Advertisement

அத்தியாயம் 2
முதல் பார்வையிலே
என்னை செயல்
இழக்க வைத்த
உன் இதயம் திருடி
உயிர் உருக
காதல் செய்வேன் அன்பே!!!!
“இவளை எல்லாம் திருத்தவே முடியாது”, என்று நினைத்து கொண்டு “என்ன டி இது?”, என்று கேட்டான் மகேந்திரன்.
ஒரு ஐஸ்கிரீமை சப்பி கொண்டே “கண்ணு தெரியலையா மகி? ஐஸ் கிரீம்”, என்று இடக்காக பதில் கூறினாள் கீர்த்தி.
“நீ அடங்கவே மாட்டியா குள்ளச்சி? அது ஐஸ் கிரீம்னு எனக்கும் தெரியும். ஆனா ஒன்னு எடுத்துட்டு வராம இத்தனை அள்ளிட்டு வந்திருக்க?”
“ஒன்னு எப்படி பத்தும்? திருப்பி கேட்டா நீ வாங்கி தர மாட்ட. அதான் கிடைச்சது சான்ஸ்ன்னு ஆட்டைய போட்டுட்டேன். அப்படியே சாப்பிட்டுட்டே, பேசிட்டே நடந்து போகலாம்.  சரி ரெண்டை கையிலே பிடிச்சுக்கோயேன். சாப்பிட டிஸ்டபா இருக்கு”
“இது வேறையா? ஒழுங்கா இந்த இருட்டிலே நின்னு தின்னு முடி. எவனாவது பாத்தா வீணா பிரச்சனை கீர்த்தி. ஏற்கனவே நீ செஞ்ச அக்கப்போருக்கு நாளைக்கு பேப்பர்ல சென்னையில் பயங்கரம். பிரபல தனியார் ஹோட்டலில் பறந்து சென்ற ஐஸ்கிரீம் மாயமாக மறைந்தது. ஐஸ்கிரீம் திருட என்று புதிய சாப்ட்வெர் உபயோக படுத்த பட்டுள்ளதா என்று உளவு துறை ஆய்வுன்னு வர போகுது டி”
“மகி, இதுக்கெல்லாமா உளவு துறை ஆராய்ச்சி செய்யும்? நான் ஏரோ பிளேன் தொலைஞ்சா தான் ஆராய்ச்சி செய்வாங்கன்னு நினைச்சேன்”
“நம்ம நாட்டுல கேர்பின் தொலைஞ்சாலே ஆராய்ச்சி பண்ணுவாங்க. நீ படுத்தாம சீக்கிரம் தின்னு தொலையேன் டி”
“பல்லு கூசுது டா. மெதுவா தான சாப்பிட முடியும்?”
“உன்னோட பெரிய ரோதனை டி. யாராவது பாத்தா பிரச்சனை ஆக போகுது குள்ளச்சி”, என்று சொல்லி கொண்டே அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்தான் மகேந்திரன்.
“பிரச்சனை அவனுங்களுக்கு தான மகி? யாராலயும் நம்மள ஒன்னும் செய்ய முடியாது”, என்று அவனை பார்த்து சொன்னவள் “ஐயையோ”, என்றாள்.
“என்ன ஆச்சு கீர்த்தி?”
“அவசரத்துல சாக்லேட் பிளேவர் எடுக்குறதுக்கு ரெண்டு மேங்கோ பிளேவரை எடுத்துட்டேனே?”
“இதுவா டி முக்கியம் இப்ப?”
“உனக்கு எங்க புரியும் என் கவலை. ரெண்டு ஐஸ் கிரீம் வேஸ்ட் ஆகிட்டு. ஏன் மகி இப்படி செஞ்சா என்ன?”
“எப்படி?”
“நம்ம கிரிக்கு மேங்கோ பிளேவர் ரொம்ப பிடிக்கும்”, என்று அவள் சொன்னதும் அவளை முறைத்தான் மகேந்திரன்.
