Advertisement

அவள் உதட்டின் மென்மையும் அவள் நாக்கில் இருந்த ஈரமும் இப்போதும் அவனுக்கு வேண்டும் என்பது போல் இருக்க அவனை அறியாமலே அவன் கைகள் நீண்டது அவளுக்கு ஊட்டி விட.
அதைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள் சந்தோசத்துடன் உணவைப் பற்றிக் கொண்டாள்.
அவன் விரலைக் கடித்து அவனை சலனம் கொள்ள வைத்தது தனிக் கதை. அதில் அவன் தேகம் சற்று நெகிழ்ந்து தான் போனது. 
பின் தலை வாரி தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டவன் வீட்டைப் பூட்டும் முன் அவளிடம் “நீ பத்திரமா இரு. வீட்டைப் பாத்துக்கோ”, என்று சொல்லி விடை பெற்றான்.
புன்னகையுடன் “பாத்து போங்க”, என்று வழி அனுப்பி வைத்தாள் கீர்த்தி. ஒரு நாளில் இருவருக்கும் வாழ்க்கை அழகானதாக மாறியது போல இருந்தது.
இருவரும் கணவன் மனைவியாகவும், கணவன் மனைவியிடம் “ஆபீஸ் போயிட்டு வரேன்”, என்று சொல்வது போலவும் இருவருக்குமே தோன்றியது.
எப்போதும் ராமை தவிர வேறு யாரிடமும் அதிகம் பேசாத மகேந்திரன் முகம் அன்று புன்னகையை சுமந்திருந்தது. 
அளவுக்கு அதிகமாக வேலை இருந்தாலும் அதை சளைக்காமல் செய்தான். 
திடீரென்று கீர்த்தி நினைவு வந்தது மகேந்திரனுக்கு. “என்ன செஞ்சிட்டு இருப்பா?”, என்று எண்ணியவனுக்கு ராம் நினைவும் வந்தது.
“பயத்துல கொசுக்கடில நைட் எல்லாம் தூங்கிருக்க மாட்டான்”, என்று எண்ணியவன் அவனை போனில் அழைத்தான்.
அதை எடுத்த ராம் “சொல்லு மச்சான்”, என்றான்.
“வேலைக்கு கிளம்பிட்டியா?“
“இப்ப தான் டா தூங்கி எழுந்தேன். மதியத்துக்கு மேல தான் போகணும்”
“சரி பாத்து போய்ட்டு வா”
“ஓகே டா, சரி வினோதினி வந்தாளா?”
“இன்னும் இல்லை டா”
“சரி சரி வேலையை பாரு”, என்று சொல்லி விட்டு வைத்த ராம் “வேலையை முடித்து விட்டு சாமியாரைப் போய் பாக்கணும்”, என்று எண்ணிக் கொண்டு “அம்மா நைட் நேரம் கழிச்சு தான் வருவேன்”, என்று சொல்லி விட்டு சென்றான்.
அந்த நேரம் மகேந்திரன் டேபிள்க்கு ஒரு பைல் வந்தது. அதை எடுத்தவன் “எத்தனை தடவை இதை என் கிட்ட கொடுப்பாங்க”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய மேல் அதிகாரியை காண சென்றான்.
அவனை பார்த்ததும் “உள்ள வாங்க மகேந்திரன்”, என்றான் விஸ்வம்.
“சார் இந்த பைல் திருப்பி திருப்பி எதுக்கு என் டேபிள்க்கு வருது. 
அந்த லேண்ட்ல கெமிக்கல் நிறைஞ்சு நிலம் கெட்டு போய் இருக்கு. அந்த நிலத்துல எதுவுமே இப்போதைக்கு விளையாதுன்னு ரிப்போர்ட் கொடுத்துட்டேனே. மறுபடியும் ஏன் வருது?”
“இங்க பாருங்க மகேந்திரன், உங்க ரிப்போர்ட் வச்சிட்டு நிலத்துக்காரங்க கோர்ட்டுக்கு போயிட்டாங்க, பக்கத்துல இருக்குற கெமிக்கல் பேக்டரியை மூடணும்னு சொல்லி. அந்த பேக்டரிக்காரங்க எவ்வளவு பணம் வேணும்னாலும் தருவாங்களாம். அந்த ரிப்போர்ட் மட்டும் மாத்த சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த நிலத்தை அவங்களே வாங்கிருவாங்க. அதுக்குள்ள எதுக்கு கோர்ட் கேஸ்ன்னு அலையணும்னு நினைக்கிறாங்க. உங்க ரிப்போர்ட் தான் இப்ப இடைஞ்சலா இருக்கு. நான் தெரியாம கொடுத்துட்டேன்னு சொல்லுங்க போதும்”
“என்னால முடியாது சார். நீங்க எப்படி வேணும்னாலும் இருங்க. ஆனா என்னை கட்டாய படுத்தாதீங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
“இந்த பணக்காரங்களே இப்படி தான்”, என்று நினைத்தவனுக்கு எரிச்சலாக வந்தது. வேலை முடியும் நேரம் வரை கஷ்ட பட்டு நேரத்தை போக்கிக் கொண்டிருந்தான். 
