Advertisement

அந்த விரலை மடக்கிய மகேந்திரன் “ஆம்பளையை கையை நீட்டி பேசாதேன்னு சொல்லிருக்கேன்ல? நீ பண்ண சேட்டைக்கு கிண்டல் பண்ணாம, என்ன செய்ய சொல்லு? நீ எதுக்கு டி ஓடி வந்த?”, என்று கேட்டான்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு பேய்ன்னா ரொம்ப பயம் மகி. அதான் அந்த பாட்டி கத்துன உடனே என்னை பாத்து தான் கத்துதுனே மறந்துட்டேன்”
“அது சரி. ஆனா கொலை செய்ய போற நேரத்துலயும் உனக்கு திங்கணுமா என்ன?”
“அதெல்லாம் என் கூட பிறந்த பழக்கம். அதை எல்லாம் மாத்த முடியாது. அவன் டாக்சி புடிச்சு பங்களாக்கு தான போயிருக்கான். அங்க வச்சே அவனை முடிச்சிருவோமா மகி?”
“மறந்துட்டியா லூசு? நீ செத்த அன்னைக்கு பேயா மாறின உடனே அவன் முன்னாடி போய் எப்படி சித்தப்பா என்னை கொல்ல உங்களுக்கு மனசு வந்ததுன்னு கேட்டிருக்க. அதனால அவர் பயந்து பங்களாவை  சுத்தி மந்திர கட்டை கட்டி வச்சிருக்குறதை நீ தான சொன்ன?”
“ஆமால்ல. சரி அவனை நாளைக்கு என்ன செய்யலாம்னு யோசிப்போம்?”
“ஹ்ம்ம், இப்ப வா எந்த மரத்துலயாவது ஏறி தூங்கலாம்”
“மகி, நாம பறந்து இமய மலைக்கு போவோமா?”
“அதெல்லாம் நம்ம வேலை முடிஞ்ச அப்பறம் இமய மலைல போய் செலிபிரேட் பண்ணுவோம் சரியா? இப்ப வேண்டாம்”
“ஹ்ம்ம் சரி”
“சரி இந்த மரத்துல ஏறு”
“இங்க வேண்டாம்”
“சரி வா, கொஞ்ச தூரம் போன அப்புறம் இன்னொரு மரம் இருக்கு. அங்க போய் தூங்குவோம்”
“அங்கேயும் வேண்டாம்”
“ஏண்டி”
“எதாவது புரூட்ஸ் காச்சிருக்குற மரத்துல ஏறுவோம். அப்ப தான் சாப்பிட்டுட்டே தூங்கலாம்”
“தூங்கும் போது கூட திங்கணுமா? நீ பேயா அலையும் போதே இப்படி திங்குறதை பார்த்து கடவுளே உனக்கு உயிர் கொடுத்து மனுசியா மாத்திருவார் போல டி”
“போ மகி. எனக்கு மனுஷ வாழ்க்கை எல்லாம் வேண்டாம். இதுவே நல்லா தான் இருக்கு. சரி எனக்கு ஒரு சந்தேகம்”
“கேட்டு தொலை”
“என்னை மட்டும் டா சொல்ல கூடாது சொல்ற. நீ மட்டும் டி சொல்ற ஏன்?”
“தெரியலை. எனக்கு அப்படி தான் கூப்பிட வருது”
“சரி இன்னொரு சந்தேகம் வருது கேக்கட்டுமா?”
“ஐயோ, கேளு டி பக்கி”
“உனக்கு எப்ப காதல் வரும்?”
“உன்னை கொன்னுருவேன் டி. காலையிலே இதுக்கு தான என்கிட்டே நல்ல வாங்கி கட்டிகிட்ட. வாயை மூடிட்டு நட”
“பேய்னு அந்த கிழவி கத்துனதுக்கு  பயந்து ஓடினா, நான் லூஸாம். பேயையே கொன்னுருவேன் கொன்னுருவேன்னு மிரட்டுற இவரு அறிவாளியாம்”
“சரிங்க பேயரசி. நான் தான் அறிவில்லாத கூமுட்டை போதுமா?”
“அது தெரிஞ்ச விஷயம் தான? சரி நடந்தது போதும் மகி. தூங்கலாம்”
“ஹ்ம்ம், இந்த மரத்துல ஏறலாம் டி. இன்னும் போனா நம்ம ஆளுக மரத்துல இடம் பிடிச்சிருப்பாங்க”
“ஹ்ம்ம், ஆனா எனக்கு புரூட்ஸ் வேணுமே. நம்ம காட்டுக்கு எங்கயாவது போகலாம்”
“அடங்கவே மாட்ட. சரி வா பறந்து போலாம்”
“எனக்கு தனியா பறக்க பயம்னு உனக்கு தெரியும் தான டா?”