“என்ன டா முறைக்கிற? கஷ்ட பட்டு சுட்டுட்டு வந்தது வேஸ்ட்டா போக கூடாதுல்ல? நீ வேற சாப்பிட மாட்ட? அதான்”
“அதை தூக்கி போட்டுட்டு அடுத்ததை தின்னு”
“ஹ்ம்ம் சரி, இல்லை இல்லை வேண்டாம். நானே அட்ஜர்ஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்குறேன். என்ன முழிக்கிற? தூர போட மனசில்லை மகி”
“இதை முன்னாடியே செய்ய வேண்டியது தான? எதுக்கு அந்த நாயை பத்தி பேசி என்னை வெறுப்பேத்துற? ஆமா அவனுக்கு மேங்கோ பிளேவர் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?”
“என்ன மறந்துட்டியா மகி? நீ என்னை விரட்டி விட்டப்ப அவன் தான் என்னை பாத்துக்கிட்டான். அப்ப தெரியும்”
“கடுப்பை கிளப்பாத டி சொல்லிட்டேன்”
“அவனை பத்தி பேசுனா நீ ஏன் தான் டென்ஷன் ஆகுறியோ? தெரியலை. சரி அடுத்த வேலை என்ன மகி?”
“என்ன செய்ய? எங்கயாவது மரத்துல தொங்கி தூங்க வேண்டியது தான்”
“தூங்குறதா?? அப்ப நம்ம வேலை?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“நம்ம வேலையா? உனக்கு அந்த நினைவு எல்லாம் இருக்கா? அதை தான் நீ கெடுத்துட்டியே? ஒரு வாரம் அந்த மூர்த்தியை உன்னை பாலோவ் பண்ண சொன்னேன்ல? நீ பாலோவ் பண்ணாம கிடைக்கிற சாப்பாட்டை எல்லாம் அமுக்கிட்டு இருந்திருக்க. இன்னைக்கு அவனை தூக்கிறலாம்னு நாள் குறிச்சா நீ தேவை இல்லாம பேசி காலைலே என்னை மூடவுட் பண்ணிட்ட? அப்புறம் எங்க அவனை தூக்க? பிளான் சொதப்பிட்டு”, என்று கடுப்புடன் சொன்னான் மகேந்திரன்.
“நான் ஒன்னும் தேவை இல்லாம பேசல. லவ் பத்தி தான்….”
“சரி சரி அதை பத்தி பேசுனா மறுபடியும் சண்டை வரும். நாளைக்கு அந்த மூர்த்தியை பாத்துக்கலாம். ஆனா நாளைக்கு நாம செய்ய வேண்டிய வேலை உனக்கு நியாபகம் இருக்கு தான?
“என்ன வேலை  மகி?”
“என்ன வேலைன்னு இப்ப கேக்குற? பக்கி. முன்னாடியே  உன்கிட்ட சொன்னேன்ல குள்ளச்சி?”
“அந்த மூர்த்தியை பிடிக்கணும். அவ்வளவு தான? எனக்கு நியாபகம் வந்துட்டு டா. ரொம்ப திட்டாத”
“உனக்கு  நியாபகம் வந்துருச்சா? அதிசயம் தான். சாப்பிடுற வேலைல இதை மறந்துட்ட போலன்னு  நினைச்சேன்”
“அதெல்லாம் நியாபகம் இருக்கு. நீ அந்த மூர்த்தியை தான் இன்னைக்கு முடிக்கணும்னு சொன்ன. ஆனா நமக்குள்ள சண்டை வந்து தான் பிளான் சொதப்பிருச்சு. சரியா சொல்லிட்டேனா?”
“நான் சொன்னதையே சொல்லாம அதை சீக்கிரம் தின்னு தொலை கீர்த்தி. அப்புறம் அந்த சண்டையை பத்தி பேசாத”
“ஹ்ம்ம், இன்னைக்கே அந்த மூர்த்தியை தூக்கிறலாம் மகி”
“எப்படி டி?