அதே நேரம் கீர்த்தி மனம் முழுவதும் மகேந்திரனே நிறைந்திருந்தான். அவளை எண்ணி பயப்படாமல் அவளுடன் அவன் சாதாரணமாக உரையாடியது அவளுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பை உருவாக்கியது.
உண்மையான அன்பு செலுத்தும் அவனை எண்ணிப் பார்க்கையில் அவனுடனே இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
கீர்த்தி நேரம் போகாமல் மெதுவாக கடற்கரைக்கு வந்தாள்.
ஆங்காங்கே மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த இடத்துக்கு தோழிகளோடு வந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவளால் தான் யாருடனும் பழக முடியாதே?
“சரி ஹோட்டலுக்கு போவோம்”, என்று எண்ணி உள்ளே நுழைந்தவள் பிரியாணி அண்டா அருகில் சென்று இரண்டு வாய் உள்ளே தள்ளினாள். 
அதற்குள் பிரியாணியை பார்சல் செய்பவன் “பேய் பேய்”, என்று அலற அங்கே கலவரம் ஆக போகிறது என்று உணர்ந்து வெளியே வந்து விட்டாள்.
பின் அமைதியாக ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து விட்டாள். அப்போது ஒரு பொட்டலம் பறந்து வந்தது.  ஆனால் அவள் கண்களுக்கு அதை ஒருவன் தூக்கி வருவது தான் பட்டது. 
ஒரு ஆணைப் பார்த்ததும் மகேந்திரன் நினைவு வந்தது. அவன் தோற்றத்தை மனக் கண்ணில் கொண்டு வந்தாள். ஆறடி இருக்கும் அழகான ஆண்மகன். அவள் மனதில் முதன்முதலில் சலனத்தை உருவாக்கியதும் அவன் தான். 
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த நொடி நினைவில் வந்தது. அவன் மார்பில் முகம் புதைத்திருந்த போது அவள் உணர்ந்த வியர்வை வாசம் அவன் மேல் அவளை பைத்தியமாக்கியது. 
அவள் எண்ண ஓட்டத்தை தடை செய்வது போல “ஹாய் டார்லிங்”, என்று சொல்லிக் கொண்டே அவள் கனவை கலைத்தான் கிரி. “டார்லிங்”, என்ற வார்த்தையில் அவனை முறைத்தாள் கீர்த்தி.
“நோ பேபி, முறைக்க எல்லாம் கூடாது. என் பேரு கிரி. உன் பேர் என்ன? இந்தா பிரியாணி”, என்றான் கிரி.
அவன் பேச்சில் எரிச்சல் வந்தாலும் “இவன் கண்ணுக்கு நான் தெரியுறேனா? மகி கண்ணுக்கு கூட தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு “என் பேர் கீர்த்தி. உன் கண்ணுக்கு நான் தெரியுறேனா கிரி?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“யெஸ் யெஸ் அப்படியே ரோஸ் கலர்ல, சும்மா தேவதையாட்டாம் இருக்குற?”
அவன் புகழ்ச்சியில் எரிச்சல் ஆனவள் “லூசு மாதிரி பேசாத. நான் என்னோட மகி கண்ணுக்கு கூட தெரியலை. ஆனா உன் கண்ணுக்கு எப்படி தெரியுறேன்?”, என்று கேட்டாள்.
“உன் மகியா? அப்பா உனக்கு ஆள் இருக்கா? ஓகே டார்லிங், இனி நாம பிரண்ட்ஸ் ஓகே வா?”
“ஹ்ம் சரி, அதை விடு. முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு”
“பேய் கண்ணுக்கு பேய் தெரிய மாட்டேனா என்ன?”
“என்னது நீ பேயா?”, என்று அதிர்ந்து போனவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவள் கண் விழித்துப் பார்க்கும் போது அவளையே பாவமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கிரி.