“ஐயோ, படுத்துற டி பிசாசே. சரி முதுகுல ஏறி தொலை. பேயா மாறின அப்புறமும் உன்னை மாதிரி ஒரு பூதத்தை தூக்க வேண்டி இருக்கு”
“ஓவரா பண்ணாத. என்னை தூக்காம வேற யாரை தூக்க போறயாம்?”
“யாரையும் தூக்கல டி. ஏறி தொலை”
“ஹ்ம்ம் நீ குனிஞ்சு உக்காரு. அப்ப தான ஏற முடியும்?”
“இது வேறயா? குரங்கு மாதிரி தொத்தி உக்கார வேண்டியது தான கீர்த்தி?”, என்று சொல்லி கொண்டே குனிந்து அமர்ந்தான்.
அவன் கழுத்தில் கைகளை கோர்த்தவள் அவன் முதுகில் பல்லி போல ஒட்டி கொண்டாள்.
அவள் பெண்மை அவன் முதுகில் அப்படியே அழுந்தியது. ஒரு புதுவிதமான உணர்வை அடைந்தான் மகேந்திரன். அடுத்த நொடி “ஏய், இறங்கு இறங்கு. என்ன செய்ற நீ?”, என்று சொல்லி கொண்டே அவளை உதறி விட்டுவிட்டு எழுந்து நின்றான்.
அவன் அப்படி செய்வான் என்று தெரியாமல் அப்படியே சரிந்து கீழே விழுந்து கிடந்தாள் கீர்த்தி.
பின் கையை உதறி விட்டு எழுந்தவள் “லூசு டா நீ. இப்படியா தள்ளி விடுவ? நீ தான ஏற சொன்ன?”, என்று முறைத்து கொண்டு கேட்டாள்.
“ம்ம், ஆமா ஆனா அந்த போஸ் நல்லாவே இல்லை”
“சரி வேற எப்படி உக்கார?”
“ஹ்ம்ம்”, என்று சொல்லி ஒற்றை விரலை தலையில் தட்டி யோசித்தான் மகேந்திரன்.
“ஓவரா தட்டாத. உள்ள இருக்குற களிமண் டப்பா  திறந்திற போகுது. சீக்கிரம் தூக்கு. நாம போய் தூங்குவோம்”
“ஏய் அடங்குடி”, என்று சொன்னவன் “முன் பக்கமாக அவளை ஏற்றலாமா?”, என்று யோசித்தான்.
அது இதை விட விபரீதமாக இருக்கும் என்று எண்ணி அவளின் இடையில் ஒரு கையை வைத்தவன் அப்படியே பறக்க ஆரம்பித்தான்.
“ஆ ஊ”, என்று கத்தி கொண்டு அவனை பிடித்து கொண்டு பறந்தாள் கீர்த்தி.
அவளுடைய தலைமுடி பறந்து அவனை இம்சித்தது. அவளுடைய வாசனையை உணர்ந்தவனுக்கு எதுவோ இனம் புரியாத உணர்வை தோற்று வித்தது.
“மனம் மயங்கிராத மகேந்திரா. உனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு. இந்த ராட்சசி கிட்ட எல்லாம் மயங்க கூடாது”, என்று தனக்குள் சொல்லி கொண்டே அவளை பார்த்தான்.
அவளோ குஷியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். அவள் கத்தலில் கடுப்பானவன் “வாயை மூடிட்டு வா டி. எனக்கு காது வலிக்குது”, என்றான்.
அடுத்த நொடி அமைதியாகி விட்டாள். அவன் புறம் திரும்பியவள் நேராக பார்த்து கொண்டிருந்த அவன் முகத்தையே பார்த்தாள்.
“அழகா இருக்கான். கோபம் மட்டும் மூக்கு மேல வந்து நிக்குது”, என்று எண்ணி கொண்டே மெதுவாக அவன் மீது சாய்ந்தாள்.
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் அவனுடைய தொடுகையை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் சில நிமிடங்களில் அவளை காட்டில் வந்து நிறுத்தியவன் “போதுமா ராட்சசி. நிறைய புரூட்ஸ் இந்த காட்டுல இருக்கு. நீ எவ்வளவு வேணும்னாலும் தின்னு. என்னை மட்டும் தொல்லை செய்யாத”, என்று சொல்லி மரத்தின் மீது ஏறி விட்டான்.