“அந்த ஆள் தினமும் எட்டு மணிக்கு தான் பங்களாவுக்கு  போறான் டா”
“ஆமா அதுக்கென்ன?”
“லூசு அவன் தினமும் பஸ்ல தான் போறான் மகி. அது எதுக்குன்னு தெரியலை. பஸ்ல இருந்து இறங்கி அவன் தனியா போகும் போது அவனை தூக்கிறலாம்”
“என்ன தான் வாய்க்குள்ள தள்ளிட்டே இருந்தாலும் உனக்கும் அப்ப அப்ப மூளை வேலை செய்யுது போல? வா அவனை பஸ்லயே பிடிப்போம்”, என்று நடந்தான்.
கடைசி ஐஸ் கிரீமை தின்று கொண்டே அவனுடன் நடந்தாள் கீர்த்தி. பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்ததும் அவளை பார்த்தவன் சிரித்தான். அங்கே உதடு முழுவதிலும் சிறு குழந்தை போல் ஐஸ் கிரீமை அப்பி வைத்திருந்தாள் கீர்த்தி.
“நீ என்னை பாத்து சிரிக்கிறியா? அதிசயம் தான்”, என்று முறுக்கி கொண்டாள் கீர்த்தி.
“நீ பண்ணி வச்சிருக்குறதை பார்த்து சிரிக்காம என்ன செய்ய?”
“நான் என்ன டா செஞ்சேன்?”
“வாய் புல்லா ஐஸ்கிரீமை ஆக்கி வச்சிருக்க”
“ஐயையோ அப்படியா? யாரவது பாத்துருப்பாங்களோ”, என்று கேட்டு கொண்டே துடைக்க ஆரம்பித்தாள்.
“லூசு உன்னை தான் யாரும் பாக்க மாட்டங்கள்ல?”
“அட ஆமா, சரி சரி எல்லாம் போயிருச்சா பாரு”, என்று துடைத்து கொண்டே அவள் கேட்டதும் அவளை நெருங்கியவன் அவள் உதட்டில் இருந்த கடைசி துளியை தன் விரலால் துடைத்து விட்டான். அவனையே இமைக்க மறந்து பார்த்தாள் கீர்த்தி.
அவள் கண்களுக்குள் தொலைந்து போகாமல் சமாளித்து கொண்டவன் “நாம இப்ப கொலை செய்ய வந்துருக்கோம். மறுபடியும் எங்கயாவது கனவுக்கு போயிறாத”, என்றான்.
அதில் தன்னுணர்வுக்கு வந்தவள் அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
“அவன் வர பஸ் இப்படி தான் வருமா? இல்லைன்னா நேரா அவன் வீட்டுக்கே போயிருவோமா?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“அவ்வளவு தூரம் எதுக்கு அலையனும்? அவன் வர பஸ் இந்த வழியா தான் வரும். இப்ப வரும் பாரேன்”, என்று கீர்த்தி சொன்னதும் ஒரு பேருந்து அவர்களை கடந்து சென்றது.
“என்ன டி பஸ் நிக்கவே இல்ல?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“பஸ் வரும்னு தான் சொன்னேன். நிக்கும்னு சொன்னேனா? வா ஓடி போய் ஏறலாம்”, என்று சொல்லி விட்டு ஓட  ஆரம்பித்தாள்.
“இது சரியான காமெடி பீஸ். அதான் பேயா மாறிட்டாளே? அப்புறம் என்ன? பறந்து போய் பஸ்ல  ஏறாம ஓடி கிட்டு இருக்கு பாரு”, என்று புலம்பி கொண்டே பறந்து சென்றவன் ஓடி கொண்டிருந்த  அவளையும் இடுப்போடு சேர்த்து தூக்கி கொண்டு அந்த பஸ்ஸை அடைந்தான்.