அவனைப் பார்த்து அலறப் போனவளுக்கு அப்போது தான், தான் யார் என்ற உண்மையே விளங்கியது. அவனைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
“பேயை பாத்து இன்னொரு பேய் பயப்படுறதை இன்னைக்கு தான் பாக்குறேன்”, என்று சொல்லி சிரித்தான் கிரி.
அவன் சிரிப்பில் அவளுக்கும் புன்னகை வந்தது. “இந்தா உனக்கு பசிக்கும் சாப்பிடு”, என்று சொல்லி அவளுக்கு பார்சலைக் கொடுத்தான்.
அதை வாங்கியவள் எடுத்து உண்ண ஆரம்பித்தாள். சாப்பிட்டுக் கொண்டே “நீ எப்படி செத்த? உன் பேர் என்ன?”, என்று கேட்டாள் கீர்த்தி.
“வேற என்ன ஆக்ஸிடெண்ட் தான். லவ்வர் கூட பைக்ல போனேன். அவ வேகமா போ, வேகமா போன்னு சொன்னா. போனேன் ஹெல்மட்டும் போடலை. இங்க வந்து சேந்துட்டேன்”
“ஐயோ பாவம், உன் லவ்வர் பாவம்ல?”
“என்ன பாவம்? அவ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகீட்டா”
“ஐயையோ அப்படியா? நல்ல லவ் இல்லையா?”
“இல்லை, அதெல்லாம் சும்மா”
“சரி நீ எதுக்கு ஆவியா அலையுற?”
“என்னோட தம்பிக்கு இதயத்துல ஒரு ஓட்டை இருக்கு. அதுக்கு பணம் நிறைய செலவாகும். எனக்கு கடவுள் கொடுத்துருக்குற நேரத்துக்குள்ள அவனுக்கு பணம் அரெஞ்ச் பண்ணிக் கொடுக்கணும். அப்புறம் என் ஆத்துமா சாந்தி அடைஞ்சிரும்”
“ஐயையோ அப்படின்னா உடனே பணம் அரெஞ்ச் பண்ணிற வேண்டியது தான?”
“அதுக்கு தான் முயற்சி செய்றேன். அது நல்ல முறையில கிடைக்கணும். கடவுள் தான் மனசு வைக்கணும்”
“நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் சரியா?”
“தேங்க்ஸ் கீர்த்தி. ஆமா நீ எப்படி செத்த? லவ் பண்ணுனியா?”
தன்னுடைய கதையை அவனிடம் சொன்னவள் “எனக்கு மகியை தான் பிடிச்சிருக்கு. ஆனா லவ்வான்னு தெரியலை”, என்றாள்.
“கண்டிப்பா லவ் தான். ஆனா அவன் மனுஷன். பேசாம நீ என்னையே லவ் பண்ணலாம்”
“போடா”
“சரி சரி உனக்கு ஏதாவது ஹெல்ப்ன்னா என்னைக் கூப்பிடு”, என்று சொல்லி விட்டு சென்றான் கிரி.
அவன் சென்றதும் தனிமை அவளை சூழ்ந்து கொண்டது. மெதுவாக எழுந்தவள் அங்கிருந்த சினிமா தியேட்டருக்கு சென்றாள்.
அந்த மொக்கை படத்தை அரை மணி நேரத்துக்கு மேல் பார்க்க முடியாமல் அங்கிருந்து வெளியே வந்தாள். 
பின் மகேந்திரன் நினைவு வந்தது. உடனே வீட்டுக்கு வந்து விட்டாள். 
மாலை வேலை முடிந்து அவன் கதவை திறந்ததும் அவனுக்காக காத்திருந்த கீர்த்தி “வந்துட்டீங்களா?”, என்று ஆவலாக கேட்டுக் கொண்டே அவனுடைய பேகை வாங்கிக் கொண்டாள்.
தன்னுடைய வீட்டில் தனக்காக காத்திருக்க ஒரு ஜீவன் என்று எண்ணி அவன் உள்ளம் நிறைந்து போனது. அவள் கண்ணுக்கு தெரியாமல் போனாலும் அவள் அருகில் இருக்கிறாள் என்று எண்ணி புன்னகைத்தான். 
அப்போது தான் அவள் மதியம் சாப்பிட்டுருக்க மாட்டாளே என்று எண்ணம் வந்தது.
“மதியம் சாபிடலையா கீர்த்தி? நான் மறந்து போயிட்டேன் சாரி மா”, என்று அவன் சொல்லும் போது ஒரு பெரிய கிண்ணம் அவனை நோக்கி பறந்து வந்தது.