சிறிது நேரம் கழித்து அவன் கண் விழிக்கும் போது வாயில் ஒரு ஆப்பிளை கடித்து கொண்டு அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
அதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை மறைத்தவன் “தூக்கம் வரலையா?”, என்று கேட்டான்.
“பேயா இருந்து கிட்டு தூங்குறியே? உனக்கு வெக்கமா இல்லையா மகி?”
“அட பாவி, பேயா இருந்துட்டு நீ தின்னுட்டு இருக்கியே? உனக்கு வெக்கமா இல்லையா?”, என்று திருப்பி கேட்டான்.
“சரி சரி, நான் சாப்பிடும் போது தொல்லை செய்யாதே”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளையே பார்த்து கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்து ஒரு வெண்மையான ஒளி இவர்களை நோக்கி வர ஆரம்பித்திருந்தது.
அதை பார்த்ததும் அவனுக்கு பரபரப்பு தொற்றி கொண்டது. “கீர்த்தி அங்க பாரேன்”, என்று கண்ணை காட்டினான்.
அதை  பார்த்து  திகில்  அடைந்தவள் “ஐயோ, கடவுளின் தூதுவன் எதுக்கு மகி இங்க வருது? நாம இப்ப தான செத்தோம்? அதுக்குள்ளே நம்ம கிட்ட எதுக்கு வாரான்?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“இரு வரட்டும்”, என்று அவன் சொன்னதும் இருவரும் அது அருகில் வரும் வரை அதையே பார்த்து கொண்டிருந்தார்கள்.
இவர்கள் அருகில் வந்ததும் அந்த ஒளி இருவரின் தலைக்கு மேலே வட்டமிட்டது. இருவரும் அதை பார்த்து வணங்கினார்கள்.
அவர்களை ஆசிர்வதிப்பது போல அது இரண்டு முறை அவர்களின் தலையை தொட்டு மீண்டது.
“உங்கள் இருவருக்குமான காலக்கெடுவை கடவுள் எழுதி விட்டார். இன்னும் நாற்பத்தியேழு நாட்களில் உங்களின் இந்த பயணம் முற்று பெறும். அதற்குள் தங்களின் இலட்சியத்தை முடித்து கொள்ளுங்கள் என்று அறிவிக்கவே நான் இங்கு வந்தேன். விடை பெறுகிறேன்”, என்று சொல்லி விட்டு அது வந்த வழியே திரும்பி சென்றது.
அது சென்ற பின்னரும் இருவர் முகமும் கூம்பி போனது. சோகமாக ஆனார்கள் இருவரும். தன்னை சுதாரித்து கொண்ட மகேந்திரன் அவளை பார்த்தான். அவளோ கண்ணீர் வராமல் இருந்தாலும் அழுது கொண்டிருந்தாள். 
என்ன நினைத்தானோ தன்னுடைய இரண்டு கைகளையும் விரித்து கண்ணால் அழைத்தான். அடுத்த நொடி அவன் கைகளுக்குள் சுருண்டு கொண்டவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.
அவனுக்கும் கவலையாக இருந்தது. “இன்னும் கொஞ்ச நாள் தான்  இவ கூட  இருக்க முடியுமா?”, என்று தவித்தது மனது.
அவளோ வெளிப்படையாகவே அரற்றி கொண்டிருந்தாள். “என்னால உன்ன விட்டு போக முடியாது மகி. நம்ம லட்சியம் எல்லாம் ஒன்னும் நிறைவேத்த வேண்டாம். யாரும் எப்படியும் போகட்டும். நீ மட்டும் என்கூடவே இரு. ப்ளீஸ் மகி”, என்றாள் கீர்த்தி.
“உன்கூட தான இருக்கேன். அழாத டி”, என்று சொல்லி கொண்டே  அவளை அணைத்து கொண்டான்.
“பொய் சொல்லாத மகி. உனக்கு இப்ப சந்தோசமா இருக்குமே. உனக்கு நான் எப்பவுமே ராட்சசி தான? என்னை திட்டிட்டு தான இருப்ப? இப்ப நாம பிரிய போறதை நினைச்சா உனக்கு சந்தோசமா தான் இருக்கும்”
“அப்படி எல்லாம் இல்லை மா”
“இல்லை, அப்படி தான். நீ சும்மா சொல்ற. நீ என்னை இப்ப திட்டினாலும் நான் ஒரு  உண்மையை சொல்லட்டுமா?”