அவன் இப்படி தூக்குவான் என்று எதிர்பார்க்காதவள்  திகைத்து போய் அவன் முகத்தை பார்த்தாள்.
“இங்க என்ன பாத்துட்டு இருக்க? அவனை பாரு. இன்னைக்கு இவன் கதையை முடிக்கணும்”, என்று மகேந்திரன் கூறியதும் கீர்த்தி கவனம் அந்த மூர்த்தி மேல் திரும்பியது.
“இவன் மேல  சித்தப்பா சித்தப்பான்னு எப்படி  பாசம் வச்சிருந்தேன் தெரியுமா மகி?”, என்று கண் கலங்கினாள் கீர்த்தி.
“ஏய் பேயே, எதுக்கு டி இப்ப அழுதுட்டு இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல  அவனை கொண்ணுறலாம். நீ அழாத”
“ஹ்ம்ம் ஆமா, இவனை கொண்ணுறனும்”, என்று தன் பெரிய கண்களை உருட்டி சொன்னாள் கீர்த்தி.
“முதல்ல, நீ போய் அவனை சப்பு சப்புன்னு உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடி கீர்த்தி. கண்ணுக்கு ஆள் தெரியாததுனால அவன் பேய் பேய்ன்னு கத்துவான். அப்ப பஸ் குள்ள ஒரு கலவரம் வரும். அந்த இடைப்பட்ட நேரத்துல இவனை எதாவது செஞ்சிறலாம் சரியா?”, என்று பிளானை கூறினான் மகேந்திரன்.
“ம்ம் ம்ம்”, என்று மண்டையை ஆட்டிய கீர்த்தியும் அந்த மூர்த்தியை நோக்கி நகர்ந்தாள். அவனும் அவளுடனே சென்றான்.
ஆனால் இருவரும் அந்த மூர்த்தியை அடைவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு பாட்டி “பேய் பேய்”, என்று கத்தினாள்.
அதை கேட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் பதறினார்கள். அடுத்து எல்லாருமே “பேய் பேய்”, என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். டிரைவரும் வண்டியை நிறுத்தி விட்டு ஓடியே விட்டான். மற்ற ஆள்களும் ஓட ஆரம்பித்து விட்டார்கள்.
“கீர்த்தி இது தான் சந்தர்ப்பம். நீ அடிக்கிறதுக்கு முன்னாடியே அந்த பாட்டி கத்திருச்சு. இப்ப  இவனை எதாவது செஞ்சிறலாம். உன் சாவுக்கு காரணமானவனை உன் கையாலே கொல்லு கீர்த்தி “, என்று வீரமாக உரைத்த மகேந்திரன் பக்கத்தில் கீர்த்தி என்ன செய்கிறாள் என்று திரும்பி பார்த்தான்.
அவளோ மக்களோடு மக்களாக வெளியே ஓடி கொண்டிருந்தாள். அதை பார்த்து தலையில் அடித்து கொண்டவன் “சே, இன்னைக்கும் பிளானை சொதப்பிட்டா”, என்று வாய் விட்டே சொல்லி விட்டு கீர்த்தியை நோக்கி பறந்தான்.
ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஓடியவளை ஒரே நொடியில் அடைந்தவன் அவளுக்கு முன்னே வழி மறைத்து நின்றான். சடன் பிரேக் போட்டது போல நின்றவள் அவனை பார்த்து “பேய் போயிருச்சா மகி?”, என்று பயத்துடன் கேட்டாள்.
இப்படி ஒரு கேள்வியை அவள் கேட்பாள் என்று அவன் அறிந்தது தான். அதனால் “நீ எந்த பேயை சொல்ற?”, என்று நக்கலாக கேட்டான்.
“அது தான் மகி, நான் அந்த மூர்த்தியை அடிக்க போனேனா? அப்ப அங்க ஒரு பேய் வந்துருச்சாம். அந்த பேயை பாத்து தான் பாட்டி கத்திருச்சு. அதனால தான் நானும் ஓடி வந்துட்டேன். நல்லதா போச்சு. நீயும் அந்த பேய் கிட்ட மாட்டிக்காம வந்துட்ட”, என்றாள் கீர்த்தி.