“நான் சாப்பிட்டேன். நீங்களும் சாப்பிடுங்க. நானே செஞ்சேன்”,என்று அவனுக்கு கொடுத்தாள். “வீட்லயே எல்லாம் இருந்துச்சு, அதான் செஞ்சேன். இனி நானே சமைக்கிறேன்”
“தோணுச்சுன்னா சமைப்பேன். அதனால பொருள் இருந்தது போல. இப்ப டீ மட்டும் போட்டு குடிக்கிறேன். நைட் இதை சாப்பிடுறேன். நான் குளிச்சிட்டு வந்து டீ போடுறேன்”, என்று சொல்லி விட்டு
குளிக்க சென்று விட்டான்.
அவன் வரும் போது ஆவி பறக்க கருப்பு டீயை அவன் முன் நீட்டினாள் கீர்த்தி. புன்னகையுடன் அதை பெற்றுக் கொண்டான்.
இருவரும் சந்தோசத்துடன் உரையாடி கொண்டிருந்தார்கள்.  வினோதினியைப் பற்றி கேட்க வந்தவள் “அவளைப் பத்தி பேசி எதுக்கு நினைவு படுத்தணும்?”, என்று எண்ணி கேட்காமல் விட்டாள்.
“இன்னைக்கு முழுக்க என்ன செஞ்ச?”, என்று கேட்டான் மகேந்திரன்.
“ஊர் சுத்த போனேன் மகி. கிரின்னு நல்ல ஃபிரண்ட் கிடைச்சிருக்கான்”
“உன்னை வீட்ல தான இருக்க சொன்னேன்? வெளிய போய் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா?”
“மறந்துட்டியா? நான் பேய். எனக்கு ஒண்ணும் ஆகாது”
“சரி சரி, உன் ஃபிரண்ட் என்ன சொன்னான்?”
“அவன் தான் இப்போதைக்கு என்னோட பிரண்டாம். எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேக்க சொன்னான்”
“பேயும் பேயும் அக்ரீமன்ட் போட்டுருக்கீங்களோ? அவன் தான் உன்னோட பிரண்டா? அப்ப நான் யாராம்?”
“உன்னை தான் நான் முதல்ல பாத்தேன். ஆனா அவன் தான் முதல் ஃபிரண்ட். நீ தான் எனக்கு நீ யார்ன்னே சொல்லலையே? லவ் பண்ணுவோமான்னு கேட்டதுக்கும் பதில் சொல்லலை. வேற என்ன சொல்லவாம்?”
“நீ அதுலே இரு”
இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் அந்த சாமியார் முன்பு அமர்ந்திருந்தான் ராம். அவர் முகத்தில் இருந்த சாந்தத்தில் கண்டிப்பாக அவளை விரட்டி விடுவார் என்று நம்பிக்கை பிறந்தது ராமுக்கு.
“என்னவாயிற்று?”, என்று சாமி கேட்டதும் “என்னோட நண்பன் கூட ஒரு பேய் இருக்குது. முந்தாநேத்து தான் அது அவன் கூட வந்துச்சு”, என்று ஆரம்பித்து அனைத்தையும் சொன்னான் ராம். 
“ஆத்மா நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்க தான் இந்த உலகத்தில் அலைந்து கொண்டிருக்கும். நான் இப்ப அந்த ஆத்மாவை மொத்தமா அழிக்கணுமா? இல்லை உன் நண்பன் கிட்ட இருந்து மட்டும் விரட்டணுமா?”, என்று சாமியார் கேட்டதும் நேற்று அந்த பேய் பாத்திரம் விலக்கியதை எல்லாம் எண்ணிப் பார்த்தான் ராம்.
“சே வேலை எல்லாம் செய்ற நல்ல பேய். அதுக்கு என்ன பிரச்சனையோ? அது அது வேலையைப் பாத்துட்டு போனா போதும்”, என்று நினைத்துக் கொண்டு “மொத்தமா அழிக்க வேண்டாம் சாமி. என் பிரண்ட் கிட்ட நெருங்க விடாம பண்ணுனா போதும்”, என்றான்.
“அப்ப சரி, ஆனா முதல்ல அது நல்ல ஆத்மாவா கெட்ட ஆத்மாவான்னு செக் பண்ணனும். நீ நாளைக்கு காலையில் வா”, என்று சொன்ன சாமி ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தார்.
“எத்தனை மணிக்கு சாமி வரணும்?”
“உன் நண்பன் அந்த வீட்டை விட்டு போன அப்புறம் வா”, என்று அவர் சொன்னதும் அங்கிருந்து விடை பெற்றான்.
“சரி சாமி”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றான் ராம்.
உருகுதல் தொடரும்…. 

Advertisement