“சொல்லு டா”
“எனக்கு நீ வேணும் மகி. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. மனுசியா இருக்கும் போதே, உன்னை நான் பாத்துருக்க கூடாதான்னு ஆசையா இருக்கு. உன்னை அணு அணுவா காதலிக்கிறேன் டா. உன்கூட நான் இருக்கணும் மகி. உன் நெஞ்சுல தான் தூங்கணும். உன்கிட்ட சண்டை போடணும். உன்கிட்ட திட்டு வாங்கணும். எனக்கு நீ தான் வேணும். நீ மட்டும் தான் வேணும்”, என்று சொல்லி அழுதாள்.
“எதுக்கு டி இவ்வளவு பாசம் என்மேல வச்சிருக்க? நம்ம  ஆசை எல்லாமே கற்பனை தான். நம்மளால நிறைவேத்திக்க முடியாது கீர்த்தி. கடவுள் மனசு வச்சா தான் முடியும்”
“அந்த கடவுளை மனசு வைக்க சொல்லு மகி”
“நீ கொஞ்சம் அமைதியா இரு டா கீர்த்தி. என்ன செய்யலாம்னு யோசிப்போம்”, என்று சொல்லி கொண்டே அவள் முதுகை வருடி விட்டான்.
அவளும் அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டாள். இருவருக்கும் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
மகேந்திரன் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவன். அவனுடன் பிறந்தவர்கள் தேவேந்திரன், நரேந்திரன் என்று இரண்டு அண்ணன்கள்.
மூவரும் ஸ்கூல் படிக்கும் போதே இவர்களுடைய அம்மா அப்பாவை இழந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் சேர்த்து வைத்து போன சொத்து தான் இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.
மகேந்திரன் தான் கடைசி. அதனால் அண்ணன்கள் மீது பாசமாக தான் இருந்தான். அவன் அண்ணன்களும் இவன் மீது பாசமாக தான் இருந்தார்கள். ஆனால் அண்ணி என்று இரண்டு பிசாசுகள் வரும் வரை.
பி. எஸ். சி அக்ரி கல்ச்சர் படித்து விட்டு கவர்ன்மென்ட் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த அவனுக்கு உணவு கொடுக்க இரண்டு அண்ணிகளுக்கும் பிடிக்க வில்லை. 
தன்னால் தன்னுடைய அண்ணன்களின் நிம்மதி பறிபோகிறது என்று எண்ணி கொண்ட மகேந்திரன், வீட்டை விட்டு வெளியே வந்து, குறைந்த சம்பளத்தில் பகுதி நேர வேலை செய்து தன்னுடைய முயற்சியை தொடர்ந்தான்.
அவன் வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு மாதத்திலே அவன் எழுதி இருந்த பரிட்சையில் தேறி அவனுக்கு அக்ரிகல்ச்சர் ஆபிசர் போஸ்ட் கிடைத்து விட்டது.
அவனை மறுபடியும் அவனுடைய அண்ணிகள் அழைத்தார்கள் இவன் மறுத்து விட்டான்.
கீர்த்தியோ பல கோடி சொத்துக்கு ஒரே வாரிசு. அவளும் குழந்தையாக இருக்கும் போதே பெற்றவர்களை இழந்தவள். அவளுடைய  சித்தப்பா  தான் அவளை வளர்த்தார். 
அவளும் அவர் மீது அதிகமாக அன்பு வைத்திருந்தாள். அவரை கட்டி கொண்டு வந்த சித்தியும், அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளான கமல், காவ்யாவும் அவளை நன்றாக தான் நடத்தினார்கள்.
ஆனால் அவளுக்கு பதினெட்டு வயது வரைக்கும் தான் அது தொடர்ந்தது. எப்போது வக்கீல் வந்து சொத்து அனைத்தும் கீர்த்திக்கும், அவளை கட்டிக்க போகும் கணவருக்கும் என்று எழுதி இருந்த உயிலை படித்தாரோ  அன்றில் இருந்தே அவளை அனைவரும் தனிமை படுத்தினார்கள். கடையில் அவளுக்கு இருபத்தி இரண்டு வயதாக இருக்கும் போது அவளை கொன்றே விட்டார்கள்.
உருகுதல் தொடரும்…..

Advertisement