“ஏய் வீர மங்கம்மா, சரியான வெங்காயம் டி. அந்த கிழவி பேய் பேய்ன்னு கத்துனது உன்னை பாத்து தான்”
“என்னை பாத்தா? லூசு மாதிரி உளறாத மகி. நாம தான் யாரோட கண்ணுக்கும் தெரிய மாட்டோமே? வர வர உனக்கு அறிவே இல்லை மகி”
“நான் லூசா? ஏன் சொல்ல மாட்ட? தகர டப்பா. உன்னை வச்சு ஒரு பிளானும் போட முடியாது டி குள்ளச்சி. நீ மனுசங்க கண்ணுக்கு தெரிய மாட்ட தான். ஆனா உன் கையில் இருக்குற இந்த சிப்ஸ் பாக்கெட் எல்லாரோட கண்ணுக்கும் பறக்குற மாதிரி தெரியுமே. பின்னே பேய் பேய்ன்னு கத்தாம இருப்பாங்களா?”, என்று சொல்லி அவள் கையை சுட்டி காட்டினான்.
“ஹி ஹி ஆமா”, என்று அசடு வழிந்த கீர்த்தி அதை தூக்கி தூர போட்டாள்.
“இது எப்படி கீர்த்தி உன் கைல வந்துச்சு”
“அதோ அந்த பாப்பா தந்தது”, என்று கையை காட்டினாள் கீர்த்தி.
அவனும் திரும்பி பார்த்தான். அந்த குழந்தை இருவருக்கும் சேர்த்து கை ஆட்டியது. அதன் தாய் அந்த குழந்தையை இழுத்து கொண்டு ஓடினாள். அதை பார்த்து அவன் உள்ளமும் மென்மையானது.
போலியாக கீர்த்தியை முறைத்தவன் “அவ குடுத்தா  நீயும் வாங்கி வச்சிகிட்டியா? கொலை பண்ண போகும் போது கூட உன்னால திங்காம இருக்க முடியாதா டி?”, என்று கேட்டான்.
“இனிப்பா சாப்பிட்டு ஒரு மாதிரி இருந்ததா? அதனால தான் உறைப்பா சாப்பிடலாம்னு…”, என்று இழுத்தாள் கீர்த்தி.
“உன்னை வச்சு ஒரு ஆணி கூட புடுங்க முடியாது டி. இன்னைக்கு பிளான் அவ்வளவு தான். நாளைக்கு பாத்துக்கலாம் வா”, என்று நடந்தான்.
“அவன் பஸ்ல இருந்து இறங்கின உடனே சாகடிச்சிறலாம் மகி”
“ஆமா, நீ என்னை கொண்ணுக்கோன்னு  அவன் வாய்ப்பு கொடுப்பான் பாரு? நீ செஞ்ச அலைப்பறைல அப்பவே டாக்சி பிடிச்சு போய்ட்டான்”
“ஐயையோ, நல்ல வாய்ப்பு இப்படி போச்சே”
“போச்சே இல்ல டி. நீ போக வச்சிட்ட. ஆனா ஒரு விஷயத்துக்கு  உன்னை  பாராட்டியே ஆகணும் டி குள்ளச்சி”
“எதுக்கு மகி?”
“நீயே ஒரு பேயா இருந்துட்டு இன்னொரு பேய் வந்துருச்சுன்னு பயந்தடிச்சு ஓடுன பாரு? அங்க நிக்குற கீர்த்தி நீ”, என்று சிரித்தான் மகேந்திரன்.
“ஏய் மகி வேண்டாம் கிண்டல் செய்யாத”, என்று ஒற்றை விரலை நீட்டி அவனை மிரட்டினாள் கீர்த்தி.

Advertisement