடிஞ்ச விஷயம். பெரியவருக்கு வாரிசு இல்லைன்னா அடுத்து உங்களுக்கு தானே இந்த சொத்து வரும். அதனால தான் இப்படி நாம செஞ்சோம்? ஆனா அந்த ஆக்சிடெண்டில் இந்த கீர்த்தி கழுதை மட்டும் பொழைச்சிட்டு. சரி ஊரு காரங்களுக்காக வளர்த்தோம். இனியும் விட்டு வச்சா அவ எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து அத்தனை சொத்தையும் அவளுக்கு தாரை வார்த்து கொடுக்குற நிலைமை வந்துருக்கும். இப்ப எந்த பிரச்சனையும் இல்லாம முடிஞ்சிட்டு. இப்ப எல்லாரும் நிம்மதியா சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் தன்னுடைய அறைக்கு சென்றாள் கீர்த்தி. அந்த அறையே வெறுமையாக இருந்தது.
“சித்தி, சித்தப்பா, தம்பி, தங்கச்சின்னு இவங்க மேல பாசமா தான இருந்தேன்? என்கிட்டே கேட்டுருந்தா நானே சொத்தை கொடுத்துருப்பேனே? என்னோட வாழ்க்கையிலே எப்படி எல்லாம் இருக்கணும்னு கனவு கண்டேன்? அப்பாவோட பேக்டரியை ஒரு ராணிக்குரிய கம்பீரத்தோட நடத்தணும். இருக்குற சொத்தை எல்லாம் பலமடங்கு பெருக்கணும். என்னை மட்டும் விரும்புற ஒருத்தனை விரும்பி கல்யாணம் செய்யணும். அவன் கூட திகட்ட திகட்ட காதலோடு வாழனும். மணி மணியா ரெண்டு பிள்ளைங்களை பெத்துக்கணும். இப்படி நிறைய கனவு எனக்குள்ள இருந்ததே? இப்படி எல்லாமே சருகா போச்சே”, என்று எண்ணி கொண்டவள் சிறிது நேரம் அழுது கொண்டிருந்தாள்.
“இவங்க ஏன் இப்படி செஞ்சாங்க? என்னோட உயிரை எடுத்தது பத்தாதுன்னு கடைசில என்னோட மானத்தையும் வாங்கிட்டாங்களே? இவங்களை நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்கலைன்னா நான் கீர்த்தி இல்லை”, என்று எண்ணி கொண்டே எழுந்தவள் சித்தப்பாவின் அறைக்கு சென்றாள். அறை கதவு பூட்டி இருந்தது.
“சரி அவங்களை எழுப்பி கேட்கலாம்”, என்று நினைத்து கையை கதவின் மீது வைத்து தட்ட போனவளால் கதவை தட்ட முடியவில்லை. ஆனால் அவள் கை கதவின் அந்த பக்கமும் ஊடுருவியது.
அதை பார்த்து வியந்தவள் “பேயால இது முடியும் போல?”, என்று எண்ணி தன்னுடைய உடலையே உள்ளே செலுத்தினாள்.
அங்கே மூர்த்தி கட்டிலில் மல்லாந்து கிடக்க அவள் அருகே படுத்திருந்தாள் வடிவு. அவர்களை பார்த்து “ஏன் இப்படி செஞ்சீங்க?”, என்று கேட்க வந்தவள் அடுத்த நொடி வாயை மூடி கொண்டாள்.
அங்கே வடிவு மூர்த்தியின் கையை எடுத்து தன் இடுப்பில் போட்டு கொண்டிருந்தாள். அதை பார்த்து “ச்சி”, என்று முகத்தை திருப்பி கொண்டே அங்கிருந்து வெளியே செல்ல பார்த்தாள் கீர்த்தி.
அப்போது மூர்த்தி “இன்னைக்கு வேண்டாம் வடிவு. ரொம்ப அசதியா இருக்கு”, என்று சொல்வதும் “போயா நீ எல்லாம் சுத்த வேஸ்ட். நான் வேற ரூம்க்கு போய் தூங்க போறேன்”, என்று வடிவு சொல்வதும் கேட்டது.
அடுத்த நொடி ஒரு வித அருவறுப்போடு அங்கேயே நின்றாள் கீர்த்தி. வடிவும் எழுந்து வெளியே சென்று விட்டாள்.
தன்னுடைய சித்தப்பாவை பார்த்தவள் அவர் அருகே சென்று “எதுக்கு சித்தப்பா இப்படி செஞ்சீங்க?”, என்று கேட்டாள்.
அடுத்த நொடி “பேய்”, என்ற அலறலோடு எழுந்து அமர்ந்தான் மூர்த்தி.

“பேய் இல்லை சித்தப்பா. நான் கீர்த்தி. என்னை எதுக்கு சித்தப்பா கொன்னீங்க? என்கிட்ட சொத்தை கேட்டுருந்தா நான் கொடுத்துருப்பேன்ல?”, என்றாள் கீர்த்தி.
“ஐயோ, ஐயோ, கீர்த்தி பேய் பேய்”, என்று அடித்து பிரண்டு எழுந்து வெளியே ஓடினான் மூர்த்தி.
அவன் அலறலில் வடிவும், பிள்ளைகளும் வெளியே வந்து விட்டார்கள்.
“என்ன ஆச்சுங்க? நடு ரத்திரில காட்டு கத்து கத்துறீங்க?”, என்று கேட்டாள் வடிவு.
“என்கிட்ட கீர்த்தி பேசுனா வடிவு”, என்று பயத்துடன் சொன்னான் மூர்த்தி.
“லூசு மாதிரி பினாத்தாம போய் படுங்க. சுடுகாட்டுல புதைச்ச அப்புறம் அவ  வந்து பேசுறாளாம்? உங்க  அண்ணனோட  ரத்தம்  உங்க  உடம்புலயும்  ஓடுதுள்ள? அதான் மனசாட்சி உறுத்துது போல? ஒழுங்கா போய் படுங்க”
“சத்தியமா என்கிட்ட பேய் பேசுச்சு வடிவு”
“சரி நாளைக்கே மந்திரவாதியை கூட்டிட்டு வந்து பேய் இந்த  பங்களாக்குள்ளே வர விடாம செஞ்சிரலாம். போய் படுங்க”
“ம்ம், ஆனா தனியா படுக்க பயமா இருக்கு. நான் உன் கூடவே படுத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.
“உங்க அப்பா சும்மா உளறுறார். நீங்க போய் படுங்க”, என்று பிள்ளைகளையும் அனுப்பி வைத்து விட்டு படுக்க சென்று விட்டாள் வடிவு.
அதற்கு பின் அவர்களுடைய அறைக்கு போவதற்க்கு மனதில்லாமல் மெதுவாக வீட்டை விட்டு வெளியே  நடந்தாள் கீர்த்தி.
ஊர் எல்லையில் பறந்து விரிந்து கம்பீரமாக வீற்றிருந்த அந்த ஆலமரத்தை நோக்கி நடந்து சென்றாள். கண்களுக்கு தெரிந்த இருட்டு அவளுக்கு பயத்தை கொடுத்தது.

Advertisement